நான் காணும் கனவு

 

மார்ட்டின் லூதர் கிங்
1963-08-28  

இன்று இப்பேரணியில் உங்களுடன் பங்குபற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். எமது நாட்டு வரலாற்றில் இது மிகப்பெரும் சுதந்திரப் பேரணி என்று பொறிக்கப்படப் போகிறது.

 

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஒரு மகத்தான அமெரிக்கர் எமது விடுதலைப் பிரகடனத்தில் ஒப்பமிட்டார். ஒரு சின்னமாய் விளங்கும் அவரது நிழலில் இன்று நாம் எழுந்து நிற்கின்றோம். அநீதியின் தீக்கொழுந்துகளில் கருகிப்  பொசுங்கிய கோடிக்கணக்கான கருப்பின அடிமைகளுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக வெளிவந்த ஆணை அது. அடிமை இருளை விலக்கும் இன்ப விடிவாக வெளிவந்த ஆணை அது.

 

ஆனால் இன்று நூறாண்டுகள் கழிந்த பின்னரும் கூட, கருப்பின மக்கள் சுதந்திரம் துய்க்கவில்லை. நூறாண்டுகள் கழிந்த பின்னரும் கூட, இன ஒதுக்கல் எனும் கைவிலங்கும், பாகுபாடு எனும் கால்விலங்கும் இடப்பட்டு,  கருப்பின மக்களின் வாழ்வு முடக்கப்பட்டுள்ளமை வருத்தம் தருகிறது. நூறாண்டுகள் கழிந்த பின்னரும் கூட, கருப்பின மக்கள் மாபெரும் செல்வக்கடல் சூழ்ந்த வறுமை எனும் தனித்தீவில் வாழ்ந்து வருகிறார்கள். நூறாண்டுகள் கழிந்த பின்னரும் கூட, கருப்பின மக்கள் அமெரிக்க சமுதாயத்தின் மூலைமுடுக்குகளில் வாடிவதங்கி வருகிறார்கள்; தமது சொந்த நாட்டிலேயே ஓர் ஓரத்தில் ஒதுக்குண்டு வாழ்ந்து வருகிறார்கள். இந்த நாட்டைப் பழிப்புக்கு உள்ளாக்கும் அந்த நிலைவரத்தைக் குத்திக்காட்டுவதற்காக இன்று நாம் இங்கு வந்து கூடியுள்ளோம்.

 

ஒரு காசோலையை மாற்றுவதற்காக எங்கள் நாட்டின் தலைநகருக்கு நாங்கள் வந்திருப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். எங்கள் குடியரசின் சிற்பிகள் வீறார்ந்த சொற்களைக் கையாண்டு, அதன் அரசியல்யாப்பையும், சுதந்திரப் பிரகடனத்தையும் வரைந்தபொழுது ஒவ்வோர் அமெரிக்கருக்கும் உரித்தாகும் வண்ணம் ஒரு வாக்குறுதிச்சீட்டில் அவர்கள் ஒப்பமிட்டதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

 

வாழ்வு, சுதந்திரம், இன்பத் தேட்டம் என்பவற்றுக்கான உரிமைகள் மக்கள் அனைவரதும், ஆம், கருப்பரதும், வெள்ளையரதும் களையவொண்ணா உரிமைகள் என்று உத்தரவாதம் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த சீட்டு அது. 

 

தனது கருப்பின மக்களுக்கு வாக்குறுதியளித்த தொகையை அமெரிக்கா செலுத்தவில்லை என்பது வெளிப்படை. வாக்குறுதியளித்த தொகையைச் செலுத்தும் புனிதமான கடப்பாட்டை மதித்தொழுகுவதற்குப் பதிலாக, செல்லாத காசோலை ஒன்றை கருப்பின மக்களிடம் அது கொடுத்துள்ளது. "கணக்கில் உள்ள பணம் போதாது" என்ற குறிப்புடன் காசோலை திரும்பி வந்துள்ளது!

 

ஆனாலும் நீதிவங்கி நொடித்துவிட்டது என்பதை நம்ப நாம் மறுக்கிறோம். இந்த நாட்டின் வாய்ப்புவளம் என்னும் செல்வம் குவிந்த தாழ்வறையில் போதிய பணம் இல்லை என்பதை நாம் நம்ப மறுக்கிறோம். ஆதலால் அக்காசோலையை மாற்ற நாம் வந்திருக்கிறோம். நாம் கேட்டவுடன் சுதந்திர செல்வத்தையும், நீதியின் பாதுகாப்பையும் எமக்கு ஈயும் காசோலையை மாற்ற நாம் வந்திருக்கிறோம்.


எமக்கு உடனடியாகப் பரிகாரம் வேண்டும் என்பதை அமெரிக்காவுக்கு நினைவுபடுத்துவதற்காகவும் இப்புனித மையத்துக்கு நாம் வந்திருக்கிறோம். ஆறப்போடும் வாய்ப்பினை ஆராயவோ, படிப்படியான நடவடிக்கை எனும் சாந்திமருந்து பருகவோ இது நேரமல்ல.  

 

குடியாட்சி நெறிநின்று கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது. இன ஒதுக்கல் எனும் இருண்ட வெற்றுப் பள்ளத்தாக்கிலிருந்து விலகி, இனத்துவ நீதி எனும் கதிரொளி வீசும் பாதையில் செல்லவேண்டிய நேரம் இது. இனவாத அநீதி எனும் புதைமணலை விடுத்து, சகோதரத்துவம் எனும் திண்ணிய பாறையில் எமது நாட்டை நிலைநிறுத்தவேண்டிய நேரம் இது. கடவுளின் பிள்ளைகள் அனைவருக்கும் நீதி பாலிக்கவேண்டிய நேரம் இது.

 

இக்கணத்து அவசரத்தைப் புறக்கணிப்பது இந்த நாட்டுக்கு ஆபத்தாய் முடியக்கூடும். சுதந்திர சமத்துவ வீறுடன் கூடிய இலையுதிர்ப் பருவம் ஓங்கும்வரை கருப்பின மக்களின் நியாயமான சஞ்சலமாகக் கனலும்  கோடைப் பருவம் நீங்கப் போவதில்லை. இந்த 1963ம் ஆண்டு ஒரு முடிவல்ல; இது ஒரு தொடக்கம். இப்பேரணியின் ஊடாக கருப்பின மக்களின் கொதி அடங்கிவிடும், அவர்களின் மனம் நிறைந்துவிடும் என்று எதிர்பார்த்து உறங்கச் செல்வோர், நாடு வழமைபோல் மீண்டும் செயற்பட்டால், உறக்கத்திலிருந்து தட்டியெழுப்பப்படுவார்கள். கருப்பின மக்களுக்கு அவர்களது குடியுரிமைகள் வழங்கப்படாவிட்டால், அமெரிக்காவில் ஓய்வோ, அமைதியோ ஏற்படப் போவதில்லை. நீதியொளி வீசும் நாள் ஓங்கும்வரை எமது நாட்டின் அடித்தளத்தை கிளர்ச்சிப் புயல் தொடர்ந்து கிடுகிடுக்க வைக்கப் போகிறது.  

 

ஆனாலும் இந்த நீதிசால் அரண்மனையின் சுகந்த வாயிலில் நிற்கும் எனது மக்களிடம் நான் ஒரு சங்கதியை வலியுறுத்த வேண்டியுள்ளது:  எமது உரிமையை வென்றெடுக்கும் படிமுறையில் நாம் தவறிழைத்த குற்றத்துக்கு உள்ளாகக் கூடாது. எமது சுதந்திர விடாயைத் தீர்ப்பதற்கு, கசப்பும் காழ்ப்பும் நிரம்பிய கிண்ணத்தை ஏந்திப் பருகக் கூடாது. கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும் பேணும் உயரிய நிலையில் நின்று எமது போராட்டத்தை நாம் என்றென்றும் முன்னெடுக்க வேண்டும். எமது ஆக்கப் போராட்டம் வன்முறைக்குத் தாழ்வதை நாம் அனுமதிக்கக் கூடாது. ஆன்மபலம் கொண்டு பலவந்தத்தை எதிர்கொள்ளும் மாண்புறு நிலைக்கு நாம் உயரவேண்டும்.


கருப்பின சமூகத்துள் புதுக்க முகிழ்த்த தீவிரம் வியக்கத்தக்கது. ஆனாலும் அதன் விளைவாக வெள்ளையர் அனைவரையும் நாம் வெறுக்கக் கூடாது. எமது சகோதர வெள்ளையர் பலர் எம்முடன் சேர்ந்து கொண்டதற்கு இன்றைய பேரணி சான்று பகர்கிறது. தமது தலைவிதி எமது தலைவிதியுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். தமது சுதந்திரமும் எமது சுதந்திரமும் பிரிக்கமுடியாவாறு பிணைக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். நாங்கள் தனித்து நடைபோட முடியாது.

 

நாங்கள் நடைபோடுந்தோறும், முன்னின்று அணிவகுத்துச்செல்ல உறுதிபூண வேண்டும். நாங்கள் திரும்பிச்செல்ல முடியாது. குடியியல் உரிமை நாடிப் போராடும் அடியார்களிடம், "எப்பொழுது நீங்கள் நிறைவுகொள்வீர்கள்?" என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்.

 

கருப்பின மக்கள் காவல்துறையின் விவரிக்கமுடியாத கொடிய பயங்கரங்களுக்கு உள்ளாகும்வரை நாங்கள் நிறைவுகொள்ளப் போவதில்லை.

 

பயணக்களையில் பரிதவிக்கும் நாங்கள் தெருவிடுதிகளிலும், மாநகர விடுதியகங்களிலும் தங்கமுடியாதவர்களாக விளங்கும்வரை நிறைவுகொள்ளப் போவதில்லை.

 

கருப்பின மக்கள் ஒரு குறுஞ்சேரியிலிருந்து ஒரு பெருஞ்சேரிக்கு மாத்திரம் இடம்பெயர்வோராக விளங்கும்வரை நாங்கள் நிறைவுகொள்ளப் போவதில்லை.

 

"வெள்ளையருக்கு  மாத்திரம்" என்னும் அறிவிப்புகளால் எமது பிள்ளைகள் தமது சுயம் களையப்பட்டவர்களாக, கண்ணியம் பறிக்கப்பட்டவர்களாக விளங்கும்வரை நாங்கள் நிறைவுகொள்ளப் போவதில்லை.

 

மிசிசிப்பியில் வசிக்கும் கருப்பினத்தவர் வாக்களிக்க முடியாதவராக விளங்கும்வரை, நியூ யார்க்கில் வசிக்கும் கருப்பினத்தவர் தாம் வாக்களிப்பதற்கு எதுவுமே இல்லை என்று கருதுவோராக விளங்கும்வரை நாங்கள் நிறைவுகொள்ளப் போவதில்லை.


இல்லை, இல்லை, நாங்கள் நிறைவுகொள்ளப் போவதில்லை. வெள்ளம்போல் நீதிநெறி பாயும்வரை, வீறுகொண்ட ஓடைபோல் நேர்நெறி பாயும்வரை நாங்கள் நிறைவுகொள்ளப் போவதில்லை. 

 

உங்களுள் சிலர் பெரும் வேதனைகளையும் சோதனைகளையும் கடந்து இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதை நான் உணராதவன் அல்ல. உங்களுள் சிலர் ஒடுங்கிய சிறைக் கூடங்களிலிருந்து நேரே வந்திருக்கிறீர்கள். தத்தம் பிரதேசங்களில் சுதந்திரம் நாடி மேற்கொண்ட போராட்டத்தில் கொடுமைப் புயலினால் தாக்குண்டவர்களாக, காவல்துறையின் கொடுமைக்கு உள்ளாகித் தடுமாறுவோராக உங்களுள் சிலர் வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஆக்கப் போராட்டத்தில் வருந்தும் மறவர்களாக விளங்கியிருக்கிறீர்கள். உங்கள்மீது திணிக்கப்பட்ட வருத்தம் மீட்சிக்கு இட்டுச்செல்லும் என்ற பற்றுறுதியுடன் தொடர்ந்து பாடுபடுங்கள்.

 

திரும்பிச் செல்லுங்கள்; மிசிசிப்பிக்கும், அலபாமாவுக்கும், தென் கரோலினாவுக்கும், ஜோர்ஜியாவுக்கும், உலூசியானாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்; எமது வடபுல மாநகர சேரிகளுக்கும் குப்பங்களுக்கும் திரும்பிச் செல்லுங்கள்; நடப்பு நிலைவரத்தை எப்படியோ மாற்றமுடியும், அது மாற்றப்படும் என்பதை அறிந்தவர்களாய் திரும்பிச் செல்லுங்கள்; நாங்கள் மனமுறிவு எனும் பள்ளத்தாக்கில் கிடந்து புரளக்கூடாது.

 

எனது நண்பர்களே, இன்றும் நாளையும் நாங்கள் சிரமங்களுக்கு உள்ளானாலும், நான் காணும் கனவை உங்களிடம் சொல்லி விடுகிறேன். அமெரிக்க கனவில் ஆழ வேரூன்றிய கனவு அது.

 

என்றோ ஒருநாள் இந்த நாடு விழித்தெழுந்து அது சொல்லிய நெறியின் மெய்ப்பொருளைச் செயலில் காட்டுவதை நான் கனவுகாண்கிறேன்; "எல்லா மனிதரும் சரிநிகராகவே படைக்கப்பட்டவர்கள் என்பதை நாம் வெளிப்படை  உண்மையாக  ஏற்றுக்கொள்கிறோம்" என்று இந்த நாடு சொல்லிய நெறியின் மெய்ப்பொருளைச் செயலில் காட்டுவதை நான் கனவுகாண்கிறேன்.

 

ஜோர்ஜியாவின் செங்குன்றுச் சாரலில் முன்னாள் அடிமைகளின் மைந்தர்களும், முன்னாள் அடிமை முதலாளிகளின் மைந்தர்களும் சகோதரத்துவ பீடத்தில் ஒன்றாக அமர்ந்திருப்பதை நான் கனவுகாண்கிறேன்.


அநீதி அனலிலும், ஒடுக்குமுறை அனலிலும் வேகும் மிசிசிப்பி அரசு கூட என்றோ ஒருநாள் சுதந்திரமும் நீதியும் ஓங்கிய சோலையாக மாறுவதை நான் கனவுகாண்கிறேன்.

 

எனது நான்கு குழந்தைச் செல்வங்களும் என்றோ ஒருநாள் தமது தோலின் நிறத்தை விடுத்து தமது குணத்தின் உட்பொருளை வைத்து மதிக்கப்படுவதை நான் கனவுகாண்கிறேன்.

 

இன்று நான் கனவுகாண்கிறேன்.

 

கொடிய இனவாதிகள் மிகுந்த அலபாமாவில் கூட, நிர்வாகத்தில் குறுக்கிட்டும் விதிகளைப் பயனற்றவையாக்கியும் சொற்களை உதிர்க்கும் ஆளுநரைக் கொண்ட அலபாமாவில் கூட, என்றோ ஒருநாள் கருப்பினச் சிறுவர் சிறுமியர் வெள்ளைச் சிறுவர் சிறுமியருடன் சகோதர சகோதரியர் போல் கைகோத்துச் செல்வதை நான் கனவுகாண்கிறேன்.

 

இன்று நான் கனவுகாண்கிறேன்.

 

என்றோ ஒருநாள் ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்த்தப்படுவதை, ஒவ்வொரு குன்றும் மலையும் தாழ்த்தப்படுவதை, கரடுமுரடான இடங்கள் சமவெளியாக்கப்படுவதை, கோணிய இடங்கள் நேராக்கப்படுவதை, இறைவனின் மகிமை வெளிப்படுத்தப்படுவதை, அனைவரும் அதை ஒன்றாகக் கண்ணுறுவதை நான் கனவுகாண்கிறேன்.

 

இதுவே எமது நம்பிக்கை. இப்பற்றுறுதியுடனேயே நான் தெற்கு நோக்கித் திரும்புவேன். இப்பற்றுறுதியைக் கொண்டே மனமுறிவு எனும் மலையில் நம்பிக்கை எனும் பாறையைக் குடைந்தெடுக்க வல்லவர்களாக நாம் விளங்குவோம். இப்பற்றுறுதியைக் கொண்டே எமது நாட்டின் சச்சரவுகளுடன் கூடிய இரைச்சலை ஓர் இனிய சகோதரத்துவ பேரிசைப் பல்லியமாக மாற்றவல்லவர்களாக நாம் விளங்குவோம்.

 

இப்பற்றுறுதியைக் கொண்டே என்றோ ஒருநாள் சுதந்திரம் அடைவோம் என்பதை அறிந்தவர்களாய் நாங்கள் ஒன்றாக உழைக்க, ஒன்றாக வணங்க, ஒன்றாகப் போராட, ஒன்றாகச் சிறைசெல்ல, ஒன்றாகச் சுதந்திரம் நாடி வாதாட வல்லவர்களாக விளங்குவோம்.

 

அந்த நாளே கடவுளின் பிள்ளைகள் அனைவரும் புதிய பொருளுடன், "என் தாய்நாடே, இனிய சுதந்திர நாடே, எந்தையர் மடிந்த நாடே, யாத்திரிகரின் பெருமை படைத்த நாடே, உன் மலைச்சாரல்கள் அனைத்திலிருந்தும் சுதந்திர மணி ஒலிக்குமாக" என்று பாடவல்லவர்களாக விளங்குவார்கள். 

 

அமெரிக்கா ஒரு மகத்தான நாடாக விளங்க வேண்டுமானால், எனது கனவு நனவாக வேண்டும். ஆகவே நியூ ஹம்ப்சயரில் அமைந்துள்ள மாபெரும் குன்றுகளின் உச்சிகளிருந்து சுதந்திர மணி ஒலிக்குமாக. நியூ யார்ர்கின் வலிய மலைகளிலிருந்து சுதந்திர மணி ஒலிக்குமாக. பென்சில்வேனியாவின் அலகெனி மலைத்தொடரிலிருந்து சுதந்திர மணி ஒலிக்குமாக.

 

கொலறாடோவின் பனிகவிந்த உரொக்கி மலைத்தொடரிலிருந்து சுதந்திர மணி ஒலிக்குமாக. கலிபோணியாவின் வளைந்து நெளிந்த மலைச்சாரல்களிலிருந்து சுதந்திர மணி ஒலிக்குமாக. அது மாத்திரமன்று. ஜோர்ஜியாவின் கல்மலையிலிருந்தும் சுதந்திர மணி ஒலிக்குமாக.  தெனசியின் கண்ணோட்ட மலையிலிருந்தும் சுதந்திர மணி ஒலிக்குமாக.

 

மிசிசிப்பியின் குன்றுகள், புற்றுகள் அனைத்திலிருந்தும் சுதந்திரம் ஒலிக்குமாக. ஒவ்வொரு மலைச்சாரலிலிருந்தும் சுதந்திரம் ஒலிக்குமாக.

 

அப்படி நடக்கும்பொழுது, சுதந்திர மணி ஒலிக்க நாம் அனுமதிக்கும்பொழுது, நாடு நகரம், பட்டி தொட்டிகள் அனைத்திலிருந்தும் சுதந்திர மணி ஒலிக்க நாம் அனுமதிக்கும்பொழுது, "ஈற்றில் நாம் சுதந்திரம் ஈட்டிக்கொண்டோம்!" என்று இசைக்கும் நாளை விரைவுபடுத்த வல்லவர்களாக நாம் விளங்குவோம். கடவுளின் பிள்ளைகள் அனைவரும், கருப்பினத்தவரும், வெள்ளையரும், யூதரும், பிறரும்,  புரட்டஸ்தாந்தியரும், கத்தோலிக்கரும் கைகோத்து, "ஈற்றில் நாம் சுதந்திரம் ஈட்டிக்கொண்டோம்! ஈற்றில் நாம் சுதந்திரம் ஈட்டிக்கொண்டோம்! எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டோம்! ஈற்றில் நாம் சுதந்திரம் ஈட்டிக்கொண்டோம்!"  என்று இசைக்கும் நாளை விரைவுபடுத்த வல்லவர்களாக நாம் விளங்குவோம். கருப்பினத்தவரின் அப்பழைய சமயப்பாடலை இசைக்கும் நாளை விரைவுபடுத்த வல்லவர்களாக நாம் விளங்குவோம்.

___________________________________________________

Martin Luther King, I Have a Dream, Washington, 1963-08-28, 

தமிழ்: மணி வேலுப்பிள்ளை

 

Email This

BlogThis!

Share to Twitter

Share to Facebook

Share to Pinterest


No comments:

Post a Comment