சாக்கிரத்தீஸ்
ஒரு மீள்நோக்கு
ஐ. எவ். ஸ்டோன்
கிரேக்க நாட்டின் மாபெரும் மெய்யியலாளராகிய சாக்கிரத்தீசின் (கி.மு.469-399) அடிப்படைக் கொள்கை: கட்டளை இடுவது ஆள்வோர் கடன். கட்டளைக்கு அடிபணிவது ஆளப்படுவோர் கடன். கப்பல் முதலாளி கப்பல் செலுத்தத் தெரிந்தவர்களையும், நிலபுலம் படைத்தோர் பயிர்செய்யத் தெரிந்தவர்களையும், நோயாளிகள் நோய்தீர்க்கத் தெரிந்தவர்களையும், விளையாட்டு வீரர்கள் பயிற்சி அளிக்கத் தெரிந்தவர்களையும், தையல் வேலைக்குத் தைக்கத் தெரிந்தவர்களையும் நாடுவது போலவே, மக்கள் தம்மை ஆள்வதற்கு ஆளத் தெரிந்தவர்களையே நாடவேண்டும்...
அத்தகைய ஆட்சியாளரையே மெய்ஞான மன்னர் (philosopher-king) என்று வர்ணித்தார் சாக்கிரத்தீசின் தலை மாணாக்கர் பிளேட்டோ (கி.மு 427-347). மாலுமி குடித்து வெறித்தால் கப்பல் முதலாளி அவரை மாற்றலாம். மருத்துவர் துரோகம் செய்தால் நோயாளி அவரை மாற்றலாம். ஆட்சியாளர் கொடுங்கோலராய் மாறினால் பொதுமக்கள் என்ன செய்வது என்ற வினாவுக்கு சாக்கிரத்தீஸ் பதிலளிக்கவில்லை. அதற்குப் பதிலாக, கொடுங்கோலர் அழிதல் திண்ணம் என்று கூறுகிறார். கப்பல் முதலாளிக்கும் நோயாளிக்கும் ஒரு நியாயம், பொது மக்களுக்கு வேறு நியாயம்! கொடுங்கோலரைப் போலவே துரோகம் புரியும் மருத்துவரும், குடித்து வெறிக்கும் மாலுமியும் அழிதல் திண்ணம் என்று சாக்கிரத்தீஸ் உரைக்காதது ஏனோ தெரியவில்லை! தம்மை அகற்ற எத்தனிக்கும் பொது மக்களைக் கொடுங்கோலர்கள் அடக்கி ஒடுக்கியே வந்துள்ளாரகள். அத்தகைய கொடுங்கோலர்களை அகற்றுவது எப்படி என்ற கேள்விக்குச் சாக்கிரத்தீஸ் பதிலளிக்கவே இல்லை.
சாக்கிரத்தீசின் இன்னொரு வாதம்: அறமே அறிவு (அறமும் அறிவும் ஒன்றே). அறிவு என்றால் என்ன? எதை முற்றுமுழுதாக வரையறுக்க முடியுமோ அதுவே அறிவு. ஒருவர் ஒரு பொருளை வரையறுக்க வல்லவராயின், அதனை அவர் அறிந்தவர் ஆவார். அதனை அவர் வரையறுக்க முடியாதவராயின், அதனை அவர் அறியாதவர் ஆவார். எவருமே எதனையும் முற்றுமுழுதாக வரையறுக்க முடியாது. ஆகவே எவருமே எதனையும் முற்றுமுழுதாக அறிய முடியாது…
அதாவது பரந்துபட்ட பாமர மக்கள் அறிவிலிகள் (அறிவையோ அறத்தையோ வரையறுக்க முடியாதவர்கள்). ஆகவே அவர்கள் தங்களைத் தாங்களே ஆள்வதற்கு அருகதை அற்றவர்கள். மக்கள் கூட்டம் ஒரு மந்தைக் கூட்டம். மந்தைகள் தாமாகவே மேயவல்லவை அல்ல. இடையரே மந்தையை மேய்க்க வல்லவர். வேந்தரே மாந்தரை ஆளவல்லவர்!
மக்கள் அனைவரும் முற்றிலும் அறிவாளிகள் அல்லர் என்பது உண்மையே. எனினும் தம்மைத் தாமே ஆள்வதற்கு வேண்டிய அடிப்படை அறிவு மக்களுக்கு உண்டு. அல்லாவிட்டால் காட்டுமிராண்டிகளாக விளங்கிய மக்கள் தம்மைத் தாமே ஆளும் நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது. தம்மைத் தாமே ஆளும் நிலைக்கு உயர்ந்த மக்கள் சாக்கிரத்தீசின் சிந்தையில் வெறும் மந்தையாய் தெரிவது பெரும் விந்தையாய் இருக்கிறது.
சாக்கிரத்தீஸ் பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டு முன்னதாகவே அதென்சில் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி பயிலும் வசதி அளிக்கப்பட்டுவிட்டது. அனைவரும் எழுத்தறிவு பெற்றுக் கொண்டார்கள். அடிப்படைக் கல்வியையும், அதன் வழித்தோன்றிய எழுத்தறிவையும் பொறுத்தவரை மக்கள் ஒருவருக்கொருவர் நிகரானவர்களாகவே விளங்கினார்கள். மக்களாட்சி உரம் பெற்று மேலோங்குவதற்கு அத்தகைய சூழ்நிலை ஏதுவாய் அமைந்தது.
அதேவேளை மேற்படிப்பு வசதி மேற்குடியினருக்கே கிடைத்தது. மேற்படிப்பைப் பொறுத்தவரை மேற்குடியினருக்கும் கீழ்க்குடியினருக்கும் இடையே காணப்பட்ட வெளியை நிரப்புவதில் ஒரு சாரார் தலையாய பங்கு வகித்தார்கள். அவர்கள் அறிவையும் அறத்தையும் போதித்தார்கள். ஆதலால் அவர்கள் தார்க்கிகர்கள் (sophists) எனப்பட்டார்கள். அவர்களுள் கோஜியாஸ் (Gorgias), அல்சிடிமாஸ் (Alcidimas), அந்திபோன் (Antiphon), புறொட்டேகொறஸ் (Protagoras), ஹிப்பியாஸ் (Hippias) முதலியோர் முக்கியமானவர்கள்.
எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதே மேற்படி தார்க்கிகர்களின் அடிப்படைப் போதனை. சாக்கிரத்தீஸ் அதனை வன்மையாக எதிர்க்கிறார். அவருக்கு ஒரு புராணக் கதை மூலம் பதிலிறுக்கிறார் புறொட்டேகொறஸ்: கிரேக்கரின் முழுமுதல் கடவுள் (கிரேக்கரின் சிவன்) Zeus தனது தூதரை (Hermes) அழைத்து மக்களுக்கு அரசியல் கலையை வழங்கும்படி பணிக்கிறார். ஏற்கெனவே ஏனைய கலைகளை ஆங்காங்கே வழங்கிய இறைதூதர் அரசியல் கலையையும் ஆங்காங்கே வழங்கிவிடட்டுமா என்று கடவுளைக் கேட்கிறார். அதற்குக் கடவுள் கொடுக்கும் விடையில் மக்களாட்சிப் பண்பு பொதிந்திருக்கிறது: அரசியல் கலையை எல்லோருக்கும் வழங்கிவிடு. அதில் எல்லோருக்கும் பங்குகொடு. அதனை ஒருசிலருக்கு மட்டும் வழங்கினால், மக்கள் எல்லோரையும் மேம்படுத்த முடியாது போய்விடும். அத்துடன் , அரசியல் கலையில் ஈடுபடாதோர் மக்களைப் பீடித்த பீடைகளாய் மாள்வர் என்பதையும் அவர்களுக்கு உணர்த்திவிடு...
மக்களின் சமத்துவத்தை முதன்முதல் வலியுறுத்தியோர் மேற்படி தார்க்கிகர்களே: மக்கள் ஒருவருக்கொருவர் சரிநிகரானவர்கள். சுதந்திரம் மக்களின் பிறப்புரிமை. இயற்கை எவரையும் அடிமை கொள்வதில்லை. மக்கள் கருத்தொருமித்து தங்களைத் தாங்களே ஆளவேண்டும். வேறு துறைகளில் மக்கள் அனைவரும் பங்குபற்ற முடியாவிட்டாலும், அரசியலைப் பொறுத்தவரை மக்கள் அனைவரும் பங்குபற்ற முடியும், பங்குபற்ற வேண்டும்... என்று மேற்படி தார்க்கிகர்கள் வாதாடினார்கள்.
இன்னொரு தார்க்கிகராகிய ஹிப்பியாசை சாக்கிரத்தீஸ் வாதுக்கழைக்கிறார். வாதம் சூடுபிடித்து, மெய்யரையும் பொய்யரையும் பற்றிய ஆராய்ச்சியில் உச்சக் கட்டத்தை அடைகிறது. மெய்யைச் செவ்வனே அறிந்தவரே பொய்யைச் செவ்வனே சொல்ல வல்லவர். ஆகவே மெய்யரே தலைசிறந்த பொய்யர் என்று அடித்துச் சொல்லுகிறார் சாக்கிரத்தீஸ்! ஒரு மெய்யர் மெய்மையைக் கைவிடாது பொய்யராவது எங்கனம்? ஆகவே சாக்கிரத்தீஸ் சொல்வதைத் தன்னால் ஏற்க முடியாது என்கிறார் ஹிப்பியாஸ். நான் சொல்வதை என்னாலும் ஏற்க முடியாதுதான். நான் வாதாடும்பொழுது திசைமாறிப் போய்விடுகிறேன். இங்கேயும் போகாது, அங்கேயும் போகாது, எங்கேயோ போய்விடுகிறேன் என்று ஒப்புக்கொள்கிறார் சாக்கிரத்தீஸ்!
மேற்படி தார்க்கிகர்கள் கட்டணம் வாங்கிப் போதிப்பதையும், தாம் கட்டணம் வாங்காது போதிப்பதையும் சாக்கிரத்தீஸ் குத்திக் காட்டுகிறார். சாக்கிரத்தீசின் தகப்பன் ஒரு கல்லுப் பொழியும் தொழிலாளி. தாய் ஒரு மகப்பேற்றுத் தாதி. சாக்கிரத்தீசுக்கு 3 பிள்ளைகள். அவர் இரண்டொரு தடவைகளே காலாட் படையில் சேர்ந்து போரிட்டவர். 70 வயதுவரை வாழ்ந்தவர். உழைத்துப் பிழைக்காதவர்... அப்படி என்றால் ஐவரைக் கொண்ட அந்தக் குடும்பம் எப்படி தப்பிப் பிழைத்தது? பாவம், அவருடைய மனைவி சாந்திப்பே (Xanthippe), 3 பிள்ளைகளின் தாய், அடுப்பைப் புகைய வைப்பதற்கு என்ன பாடு பட்டிருப்பார்! அப்படி இருந்தும் சாக்கிரத்தீசின் மாணவர்கள் தமது குருபத்தினியை ஓர் அடங்காப் பிடாரி என்று கதை கட்டிவிட்டார்கள். அந்த அபலையை அடங்காப் பிடாரி என்பது எத்துணை அபத்தம்!
உண்மையில் தகப்பன் தேடிவைத்த சொத்துகளே சாக்கிரத்தீசுக்குக் கைகொடுத்தன. அவற்றுள் வீடு வளவும் தளபாடங்களும் பணமும் அடங்கும். தகப்பன் விட்டுச் சென்ற பணம் 5 மினா என்கிறார் சாக்கிரத்தீஸ், 70 மினா என்கிறார் கிரேக்க வாழ்க்கை வரலாற்றாசிரியர் புளூட்டாக் (Plutarch). 80 மினா என்கிறார் கிரேக்க நாவலர் லிபேனியஸ் (Libanius)! (1 மினா = 4 பொன்). சாக்கிரத்தீஸ் குறைத்துச் சொல்லுகிறாரோ, மற்றவர்கள் கூட்டிச் சொல்லுகிறார்களோ தெரியவில்லை. எவ்வாறாயினும் தமது மாணவரும் நண்பருமாகிய கிறித்தோவிடம் (Crito) வட்டிக்குக் கொடுப்பதற்குப் போதியளவு பணத்தைத் தகப்பன் விட்டுச்சென்றுள்ளார் என்பது மட்டும் உண்மை!
அரிஸ்டோட்டில் முன்வைக்கும் விளக்கம்: மனிதன் ஒரு சமூகப் பிராணி என்று (பிளேட்டோவின் சீடராகிய) அரிஸ்டோட்டில் (கி.மு 384-322) கூறியதாகச் சொல்வது வாடிக்கை. அவர் கிரேக்க மொழியில் அதனை zoon politikon என்று குறிப்பிட்டுள்ளார். Logos என்ற கிரேக்கச் சொல் வாக்கு, நீதி, நியாயம் மூன்றையும் ஒருங்கே உணர்த்தும் சொல். அந்த மூன்று தன்மைகளும் மனிதரில் இயற்கையாகவே காணப்படுகின்றன. அந்த வகையில் மனிதர்கள் ஏனைய சமூகப் பிராணிகளிலிருந்து இயற்கையாகவே வேறுபடுகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டே அரிஸ்டோட்டில் மனிதரை zoon politikon என்று வரையறுத்தார். அதாவது மனிதர்கள் நியாயம் பேசும் சமூகப் பிராணிகள் என்பதே அரிஸ்டோட்டில் கொண்ட கருத்து.
தமது வாழ்வியல் குறித்து வாதாடும் உரிமையும் வாக்களிக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு என்றும், அவர்களால் ஆளப்படும் அரசு சுதந்திர மக்கள் அவை (free association of men) என்றும், அங்கு மக்களே மாறிமாறி ஆள்வோர் என்றும் ஆளப்படுவோர் என்றும் (the citizen takes turns to govern and be governed), அவர்கள் ஒருவருக்கொருவர் நிகரானவர் என்றும் ஒப்பானவர் என்றும் (equal and like) அரிஸ்டோட்டில் குறிப்பிட்டுள்ளார். இது சாக்கிரத்தீஸ் கொண்ட கருத்துக்கு நேரெதிர்மாறான கருத்தாகும்.
அவ்வாறு அரிஸ்டோட்டிலால் (கி.மு 384-322) ஏற்றுப் போற்றப்படும் ஆட்சியே அவர் பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக, அவருடைய குருவாகிய பிளேட்டோவும் (கி.மு 427-347), பிளேட்டோவின் குருவாகிய சாக்கிரத்தீசும் (கி.மு 469-399) பிறப்பதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக அதென்சில் நிலைத்திருந்தது.
சாக்கிரத்தீசின் இலட்சிய மன்னன் அகமெம்னன்: மேன்மக்கள் புலவராகிய ஹோமர் (Homer) தமது இலியட் (Iliad) காவியத்தில் கீழ்மக்களை மந்தைகள் என்றும், மன்னன் அகமெம்னனை (Agamemnon) இடையன் என்றும் வர்ணிக்கிறார். அந்த அகமெம்னனையே சாக்கிரத்தீஸ் தனது இலட்சிய ஆட்சியாளனாய் வரிக்கின்றார். அகமெம்னன் மந்தையை மேய்த்த விந்தையை ஹோமர் பின்வருமாறு எடுத்துரைக்கிறார்:
அகமெம்னன் மேற்கொள்ளும் ஒரு வெற்றிகரமான படையெடுப்பை அடுத்துக் கைப்பற்றப்படும் இளம் பெண்களை அவனுடைய தளபதிகள் பங்கு போடுகிறார்கள். அப்பெண்களுள் ஒரு புரோகிதரின் மகளும் அடங்குவாள். அகமெம்னனுக்குப் புரோகிதரின் மகள், காவிய நாயகனாம் மறவன் அகிலீசுக்கு (Achilles) வேறொரு பெண்... என்றெல்லாம் பங்கு போடப்படுகிறது.
பாவம்! அந்தப் புரோகிதர் தனது உயிரையும் கப்பத்தையும் கையில் ஏந்தியபடி அந்தப் படுபாவியிடமிருந்து தனது அருமை மகளை மீட்க வருகிறார். தனது அரசியை (Clytemnestra) விடப் புரோகிதரின் மகள்மீதே தனக்கு மோகம் அதிகம் என்று பகிரங்கமாகத் தெரிவிக்கும் அகமெம்னன், கப்பத்தை ஏற்க மறுத்ததுடன் நில்லாது, புரோகிதரையும் அவமதித்து விரட்டுகிறான்.
புரோகிதர் பூசிக்கும் கடவுளாகிய சூரியமூர்த்தி (Apollo) வெகுண்டெழுந்து பாசறை எங்கும் கொள்ளைநோயைப் பரப்புகிறார். மன்னனின் போர்வீரர்கள் சாரிசாரியாகச் செத்து மடிகிறார்கள். விழித்தெழும் மறவன் அகிலீஸ் மன்னனின் ஆணையின்றியே அவையைக் கூட்டி, அந்தப் புரோகிதரின் மகளை விடுதலைசெய்ய நிர்ப்பந்திக்கிறான். அகமெம்னன் புரோகிதரின் மகளை விடுதலை செய்துவிட்டு, ஏற்கெனவே அகிலீசுக்கு ஒதுக்கிய பெண்ணைக் கவர்ந்து செல்கிறான். அகிலீஸ் ஆவேசமடைந்து அகமெம்னனைச் சாடுகிறான்: பேராசை பிடித்தவனே, வெட்கம் கெட்டவனே, குடிகாரப் பயலே, குட்டைநாய் முழியா, பெட்டைமான் நெஞ்சா...
மன்னனைச் சாடுபவன் மறவன். அத்துடன் காவிய நாயகன். ஆதலால் ஹோமர் அதனைப் பொறுத்துக்கொள்கிறார். ஆனால் சாக்கிரத்தீசினால் அதனைப் பொறுக்க முடியவில்லை. அகிலீசின் கூற்று தணிக்கை செய்யப்பட வேண்டும் (காவியத்திலிருந்தே நீக்கப்பட வேண்டும்) என்று வாதாடுகிறார். அகமெம்னன் அவருடைய இலட்சிய ஆட்சியாளன் அல்லவா?
தேர்சைற்ஸ் (Thersites) ஒரு கீழ்மட்டப் படைவீரன். அவனும் மன்னனைச் சாடுகிறான். மேற்குடிப் புலவராகிய ஹோமரால் அதனைப் பொறுக்க முடியவில்லை. தேர்சைற்சை இழிந்தவன் என்றும், அருவருப்பானவன் என்றும் அலங்கோலமானவன் என்றும் திட்டுகிறார். அவன் மன்னனை என்னவோ தட்டிக் கேட்டுவிட்டான் என்ற கோபம் புலவருக்கு! அப்படி அவன் தட்டிக் கேட்ட சங்கதி என்ன?
மக்களை மேய்க்கும் இடையனே (வஞ்சப்புகழ்ச்சி!), உனது பேராசை தீராதா? உனது கூடாரத்தில் பெண்குலமும் வெண்கலமும் நிறைந்திருப்பது போதாதா? துரோய் (Troy) தேசத்துப் பொன்கலமும் உனக்கு வேண்டுமா? அல்லது கூடிப்படுப்பதற்கு மேலும் ஒரு குட்டிப்பெண் வேண்டுமா? உனது பேராசையால் போரை இழுத்தடித்து எமது நாட்டுக்குப் பேரழிவை ஏற்படுத்தியது போதாதா?...
முடிசார்ந்த மன்னனையே சாடும் தேர்சைற்ஸ் அடிமட்டப் படைவீரர்களைச் சும்மா விடுவானா? படுமுட்டாள்களே, மானம் கெட்டவர்களே, கிரேக்கப் பேடிகளே, பெட்டையர்களே, இந்த ஆள் இந்தக் கிழட்டு வயதில் இந்த இடத்தில் தன்னந் தனியனாய் நின்று தான் கவர்ந்த சொத்துகளைத் தானே அனுபவிக்கட்டும். தன்னிலும் சிறந்த அகிலீசுக்கு ஒதுக்கிய மங்கையைக் கவர்ந்து அவனை மானங்கெடுத்திய இந்தப் பயல் தன்னந் தனியனாய் நின்று தனது சொத்துகளைத் தானே அனுபவிக்கட்டும். புறப்படுங்கள் நாங்கள் நாடு திரும்புவோம், புறப்படுங்கள் நாங்கள் வீடு திரும்புவோம்...
மன்னனைச் சாடிய படைவீரனாகிய தேர்சைற்சை ஒடிசியஸ் (Odysseus) பாய்ந்து பிடித்து, அவையின் நடுவில் நிறுத்தி, குருதி பீறிட நையப் புடைத்து, மானங்கெடுத்தி, அற்பப் பிறவியே, இனிமேல் மன்னனை ஏசுவதற்கு உன் வாய் உன்னினால், நீ ஆடை இல்லாது அழுது புலம்பியபடி கப்பலை நோக்கி ஓட நேரும்... என்று எச்சரிக்கிறான். அதேவேளை ஒடிசியஸ் அகமெம்னனைப் பார்த்து: அழியப் போறவனே, நீ ஆள்வதற்கு அருகதை அற்றவன்... என்று சீறத் தவறவில்லை.
ஈற்றில் நாடு திரும்பும் அகமெம்னனையும் கசந்திரா (Cassandra) என்ற அவனுடைய பிறிதோர் ஆசை நாயகியையும் அரசி கிளிட்டமென்ஸ்றா (Clytemnestra) குத்திக் கொலை செய்கிறாள். கொலை செய்துவிட்டு அரசி கூறுகிறாள்: இதோ கிடக்கிறான் எனக்குத் துரோகம் செய்தவன். அதோ கிடக்கிறாள் அவனுடைய ஆசை நாயகி, ஏற்கெனவே மாலுமிகளுடன் படுத்தெழும்பிய மாதரசி...
அத்தகைய மன்னன் அகமெம்னனையே சாக்கிரத்தீஸ் தமது இலட்சிய ஆட்சியாளனாக வரிக்கின்றார்! எல்லோரும் இந்நாட்டு மன்னராய் விளங்க முடியாது. வேந்தரே மாந்தரை ஆளவல்லவர் என்று ஒடிசியஸ் இட்ட முழக்கமும், ஆளத் தெரிந்தவரே ஆளவேண்டும், ஆளப்படுவோர் அடிபணிய வேண்டும் என்று சாக்கிரத்தீஸ் இட்ட முழக்கமும் ஒன்றே.
மக்களாட்சியின் படைபலம்: ஹெரொடோட்டஸ் (Herodotus, கி.மு.484-425) கிரேக்கரின் தலையாய வரலாற்றாசிரியர். அதென்சில் சர்வாதிகாரம் தலைதூக்கிய காலப்பகுதியில் அதன் படைபலம் மங்கியதையும், மக்களாட்சி தலையெடுத்த காலப்பகுதியில் அதன் படைபலம் ஓங்கியதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். பாரசீகப் பேரரசர் தமது படையினருக்குச் சாட்டையடி கொடுத்துப் போர்க்களத்துக்கு இட்டுச் சென்றதாகவும், கிரேக்கப் படையினர் அவர்களை எதிர்கொள்வதற்கு மனமுவந்து போர்க்களம் புகுந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். மக்கள் தமது எசமானருக்காகப் போராடுவதற்கும், தமக்காகப் போராடுவதற்கும் இடையே காணப்படும் வேறுபாட்டையே அவர் இங்கு உணர்த்துகிறார்.
கி.மு.490ல் கிரேக்கம்மீது படையெடுத்த பாரசீகப் பேரரசன் தேரியசின் (Darius) படையை மரதன் (Marathon) என்ற இடத்தில் வைத்து முறியடித்த கிரேக்கப் படையினருள் ஒருவர் ஈசைலஸ் (Aeschylus) என்ற புலவர்! அவர் எழுதிய பாரசீகர் (The Persians) என்ற நாடகம் கி.மு.472ல் (சாக்கிரத்தீஸ் பிறப்பதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர்) மேடையேற்றப்பட்டது. அதன் முதல் காட்சி:
கிரேக்கரைப் பழிவாங்குவதற்காக தேரியசின் மகன் சேசெஸ் (Xerxes) மீண்டும் கிரேக்கம்மீது போர் தொடுக்கிறான். போர்க் களத்திலிருந்து எதிர்பார்த்த வெற்றிச் செய்தி கிடையாத கலவரத்தில் ஆழ்ந்திருக்கிறார் தாயரசி. அப்பொழுது போர்க் களத்திலிருந்து பாரசீகத் தலைநகருக்கு (Susa) மீள்கிறான் ஒரு தூதுவன். அவனை வரவழைத்த தாயரசி கிரேக்கப் படைபலம் பற்றி வினவுகிறார்:
தாயரசி: அந்தப் படைக்கு யார் இடையன் அல்லது தலைவன் அல்லது எசமான்?
தூதுவன்: அவர்கள் எவர்க்கும் அடிமைகள் அல்லர். அவர்கள் எவர்க்கும் குடிமைகள் அல்லர்.
தாயரசி: அப்படி என்றால், தம்மீது போர் தொடுக்கும் ஒரு படைக்கு எப்படி அவர்களால் ஈடுகொடுக்க முடிகிறது?
அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்வதைத் தவிர்க்கும் தூதுவன் மறைமுகமாக ஓர் உண்மையைச் சுட்டிக்காட்டுகிறான்:
தூதுவன்: தம்மிலும் பெரிய பாரசீகப் படையை, தம்மிலும் சிறந்த பாரசீகப் படையை முன்னரும் அவர்கள் வென்றனர் அன்றோ!
அப்பொழுது இன்னொரு தூதுவன் வந்து சலாமிஸ் (Salamis) என்ற இடத்தில் வைத்துப் பாரசீகப் படை முறியடிக்கப்பட்ட சேதியைத் தெரிவிக்கிறான்!
சாக்கிரத்தீஸ் இரண்டொரு தடவைகள் காலாட் படையினராய் விளங்கியதுண்டு. எனினும் அதென்சின் படைபலத்துக்கு அடிப்படையாய் அமைந்த மக்களாட்சியை அவர் என்றுமே மெச்சியதில்லை. அதென்சில் ஓங்கிய சுதந்திர சமூகத்தை அவர் என்றுமே நயந்ததில்லை. ஆட்சியிலும் போரிலும் பங்குபற்றிய அரசியலாளர்கள், கவிஞர்கள், கைவினைஞர்கள், பாமர மக்கள் அனைவரையும் அவர் நோஞ்சான்கள் என்றும் முட்டாள்கள் என்றும் பழிக்கிறார். காலணி, கட்டடம், உலோகம், உழவு, தோல், கடைத் தொழிலாளிகள் யாவரையும் அவர் மூடர்கள் என்றும் ஈனர்கள் என்றும் தூற்றுகிறார்.
சாக்கிரத்தீசின் இலட்சிய அரசு ஸ்பாட்டா: ஸ்பாட்டாவே (Sparta) அவருடைய இலட்சிய அரசு. ஸ்பாட்டாவில் ஓங்கிய சில்லோராட்சியே (Oligarchy) அவரைப் பெரிதும் ஈர்த்தது. அங்கு ஒருசில படைத் தலைவர்கள் புரிந்த சர்வாதிகாரமே சில்லோராட்சி எனப்பட்டது. அங்கு மேற்குடியினருக்கு மாத்திரமே வாக்குரிமை இருந்தது. கீழ்க்குடியினருக்கோ தொழிலாளிகளுக்கோ வாக்குரிமை கிடையாது. உள்ளூர் மக்கள் வெளியூருக்கோ வெளியூர் மக்கள் உள்ளூருக்கோ செல்ல முடியாது. கலை, இலக்கியப் படைப்புகள் தணிக்கை செய்யப்பட்டன. கல்விப் போதனை மட்டுப்படுத்தப்பட்டது. உளவுப் படையினர் அறிவார்ந்தவர்களைக் கைதுசெய்து கொன்றுகுவித்து வந்தார்கள். அத்தகைய ஆட்சியே சாக்கிரத்தீசை ஆட்கொண்டது!
அதென்சில் சொலோன் (Solon கி.மு 638-558) என்ற அரசியலாளரே ஆண்கள் அனைவருக்கும் வாக்குரிமை கிடைக்க வழிவகுத்தவர் என்று சொல்லப்படுகிறது. ஏறத்தாழ 1,250 ஆண்டுகள் கழித்து, அதாவது 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளிலேயே அத்தகைய வாக்குரிமையை எஞ்சிய உலகம் பின்பற்றத் தொடங்கியது! அத்தகைய புரட்சிகரமான வாக்குரிமையை விடுத்து, ஏற்கெனவே அதென்ஸ் மாநகரத்தில் நிலவிய மக்களாட்சியை விடுத்து, சர்வாதிகாரம் நிலவிய ஸ்பாட்டாவையே சாக்கிரத்தீஸ் தமது இலட்சிய அரசாகக் கொள்ளுகிறார்!
கொடுங்கோலருள் சிலர் சாக்கிரத்தீசின் சீடர்கள்: அதென்சில் நிலவிய மக்களாட்சி மூன்று தடவைகள் கவிழ்ந்தது (கி.மு.411, 404, 401). மக்கள் அதனைக் கவிழ்க்கவில்லை. உள்நாட்டுச் சதிகாரர்கள் ஸ்பாட்டாவின் உடந்தையுடன் ஆட்சியைக் கவிழ்த்தார்கள். கி.மு.411ல் ஆட்சியைக் கவிழ்த்த 400 பேர் 4 மாதங்கள் கொடுங்கோல் ஓச்சினார்கள். 404ல் 30 கொடுங்கோலர்கள் 8 மாதங்கள் கொடுங்கோன்மை புரிந்தார்கள். அவர்களுள் சிலர் சாக்கிரத்தீசின் சீடர்கள்! ஒருவர் கிறித்தியாஸ் (Critias). அவர் பிளேட்டோவின் ஒன்றுவிட்ட சகோதரர்! அவரே 30 கொடுங்கோலர்களுள் தலையாயவர். இன்னொருவர் அல்சிபையேட்ஸ் (Alcibiades). அவர்மீது சோக்கிரட்டீசுக்கு மிகுந்த வாஞ்சை இருந்தது. இன்னொருவர் சாமைட்ஸ் (Charmides). அவர் பிளேட்டோவின் மாமனார்! அவர் தலைமைக் கொடுங்கோலரின் வலக்கை போன்றவர். அவர்களுக்கு ஒரு ஸ்பாட்டா - பட்டாளம் பாதுகாப்பு வழங்கியது. சாட்டையும் கையுமாக நடமாடிய 300 குண்டர்கள் மக்களை வேட்டையாடி வந்தார்கள்.
அவர்கள் நடத்திய பயங்கர ஆட்சியைப் பழம்பெரும் கிரேக்க வரலாற்றிஞராகிய தூசிடைட்ஸ் (Thucydides, கி.மு.460-400) விலாவாரியாக எடுத்துரைத்துள்ளார். மக்களாட்சிவாதிகள் உட்பட 1,500 பேர் கொலையுண்டார்கள். எலூசிஸ் (Eleusis) என்ற நகரத்தில் மட்டும் 300 பேர் கொல்லப்பட்டார்கள். ஸ்பாட்டாவில் கொலையுண்டவர்களை விட அதென்சில் கொலையுண்டவர்களின் தொகை அதிகம்! அதென்சில் சுதந்திர மக்களின் தொகை நெடுங்காலமாகப் பெருகிவிட்டது. அதனால்தான் இங்கே பலரைக் கொல்ல நேர்ந்தது என்கிறான் தலைமைக் கொடுங்கோலன் கிறித்தியாஸ்!
மக்கள் அடங்கி ஒடுங்குகிறார்கள். அறிவார்ந்தோர் பலர் அதென்சை விட்டுத் தப்பி ஓடுகிறார்கள். ஆனால் சாக்கிரத்தீசோ, பிளேட்டோவோ எங்குமே தப்பி ஓடாது பத்திரமாய் இருக்கிறார்கள்! போகட்டும், பலியான மக்களுக்காக அவர்கள் ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தினார்களோ என்றால், அதுவுமில்லை! மாறாக, புதிய பாடம் எழுதுவதற்கு, முதலில் கரும்பலகையை அழியுங்கள் என்றார் சாக்கிரத்தீஸ்! ஆட்சியாளரைக் கட்டிக் காப்பதும், பொது மக்களை அடக்கி ஒடுக்குவதுமே படையினர் கடன் என்றார் பிளேட்டோ!
அப்புறம் கொடுங்கோலர்களுக்கு உள்ளேயே குத்துவெட்டுத் தொடங்கிவிட்டது. ஒருவேளை அல்சிபையேட்ஸ் மக்களாட்சிவாதிகளின் பக்கத்துக்குத் தாவி, தன்னைக் கவிழ்த்துவிடக்கூடும் என்று அஞ்சினான் கிறித்தியாஸ். ஆதலால் அல்சிபையேட்ஸ் வழக்கம்போலக் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருந்த தருணத்தில் அவனைக் கொல்லுகிறான் கிறித்தியாஸ். சாக்கிரத்தீசின் ஒரு மாணவன் இன்னொரு மாணவனைக் கொல்லுகிறான். சாக்கிரத்தீஸ் புகட்டிய பாடங்களை அம்மாணவர்கள் கசடறக் கற்றவர்கள்!
குற்றச்சாட்டு: அதென்சில் நிலவிய மக்களாட்சியில் கீழ்க்குடியினரின் கை ஓங்கியிருந்தது. சாக்கிரத்தீஸ் ஒரு நடுக்குடியினர். அவருடைய மாணவர்கள் பெரிதும் மேற்குடியினர். சாக்கிரத்தீசின் போதனைகள் கீழ்க்குடியினரை மட்டந்தட்டுவதாகவும் மேற்குடியினரை மேம்படுத்துவதாகவும் அமைந்தது - மக்களாட்சியை மட்டந்தட்டுவதாகவும் சர்வாதிகாரத்தை மேம்படுத்துவதாகவும் அமைந்தது.
அவர் மக்களாட்சியைப் பேணுவதற்கோ மேம்படுத்துவதற்கோ பாடுபடவில்லை. அதிலுள்ள குறைகளைக் குறைப்பதிலோ களைவதிலோ ஈடுபடவில்லை. மாறாக, மக்களாட்சியின் அனுகூலங்களை முற்றுமுழுதாகப் பயன்படுத்தி மக்களாட்சியையே எதிர்த்து வாதாடினார். இது பூவரசில் தங்கியிருக்கும் குருவிச்சை பூவரசையே அமுக்க முற்படுவதற்கு நிகராகும். அந்த வகையில் அவர் மக்களின் அடிமடியில் கைவைத்துவிட்டார்! மக்களாட்சிவாதிகள் அவருக்கெதிராகக் கிளர்ந்தெழுந்ததற்கு அதுவே தலையாய காரணம்.
கி.மு.401ல் அதென்ஸ் கொடுங்கோன்மையிலிருந்து கடைத்தேறிய தறுவாயிலும் சாக்கிரத்தீஸ் வாக்குரிமையையும் மக்களாட்சியையும் எதிர்த்து வாதாடுகிறார். அதாவது கொடுங்கோன்மையின் சூடு தணிவதற்குள் மீண்டும் அதற்குத் தூபமிடும் குரல் ஒலிக்கிறது. அது கேட்டு மக்களாட்சிவாதிகள் கொதித்தெழுகிறார்கள். மூவர் சாக்கிரத்தீஸ்மீது வழக்குத் தொடுக்கிறார்கள். முதல்வர் அனைட்டஸ் (Anytus). அவர் தோல் பதனிடும் தொழில் புரிபவர். அடுத்தவர் லைக்கன் (Lycon). அவர் நாவலர்கள் சார்பாகப் பங்குபற்றுகிறார். இன்னொருவர் மெலிட்டஸ் (Meletus). அவர் கவிஞர்கள் சார்பாகப் பங்குபற்றுகிறார். சாக்கிரத்தீஸ்மீது இரண்டு குற்றங்கள் சுமத்தப்படுகின்றன:
1. இளைஞர்களின் உள்ளத்தைக் கெடுத்த குற்றம்.
2. அரசு நம்பும் கடவுளரை நம்பாத குற்றம்.
1ஆவது குற்றம் சாக்கிரத்தீசின் போதனைகள் சார்ந்தது. 2ஆவது குற்றம் அவருடைய நம்பிக்கைகள் சார்ந்தது. இவை பொதுப்படையான குற்றச்சாட்டுகள். திட்டவட்டமான குற்றச்சாட்டுகள் அல்ல. அதாவது சாக்கிரத்தீஸ் என்ன சட்டத்தை மீறி என்ன குற்றம் இழைத்தார் என்பது இங்கு தெளிவுபடுத்தப்படவில்லை. அவர் என்ன செய்தார் என்பதை வைத்து அவர்மீது குற்றம் சுமத்துவது கடினமாக இருந்திருக்க வேண்டும் என்றே படுகிறது. ஆதலால்தான் அவர் என்ன சொன்னார் என்பதை வைத்து அவர்மீது குற்றம் சுமத்தப்படுகிறது போலும்.
500 நடுவர்களுள் 280 பேர் சாக்கிரத்தீசைக் குற்றவாளியாகக் காண்கிறார்கள். 220 பேர் அவரை விடுதலைசெய்ய வாக்களிக்கிறார்கள். இது ஓர் அறுதிப் பெரும்பான்மை அல்ல என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் தன்னை விசாரித்த நீதிமன்றத்தை சாக்கிரத்தீஸ் வழக்கம்போல எள்ளி நகையாடுகிறார். தான் எள்ளி நகையாடும் வாக்குரிமையோ வாக்களிப்போ தனக்கு நீதி வழங்கினால், தனது போதனையே பொய்த்துவிடும் அல்லவா? ஆதலால் தனக்கு நீதி கிடையாது போவதையே அவர் உள்ளூர விரும்புகிறார். எனவே வேண்டுமென்றே நடுவர்களைச் சீண்டுகிறார். ஆதலால் அவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவாக 360 வாக்குகளும் எதிராக 140 வாக்குகளும் கிடைக்கினறன! இது ஓர் அறுதிப் பெரும்பான்மை ஆகும். எத்தகைய வாக்குகளை அவர் எள்ளி நகையாடினாரோ, அத்தகைய வாக்குகளே அவருடைய தலைவிதியை நிர்ணயித்தன!
இறுதிக் கட்டம்: சாக்கிரத்தீசுக்கு மரண தண்டனை தீர்க்கப்பட்டபொழுது அதென்சில் திருவிழா விடுமுறைக் காலம் என்பதால் அது உடனடியாக நிறைவேற்றப்படவில்லை. அந்தத் தருணத்தில் அவருடன் கொடுக்கல் வாங்கல் வைத்திருந்த மாணவரும் நண்பருமாகிய கிறித்தோ (Crito) அவரைச் சிறையில் சந்தித்து, காவலர்களுக்கு இலஞ்சம் கொடுத்து, தெசாலி (Thessaly) என்ற பிறிதொரு கிரேக்க ஆள்புலத்துக்குத் தப்பியோடுவதற்கு ஒழுங்குசெய்வதாகத் தெரிவிக்கிறார். சாக்கிரத்தீஸ் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவது நீதியாகாது என்று கூறுகிறார். அது மெச்சத்தக்க பண்பு என்பதில் ஐயமில்லை.
எவ்வாறாயினும் அவர் தமது இலட்சிய ஆள்புலமாகிய ஸ்பாட்டாவுக்குத் தப்பியோடுவதற்கு ஏன் ஒழுங்குசெய்யப்படவில்லை என்ற கேள்வி இங்கே எழுகிறது. ஸ்பாட்டாவின் சர்வாதிகாரிகள் மறவர்களையே வாழ்த்தி வரவேற்பார்கள் என்பதும், அறிவார்ந்தோரைத் தீர்த்துக்கட்டி விடுவார்கள் என்பதும் சாக்கிரத்தீஸ், பிளேட்டோ, கிறித்தோ போன்றவர்களுக்குத் தெரியாதா என்ன? அல்சிபையேட்ஸ் ஒரு தலைசிறந்த மறவர் என்றபடியால் ஸ்பாட்டாவின் படையில் சேர்க்கப்பட்டார். சாக்கிரத்தீசின் இன்னொரு போர்ப்பயிற்சி பெற்ற மாணவராகிய செனொபொன் (Xenophon) ஸ்பாட்டாவின் கூலிப்படையில் சேர்க்கப்பட்டார். இருவரும் தமது தாயகத்தின் எதிரிகளுடன் இணைந்து தாயகத்துக்கு எதிராகப் போரிட்ட துரோகிகள்!
சாக்கிரத்தீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவருடைய தலை மாணாக்கராகிய பிளேட்டோ எவரும் துரத்தாமலேயே எகிப்துக்கு ஓட்டம் எடுக்கிறார். எகிப்தில் நிலவிய சாதிப் பாகுபாட்டைக் கண்டு மெய்சிலிர்க்கிறார்! 12 ஆண்டுகள் கழித்து அதென்சுக்கு மீண்டு, ஒரு கல்விக் கழகத்தை அமைத்து, தமது குருவின் மக்களாட்சிக்கு மாறான கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லுகிறார். குருவின் போதனையை அவர் என்றுமே மீறியதில்லை. ஆனால் அதற்கெல்லாம் இடம்கொடுத்த அதென்ஸ் மாநகர சுதந்திர சமூகத்தை அவர் என்றுமே மெச்சியதில்லை.
சாக்கிரத்தீஸ் தன் வாழ்நாள் முழுவதும் அதென்சில் வாழ்ந்து கொண்டே அதன் ஆட்சியாளரை எதிர்த்த மாமேதை. பிரித்தானியாவைப் பொறுத்தவரை பேட்றாண் ரசலும் (Bertrand Russell), அமெரிக்காவைப் பொறுத்தவரை நோம் சொம்ஸ்கியும் (Noam Chomsky) அத்தகைய மாமேதைகளே எனலாம். இங்கே ஓர் அடிப்படை வேறுபாடு கவனிக்கத்தக்கது: சாக்கிரத்தீஸ் அதென்சில் வாழ்ந்துகொண்டு, அங்கு நிலவிய மக்களாட்சியில் திளைத்துக்கொண்டு (ஸ்பாட்டாவில் நிலவிய) சர்வாதிகாரத்தை நாடி வாதாடியவர், மக்களாட்சியை எதிர்த்தவர், சர்வாதிகாரத்தை ஆதரித்தவர். ஆனால் ரசலும், சொம்ஸ்கியும் தத்தம் நாடுகளில் வாழ்ந்துகொண்டு, அந்த நாடுகளில் நிலவும் மக்களாட்சியைத் துய்த்துக்கொண்டு, அத்தகைய மக்களாட்சியை மேம்படுத்துவதற்காகவே பாடுபட்டு வந்துள்ளார்கள். அவர்கள் சர்வாதிகாரத்தை ஆதரித்தவர்கள் அல்லர். அந்த வகையில் சாக்கிரத்தீசைக் காட்டிலும் ரசலும் சொம்ஸ்கியும் தலைசிறந்தவர்கள் என்பதில் ஐயமில்லை.
சாக்கிரத்தீசைச் சிறையில் சந்திக்கச் செல்லும் மாணவன் பேடோ (Phaedo) திரும்பிவந்து சொல்லுகிறான்: நாங்கள் உள்ளே போனோம். அங்கே (சாக்கிரத்தீசின் மனைவி) சாந்திப்பே கையில் கடைக்குட்டியுடன் நின்றாள். அவள் எங்களைக் கண்டதும் விம்மி அழுதாள். பெண்கள் வாடிக்கையாகச் சொல்லுவதைச் சொல்லி அழுதாள்: 'ஐயோ, ஐயா, நீரும் உமது நண்பரும் கதைப்பது இதுதான் கடைசித் தடவை, ஐயா...'
சாக்கிரத்தீசையும் பிளேட்டோவையும் போலவே சாந்திப்பேயையும் பிற பெண்களையும் இளக்காரமாகப் பேசுகிறான் பேடோ. உண்மையில் அவள் இங்கே தன்னைப் பற்றியோ தனது பிள்ளைகளைப் பற்றியோ சொல்லிப் புலம்பவில்லை. தனது கணவரும் அவருடைய சீடர்களும் இதுவரை புரிந்த வாதப் பிரதிவாதங்களில் அக்கறை எடுக்கும் நிலையில் அவள் இருக்கவில்லை. அப்படி இருந்தும் அந்த வாதங்களுக்கு எற்பட்ட முடிவை எண்ணி அவள் மனம் இரங்குவது வெளிப்படையாகவே தெரிகிறது. அது சாக்கிரத்தீசின் சீடனுக்குப் புரியவில்லை!
சாக்கிரத்தீஸ் மனைவியை அரவணைத்து ஆறுதல் கூறவுமில்லை. தனது கடைக்குட்டியைக் கையில் ஏந்திக் கொஞ்சவுமில்லை. சடாரென்று கிறித்தோவைப் பார்த்துச் சொல்லுகிறார்: கிறித்தோ, அவளை யாருடனாவது வீட்டுக்கு அனுப்பிவிடு... அவள் மார்பில் குத்திக் கதறக் கதறக் கிறித்தோவின் வேலைக்காரர்கள் கொறகொறவென்று இழுத்துச் செல்லுகிறார்கள். அப்புறம் சாக்கிரத்தீஸ் குளித்துவிட்டு மரண தண்டனைக்கு (நஞ்சூட்டப்படுவதற்கு) தயாராகும்பொழுது திரும்பவும் சாந்திப்பே வந்துவிடுகிறாள். ஆங்கிலத்தில் இற்றைவரை Xanthippe என்ற பெயர் அடங்காப் பிடாரி (shrew) என்ற பொருளில் எடுத்தாளப்படுவது எத்துணை அநியாயம்?
சிலர் பலரைக் கொடுமைப்படுத்துவது வரலாறு. நாம் கொடுமைகளுக்கு உள்ளாவது புதுமை அல்ல. கொடுமைகள் கண்டிக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. எமக்கு நேரும் கொடுமைகள் இரண்டு விதமானவை. பத்தோடு பதினொன்றாக அமையும் கொடுமைகள் ஒருவிதம். கலிலியோவுக்கு நேர்ந்த கொடுமையைப் போன்றவை மறுவிதம். பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று சொன்னதற்காகக் கலிலியோ கொடுமைப்படுத்தப்பட்டார். அவர் அன்று கொடுமைப்படுத்தப்பட்டார் என்பதற்காக மாத்திரம் இன்று மெச்சப்படவில்லை. அவர் சொன்னது சரி என்பது தெரியவந்த பின்னரே அவருக்கு ஏற்கெனவே இழைக்கப்பட்ட கொடுமை பெரிது படுத்தப்படுகிறது. அதாவது கொடுமைக்கு ஆளானவரின் நிலைப்பாடு சரியே என்பது தெரியவரும்பொழுது அவருடைய தியாகம் எம்மைப் பெரிதும் ஆட்கொள்ளுகிறது (பூமி தொடர்ந்து சூரியனைச் சுற்றும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்று ஐன்ஸ்டைன் கூறியதை ஒரு கணம் மறந்துவிடுவோம்).
சாக்கிரத்தீஸ் கொடுமைக்கு ஆளாகவில்லை. அதென்சின் அன்றைய சட்டதிட்டப்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது (மரண தண்டனை ஒரு கொடுமையே என்பது வேறு கதை). ஒரு வாதத்துக்காக அவர் கொடுமைக்கு ஆளானார் என்பதை ஒப்புக்கொள்வோம். அவருடைய நிலைப்பாடு (மக்களாட்சி தகாது, சர்வாதிகாரமே தகும் என்ற நிலைப்பாடு) சரியா, தவறா என்ற கேள்வி இங்கே எழுகிறது. அதற்கான விடை ஆளுக்கு ஆள், காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம் வேறுபடக்கூடும். எவ்வாறாயினும் கொடுமைக்கு உள்ளாகும் அனைவரும் கலிலியோ ஆகமுடியாது. கொடுமைக்கு உள்ளாவோரின் நிலைப்பாடும் சரியாக அமையவேண்டும் என்று Stephen Jay Gould கூறியமை கருத்தில் கொள்ளத்தக்கது.
'சாக்கிரத்தீசின் நிறைகள் வெளிப்படை. இவ்வுலக வாழ்வில் அவர் வெற்றியை நாடவில்லை. அவர் அச்சம் என்பதை அறியார். இறுதிக் கணம்வரை அமைதி காத்தார். பிறருடன் பாங்குறப் பழகினார். நகைச்சுவை சொரிந்தார். ஏனைய அனைத்தையும் விடத் தாம் உண்மை என்று நம்பிய பொருளையே நாடினார். எனினும் அவரிடம் சில பாரிய குறைகள் இருந்தன. நேர்மையற்ற முறையில் அவர் போலிவாதம் புரிந்தார். தம் சிந்தனைக்கு எட்டியவரை விருப்பு வெறுப்பின்றி அறிவுத் தேட்டத்தில் ஈடுபடுவதை விடுத்து, தாம் உவந்த முடிபுகளை எண்பிப்பதற்கே அவர் தமது மதிநுட்பத்தைப் பயன்படுத்தினார். எதனையோ எண்ணி அகமகிழ்ந்து பசப்புரை புகலும் இயல்பு அவரிடம் காணப்பட்டது. ஒரு தகாத குருவரரையே அது எமக்கு நினைவூட்டுகிறது. தாம் கடவுளரிடையே பொன்றா இன்பம் துய்க்கப்போவதாக அவர் நம்பாதிருந்தால், உயிர் துறக்க அஞ்சாத அவர் நெஞ்சத்தை எம்மால் மேலும் மெச்ச முடிந்திருக்கும். அவருடைய முன்னவர்களைப் போல் விஞ்ஞான நியதிகளின்படி அவர் சிந்திக்கவில்லை. எனினும் இப்பேருலகு தமது ஒழுக்க நியமங்களுக்கு உடன்பட்டதே என்பதை எண்பிக்க அவர் திடசித்தம் பூண்டிருந்தார். இது மெய்ம்மைக்கு அவர் இழைத்த துரோகம் ஆகும். மெய்யியற் பாவங்களுள் அது படுமோசமானது. ஒரு மனிதர் என்ற வகையில் அவர் நற்கருணைப் புனிதர்களுடன் சேர்ந்துவிட்டதாய் நாம் நம்பலாம். எனினும், ஒரு மெய்யியலாளர் என்ற வகையில் அவர் நெடுங்காலம் விஞ்ஞானக் கழுவாய் தேடவேண்டியவர்' (Bertrand Russell, History of Western Philosophy, George Allen & Unwin, London, 1946; Paperbacks, London, 1980, p.156).
இதோ கா(வ)லன் நஞ்சுடன் வருகிறான். ஒரு மாபெரும் மெய்யியலாளருக்கு நஞ்சு பருக்கும் கடமை தன்மீது சுமத்தப்பட்டது குறித்து அவன் நெஞ்சு குமுறுகிறது. நஞ்சு பருக்கப்படுவதை விட நஞ்சு பருகுவதே சிறப்பு என்று சாக்கிரத்தீஸ் முடிவெடுக்கிறார். தானே குடுவையை வாங்கி ஒரே மிடறில் நஞ்சைக் குடித்துவிடுகிறார். உயிர் பிரியுந் தறுவாயில் சாக்கிரத்தீசின் இறுதி வேண்டுகோள்: கிறித்தோ, நாங்கள் வைத்தியநாதருக்கு ஒரு சேவல் தானம் செய்யவேண்டும் அல்லவா? அதனை மறந்துவிடாதே!
நோய்வாய்ப்பட்டவர்கள் இரவோடிரவாக வைத்தியநாதருக்கு (Asclepius) ஒரு சேவலைத் தானமாகக் கொடுத்துவிட்டு, அவர் சந்நிதியில் படுத்துவிடுவார்கள். அவர்கள் விழித்தெழும்பொழுது குணமடைவார்கள் என்பது கிரேக்கரின் ஐதீகம். வைத்தியநாதர் சாக்கிரத்தீசின் உயிரைக் கவர்ந்து அவருடைய பிறவிப் பிணியைக் குணப்படுத்தப் போகிறார்! அதற்குக் கைமாறாகத்தான் அந்த சேவல் தானம்!
நகைச்சுவை, நம்பிக்கை, முரண்பாடு என்பவற்றின் திருவுருவம்: சாக்கிரத்தீஸ்!
_______________________________________________________________________
I. F. Stone, The Trial of Socrates, Little Brown and Company, Toronto, 1988,
summarized in Tamil by Mani Velupillai.
No comments:
Post a Comment