“ஏழைகளுக்கு நான் பாண் கொடுத்தால், என்னை ஒரு புனிதர் என்கிறார்கள்.
ஏழைகள் ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள் என்று கேட்டால்,
என்னை ஒரு பொதுவுடைமைவாதி என்கிறார்கள்.”
1937-04-26 பிதா ஸ்தான் அடிகள் 2021-07-05
தமிழ்நாடு, திருச்சியில் பிறந்த ஸ்தான் அடிகள் பிலிப்பைன்சில் சமூகவியல் பயின்றவர். 1970 ஏப்பிரில் 14ம் திகதி குருப்பட்டம் பெற்றவர். ஜார்கந் மாநிலத்து ஆதிவாசிகளின் மனித உரிமைகளுக்காகப் போராடியவர். சுரங்கம் அகழும் மாபெரும் நிறுவனங்களால் ஆதிவாசிகளின் பரம்பரைக் காணிகள் விழுங்கப்படுவதை எதிர்த்து நின்றவர். ஆதலால் மாவோயிசவாதி என்று விளம்பப்பட்டவர். அரசுக்கெதிராகச் சதிசெய்த குற்றச்சாட்டின் பேரில், தேசிய புலனாய்வுத் துறையினரால் அக்டோபர் 8ம் திகதி கைதுசெய்யப்பட்ட ஸ்தான் அடிகளின் உயிர் மும்பை சிறை ஒன்றில் பிரிந்தது. வயது 84.
இனிமேலும் நிகழும்
அனுப் சின்ஹா
பிதா ஸ்தான் அடிகளின் உயிர் சிறையில் பிரிந்தது. 84 வயது, உடல்-தளர்ச்சி நோயாளி, சமூகத் தொண்டர்... அவரது இறப்பு உணர்த்தும் உண்மைகளை ஒரு குடிமகன் என்ற வகையில் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.
வெட்கக்கேடு: இது அறவே வெட்கப்படவேண்டிய சங்கதி என்பது வெளிப்படையாகவே புலப்படுகிறது. அரசு இழைத்த படுமோசமான கொடுமை, கொடூரம், வன்மை இது. எனினும், எனது இதே உணர்வை இந்தியர்கள் அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளப் போவதில்லை!
பயங்கரவாதத்துக்கும், அரசியல் வன்முறைக்கும் எதிரான போராட்டத்தில் இதை ஒரு பக்கவாட்டுச் சேதம் என்று பலரும் வாதிப்பார்கள். இதற்கும் எமக்கும் சம்பந்தம் இல்லை என்று பிறர் அமைதி காண்பர். ஒருசிலர் இந்நிகழ்வை திடமாக ஆதரித்து, உள்ளூர அமைதி காண்பர்.
என்னுள் ஏற்படும் உணர்வினை சில வாதங்களாகப் பகுக்கும் வேளையில், என் உள்ளத்தை உறுத்தும் முடிபுகளுக்கு அது என்னை இட்டுச்செல்கின்றது. இத்தகைய இறப்புகள் ஏற்கெனவே பல தடவைகள் இடம்பெற்றுள்ளன. இனிமேலும் இடம்பெறப் போகின்றன. இவற்றுள் நாம் பகுத்தாய்விடக்கூடிய, எம்மை அண்மித்த ஓர் எடுத்துக்காட்டு மாத்திரமே பிதா ஸ்தான் சுவாமியின் இறப்பு. வாசகர்களை விளித்து எனது ஐந்து வாதங்களை இங்கு நான் முன்வைக்கிறேன்:
வாதம் 1: படையினர் ஒரு பயங்கரவாதியை எதிர்கொள்ளும் வேளையில், அவர் கொலையுண்டதைப் போன்று, ஸ்தான் சுவாமி கொலையுறவில்லை என்று கொள்வோர், அவர் இறந்த காரணத்தைக் கருத்தில் கொள்ளாதவர்கள் என்று எனக்குப் படுகிறது.
கொல்வதற்கும், இறக்க விடுவதற்கும் இடையே ஒரு வேறுபாட்டை மெய்யியலாளர்களும் அறநெறியாளர்களும் காண்பது உண்மையே. இங்கு பல விவரங்கள் தெளிவாகப் புலப்படாமலும் இருக்கலாம். இறக்கவிடுவதை நிகழ்த்தப்பட்ட கொலையாகப் பலரும் எடுத்துக்கொள்வதில்லை. ஆகவே நிகழ்த்தப்பட்ட கொலையை விட இறக்கவிடுவது பெரிதும் ஆதரிக்கத்தக்கதே என்றும், அறநெறிவாரியாக குறைந்த கண்டனத்துக்கு உள்ளாகத்தக்கதே என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
ஒருவரை இறக்கவிடுவது குறித்து சில சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதுண்டு: (1) இறக்கநேர்ந்த சூழ்நிலையின் கடூரத்தை எங்களால் கணிக்க இயலவில்லை; (2) நாங்கள் அதைக் கணிக்க மறந்துவிட்டோம்; (3) இடம்பெற்ற நிகழ்வு பற்றிய விவரங்களையும், அது நிகழ்ந்த சூழ்நிலையையும் நாங்கள் அறியவில்லை...
அதற்கு எதிர்மாறாகவும் நியாயம் கூறலாம்: நெஞ்சம் கடுத்து, வேண்டுமென்றே ஒருவரை இறக்க விட்டிருக்கலாம்; அவரது இறப்பை தடுக்கக்கூடியவர் அல்லது தடுக்கக்ககூடியோர் மிகுந்த ஆதாயம் எதையும் கருதி அவரை இறக்க விட்டிருக்கலாம்; அதற்கு பணம், களவொழுக்கம், அதிகாரம், வஞ்சம்… காரணமாகலாம். எனவே ஒருவரின் இறப்பினை அறநெறிக்கு உட்பட்டு மட்டுக்கட்டுவதில், அவர் இறந்த சூழ்நிலையும், சூழ்நிலைச் சான்றும் மிகவும் முக்கியமானவை ஆகலாம்.
வாதம் 2: பிதா ஸ்தான் அடிகள் இறந்த சூழ்நிலை தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது. மூப்பும் பிணியும் அவரைச் சூழ்ந்த நிலையில் ஒரு விசாரணைக்காக, வழமைக்கு மாறாக, நீண்ட காலமாக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். சதியும், வன்முறையும் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டது தெரிந்ததே.
எனினும் சிறை அதிகாரிகள், அரச வழக்குத்தொடுநர்கள், புலன் விசாரணையாளர்கள், நீதித்துறையினர், அரசாங்க அதிகாரிகள், அமைச்சர்கள் உட்பட அதிகாரம் படைத்த எவருமே அவர் இறந்த சூழ்நிலை பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றோ, நினைவில்லை என்றோ வாதாடக் கூடும்.
கைவலுவும் உறுதியும் குன்றிய ஒருவர் தண்ணீர் குடிக்க ஓர் உறிஞ்சுகுழாய் கொடுத்து உதவுவதற்கே மறுப்புத் தெரிவிக்கப்பட்டதை என்னென்பது? அத்தகைய சூழ்நிலை எத்தகைய நிகழ்வுக்கு இட்டுச்செல்லும் என்பதை அவர்கள் எவருமே அறிந்திருக்கவில்லை என்பதை நம்புவது மிகவும் கடினமாய் இருக்கிறது. அடிப்படை மனித வசதிகள் மறுக்கப்படுவதே ஒரு வன்முறை அல்லவா?
ஒரு சுதந்திர குடிமகன் துய்க்கும் சலுகைகள் சில, சிறையில் உள்ளவர்களுக்கு மறுக்கப்படுவது வழமையே என்று ஒருவர் வாதிக்கக் கூடும். தாக்குண்டு பலவந்தத்துக்கு உள்ளாகாமல் இருக்கும் சுதந்திரம் எவர்க்கும் உண்டு. கைதிகள் என்றால், அவர்கள் எல்லோரும் பலவந்தத்துக்கு உள்ளாக வேண்டுமா?
பெண்கள், முதியோர், இளையோர் தடுப்புக்காவல் நிலையங்களில் உள்ள சிறுவர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக அடிப்படை மனித வசதிகள் மறுக்கப்பட்டால், எமக்கும் நாசகார ஜேர்மனிக்கும், ஸ்டாலின் காலத்து இரசியாவுக்கும் இடையே என்ன வேறுபாடு?
சில மனித உரிமைகளை எந்த அரசுமே மறுக்க முடியாது. குறிப்பாக, ஒருவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இன்னும் விசாரிக்கப்படாத நிலையில், அவர் இன்னும் குற்றத்தீர்ப்புக்கு உள்ளாகாத நிலையில், அத்தகைய மனித உரிமைகளை எந்த அரசுமே மறுக்க முடியாது.
வாதம் 3: பிதா ஸ்தான் அடிகள் உண்மையிலேயே ஓர் அரசியற் களேவரத்தையும் உயிர்க்கொலையையும் உண்டாக்கும் சதியில் பங்குபற்றியவர் அல்லவா? சிறையில் அவருக்கு ஏன் தயவு காட்ட வேண்டும்?
காய்தல் உவத்தலின்றி, இவற்றை வெகுளித்தனமான வினாக்கள் எனலாம்; ஆக மிஞ்சினால், வன்மம்கொண்ட வினாக்கள் எனலாம். குற்றஞ்சாட்டப்பட்டவர் உரிய சட்டமுறைப்படி விசாரணைக்கு உள்ளாக வேண்டும். அவர் நீதிமன்றின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு, அவர் மீதான குற்றச்சாட்டு ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டாலன்றி, அவர் குற்றத்தீர்ப்புக்கு உள்ளாகப் போவதில்லை.
ஸ்தான் அடிகள் மீதான வழக்கு மிகவும் முக்கியமான வழக்கு, உள்ளத்தை உறுத்தும் வழக்கு என்று விளம்பப்பட்டது. அப்படி என்றால், அவர் ஏன் விசாரணைக்கோ, புலன் விசாரணைக்கோ உள்ளாக்கப்படவில்லை? அவர் கைதாகி மாதக்கணக்கு ஆகிய பின்னரும் கூட, ஏன் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முழுமையாக முன்வைக்கபடவில்லை?
உண்மையிலேயே அவரை ஒரு குற்றவாளி என்றும், சட்டத்துக்கு அப்பாற்பட்ட நீதி அல்லது தெய்வ நீதி ஒன்று அவருக்கு அளிக்கப்பட்டது என்றும் கருதுவோருக்கு, நாகரிகமடைந்த சமூகத்தின் சட்டநெறி பற்றி எதுவுமே தெரியாது. எங்கள் நாட்டில் சட்டத்துக்கு அப்பாற்பட்ட நீதி ஒன்று மேலோங்கி வருகிறது. அப்பட்டமான கொலைகள், அடாவடிக் கொலைகள், எதிர்கொள்வுக் கொலைகள், மானக்கொலைகள் என்பன அதற்கு ஒருசில எடுத்துக்காட்டுகள். இவற்றில் நம்பிக்கை உள்ள பலர் இங்கு இருக்கிறார்கள். சட்ட முறைமையில், உரிய காலத்தில் வழக்குகள் முடிவடைவதில், செவ்விய நீதியுணர்வில், நீதியின் மெதுமையில் அவர்கள் கொண்டுள்ள அவநம்பிக்கை வழமைக்கு மாறானது. குடியாட்சி குலைவதன் அடையாளம் அது.
வாதம் 4: இது குறித்து பெரும்பாலான மக்கள் வாய்திறந்து விவாதிக்காமல் இருப்பதே ஒரு விசித்திரம்தான்! இது அவர்களது உள்ளத்தை உறுத்தவில்லையா? அவர்கள் அரசாட்சி அலுவல்களில் பங்குபற்ற விரும்பவில்லையா?
அவர்கள் அமைதி காப்பதை, அவர்களது அறியாமையின் அடையாளமாக எடுத்துக்கொள்ளலாம். உரிய விவரங்கள் அனைத்தையும் அவர்கள் அறியாதவர்கள் ஆகலாம். ஆதலால் தாங்கள் கருத்துரைப்பது புத்திசாலித்தனமாகாது என்று அவர்கள் கருதக்கூடும்.
முழு விவரங்களையும் அவர்கள் அறியாதிருப்பதற்கு, அவற்றை அறிய விரும்பாமல் இருப்பதே பொதுப்படையான காரணம். அவர்கள் அமைதி காப்பதற்கு, பக்கஞ்சாய அஞ்சுவது அல்லது மற்றவர்கள் மீது கரிசனை கொள்ளாதிருப்பது இன்னொரு காரணம். அத்தகைய நிலைப்பாடு, அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் தரப்புக்கு வாய்ப்பாகி விடுகிறது. ஆதிக்கம் செலுத்தும் தரப்பினரைப் பொறுத்தவரை, எவ்வளவுக்கு குரல் குன்றுகிறதோ அவ்வளவுக்கு நன்று!
நிகழ்ந்ததை மறைமுகமாக ஆதரிப்பதும், அமைதி காப்பதற்கு ஒரு காரணமாகலாம். இதில் வழமையை விஞ்சிய வீம்பு தெரிகிறது: எங்களால் இப்படிச் செய்ய முடியும்! இதை எவரும் பொருட்படுத்தவோ, தட்டிக்கேட்கவோ போவதில்லை!
இறக்கவிடுவது போன்ற திட்டங்களை மேற்கொள்வதற்கான நம்பிக்கையை இது ஆதிக்கத் தரப்புக்கு ஊட்டுகிறது. தட்டிக்கேட்கக் கூடியோர் அமைதிகாத்தால், ஆதிக்கத் தரப்பினர் தமது அரசியல் இலக்குகளை மிக எளிதாக எட்டிவிடக் கூடும்.
ஒருப்படாதோரை அடக்கி ஒடுக்குவதும், இயற்கை நீதிநெறி திறம்பி பிரத்தியேகமான முறையில் கொடூரமான சட்டங்களைப் புகுத்துவதும், நேரடியாகவும் மறைமுகமாகவும் வன்முறை புரிவதும் குடியாட்சியின் சீரழிவையே உணர்த்துகின்றன. இனிமேல் புதிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படலாம். தேவைப்பட்டால், வன்முறையையும் எளிதில் முன்னெடுத்தும் செல்லலாம்.
வாதம் 5: கடந்தகாலத்தில் அல்லது பிறநாடடுகளில் கையாளப்பட்ட வழிமுறைகள் இங்கு கையாளப்படலாம். மாவோ செய்ததை நீ பார்த்தாயா? அவுரங்கசீப் செய்ததை நீ அறிவாயா? இந்திரா காந்தி செய்தது உனக்குத் தெரியுமா? அப்பொழுது நீ தட்டிக்கேட்டாயா?
அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைக் கொண்டு தற்காலத்தில் மேற்கொள்ளப்படும் அத்தகைய நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிக்கப்படுகின்றது! நான் இவ்விடம், இப்பொழுது வாழ்பவன். இன்றைய கொடுமையை அறநெறிப்படி நிதானிப்பதற்கு, அன்றைய வன்முறையில் நான் நாட்டம் கொள்ள வேண்டியதில்லை.
தவிரவும், எங்களை மேலும் பண்படுத்துவதற்கும், கருணைகொள்ள வைப்பதற்கும் மாத்திரமே வரலாற்று எடுத்துக்காட்டுகள் கையாளப்பட வேண்டும்; கொடுமையை நியாயப்படுத்துவதற்கு அல்ல. எடுத்துக்காட்டுகளும், மாற்று எடுத்துக்காட்டுகளும் அவ்வப்பொழுது விளக்கமளிப்பவை ஆகலாம். எனினும் எந்த ஒரு வாதத்துக்கும் பதிலாக வரலாற்று எடுத்துக்காட்டுக்களை என்றுமே நிறைவான முறையில் பயன்படுத்த முடியாது.
ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கெனவவே ஆட்சியாளருக்கு இரையாகிப் போனார்கள். அவர்களின் பெயர்கள் கூட எங்களுக்குத் தெரியாது போய்விட்டன. அவர்களைப் போலவே பிதா ஸ்தான் சுவாமியும் வெகுவிரைவில் மறக்கப்பட்டுவிடுவார். அரச வன்முறை தொடரப்போகின்றது. எனவே ஆதிக்க தரப்புகளை விளித்து நாங்கள் வினா எழுப்ப வேண்டும். அல்லாவிட்டால், இந்தியாவில் பல்கிப் பெருகிவரும் வன்செயல்களை அநெறிக்கு உட்பட்டவை என்று ஏற்றுக்கொள்ளும் முறைமைக்கு நாங்களும் உடந்தையாய் இருந்தவர்கள் ஆவோம்.
பிதா ஸ்தான் அடிகளை நினைந்து, அறநெறிநின்று கைகூப்பி மன்னிப்புக் கோரும் விறலும், மானுடப் பண்பும் எமக்கு வாய்க்க வேண்டும். ஆனால் நாம் அப்படிச் செய்யப் போவதில்லை. அதை எவராவது பொருட்படுத்துகிறார்களா?
____________________________________________________________________________________
Anup Sinha, Indian Telegraph, 2021-07-15, translated by Mani Velupllai, 2021-07-16.
No comments:
Post a Comment