மார்ட்டின் கிமானி
கெனியாவின் ஐ. நா.வுக்கான தூதர்
ஐ. நா. பாதுகாப்புச் சபையில்
உக்ரேன் நிலைவரம் குறித்த அவசர அமர்வில் ஆற்றிய உரை
2022-02-22
நன்றி, அவைத்தலைவர் அவர்களே!
உக்ரேன் நிலைவரம் பற்றி சுருக்கவுரை ஆற்றிய துணைத் தலைமைச் செயலாளர் ரோஸ்மேரி டிகாழோ அவர்களுக்கும் நன்றி!
இன்றிரவு உக்ரேனில் பாரிய மோதல் மூளுந் தறுவாயில் நாம் கூடியுள்ளோம். பெப்ரவரி 17ம் திகதி நாம் வலியுறுத்திய சூழ்வியல் முயற்சி தோற்று வருகிறது. உக்ரேனின் ஆள்புலத் திண்மையும், இறைமையும் மீறப்பட்டுள்ளது. ஐ. நா. சாசனம் வலியோரின் கைகளில் இடைவிடாது தாக்குண்டு, சிதறுண்டு வருகிறது. ஒரு கணம் பற்றுறுதியுடன் அதை மேற்கோள்காட்டும் அதே நாடுகள், மறு கணம் உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் நேர்மாறான நோக்கங்களை எய்தும் நோக்குடன் அதைப் புறக்கணித்து வருகின்றன.
உக்ரேன் நிலைவரம் மற்றும் ரஷ்யாவின் படைக்குவிப்பு பற்றி கடந்த இரண்டு கூட்டங்களிலும், சூழ்வியல் முயற்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கெனியா வலியுறுத்தியது. எமது கோரிக்கைக்கு செவி சாய்க்கப்படவில்லை. அதைவிட முக்கிய சங்கதி எனும்படியாக, அங்கத்துவ நாடுகள் உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும், நீதிக்கும் பாதிப்பு விளையா வண்ணம் தத்தம் பிணக்குகளை அமைதிவழியில் தீர்க்க வேண்டும் என்று கோரும் ஐ. நா. சாசனம் படுமோசமான முறையில் மீறப்பட்டுள்ளது.
உக்ரேனின் ஆள்புலத் திண்மைக்கும் அரசியற் சுதந்திரத்துக்கும் எதிராகப் பலவந்தம் பிரயோக்கிக்கப்படும் என இன்று அச்சுறுத்தப்பட்டுள்ளது; அல்லது பலவந்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. உக்ரேனின் தானெற்ஸ்க், லுஹான்ஸ்க் பிரதேசங்களை சுதந்திர அரசுகளாக அங்கீகரிக்கும் அறிவிப்பு ரஷ்யாவினால் விடுக்கப்பட்டது குறித்து கெனியா மிகவும் துணுக்குற்றுள்ளது. இந்த நடவடிக்கையும் அறிவிப்பும் உக்ரேனின் ஆள்புலத் திண்மையை மீறுபவை என்பதே எமது நிதானமான கருத்து.
மேற்படி பிரதேசங்களின் பாதுகாப்பு தொடர்பாக காத்திரமான கரிசனைகள் நிலவக்கூடும் என்பதை நாம் மறுக்கவில்லை. அவற்றுக்கு அமைதியான முறையில் தீர்வுகாண சூழ்வியல் வழிவகைகள் பலவும் கைகூடி, முன்னகரும் இவ்வேளையில் அப்பிரதேசங்களை சுதந்திர அரசுகளாக அங்கீகரிக்கும் நடவடிக்கையை அக்கரிசனைகளின் அடிப்படையில் நியாயப்படுத்த முடியாது.
அவைத்தலைவர் அவர்களே,
உக்ரேன் நிலைவரத்தில் எமது கெனிய வரலாறு எதிரொலிக்கிறது. எம்மைக் கட்டியாண்ட பேரரசுகள் பின்னடையுந் தறுவாயில் கெனியா உட்பட ஏறத்தாழ எல்லா ஆபிரிக்க நாடுகளும் தோன்றின. எமது எல்லைகள் எங்களால் வரையப்பட்டவை அல்ல. தொலைவிலிருந்து எம்மைக் கட்டியாண்டவர்கள் இலண்டன், பாரிஸ், லிஸ்பன் மாநகரங்களில் அம்ர்ந்துகொண்டு, எமது பழம்பெரும் தேசிய இனங்களின் கட்டுக்கோப்பினைப் பொருட்படுத்தாமல், அவற்றைக் கீறிப் பிளந்து வரைந்த எல்லைகள் அவை.
இன்று ஆபிரிக்க நாடு ஒவ்வொன்றிலும் எமது நாட்டு மக்கள் வாழ்கிறார்கள். வரலாறு, பண்பாடு, மொழி வாரியாக நாங்களும் அவர்களும் பின்னிப் பிணைந்தவர்கள். நாம் சுதந்திரம் ஈட்டிய வேளையில் இனக்குழும அல்லது பேரின அல்லது சமய தனித்துவத்தை நாடியிருந்தால், பல தசாப்தங்கள் கழிந்த இந்த வேளையிலும் கூட நாம் குருதிபாயப் போர்தொடுத்து வந்திருப்போம்.
எனினும் எமக்கு ஈயப்பட்ட எல்லைகளை நாம் ஏற்றுக்கொள்ள உடன்பட்டோம். அதேவேளை ஆபிரிக்க கண்டத்து அரசியல், பொருளாதார, சட்டதிட்ட ஒருங்கிணைப்பை நாம் தழுவிக்கொண்டோம். என்றென்றும் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்து, ஆபத்தான முறையில் பழமையை நினைந்துருகும் தேசிய இனங்களை உருவாக்காமல், எமது பற்பல தேசிய இனங்களும் மக்களும் என்றுமே அறிந்திராத மகத்துவத்தை நாடி முன்னகர விரும்பினோம். ஆபிரிக்க ஐக்கிய அமைப்பின் விதிகளையும், ஐ. நா. சாசனத்தையும் பின்பற்ற விரும்பினோம். எமது எல்லைகள் எமக்கு நிறைவு தந்தபடியால் அல்ல, அமைதியில் மலரும் மகத்துவம் ஒன்றை நாடியபடியால் தான் அப்படிச் செய்தோம்.
நிலைகுலைந்த அல்லது பின்னடைந்த பேரரசுகளிலிருந்து தோன்றிய அரசுகள் அனைத்திலும் வாழும் மக்கள் பலரும் அண்டை அரசுகளில் வாழும் மக்களுடன் ஒருங்கிணைய விரும்புவர் என்றே நாம் நம்புகிறோம். அது இயல்பு; புரிந்துகொள்ளக் கூடியது. என்னதான் ஆயினும், தனது இனத்தவர்களுடன் இணைந்து பயணிக்க யார்தான் விரும்ப மாட்டார்? எனினும் அத்தகைய வேட்கையை எய்துவதற்கு பலவந்தம் பிரயோகிப்பதை கெனியா நிராகரிக்கிறது. திரும்பவும் எம்மை புதுவிதமான ஆதிக்கத்துக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாக்கா வண்ணம், மாண்ட பேரரசுகளின் நீறுபூத்த தணலிலிருந்து கடைத்தேறும் பணியை நாம் முற்றுவிக்க வேண்டும்.
பேரின, தேசிய இன, சமய, பண்பாட்டுக் காரணிகள் எவற்றின் அடிப்படையிலும் முன்வைக்கப்படும் புலம் மீட்டல், புலம் அகட்டல் வாதங்களை அன்றும் நாம் நிராகரித்தோம். இன்றும் நிராகரிக்கிறோம். தொனெற்ஸ்க், லுகன்ஸ்க் புலங்களை சுதந்திர அரசுகள் என அங்கீகரிப்பது குறித்து கெனியா மிகுந்த கவலையும், மறுப்பும் தெரிவிக்கிறது. கடந்த சில தசாப்தங்களில் ஐ. நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் உட்பட வலிமை வாய்ந்த அரசுகள் சர்வதேய சட்டத்தை துச்சமாக மதித்து மீறிவந்துள்ளதை நாம் கடுமையாக கண்டிக்கிறோம்.
இன்றிரவு பன்னாட்டு உறவு தாக்குண்டு குற்றுயிராய் கிடக்கிறது. அண்மைக் காலத்தில் வலிமைவாய்ந்த வேறு அரசுகளும் பன்னாட்டு உறவை தாக்கியதுண்டு. ஐ. நா. தலைமைச் செயலாளரின் பின்னே அணிதிரளுமாறு இந்த வேளையில் எல்லா அங்கத்தவர்களையும் நாம் கேட்டுக்கொள்கிறோம். பன்னாட்டு உறவினை காக்கும் நியமத்தை நோக்கி எங்கள் அனைவரையும் அணிதிரட்டுமாறு அவரிடம் நாம் கேட்டுக்கொள்கிறோம். சம்பந்தப்பட்ட தரப்புகள் அமைதிவழியில் இந்நிலைவரத்துக்கு தீர்வுகாண்பதற்கு ஏதுவாக, தமது செல்வாக்கை பயன்படுத்தி, உதவுமாறும் அவரிடம் நாம் கேட்டுக்கொள்கிறோம்.
அவைத்தலைவர் அவர்களே, சர்வதேயவாரியாக அங்கீகரிக்கப்பட்ட அதன் எல்லைகளுக்கு உட்பட்டவரை உக்ரேனின் ஆள்புலத் திண்மை மீது கெனியா கொண்ட மதிப்பை இத்தால் மீண்டும் உறுதிப்படுத்தி நான் விடைபெறுகிறேன்.
நன்றி.
_______________________________________________________________________
Martin Kimani, Emergency Session on Ukraine, UN Security Council, 2022-02-22,
translated by Mani Velupillai, 2022-03-23.
https://www.americanrhetoric.com/speeches/martinkimaniunitednationsrussiaukraine.htm
No comments:
Post a Comment