பிரியத் லியனகே
2009 வைகாசி மாதம் இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகு, அது தொடர்பான ஒலியொளிப் பதிவுகளை ஓடவிட்டுப் பார்த்த (பி. பி. சி. சிங்கள சேவை – சந்தேசய – பொறுப்பாளர்) பிரியத் லியனகேயை ஒரு காட்சி ஆட்கொண்டது. யாழ் சுமந்த சிறுவன் ஒருவன் போர்க்களத்தை ஊடறுத்து நடந்துசெல்லும் காட்சியே அவரை ஆட்கொண்டது. ஈராண்டு கழித்து அந்தச் சிறுவனை இனங்காண முடியுமா? ஒரேயொரு இசைக் கருவியுடன் அத்துணை ஆபத்தான பயணத்தை அவன் மேற்கொண்டது எதற்காக?
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில் பின்னடைந்த புலிகளுடன், தமது வீடுகளிலிருந்து விரட்டபட்ட 300,000 வரையான தமிழ் மக்கள், நாட்டின் வடபுலத்தில், ஒரு சிறு கடற்கரைப் பகுதியில் அகப்பட்டுக் கொண்டார்கள்.
சிலர் விடுதலை செய்யப்பட்டார்கள். பிறர் தப்பியோடினர்கள். எஞ்சியோருக்கு, பொறிபறக்கும் சமரிடையே முன்னகரும் அரச படையினரை நோக்கி அடியெடுத்து வைப்பதை விட வேறு வழி கிடைக்கவில்லை. குண்டுத் தாக்குதல்களிலும், அவற்றுக்கு இடையிலும் அகப்பட்டவர்களுள் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது இன்னும் தெளிவுபடத் தெரியவில்லை.
இலங்கை உள்நாட்டுப் போர் நீடித்து நிகழ்ந்த ஒன்று. இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த சமர் புறச் சாட்சிகளின்றிப் புரியப்பட்ட ஒன்று. அறிக்கைளின்படி, புலிகளுக்கு மனித கேடயமாக விளங்கிய பொதுமக்களின் கதை பெரிதும் சொல்லப்படவில்லை.
சுதந்திரமான, வெளியுலக ஊடகங்களும், அநேகமான சர்வதேச உதவி அமைப்புகளும் சமர்க்களத்திலிருந்து அகற்றப்பட்டிருந்தன. அத்தகைய சூழ்நிலையில், மக்கள் அல்லற்பட்ட செய்திகள் எல்லாம் படையினருடன் ஊடாடிய அரச ஊடக நிருபர்கள் அனுப்பிய அறிக்கைகள் ஊடாகவே வெளிவந்தன.
ஓரிரவு ஒளியொலி நாடாக்களை நான் ஓடவிட்டுப் பார்த்தபொழுது, ஒரு சின்னஞ்சிறு பையன் யாழ்ப்பெட்டி ஒன்றைத் தோளில் சுமந்தபடி சமர்க்களத்தை ஊடறுத்து அடியெடுத்து வைப்பது என் கண்ணில் பட்டது.
அனைத்தையும் துறந்து அந்த யாழ்ப்பெட்டியை அவன் தேர்ந்தெடுத்த சங்கதி என்னை ஆட்கொண்டது: உயிராபத்தை எதிர்கொண்ட மக்கள் தங்களால் எடுத்துச்செல்லக்கூடிய ஒரேயொரு பொருளைக் கையில் எடுக்கையில், அவனோ அந்த இசைக்கருவியைத் தூக்கிச்சென்றான். அத்துணை அருமந்த பொருளா அது? அவன் கதையை நான் அறிய விரும்பினேன்.
அந்தச் சிறுவனைக் கண்டறிய உறுதிபூண்டு, அவனுடைய மங்கிய நிழற்படம் ஒன்றுடன், நான் இலங்கை திரும்பினேன்.
இந்த இசைக்குழல் போன்ற கருவிகள் போரை ஊடறுத்து மீந்தவை
தலைநகர் கொழும்பிலிருந்து வடக்குநோக்கி 160 மைல் (258 கிலோமீட்டர்) தூரத்தில் அமைந்துள்ள எல்லைப்புற நகராகிய வவுனியாவில் என் தேடுதலை நான் ஆரம்பித்தேன். ஒரு காலத்தில் அங்கே அமைந்திருந்த பெரிய சோதனைச் சாவடி ஒன்று, முன்னர் புலிகள் வசமிருந்த புலத்தை, நாட்டின் எஞ்சிய புலத்திலிருந்து பிரித்து நின்றது. போர் முடிந்து ஈராண்டுகளுக்கு மேல் கழிந்த பின்னரும் அந்த சோதனைச் சாவடி செயற்பட்டு வருகிறது. இங்கு வந்து செல்லும் ஒவ்வொருவரின் அடையாளமும் கருத்தூன்றிப் பரிசோதிக்கப்படுகிறது.
அங்கிருந்து இலங்கையின் வடக்கெல்லையில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாநகரத்துக்கு, தமிழ் மக்களின் நடுநிலையத்துக்கு நான் புறப்பட்டேன்.
போரின்பொழுது தனது கருவிகள் அனைத்தையும் இழந்த முன்னாள் இசை நெறியாளுநர் ஒருவர் தற்பொழுது ஒரு பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தெரிவித்த துப்பே எனக்குக் கிடைத்த துப்புகளுள் சிறந்தது. நிழற்படத்தில் உள்ள சிறுவனை அவர் அடையாளம் காட்டவில்லை. அதேவேளை நன்கு உடுத்துப்படுத்து அவனுடன் அடியெடுத்து வைப்பவர் சிறீ குகன் எனப்படும் இசைஞர் என்று அவர் அடையாளம் காட்டினார்.
எனினும் சிறீ குகனுடன் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. என்னுடன் அவர் தொடர்புகொள்ள விரும்பவில்லை. தனது செல்பேசியை அவர் வேறு நிறுத்தி வைத்துவிட்டார்.
படையினர் நிரம்பிவழியும் யாழ்ப்பாணத்தை 'திறந்தவெளிச் சிறை' என்று சிலர் விபரிப்பதுண்டு.
கருத்துமாறுபாடு எதையும் புலிகள் சகித்ததில்லை. வலுச்சமநிலை மாறியும் கூட, அசண்டைப் பேச்சின் விளைவுகளை எண்ணி மக்கள் இன்னமும் அச்சம் அடைகிறார்கள்.
'இம்மியும் தண்டனைப்பயமின்றி இங்கு குற்றங்கள் இழைக்கப்படுகின்றன' என்கிறார் பெயர்போன திரைப்பட நெறியாளுநர் இ. கேசவராசன். மிரட்டலுக்கு உள்ளாகியிருக்கும் வடபுலம் பற்றி அவர் வெளிப்படையாகவே பேசுகிறார்.
'நிலைமை வழமைக்குத் திரும்பிவிட்டதாக அரசியல்வாதிகள் மாத்திரமே கூறிக் கொள்கிறார்கள். வடுப்பட்ட எங்கள் இதயங்களோ இன்னமும் ஆறவில்லை' என்கிறார் அவர்.
'போரில் ஒரு காலை இழந்தவன் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தடவையும் போரையே நினைப்பான்' என்று தொடர்கிறது அவர் பேச்சு.
கலைத்துறையில் ஈடுபட்ட பலருடன் தொடர்புடையவர் கேசவராசன். நிழற்படத்தில் சிறுவனுடன் நடப்பவர் புலிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர் வீரா என்பவராக இருக்கலாம் என்கிறார் அவர்.
வீராவைக் கண்டறியும் முயற்சியும் எமக்கு ஏமாற்றத்தில் முடிந்தது. அவரும் எங்களுடன் பேசத் தயங்கினார். அவருடன் தொடர்புகொள்ள நாங்கள் பல தடவைகள் முயன்றோம். அவர் பிறகு வடபுலத்தை விட்டே அகன்றுவிட்டார் என்று கேள்விப்பட்டோம்.
கேசவராசன் அதை அறிந்து வியப்படையவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் பலகலைக்கழக மாணவர் ஒருவர் தாக்கப்பட்டது பற்றி அவர் என்னிடம் தெரிவித்தார். பட்டப்பகலில் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் படையினருடைய சோதனைச் சாவடி ஒன்றின் முன்னிலையில் வைத்து அந்த இளைஞன் தாக்கப்பட்டான்.
'மக்கள் அஞ்சுகிறார்கள். இம்மியும் தண்டனைப்பயமின்றி இங்கு குற்றங்கள் இழைக்கப்படுகின்றன' என்கிறார் கேசவராசன்.
பார்வதி சிவபாதம் என்னும் வேறொரு கலைஞருடன் நான் பேசிப் பார்த்தேன். அவர் எண்ணிறந்த நேயர்கள் மிகுந்த ஓர் இசைப்பாடகி. ஒரு காலத்தில் அவர் புலிகளின் பிரசாரப் பாடல்களைப் பாடிவந்தவர். அத்துணை மேன்மைவாய்ந்த இசைஞராகிய பார்வதி சிவபாதம் ஒரு மாளிகையில் வாழ்பவர் என்றே நான் கற்பனை செய்திருந்தேன். ஆனால் அவருடைய வீடோ ஒரு சின்னஞ்சிறிய தகரக் கொட்டில். போரின்பொழுது தனது நூல்கள், கருவிகள் உட்பட அனைத்தையும் அவர் இழந்துவிட்டார்.
'நாங்கள் கலைஞர்கள். பாட்டுப் பாடுவதைவிட எங்களால் வேறென்ன செய்ய முடியும்? அப்பொழுதெல்லாம் புலிகளுக்காக நான் பாட்டுப் பாடினேன். அந்தப் பாடல்களை இப்பொழுது நான் சிந்தித்தே பார்ப்பதில்லை. இப்பொழுதெல்லாம் பாரம்பரியப் பாடல்களையே நான் பாடுகிறேன். காலத்தைக் கடத்த வேண்டுமே!' என்கிறார் பார்வதி சிவபாதம்.
மற்றவர்கள் பலரைப் போல் களம்விட்டு நகர்ந்தபொழுது அவரும் காயப்பட்டார். ஒரே ஒரு கருவியையே அவரால் காக்க முடிந்தது.
'இந்த சுருதிப்பெட்டியைத்தான் என்னால் கொண்டுவர முடிந்தது. இதை ஒரு சின்னப் பையிலிட்டு நான் கொண்டுவந்தேன். எங்கும் தோட்டாக்கள் பறந்துகொண்டிருந்தன. ஆனாலும் இதைக் கொண்டுவர நான் உறுதிபூண்டேன். இதுவே என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது. தேர்ந்தெடுக்க வேறெதுவும் இருந்ததாக நான் நினைக்கவில்லை' என்று சொல்கிறார் பார்வதி சிவபாதம்.
அந்த யாழ் சுமந்த சிறுவனோ எங்களுக்கு அகப்படவில்லை. மெனிக் பண்ணை அகதி முகாமில் இன்னும் அடைபட்டுள்ள 7,000 பேருள் அவன் ஒருவனாகலாம். எனினும் நாங்கள் அங்கு செல்வதற்குப் பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. வீடுதிரும்பும் அனுமதிக்காக மக்கள் இன்னமும் அங்கு காத்துக் கிடக்கிறார்கள்.
மெனிக் பண்ணை அகதி முகாமில் ஓர் அகதியாய் இருந்த சிவரூபன் என்ற இசைஞரை நான் சந்தித்தேன். படத்தில் உள்ள சிறுவனையோ, அவனுக்குப் பக்கத்தில் நடப்பவரையோ சிவரூபன் அடையாளம் காட்டவில்லை. அவர் தற்பொழுது தனது மனைவியுடனும், ஒரு வயது நிரம்பிய மகளுடனும் ஒரு தகரக் கொட்டிலில் வசித்து வருகிறார். போரின்பொழுது தனது குடும்பத்தவர்கள் பலரை அவர் இழந்துவிட்டார். சமர்க்களத்தை ஊடறுத்து நகர்ந்த அவர் உள்ளம் ஊறுபட்டுள்ளது.
'மக்கள்திரளுக்குள் சிக்கி அக்கா பின்னடைந்துவிட்டார். அவரை நான் மறுபடி கண்டதில்லை. காயப்பட்ட பலரை இறக்கவிட்டே நாங்கள் நகர நேர்ந்தது. இறந்த பலரின் உடல்களைக் கடந்து நாங்கள் நடந்து சென்றோம். யாருக்கு யார் உதவுவது என்பதை எங்களால் தீர்மானிக்க முடியவில்லை.'
'எனது நண்பன் காலை இழந்தான். எனக்கு கையில் சூடு பட்டது. தோளில் அவனை நான் சுமந்து சென்றேன். அப்படியிருந்தும் ஏனைய கருவிகள் அனைத்தையும் விடுத்து எனது இசைக்குழலை மட்டுமே நான் பற்றிக்கொண்டேன். இதை இசைத்தே என்னால் பிழைக்க முடியும்!' என்கிறார் சிவரூபன்.
படத்தில் உள்ள பையனைக் கண்டறியும் எங்கள் இறுதி முயற்சியாக நாங்கள் ஓர் அனாதை இல்லம் சென்றோம். சமரின்பொழுது பெற்றோரை இழந்த நூற்றுக் கணக்கான சிறுவர்கள் அங்கே வசிக்கிறார்கள்.
அங்கே யாழுடன் கூடிய சிறுவன் ஒருவனைக் கண்டோம். ஆனால் அவன் நாங்கள் தேடிய சிறுவனல்ல. நாங்கள் தேடிய சிறுவனோ இன்னமும் அந்த ஒலியொளி நாடாவில் மின்னிமறையும் சிறுவனாகவே விளங்குகிறான்!
அவனைத் தேடிப்பிடிக்கும் நாட்டமே என்னை வடபுலம் எங்கும் கொண்டுசென்றது. உடல்களையும் முண்டங்களையும் கடந்துவந்த இசைஞர்கள் பலரை வழிநெடுக நான் சந்தித்தேன்.
இலங்கையில் போர் முடிந்து ஈராண்டுகளுக்கு மேலாகியும், வடுக்கள் ஆறவில்லை. இசை துஞ்சுகையில் எஞ்சுபவை எல்லாம் மக்கள் பட்ட வேதனை வழிவந்த புலம்பல்களே.
யாழ் சுமந்த சிறுவனைக் கண்டறிய உதவுவீர்!
அவனைக் கண்டறிய உங்களால் உதவ முடியும் என்று நினைத்தால், தொடர்புகொள்வீர்!
_____________________________________________________________________
பிரியத் லியனகே, பி. பி. சி. சிங்கள சேவை – சந்தேசய முன்னாள் பொறுப்பாளர்
தமிழ்: மணி வேலுப்பிள்ளை
http://www.bbc.co.uk/news/world-asia-15818972
நன்றி: குமுதம், சென்னை, 2012-03-07
No comments:
Post a Comment