இலங்கை சமசமாசக் கட்சிக்கு 90 வயது
அரசியல்யாப்பு வரைவதில்
சமசமாசக் கட்சி வகித்த பங்கு
கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்தினா
இலங்கை சமசமாசக் கட்சிக்கு 90 வயது. அரசியல்யாப்பு விடயத்தில் சமசமாசக் கட்சி கொண்ட நிலைப்பாடுகளை இக்கட்டுரை துலக்கி உரைக்கின்றது.
சமசமாசக் கட்சி இரண்டு தலையாய குறிக்கோளள்களுடன் நிறுவப்பட்டது: (1) இலங்கைக்கு முழுவிடுதலை ஈட்டிக்கொள்ளுதல்; (2) ஒரு சமவுடைமைச் சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்.
முதலாவது குறிக்கோள் இரண்டு கட்டங்களில் எய்தப்பட்டது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டதன் மூலம் 1948ல் அரைகுறை விடுதலை எய்தவும், 1972ல் முழு விடுதலை எய்தவும் சமசமாசக் கட்சி நேரடியாக முன்நின்று உதவியது. இரண்டவது குறிக்கோள் எட்டாத தொலைவில் உள்ளது.
குடியுரிமைச் சட்டம்: விடுதலை பெற்று இரண்டாவது ஆண்டிலேயே மலையகத் தமிழ்மக்களுக்கு குடியுரிமை மறுக்கவும், அதன் விளையாக அவர்களின் வாக்குரிமையைப் பறிக்கவும் டி. எஸ். சேநநாயக்காவின் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
1947ம் ஆண்டு நடந்த தேர்தலில், பிரித்தானியக் குடிமக்களாகக் கலந்துகொண்ட மலையகத் தமிழ்மக்கள் பலர் இடதுசாரிப் பக்கம்சாய்ந்து, குறிப்பாக சமசமாசக் கட்சிக்கு வாக்களிதார்கள். அத்தேர்தலில் இலங்கை இந்திய காங்கிரஸ் 7 இருக்கைகளை வென்றெடுத்தது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த தொகுதிகளில், அவர்களின் ஆதரவுடன் இடதுசாரி வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்றார்கள்.
படத்தில் இடமிருந்து வலமாக: வி. காராளசிங்கம், பி. ஒ. விமலநாகா, விவியன் குணவர்த்தனா, எக்டர் அபயவர்த்தனா, லெஸ்லி குணவர்த்தனா, ஒஸ்மன் ஜயரத்தினா, கொல்வின் ஆர். டி. சில்வா, என். எஸ். ஈ. பெரெரா, என். எம். பெரெரா, பேர்னாட் சொய்சா.
_____________________________________________________________________________________________________________________
காலப்போக்கில் இடதுசாரிகளின் அணிதிரள்வினால் தமக்கு ஆபத்து விளையப் போவதை இலங்கை முதலாளித்துவ வர்க்கம் உணர்ந்துகொண்டது. பல்லாயிரக் கணக்கான மலையகத் தமிழ்மக்களுக்கு குடியுரிமையை மறுக்கும் விதமாக குடியுரிமைச் சட்டத்தில் “குடி” எனும் சொல் வரையறுக்கப்படுவதை முதலாளித்துவ வர்க்கம் உறுதிசெய்தது.
அதன் பேறுபேறாக, மலையகத் தமிழ்மக்கள் தமது குடியுரிமையுடன் வாக்குரிமையையும் இழந்தார்கள். அப்பொழுது சமசமாசக் கட்சியின் தலைமையில் இடதுசாரிகளே அதை எதிர்த்து நின்றார்கள்.
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக விளங்கிய தமிழ் காங்கிரஸ் மேற்படி சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அதற்கு மாறான நிலைப்பாட்டை எடுத்தார். தமது உடன்பிறப்புகளாகிய மலையகத் தமிழ்மக்களை தமிழ்த் தலைவர்களால் காக்க முடியவில்லை. கொழும்பில் நிலைகொண்ட அரசாங்கத்தில் பங்கு வகிப்பதால் சிறுபான்மையோருக்கு நன்மை ஏற்படவில்லை என்றார் செல்வநாயகம்.
சிறுபான்மையோர் வாழும் பிரதேசங்களில் அவர்களுக்கு தன்னரசு தேவை எனும் பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வாதிட்டார். அந்த அரசியல் நடைமுறையின் ஒரு விளைவே அவர் அமைத்த சமஷ்டிக் கட்சி.
1947ம் ஆண்டின் அரசியல்யாப்பில் காணப்பட்ட 29ம் பிரிவின்படி, வேறு சமூகங்களுக்கு அல்லது சமயங்களுக்கு ஏற்படாத தடங்கல்களும் மட்டுப்பாடுகளும் எந்த ஒரு சமூகத்துக்கும் அல்லது சமயத்துக்கும் ஏற்படும் விதமாகச் சட்டம் இயற்றலாகாது என்றொரு பாதுகாப்பு இருந்தது.
எனினும், இலங்கை உச்ச நீதிமன்றமோ, அன்று இலங்கையின் அதியுச்ச மேன்முறையீட்டு நீதிமன்றமாக விளங்கிய பிரித்தானிய கோமறை மன்றமோ மலையகத் தமிழ்மக்களின் துயரைத் துடைக்கவில்ல.
தமிழுக்கும் சிங்களத்துக்கும் சமத்துவமும் இனப்பிரச்சனையும்: முன்னர் தமிழுக்கும் சிங்களத்துக்கும் சமத்துவம் வழங்க இணங்கிய ஐக்கிய தேசியக் கட்சியும், இலங்கைச் சுதந்திரக் கட்சியும் 1955ல் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, சிங்களம் மட்டும் ஆட்சிமொழி ஆக்கப்படுவதை ஆதரித்தன.
சமசமாசக் கட்சியோ அதன் சமத்துவக் கொள்கையை உறுதியாகப் பற்றியிருந்தது. ஏற்கெனவே பெளத்த குருமார் குழுமம் ஒன்று என். எம். பெரெராவைச் சந்தித்து, சிங்களத்தை மட்டும் ஆட்சிமொழியாக்க அவர் உடன்பட்டால், அவரைப் பிரதம மந்திரியாக்கத் தயாராய் இருப்பதாகத் தெரிவித்தது. அந்த யோசனையை அவர் நிராகரித்தார்.
கொல்வின் ஆர். டி. சில்வா விடுத்த “ஒரு மொழி, இரு நாடுகள்: இரு மொழிகள், ஒரு நாடு” எனும் பேர்போன எச்சரிக்கைக்கு நாடு செவிசாய்த்திருந்தால், பிரிவினைப் போராட்டத்தை தவிர்த்திருக்கலாம்.
இடதுசாரிகள் சந்தர்ப்பவாதிகளாக விளங்க மறுத்தபடியால், மக்களின் ஆதரவை இழந்தார்கள். 1956ல் ஆட்சிமொழிச் சட்டமூல விவாதத்தில், சமசமாசக் கட்சியைச் சேர்ந்த பாணந்துறை அங்கத்தவர் விடுத்த எச்சரிக்கை இது:
“இனக்கலவரங்கள் ஏற்படக்கூடிய ஆபத்தை மாத்திரம் நான் குறிப்பிடவில்லை. நாடு பிளவுபடக்கூடிய பேராபத்தும் உண்டு. குறிப்பாக இலங்கையின் வட, கீழ் மாகாணங்களில் தமிழ் பேசும் மக்கள் வாழுகின்றார்கள் என்பதை நாங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். தமக்கு பாரதூரமான, ஈடுசெய்ய முடியாத அநீதி இழைக்கப்பட்டுள்ளதென அவர்கள் கருதினால், எஞ்சிய நாட்டிலிருந்து பிரிந்து செல்லவும் அவர்கள் தீர்மானிக்கக் கூடும். உண்மை என்னவெனில், ஏற்கெனவே தமிழ்பேசும் மக்களுள் ஒரு பிரிவினர் வெளிப்படையாகவே பிரிவினையை முன்வைத்து வாதாடி வருகிறார்கள்.”
1956ல் சிங்களம் மட்டும் ஆட்சிமொழி ஆக்கப்பட்டது; 1987ல் இரு மொழிகளிம் முறைப்படி ஆட்சிமொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது முரண்சுவை ததும்பும் இலங்கை வரலாறு!
1972 குடியரசு யாப்பு: 1972ல் குடியரசு யாப்பை இயற்றுவதில் கொல்வின் மாபெரும் தொண்டாற்றினார். குடியரசு யாப்பின்படி பிரித்தானியாவுடன் கொண்ட அரசியல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. நாடாளுமன்ற முறைமை பேணப்பட்டது. அடிப்படை உரிமைகள் ஏற்கப்பட்டன. சமூகநீதியை ஆதரித்து நெறிப்படுத்தும் அரசநெறிகளை உள்வாங்கப்பட்டன. இவை புதிய யாப்பின் மூலம் எய்தப்பட்ட மேலதிக சாதனைகள்.
குடியரசு யாப்பில் குறைகளும் இருந்தன. அவற்றுக்கு கொல்வினில் மட்டும் பழிசுமத்தப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கொல்வின் எழுதிய குறுநூல் ஒன்றில், குடியரசு யாப்பில் பெளத்த சமயத்துக்கு கொடுக்கப்பட்ட இடம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்:
“நான் சமயச்சார்பற்ற அரசில் நம்பிக்கை உடையவன். எனினும், யாப்பு வரையும் மன்றங்கள் யாப்புகளை வரையும்பொழுது, அவை யாப்பு அலுவல்கள் அமைச்சரால் வரையப்படுபவை அல்ல என்பது உங்களுக்குத் தெரியும் தானே!” என்கிறார் கொல்வின்.
யாப்பு வரையும் மன்றத்துள் நிலவிய அதிகாரச் சமநிலையை யாப்பின் இறுதிவரைபு புலப்படுத்தியது என்று பொருள்படவே மேற்கண்டவாறு கொல்வின் எழுதியிருக்கின்றார்.
யாப்பு வரைவதில் துணைநின்றவன் என்ற வகையில், அடியேனது பட்டறிவு அதை உறுதிப்படுத்துகின்றது. யாப்பு வரைவோருக்கு ஒரு பங்குண்டு என்பது உண்மையே. அதேவேளை சர்ச்சைக்குரிய சங்கதிகள் பற்றிய இறுதிவரைபு, சம்பந்தப்பட்ட அரசியலதிகார விசைகளிலேயே தங்கியுள்ளது; அவ்விசைகளின் பெறுபேறுகளையே அது புலப்படுத்துகின்றது.
பெளத்தம் பெரும்பான்மையோரின் சமயம் என்றபடியால், “அதற்குரிய இடம்” கொடுக்கப்பட வேண்டும் என்று கொல்வின் முதன்முதல் இட்ட முன்மொழிவை யாப்பு வரையும் மன்றம் ஏற்றுக்கொண்டது உண்மையே. எனினும் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் கூடிய சமய உபகுழு, பெளத்த சமயத்துக்கு “அதிமுதன்மையான இடம்” கொடுக்கப்பட வேண்டும் என்று மாற்றியது.
பிரதமரின் முன்னோர்களுள் ஒருவர் 1815ம் ஆண்டில் செய்யப்பட்ட கண்டிப் பொருத்தனையில் ஒப்பமிட்டதாகவும், அதில் பெளத்தம் மீறவொண்ணாத சமயம் என்று வெளிப்படுத்தபட்டதாகவும், பெளத்த சமயச் சடங்குகளையும், குருமாரையும், வழிபாட்டிடங்களையும் பேணிப் பாதுகாக்கப் பிரித்தானியர் உடன்பட்டதாகவும், இவையெல்லாம் பிரதமரின் கருத்தில் தாக்கம் செலுத்தியதாகவும் நம்பப்படுகிறது.
1972ம் ஆண்டில் குடியர யாப்பு வரைந்த குழுவில் அங்கம் வகித்த கலாநிதி நிகால் ஜயவிக்கிரமா எழுதியவாறு, கொல்வின் தயாரித்த முழுமுதல் வரைபில் இலங்கை ஓர் ஒற்றையாட்சி அரசு என்று குறிப்பிடப்படவில்லை. அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவே இலங்கை ஓர் ஒற்றையாட்சி அரசு என்று குறிப்பிடப்பட வேண்டுமென முன்மொழிந்தார்.
முன்மொழியப்பட்ட யாப்பு ஓர் ஒற்றையாட்சிக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் அதேவேளை, ஒற்றையாட்சி யாப்புகளின் உருவங்கள் கணிசமானளவு வேறுபடக்கூடும்; ஆதலால் யாப்பில் நெகிழ்ச்சிக்கு இடம்கொடுக்க வேண்டும் என்பதே கொல்வின் கொண்ட கருத்து.
எனினும் “ஒற்றையாட்சி” என்ற பதம் இறுதிவரைபில் இடம் பிடித்துக்கொண்டது. “நன்கு சிந்திக்காமல், அவசர அவசரமாக, முற்றிலும் அநாவசியமாக இடப்ப்பட்ட “ஒற்றையாட்சி” என்ற சோடனை காலப்போக்கில் தனிச்சிங்கள அரசு ஒன்றினை அமைக்கத் துடிக்கும் ஆட்களதும் குழுமங்களதும் அறைகூவலாக மாறியது” என்கிறார் நிகால் ஜயவிக்கிரமா.
1972ம் ஆண்டில் இயற்றப்பட்ட யாப்பில் தமிழ், சிங்களம் இரண்டையும் ஆட்சிமொழிகளாக்கத் தவறியமை இடதுசாரிக்ளுக்கு நேர்ந்த தோல்வி என்பது உண்மையே. வட, கீழ் மாகாண நீதிமன்றுகளில் தமிழைப் பயன்படுத்த அனுமதித்தமை, நாட்டின் எந்த நீதிமன்றிலும் தமிழ் மொழிபெயர்ப்பை பெற்றுக்கொள்ளும் உரிமையை வழங்கியமை எல்லாம் சின்னஞ்சிறிய சாதனைகளாகும்.
அதிகாரப் பரவலாக்கம்: அரசியல்யாப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பிரநிநிதித்துவத்தையே தமிழ்மக்கள் முதன்முதல் கோரினார்கள். பிரதேச தன்னரசைக் காட்டிலும், நடுவண் அரசுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில்தான் அவர்கள் முதற்கண் பெரிதும் விருப்பம் தெரிவித்தார்கள். அதனைக் கருத்தில் கொள்ளும்பொழுது, சமத்துவத்தின் மூலம் இன ஒற்றுமையை உறுதிப்படுத்த முடியுமென இடதுசாரிகள் நம்பியதில் வியப்பில்லை.
முரண்பாடு முற்றிய பிறகு, அதற்கான தீர்வு பிரதேச தன்னாட்சியே என்று உறுதிபட நம்பிய என். எம். பெரெரா, தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகளில் இவ்வாறு எழுதியிருக்கின்றார்:
“ஒரு தீயூழ் எனும்படியாக, சிங்கள-சார்புத் தரப்புகள் தள்ளாடிய வேளையில், இளந்தீவிரவாதிகள் தனியரசு கோருவதில் முன்னணிக்கு வந்தார்கள்… 20 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழினத்துக்கு நிறைவளித்திருக்கக்கூடிய எதுவும், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் போதுமானதாகாது. நலமான, இன ஒற்றுமையை மீண்டும் ஈட்ட வேண்டுமாயின், பிரதேச தன்னாட்சி என்றவகையில் பிற சலுகைகளும் வழங்கப்பட வேண்டியிருக்கும்.”
என். எம். பெரெரா இறப்பதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரைகளில், அவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இறந்த பிறகு அவரைப் பின்பற்றியோர் பிரதேச தன்னரசுக்கான முன்மொழிவைத் தொடர்ந்து முன்வைத்தார்கள்.
1983 ஆடி வேதனைகள் பட்டறியப்பட்ட பிறகு நிகழ்ந்த அனைத்துக் கட்சி மாநாட்டில் கொல்வின் பங்குபற்றினார். “இனப்பிரச்சனை என்பது இந்தச் சமூகத்துக்கும் அந்தச் சமூகத்துக்கும் இடைப்பட்ட பிரச்சனை அல்ல, இது இலங்கைத் தேசிய அரசுப் பிரச்சனை” என்று முழங்கினார்.
இலங்கை ஒரே அரசுடன் கூடிய ஒரே நாடாக விளங்க வேண்டும் என்பதே சமசமாசக் கட்சியின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டை திரும்பவும் கொல்வின் வலியுறுத்தினார்.
அதேவேளை, தொடர்ச்சியான ஆள்புலத்தில் பெருந்தொகையான தமிழ்மக்கள் வாழ்ந்து வருவதால், குறிப்பாக சமத்துவம், தேசியம், அரசாங்கம் என்பவற்றைப் பொறுத்தவரை நிறைவேற்றவேண்டிய நோக்கத்தை தற்போது அமைக்கப்பட்டுள்ள அரசு நிறைவேற்றவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இடதுசாரிகள் 13வது திருத்தத்தை கொள்கையளவில் ஆதரித்தார்கள். அதற்காக விஜய குமாரதுங்கா உள்ளடங்கிய 200 இடதுசாரிகள் தம் இன்னுயிரை ஈந்தார்கள். அவர்களுள் 25 பேர் சமசமாசக் கட்சியினர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவினால் அனைத்துக் கட்சிப் பிரநிதிகள் குழு அமைக்கப்பட்டது. அதற்கு சமசமாசக் கட்சி அமைச்சர் திஸ்ஸ விதாரணை தலைமை வகித்தார். பிளவுபடாத நாட்டினுள் பரந்துபட்ட அதிகாரப் பரவலாக்கத்தை அது முன்வைத்தது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல்: என். எம். பெரெரா உலகளாவிய நாடாளுமன்ற முறைமையை செவ்வனே தேர்ந்து தெளிந்தவர்; தலைசிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்; நடாளுமன்ற முறைமையை அவர் உறுதிபட ஆதரித்ததில் வியப்பில்லை. .
1978ம் ஆண்டில் புகுத்தப்பட்ட யாப்பினைக் குறித்து அவர் ஒரு கட்டுரைத் தொகுப்பினை வெளியிட்டார். இலங்கையில் நாடாளுமன்ற ஆட்சி முறைமை 40 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்களவு வெற்றிகரமாகச் செயற்பட்டது. மேல்நாட்டு அவதானிகளை அது வியக்க வைத்தது என்றெல்லாம் என். எம். பெரெரா அதில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டுமென வாதாடுவோரின் கைநூலாக அது மாறியுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் எண்ணத்தை இடதுசாரிகள் இடைவிடாது, தளராது ஆதரித்து வந்தார்கள். சமசமாசக் கட்சி இந்த முயற்சிக்கு கணிசமானளவு துணைநின்றுள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்து, மாகாணங்களுக்கும், மாவட்டங்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அதிகாரங்களைப் பரவலாக்கி, எல்லாச் சமூகங்களுக்கும் ஆட்சியில் பங்கு வழங்கும் விதமாக ஒரு புதிய யாப்பினைப் புகுத்துவோம் என்று தேசிய மக்கள் சக்தி அதன் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது.
எனினும், அவ்வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாகத் தெரியவில்லை. அவற்றை நிறைவேற்ற நெருக்குதல் கொடுப்பது இடதுசாரிகளின் கடமை.
என். எம். பெரெராவின் 120வது பிறந்தநாளை நினைவுகூரு முகமாக இவ்வாண்டு ஆனிமாதம் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் அடியேன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறேன்:
“இடதுசாரித் தரப்பு சிதறுண்டு வலுவிழந்திருக்கலாம். ஆனாலும் கூட, ஓர் இடதுசாரித்துவ மாற்றுத்தரப்புக்கான பொருத்தப்பாடும் தேவைப்பாடும் இன்னமும் உண்டு. சமசமாசக் கட்சி மீளவும் ஒன்றுபட்ட கட்சியாக அதன் 90வது ஆண்டுநிறைவைக் கொண்டாட முடியுமானால், ஒன்றுபட்டு வலிமை மிகுந்த இடதுசாரித் தரப்பு தோன்ற வழி பிறக்கும். என். எம். பெரெராவையும், மற்றும் பிற முன்னோடி இடதுசாரிகளையும் மாண்புறுத்துவதற்கு அத்தகைய மாற்றமே தலைசிறந்த வழி.”
இந்த விடயம் குறித்து ஓரளவு கலந்துரையாடப்பட்டமை ஊக்கமளிக்கின்றது. வெறுமனே சமசமாசக் கட்சியினதும், இடதுசாரித் தரப்பினதும் வரலாற்றைப் பற்றிக் கலந்துரையாடுவது போதாது. செயற்பட வேண்டும். “இடதுசாரிச் செயலர்கள் இல்லாத ஒரு முடிக்காகப் போராடுவதில் வல்லவர்கள்” என்று பேர்ணாட் சொய்சா உதிர்த்த வஞ்சப்புகழ்ச்சியைப் பொய்ப்பிப்பது இடதுசாரிகளின் கடமை .
Jayampathy Wickramaratne, LSSP @ 90: The Sama Samaja Role In Constitutional Issue, Colombo Telegraph, 2025-12-18, translated by Mani Velupillai, 2025-12-19.
No comments:
Post a Comment