தமிழ்ச் சுவரில் மோதும் இந்துத்துவம்

விக்னேஷ் கார்த்திக் - அஜஸ் அஷ்ரவ்


தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் பல்வண்மையும், வெவ்வேறு குழுமங்களை அரவணைக்கும் மரபும் பாரதிய ஜனதா கட்சியின் அரசியற் பாணிக்கு எதிர்மாறானவை. 


Hindutva Tn


நாடாளுமன்றத்துக்கு 39 பிரதிநிதிகளை அனுப்பும் தமிழகத்தில், “மோதி மாநிலங்களுக்கு வருவார், பேசுவார், வெல்வார்” என்ற மந்திரம் இதுவரை பலிக்கவில்லை. 

 

மோதியின் வேட்டி, சால்வை

 

தமிழ்ப் பண்பாட்டுக் குறியீடுகளைப் பயன்படுத்தி தமிழ்நாட்டை ஈர்க்க முயல்கிறார் மோதி. எனினும் சென்னையில் பாதுகாப்புக் கண்காட்சியை துவக்கிவைக்க அவர் வந்தபோது (2018), “திரும்பிப் போ, மோதி!” என்ற முழக்கமே சமூக ஊடகங்களில் மேலோங்கியது. வேட்டி, சால்வை அணிந்து மாமல்லபுரம் வந்து, சீன அதிபர் சியுக்கு அவர் தமிழ்விருந்து அளித்தபோது (2019), “திரும்பிப் போ, மோதி!” என்ற முழக்கம் ஓர் இலட்சம் தடவைகள் எழுந்தது. தமிழ்நாட்டை அவரால் ஈர்க்க முடியவில்லை. தமிழ்நாட்டு மக்களின் வெறுப்பை அவர் சம்பாதித்து வருகிறார். 


 

மோதியின் தமிழ்ப்பற்று

 

இந்தி-இந்து-இந்துஸ்தான்-இந்துத்துவக் கலவையே பா. ஜ. க.வின் அரசியல் என்ற  படிமத்தை மறைக்கும் நோக்குடன், தமிழ் தமக்குப் பிடித்தமான மொழி என்று அவர் அடிக்கடி சொல்லி வருகிறார். ஐ. நா. பொதுச்சபையில் உரையாற்றியபோது (2019), தமிழ்ச்சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் (யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனும்) கூற்றினை மேற்கோள் காட்டினார். தமிழின் தொன்மை பற்றி அமெரிக்காவில் தாம் தெரிவித்த சங்கதி, அங்கு பேசுபொருளாக மாறியதாக சென்னை திரும்பி இந்திய தொழினுட்ப நிறுவகத்தின் பட்டமளிப்பு விழாவில் தெரிவித்தார்!  

 

சாதி

 

தமிழ்நாட்டில் இந்தி, வடமொழி இரண்டும் உயர்சாதிகளதும், வெளி மாநிலத்தவர்களதும் அடையாளங்களாக கொள்ளப்படுபவை. அதை வைத்து சாதி-அரசியலுக்கும் மொழி-அரசியலுக்கும் பா. ஜ. க. முடிச்சுப்போட்டுள்ளது. சாதிப்பட்டியலின் அடியில் நிலைகொண்ட அருந்ததியர் சாதியைச் சேர்ந்த எல். முருகன் மாநில பா. ஜ. க. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமது சாதிப்பெயர் இழிவானது என்று கருதிய வேறொரு சாதியின் ஏழு பிரிவினர் கோரியபடி, அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக தேவேந்திர குல வேளாளர் என்று மறுபெயரிடும் நடவடிக்கையை பா. ஜ. க. மேற்கொண்டது. 

 

இந்துத்துவம்

 

இந்துத்துவமே பா. ஜ. க.வின் அரசியற் கையிருப்பில் நிலையான சரக்கு. அண்மையில் சேலத்தில் உரையாற்றிய அதன் தேசிய இளைஞர் அணியின் தலைவர் தெஜஸ்வி சூரியா, “ஒவ்வொரு தமிழரும் ஓர் இந்து என்னும் பெருமை படைத்தவர். தி. மு. க. படுமோசமான இந்துவிரோத கருத்தியலைக் கடைப்பிடிக்கிறது. தமிழ் தப்பிப்பிழைக்க வேண்டும் என்றால், இந்துத்துவம் வெல்லவேண்டும்” என்று முழங்கினார். 

 

1998 பெப்ரவரி 14ம் திகதி கோவையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை நினைவுகூரும் நிகழ்ச்சி ஒன்றில் முருகன் இட்ட முழக்கம்: “அன்று இறந்த 58 பேரின் தியாகம் வீண்போகக் கூடாது என்றால், இந்துசமயத்தைக் காப்பாற்றவேண்டும் என்றால்,  இந்துவிரோதமும், தமிழ்விரோதமும் பாராட்டும் தி. மு. க.வுக்கு ஆட்சியில் அமர வாய்ப்பளிக்கக் கூடாது.” பல்வண்மையும், அரவணைப்பும், சமயச்சார்பின்மையும் மிளிரும் தமிழ் அடையாளத்தை இந்துமயப்படுத்தவெனத் திட்டமிட்டு தெரிவிக்கப்பட்ட கூற்றுகள் அவை.  


இந்து-முஸ்லீம் அரசியல் வரம்புகள் 


தமிழ்நாட்டின் சமயச்சார்பற்ற கட்டமைப்பில் கோவைக் குண்டுகள் ஒரு வெடிப்பை ஏற்படுத்தின. அந்த வெடிப்பின் ஊடாகத் தமிழகத்துள் புகுவதற்கு பா. ஜ. க. எண்ணியிருந்தது. வலதுசாரி இந்து இயக்கங்களும், இடைநடு வன்போக்கு இயக்கங்களும், முஸ்லீம் தீவிரவாதக் குழுமங்களும் கோவையில் பல்கிப் பெருகின. மக்களைப் பிளப்பதற்கு உகந்த நிலைவரம் அது. எனினும் தனது முயற்சியில் பா. ஜ. க. வெற்றி பெறவில்லை என்பதை தேர்தல் பெறுபேறுகள் உணர்த்துகின்றன. மாநிலத்தின் குடித்தொகையில் முஸ்லீங்கள் 6 விழுக்காடு என்பது அதற்கொரு காரணம். முஸ்லீங்களால் சமூகத்துக்கு ஆபத்து விளையும் எனும் கற்பனையை ஊதிப்பெருப்பிக்க அது போதுமானதல்ல.   

 

பல்வண்மைத் தமிழ் அடையாளம்

 

பல்வண்மைத் தமிழ் அடையாளம் உருவாக்கப்பட்டபோது, அதனுள் முஸ்லீங்கள் உள்வாங்கப்பட்டமையே பா. ஜ. க.வின் தோல்விக்கு இன்னும் உருப்படியான காரணம். 1920ல் சென்னை சட்டமன்றத்தில் சி. வி. வெங்கடரமண ஐயங்கார் ஒரு முன்மொழிவை முன்வைத்தார். காவல்துறையில் ஐரோப்பியர்களுடன் இந்தியர்களுக்கும் சில பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரினார். அதற்கு நீதிக்கட்சியின் நிறுவன உறுப்பினராகிய நடேச முதலியார் ஒரு திருத்தத்தை முன்வைத்தார். அதாவது காவல்துறையை சமூகவாரியாகப் பன்முகப்படுத்துவதற்கு மேலதிக ஏற்பாடாக “பிராமணர் அல்லாத இந்தியர்கள்” எனும் தொடரைப் பயன்படுத்தி மேற்படி முன்மொழிவை மீட்டியமைக்கும்படி அவர் கோரினார். பிராமணர் அல்லாத இந்துக்கள், முஸ்லீங்கள், இந்திய கிறீஸ்தவர்கள், சமணர்கள், பார்சிகள், ஆங்கில-இந்தியர்கள் அனைவரையும் உள்ளடக்கியே “பிராமணர் அல்லாத இந்தியர்கள்” எனும் தொடரை அவர் கையாண்டார். 


  

Being ‘Hindu’ and Being ‘Secular’ எனும் தமது ஆய்வேட்டில் முஸ்லீங்களை உள்வாங்கும் மரபு குறித்து சுவையான விபரம் ஒன்றை சமூகவியலர் எம். எஸ். எஸ். பாண்டியன் முன்வைக்கிறார்: தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தை நிறுவியவரும், திராவிடர் கழகத்தின் தலைவரும், மாநில மக்களால் “பெரியார்” எனக் கொண்டாடப்படுபவருமாகிய ஈ. வே. ரா. அவர்கள் முஸ்லீங்களை, “இந்துசமயத்தின் உட்கூறாகிய சாதி-ஒடுக்குமுறையிலிருந்து தப்புவதற்காக மதம்மாறிய தரப்பினர்” என்று சித்தரித்து, அவர்களை அணிதிரட்டினார். 

 

தீண்டாமையை வெல்வதற்கு தலித்துகள் இஸ்லாத்தை தழுவவேண்டும் என்று பெரியார் வாதாடினார். இஸ்லாத்தின் மையக்கருவாக விளங்கும் சமத்துவத்தை மெச்சினார். கணவரை இழந்தோரின் மறுமணத்தையும், மணவிலக்கையும் இஸ்லாம் அனுமதிப்பதை வரவேற்றார். அதேவேளை பெண்களை ஒதுங்கி அல்லது தலைமறைந்து நடமாட நிர்ப்பந்திக்கும் படுதா எனும் வழக்கத்தை சாடினார். கா. ரா. மனோகரனின் கருத்துப்படி, “பெரியார் தந்திரோபாய நோக்கத்துக்காகவே இஸ்லாத்துக்கு பரிந்து பேசினார்.” அதேவேளை புத்தரின் நியாயயத்துவம் அவரை ஊக்கியது; பெளத்தத்தை ஒரு நியாயத்துவ மெய்யியலாகவே அவர் கருதினார்.  

 

இஸ்லாமும் திராவிட இயக்கமும் ஒத்த குறிக்கோள்கள் கொண்டவை என்று பெரியார் கருதினார். 1947 மார்ச் 18ம் திகதி அவர் ஆற்றிய உரை ஒன்றை பாண்டியன் எடுத்துக்காட்டுகிறார்: “இஸ்லாத்தில் பிராமணரோ (மேல் சாதியோ), சூத்திரரோ (கீழ் சாதியோ), பஞ்சமரோ (தாழ் சாதியோ) இல்லை. அத்தகைய நெறியே திராவிடர்க்கு உரியதும், வேண்டியதும். இந்து (ஆரிய) சமயம் பல கடவுள்களையும் சாதிகளையும் அடிப்படையாகக் கொண்டது. பற்பல கடவுள்கள், சாதிகள் ஊடாக திராவிடர் சிதைவையும், சீரழிவையும், மனித உரிமைகளைத் துய்ப்பதில் முட்டுக்கட்டைகளையும் எதிர்கொள்கையில், ஆரியர் (பிராமணர்) நன்மைகளும் சலுகைகளும் அடைந்து வருகிறார்கள். பிராமணர்கள் இஸ்லாமிய நெறிமீது மிகுந்த காழ்ப்புக் கொண்டுள்ளார்கள்.”

 

“இந்துசமயத்துள் நிலவும் சாதிவாரியான ஏற்றத்தாழ்வுகளைக் கருத்தில் கொண்ட சுயமரியாதை இயக்கம், இஸ்லாத்தை ஒரு சமயக் குறிக்கோளாகவும், தாழ்ந்த சாதி இந்துக்களை தாழ்ச்சியிலிருந்து விடுவிக்கும் ஆயுதமாகவும் விதந்துரைத்தது” என்கிறார் பாண்டியன்.  

 

தமிழ்

 

1947ல் பிரிவினை ஏற்படுந் தறுவாயில் நாடுமுழுவதும் இந்து-முஸ்லீம் கலவரங்கள் மூண்டபொழுது பெரியார் ஆற்றிய உரை அது. இஸ்லாத்துக்கு இணக்கமான அவர்தம் அணுகுமுறையினால் முஸ்லீங்கள் சுயமரியாதை இயக்கத்த்தின்பால் ஈர்க்கப்பட்டனர். 1957 வரை வெளிவந்த தாருல் இஸ்லாம் எனும் தமிழ்ச் சஞ்சிகையின் பதிப்பாளர் தாவுத் ஷா முஸ்லீங்களிடம் ஒரு திட்டத்தை முன்வைத்தார். தமிழை மார்க்க மொழியாகவும், பாடமொழியாகவும் கொள்ளவேண்டும் என்பது அதில் ஒன்று. தேசிய விடயங்களில் பிராமணிய நிலைப்பாடு எடுப்பதை தவிர்க்கவேண்டும் என்றும் தமது சமூகத்தவரிடம் அவர்  கோரினார். இவ்வாறு முஸ்லீம் சமூகத்துக்கும் பிராமணியம் சாராத திராவிட இயக்கத்துக்கும் இடையே ஓங்கிய ஒத்துழைப்பு, “இஸ்லாம் எங்கள் வழி, இனபத்தமிழ் எங்கள் மொழி” என இற்றைவரை ஒலிக்கும் முழக்கத்துக்கு வழிவகுத்தது என்கிறார் பாண்டியன். 

 

வெவ்வேறு குழுமங்களை அரவணைக்கும் தமிழ் அடையாளம், இந்து வலதுசாரிகளின் எதிர்ப்பு முயற்சிகளை மீறி நிலைபெற்றுள்ளது. அதற்கு தமிழ்மொழியே தலையாய காரணம். மேல்சாதிகளுக்கு எதிராக கீழ்த்தட்டுக் குழுமங்கள் மேற்கொண்ட போராட்டத்தின் மொழியாகவே தமிழ் பெரிதும் நோக்கப்படுகிறது. ஒரே காலத்தில் நிகழ்ந்த இத்தகைய படிமுறைகள் இரண்டிலும் முஸ்லீங்கள் ஓர் உட்கூறாக அமைந்தார்கள். முஸ்லீங்கள் தமிழ்பேசும் தரப்பாக மட்டுமன்றி, மேட்டிமைக் குழுமங்களுக்கு எதிராக அறைகூவி எழுந்த கீழ்த்தட்டுக் குழுமங்களுள் ஒரு தரப்பாகவும் விளங்கி வந்துள்ளார்கள். அதாவது தமிழ் அடையாளம் ஓர் அரசியல் அடையாளம்; அது ஓர் இனத்துவ அடையாளமல்ல.  

 

அதனால் நன்மையே விளைந்தது. எடுத்துக்காட்டாக, ஏறாத்தாழ எல்லா மாநிலங்களிலும் “வேறு பிற்பட்ட குழுமங்கள்” எனும் நிரலில் சில முஸ்லீம் சாதிகள் இடம்பெற்றுள்ளன. 2007ல் தி. மு. க. அரசு ஒரு படி மேலே சென்று, அந்த நிரலில் ஒதுக்கப்பட்ட தொகையினுள் 3 விழுக்காடு பங்கினை புறம்பாக வழங்கியது. தமிழ்நாட்டில் அதற்கு எதிர்ப்புக் கிளம்பவில்லை. ஆனால் வடமாநிலம் எதிலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை. அங்கெல்லாம் பா. ஜ. க.வே தலையாய அரசியல் சூத்திரதாரி என்பது மட்டுமல்ல அதற்கான காரணம்! 


 

முஸ்லீங்களுக்கு தி. மு. க. புரிந்த நன்மையை, மேல்சாதிகளுள் பொருள்வளம் குன்றிய பிரிவினர்க்கு பத்து விழுக்காடு தொகை ஒதுக்குவதற்கு தி. மு. க. காட்டிய கடும் எதிர்ப்புடன் ஒப்புநோக்கலாம். கீழ்த்தட்டுக் குழுமங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் தனது நிலைப்பாட்டை பெரிதும் வரவேற்பர் என்பது மு. க. ஸ்டாலினுக்குத் தெரியும். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி. மு. க. 39க்கு 37 தொகுதிகளை வென்றெடுத்தது.

 

370வது உறுப்புரை

 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு ஓரளவு தன்னாட்சி அளித்த (இந்திய அரசியல்யாப்பின்) 370வது உறுப்புரையை பா. ஜ. க. அரசு வெட்டிக்குறைத்ததை தி. மு. க. எதிர்த்து  முழங்கியதற்கு, அதன் சமயச்சார்பற்ற தமிழ் அடையாளமே காரணம். மோதி அரசின் நடவடிக்கை இணைப்பாட்சி நெறியைக் கருவறுக்கும் நடவடிக்கை என்று தி. மு. க. அடித்துக் கூறியது. அத்துடன் தி. மு. க., வி. சி. க., இடதுசாரித் தரப்புகள் உள்ளிட்ட ஒரு கூட்டமைப்பு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தது. காஷ்மீரி முஸ்லீங்களுக்கு பாடம் படிப்பிக்கும் ஆசை பிற மாநிலங்களில் கைகூடுவது போல் தமிழ்நாட்டில் கைகூடப் போவதில்லை. 


மொழியும் சாதிப் பிளவுகளும் 

 

தமிழ் அடையாளத்தை உருவாக்குவதில் மொழி வகிக்கும் பங்கினை கருத்தில் கொள்கையில், மோதி தமது தமிழ்மொழிப் பற்றினை தம்பட்டம் அடிக்கும் காரணம் வியப்பூட்டாது. தலித்துக்களை ஈர்க்க பா. ஜ. க. பாடுபட்டு வருகிறது. தாம் “வேறு பிற்பட்ட குழுமங்களை” சார்ந்தவர் என்ற பல்லவியையும் மோதி பாடிவருகிறார்.  எனினும் அவர் பேசும் வடமொழிமயமான இந்தியிலும், அவர் புலன்செலுத்தும் இந்துசமய அம்சங்களிலும் வட இந்திய மேல்சாதிப் பண்பாடு பொதிந்திருப்பதால், தமிழ்மக்களுக்கு அவர் ஓர் ஆர். எஸ். எஸ். பரப்புரையாளராகவே தென்படுகின்றார்.  “இந்தியால் மட்டுமே இந்தியாவை ஒன்றிணைக்க முடியும்” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா போல் (2019), அவ்வப்பொழுது வாய்தடுமாறி உதிர்க்கப்படும் சொற்கள் தமிழ்மக்களின் உள்ளப்பதிவை வலுப்படுத்தி வருகின்றன. 

 

அத்தகைய சொற்கள் கீழ்த்தட்டுக் குழுமங்களுக்கு பெரிதும் கசக்கின்றன. அத்துடன் தமிழ்மொழியை ஓர் இந்துமொழி என்று வரையறுக்கும் பா. ஜ. க. தலைவர்களின் போக்கும் அக்குழுமங்களை மேலும் விசனமடைய வைக்கின்றது. கடந்த தசாப்தங்களில் வடமொழிமயப்பட்ட தமிழ்பேசும் மேல்சாதியினர் ஆதிக்கம் செலுத்தியதையே ”இந்து” என்ற சொல் நினைவூட்டுகிறது.

 

பிராமணரின் தோற்றுவாய் தமிழ்நாட்டுக்கு வெளியே என்ற தொனிப்பட, தமிழர் என்றுமே வடமொழிமயப்பட்டதில்லை என்றார் முன்னாள் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் எம். ஜி. எஸ். நாராயணன். (ஆதிவாசிகளைத் தவிர) தமிழர் மாத்திரமே தமது தாய்மொழியையும் தேசிய ஆளுமையையும் பேணிக்கொண்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். 

 

தமது அத்திவாரத்தை அகட்டுவதற்காக மாத்திரமன்றி, தம்மை தாழ்ந்த சாதியினரின் கட்சி என்று காட்டுவதற்காகவும் சாதி-மொழி இணைப்பைக் கொண்டு தலித்துக்களை பா. ஜ. க. ஈர்க்க முனைகிறது. அதனால் அடுத்த சில ஆண்டுகளில் பா. ஜ. க.வுக்கு கிடைக்கக்கூடிய  அறுவடையை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.  

 

தமிழ்நாட்டின் சமூகநீதி அரசியலில் கிட்டத்தட்ட விகிதாசார பிரதிநிதித்துவத்தின்படி சமூக குழுமங்கள் அனைத்துக்கும் அரசியலதிகாரம் கிடைத்துள்ளது. எடுத்துக்காட்டாக, 1970களில் சட்டமன்ற உறுப்பினர்களுள் ஏறத்தாழ முக்கால்வாசிப்பேர் “வேறு பிற்பட்ட குழுமங்களை” சேர்ந்தவர்களாக விளங்கினார்கள். தற்போதைய சட்டமன்றத்தில் அரைவாசிக்கு சற்று மேற்பட்டோர் அவர்களே. 15 முதல் 20 விழுக்காட்டினர் தலித்துக்கள். எஞ்சியோர் மற்றவர்கள். அதாவது, எல்லா வகையான சாதிகளுக்கும் இங்கு போதிய பிரதிநிதித்துவம் உண்டு. ஆதலால் உள்ளக்கடுப்பை பயன்படுத்தி தமது அத்திவாரத்தை அகட்டும் வாய்ப்பு பா. ஜ. க.வுக்கு மட்டுப்பட்டுள்ளது. 

 

பா. ஜ. க.வுக்கு இரண்டு தரப்புகளிடமிருந்து ஓரளவு ஆதரவு கிடைக்கிறது. கீழ்த்தட்டுக் குழுமங்கள் அணிதிரட்டப்பட்டமையால் பயனடைந்த கவுண்டர், நாடார் போன்ற சாதிகளை இன்று நாடளாவிய சமூக, பொருளாதார, பண்பாட்டு வாரியான ஆசை பீடித்துள்ளது. தமது ஆசையை அவர்களால் எவ்வளவு தூரம் எய்த முடியும் என்பது வாதத்துக்குரியது. இனி, அதிகாரமளிப்பு எனப்படும் அரசியலினால் அருந்ததியர் போன்ற சில தலித்துச் சாதிகள் ஏனைய சாதிகளை விட பயனடைந்தது குறைவு. அவர்களின் ஆதரவினால் பா. ஜ. க.வின் அத்திவாரம் ஓரளவு அகலக்கூடும். அ. இ. அ. தி. மு. க. தலைமையிலான கூட்டணியில் பா. ஜ. க.வின் பங்காக 20 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளபடியால், அது இன்னும் அகலக்கூடும். அதேவேளை இத்தகைய சாதிகளின் ஆதரவு தி. மு. க.வுக்கும் அ. இ. அ. தி. மு. க.வுக்கும் இருக்கவே செய்கிறது.

   

சூதுவாது


பா. ஜ. க.வின் வளர்ச்சி உண்மையில் அ. இ. அ. தி. மு. க.வின் தலைவிதியில் தங்கியுள்ளது. ஆதலால் தி. மு. க.வை வீழ்த்துவதே பா. ஜ. க.வின் முதலாவது இலக்கு. இந்துத்துவ கருத்தியலுக்கு எதிராக நிலைகொண்ட பல்வண்மைத் தமிழ் அடையாளத்தின் பதாகையை ஏந்திய கட்சியாக தி. மு. க. விளங்குவதே அதற்கான தலையாய காரணம். இதன் கருத்து, தமிழ் அடையாளத்தை தோற்றுவிக்கும் திட்டத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அ. இ. அ. தி. மு. க. துறந்துவிட்டது என்பதல்ல. ஜெயலலிதாவின் மறைவினால் அ. இ. அ. தி. மு. க. உட்கட்சி மோதல்களுக்கு உட்பட்டு நலியவே, அதன் தோள்மீதேறித் தாள்பதிக்கும் வாய்ப்பை பா. ஜ. க. மோப்பம் பிடித்துக்கொண்டது! 

 

ஆதலால் சட்டமன்றத் தேர்தலில் ஒரு கட்சியை வெள்ளோட்டம் விடும்படியும்,  அ. இ. அ. தி. மு. க.வின் அத்திவாரத்தை தகர்க்கும்படியும் நடிகர் ரஜ்னிகாந்தை பா. ஜ. க. தூண்டியதாகக் கருதப்படுகிறது. தமது கூட்டணியின் தலையாய பங்காளியை கருவறுக்கும் சூழ்ச்சியை பீகாரில் பா. ஜ. க. பரீட்சித்துப் பார்த்தது. ஐக்கிய ஜனதா தல்லை பலவீனப்படுத்தும்படி லோக் ஜனசக்திக் கட்சியின் தலைவர் சிராங் பசுவானை பா. ஜ. க. தூண்டியது. 

 

ஒரு கட்சியை வெள்ளோட்டம் விட்டபிறகு ரஜ்னிகாந் பின்வாங்கிக் கொண்டார். ஆதலால் இப்போதைக்கு ஒரு பலமான அ. இ. அ. தி. மு. க. எனும் தெப்பத்திலேயே தாம் மிதக்கலாம் என்றும், பிற்பாடு தி. மு. க.வை எதிர்க்கலாம் என்றும் பா. ஜ. க. கருதியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையிலிருந்து வெளிவந்து, ஆரவாரமான வரவேற்பு பெற்றபொழுது, அவர் அ. இ. அ. தி. மு. க.வுடன் இணையவேண்டும் என பா. ஜ. க. விரும்பியது. கடந்த காலத்தில் சசிகலாவைச் சாடிய ஆர். எஸ். எஸ். சித்தாந்தி எஸ். குருமூர்த்தி, “உங்கள் வீடு தீப்பற்றிக் கொண்டால், அதை அணைக்க நீங்கள் கங்கை நீருக்கு காத்திருக்க முடியாது. சாக்கடை நீரைக் கொண்டாவது சமாளிக்க வேண்டும்” என்றார்! 

 

“சாக்கடை” என்ற சொல்லின் சாதிய மறைகுறிப்பை பலரும் புரிந்துகொண்டார்கள். ஆர். எஸ். எஸ். தரப்பின் மேல்சாதி உளப்போக்கு கவனக்குறைவாக உளறிக்கொட்டப்பட்டதற்கு அது பிறிதோர் எடுத்துக்காட்டு.  ஊடக மறவர் அருண் செளரி வேறொரு தருணத்தில் அப்படிச் சொன்னதாகத் தெரிவித்து தன்மீதான கண்டனத்திலிருந்து தப்பிக்கொள்ள முயன்றார் குருமூர்த்தி. 

 

சசிகலாவும் அ. இ. அ. தி. மு. க.வும் புறம்பாகப் போட்டியிட்டால், தி. மு. க. எளிதாக வெற்றிபெற்றுவிடும் என்பதை குருமூர்த்தியின் கூற்று உணர்த்தியது.  தேர்தலில் குதிக்கும் தனது முன்னைய முடிபை மிகவும் மாயமான முறையில் சசிகலா மாற்றிக்கொண்டார். எனினும் அவரது மருமகனாகிய தினகரன் தலைமையில் அ. ம. மு. க. 2021 தேர்தலில் போட்டியிட்டது. 2019 தேர்தலில் அது 5 விழுக்காடு வாக்குகள் பெற்றது. அவை பெரிதும் அ. இ. அ. தி. மு. க.வின் வாக்குத் தளத்திலிருந்து வந்தவை.  அ. இ. அ. தி. மு. க. எனும் மரம் சரிந்தால், அதன் கிளை ஒன்றை பா. ஜ. க. வன்மையான முறையில் ஏந்திக்கொள்ளும்; ஏந்தி, தனது இந்தி-இந்து-இந்துஸ்தான்-இந்துத்துவ முகத்துக்கு ஒரு கீழ்த்தட்டு மெருகு பூசிக்கொள்ளும்! 

____________________________________________________________________________________

Vignesh Karthik KR & Ajaz Ashraf, Why BJP’s Hindutva Runs Into the Tamil Wall, News Click, 2021-03-18, translated by Mani Velupillai, 2021-10-13.

https://www.newsclick.in/Why-BJP-Hindutva-Runs-Into-Tamil-Wall

No comments:

Post a Comment