மகாவம்சம் பீடித்த மாந்தர்

 திசராணி குணசேகரா 

"ஒரு குழுமத்தின் மீதான காழ்ப்பு, பிற குழுமங்களின் மீதான காழ்ப்புக்கு வழிவகுக்கக் கூடும்"- அமார்த்தியா சென்  

இலங்கையில் கட்டுக்கதைக்கும் வரலாற்றுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு அருவமானது; ஆபத்தானது. இலங்கை அரசியலில் இந்த மர்மக்கதையுலகு தீர்க்கமான பங்குவகித்து வருகிறது. ஓர் இந்திய ஆரிய இளவரசி ஒரு சிங்கத்துடன் கூடிவாழ்கையில் உதித்த இனத்தைச் சேர்ந்தவர்களே சிங்களவர்கள் என்று சிங்கள மாணவர்களுக்கு புகட்டப்பட்டு வருகிறது. கதை படிக்கும் வேளையில் அல்ல, வரலாறு படிக்கும் வேளையிலேயே இந்தக் கதையை அவர்கள் படிக்கிறார்கள்.  இந்த சிங்கக் கதை ஒரு மகாவம்சக் கதை. பெரும்பாலான சிங்கள-பெளத்த மக்கள் அதை ஒரு வரலாற்று நூலாகவும், புனித பாடமகவும் போற்றி வருகிறார்கள். அந்த சிங்க-இளவரசி தம்பதிகளின் பேரனையே சிங்கள இனத்தின் மூலகர்த்தாவாக மகாவம்சம் ஏற்றிப்போற்றுகிறது. "விஜயன் தீய நடத்தை கொண்டவன்" என்று மகாவம்சமே கூறுகிறது. "அவனும் அவனுடைய தோழர்களும் பயங்கரக் குற்றங்கள் பலவும் புரிந்தார்கள். ஈற்றில் அவனுடைய தந்தை அவர்களை நாடுகடத்தும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளானான்."[1]  

விஜயனை நாடுகடத்தி, கப்பலில் ஏற்றி அனுப்பிய வேளையிலேயே கெளதம புத்தர் இயற்கை எய்தியதாகக் கொள்ளப்படுகிறது. புத்தர் இயற்கை எய்தும் தறுவாயில் தேவதேவனாகிய சக்காவிடம், "சிங்கபாகுவின் மகன் விஜயன் இலங்கை வந்துள்ளான். தேவதேவனே, எனது மதம் இலங்கையிலேயே நிலைநிறுத்தப்படும். ஆகவே இலங்கையில் அவனையும் அவனுடைய தோழர்களையும் காத்தருள்வாயாக!" என்று கேட்டுக்கொண்டதாக மகாவம்சம் கூறுகிறது.

அதாவது 'புனிதபுலம்' படைத்த 'தேர்ந்த இனம்' என்னும் கதையை மகாவம்சமே தோற்றுவித்தது. இந்தக் கதையே இலங்கையில் (எனது சொல்லாட்சியின்படி)  'உடையவர் - புகுந்தவர்கருத்தீட்டுக்கு அடிகோலியது. அதன்படி இத்தீவு சிங்கள-பெளத்த மக்களுக்குரியது. அவர்களே இதன் உண்மையான சொந்தக்காரர்கள். வன்முறை உட்பட எந்த வழியைப் பயன்படுத்தியும் பாதுகாக்கப்பட வேண்டிய 'புனித கொடைப்புலம்' அது!

கெளதம புத்தரின் போதனையில் புனிதப்போர் என்னும் கருத்தீடு இல்லை. புத்த தருமத்தை அல்லது அதைப் பின்பற்றுவோரைப் பாதுகாக்க பலவந்தத்தை / வன்முறையைப் பயன்படுத்த அதில் இடமில்லை.

புத்தசமயத்தில் உயிர்க்கொலை அறவே விலக்கப்பட்டுள்ளது. ஆகவே புத்தரின் போதனைக்கு புத்தம்புதிய பெரிய அத்தியாயம் ஒன்றைச் சேர்க்காமல் 'புத்தசமயத்தைப் பாதுகாக்க' மனிதர்களைக் கொல்வதை நியாயப்படுத்த முடியாது. அதையே மகாவம்ச ஆசிரியர் செய்துவைத்தார் - புத்தசமயத்தவனான துட்டகைமுனுவுக்கும், இந்துசமயத்தவனான எல்லாளனுக்கும் இடையே அரசியல் மேலாண்மைக்காக நிகழ்ந்த போராட்டத்தை தீவினையற்ற போராக / நல்வினைப் போராகச் சித்தரித்ததன் மூலம் அதையே மகாவம்ச ஆசிரியர் செய்துவைத்தார்.

எல்லாளன் மனிதர்களாலும் தேவர்களாலும் நீதிசால் மன்னனாகக் கொண்டாடப்பட்டான் என்று மகாவம்சமே கூறுகிறது[2]. அவன் நாட்டை அழித்தொழித்து, சூறையாடச் சித்தம்கொண்டு, படையெடுத்து வந்தவன் அல்லன். மக்களை அடிப்படுத்தி ஆண்ட கொடுங்கோலனும் அல்லன். மாறாக, அவன் நல்லவன், செங்கோலன். ஆனால் அவன் ஓர் 'அவிசுவாசி' என்றபடியால், அவனுடைய மெச்சத்தக்க பண்புகள் பொருந்தா; அவை ஒரு பொருட்டன்று. ஆகவே சிங்கள-பெளத்தத்தையும், அதன் தேர்ந்த நாடாகிய இலங்கையையும் வெளிப்பகைவர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு தெய்வீக இசைவுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக அவன் அகற்றப்படவும், கொல்லப்படவும் வேண்டும்.

துட்டகைமுனுவே மகாவம்சத்தின் தலைமகன், சிங்கள-பெளத்தத்தின் வீரமன்னன். அவனை அளவுகோலாகக் கொண்டே, பின்வந்த ஆட்சியாளர்கள் அனைவரும் அளக்கப்பட்டனர். அவன் வாழ்ந்த கதை என்று மகாவம்சம் எடுத்துரைக்கும் கதையில் இயற்கையும் இறைமையும், மானுடமும் தெய்வீகமும் இணைந்து பிணைந்துள்ளன. இன்றைய இலங்கையிலும் கூட அது ஒரு வரலாறாகவே வலம்வருகிறது. அவன் கருவிலே திருவானவன் என்றும்[3], மீண்டும் இத்தீவில் பெளத்த ஆட்சியை நிலைநாட்டுவதற்கான ஆணையுடன் உருவானவன் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒருபுறம் புத்தரின் கொடை என்னும் கட்டுக்கதையே 'உடையவர் - புகுந்தவர்என்னும் கருத்தீட்டுக்கான சித்தாந்த அடிப்படையாக அமைகிறது. மறுபுறம், 'புகுந்தவர்கள்' 'விதிகளை' மீறினால், 'உடையவர்கள்' அவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதை துட்டகைமுனுவின் கதை விபரிக்கிறது.   

இளவரசன் கைமுனு கூனிக்குறாவிப் படுத்த காரணத்தை வினவும் தாயிடம் கூறும் விடையில் ஆள்புலப் பிரச்சனை, ஆள்புலத்தேட்டப் பிரச்சனை இனங்காட்டப்பட்டுள்ளது: "அங்கே கங்கைக்கு அப்பால்  தமிழர்கள்; இப்பால் சமுத்திரம்; நான் கைகால்களை நீட்டிப் படுப்பது எங்ஙனம்?" இளவரசன் கெமுனுவை வயிற்றில் சுமக்கையில் அரசி விகாரமாதேவிக்கு உண்டான மூன்று ஆசைகள் பற்றிய கதையில் எதிரி இனங்காட்டப்பட்டுள்ளான்: "எல்லாளனது தளபதியின் தலைகொய்த வாள் கழுவிய நீரை, அவன் தலையில் கால்மிதித்து நின்றபடி பருக அவள் ஆசைப்பட்டாள்... அதை அரசி அரசனிடம் தெரிவித்தாள். அரசன் நிமித்திகர்களிடம் வினவினான். நிமித்திகர்களோ 'இளவரசன் தமிழரை வெல்வான்' என்றனர்...எதிரிகள் இறந்ததை எண்ணி வருந்தும் துட்டகைமுனுவைத் தேற்றும் புத்தபிக்குகள் கூறும் விடையில் தீவினையற்ற போர் / நல்வினைப் போர் என்னும் கருத்தீடு புகுத்தப்படுகிறது: "உமது இச்செயலால் நீர் சுவர்க்கம் செல்லும் பாதையில் தடங்கல் ஏற்படப் போவதில்லை... ஒன்றரை மனிதர் மட்டுமே இங்கு கொல்லப்பட்டனர். அதாவது, இறந்தோருள் ஒருவர் எமது நெறிமுறைகள் முழுவதிலும் நிலையூன்றியவர். மற்றவர் ஐந்து நெறிமுறைகளில் மாத்திரம் நிலையூன்றியவர். எஞ்சியோர் தீய புறநெறியாளர்கள், அவர்கள் விலங்குகள் எனத்தக்கவர்கள்..." [ஐந்து நெறிமுறைகள்: (1) கொல்லாதீர்! (2) திருடாதீர்! (3) சிற்றின்பம் துய்க்காதீர்! (4) பொய் கூறாதீர்! (5) மது அருந்தாதீர்!]

கெளதம சித்தார்த்தரின் பெளத்தம் சிங்கள-பெளத்தமாக, மகாவம்சம் என்னும் நூலின் புதிய மதமாக  மாற்றப்பட்ட தருணம் அது. அவிசுவாசிகளுக்கு எதிரான போர் தீவினையற்ற போரே என்று,  நல்வினைப் போரே என்றுசிலுவைப் போர்களையும் புனிதப் போர்களையும் போன்று இன்ப சுவர்க்கம் எய்துவதற்கான நேர்ப்பாதையே என்று திருவாய்மலர்ந்தருளப்பட்ட வேளை அது. "மன்னன் துட்டகைமுனு தேவருலகில் மீள்பிறவி எடுப்பது மாத்திரமல்ல, விழுமிய மைத்திரேயரின் முதற்சீடனாகவும் விளங்குவான்; மன்னனின் தந்தையே அவன் தந்தையாக விளங்குவான்; மன்னனின் தாயே அவன் தாயாக விளங்குவாள்; தம்பி சதாதீசன் அவனுக்கு இரண்டாவது சீடனாக விளங்குவான்; எனினும் மன்னனின் மகன் சாலிராசகுமாரன் விழுமிய மைத்திரேயரின் மகனாக விளங்குவான்" என்கிறது மகாவம்சம். பெளத்தத்துக்கான போர், அப்புனிதப்போரை மேற்கொள்ளும்  போர்வலருக்கு மாத்திரமல்ல, அவருடைய குடும்பம் முழுவதுக்கும் நலம்பயக்கும் என்பதை எடுத்துக்காட்டுவதன் ஊடாக, பெளத்தத்துக்கான போர் நல்வினைத் தன்மை வாய்ந்தது என்னும் வாதத்தை மகாவம்சம் கெட்டியாக முன்வைக்கிறது.

துட்டகைமுனு – எல்லாளன் போர் நடந்து ஏறத்தாழ ஏழு நூற்றாண்டுகளின் பின்னர் (மகநாமதேரர் என்னும்) புத்தபிக்குவால் அரசியல் நோக்குடன் மகாவம்சம் எழுதப்பட்டது. பற்றுக்கள் அனைத்தையும் துறந்தவருக்கு மாத்திரமே உள்ளொளி கிட்டும் என்பதை அறிவதற்கு கெளதம புத்தரின் போதனையை ஓரளவு அறிந்துகொண்டாலே போதும். பற்றுக்கள் எவ்வளவுதூரம் புரிந்துகொள்ளக்கூடியவையாக இருந்தாலும், அல்லது நியாயப்படுத்தக்கூடியவையாக இருந்தாலும், பற்றுக்கள் மிகுந்தவர், அதே பற்றுக்களால் பிறவிப்பிணியுடன் கட்டுண்டிருப்பார். உள்ளொளி எய்தியோர்க்கு நாடு, இனம், மதம் உட்பட பற்றுக்கள் கிடையா. உயிர்க்கொலை எதையும் அவர்களால் ஏற்கவும் முடியாது. உள்ளொளி எய்திய பிக்குகள் மதத்தின் பேரால் பாரிய உயிர்க்கொலையை நியாயப்படுத்தியதாக மகாநாமதேரர் வாதிடுவது ஓர் அப்பட்டமான பொய், தீமைபயக்கும் பொய். எனினும் இப்பொய் (கொல்லாதீர்! என்னும்)முதலாவது நெறிமுறையை விஞ்சி மேலோங்கியுள்ளது.

அமைதி நாடிய யேசுநாதரை மன்னன் கான்ஸ்டன்டைனும், அவன் வழித்தோன்றல்களும் ஒரு போர்வலராக உருமாற்ற நேர்ந்தது. விவிலியம் - பழைய ஏற்பாட்டில் வலம்வரும் வஞ்சம்மிகுந்த கடவுள் இந்த உருமாற்றத்துக்கு உறுதுணை புரிந்தார். மகாநாமதேரரோ கோட்பாட்டுத்துணை எதுவுமின்றி அந்த அலுவலைத் தாமாகவே செய்ய நேர்ந்தது. புத்தரல்ல, மகாநாமதேரரே ஜாதிக ஹெல உருமய (தேசிய பாரம்பரிய கட்சி), பொது பல சேனா (பெளத்த பல சேனை) போன்றவற்றின் உண்மையான குருவும், தலைவரும் ஆவார்.

 

கட்டுக்கதையே தலைவிதி

 

மகாவம்சக் கதைகள், பழம்பெரும் ஏடொன்றில் மக்களை ஈர்க்கும் வண்ணம் மீட்டியுரைத்த கட்டுக்கதைகள் மட்டுமல்ல. அவை தற்கால இலங்கையின் செல்நெறியைத் தீர்மானித்த கட்டுக்கதைகளும் ஆகும்.   

19ம் நூற்றாண்டில் அனகாரிக தர்மபாலாவின் போதனைக்கமையவே பெளத்த மறுமலர்ச்சி மேலோங்கியது. பெளத்த மறுமலர்ச்சியில் சிறுபான்மையோருக்கு எதிரான போக்கு காணப்பட்டது. அதற்கு மகாவம்சக் கதைகள் துணைநின்றன. மகாவம்சக் கதைகளால் உருட்டிப்புரட்டி அடிமைகொள்ளப்பட்ட சிங்கள-பெளத்தம் தமிழரைக் கவரும் ஆற்றலை அல்லது இலங்கையில் ஒரு கலாநிதி அம்பேத்காரை தோற்றுவிக்கும் ஆற்றலை இழந்தது.

பெளத்த மகாசங்கத்தில் ஒரு தமிழ்க்குரல் ஒலிக்கும் வண்ணம் இங்கு கணிசமானளவு பெளத்த தமிழர்கள் தோன்றியிருந்தால், நாம் சுதந்திரம் பெற்ற பின்னர் எமது வரலாற்றில் அழிவுகள் குன்றியிருக்கும். பெளத்தம் தமிழரைக் கவரவேண்டுமேல், அது சிங்கள மேலாண்மைச் சின்னத்தை துறந்து, மகாவம்சத்துக்கு முற்பட்ட பொதுமை-நெறிதிறத்தை மீட்டுக்கொள்ள வேண்டும்.

"நாங்கள் நட்புறவுடன் கூடிவாழா விட்டாலும், சகிப்புணர்வுடனாவது கூடிவாழ்வதற்கு ஏதுவான ஏற்பாடு எதையும் செய்துகொள்வதே எங்களை எதிர்நோக்கும் சவால்" என்று ஜவகர்லால் நேரு அன்ட்றூ மார்லோவிடம் கூறினார் (Anti-Memoir). பல்லின நாடு எதுவுமே எதிர்நோக்கும் சவால் இது. நாங்கள் மகாவம்சக் கதைகளுக்கு கட்டுண்டிருக்கும் வரை இச்சவாலை எதிர்கொள்வதில் இலங்கை வெற்றிபெறப் போவதில்லை.



[1] "விஜயனுக்கும், அவனுடைய 700 தோழர்களுக்கும் அரைமொட்டை அடித்து, ஒரு கப்பலில் ஏற்றி கடலில் செலுத்திவிடும்படி அவன் (தந்தை) பணித்தான்..."

[2] அவன் (எல்லாளன்) மிகவும் நீதிமானாக விளங்கியபடியால், அவனுடைய வேண்டுகோளின்படி தேவர்கள் தலையிட்டு வரட்சியை முடிவுறுத்தினர் என்று மகாவம்சம் கூறுகிறது.

[3] "அரசன் கவந்தீசனும் அரசியும் பல ஆண்டுகளாக மகப்பேறின்றி வருந்தினார்கள். அரசி ஒரு முனிவரின் புத்திமதியை நாடினாள். இறக்குந் தறுவாயில் இருக்கும் ஒரு பிக்குவிடம் சென்று, தனது கருப்பையில் தனக்கு மகனாக மறுபிறவி எடுக்க சம்மதம் பெறும்படி முனிவர் கூறினார். இறக்குந் தறுவாயில் ஒரு பிக்குவிடம் சென்ற அரசி தனது விருப்பத்துக்கு அவரிடம் சம்மதம் பெற்றாள். இவ்வினிய செய்தியை தனது கணவனிடம் தெரிவிக்க அவள் திரும்பிச் செல்கையில் பிக்கு இறந்தார். அரசி கணவனிடம்  செல்லும்பொழுதே "அரசியின் கருப்பையில் பிக்கு புதுவாழ்வுக்குத் திரும்பினார். அதை உணர்ந்தபொழுது அவள் பயணத்தை இடைநிறுத்தி, அரசனுக்கு செய்தி அனுப்பினாள்..."

Tisaranee GunasekaraHaunted By MahawamsaColombo Telegraph2013-03-24

தமிழ்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment