எனது கவிதைகள் ஈராக்-சிரிய இஸ்லாமிய அரச கருத்தியலுக்கு எதிரானவை

கவிஞர் அஹ்னாப் ஜசீம் 

அவர்களுடன் ஓர் உரையாடல்

 கவிஞர் அஹ்னாவ் ஜசீம்

 

செவ்வியாளர்

2020 மே 16ம் திகதி இளங்கவிஞர் அஹ்னாp ஜசீம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கமைய கைதுசெய்யப்பட்டார். அவர்மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன:

  1. “நவரசம்” எனும் அவரது கவிதைத் தொகுதியின் மூலம் இஸ்லாமிய தீவிரவாதத்தை அவர் பரப்பினார்.

  2. சட்டவாளரும், மனித உரிமைச் செயலருமாகிய ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவுடன் தொடர்பு வைத்திருந்தார்.

18 மாத தடுப்புக்காவலின் பின்னர் அவர் விடுதலையானார்.

ஹெஜாஸ் ஹிஸ்புல்லா

நிஷான் ஹேவகே: உங்கள் விபரம், குடும்பம், கல்வி பற்றிக் கூறுங்கள்.

அஹ்னாவ் ஜசீம்: ஊர் மன்னார். உடன்பிறப்புகள் நால்வர். அப்பா விவசாயி. அம்மா வீட்டோடு. 1990ல் போரினால் கல்பிட்டிக்கு இடம்பெயர்ந்தோம். நான் 1995ல் பிறந்தேன். க. பொ. த. (சாதாரணம்) வரை கல்பிட்டியில் படித்தேன். 2012ல் மன்னார் திரும்பினோம். பேருவளை ஜமியா நலீமியா இஸ்லாமிய கல்லூரியில் உயர்கல்வி பயின்றேன். 2014ல் க.பொ.த (உயர்தரம்) தேர்வு எழுதினேன். 2019 மார்ச் 30 வரை அங்கு கல்வி கற்றேன். 

 எப்படி ஒரு கவிஞரானீர்கள்? 

பள்ளிக்கூடத்தில் கவிதையிலும், எழுதுவதிலும் நாட்டம் இருந்தது. நலீமியா கல்லூரியில் சமூக அநீதிகள் பற்றியும், சமயங்களை, இனங்களை, குழுமங்களை அவை பாதிப்பது பற்றியும் வாசித்தேன். அங்கு கலை, அரசறிவியல், சமூகவியல் பற்றி எல்லாம் கற்றேன். நான் உவந்த பாடங்கள் இலக்கியம், மொழி இரண்டுமே. காலப்போக்கில் ஒரு கவிஞர் எனும் அங்கீகாரம் எனக்கு கிடைத்தது. 

 “நவரசம்” கவிதைத் தொகுதி, அதை எழுதிய சூழ்நிலை பற்றிக் கூறுங்கள்.

நவரசம் என்பது: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி எனும் 9 சுவைகள். பேருவளையில் சமுக அநீதிகள், மனித உரிமைகள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிக் கற்றறிந்து எழுதிய கவிதைகள் அவை. 2017ம் ஆண்டு மன்னாரில் “நவரசம்” வெளியிடப்பட்டது.  

நீங்கள் கைதுசெய்யப்பட்ட சூழ்நிலை பற்றிக் கூறுங்கள்.

2019ல் மதுரங்குழி பன்னாட்டு சிறப்புக் கல்லூரி ஒன்றில் தங்கி, தமிழ் கற்பித்து வந்தேன். எனது ஆவணங்கள் சிலவற்றையும், நூலையும் கல்லூரிக்குரிய வசிப்பிடத்தில் வைத்திருந்தேன். 3 மாதம் கழித்து அவற்றை அங்கேயே விட்டுவிட்டு வெளியேறினேன். 2020 பங்குனியில் கொள்ளநோய் பரவியதை அடுத்து, மன்னார் திரும்பினேன். சட்டவாளர் ஹெஜாஸ் ஹிஸ்புல்லா கைதுசெய்யப்பட்டது, புத்தளத்தில் காவல்துறையின் சோதனையில் “நவரசம்” எடுக்கப்பட்டது, அது தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டது பற்றி எல்லாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.  

2020மே 16ம் திகதி குற்றவியல் புலன்விசாரணை திணைக்களத்து அதிகாரிகள் இருவர் வீடுதேடிவந்து “நவரசம் நீர் எழுதிய நூலா?” என்று கேட்டர்கள். “ஓம்” என்றேன். அதன் பிரதிகளையும், எனது அலைபேசியையும், மடிக்கணினியையும் கேட்டு வாங்கினார்கள். எனது நூல் அடுக்குகளை சல்லடை போட்டார்கள். ஏறத்தாழ 50 நூல்களை எடுத்துக்கொண்டார்கள். அரைவாசி மரபார்ந்த இலக்கிய நூல்கள். அவை தீவிர கருத்துகள் பொதிந்தவை என்றார்கள். மூன்று நாள் புலன்விசாரணைக்கு ஆயத்தமாகும்படி கூறி கூட்டிச் சென்றார்கள். 

எங்கே கொண்டுபோனார்கள்? அங்கே என்ன நடந்தது? 

வவுனியாவுக்கு கொண்டுபோய், இரவு முழுவதும் “நவரசம்” பற்றி கேள்வி கேட்டார்கள். அது தீவிரவாத, பயங்கரவாத கவிதை நூல் என்றார்கள். நான் அவற்றுக்கு எதிரானவன் என்று சொல்லி, அக்கவிதைகளை வாசித்து விளக்கமளிக்க முயன்றேன். சஹரன் ஹஷிம் நடத்திய வகுப்புக்குப் போனதாக தாடிக்கார அதிகாரிகள் இருவர் தெரிவித்தார்கள். நான் பொய் சொல்லுவதாகவும், என்னை கொழும்புக்கு கொண்டுபோவதாகவும், என்னை நாலு ஆண்டுகளுக்கு இருட்டறையில் வைக்கப்போவதாகவும் தெரிவித்தார்கள். நான் தீவிரவாத கருத்துகளைப் பரப்பபினேன்,  சஹரன் ஹஷிம் நடத்திய வகுப்புகளில் பங்குபற்றினேன் என்பதை ஒப்புக்கொள்ளும்படி கேட்டார்கள். மூன்றாம் நாள் என்னை கொழும்புக்கு கொண்டுபோனார்கள். 

நீங்கள் பட்ட அவலங்கள் பற்றிக் கூறுங்கள்.    

“உமக்கும் ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கும் என்ன தொடர்பு? அவரிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு மாணவர்களிடையே தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் பரப்புகிறீரா? நலீமியா கல்லூரியில் பயங்கரவாதம் படித்தீரா?” என்றெல்லாம் கேட்டர்கள்.

அங்கு நாள் முழுவதும் விலங்கிடப்பட்டிருந்தேன். முதல் இரு கிழமைகளும் தனிக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்தேன். இரவில் ஒரு பாதையோரம் என்னை ஒரு கதிரையுடன் சேர்த்து விலங்கிட்டு வைத்திருந்தார்கள். பாதைவழியே போவோர் என்னை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி என்று குறிப்பிட்டார்கள். வலுவிழந்த நிலையில் நான் வாய் திறக்கவில்லை. 

14 நாட்களுக்குப் பிறகு என்னை 6ஆம் மாடி அறை ஒன்றுக்கு மாற்றினார்கள். 5 பேர் தங்கக்கூடிய அறையில் 11 பேர் அடைக்கப்பட்டிருந்தார்கள். தொடர்ந்து 5 மாதங்களாக என்னை விலங்கிட்டு வைத்திருந்தார்கள். விலங்கிட்ட நிலையிலேயே உறங்க வைத்தார்கள். படுமோசமான உணவு பரிமாறினார்கள். 

சிறுநீர் கழிக்க 6ம் மாடியிலிருந்து 2ம் மாடிக்கு இறங்க வேண்டியிருந்தது. காலையிலும் மாலையிலும் மற்றவர்கள் கழிப்பறையை பயன்படுத்திய பின்னரே நான் பயன்படுத்த முடியும். ஆதலால் தண்ணீர் குடிப்பதை நான் குறைத்துக்கொண்டேன்.  உளவதை படுமோசம். 

கைவிலங்குடன் முழந்தாளிட வைத்து, ஹிஸ்புல்லாவுக்குப் பணியாற்றியதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், அல்லாவிட்டால், 20 ஆண்டுகள் அடைத்து வைத்திருப்போம் என்றும் அச்சுறுத்தினார்கள். 

ஒருதடவை எனது கண்ணாடியைப் பறித்துவிட்டு, எனது கவிதை நூலை வாசிக்கச் சொன்னார்கள். வாசிக்க முடியாமல் நான் கண்ணீர் சிந்தினேன். தீவிர, பயங்கர வாதங்களுக்கு கட்டுண்டபடியால்தான் நான் கண்ணீர் சிந்துவதாகத் தெரிவித்தார்கள். 

இதெல்லாம் நீங்கள் எதிர்பார்த்தது தானா? 

நான் பொறுப்பேற்க முடியாத ஒன்றுக்காக என்னைப் பிடித்து அடைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் மணம் முடித்து, மேற்பட்டப் படிப்பை தொடரவும், கற்பித்தல் பணியை விரிவுபடுத்தவும், எனது கவித்துவத்தை மேம்படுத்தவும்  எண்ணியிருந்தேன். அவை எல்லாம் தடங்கலுக்கு உள்ளாகின. எனினும் இனிமேல் நான் வெற்றியீட்டல் திண்ணம். 

தீவிர, பயங்கர வாதங்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் என்பவற்றை எதிர்த்து கவிதைகள் எழுதிய உங்களை ஏன் பிடித்து அடைத்தார்கள்? 

என்னை உறுத்தும் கேள்வியும் அதுவே. வாழ்வின் முரண் அணி இது. ஆயுதம் ஏந்தியோர் ஆயுதத்துக்கு இரையாகி மடிவர் என்று ஒரு கவிதையில் எழுதியிருக்கிறேன். ஆயுதம் இன்றியே போராடவும், கல்வியில் புரட்சி காணவும், நல்மாற்றம் கொணரவும் வேண்டும் என்று எழுதியிருக்கிறேன்.  அதை விளக்கும் பொருட்டு, ஒருவர் துவக்கு வைத்திருக்கும் படம் ஒன்றை கவிதையுடன் இணைத்தேன். மரம் வெட்டக்கூடாது என்பதற்கான கவிதையில் ஒருவர் மரம் வெட்டும் படத்தை இணைப்பது போல.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், தற்கொலைக் குண்டுதாரிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

என்றுமே வன்முறை புகட்டாத இஸ்லாத்தின் பெயரால் ஒரு குழுமம் புரிந்த கொடிய படுகொலை கண்டு வருந்தினேன். முஸ்லீம் சமூகம் முழுவதற்கும் எதிரான கண்ணோட்டம் ஒன்றை அவர்கள் தோற்றுவித்துள்ளார்கள். இஸ்லாம் என்றுமே வன்முறையை ஊக்குவிப்பதில்லை. இஸ்லாத்தில் தீவிர, பயங்கர வாதங்களுக்கு இடமில்லை. 

சமூகப் பொறுப்பு வாய்ந்த கவிஞன் - உண்மையான கலைஞன் - என்ற வகையில் அத்தாக்குதல் நடந்து அடுத்த நாள், நான் அதைக் கண்டித்து, இஸ்லாத்தை அது முற்றிலும் தவறாக எடுத்துரைக்க வழிவகுக்கும் என்று பொருள்படும் கவிதை ஒன்றை எழுதி, எனது வலைப்பூவில் இட்டேன். 

 பயங்கரவாத தடுப்புச் சட்டம் பற்றி என்ன நினக்கிறீர்கள்? 

அது அறவே நீக்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன். அதற்கமைய தகுந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் பலர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றுக்கு கொண்டுசெல்லப்படாமல்,  ஏறத்தாழ 18 மாதங்கள் அடைத்து வைக்கப்படுகிறார்கள். குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளும்படி பெரிதும் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அண்மையில் இக்கொடிய சட்டத்துக்கு முஸ்லீங்கள் பலர் பலியாகியுள்ளார்கள். இச்சட்டத்தினால் தமிழர்கள் அடைந்திருக்கக்கூடிய வேதனையையும் அதிர்ச்சியையும் என்னால் எண்ணிப்பார்க்க முடிகிறது. 

இந்தியாவில் இந்து தீவிரவாதம் நிலவுவது போல, இலங்கையில் சிங்கள தீவிரவாதம் நிலவுவது எமக்குத் தெரியும். வேறு பல சமய தீவிரவாத குழுமங்கள் இலங்கையில் இயங்கி வருகின்றன. முஸ்லீம் தீவிரவாதம் ஆபத்தானது என்று அடுத்தடுத்து அரசாங்கங்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன. உங்கள் எண்ணம் என்ன? 

எந்தவித சமய, இன தீவிரவாதத்தையும் என்றுமே நான் ஏற்றதில்லை. ஆனால் அரசியல்வாதிகள் தமது சுயநலத்துக்காக தீவிரவாதத்தை பயன்படுத்தி மக்களை பிளவுபடுத்துகிறார்கள். சிறுபான்மைச் சமூகங்களுள் அவர்களின் தாக்கத்துக்கு உள்ளாகக்கூடிய தரப்புகள் தீவிரவாதத்தை நோக்கி தள்ளப்படுகிறார்கள். அதற்கு தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பிரிவினை இயக்கம் நல்லதோர் எடுத்துக்காட்டு. தமிழருக்கு எதிரான நெடுங்கால இனவாதத்தாலும், பாரபட்சத்தாலும் இளந்தலைமுறையினர் சிலர் தமது விடுதலைக்கும், வளம்பட்ட வாழ்வுக்கும் திவாலான பயங்கரவாத முறைகளே வழிவகுக்கும் என்று கருதினார்கள். அவற்றால் ஈர்க்கப்பட்டார்கள். 

இன, மத, சமூகநிலை எனும் பேதமின்றி நாட்டு மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டால், வன்முறைக்கு இட்டுச்செல்லும் சமய தீவிரவாதத்தை ஒழிக்க முடியும். அரசியல்வாதிகள் ஆட்சியைக் கைப்பற்றி, அதில் நிலைகொள்வதற்காக பெளத்த தீவிரவாதத்தை கிளப்பி வருகிறார்கள். 

இந்த நாடு எல்லா இன, மத சமூகங்களுக்கும் உரியது. ஆனால் அடுத்தடுத்து அரசாங்கங்கள் தமிழர்களை முதலாம்தரக் குடிகளாக நடத்தத் தவறியதை நாம் கண்டுள்ளோம். தற்பொழுது முஸ்லீம் சமூகத்துக்கு பாரபட்சம் காட்டத் துவங்கியிருக்கிறார்கள். இந்த நாடு சிங்கள சமூகத்துக்கு மட்டுமே உரியது என்று சிங்கள தீவிரவாதிகள் நினைக்கிறார்கள். உங்கள் எண்ணம் என்ன?

அடுத்தடுத்து அரசாங்கங்கள் ஆட்சியைக் கைப்பற்றி, நிலைகொள்வதற்காக தீவிர தேசிய உணர்வுகளையும் இனவாதத்தையும் பயனபடுத்தி வந்துள்ளன. இனவாதத்தையும், தீவிரவாதத்தையும் நம்பியுள்ள அரசுகள் அவற்றை ஒழிக்க விரும்பவில்லை. முதலில் அவை தமிழருக்கு எதிராக இனவாத வன்முறையை பயன்படுத்தின. அதனால் பயங்கரவாதம் எழுந்தது. தற்பொழுது முஸ்லீம் சமூகத்தைன் மீது இலக்கு வைத்துள்ளன. ஒருசில பெளத்த தீவிரவாத குழுமங்களின் உதவியுடன் பெரும்பான்மை சமூகத்தை ஏமாற்றி ஆட்சியில் தொடர்ந்து அமர்ந்திருப்பதற்காக ஆண்டுதோறும் அவர்கள் இனவாதத்தை பரப்பி வருகிறார்கள். இந்த நாடு எல்லா இனங்களுக்கும் உரியது. இது பல்மத வரலாறு படைத்த நாடு. எனவே எல்லா மதங்களும், இனங்களும் சரிநிகராக நடத்தப்பட வேண்டும். அரசியல்யாப்பில் மதச்சார்பின்மை பொறிக்கப்பட வேண்டும். கண்ணியத்துடன், சமய நம்பிக்கையுடன் அல்லது சமய நம்பிக்கையின்றி, சட்டத்துக்கு அமைந்து விரும்பிய ஆடை அணிந்து வாழும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அத்தகைய சூழ்நிலையில் ஓர் அரசு அதன் சொந்த மக்களுக்கு தீவிர, பயங்கர வாதிகள் என்று முத்திரை குத்துவது எங்ஙனம்? ஆட்சியில் நிலைகொள்வதற்காக அரசியல்வாதிகள் பிற மதங்கள், இனங்கள் மீது காழ்ப்பினை ஊட்டி வருகிறார்கள். 

நீங்கள் இளவயதில் கடுஞ் சூழ்நிலைகளை சகித்துக் கொண்டீர்கள். ஒரு கவிஞர் என்ற வகையில் உங்கள் கலைத்துவ யாத்திரையின் எதிர்காலம் எப்படித் தென்படுகிறது?

எனக்கு நேர்ந்த ஒவ்வொன்றையும் நான் தடங்கலாகக் கொள்ளவில்லை. ஒரு கவிஞன் என்ற வகையில் என்னால் சமூகத்துக்கு செய்யக்கூடியதை உணர்ந்துகொள்ளக் கிடைத்த வாய்ப்பு அது.  அரசினையும், மனிதகுலத்துக்கு எதிராகப் புரியப்படும் அநீதிகளையும் தட்டிக்கேட்க நான் அஞ்சவில்லை. அமைதிகாக்கும் மக்களின் உரிமைகளுக்காக ஓர் எழுத்தாளனால் எழுதுகோல் ஏந்தி முழங்கவும், போராடவும் முடியும்.  

மக்களின் உரிமகளுக்காக நாம் அயராது பாடுபட வேண்டும். தற்பொழுது சில இலக்கிய நூல்களை நான் வாசித்து வருகிறேன். தொடர்ந்து எதிர்காலத்திலும் ஒரு கவிஞனாக விளங்கவே எண்ணியுள்ளேன். எழுத்து என் துறையல்ல, பொழுதுபோக்கு. 

வேறு ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

மனிதகுலம் முழுவதையும் விளித்து நான் விடுக்கும் செய்தி இது: நாம் பேதமின்றி இணைந்து அநீதியை எதிர்த்துப் போராட வேண்டும். சமவுடைமைக் குடியரசின் இலக்குகளை நாம் எய்தவேண்டும். எனினும் மக்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் ஆயுதம் ஏந்த எதுவித நியாயமும் இல்லை. எமது அற்ப பேதங்களை பொருட்படுத்தாமல் நாம் ஒரே நாட்டவர்களாக கூடிவாழ வேண்டும். 

எனது உரிமைகளுக்காகப் போராடிய சட்டவாளர்களுக்கும், கடந்த கொடுங்காலப்பகுதியில் எனக்குத் துணைநின்ற அனைவருக்கும் இத்தருணம் நான் நன்றிநவில விழைகின்றேன். 

சஞ்சய வில்சன், கனக ஈஸ்வரன், அஹ்னாப் ஜசீம், இலக்‌ஷ்மணன் ஜெயகுமார்

உச்ச நீதிமன்ற முன்றலில் தனது சட்டவாளர் அணியுடன் கவிஞர் 

In conversation with Poet Ahnaf Jazeem: “The poems I wrote were against the ISIS ideology,” 

Daily Mirror, Colombo, 11 March 2022, translated by Mani Velupillai, 2022-03-12.

https://www.dailymirror.lk/plus/In-conversation-with-Poet-Ahnaf-Jazeem-The-poems-I-wrote-were-against-the-ISIS-ideology/352-232803

No comments:

Post a Comment