இங்கிலாந்தில் இளந்தமிழருக்கு  சங்க இலக்கியம் புகட்டும்

செல்லத்தம்பி ஶ்ரீஸ்கந்தராஜா


இலண்டன்வாழ் பேரறிஞர் செல்லத்தம்பி ஶ்ரீஸ்கந்தராஜா சங்கத் தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்தில் பெயர்த்து இளந்தலைமுறைக்குப் புகட்டி வருவதை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.


எஸ். சம்பத் குமார்


இலண்டன் மாநகரம். மாத இறுதி ஞாயிறு மாலை. பிரித்தானியாவில் ஓர் இலங்கைத் தமிழர் குழுமம். பல்வேறு வயதினரையும், அறிஞரையும், இளையோரையும் கொண்ட குழுமம். தமிழ்மீது கொண்ட காதலும், தாம் குடியமர்ந்த நாட்டில் தமிழ் இலக்கிய, பண்பாட்டு மரபினைப் பேணுவதில் கொண்ட வேட்கையும் அவர்களைப் பிணைத்து வைத்துள்ள. அன்று குறுந்தொகை எனும் சங்க இலக்கியத்தில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த செய்யுட்களின் நயநுட்பங்களை அலசி ஆராய்வதற்காக அவர்கள் கூடியிருந்தார்கள். 


இன்று உலகம் முழுவதும் தமிழர் புலம்பெயர்ந்து வாழுகின்றனர். உலக மாநகரம் ஒவ்வொவொன்றிலும் ஒரு தமிழ்ச் சங்கம் உண்டு. எனினும் இவற்றுள் பெரும்பாலானவை தமிழ் விழாக்களையும், கேளிக்கை நிகழ்ச்சிகளையும், திரைப்படக் கலைஞர்கள் வந்து கலந்துகொள்ளும் கூட்டங்களையும் நடத்துவதில் ஈடுபட்டுள்ளன.


நாம் முன்னர் கூறியது ஓர் இலக்கியக் கூட்டம். இலக்கியத்தை மட்டுமே அலசி ஆராயும் கூட்டம். அன்றைய தலைப்பு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. செவிமடுத்து, அலசி ஆராய்ந்து, உறவாடுவதற்கு அறவே தயாராக அவர்கள் கூடியிருந்தார்கள். 



கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கூடிவரும் மேற்படி குழுமத்தின் நிறுவனர் செல்லத்தம்பி ஶ்ரீஸ்கந்தராஜா. 80 வயது கடந்த ஒரு சட்டத்துறைஞர். தமிழ் மீதும், தமிழ்ப் பண்பாடு மீதும் காதல் கொண்டவர். பெருந் தமிழறிஞராகிய தனது மாமனாரின் நினைவாக வித்துவான் வேலனார் இலக்கிய வட்டம் என்று இதற்கு அவர் பெயரிட்டுள்ளார். தமிழ் இலக்கியம் குறித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் 17 நூல்களை எழுதியுள்ளார். அத்துடன், அவர் ஒரு பேர்போன கவிஞரும் கூட. 


ஶ்ரீஸ்கந்தராஜா திருச்சியில் அறிவியல் கற்றார். பிறகு இலங்கை சட்ட வரைநர் திணைக்களத்தில் பணியாற்றிய காலத்தில் தமிழும், சிங்களமும் நீதிமன்ற மொழியாக விளங்க வேண்டும் என்று வாதாடினார். சட்டங்கள், சட்ட ஆவணங்கள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். அதற்காக புதிய தமிழ்ச் சொற்களையும், தொடர்களையும் அவர் உருவாக்க நேர்ந்தது. இலங்கையின் அன்றைய தலைமை நீதியரசர் சர்வானந்தா அவர்கள் ஶ்ரீஸ்கந்தராஜாவுக்குத் துணைநின்று ஊக்குவித்தார்.  தமிழும், சிங்களமும் நீதிமன்ற மொழியாக விளங்க வேண்டும் என்பதே தலைமை நீதியரசரின் ஆசையும் கூட. 


இலங்கையில் அரசியல் சூழ்நிலை மாறியதை அடுத்து,  நைஜீரியாவில் ஆறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றும் பொருட்டு, ஶ்ரீஸ்கந்தராஜா நாட்டை விட்டுப் புறப்பட்டார். பிறகு இலண்டனுக்குப் பெயர முடிவுசெய்து, இலண்டன் பொருளியல் கல்லூரியில் சேர்ந்து சட்டத்துறையில் மேலதிக பட்டம் பெற்று, தலைமைச் சட்ட அதிகாரியாகப் பதவியேற்று, இலண்டனிலேயே குடியமர்ந்தார்.  



“சட்டமே எனது அடுப்பை புகைய வைத்தது. எனினும் எனது அகமும் ஆவியும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் என்று கூவியதை நான் உணர்ந்து கொண்டேன். தமிழ் ஓர் அரும்பெரும் மொழி. எமது இளையோரின் தாய்மொழி. எனினும் தமிழுடன் கொண்ட உறவை அவர்கள் இழந்து நிற்கிறார்கள். அவர்களை தமிழின்பால் ஈர்க்க ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தை உந்தியது” என்கிறார்  ஶ்ரீஸ்கந்தராஜா.


தனது முதலாவது நூலை 1993ல் அவர் வெளியிட்டார். The Ethical Essence of Tamils எனும் தலைப்புடன் கூடிய அந்நூல் திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பாகும். திறனாய்வாளர்களால் அது ஏற்றிப் போற்றப்பட்டது. இலண்டனிலிருந்து வெளியிடப்பட்ட Tamil Voice International எனும் செய்தித்தாளில் Tamil Literary Scenes எனும் தலைப்புடன் கூடிய ஆங்கில மொழிபெயர்ப்புத் தொடரை அவர் எழுதி வந்தார். அதில் சங்க இலக்கியச் செய்யுட்கள் சிலவற்றை அவர் தேர்ந்தெடுத்து, மொழிபெயர்த்து, முன்வைத்தார். இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர் விளைவித்த அரசியல் நிர்ப்பந்தங்களால், அச்செய்தித்தாளின் வெளியீடு நிறுத்தப்பட்டமை ஒரு தீயூழ் எனலாம். அதே தொடரை வேறு ஊடகங்களில் அவர் தொடர்ந்து எழுதி வந்தார். எனினும் அவையும் பிறகு முடங்கிப் போயின. 



“அதன் பிறகுதான் Tamil Literary Scenes நூலை நான் பூர்த்திசெய்து, எனது செலவில், நானே வெளியிடத் தீர்மானித்தேன். அது சங்கத் தமிழ் இலக்கியத்துக்கு ஓர் அறிமுகம் ஆகும். சங்கச் செய்யுள் சான்றுபகரும் பழந்தமிழரின் பெருமைவாய்ந்த பண்பாட்டை, அவர்களின் காதல்வாழ்வை, வீரதீரத்தை, தயாளசிந்தையை மாத்திரமன்றி, சங்கச் செய்யுளின் வனப்பையும் வண்மையையும் விளக்கி உரைக்கும் நூல் அது” என்கிறார்  ஶ்ரீஸ்கந்தராஜா.


அந்த நூலுக்கு கிடைத்த வரவேற்பினால் உந்தப்பெற்று, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்களை, அவர் ஆங்கிலத்தில் சுருக்கி மொழிபெயர்க்கத் தலைப்பட்டார். “எனது மனைவி உணர்த்தியது போல, ஆங்கிலேயருக்கு அவ்விரு காப்பியங்களையும் அறிமுகப்படுத்தும் முயற்சியாகவும் அது அமைந்தது” எனறு கூறுகிறார் ஶ்ரீஸ்கந்தராஜா. 


ஏற்கெனவே அமரர் ஏ. கே. இராமானுஜர் ஊடாக ஆங்கிலேயருக்கு சங்கச் செய்யுள் மீது ஒரு குறும்பார்வை கைகூடியதுண்டு. சிக்காகோ பல்கலைக்கழகப் பேராசிரியராகிய இராமானுஜர் மொழிபெயர்த்த தமிழ்க் காதல் செய்யுட்கள் இன்று இலண்டன் சுரங்கத் தொடருந்துகளை அணிசெய்கின்றன. லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோங், ஆர். பார்த்தசாரதி இருவரும் சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்கள். கூடவே மற்றக் காப்பியமான மணிமேகலையையும் மொழிபெயர்த்தவர் ஶ்ரீஸ்கந்தராஜாவே எனலாம். 


செவ்வியல் தமிழ் இலக்கியத்தை மேல்நாட்டு வாசகருக்கு அறிமுகப்படுத்த மெச்சத்தக்க முறையில் அரும்பாடுபட்ட அனைவரையும் ஶ்ரீஸ்கந்தராஜா நன்றியுணர்வுடன் நினைவுகூருகின்றார். “கால்டுவெல், போப்பையர், வீரமாமுனிவர் போன்ற சமயபோதகர்கள் இல்லையேல், மேல்நாட்டவர்கள் வடமொழியிலிருந்து வேறுபட்டு, தனித்துவத்துடன் மிளிரும் தமிழ்மொழியின் அரும்பெருங் கொடையை அறிந்திருக்க மாட்டார்கள்” என்றும் அவர் கூறுகிறார். 


அதேவேளை, “இம்மொழிபெயர்ப்புகள் கூட வழுவற்றவை ஆகா. எடுத்துக்காட்டாக, ‘செந்நாப்புலவர்’ என்ற தமிழ்ச் சொல்லை 'Red-tongued Poet’ என்று பெயர்த்துள்ளார் இராமானுஜர். உண்மையில் a poet with fine language skills, or simply a great poet என்பதே அச்சொல்லின் பொருள்” என்று வலியுறுத்துகிறார் ஶ்ரீஸ்கந்தராஜா.


2010-ல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில், தமிழ்ச் செவ்விலக்கிய மொழிபெயர்ப்பு பற்றிய தனது கருத்துக்களை விளக்கி, அவர் ஓர் ஆய்வுரை நிகழ்த்தினார். 


அவ்வையாரின் படைப்புகளுக்கு அவர் முன்வைத்த ஆங்கில மொழிபெயர்ப்பினை ஓர் அரும்பெரும் கொடை என்று பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் மருதநாயகம் போற்றியுள்ளார். “ஶ்ரீஸ்கந்தராஜா சொல்லுக்குச் சொல்லாக் மொழிபெயர்ப்பதை விடுத்து, பொருளுக்குப் பொருளாக மொழிபெயர்த்துள்ளார். அதுவே சரியான மொழிபெயர்ப்பு. புலவரது பரந்து விரிந்த பட்டறிவும், நுழைபுலமும், ஆழ்பொருளும் தெள்ளத்தெளிவாகப் புலப்படும் வண்ணம் ஶ்ரீஸ்கந்தராஜா மொழிபெயர்த்துள்ளார்” என்கிறார் பேராசிரியர். 


நடத்தை விதிக்கோவை 


வெளிநாடுகளில் வாழும் இளந்தமிழர்கள் தமது மரபார்ந்த நல்வழக்காறுகளையும், நல்லொழுக்கத்தையும் கைக்கொள்ள வேண்டும் என்பதில் கரிசனை கொண்ட ஶ்ரீஸ்கந்தராஜா, அறநெறிச்சாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அன்றாட வாழ்வில் தக்கவை, தகாதவை அடங்கிய ஒரு நடத்தை விதிக்கோவை அதில் வரையறுக்கப்பட்டுள்ளது. 


வெளிநாட்டுத் தமிழருக்காக மறைஞான நூலாகிய திருமந்திரத்துக்கு தமிழிலும், பெரியபுராணத்துக்கு ஆங்கிலத்திலும் ஓர் அறிமுகம் எழுதியிருக்கிறார் ஶ்ரீஸ்கந்தராஜா. அத்துடன் தமிழ் இலக்கணத்துக்கு ஓர் எளிய வழிகாட்டி நூலும் எழுதியிருக்கிறார். 


தனது தமிழ்க் கவிதைகளையும் இரண்டு நூல்களாக அவர் வெளியிட்டுள்ளார். தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட வேட்கையினால், இலண்டனில் தனது மகளின் திருமணத்தை அடுத்து அவர் ஏற்பாடுசெய்த இசை நிகழ்ச்சியுடன் கூடிய விருந்தோம்பலின் பொழுது, தமிழ்ப் பாட்டுகள் மாத்திரமே, குறிப்பாக சங்க இலக்கியமாகிய கலித்தொகையிலிருந்து காதல் செய்யுட்களே இசைக்கப்பட வகைசெய்தார். 


அவர் மனைவி மதினி ஒரு தலைசிறந்த இசைக்கலைஞர். இசைக் காணொலிப் பதிவுகள் பலவற்றை வெளியிட்ட பெருமைக்கு உரியவர். மாணிக்கவாசகரின் சிவபுராணம் அவற்றுள் ஒன்று. மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேரராகிய இராஜ்குமார் பாரதி அதற்கு இசையமைத்துள்ளார்.  

__________________________________________________________________________

“Sellathamby Sriskandarajah teaches Tamil classics to the youth abroad” by S. Sampath Kumar, (a scholar in Sangam Literature and was the editor of BBC Tamil Osai, London), The Hindu, Chennai, 2020-05-28,  translated by Mani Velupillai, 2022-07-17.

https://www.thehindu.com/society/history-and-culture/he-reaches-tamil-classics-to-the-youth-abroad/article31693091.ece

No comments:

Post a Comment