டொனமூர் திட்டத்தை எதிர்த்த

யாழ் இளைஞர் பேரவை

காந்தியமும், இந்திய விடுதலைப் போராட்டமும் யாழ் இளைஞர் பேரவை உட்பட இலங்கையர் அனைவரையும் ஆட்கொண்டதில் ஐயத்துக்கோ வியப்புக்கோ இடமில்லை. எனினும் இந்தியாவில் நிகழ்ந்தது போன்ற விடுதலைப் போராட்டம் இலங்கையில் நிகழவில்லை.

ஊடகர் ஏ. எம். நதானியல் கூறியது போல், பிரித்தானியர் இந்தியாவை “ஒரு முரண்டுபிடிக்கும் ஆசாமி” போலவும், இலங்கையை “ஒரு தத்தெடுத்த பிள்ளை” போலவும் நடத்தினர். முரண்டுபிடிக்கும் ஆசாமி” போல் நடத்தப்பட்ட இந்தியாவில் விடுதலைப் போராட்டம் தவிர்க்க முடியாதது. தத்தெடுத்த பிள்ளை” போல் நடத்தப்பட்ட இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்கள் ஊடாக  விடுதலையை நோக்கி முன்னகர முடிந்தது.

காந்தி இலங்கை வந்த அடுத்தநாள், அதாவது 1927 நவம்பர் 13ம் திகதி, பிரித்தானிய அரசினால் அனுப்பிவைக்கப்பட்ட டொனமூர் ஆணைக்குழுவும் அங்கு வந்திறங்கியது. ஆணைக்குழு விதந்துரைத்தவாறு (1) பால், வகுப்பு வேறுபாடின்றி இலங்கையர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கவும்; (2) இனவாரி தேர்தல்தொகுதிகளை ஒழித்து, புலவாரி தேர்தல்தொகுதிகளைப் புகுத்தவும்; (3) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அரச மன்றம் (State Council), அமைச்சரவை என்பவற்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

முழு விடுதலை முழக்கம் எழுப்பிய ஜே. வி. செல்லையா, ஹன்டி பேரின்பநாயகம், கே. பாலசிங்கம், எம். எஸ். பாலசுந்தரம், பி. கந்தையா, டி. என். சுப்பையா, ஜே. முத்துசாமி, டி. சி. இராசரத்தினம், எம். எஸ். இளையதம்பி, பி. நாகலிங்கம் உள்ளடங்கிய யாழ் இளைஞர் பேரவை மேற்படி சீர்திருத்தங்கள் பொதிந்த டொனமூர் ஆணைக்குழுவின் அரசியல்யாப்பினை முற்றுமுழுதாகப் புறக்கணித்தது. 1931 மே 4ம் திகதி தேர்தல் நடப்பதற்கு ஒரு கிழமைக்கு முன்னர் (1931 ஏப்பிரில் 25ம் திகதி) யாழ் இளைஞர் பேரவை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானம் இது:


சுதந்திரம் ஒவ்வொருவரதும் களையவொண்ணாத பிறப்புரிமை என்று இந்த மாநாடு கருதுகிறது. இந்த நாட்டின் இளைஞர் தமது நாட்டின் சுதந்திரத்தை ஈட்டுவதற்கு தமது உயிரை அர்ப்பணிக்கும்படி இந்த மாநாடு வேண்டிக்கொள்கிறது. சுதந்திரம் ஈட்டுவதற்கு டொனமூர் அரசியல்யாப்பு எதிரிடையாக அமைவதால், அந்த யாப்புத் திட்டத்தைப் புறக்கணிக்கவும் இப்பேரவை உறுதிபூணுகிறது.


1931 மே 8ம் திகதி இளைஞர் பேரவை யாழ்ப்பாணத்தில் நடத்திய மாபெரும் கூட்டத்தில், “அரச மன்றத்தை புறக்கணிக்குமாறும், உடன் சுதந்திரம் ஈட்டப் பாடுபடுமாறும் இலங்கை மக்களிடம் கேட்டுக்கொள்ளும் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. டொனமூர் ஆணைக்குழுவின் அரசியல்யாப்பினைப் புறக்கணிக்கும்படி தமிழ்த் தலைவர்களுக்கு அது நெருக்குதல் கொடுத்தது. பெரும்பாலான வேட்பாளர்கள் அந்த நெருக்குதலுக்கு அடிபணிந்தார்கள். யாழ் இளைஞர் பேரவையின் நெருக்குதலுக்கு யாழ் குடாநாடு மட்டுமே அடிபணிந்து முழுப்புறக்கணிப்பில் ஈடுபட்டது. ஆனால் ஜி. ஜி. பொன்னம்பலம் அந்த நெருக்குதலை ஒரு கெலி (“whim”) என்று கேலிசெய்து நிராகரித்தார்.


பெரும்பான்மைப் பலம் கொண்ட சிங்கள மக்கள் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொண்ட டொனமூர் சீர்திருத்த யாப்பினை சிறுபான்மை இனத்தவராகிய (யாழ் குடநாட்டுத்) தமிழரைக் கொண்டு முற்றுமுழுதாகப் புறக்கணிக்கச்செய்த தமது நடவடிக்கையை (குளிக்கவார்த்த நீருடன் சேர்த்து குழந்தையை வீசிய நடவடிக்கையை) ஒரு மாபெரும் வெற்றியாக  யாழ் இளைஞர் பேரவை கொண்டாடியது.

புறக்கணிப்பில் ஈடுபடும்படி தென்னிலங்கைத் தலைவர்களுக்கும் யாழ் இளைஞர் பேரவை வேண்டுகோள் விடுத்தது. டொனமூர் ஆணைக்குழுவின் சீர்திருத்தங்கள் இலங்கையை தன்னாட்சிக்கு இட்டுச்செல்வதாகக் கருதிய தென்னிலங்கைத் தலைவர்களுக்கு அது ஒரு விசித்திரமான வேண்டுகோளாகவே தென்பட்டது.

இலங்கையர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கும் டொனமூர் திட்டம் இந்திய விடுதலை எனும் பேராபத்துக்கு வழிவகுக்கும்” என்று சேர்ச்சில் போன்ற பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் கர்ச்சித்தார்கள். அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது Casting pearls before swine (குரங்கின் கையில் பூமாலை கொடுப்பதை க்கும்) என்றார் பொன் இராமநாதன்! சுதந்திரம் ஈட்டுவதற்கு டொனமூர் அரசியல்யாப்பு எதிரிடையாக அமைவதால்,” அதை யாழ் இளைஞர் பேரவை எதிர்த்துப் போராடியது. எம்மை தொடர்ந்தும் கட்டியாள விரும்பிய ஏகாதிபத்தியவாதிகளும், அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவதை எதிர்த்த இராமநாதனும், முழு விடுதலை கோரிய யாழ் இளைஞர் பேரவையும் (Jaffna Youth Congress) டொனமூர் திட்டத்துக்கு எதிராக ஒரே நிலைப்பாட்டை எடுத்தமை வியக்கத்தக்கது!


டி. எஸ். சேனநாயக்கா, பண்டாரநாயக்கா, டி. பி. ஜயதிலகா, . . குணசிங்கா, பிரான்சிஸ் டி சொய்சா, ஜி. . டி சில்வா, ஈ. டபிள்யு. பெரேரா, மட்டுமல்ல, என். எம். பெரேரா, எஸ். . விக்கிரமசிங்கா, பிலிப் குணவர்த்தனா போன்ற இடதுசாரித் தலைவர்கள் கூட டொனமூர்  ஆணைக்குழுவின் சீர்திருத்த யாப்பினை வரவேற்று, தேர்தலில் வென்று, அரச மன்றம் புகுந்தார்கள். கொழும்பு வடக்கில் ஆர். சரவணமுத்துவும், திருகோண்மலை-மட்டக்களப்பில் எம். சுப்பிரமணியமும், மன்னாரில் எம். ஆனந்தனும், அட்டனிலிருந்து பெரி சுந்தரமும், தலவாக்கொல்லையிலிருந்து பி. வைத்திலிங்கமும் அரச மன்றம் சென்றார்கள்.

1944ல் இலங்கை வந்த சோல்பரி ஆணைக்குழு விதந்துரைத்தவாறு 1947ல் இலங்கைக்கு ஆள்நிலப்பதம் (dominion status) அளிக்கப்பட்டது. ஆள்நிலப்பதம் என்பது பிரித்தானியாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட தன்னாட்சி ஆகும். அதுவரை முழு விடுதலை கோரிய யாழ் இளைஞர் பேரவை இப்பொழுது அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டது. அதன் முன்னணித் தலைவர்கள் பாலசிங்கம், பேரின்பநாயகம் இருவரும் தமது கட்டுப்பணத்தை இழந்தார்கள்! அத்துடன் பேரவையின் கதை முடிவடைந்தது.

1929ல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் இந்தியாவுக்கு முழு விடுதலை கோரிய வேளையில் ஆள்நிலப்பதம் கொடுக்கும்படி ஜின்னா (பிரித்தானிய பிரதமராகிய) ராம்சே மைக்டானல்டிடம் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சி தொடரும்வரை மதவாரியாக நாடு பிளவுபட வாய்ப்பில்லை; ஆனால் இந்தியாவுக்கு முழு விடுதலை அளித்தால், பெரும்பான்மைப் பலம் கொண்ட இந்துக்களுக்கு சிறுபான்மையோராகிய முஸ்லீங்கள் கட்டுண்டு வாழ நேரும் என்று ஜின்னா கருதினார்.

காந்தியின் தலைமையில் காங்கிரசின் போராட்டம் முழு விடுதலையை நோக்கி முன்னகரவே, பாகிஸ்தான் எனும் தனிநாட்டுக் கோரிக்கையை நோக்கி ஜின்னாவும் முன்னகர்ந்தார். 1940ல் பிரிவினை முழக்கத்தை எழுப்பினார். 1947ல் பிரித்தானியரின் உடந்தையுடன் பாகிஸ்தானை தோற்றுவித்தார்.

இந்தியாவில் முழு விடுதலையினால் பெரும்பான்மைப் பலம் கொண்ட இந்துக்களுக்கு முஸ்லீம் சிறுபான்மை கட்டுப்பட நேரும் என்று ஜின்னா எண்ணினார். இந்திய முஸ்லீங்களின் கண்ணோட்டத்தை விடுத்து, இந்திய இந்துக்களின் கண்ணோட்டத்தைக் கைக்கொண்ட இராமநாதன், பொன்னம்பலம் முதலிய இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் சிங்களப் பெரும்பான்மைக்கு தமிழ்ச் சிறுபான்மை கட்டுப்பட நேரும் என்று எண்ணியதில்லை. ஆதலால் அன்றைய இலங்கையில் பிரிவினைக் கோரிக்கை எழவில்லை.

1948ல் இலங்கை முழு விடுதலை அடைந்த கையோடு 10 இலட்சம் தமிழ்மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. வட-கீழ் புலங்களில் தென்னிலங்கையர் குடியேற்றப்பட்டனர். 1956ல் தனிச்சிங்களச் சட்டம் புகுத்தப்பட்டது. 1972ல் பெளத்தம் அரச மதமாக்கப்பட்டது. பல்கலைக்கழக கல்வியில் தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது. 1958 முதல் சிறுபான்மையோர் படுகொலைக்கு உள்ளாகி வந்தார்கள்…

இதில் உள்ள வேடிக்கை என்னவெனில், யாழ் இளைஞர் பேரவை கோரிய முழு விடுதலை பெரும்பான்மை இனத்தவரையே சென்றடைந்தது. தம்மை வந்தடைந்த முழு விடுதலையைக் கொண்டு சிறுபான்மையோரை  அவர்கள் அடிமை கொண்டார்கள். ஈற்றில், அதாவது 1976ல், தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்தது. அதன் பிறகு நடந்தது வேறு கதை.

மணி வேலுப்பிள்ளை, 2023-04-20.

உசாத்துணை:

Report of the Donoughmore Commission, 1928.

John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission, 1923.

Sri Lanka Reader, Edited by John Clifford Holt, Duke University Press, London, 2011.

Ishtiaq Ahmed, Jinnah: His Successes, Failures and Role in History, Penguin, 2020.

No comments:

Post a Comment