சி. வி. விக்னேஸ்வரன்
குசல் பெரேராவின் “ராஜபக்சா: சிங்கள சுயபடம்” நூல் வெளியீட்டில்
ஆற்றிய உரை
குரு பிரமா...
திரு. குசல் பெரேரா அவர்களே, திரு. கிரிசான் சிறிவர்த்தனா அவர்களே, என் அருமைச் சகோதர சகோதரிகளே!
இந்த நூலை வெளியிட்டு வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. குசல் எங்கள் நண்பர். சென்ற கிழமை மகாநாயக்க தேரர்களைச் சந்திக்க நாங்கள் சென்றபொழுது, அவர் உளங்கனிந்து எங்களுடன் கூட வந்தார். அவர் வெளியிடும் நூலாகிய “ராஜபக்சா: சிங்கள சுயபடம்” (Rajapakse: the Sinhala Selfie) என்பது அவருடைய நண்பர் மகிந்த ராஜபக்சா பற்றியது. சுயபடம் என்பது எங்களை நாங்களே பிடிக்கும் படம். அப்படி ராஜபக்சா ஒரு சுயபடம் எடுக்கும்பொழுது அதில் ராஜபக்சாவை அல்ல, ஒரு சிங்களவரையே அவர் காண்கின்றார். அவர் எப்படிப்பட்ட சிங்களவர் என்பது பற்றி இந்த நூலில் பேசுகிறார் குசல்.
குசல் தனது முன்னுரையில் மகிந்த ராஜபக்சா பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்: “இவ்வாறு மகிந்தவை மிகவும் எளிதான நண்பராகவே கண்டேன். அவர் என்னுடன் பெரிதும் உடன்பட்டு வந்தார். அவர் என்னுடன் முரண்பட்டதரிது. உண்மையில் என்னுடன் முரண்படாமல் நடந்துகொள்ளும் வசதி கருதியே அவர் என்றுமே என்னுடன் முரண்படாமல் நடந்து கொண்டிருக்கலாம்.”
அது மகிந்த ராஜபக்சாவுக்கு ஏற்ற வரையறையே. 2013 அக்டோபர் 7ம் திகதி, எனது சொந்த அணியினரின் ஆட்சேபங்கள் பலவற்றையும் மீறி, அவர் முன்னிலையில் நான் வட மாகாண முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டேன். அப்பொழுது மிகுந்த நட்புணர்வுடன் அவர் நடந்துகொண்டார். பிறகு 2014 சனவரி 2ம் திகதி அவருடைய உத்தியோகபூர்வமான அலுவலகத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். பிறரை ஈர்க்கும் ஆற்றல் அவரிடம் நிறைந்திருந்தது. அவரிடம் ஏறத்தாழ பத்து வேண்டுகோள்களை நான் முன்வைத்தேன். (வட மாகாண) ஆளுநராக விளங்கிய படைத்துறைஞரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருந்தது. அவருக்குப் பதிலாக வேறொரு படைத்துறைஞர் ஆளுநராக விளங்க வேண்டியதில்லை என்றும், ஒரு குடித்துறைஞரை அமர்த்தும்படியும் கேட்டுக்கொண்டேன். எனது வேண்டுகோளை மகிந்த மிகவும் நயந்து மெச்சினார். “ஆம், நாங்கள் அவரை மாற்றத்தான் வேண்டும். அவருடைய பதவிக்காலம் இந்த ஆடிமாதம் முடியும்வரை அவர் பதவி வகிக்கட்டும். பிறகு ஒரு குடித்துறைஞரை நான் அமர்த்துகின்றேன்” என்றார். அந்தப் பதவிக்குப் பொருத்தமானவர்களின் பெயர்களையும் அவர் வினவினார். நானும் சிலரது பெயர்களைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டேன்.
ஆடிமாதம் பிறந்தபொழுது அதே படைத்துறை ஆளுநரின் பதவிக்காலத்தை அவர் நீட்டித்தார். அதற்கு வசதியாக எனக்கு கொடுத்த வாக்குறுதியை அவர் மறந்துவிட்டார். எனது பத்து வேண்டுகோள்களையும் சாதகமான முறையில் ஆராய்வதாக அவர் கருத்தூன்றி வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் அவற்றுள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்று நினைக்கிறேன். சிங்கள சுயபடம் அப்படிப்பட்டது. அவர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறுபவர். உருட்டுப்புரட்டு அவருக்கு கைவந்த கலை.
குசல் தனது முன்னுரையில் இன்னொரு முக்கிய சங்கதியையும் குறிப்பிட்டுள்ளார்: அதாவது புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றுமே சரிவர நாடிபிடித்துப் பார்ப்பதில்லை; “பயங்கரவாதம்” என்ற சொல்லின் அரசியல்வாரியான மறைபொருளை அவர்கள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இளைய ஜோர்ஜ் புஷ்ஷின் ஆட்சிக்காலத்தில், 2001 செப்டெம்பர் 11ம் திகதி, நியூ யார்க் மாநகர இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட பேரிடியை அடுத்து உலக அரசியல் கடும் மாற்றத்துக்கு உள்ளானது. ஆயுத அரசியல் முழுவதையும் பயங்கரவாதம் என்று அல்லது (அதில் ஈடுபடுவோரை) “அல் கைதா”வின் யாரிகள் என்று வகைப்படுத்தி முத்திரை குத்தும் நடவடிக்கையில் அமெரிக்க அரசாங்க அதிகாரிகளும் உளவுப்படை அதிகாரிகளும் இறங்கினார்கள். அதைப் பயன்படுத்தி தமிழ் வன்போக்காளர்களை “அல் கைதா”வுக்கு நிகரான பயங்கரவாதிகள் என்று முழங்கினார் ராஜபக்சா. கதையோடு கதை, 9/11ன் 16வது ஆண்டு நேற்று நிறைவு பெற்றது.
இப்பொழுதும் கூட சில ஊடகங்கள் தமிழ் வன்போக்காளர்களை தீவிரவாதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் குறிப்பிடுவதை நான் காண்கின்றேன். இளந்தமிழரின் வன்செயல்கள் அனைத்தும் பயங்கரவாதச் செயற்பாடுகள் என்றுதான் உலக அரங்கில் முழங்கப்படுகின்றன. அவ்வளவு தூரம் ஓர் உள்நாட்டு அரசியற் படைவலுப் பிரச்சனையை ஓர் உலகளாவிய சங்கதியாக மாற்றியவர் ராஜபக்சாவே.
அப்படிப்பட்ட ராஜபக்சாவின் சிங்கள சுயபடம் பற்றியதே இந்நூல் முழுவதும். மகிந்த ராஜபக்சா பற்றிய நூல் ஒன்றை வெளியிடுவதற்கு விக்னேஸ்வரன் ஏன் ஆதரவு நல்கவேண்டும் என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன. “சம்பந்தன், மகிந்தவுடன் ஊடாடுகிறார். அதற்கு விக்னேஸ்வரன் பூச்செண்டு கொடுத்து விடுகிறாரா?” என்பது போன்ற முணுமுணுப்புகள் வேறு காதில் விழுகின்றன.
நான் மனந்திறந்து பேசுகின்றேன்: முதலில் எனது நண்பர் குசல் பெரேரா தனது நூல்வெளியீட்டில் கலந்துகொள்ளும்படி எனக்கு விடுத்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அதன் பிறகுதான் அது எதைப் பற்றிய நூல் என்பதை நான் அறிந்துகொள்ள முயன்றேன்.
நூலின் இறுதியில் உள்ள ஒரு பந்தியைப் பார்த்த பிறகுதான் அதில் எனக்கு வேட்கை ஏற்பட்டது. அந்தப் பந்தியை இப்பொழுது அப்படியே ஒப்புவிக்கிறேன்:
“ராஜபக்சா-அரசு இப்போர் முழுவதையும் புரிவதில் காட்டிய கொடூரத்தை என்றுமே சொற்களில் வடிக்கவோ நியாயப்படுத்தவோ முடியாது. தமிழ் மக்களையே அது படுமோசமான முறையில் ஈவிரக்கமின்றி வேட்டையாடியது. எனினும் வடக்கு-கிழக்கில் மாத்திரம் கொடூரம் புரியப்படவில்லை. தமிழ் மக்களை வதைப்பதில் மாத்திரம் கொடூரம் புரியப்படவில்லை. சமூகம் முழுவதும் நெடுங்காலமாகக் கட்டிக்காத்த குடியாட்சிக் கட்டமைப்புகளை ராஜபக்சா-அரசு புரிந்த போர் தகர்த்தெறிந்துள்ளது. சமூக விழுமியங்களை அது நிலைகுலைய வைத்துள்ளது. மனித உரிமைகளையும், மக்களின் குடியாட்சி உரிமைகளையும் அது அறவே துவைத்தெறிந்துள்ளது. ஊடக சுதந்திரத்தை அது நெரித்து நசித்துள்ளது. ஊடகங்கள் அனைத்தையும் பலவந்தப்படுத்தி அதன் ஆணைகளுக்கு அடிபணிய வைத்துள்ளது. ஓர் அரசியற் படைபல ஆட்சிப்பீடம் உருவாகுவதற்கு அது வழிவகுத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பிரதிநிதியாக அந்த அரசியற் படைபல ஆட்சிப்பீடம் மேற்கொண்டு செயற்படுவதில்லை. மக்களுக்கும் அது பொறுப்பேற்பதில்லை. தமிழரின் ‘பயங்கரவாதத்தை’ ஒழிக்கும் சாக்கில் சமூகத்தை மிரட்டும் போக்கினைக் கைக்கொண்டு, மக்களின் இறைமையை ராஜபக்சா-அரசு அரித்துக் கொட்டியுள்ளது.”
மேற்படி பந்தியின் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை எவரும் குசலுடன் முரண்பட முடியாது. தமிழரின் பயங்கரவாதத்தை ஒழிக்கும் சாக்கில் ஓர் அரசியற் படைபல ஆட்சிப்பீடம் ஓங்குவதற்கு மகிந்த ராஜபக்சா வழிவகுத்துள்ளார். அரசியல்வாரியாக அவர் தேர்ந்தெடுக்கப்படவே, மக்களுக்குப் பொறுப்பேற்காத அப்படைபல ஆட்சிப்பீடத்துக்குத் தலைமையேற்று வழிநடத்துவதற்காக அமெரிக்காவில், ஒரு பெற்றோல் மடுவத்தில், வேலைசெய்த ஒருவர் இங்கு வரவழைக்கப்பட்டார். அத்தகைய நடவடிக்கையே மக்களின் இறைமையை அரித்துக் கொட்டியது என்பதில் ஐயமில்லை.
மகிந்தவை வளைப்பதற்கு திரு. சம்பந்தன் அவர்களிடம் நானாவது பூச்செண்டு கொடுத்து விடுவதாவது! ஏற்ற தருணத்தில் வீசியெறிவதற்கு எனக்குத் தேவைப்படும் செங்கற்களையே நான் பொறுக்கித்திரிய முயல்கின்றேன். வீரனை விட வில்லன் மிகவிரைவாகப் பெயர்பெற்று விடுவான் என்பது நாங்கள் கேட்டுச் சலித்த கூற்று. எனினும் அது புகழ்ச்சி அல்ல; வெறும் இகழச்சி. மகிந்தவின் இகழ்ச்சியே இன்று விற்பனைக்கு வருகின்றது. குசல் பெரேரா எழுதியிருப்பது மகிந்தவின் புகழ்பாடும் நூல் அல்ல. அதாவது திரு. சம்பந்தன் அவர்களின் உள்ளத்துள் மோதும் அதே உணர்வலை என் உள்ளத்துள் மோதவில்லை.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டுக்கு உடன்பாடான முறையில் குசல் தனது நூலில் குறிப்பிட்டுள்ள சங்கதிகளுள் ஒன்றைத் தெரிவித்தே ஆகவேண்டும். என்னை மருட்டிவந்த சங்கதி அது. குசலின் குறிப்பில் நியாயம் தெரிகிறது. சம்பந்தப்பட்ட பந்தியை வாசிக்கின்றேன்:
“தேர்தலைப் புறக்கணிக்க வைப்பதற்காக ராஜபக்சாவின் சார்பில் முன்னாள் நாடாளுமன்றாளர் திரன் அலஸ் (புலிகளுடன்) பேரம்பேசியதாக ஒரு கதை பரவியது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் அப்படிச் சொல்லித் திரிந்தார்கள். புலிகளைச் சேர்ந்த எமில் காந்தன் என்ற ஒருவருடன் பேரம் பேசப்பட்டதாகச் சொல்லப்பட்டது. எமில் காந்தனுடன் திரன் அலஸ் பேசியது வேறொரு வியாபாரப் பேரமாகலாம்; அரசியற் காரணங்களுக்காக, தேர்தலைப் புறக்கணிக்கும் புலிகளின் நடவடிக்கைக்குள், அந்த வியாபாரப் பேரம் இட்டுக்கட்டப்பட்டிருக்கலாம் என்ற எண்ணமே எனக்கு ஏற்படுகின்றது.”
குசல் தொடர்ந்து கூறுகின்றார்: “பிரபாகரனுடனும் புலிகளின் தலைமைப் பீடத்துடனும் ‘உடன்பாடு’ எதையும் காண்பதற்கு இடைத்தரகராக விளங்கும் வல்லமையும், செல்லுபடியாகும் ‘தொடர்பு’ம் கொண்டவர் என்று எமில் காந்தன் போன்ற ஒருவரை எடுத்துக்கொள்ளலாம் என்பதை தனிப்பட்ட முறையில் நான் நம்பவில்லை. தேவைப்பட்டால் அத்தகைய அலுவலுக்கு அவருக்கு மேற்பட்டவர்கள், வல்லமை மிகுந்தவர்கள், தமது சொந்த நிவாரண, வாழ்வாதாரத் திட்டங்களுக்கு ஆதரவுநாடி, அடிக்கடி கொழும்புக்கு வந்து, பல்வேறுபட்டோரைச் சந்திப்பவர்கள் சிலர் இங்கே இருந்தார்கள். அத்தகைய சிலருள் புலிகளின் அரசியற் கிளையையும் சமாதான செயலகத்தையும் சேர்ந்த புலித்தேவன் ஒருவர். புலிகளுடன் ராஜபக்சாவுக்கு அரசியற் பேரம் எதுவும் தேவைப்பட்டால், அதற்குப் புலித்தேவனே மிகவும் நம்பிக்கையான தொடர்பாளராக விளங்கியிருக்க முடியும். எனினும், மக்கள் வாக்களிக்கும் விதத்தில் நம்பிக்கை வைத்து, கொழும்பிலிருந்து அனுப்பி வைக்கப்படும் காசுக்கட்டுக்களை வைத்து, தனது அரசியற் படைபல எதிர்காலத்தைப் பணயம் வைத்து, பிரபாகரன் சூதாடியிருப்பார் என்பதை நான் பெரிதும் சந்தேகிக்கிறேன்.”
வேறொரு பக்கத்தில் குசல் இப்படி எழுதுகின்றார்: “புலம்பெயர்ந்த தமிழர்கள் 9/11க்குப் பிற்பட்ட உலக அரசியலைப் புரிந்துகொள்ளும் வல்லமையை ஈட்டிக்கொள்ளாமல் அடம்பிடித்தார்கள். தமது உலகளாவிய ஆர்ப்பாட்டத்தின் ஊடாக, ஐ. நா.வைத் தலையிட வைத்து, வடக்கு-கிழக்கில் ஒரு தன்னாட்சித் ‘தமிழரசை’ அமைக்க முடியும் என்று கருதுவதற்கு அவர்களுடைய பிடிவாதம் இடம்கொடுத்தது. அதற்கு, ஏற்கெனவே வெட்டிக்குறைக்கப்பட்ட 13வது திருத்தத்துக்கு அப்பால் எதற்கும் உடன்படாத ஒரு சிங்கள பெளத்த கடும்போக்குத் தலைவர் கொழும்பில் ஜனாதிபதியாக அமர்ந்திருக்கும் நிலை தமக்குத் தேவைப்படுவதாக அவர்கள் கருதினார்கள். புலிகள் தேர்தலைப் புறக்கணிக்கத் தலைப்பட்ட காரணம் அதுவே. பொதுவாகத் தமிழ் மக்கள், பெரும்பாலான தமிழ் மக்கள், போர்நிறுத்தம் தொடரும் வண்ணமாவது ரணிலுக்கு வாக்களிப்பார்கள் என்பது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட முன்னரே மக்கள் கருத்து வாயிலாகப் புலப்பட்டிருந்தது.”
அதாவது, புலிகள் தமக்கு நலம்பயக்கலாம் என்று கருதியே மகிந்த ரஜபக்சா ஆட்சியில் அமர்வதை விரும்பினார்கள்.
ராஜபக்சா-குடும்பத்துக்கு நெருக்கமானவராக, மகிந்தவுக்கு இன்னும் நெருக்கமானவராக இருந்தவர் குசல். எனினும் மகிந்தவுக்கு அவர் வாக்களிக்கவில்லை. 2015 நவம்பர் 13ம் திகதி தேர்தல் தொடங்குந் தறுவாயில் ராஜபக்சாவுக்கு ஒரு திறந்த மடலை அவர் அனுப்பி வைத்தார். “உமக்கு வாக்களிப்பது, இந்த நாட்டின் தலைவிதியை ஒரு சால்வையில் தூக்கிலிடுவதற்கு நிகராகும். ஆகவே உமக்கு நான் வாக்களிக்க மாட்டேன்” என்று அதை எழுதி முடித்திருந்தார்.
“சூறை, சுயகுடும்பநலம், அரசியல்யாப்பு வாரியான எதேச்சாதிகாரம், போரில் வென்ற படையினரை ‘போர்வெற்றி வீரர்கள்’ என்று முழங்கும் கொண்டாட்டம் என்பவற்றுடன் கூடிய பாரிய ஊழலே அவரது ஆட்சியின் சின்னம்” என்கிறார் குசல். “அந்த வகையில் அவரது ஆட்சியை நான் திருடராட்சி என்று குறிப்பிட்டுள்ளேன்” என்றும் குசல் கூறுகின்றார். மகிந்த தனது ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி எமது நாட்டு வளங்களைத் திருடிக்கொண்டார் என்பதே அதன் பொருள்.
குசலின் நூலை வாசித்து முடிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. எனினும் நான் வாசித்தவரை அதில் ஒருசில சிறப்புகள் எனக்குப் புலப்பட்டன. இந்த நூலின் மையப் பாத்திரத்தை குசலுக்கு நேரடியாகத் தெரியும். தனக்கு நன்கு தெரிந்த மகிந்த ராஜபக்சா என்ற ஆளைச் சூழ்ந்து சிங்கள மக்களீர்வாதம் அடைந்த வளர்ச்சியின் நடுவில் நின்றவர், நிற்பவர் குசல். எனினும் மகிந்தவின் மக்களீர்வாதம் இலங்கையின் அரசியலரங்கில் தீவிரமான, வன்மையான இன-மத வாதமாக ஓங்கியதையிட்டு இந்நூலில் வருத்தப்படுகின்றார் குசல்.
மகிந்தவின் முன்னோர், சிங்கள தேசியவாத அரங்கினுள் அவர் ஈர்க்கப்பட்டமை, அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசியலுக்குள் புகுந்தமை மற்றும் பிறவற்றை எல்லாம் குசல் இந்நூலில் அடியொற்றிச் செல்கின்றார். பிறகு மகிந்த ஆட்சிக் கடிவாளம் ஏற்கமுன்னர் தமிழ்மக்களை, குறிப்பாகத் தமிழ் மாணவர்களை ஓரங்கட்டுவதற்கு, தமிழ்மொழியில் பயிலும் மாணவர்கள் அறிவியல் பாடங்களில் மேம்படுவதைத் தடுக்கும் நோக்குடன் தரப்படுத்தல் மூலம் அவர்களை ஓரங்கட்டுவதற்கு ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆராய்கின்றார் குசல்.
அவர் தொடர்ந்து கூறுகின்றார்: “இவ்வாறு ஏறத்தாழ 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட எண்ணிறந்த, சிக்குப்பிக்கான, அரசியற் காறுபாறுகள் ஊடாக சிங்கள பெளத்த அரசை ஒருங்குதிரட்டும் இலக்கு எய்தப்பட்டது. மறுபுறம் அத்தகைய நடவடிக்கை ஒவ்வொன்றும் சிங்கள சமூக சித்தத்தை வலுப்படுத்தி, முன்னணி அரசியற் கட்சிகள் இரண்டையும் அரசியலதிகாரத்தை ஈட்டும் நோக்குடன் ஒவ்வொரு தேர்தலிலும் சிங்கள வாக்குகளுக்காகப் போட்டியிட வைத்தது.”
இதுவரை எந்தக் கட்சியாலும் தமிழரின் பிரச்சனையைத் தீர்க்க முடியாது போனமைக்கு அது ஒரு முக்கிய காரணம். வட, கீழ் மாகாண தமிழ்பேசும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது உண்மையில் மிகவும் எளிது. அவர்களின் தனித்துவத்தை அங்கீகரிப்பது; அதன்படி அரசியல்யாப்பு ஏற்பாடுகளை வரைவது; உடனடியாக இந்த நாடு அமைதியையும், மீளிணக்கத்தையும், பொருளாதார மறுமலர்ச்சியையும் நோக்கி முன்னகரும்.
வேத்துவக் கல்லூரியில் (Royal College) என்னுடன் பயின்ற நண்பர் கலாநிதி நிகால் ஜயவிக்கிரமா 2008 மார்ச் 1ம் திகதி கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வாவின் நூறாவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் ஒரு கூற்றை அப்புறம் எடுத்துக்காட்டுகின்றார் குசல். அது 1972ம், 1978ம் ஆண்டுகளில் புகுத்தப்பட்ட அரசியல்யாப்புகளைப் புரியவைக்கும் கூற்று. 1978ல் புகுத்தப்பட்ட அரசியல்யாப்பினை வரைவதற்குப் பொறுப்பேற்ற கலாநிதி எச். டபிள்யு. ஜயவர்த்தனாவைப் பற்றியும் கலாநிதி நிகால் ஜயவிக்கிரமா குறிப்பிட்டார். அப்போதைய அரசியற் கட்சிகள், மக்களின் பிரச்சனைகளையும் குறைகளையும் கருத்தில் கொள்வதை விடுத்து தமது சொந்த அரசியலுக்காக நாடிய அரசியல்யாப்புகளே அவை இரண்டும். நிகால் ஜயவிக்கிரமாவின் கூற்று பின்வருமாறு:
“இப்படி நான் நான் சுருக்கி உரைக்கலாம் என்று நினைக்கிறேன்: அரசியற் சிந்தனை எதையும் அடிப்படையாகக் கொண்டு மேற்படி குடியரசு அரசியல்யாப்புகள் இரண்டும் வரையப்பட்டதாக நான் நினைக்கவில்லை. எந்த அரசியற் கட்சிகளின் தயவில் அவை வரையப்பட்டனவோ அந்த அரசியற் கட்சிகளின் கொள்கைகளையே அவை புலப்படுத்தின. இன்னும் செவ்வையாகக் கூறுவதாயின், அரசியல்யாப்பு வரையும் படிமுறைகளில் ஆதிக்கம் செலுத்தும் ஆளுமை படைத்த இரண்டு தலைவர்களின் ஏவல்களையே அவை புலப்படுத்தின. 1970ல் ஐக்கிய முன்னணி ஈட்டிய அளப்பரிய பெரும்பான்மையைக் கொண்டு தனது மற்றும் இலங்கைச் சமசமாசக் கட்சியின் நெடுங்கால அரசியற் கொள்கைகளைப் புகுத்தி நடைமுறைப்படுத்த வாய்ப்புக் கிட்டியுள்ளதாக கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வாவும் அவரது கட்சியும் எண்ணியிருக்கலாம்; அரசாங்க நிருவாகத்துறை, நீதித்துறை, மிதவாத சிந்தனை மிகுந்த பிரதம மந்திரி உட்பட எந்தத் தரப்பினரதும் தடங்கலின்றி அவ்வாறு செய்ய அவரும் அவரது கட்சியும் விரும்பியிருக்கலாம். எனினும் அவ்வாறு செய்கையில், அதே பொதுத்தேர்தலில் மிகவும் தெளிவாக எழுப்பப்பட்ட வடக்கின் குரலைக் கேட்கவும் ஏற்கவும் அரசியல்யாப்பு மன்றம் தவறியது. பேரிடி விழுந்தது.
1972ல் புகுத்தப்பட்ட அரசியல்யாப்பினைப் பற்றி நிகால் கூறியதையும் குசல் மேற்கோள்காட்டியுள்ளார்: “ஐக்கிய முன்னணியினதும் அரசாங்கத்தினதும் கொள்கைக்கு முற்றிலும் உடன்பாடான முறையில் எடுக்கப்பட்ட அடிப்படைத் தீர்மானங்களை ஆதாரமாகக் கொண்டே 1972ல் அரசியல்யாப்பு வரையப்பட்டது; பொதுமக்களின் உடன்பாட்டுடன் அது வரையப்படவில்லை; அந்த அரசியல்யாப்பினை வடித்த சிற்பியாகிய கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வாவே அதை ஒப்புக்கொண்டார்.”
கலாநிதி ஜயவிக்கிரமா மேலும் கூறுகின்றார்: “அந்த அரசியல்யாப்பு (1) சிறுபான்மையோரின் நலன்காக்கும் நோக்குடன் கூடிய இரண்டாவது மன்றத்தை (மூதவையை) அகற்றியது; (2) அரசாங்க சேவை நியமனங்கள் தொடர்பான அலுவல்கள் அனைத்திலும் கண்டிப்பான முறையில் நடுநிலை பேண உத்தரவாதம் அளிக்கும் நோக்குடன் கூடிய சுதந்திர அரசாங்க சேவை ஆணையத்தை அகற்றியது; (3) நீதித்துறையின் சுதந்திரத்துக்கும், நேர்நெறிக்கும் உத்தரவாதம் அளிக்கும் நோக்குடன் கூடிய நீதிச் சேவை ஆணையத்தை அகற்றியது; (4) சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் கிடைக்காத தரப்புகளுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கும் நோக்குடன் அமர்த்திய நியமன உறுப்பினர்களை அகற்றியது; (5) சட்டவாக்கத்தை நீதித்துறை மீள்நோக்கும் படிமுறையை அகற்றியது; (6) பாரபட்சமான சட்டவாக்கத்தைத் தடுக்கும் நோக்குடன் 29வது பிரிவில் சேர்க்கப்பட்ட ஏற்பாட்டை அகற்றியது; (‘இலங்கை மக்களிடையே பற்றுறுதியுடன் நிலவும் உரிமைச் சமநிலையை இப்பிரிவு புலப்படுத்துகிறது; எந்த அடிப்படை நிபந்தனைகளின்படி தமிழ்த் தலைவர்கள் அரசியல்யாப்பை ஏற்றுக்கொண்டார்களோ அந்த அடிப்படை நிபந்தனைகளை இப்பிரிவு புலப்படுத்துகிறது’ என்று கோமறை மன்றம் விளம்பியதுண்டு)”.
அடுத்து நூலாசிரியர் தெரிவித்தவாறு அரசியல்யாப்பு மன்றத்தில் தமிழரசுக் கட்சி முன்வைத்த நான்கு அம்சக் குறிப்பினை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அது இப்படி அமைந்துள்ளது: “தமிழரசுக் கட்சியின் தலைமையில் தமிழ்ப் பிரதிநிதிகள் புதிய அரசியல்யாப்பில் (1) சிங்களமொழிக்கு நிகராகவும் அரசியல்யாப்பு வாரியாகவும் தமிழ்மொழிக்கு சமத்துவம் அளிக்கும்படியும்; (2) மதச்சார்பற்ற அரசை அமைக்கும்படியும்; (3) அரசாங்க கட்டமைப்புகளைப் பன்முகப்படுத்தும்படியும்; (4) பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த தமிழ்த் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாகுபாடின்றிக் குடியுரிமை அளிக்கும்படியும் வேண்டுகோள் விடுத்து முன்வைத்த நான்கு அம்சக் குறிப்பும் கூட இலங்கைச் சமசமாசக் கட்சியினதும், பொதுவுடைமைக் கட்சியினதும் தலைவர்கள் உட்பட அரசியல்யாப்பு மன்றத்தில் அங்கம் வகித்த ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகளால் நிராகரிக்கப்பட்டது. அதாவது இலங்கையை ஓர் ‘இறைமைவாய்ந்த சுதந்திரக் குடியரசாக’ மாற்றிய புதிய அரசியல்யாப்பு அதே அரசை ‘இறைமைவாய்ந்த சுதந்திர’ அடைமொழியுடன் கூடிய ‘சிறி லங்கா’ எனப்படும் ஒற்றைச் சிங்கள பெளத்த அரசாக உறுதிபட ஒருமுகப்படுத்தியது. அதைவிட மோசம், ஒரு தலையாய இடதுசாரி அமைச்சர், அவர் ஒரு காலகட்டத்தில் மார்க்சிய புலமையாளர், ‘இரு மொழிகளுடன் கூடிய ஒரு நாட்டுக்காக’ வாதாடியவர், அவர் இனக்குழும தனித்துவத்தை மறுதலித்து, எல்லோரையும் ஒரே கட்டாகக் கட்டி சிறி லங்காவின் ‘குடிமக்கள்’ என்று முடிச்சுப் போட்டார். எனவே தமிழ் இளைஞர்கள் தீவிரம் கொள்வதற்கு ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அரசியலே அத்திவாரமிட்டது; தமிழ்மக்களால் நேசிக்கப்பட்ட, தமிழ்த் தலைவர்கள் அனைவருள்ளும் மிகவும் குடியாட்சி நெறிநின்று அமைதியை நேசித்த பண்பான தலைவரை, ஒரே ஐக்கிய நாட்டினுள் வாழும் தனது ஆசைக்கனவுக்கு ஒரு மாற்றுவழியை நாட வைத்தது. தனித் ‘தமிழ் அரசில்’ ‘தந்தை செல்வா’ அரசியல் புகலிடம் நாடினார். 1972 அக்டோபர் மாதம் காங்கேசந்துறை தொகுதிக்கான தனது நாடாளுமன்ற உறுப்புரிமையைத் துறந்தார். 1972ல் புகுத்தப்பட்ட குடியரசு அரசியல்யாப்பை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் ஓர் இடைத்தேர்தலில் அதனை எதிர்த்து அறைகூவல் விடுத்துப் போட்டியிடப் போவதாகத் தெரிவித்தார். சிறிமாவோ அம்மையாரின் தலைமையில் ஆட்சிபுரிந்த ஐக்கிய முன்னணி அரசு இடைத்தேர்தல் நடத்துவதை ஒத்திவைத்து வந்தது. அது தமிழ் இளைஞர்கள மேலும் உள்ளக்குலைவுக்கு உள்ளாக்கியது. 1973ம் ஆண்டு மல்லாகத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 12வது மாநாட்டில் முதல் தடவையாக ‘தனித் தமிழ் அரசு’ அமையும் வாய்ப்புக் குறித்து கருத்தூன்றி ஆராயப்பட்டது.
“ஈற்றில், 1974 மாசிமாதம், காங்கேசந்துறையில் இடைத்தேர்தல் நடத்த ஐக்கிய முன்னணி அரசின் தலைமைப்பீடம் முடிவுசெய்தது. பெருவாரியான மக்களின் ஆதரவுடன், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளுள் 72.55 விழுக்காட்டைப் பெற்று, வெற்றிவாகை சூடினார் செல்வா. இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் இற்றைவரையும் ஈட்டப்பட்ட பெரும்பான்மை வாக்குத்தொகையின் உச்சம் இதுவே. பொதுவுடைமைக் கட்சியின் யாழ்ப்பாணத் தலைவர் வ. பொன்னம்பலத்தை ஐக்கிய முன்னணி அரசாங்கம் போட்டிக்கு நிறுத்தியிருந்தது. 26.46 விழுக்காடு வாக்குகளை மட்டுமே அவர் ஈட்டிக்கொண்டார். தமிழ்த் தேசியவாத அரசியலின் பிதாமகராகிய தந்தை செல்வா 33 ஆண்டுகளாக அரசியலில் முன்னின்று, குடியாட்சி நெறிநின்று, செயற்பட்ட பின்னர் இவ்வுல்லிருந்து விடைபெறுவதற்கு ஆக 2 ஆண்டுகளுக்கு முன்னரே இத்தேர்தல் நடைபெற்றது. அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர், 30 ஆண்டுகளாகத் தமிழ் அரசியலில் முன்னின்று, குடியாட்சி நெறிநின்று, ஓயாது பாடுபட்ட பின்னர் தமிழ் மக்களின் மனக்குறைகளுக்கு, அவர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு ஒரே மாற்றுவழியாகத் ‘தனித் தமிழ் அரசை’ ஏற்கும் நிர்ப்பந்தத்துக்கு அவரை உள்ளாக்கியோர் சிங்களத் தலைவர்களே”.
“ஏற்கெனவே தமிழ்மக்களுக்கு உரித்தாக்கப்பட்ட இறைமையைக் கையாண்டு தமிழ் ஈழ தேசம் விடுதலை பெறவேண்டுமென இடப்பட்ட ஆணையாகவே இத்தேர்தலில் அளிக்கப்பட்ட தீர்ப்பினை நான் கருதுகின்றேன் என்பதை எனது மக்களுக்கும், நாட்டுக்கும் நான் அறிவிக்க விரும்புகிறேன்” என்று இடைத்தேர்தல் வெற்றியை ஏற்று விடுத்த அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
நடந்ததை இந்நூல் தெளிவாக விளக்கியுரைக்கிறது. தான் ஒரு சிங்கள ஊடகராக இருந்தாலும், தன்னை ஒரு சிங்களவராகக் கருதாமல், ஒரு மனிதப் பிறவியாகக் கருதும் ஒருவர் நடுநிலை நின்று நடந்ததைத் தெரிவிக்கும்பொழுது, தேசியவாதிகள் எனப்படும எங்கள் கடும் பிற்போக்குச் சிங்களத் தேசியவாதிகள் அதைக் கவனிக்க வேண்டும். நான் உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்பிய பல சங்கதிகளை குசல் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவற்றை நானே குறிப்பிட்டால், என்னை ஒரு தீவிரவாதி என்றும், புரளி கிளப்புவோன் என்றும் ஒருவர் கூறக்கூடும். குசலுக்கு எதிராக அந்த அடைமொழிகள் பயன்படுத்தப்படுவதாக நான் எண்ணவில்லை. நாங்கள் இருவரும் உண்மையைக் கூறுகின்றோம்; உண்மையை அன்றி வேறெதையும் கூறவில்லை.
நான் இன்னும் வாசித்து முடிக்காத நூல் முழுவதற்கும் உள்ளே உங்களை வழிநடத்திச் செல்வது எனது நோக்கம் அல்ல. எனினும் இன்று இந்த நாட்டில் நிலவும் முட்டுக்கட்டைக்கு இட்டுச்செல்லும் வண்ணம் கடந்தகால அரசியலில் நிகழ்ந்த கோமாளித்தனங்களை பொதுமக்கள் நினைவுகூர்வது நலம் பயக்கும். குசலின் நூலிலிருந்து அவற்றை நான் மேலோட்டமாக எடுத்துக்காட்டியுள்ளேன்.
இது காலத்துக்கேற்ற வெளியீடு. “ராஜபக்சா: சிங்கள சுயபடம்” என்று இதில் பொறிக்கப்பட்டாலும் கூட, இது அண்மைக்கால வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த நூல். ஆயுதக் கிளர்ச்சிக்கு இட்டுச்சென்ற கட்டங்களை இந்நூல் தடமொற்றிச் செல்கின்றது. சுதந்திர தமிழர் தேசத்துக்கான அழைப்பு முதன்முதல் செல்வாவிடமிருந்தே வெளிவந்தது; பிரபாகரனிடமிருந்தல்ல.
அத்தகைய நிலையில் மகிந்த ராஜபக்சா வகித்த பங்கு இந்த நூலின் இறுதிப் பந்தியில் குறிப்பிடப்பட்டமை பொருத்தமே. ராஜபக்சா ஆட்சிபுரியாத இந்த இரண்டரை ஆண்டுகளும், முன்னர் அவர் ஆட்சிபுரிந்த ஆண்டுகள் போன்றவையே. ராஜபக்சாவில் மையம்கொண்ட சிங்களத்துவம் இன்னமும் சவாலுக்கு உள்ளாகாமல் நிலைத்துள்ளது என்கின்ற அளவுக்கே இந்நூலில் எழுதமுடியும் என்றுதான் எனக்குப் படுகிறது. ஒரு மதச்சார்பற்ற பன்மைச் சமூகத்தை நாடி வேறு மாற்றுவழிகள் ஆராயப்படாவிட்டால், அதே நிலை தொடரும். குடியாட்சி என்பது செயற்படாத செயல்முறையாக விளங்கும்.
“குடியாட்சிக் கருவிகளைக் கொண்டே குடியாட்சி கொல்லப்பட்டது. அடாவடித்தனம் ‘சட்டபூர்வமாக்கப்பட்டது’. அப்பட்டமான ஆட்சியதிகாரம் கோலோச்சியது. தன்னைத் தவிர ஏனைய அதிகாரபீடங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டுவதே அதன் உண்மையான் நோக்கம்” என்றார் அமெரிக்க நூலாசிரியரும், பேச்சாளரும், வானொலி நிகழ்ச்சி நெறியாளருமாகிய எரிக் மெதக்சாஸ். மகிந்த ராஜபக்சாவின் ஆட்சியில் என்ன நடந்தது என்பதை உணர்த்துவதற்கு குசல் சுட்டிக்காட்டும் மிகப்பொருத்தமான மேற்கோள் அது.
கடந்த கிழமை இறுதியில் மல்வத்தை, அஸ்கிரியை மகாநாயக்கர்களை நாங்கள் சந்தித்தமை பற்றிக் கூறிவிட்டு எனது உரையை முடித்துக்கொள்கின்றேன். மகாநாயக்கர்கள் இருவரும் எதிர்மாறான குணவியல்புகளின் திருவுருவங்கள். மல்வத்தை பீடத்தை விட அஸ்கிரிய பீடத்தின் உணர்வலைக்கே மகிந்த ராஜபக்சா மிகவும் நெருக்கமானவர் என்பது அவருக்குத் தெரியவந்திருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
மல்வத்தை மகாநாயக்கர் எங்களை உளமார வரவேற்றார். அவ்ர் மனிதாபிமானம் படைத்தவர். மக்களின் வேதனைகளைத் தணிப்பதில் அக்கறை கொண்டவர்.
அஸ்கிரியை மகாநாயக்கர் மூக்கை நுழைக்கும் போக்கை வெளிப்படுத்தினார். வணக்கத்துக்குரிய அஸ்கிரியை மகாநாயக்கரின் சுதந்திரத்தை ‘காரக சபா’ கட்டுப்படுத்துகிறதா என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியாது. அவரை நேரில் சந்திப்பதற்கு ‘காரக சபா’ உறுப்பினர்கள் என்னை அனுமதிக்கவில்லை. அவர்கள் எல்லோரையும் உயர்ந்த பீடத்திலும், என்னையும் எனது குழுவினரையும் தாழ்ந்த நிலையில் இடப்பட்ட மெத்தைகளிலும் அமர வைத்தார்கள். தமது சிங்கள பெளத்த உணர்வுகளை வெளிப்படுத்துவதில் அக்கறை எடுத்தார்கள். அவர்களிடம் தற்பெருமையும், கிட்டத்தட்ட முரட்டுப் பிடிவாதமும் புலப்பட்டன.
இணைப்பாட்சி என்றால் பிரிவினை என்று அவர்கள் எண்ணியிருக்கிறார்கள். இணைப்பாட்சி என்பது பிரிவினை அல்ல என்பதை உறுதிப்படுத்தி அண்மையில் உச்ச நீதிமன்று தீர்ப்பளித்ததையும், வெவ்வேறு கூறுகளை ஒருங்கிணைக்கும் விதங்களுள் ஒன்றே இணைப்பாட்சி என்பதையும் அவர்களுக்கு நான் சுட்டிக்காட்டினேன். 1930-40களில் பிரித்தானிய ஆணையாளர்களிடம் முதன்முதல் இணைப்பாட்சியை விதந்துரைத்தோர் கண்டிப் பெருமக்களே என்பதையும் நான் சுட்டிக்காட்டினேன். இணைப்பாட்சி ஊடாகத் தமது தனித்துவத்தைக் கட்டிக்காக்க விரும்புவதாக கண்டிப் பெருமக்கள் தெரிவித்தார்கள். அந்த விபரத்தில் அஸ்கிரியை மகாநாயக்கருக்கு நம்பிக்கை ஏற்பட்டதாகத் தெரியவில்லை. கடும்போக்கும் செருக்கும் கொண்ட அஸ்கிரியை நாயக்கர்களின் முகத்திரையை எங்களால் விலக்க முடிந்தால், இந்த நாட்டின் அரசியற் பிரச்சனைகளை எங்களால் விரைவில் தீர்க்க முடியும் என்று நான் உறுதிபட நம்புகின்றேன். அவர்கள் சிங்கள பெளத்தர்களிடையே மிகவும் வலிய பிரிவினராக விளங்குகின்றார்கள். அவ்வாறு விபரம் அறியும் அளவுக்கு எமது பயணம் எமக்குப் பயன்பட்டது.
சிங்கள பெளத்தர்களிடையே இயங்கும் கடும்போக்காளர்கள் எனப்படுவோரைச் நான் சந்திக்க விரும்புவதாக எப்பொழுதும் கூறி வந்திருக்கிறேன். அவர்களுள் சிலரை ‘காரக சபா’ உறுப்பினர்களிடையே கண்டுகொண்டேன். எமக்கு அவகாசம் கிடைத்தால், மல்வத்தை மகாநாயக்கர் போல் மனிதாபிமானிகளாக மாறும் வண்ணம் அவர்களது கடும்போக்கான நிலைப்பாட்டிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும் என்று நம்புகின்றேன்.
கூட்டிக் கழித்துப் பார்க்கும்பொழுது அவர்களது செருக்கு முழுவதும் செயற்கையானதாகவே தென்படுகின்றது. அது பொய் நம்பிக்கைகள், பிழையான ஊகங்கள், புரிவுத் திரிபுகள் மீது ஓங்கிய செருக்கு. உண்மை உரைக்கப்பட்டவுடன் அல்லது ஏற்கப்பட்டவுடன் தமது காழ்ப்பையும் நெடுமூச்சையும் விடுத்து புரிந்துணர்வும், அன்பும் மிளிரும் தமது பெளத்தமத அத்திவாரத்துக்கு அவர்கள் மீள்வார்கள்.
எனது உரையைப் பொறுமையுடன் செவிமடுத்த உங்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன். இன்று என்னை உங்கள் எல்லோருடனும் கலந்துகொள்ள அழைத்த குசலுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
நன்றி.
______________________________________________________________________
C. V. Wigneswaran at the launch of “Rajapakse the Sinhala Selfie”, a book by Kusal Perera,
Colombo Telegraph, 2017-09-13, தமிழ்: மணி வேலுப்பிள்ளை.
No comments:
Post a Comment