புறப்படுங்கள்!
மாமன்னன் அலெக்சாந்தர்
(பொ. ஊ. முன் 356 – 323, மசிடோனியா)
படையினர்க்கு ஆற்றிய உரை
தாயகம் திரும்ப விரும்பும் உங்கள் பயணத்தை தடுக்கும் நோக்குடன் இங்கு நான் உரையாற்றப் போவதில்லை. ஏனெனில், என்னைப் பொறுத்தவரை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் புறப்படலாம்.
எனினும், நீங்கள் புறப்படுந் தறுவாயில், எப்படிப்பட்ட உங்களுக்கு நாங்கள் நன்மை புரிந்துள்ளோம் என்பதை உங்களுக்குப் புரியவைக்கும் நோக்குடன்தான் நான் உரையாற்றப் போகிறேன். முதற்கண் எனது தந்தை பிலிப் அவர்களை நினைவுகூர்ந்து உரையாற்றத் தொடங்குவதே நியாயம்.
நீங்கள் உழைப்புப் பிழைப்பின்றி அலைந்து திரிந்ததை அவர் கண்டார். உங்களுள் பெரும்பாலானோர் தோலாடை அணிந்து, மலைச்சாரல்களை அடைந்து, ஒருசில ஆடுகளை மேய்க்கக் கண்டார். அவற்றைப் பாதுகாக்க இலிரியர்களுடனும், திரிப்போலியருடனும், எல்லைப்புறத்து திராசியருடனும் மோதி அற்ப வெற்றி பெறக் கண்டார்.
தோலாடைகளுக்குப் பதிலாக நீங்கள் அணிவதற்கு அவர் மேலாடை தந்தார். உங்களை மலைகளிலிருந்து சமதரைக்கு இட்டுவந்து, அயலண்டையில் நிலைகொண்ட காட்டு மிராண்டிகளுடன் போரிட வல்லவர்களாக மாற்றினார். உங்களால் அணுகமுடியாத கோட்டைகளை நீங்கள் மேற்கொண்டும் நம்பியிருப்பதை விடுத்து, உங்கள் சொந்த வீரதீரத்தில் நம்பிக்கை வைத்து, உங்களை நீங்களே காத்துநின்று போரிட வல்லவர்களாக மாற்றினார். கைப்பற்றிய மாநகரங்களில் உங்களைக் குடியேற்றினார். பயன்படும் சட்டங்கள், வழக்காறுகள் கொண்டு அவற்றை ஒப்பனை செய்தார். முன்னர் உங்களையும் உங்கள் உடைமைகளையும் கொள்ளையடித்த அல்லது அழித்தொழித்த காட்டுமிராண்டிகளுக்கு அடிமை குடிமைகளாய் காலந்தள்ளிய உங்களை அதே காட்டுமிராண்டிகளுக்கே ஆட்சியாளராய் மாற்றினார்.
திரேசுப்புலத்தின் பெரும்பாகத்தை அவர் மசிடோனியாவுடன் இணைத்தார். கடலோரமாய் அமைந்த, கேந்திரம் மிகுந்த இடங்களைக் கைப்பற்றி, வணிகம் புரிந்து, நாட்டை வளங்கொழிக்க வைத்து, சுரங்கம் அகழும் துறையில் மக்களுக்குப் பத்திரமான வேலைவாய்ப்புக் கிடைக்க வழிவகுத்தார். தெசாலியர்களைக் கண்டு குலைநடுங்கிய உங்களை தெசாலியர்களுக்கே ஆட்சியாளராக்கினார். போசியர்களின் புலத்தை அடிப்படுத்தி, உங்களைத் தொந்தரவுபடுத்திய ஒடுக்கமான பாதையை அகட்டியமைத்தார்
எப்பொழுதும் மசிடோனியாவைத் தாக்கப் பதுங்கியிருக்கும் அதேனியரையும், தீபியரையும் மண்டியிட வைத்து, அவர்களுக்குத் திறைசெலுத்திவந்த எங்களுக்கு அவர்களையே திறைசெலுத்த வைத்தார். அதற்காக நானும் களம்புகுந்து அவருக்குத் துணைநின்றேன். அதேவேளை அவர்களும் எங்கள் துணையுடன் தங்களுக்குப் பாதுகாப்புத் தேடிக்கொண்டார்கள். அவர் பெலப்பொனீசுப் புலத்தினுள் ஊடுருவி, அதன் அலுவல்களை ஒழுங்குபடுத்திய பின்னர், பாரசீகர்மீது தொடுத்த போரில் எஞ்சிய கிரேக்கப் படை முழுவதற்கும் அவரே தலைமைத் தளபதி என்று முரசறையப்பட்டது. அந்தப் புகழை மேற்கொண்டும் தனக்கு உரித்தாக்காமல் மசிடோனியப் பேரரசு முழுவதுக்கும் உரித்தாக்கினார்
எனது தந்தை பிலிப்பிடமிருந்து உங்களை வந்தடைந்த நன்மைகள் அவை. அவற்றை அப்படியே நோக்கும்பொழுது அவை தம்மளவில் உயர்ந்தவை என்பதும், நீங்கள் என்னிடமிருந்து பெற்றுக்கொண்டவற்றுடன் அவற்றை ஒப்பிடும்பொழுது அவை தாழ்ந்தவை என்பதும் புலப்படும். எனது தந்தையிடமிருந்து ஒருசில பொன், வெள்ளிக் கிண்ணங்களை மட்டுமே நான் பெற்றுக்கொண்டேன். அவர் விட்டுச்சென்ற திறைசேரியில் 60 முடிச்சுப் பொற்காசு கூட இருக்கவில்லை. எனது தந்தை எனக்கு விட்டுச்சென்ற கடன் 500 முடிச்சுப் பொற்காசு. அந்தக் கடனை அடைக்கவும் இந்தச் செலவுக்குமாக நான் மேலதிகமாக 800 முடிச்சுப் பொற்காசு கடன்பட நேர்ந்தது. உங்களுக்குப் போதியளவு சம்பளம் கொடுக்க முடியாத நாட்டிலிருந்து நான் புறபட்ட கையோடு, பாரசீகரின் கடலாதிக்கத்தை ஊடறுத்து, எலெசுப்பொன்ற் புலத்துக்குள் நுழையும் வழியை உங்களுக்கு நான் காட்டினேன்
எனது குதிரைப்படை கொண்டு, பாரசீகப் பேரரசன் தேரியசின் ஆளுநர்களைத் தோற்கடித்து, உங்கள் பேரரசுடன் அயோனியா முழுவதையும், அயோலிசு முழுவதையும், பிரிசியா–இலிதியா இரண்டையும் இணைத்துக் கொண்டேன். மிலீற்றசை முற்றுகையிட்டுக் கைப்பற்றினேன். தாமாகவே மண்டியிட்ட மற்றைய புலங்கள் அனைத்தையும் கைப்பற்றினேன். அங்கெல்லாம் அகப்பட்ட செல்வங்களைப் பங்குபோடும் சலுகையை உங்களுக்கு வழங்கினேன். நான் சமரிடாது கைப்பற்றிய எகிப்திய, சைரீனிய புலத்துச் செல்வங்கள் உங்களையே வந்தடைந்துள்ளன. கொயிலீ-சீரியா, பாலஸ்தீனம், மெசொபொத்தேமியா எல்லாம் உங்கள் உடைமைகள். பபிலோன், பக்திரா, சூசா எல்லாம் உங்களுடையவை
இலிதிய, பாரசீக, இந்திய செல்வங்கள் உங்களுடையவை. புறக்கடல் முழுவதும் உங்களுடையவை. நீங்களே பதிலரையர்கள், தளபதிகள், களபதிகள். நான் இவ்வளவு பாடுபட்ட பின்னர் இந்த நாவல்நிற மேலங்கியையும், மகுடத்தையும் விட வேறெதனை எனக்கென விட்டு வைத்திருக்கிறேன்? நான் எதையும் பற்றிக்கொண்டதில்லை. உங்களுக்காக நான் கட்டிக்காத்துவரும் உங்கள் உடைமைகளையும், பொருட்களையும் விட வேறெதையும் எனது திறைசேரியிலிருந்து நான் எள்ள்ளவும் பற்றிக்கொண்டதில்லை. உங்கள் சம்பாத்தியத்தின் அளவே எனது சம்பாத்தியமும். உங்கள் உறக்கத்தின் அளவே எனது உறக்கமும். ஆதலால் உங்கள் உடைமைகளை நான் தனியே காத்துநிற்க வேண்டியதில்லை. இல்லை, உங்களிடையே ஆடம்பரமாக வாழ்வோர் சம்பாதிக்கும் அளவுக்கு நான் சம்பாதிக்கவில்லை. இரவில் நீங்கள் உறங்குவதற்கு ஏதுவாக நான் விழித்திருந்து உங்களைக் கண்காணிப்பது எனக்குத் தெரியும்.
நீங்கள் வியர்வை சிந்திப் பாடுபட்ட வேளையில், உங்கள் மெய்வருத்தத்தையும் வியர்வையையும் பகிர்ந்துகொள்ளாமல், உங்கள் தலைவன் என்ற வகையில், நான் இவற்றை ஈட்டிக்கொண்டேன் என்று உங்களுள் எவரும் கூறக்கூடும். நான் உங்களுக்காகப் பாடுபட்டதற்கு மேலாக உங்களுள் எனக்காகப் பாடுபட்டவர் யார்? உங்களுள் காயப்பட்டவர் எவரும் முன்னே வாருங்கள். உங்கள் ஆடையைக் களைந்து காயங்களைக் காட்டுங்கள். பதிலுக்கு நானும் எனது காயங்களைக் காட்டுகிறேன். எனது முன்னுடம்பில் காயப்படாத இடமே இல்லை. எதிரியை நெருங்கிப் பொருதுவதற்காகவோ, எதிரிமீது வீசுவதற்காவோ ஏந்திய படைக்கலம் எதையும் கையாண்ட அடையாளங்கள் எனது உடம்பில் புலப்படாத இடமே இல்லை
எதிரியை நெருங்கிப் பொருதிய நான் வாள்வீச்சுக்கு ஆளானவன். அம்பேறுண்டவன். எந்திரக் கணைகளால் தாக்குண்டவன். உங்கள் உயிரையும் புகழையும் செல்வத்தையும் காக்க முனைந்த வேளையில் கல்லெறியினாலும், மரக்குற்றியெறியினாலும் அடிக்கடி தாக்குண்டவன். எனினும் நிலம் எங்கும், கடல் எங்கும், ஆறுகள் எங்கும், மலைகள் எங்கும், சமவெளிகள் எங்கும் உங்களை வெற்றிவீரர்களாக நான் இட்டுவந்துள்ளேன். எனது திருமணத்துடன் உங்கள் திருமணங்களையும் நான் கொண்டாடியுள்ளேன். உங்கள் பலரதும் பிள்ளைகள் எனக்கு எனது பிள்ளைகள் போன்றவர்களே
உங்கள் சம்பளம் உயர்ந்தது. ஒரு முற்றுகை நிகழ்ந்த பின்னர் சூறையாட வாய்ப்புக் கிடைத்த ஒவ்வொரு தடவையும் நீங்கள் பெருமளவு சூறையாடியுள்ளீர்கள். எனினும் உங்களுக்குச் செலவு நேர்ந்த வேளைகளில் எல்லாம் அவற்றை நான் நுணுகி விசாரிக்காமல் செலுத்தியுள்ளேன். உங்களுள் பெரும்பாலானோர் பொன்முடி தரித்துள்ளீர்கள். என்றென்றும் அவை உங்கள் வீர நினைவுச் சின்னங்கள். அவற்றை ஈந்து உங்களை நான் மாண்புறுத்தியுள்ளேன். கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்கும் புகழார்ந்த முடிவு கிட்டியுள்ளது. மிகச்சிறந்த முறையில் அவர்கள் புதைக்கப்பட்டுள்ளார்கள்
களப்பலியான பெரும்பாலானோர்க்கு தாயகத்தில் பித்தளைச் சிலைகள் எழுப்பப்பட்டுள்ளன. அவர்களது பெற்றோர் மாண்புறுத்தப்பட்டு வருகிறார்கள். அரச சேவையிலிருந்தும், வரிவிதிப்பிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். எனினும் தப்பியோடும் எவரும் எனது ஆணையின்படி கொல்லப்பட்டதில்லை. தாயகத்தில் உள்ளோர் பொறாமைப்படும் வண்ணம் களம்புகுந்த உங்களுள் போரிடத் தகுதியற்றோரை நான் திருப்பியனுப்ப எண்ணியிருந்தேன். ஆனாலும் நீங்கள் எல்லோரும் புறப்பட விரும்புகிறீர்கள் என்றபடியால், எல்லோரும் புறப்படுங்கள்
வீடு திரும்புங்கள்! உங்கள் மன்னன் அலெக்சாந்தரை; பாரசீகரையும், மேதியரையும், பத்திரியரையும், சசியரையும் வெற்றிகொண்டவனை; அக்சியரையும், அர்கோதியரையும், திரங்கியரையும், அடிப்படுத்தியவனை; கசுப்பியன் கடல்வரை பார்த்தியரையும், கொரசுமியரையும், ஐர்க்கேனியரையும் கைப்பற்றி ஆள்பவனை; கசுப்பியன் கடல்வாயில் ஊடாக காக்கேசஸ் புலத்தை அடிப்படுத்தியவனை; ஆக்சஸ், தானேசி ஆறுகளைக் கடந்தவனை; இதுவரை தேவர்களைத் தவிர வேறெவரும் கடக்காத சிந்து நதியைக் கடந்தவனை; ஐதஸ்பெஸ், அசெசைன்ஸ், ஐதிரோதேஸ் (ஐராவதி) ஆறுகளைக் கடந்தவனை; நீங்கள் கலக்கமடைந்து பின்வாங்காவிட்டால் ஐபாசிஸ் ஆற்றைக் கடந்திருக்க வல்லவனை; சிந்துநதி முகத்துவாரங்கள் இரண்டின் ஊடாகவும் பெருங்கடலை ஊடறுத்துச் சென்றவனை; இதுவரை எவருமே படைநடத்திச் செல்லாத காற்றோசியா பாலைவனத்தை ஊடறுத்து அணிவகுத்துச் சென்றவனை; மற்றைய புலங்களை அடிமைகொண்டது போல் கரமானியா, ஒரிதிய புலங்களை அடிமைகொண்டவனை; ஏற்கெனவே இந்தியா தொட்டு பாரசீகம் வரை நீண்ட கடலின் கரையோரத்தைச் சூழ்ந்து தனது கடற்படையை நகர்த்தியவனைக் கைவிட்டு, அவனால் கைப்பற்றப்பட்ட அந்நியரிடம் அவனைப் பாதுகாக்கும்படி சொல்லிக் கையளித்துவிட்டு வீடுதிரும்பியதாக அறிவியுங்கள்!
அந்த அறிவிப்பைச் செவிமடுக்கும் மக்களின் கண்களுக்கும், அடியார்களின் கண்களுக்கும் உங்கள் புகழ் தென்படக் கூடும்; தேவர்களின் கண்களுக்கும் அது தென்படக் கூடும் என்று நம்புகிறேன். புறப்படுங்கள்!
_____________________________________________________________________
Speech by Alexander the Great, delivered at Opis, Mesopotamia in August 324 BC,
according to Greek historian Arrian c.AD 86-160, translated by Mani Velupillai.
http://www.emersonkent.com/speeches/depart_alexander.htm
No comments:
Post a Comment