தீவிரவாத காலகட்டத்தின் முடிவு

  

மகாவம்சம்

இலங்கையின் மகத்தான கால ஏடாகிய மகாவம்சத்தை விரிவாக மீள்நோக்கிய பேரசிரியர் சிறிமா கிரிபமுனா, அதை “பண்டைய சிங்கள சிந்தனையின் உச்சம்” என்று போற்றியுள்ளார். 

ஆனாலும் அதை, சிங்கள இனத்தின் வரலாற்றைப் பதிவிடும் நோக்குடன் எழுதப்பட்ட நூல் என்று கொள்ளமுடியாது. மாறாக, அதை இலங்கையின் தேரவாத பெளத்த வரலாற்றை உரைக்கும் நூல் என்று கொள்வதே பெரிதும் பொருந்தும். தேரவாத பெளத்த வரலாற்றை, சிங்கள இனமும் பெளத்தமும் பின்னிப் பிணைந்த வரலாறாகவே மகாவம்ச ஆசிரியர் பதிவிட்டுள்ளார். 

தாம் இயற்கை எய்திய பின்னர் பெளத்தநெறி இலங்கையில் புகுத்தப்படும் என்பதையும், அங்கு அது கட்டிக்காக்கப்படும் என்பதையும் புத்தபிரான் தமது புலனறிவுகொண்டு முன்னுணர்ந்து கொண்டதாகவும், புத்தபிரானது அருளுடன் அவரது சாக்கிய குலத்தைச் சேர்ந்த இளவரசன் விஜயன் இலாடா நாட்டு சிங்கபுரத்திலிருந்து 700 தோழர்களுடன் புறப்பட்டு, புத்தபிரான் இயற்கை எய்திய அதே நாளில் இலங்கையின் மேற்கே தம்பபண்ணி என்னும் இடத்தில் தரையிறங்கியதாகவும், புத்தபிரான் முன்கூட்டியே சக்கா என்னும் தேவதேவனுடன் கதைத்ததாகவும்,  இலங்கையில் புதுக்கக் குடிபுகும் இளவரசன் விஜயனையும் அவனது தோழர்களையும் காத்தருளும் பொறுப்பை சக்காவிடம் அவர் ஒப்படைத்ததாகவும் மகாவம்சம் கூறுவதை வரலாற்றறிஞர் அமரதாச லியனகமகே சுட்டிக்காட்டுகின்றார். 

இவ்வாறு சிங்கள இனத்தின் தோற்றத்துக்கும் பெளத்தத்துக்கும் மகாவம்ச ஆசிரியர் போடும் முடிச்சு மெய்யானதுமல்ல, சிங்கள இனத்துக்கோ பெளத்தத்துக்கோ அது நற்சகுனமும் அல்ல. 

முற்காலத்தில் மகாவம்சம் ஒரு பாளிமொழி ஓலைச்சுவடியாக இருந்தது.  எனவே அக்கால மக்களிடையே அது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கொள்ள முடியாது. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் அது இந்நாட்டு வரலாற்று நூல்களுள் ஒன்றாக சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட பின்னரே, சிங்கள பெளத்த மக்களின் உள்ளத்தில் அது தாக்கம் விளைவித்தது.  

முற்காலத்தில் இனமோ, சமயமோ அல்ல, சாதியமே இலங்கைவாழ் சமூகங்களைப் பிரித்து வைத்தது. 19ம் நூற்றாண்டின் இறுதிமுதல் பருமட்டாக 1925 வரை இலங்கையில் வெவ்வேறு இனங்களிடையே அல்ல, சாதிகளிடையே தான் கடும் மோதல்கள் ஏற்பட்டன  என்கிறார் பிரைஸ் ரையன் (Bryce Ryan). தற்காலத்திலேயே இனத்துவமும், சமயமும் இலங்கை மக்களைப் பிரித்து வைத்துள்ளன.  

அநகாரிக தர்மபாலா 

மகாவம்சத்தில் விவரிக்கபட்டது போல் சிங்கள இனத்துக்கும் பெளத்தத்துக்கும் இடையே போடப்பட்ட முடிச்சை பயன்படுத்திய பெளத்த சிங்கள கோட்பாட்டாளர் அநகாரிக தர்மபாலாவே.  தற்காலத்தின் துவக்கத்தில் சிங்கள பெளத்தருக்கென ஓர் எளிய வல்லினவாதக் கோட்பாட்டை உருவாக்கியவர் அவரே. 

இலங்கை தற்காலத்துள் அடியெடுத்து வைத்ததை அடுத்து எழுந்த தலைவர்களுள் சிங்கள பெளத்தர்களால் மிகவும் ஏற்றிப்போற்றப்பட்டவர்  அநகாரிக தர்மபாலாவே. குமாரி ஜயவர்த்தனா சரிவரக் கூறியது போல், “பேடித்தனமாக அடங்கியொடுங்கி, கூனிக்குறுகி தவழ்ந்து திரிந்த இலங்கைப் பிறவிகளிடையே தலைநிமிர்ந்து நடமாடிய ஒரேயொரு சீமான்” அவரே. 

இலங்கையில் வாழும் சிங்கள பெளத்தரல்லாதோர் அனைவரையும்  இழிந்தோராகவும், தாழ்ந்தோராகவும் நடத்தும் கொள்கையை மும்முரமாக முன்வைத்தவர் தருமபாலா. இலங்கைக்கு உரிமை கொண்டாடும் அருகதை சிங்கள பெளத்தர்களுக்கு மட்டுமே உண்டு என்று அவர் வலியுறுத்தினார். சிங்கள இனம், பெளத்தம் இரண்டினதும் சீர்குலைவுக்கு இலங்கையைக் கைப்பற்றிய ஐரோப்பியரை மட்டுமல்ல, இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களையும் அவர் குற்றஞ்சாட்டினார். மாட்டிறைச்சி உண்ணும் அனைவரையும் இழிசினர் என்று சாடினார். சிங்கள பெளத்தரிடையே அவர் பரப்பிய வல்லினவாதக் கருத்துக்களால் அவர் உயிர்வாழ்ந்த காலத்திலேயே இஸ்லாமியரும், பறங்கியரும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள். 

56ம் ஆண்டுப் புரட்சி

தருமபாலா புகுத்திய சிங்கள பெளத்த வல்லினவாதம் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலத்து சிங்கள பெளத்த சமூகத்தை ஒரு புற்றுநோய் போல் பீடித்தது. சுதந்திரம் கிடைத்து நீண்ட காலம் கழிந்தும் கூட, பண்டைய சிங்கள மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் பெளத்தம் எய்தியிருந்த அதே நிலைக்கு அது மீளவும் உயர்த்தப்படாதது குறித்து பெளத்த சங்க தரப்பினர் குமைந்தும், உலைந்தும் வந்தனர். 

பெளத்த குருமார் உலைந்து குமைந்து வந்ததை அடுத்து, அவர்களுக்கும் பெளத்த மக்களுக்கும் நாட்டு நிலைமையை விளக்கியுரைத்து, ஒரு பெளத்த சிங்கள அரசாங்கத்தை வென்றெடுக்கும் திட்டத்தை ஞானசீக தேரோ, குணபால மலலசேகரா, என். கியூ. டயஸ் ஆகியோர் மேற்கொண்டார்கள். அவர்கள் தீட்டிய திட்டத்தின் முனைப்பான கூறு பெளத்த ஆணையம் மேற்கொண்ட இயக்கத்தில் உள்ளடங்கியிருந்தது.   

1956ல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. வெள்ளையர் கட்டியாண்ட காலத்தில் ஓங்கிய பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னர் பெளத்த அரங்கில் நிகழ்ந்த மாபெரும் புரட்சி என்று அதைக் கருதலாம். பெளத்த பிக்குகளே 56ம் ஆண்டுப் புரட்சிக்கு உந்துவிசை அளித்த தலையாய தரப்பினர். 

ஆங்கிலத்துக்கு அளிக்கப்பட்ட முதன்மையை ஒழித்த பிரதமர் பண்டாரநாயக்கா, சிங்களத்துக்கும் தமிழுக்கும் ஆட்சிமொழித் தகுநிலை அளிக்க அரசியற் கட்சிகளிடையே காணப்பட்ட உடன்பாட்டுக்கு மாறாக, சிங்களத்தை மட்டும் ஆட்சிமொழி ஆக்கினார். ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் பழைய ஆட்சிமொழிக் கொள்கையைப் புறக்கணித்து, தனிச்சிங்களக் கொள்கையை ஆதரித்து வாதிட்டது. இலங்கை சமசமாசக் கட்சி, பொதுவுடைமைக் கட்சி ஆகிய இரு இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே சிங்கள, தமிழ் சமூகங்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்தன.

பண்டாரநாயக்கா

ஒருபுறம் பண்டாரநாயக்காவின் தனிச்சிங்களக் கொள்கை இலங்கைத் தமிழரை  தமது மொழியுரிமைக்காக மும்முரமான போராட்டத்தில் ஈடுபட உந்தியது; மறுபுறம் சிங்கள இளந்தலைமுறையை இருமொழிக் கல்வியிலிருந்து அகற்றி தனிச்சிங்கள மொழியில் கல்விகற்க அது நிர்ப்பந்தித்தது. ஈற்றில் பெளத்த பிக்குகள் புரிந்த சதியினால் பண்டாரநாயக்கா கொலையுண்டார்.

மேற்படி நிகழ்வுகள் எவற்றாலும் பெளத்த சிங்கள மேலாதிக்கம் வலுவிழக்கவில்லை; மாறாக அது மேற்கொண்டு வலுப்பெற்று வந்தது. தனது பெரும்பான்மை வலுக்கொண்டு சிறுபான்மை இனக்குழுமங்களின் உரிமைகளை நசுக்கும் வல்லமை மட்டுமே அதனிடம் காணப்பட்டது. அந்த வகையில் அது ஓர் அழிப்பு வலுவாக விளங்கியதே ஒழிய, ஒரு முற்போக்கு வலுவாக ஓங்கியதில்லை.

இலங்கை சமசமாசக் கட்சி, பொதுவுடைமைக் கட்சி ஆகிய இடதுசாரி அரசியற் கட்சிகள் இரண்டும் மேலோங்குவதற்கு சிங்கள மக்களின் ஆதரவும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை. வெகுவிரைவில் அவை இரண்டும் இலங்கைச் சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து, அருவருக்கத்தக்க அரசியலில் ஈடுபட்டு, “டட்லியின் வயிற்றுக்குள் மசாலா வடை” போன்ற இனவாத அறைகூவல்களுடன் அரசியற் பேரணிகளை நடத்தலாயின.   

அதன்பிறகு மக்கள் விடுதலை முன்னணி (ஜாதிக்க விமுக்தி பெரமுனா) என்ற பெயரில் எழுந்த புதிய இடதுசாரி இயக்கம் கூட என்றென்றும் பெளத்த சிங்கள மேலாதிக்கத்தை ஏற்கும் அரசியற் கட்சியாகவே விளங்கி வந்துள்ளது. 1965ல் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து அமைத்த அரசாங்கமும் பெளத்த சிங்கள மேலாதிக்கம் கிழித்த வரம்பினைக் கடக்கக் கூடாது என்னும் பதைப்பினால் நிலைகுலைந்து போயிற்று. 

இலங்கைச் சுதந்திரக் கட்சி, இலங்கை சமசமாசக் கட்சி, பொதுவுடைமைக் கட்சி ஆகிய கட்சிகளின் கூட்டரசாங்கமும் தமிழ்மக்களை ஒடுக்கி,  பெளத்த சிங்கள பேரினவாதத்தின் மேலாதிக்கத்தை உச்சப்படுத்தும் நோக்குடன் சட்டங்களை இயற்றியது. ஈற்றில் இக்கொடிய சட்டங்கள் தமிழ்மக்களை தனியரசுக்கான போராட்டத்தை மேற்கொள்ள உந்தியது. 

பிரபாகரனைத் தோற்கடித்தல்

சிங்கள சமூகத்துள் பெளத்த சிங்கள மேலாதிக்கம் மேலும் வலுப்படுவதற்கு  பிரபாகரனின் ஈழப்போர் வழிவகுத்தது. 

அநகாரிக தர்மபாலாவின் கருத்து நிலைப்பாட்டினால் புதிய சவால்களை மேற்கொண்டு எதிர்கொள்ள முடியாது போகவே, குணசேன அமரசேகரா, நளின் டி சில்வா, சம்பிக்க ரணவக்க போன்றவர்களால் பறைசாற்றப்பட்ட புதிய கருத்து நிலைப்பாடுகள் மேலோங்கின. அந்நிலைப்பாடுகள் அனைத்தும் அவற்றைக் கடைப்பிடித்தோரின் மதிநுட்பத்தை மேம்படுத்துவதை விடுத்து, அவர்களின் மடத்தனத்தையே தீவிரப்படுத்தின. 

பிரபாகரனையும், அவர் இடைவிடாது தொடுத்த ஈழப்போரையும் தோற்கடிக்க அதிபர் மகிந்த ராஜபக்சா வெற்றிகரமாக மேற்கொண்ட முயற்சியின் பெறுபேறாக பெளத்த சிங்கள மேலாதிக்கம் உச்சத்துக்கு இட்டுச்செல்லப்பட்டது. உள்நாட்டுப் போரில் ஈட்டிய வெற்றி இலங்கை அரசின் வீழ்ச்சியையும் சிதைவையும்  மறைத்தது. அதிபர் மகிந்த ராஜபக்சாவை அது பெளத்த சிங்கள மக்களின் முடிக்குரிய இளவரசனாக மாற்றியது. தமிழெதிரி அறவே தோல்வி அடைந்ததை அடுத்து முஸ்லீங்களுக்கு எதிரான போராட்டத்தை பெளத்த சிங்கள இனம் முன்னெடுத்தது. 

2015ல் மகிந்த ராஜபக்சா தோல்வியுற்றது கண்டு பெளத்த சிங்கள தரப்பினர் சீற்றமும் அதிர்ச்சியும் அடைந்தனர். அதை பெரும்பான்மையோருக்கு எதிராக சிறுபான்மையோர் புரிந்த சதியாக அவை நோக்கினர். தமக்கு உரித்தான, தம்வசம் வைத்திருந்த ஆட்சியதிகாரம் அபகரிக்கப்பட்டுவிட்டதாக எண்ணினர். அத்தகைய நிலைவரத்தை எதிர்கொள்வதற்கு அடுத்த அதிபர்-தேர்தலில் பெளத்த சிங்கள வாக்குகளை மாத்திரம் கொண்டு வெற்றி ஈட்டுவதே சிறந்த வழி என்று கண்டுகொண்டனர்.  பெளத்த பிக்குகள், 1956ல் செய்தது போல், மக்களை அதற்குத் தயார்ப்படுத்தினார்கள். ஈற்றில் பெளத்த சிங்கள மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு கொதாபய ராஜபக்சாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 சுவர்க்கத்துக்கல்ல, நரகத்துக்கு இட்டுச்செல்லும் வழி

அதிபர்-தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் பெளத்த சிங்கள தரப்பினர் பெளத்த சிங்கள வாக்குகளை மட்டுமே கொண்டு எதிர்பார்த்த வெற்றியை ஈட்டிக்கொண்டனர். எனினும் அவர்கள் எதிர்பார்த்த சுவர்க்க உலகை விடுத்து, அவர்கள் எதிர்பாராத நரக பாதாளத்துக்கே அவர்களது வெற்றி அவர்களை இட்டுச்சென்றுள்ளது. அவர்களது பயணம் ஈற்றில் அவர்களை அங்கு கொண்டுசெல்வது தவிர்க்கவியலாத ஒன்றாகும்.  

அநகாரிக தர்மபாலா முதல் கொதாபய ராஜபக்சா வரை இதே வழியில் நாட்டை இட்டுச்சென்ற ஒவ்வொரு தலைவரும் நாட்டைத் தகர்த்து, சிறுபான்மையோரை மட்டுமல்ல, பெளத்த சிங்கள பெரும்பான்மையோரையும் விடுதலைக்கல்ல, அழிவுக்கு இட்டுச்சென்றுள்ளார்கள். பெளத்த சிங்கள தீவிரவாதிகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட அரசியல் இயக்கம் எய்திய இறுதிப் பெறுபேறு இதுவே; அதன் வரலாற்று முடிவும் இதுவே. 

இந்த அரசியல் இயக்கத்தின் தலைவர்களும், வினைஞர்களும் விரைவில் தமது செல்வாக்கை இழந்துவிடுவார்கள். அவர்கள் அனைவரும் பெளத்த சிங்கள பெரும்பான்மையோரின் சீற்றத்துக்கும் வெறுப்புக்கும் இலக்காதல் திண்ணம். அத்துடன் ஒரு கேவலமான காலகட்டம், இருண்ட காலகட்டம் முடிவுக்கு வருகிறது என்பதையும், ஓர் அழகிய காலகட்டத்தை, செவ்விய காலகட்டத்தை வரவேற்கும் தருணம் கைகூடி வருகிறது என்பதையும்  நாம் புரிந்துகொள்வது முக்கியம் 

Victor Ivan, The end of an era of extremism, Financial Times, 2021-02-26, translated by Mani Velupillai, 2021-02-27. 

http://www.ft.lk/columns/The-end-of-an-era-of-extremism/4-713865

No comments:

Post a Comment