ஏற்கெனவே பட்டறிந்த “நல்லாட்சி”
மீண்டும் அமையாவாறு தடுப்பது எப்படி?
வழமையாக ஜே. வி. பி.க்கு வாக்களிக்க விரும்பாத பலர் இரண்டு முக்கிய காரணங்களுக்காக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள் என்பதை
அரசாங்கம் மறந்துவிடக் கூடாது.
அம்பிகா சற்குணானந்தன்
நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தல் இந்த அரசாங்கத்தை துயிலெழுப்பும் அறைகூவல். தோல்வியை ஒரு தெரிவாகக் கொள்ளமுடியாது என்பதை ஏற்கெனவே அரசாங்கம் உணர்ந்துகொள்ளவில்லை என்றால், இனியாவது உணர்ந்துகொள்ள வேண்டும். அரசாங்கம் அதன் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், தோல்வி அடைதல் திண்ணம்.
வழமையாக ஜே. வி. பி.க்கு (மக்கள் விடுதலை முன்னணிக்கு) வாக்களிக்க விரும்பாத பலர் இரண்டு முக்கிய காரணங்களுக்காக என். பி. பி.க்கு (தேசிய மக்கள் சக்திக்கு) வாக்களித்தார்கள் என்பதை அரசாங்கம் மறந்துவிடக் கூடாது: (1) அத்தகைய வாக்காளர்களுக்கு கைகூடக்கூடிய வேறு மாற்றுவழிகள் இருக்கவில்லை; (2) இலஞ்சம், ஊழல், கப்பம் ஓங்கிய பழைய அரசியற் பண்பாட்டையும், ஆளுகை முறைகளையும் என். பி. பி. ஒழிக்குமென அவர்கள் எதிர்பார்த்த்தார்கள்.
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து, நாட்டை ஆளும் போர்வையில், அதைச் சூறையாடிக் கொள்ளையடித்த மேட்டிமைக் குழாத்தைச் சேராத அனுர குமர திசநாயக்கா என். பி. பி.யின் வெற்றிக்கு மாபெரும் தொண்டாற்றினார்.
கற்கத்தவறிய பாடங்கள்
சில குடியியற் சமூகத் தரப்பினர் உட்பட பல சமூகத் தரப்பினர், அரசாங்கத்தை வெகுவாக நம்பி இன்புறுவதனாலோ என்னவோ, அவர்கள் அரசாங்கத்தை விமர்சிக்க மறுக்கிறார்கள்; அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்கள்; விமர்சகர்கள் எழுப்பும் கரிசனைகளை நிராகரிக்கிறார்கள்; வருத்தமளிக்கும் முதலாவது சங்கதி இது.
அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளை விமர்சிக்கத் தவறுவது, அரசாங்கத்தின் தோல்விக்குத் துணைநிற்கும் என்பதும், அடக்கியாளும் வன்கோன்மைக்கு அது வழிவகுக்கக் கூடும் என்பதும், “நல்லாட்சி” அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நாம் கற்றுத்தேறிய அல்லது கற்கத்தவறிய பாடம்.
“நல்லாட்சி” அரசாங்கம் மீதான விமர்சனம், ராஜபக்சாக்களின் கைகளில் ஆயுதமாக மாறும்; அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு மீள அது வாய்ப்பளிக்கும்; ஆகவே “நல்லாட்சி” அரசாங்கத்தை விமர்சிக்கக் கூடாது என்றெல்லாம் நியாயம் கற்பிக்கப்பட்டது. இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், “நல்லாட்சி” அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளை விமர்சித்து, அவற்றுக்கு அதனைப் பொறுப்பேற்க வைக்கத் தவறியமையே ராஜபக்சாக்களின் மீட்சிக்கு வழிவகுத்தது.
அதேவேளை, சில குடியியற் சமூகத் தரப்பினர் உட்பட ஒரு சமூகத் தரப்பினர், வர்க்க பீதி அடைந்து, அரசாங்கத்தின் தோல்வியை களிவெறியுடன் வரவேற்க விரும்புவோர் போல் தோன்றும் அளவுக்கு, அரசாங்கத்தின் நடவடிக்கை முழுழுவதையும் மிகுந்த கண்டனக் கண்கொண்டு நோக்குவதாகத் தெரிகிறது.
அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர் திமிர்கொண்டு, விமர்சனத்தை ஏற்கமறுத்து, வன்மையுடன் பதில்வினை ஆற்றுவதால், அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை குன்றிவருவதை அது கவனத்தில் கொள்ளவேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அறுதிப் பெரும்பான்மை ஈட்டாத உள்ளூராட்சி மன்றங்களில், எதிர்க்கட்சிகள் கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றால், நாடாளுமன்றத்தில் தமக்குள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை, எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று ஜனாதிபதி தெரிவித்த கூற்று கவலைக்குரியது மட்டுமல்ல, குடியாட்சி நெறிக்கு மாறானதும் கூட.
தம்மீது அவதூறு கற்பிக்கப்படுவதாக ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையிடம் முறைப்பாடு தெரிவிப்பது, நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. அரசாங்கத்தைச் சேர்ந்தோர் எளிதில் விசனப்படுவோர் எனும் எண்ணத்தையும், தம்மீது நம்பிக்கை அற்றோர் எனும் எண்ணத்தையும் அத்தகைய செயல்கள் தோற்றுவிக்கின்றன.
இலங்கைச் சட்டத்தில் அவதூறுக் குற்றம் இல்லாதபடியால், இம்முறைப்பாடுகள் இணையப் பாதுகாப்புச் சட்டத்துக்கமைய முன்வைக்கப்படுவதாக நாம் கருத வேண்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சியாக இருந்தபொழுது, இதே சட்டத்தை உச்ச நீதிமன்றில் எதிர்த்து வாதாடியது. இப்பொழுது ஆட்சியில் அமர்ந்துள்ள தேசிய மக்கள் சக்தி, அதை நீக்க மறுக்கிறது. இந்த முரண்பாடான நிலைப்பாடு குறித்து ஏற்கத்தக்க விளக்கம் எதையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை. சொற்சிலம்பத்துக்கும் செயல்புரிவுக்கும் இடைப்பட்ட வெளியை இது புலப்படுத்துகிறது.
அண்மையில் ஓர் ஊடகத்தின் இணையதளத்தில் காணப்பட்ட ஒளிப்படம் ஒன்று, ஜனாதிபதியை சரிவரப் புலப்படுத்தவில்லை என்று கருதிய அவரது ஊடகப் பிரிவு, அந்த ஊடகத்துடன் தொடர்புகொண்டு, அந்த ஒளிப்படத்தை நீக்கும்படி வேண்டிக்கொண்டமை வருத்தமளிக்கிறது. அரசாங்கத்தை விமர்சிப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கருதும் வேறு செய்தி அறிக்கைகளைக் குறித்தும் அத்தகைய “வேண்டுகோள்களை” அது விடுக்கக்கூடும் அல்லவா!
அதிகார மையம் வேறெங்கோ அமைந்திருப்பதால், தமது ஆணைக்கு உட்பட்ட துறைகள் தொடர்பாக முடிபுகள் எடுக்கும் அதிகாரம் அமைச்சர்களுக்கு அளிக்கப்படவில்லை எனும் எண்ணம் பொதுமக்களிடையே மேலோங்கி வருகிறது. அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை குன்றுவதற்கு இது இன்னொரு காரணம்.
தமிழ், முஸ்லீம் சமூகங்களை தாம் புரிந்துகொண்ட விதத்தையும், அவர்களது விடயங்களில் செயற்படும் விதத்தையும் அரசாங்கம் மீளவும் நிதானித்துப் பார்க்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியில் ஆதிக்கம் செலுத்தும் ஜே. வி. பி. கடந்தகாலத்தில் ராஜபக்சாக்களுடன் சேர்ந்து, போரை ஆதரித்து, அதிகாரப் பரவலாக்கத்தை எதிர்த்த வரலாற்றை முற்போக்கானது என்று கற்பனைசெய்தே பார்க்க முடியாது.
பற்பல விடயங்களில் மிகவும் முற்போக்கான நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட கட்சியாக இப்பொழுது அது மலர்ந்துவிட்டதோ என எண்ணத்தக்க தோற்றத்தை, அண்மைக் காலத்தில் அது ஆடிய சொற்சிலம்பம் அதற்குக் கொடுத்தது.
வடபுலத் தமிழரின் வாக்குகளை அரசாங்கம் வென்றெடுத்தமை, அவர்கள் தமிழ்க் கட்சிகளை விட்டு விலகிவிட்டார்கள் என்பதற்குச் சான்று பகர்வதாக அரசாங்கம் மார்தட்டியது. தமது நெடுங்காலக் கோரிக்கைகளை விட்டு அவர்கள் விலகிவிட்டார்கள் என்று அரசாங்கம் தப்புக்கணக்குப் போட்டது.
தமிழ்மக்கள் பொருட்படுத்தும் அதிகாரப் பரவலாக்கம், போர்க் குற்றம், படைவிலக்கம், பயங்கரவாத தடைச்சட்டம், காணி அபகரிப்பு, அரச ஆக்கிரமிப்பு போன்ற விடயங்களில் உருப்படியான நடவடிக்கை எடுக்கத்தவறிய அரசாங்கம், அதன் வடபுல வெற்றியைச் சாட்டி, தமிழ்மக்களுக்காகப் பேசமுடியுமெனவும் கருதுகிறது. அந்த மார்தட்டலை உள்ளூராட்சித் தேர்தல் முடிபுகள் பொய்ப்பித்துள்ளன. வடபுல மக்கள் தமிழ்க் கட்சிகளுக்கே பெருவாரியாக வாக்களித்துள்ளார்கள்.
அரசாங்கத்தின் அரசியல்-தந்திரோபாயம் பற்றிய வினாக்களையும் அது எழுப்புகிறது. உள்ளூராட்சித் தேர்தல் நடப்பதற்கு ஒருசில கிழமைகளுக்கு முன்னர், வடபுலத்தில் 5,940 ஏக்கர் காணியை அபகரிக்கும் அரசமடலை வெளியிட்ட அரசாங்கத்தால் எப்படித் தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியும்? தமிழ்மக்கள் முக்கியத்துவம் கொடுக்கும் விடயங்களை அரசாங்கம் அறியவில்லையா? அல்லது, அவர்களின் கரிசனைகளை அரசாங்கம் அறவே உதறித் தள்ளுகின்றதா?
தமிழ்மக்கள், நிர்ப்பந்தம் காரணமாக, செயல்நோக்குடன் கூடிய வாக்காளர்களாக மலர்ந்துள்ளார்கள் என்பதை அரசாங்கம் உள்ளத்தில் பதிப்பது நலம் பயக்கும். போரின்பொழுது, தமிழ்மக்களுக்கு எதிராக, பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர் என்று குற்றம்சாட்டப்படும் சரத் பொன்சேகாவுக்கு, 2010ல் தமிழ்மக்கள் வாக்களித்தமை, அதற்கோர் எடுத்துக்காட்டு. எனவே, உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் ஈட்டிய வெற்றியைப் புறக்கணிப்பதும், அது முறைகேடான வழியில் ஈட்டப்பட்ட வெற்றி என்று பழிசுமத்துவதும், மேன்மேலும் தமிழ்மக்களின் வாக்குகளை இழப்பதற்கே வழிவகுக்கும்.
உள்ளூராட்சித் தேர்தலில் இலங்கைப் பொதுஜன முன்னணி (எஸ். எல். பி. பி.) எய்திய பெறுபேறுகளுக்கு, அரசாங்கம் பதில்வினையாற்றும் விதம், இனி அது செல்லும் திசையைத் தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்றாக அமையும். வலதுசாரிச் சிங்களத் தேசியவாதிகளின் வாக்குகளை ஈர்க்கும் நோக்குடன் நடவடிக்கை எடுக்கும் வழியில் தேசிய மக்கள் சக்தியை அது இட்டுச்செல்லுமா?
பெளத்த சிங்கள கடும்போக்குத் தேசியவதிகளை மகிழ்விக்கும் அத்தகைய நடவடிக்கை தமிழ், முஸ்லீம் சமூகங்களைப் பாதிக்கும் என்பதிலும், அதனால் மிதவாதிகளின் ஆதரவையும், சிறுபான்மையோரின் ஆதரவையும் தேசிய மக்கள் சக்தி இழக்கும் என்பதிலும் ஐயமில்லை.
தாம் சிங்களத் தேசியவாதிகளின் வாக்குகளை இழந்துவிடுவோம் என அஞ்சி, ஒரு குறுங்கால நடவடிக்கையை ஆட்சியாளர் மேற்கொள்ளக்கூடும்: ஐ. நா. மனித உரிமை மன்றம் இலங்கை தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானம், அதற்கமையத் தோற்றுவிக்கப்பட்ட இலங்கை பொறுப்புக்கூறல் நிகழ்பாடு, சான்றுகள் திரட்டும் பொறிமுறை முதலிய விடயங்களில் அரசாங்கம் வன்மையான நிலைப்பாட்டை எடுக்கக்கூடும்.
ஒரு சுதந்திர வழக்குத்தொடுநர் அலுவலகத்தை அமைக்க அரசாங்கம் பூண்ட உறுதி வலுவானதாகவும், வரவேற்கப்படுவதாகவும் தெரிகிறது. எனினும், போரின் இறுதிக் கட்டங்களில் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, அரசாங்கம் அதன் அரைவாசி ஆட்சிக்காலத்தை எட்டும் தறுவாயிலாவது, வழக்குத் தொடுக்கப்படும் என்பதற்கு அது உத்தரவாதமாகாது.
போர்க்கால உரிமைமீறல்கள் தொடர்பாக எதிர்காலத்தில் வழக்குத் தொடுக்கும்பொழுது, பொறுப்புக்கூறல் நிகழ்பாட்டின் மூலம் உரிய சான்றுகளை முன்வைக்க முடியும். ஆதலால், அக்குற்றங்கள் குறித்து நாடளாவிய முறையில் வழக்குத்தொடுக்க அரசாங்கம் பூண்ட உறுதி மெய்யானதாயின், பொறுப்புக்கூறல் நிகழ்பாடு போன்ற, சான்றுகள் திரட்டும் சுதந்திர-சர்வதேயப் பொறிமுறை தொடர்ந்து செயற்படுவதை அரசாங்கம் வரவேற்க வேண்டும்.
எடுக்கவேண்டிய நடவடிக்கைகளும், எடுக்கக்கூடாத நடவடிக்கைகளும்
அரசாங்கத்தால் உடனடி நீதி வழங்க முடியாது; அது விரும்பத்தக்கதுமல்ல; அரசாங்கம் உடனடி நீதி வழங்க உறுதியளிப்பது புத்திசாலித்தனமும் அல்ல. அப்படிச் செய்வது உரிய படிமுறையை மீறவும்கூடும்; வழக்குகள் வலுவிழந்து தோற்கவும் கூடும்; அதனால் அரசாங்கத்தின் மீதும், குற்றவியல் நீதித்துறையின் மீதும் மக்கள் கொண்ட நம்பிக்கை குலையவும் கூடும்.
முன்னைய அரசாங்கங்கள் பெருவாரியான வேளாவேளைக் குழுக்களையும், செயலணிகளையும் அமைத்து நாட்டின் தலையில் கட்டியடித்துள்ளன. அவை பாரதூரமான விடயங்களில் உருப்படியான நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்கும் உபாயங்கள் என மக்கள் கருதுவது சரியே. எனவே காத்திரமான முறையில் கட்டமைப்பை மாற்றுவதற்கு, தூய இலங்கைச் செயலணி போன்ற வேளாவேளைப் பொறிமுறைகள் அமைப்பதை அரசாங்கம் நிறுத்தவேண்டும்.
தூய இலங்கைச் செயலணி எனும் வேளாவேளைக் குழு இன்றைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்டது. அது அவருக்கு மட்டுமே பதிலளிப்பது. அதன் ஆணையும் அதிகாரங்களும் பரந்துபட்டவை; ஆனால் தெள்ளத் தெளிவானவை அல்ல. எடுத்துக்காட்டாக, இச்செயலணிக்கு “சட்ட ஏற்பாடுகளை வகுக்கவும்”, அச்சட்டங்களை நடைமுறைப்படுத்த “ஒரு கட்டமைப்பை உருவாக்கவும்” அதிகாரம் உண்டு என்று அரசமடல் கூறுகிறது. உண்மையில் இவை வெவ்வேறு நிரந்தர அரச கட்டமைப்புகளின் பணிகள் ஆகும்.
இச்செயலணி வேறு அரச கட்டமைப்புகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கமுடியும். அவற்றின் அதிகாரங்களுக்குள் ஊடுருவ செயலணிக்கு அது வாய்ப்பளிக்கும். மேலும், இச்செயலணியில் தமிழரோ, முஸ்லீங்களோ இடம்பெறவில்லை. ஆனால் தரை-கடல்-வான் படைத் தளபதிகளும், காவல்துறையின் பதில் தலைமை மேலாளரும் இடம்பெற்றுள்ளார்கள். இவ்வாறு மேலும் ஓர் அரச கட்டமைப்பு படைமயப்படுத்தப்பட்டமை கவலையளிக்கிறது.
படைப் பணிகளுக்கு மாத்திரமே படை பயன்படுத்தப்படும் என்று அரசாங்கம் முழங்கியதுண்டு. ஜனாதிபதியோ நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மாதந்தோறும் மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ம் பிரிவைப் பயன்படுத்தி ஆயுதப் படைகளைத் தொடர்ந்தும் களமிறக்குவது, அந்த சொற்சிலம்பத்துக்கு முரணானது. காவல்துறை படைமயமாவதை இது நிலைநிறுத்துகிறது. அதாவது, நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை தவிர்க்கும் வண்ணம், செயலளவில் ஓர் அவசரகால நிலை பறைசாற்றப்பட்டுள்ளது.
முன்னைய அரசாங்கத்தின் இன்னொரு வழமையை இன்றைய அரசாங்கம் சங்கடமான முறையிலும், கள்ளத்தனமான முறையிலும் முன்னெடுத்து வருகிறது. போதைமருந்துப் பாவனையாளர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கை மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைமருந்துக் கடத்தலில் ஈடுபடாவிட்டாலும் கூட, நச்சுமருந்து-அபின்-ஆபத்தான போதைமருந்துக் கட்டளைச் சட்டத்தின் 54-அ பிரிவுக்கமைய அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள். ஆண்டுக்கணக்காக அல்லாவிட்டாலும், மாதக்கணக்காக அவர்கள் சிறையில் அடைத்து வைக்கப்படுகிறார்கள். அதனால் சிறைகள் நிரம்பி வழிகின்றன. சிறைகளில் போதைமருந்துச் சந்தை கூடுகிறது. போதைமருந்து பாவிக்கும் கைதிகளுக்கு சுகாதார சேவைகள் மறுக்கப்படுகின்றன. போதைமருந்து கடத்தல், போதைமருந்துக்கு அடிமையாதல் போன்ற பிரச்சனைகளை எந்த விதத்திலும் அவை தணிக்கப் போவதில்லை; மாறாக, அவற்றைப் பெருக்கியே தீரும்.
குடியியற் சமூகம் சார்ந்த இன்னொரு விடயமும் உண்டு: அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைப்பதிலும், மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானவர்களுக்குத் துணைநிற்பதிலும் குடியியற் சமூகம் ஒருங்கிணைந்து பங்கு வகிக்கிறது. அதனுடன் பூணும் உறவையும், அந்த உறவைத் திருத்தியமைக்கும் விதத்தையும் அரசாங்கம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அரசு சாரா அமைப்புகள் நாட்டுக்கு எதிரானவை, ஊழலில் உழல்பவை, இலங்கைக்கு எதிரான சதிகளுக்குத் துணைநிற்பவை என்றெல்லாம் ஜே. வி. பி. முத்திரை குத்திவந்துள்ளது. இந்த எண்ணத்தை எந்த வகையிலேனும் தொடர்ந்து முன்னெடுப்பது எதிர்விளைவை உண்டாக்கி, ஐயுறவையே வளர்க்கும்.
சமூக-பொருளாதார விடயங்களிலும் குடியியற் சமூகத்துக்கு பரந்த பட்டறிவும், நிபுணத்துவமும் உண்டு. எனவே சட்டம், கொள்கை என்பவற்றைச் சீர்திருத்துவது குறித்து அதனுடன் கலந்துசாவ வேண்டியுள்ளது. அப்படியிருக்க, குடியியற் சமூகத்தை மேற்பார்வையிடுவதில் படைத்துறையை உள்ளடக்கி, குடியியற் சமூகத்தின் சுதந்திரமான செயற்பாட்டைக் கெடுத்து, குழுமச் சுதந்திரத்துக்கு ஆப்புவைக்கும் சுற்றறிக்கைகளை கடந்த சில மாதங்களில் அரசு சாரா அமைப்புச் செயலகமும், இலங்கை மத்திய வங்கியும் விடுத்துள்ளன.
மக்கள் எதை விரும்புகிறார்கள்?
அரசாங்கம், அது சொல்லியபடி செயற்பட்டு, தனது தவறுகளையும் தவறான நடவடிக்கைகளையும் ஒப்புக்கொண்டு, தன்னைத் திருத்தியமைத்து, வெளிப்படையான முறையில் நடவடிக்கை எடுப்பதையே மக்கள் விரும்புகிறார்கள். இது எளிதான ஒன்றாகவே தென்படும். ஆனால், இலங்கையில் எந்த ஓர் அரசாங்கத்தினாலும் இதை நடைமுறைப்படுத்துவது மிகமிகக் கடினம் என்பது தெளிவாகி வருகின்றது. இதில் தேசிய மக்கள் சக்தி ஏதோ வேறு விதமான ஒன்றாகுமா?
Ambika Satkunananthan, Deja vu?: How to prevent Yahapalana 2.0, Financial Times, 2025-05-19
translated by Mani Velupillai, 2025-05-22.
No comments:
Post a Comment