இலங்கையின் இனப்படைபலம்
1947ல் இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி டி. எஸ். சேனநாயக்கா பிரித்தானியாவுடன் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையில் ஒப்பமிட்டார். அதன்மூலம் பிரித்தானியரின் நல்லெண்ணத்தை சம்பாதித்து, இலங்கையின் முழுவிடுதலையை விரைவுபடுத்த முடியும் என்று அவர் நம்பினார்.
அதன்படி திருகோணமலையில் ஒரு பிரித்தானிய கடற்படத் தளமும், கட்டுநாயக்காவில் ஒரு வான்படைத் தளமும் நிலைகொண்டிருந்தன. அவையும் பொதுநலவாயமும் இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பது அவர் நம்பிக்கை.
அவர் எதிர்பார்த்தவாறு 1948ல் இலங்கை முழுவிடுதலை பெற்றபொழுது, நாட்டின் பாதுகாப்புக் குறித்து ஒரு வினாவும் எழவில்லை. ஆகவே பாதுகாப்புக்கென ஒரு தனி அமைச்சு அமைக்கப்படவில்லை. பிரதம மந்திரியே பாதுகாப்பு - வெளியுறவு அமைச்சராக விளங்கினார்.
டி. எஸ். சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா, ஜோன் கொத்தலாவலை, எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா ஆகிய முதல் நான்கு பிரதம மந்திரிகளும் நாட்டின் பாதுகாப்பினைக் குறித்து மேற்கொண்டு அலட்டிக்கொள்ளாமல், வேறு அலுவல்களில் புலனைச் செலுத்தினார்கள்.
1947ல் இலங்கையும் பிரித்தானியாவும் செய்துகொண்ட பாதுகாப்பு உடன்படிக்கையை, 1956ல் தனிச்சிங்கள மந்திரத்தை உச்சரித்து ஆட்சியில் அமர்ந்த பண்டாரநாயக்கா, முடிவுறுத்தினார். அப்பொழுது அவர் விதந்துரைத்த பாதுகாப்புக் கொள்கை கவனிக்கத்தக்கது:
“நாங்கள் ஒரு சிறிய நாட்டவர்கள். எம்மைத் தாக்க விளையும் வலிய நாடு எதுவும் ஒருசில நாட்களில் தோற்கடிக்க முடியாத படைபலம் எம்மிடம் இல்லை. எம்மைப் போன்ற சிறிய நாட்டவர் எவரும், வெளியாரின் தாக்குதல்களை திட்பமான முறையில் எதிர்கொள்ளும் நோக்குடன் ஒரு பாதுகாப்புப் படையினைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுமில்லை. நாம் வானிலோ, கடலிலோ, தரையிலோ வெல்ல வாய்ப்புமில்லை. எம்மால் வெல்லவே முடியாது.”
“உலக அரசியலைப் பொறுத்தவரை சுவிற்சர்லாந்து கடைப்பிடிப்பது போன்ற கொள்கையையே இலங்கையும் கடைப்பிடிக்க வேண்டும். அது ஒரு சிறிய நாடு. தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த அது படைபலத்தை நம்பியிருக்கவில்லை. நடுநிலைமைக் கொள்கை ஒன்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் தனது சுதந்திரத்தை அது வெற்றிகரமாகப் பேணிவந்துள்ளது. அதே போல உலக அரசியலில் இலங்கையும் ஒரு நடுநிலைமைக் கொள்கையைக் கடைப்பிடித்து, பிறநாடுகளுடன் நட்புறவும் நல்லெண்ணமும் பாராட்ட வேண்டும். சூழ்வியலே (இராசதந்திரமே) இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டின் பாதுகாப்புக்கு முன்னணியாக விளங்க வேண்டும்” (இலங்கை தகவல் திணைக்களம், 1976).
1960ல் சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியேற்ற பிற்பாடு, (1962ல்) ஓர் ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொள்வதற்கு சில மூத்த படையினரும், காவல்துறையினரும் தீட்டிய சதி அம்பலப்பட்டது. அகப்பட்ட சதிபதிகள் நீதிமன்றின்முன் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு உள்ளானார்கள்.
இப்பொழுது படைபலத்தைப் பெருக்க நியாயம் இருந்தும் கூட, அது குறித்து உருப்படியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பெருக்கப்படும் படைபலத்தினால் அரசுக்கு மீளவும் ஆபத்து விளையலாம் என்று ஆட்சியாளர் அஞ்சியதே அதற்கான காரணம்.
1971ல் இன்றைய அரசதிபரின் அன்றைய ஆசான் உரோகண விஜேவீராவின் தலைமையில் தென்னிலங்கை இளைஞர்கள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டம், வெளியுலக உதவியுடன் முறியடிக்கப்பட்ட பின்னரும் கூட, படைபலத்தைப் பெருக்க உருப்படியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
1983ல் வட, கீழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதித்த பின்னரே நாட்டின் படைபலம் அதிரடியாகப் பெருக்கப்பட்டது. 1984ல், இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, ஒரு தேசிய பாதுகாப்பு அமைச்சு தோற்றுவிக்கப்பட்டது. லலித் அத்துலத்முதலி தேசிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பகைநாடுகளோ வல்லரசுகளோ அல்ல இலங்கைப் படையினரின் இலக்கு. பண்டாரநாயக்கா சுட்டிக்காட்டியது போல், அவற்றை “எம்மால் வெல்லவே முடியாது”. உள்நாட்டில் - வட, கீழ் மாகாணங்களில் - உணர்ச்சிவசப்பட்டு ஆயுதம் ஏந்திய இளைஞர்களே இலங்கைப் படையினரின் இலக்கு.
1983ல் கொல்லப்பட்ட 13 படையினரும், அதற்குப் பழிவாங்கு முகமாக கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான குடிமக்களும் வெவ்வேறு இனத்தவர்கள். படையினரைக் கொன்றவர்களும், குடிமக்களைக் கொன்றவர்களும் வெவ்வேறு இனத்தவர்கள்.
ஆனானப்பட்ட ஞானசார தேரரே அந்த இன வேறுபாட்டை வெட்டொன்று துண்டிரண்டாகப் பிட்டுக் காட்டினார். 2014ல் முஸ்லீங்கள் தாக்குதலுக்கு உள்ளாகுந் தறுவாயில் அழுத்கமையில் வைத்து அவர் இட்ட முழக்கம் இது:
“இந்த நாட்டில் இன்னமும் ஒரு சிங்களக் காவல்துறையும், சிங்களப் படையும் இருக்கின்றன. இனி ஒரு முஸ்லீமோ, வேறொரு பிறவியோ ஒரு காவி ஆடையில் என்ன, வெறுமனே ஒரு சிங்களவரில் கை வைத்தாலே போதும், இப்பிறவிகளின் கதை ஒரு முடிவுக்கு வந்துவிடும்.”
ஏனைய ஏழு மாகாணங்களையும் விடுத்து வட, கீழ் மாகாணங்களில் மாத்திரமே தமது பாசறைகளில் மட்டுமல்லாது, குடிமக்களுக்குச் சொந்தமான வீடுவளவுகளிலும், காணிபூமிகளிலும், மூலைமுடுக்குகளிலும் படையினர் பல தசாப்தங்களாக நிலைகொண்டுள்ளார்கள்.
வட, கீழ், மலையகப் பகுதிகளில் ஓர் இனக்காவல்துறை வேறு நிலைகொண்டுள்ளது. முப்படைகளில் மட்டுமல்ல, காவல்துறையிலும் சிங்களவர் அல்லாத எவரும் கீழ்மட்டப் பதவி வகிப்பதே அரிது; மேல்மட்டப் பதவி மட்டும் ஒரு கேடா?
வட, கீழ் மாகாணங்களில் ஒரு கோயிலையோ, பள்ளிவாசலையோ, தேவாலயத்தையோ இவர்கள் கட்டியதில்லை. மாறாக, விகாரைகள் கட்டுகிறார்கள். விடுதிகள் நடத்துகிறார்கள். பயிர் செய்கிறார்கள். தமது விளைச்சல்களை சந்தைப்படுத்துகிறார்கள்…
படையணிகளுக்கு சிங்கள மூதாதையரின் பெயரும், சிங்கள மன்னர்களின் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன: சிங்கப் படையணி, கெமுனு, கஜபாகு, விஜயபாகு படையணிகள்; கஜபாகு, விஜயபாகு, பராக்கிரம்பாகு கடற்படைக் கப்பல்கள்… தமது தாக்குதல்களுக்கு கூட அத்தகைய பெயர்களையே சூட்டினார்கள்.
(சேமப் படையைத் தவிர்த்து), தற்பொழுது பணியாற்றிவரும் (தரை, வான், கடல்) படையினரின் மொத்த எண்ணிக்கையை நாடுவாரியாக ஒப்புநோக்கும் எவரும் இலங்கையின் இனப்படைபலம் கண்டு மலைத்தல் திண்ணம்:
வட, கீழ் மாகாணங்களின் மொத்தக் குடித்தொகை ஏறத்தாழ 30 இலட்சம். ஒவ்வொன்றும் பருமட்டாக 20,000 படையாட்களைக் கொண்ட 19 படைப்பிரிவுகளுள் 16 பிரிவுகள் இவ்விரு மாகாணங்களிலும் நிலைகொண்டுள்ளன; மொத்தம் 3,20,000 படையாட்கள்; பருமட்டாக 10 பேருக்கு ஒரு படையாள்!
பாதுகாப்பு அமைச்சுக்கு 2025ம் ஆண்டுக்கான செலவுக்காக 38,200 கோடி ரூபா ஒதுக்கப்படுள்ளது. வேறு சில ஒதுக்கீடுகளுடன் இதை ஒப்பிடும்பொழுது, இதன் தாக்கமும் அபத்தமும் தெரியவரும்:
1983 முதல் இற்றைவரை படைச்செலவும், மண்கொள்ளையும், மணற்கொள்ளையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து பெருகி வந்துள்ளன. 2009ல் போர் முடிந்தபிறகும் கூட. நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை. ஈற்றில், 2022ல், பட்ட கடனை அடைக்க வக்கின்றி, சர்வதேய நாணய நிதியத்திடம் ஆட்சியாளர் மண்டியிட நேர்ந்தது.
அரசியல்வாரியான ஊழலிலிருந்து படைத்துறை மீட்கப்படும் என்று புதிய விளக்குமாறு எனத்தக்க தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது:
படைத்துறை நவீனமயப்படுத்தப்படும்
தளபதிகளுக்கு பணிநீடிப்பு இல்லை
அரசியல் நியமனங்கள் தவிர்க்கப்படும்
படை உளவுத்துறை சீரமைக்கப்படும்
தீவிர மதவாதம், நாடுகடந்து புரியும் குற்றம், கள்ளக்கடத்தல் என்பவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
பிரிவினைவாதம் மீண்டும் தலைதூக்காவாறு பார்க்கப்படும்.
“அரசியல்வாரியான ஊழல்களுள்” படைத்துறையிலும், காவல்துறையிலும் புகுத்தப்பட்ட இன, மத, மொழிச் சார்பு உள்ளடக்கப்படவில்லை. அவற்றை பல்லினப் படைத்துறையாகவும், பல்லினக் காவல்துறையாகவும் சீரமைப்பது பற்றிக் குறிப்பிடப்படவிலை.
பிரிவினைவாதம் திரும்பவும் தலைதூக்காவாறு பார்ப்பதற்கு, மனித உரிமைகளை மதித்து நடப்பது ஒரு குறுக்குவழி ஆகுமே! இலங்கை விடுதலை பெற்ற அதே ஆண்டில், 1948ல், ஐ. நா. பறைசாற்றிய, இலங்கை ஒப்பமிட்ட, மனித உரிமைப் பிரகடனம்:
“இனம், நிறம், பால், மொழி, சமயம், அரசியல் அபிப்பிராயம் அல்லது வேறு அபிப்பிராயம், தேசியத் தோற்றுவாய் அல்லது சமூகத் தோற்றுவாய், உடைமை, பிறப்பு அல்லது வேறு தகுநிலை போன்ற பாகுபாடு எதுவுமின்றி அனைவரும் இப்பிரகடனத்தில் எடுத்துரைக்கப்பட்ட உரிமைகள் சுதந்திரங்கள் அனைத்துக்கும் உரித்துடையவர்கள். மேலும், ஒருவரது நாடு அல்லது ஆள்புலம் சுதந்திரமானதாகவோ, நம்பிக்கைப் பொறுப்பாள்புலமாகவோ, தன்னைத் தானே ஆளாததாகவோ, வேறு வகையில் இறைமை மட்டுப்பட்டதாகவோ விளங்கினாலும் கூட, அதன் அரசியல் தகுநிலையை அல்லது நியாயாதிக்க தகுநிலையை அல்லது சர்வதேய தகுநிலையை அடிப்படையாகக் கொண்டு அவருக்குப் பாகுபாடுஇலங்கை ஒப்பமிட்ட,காட்டலாகாது.”
மனித உரிமைப் பிரகடனத்தையும், குடியாட்சி விழுமியங்களையும் மீறியே 1948ல் மலையக மக்களின் குடியுரிமை பறிப்பு, வட-கீழ் மாகாணங்களில் பிற மாகாணத்தவர்களின் குடியேற்றங்கள், 1956ல் தனிச் சிங்களச் சட்டம், 1972ல் பெளத்தம் அரச மதம், தரப்படுத்தல்… எல்லாம் அரங்கேற்றப்பட்டன.
அத்தகைய உரிமை மீறல்களை எதிர்கொள்வதற்காக (1949ல்) தமிழரசுக் கட்சி ஓர் இணைப்பாட்சி முறைமையை முன்வைத்தது. ஏற்கெனவே, 1815ல் கண்டி மூப்பர்களும், 1926ல் பண்டாரநாயக்காவும் கூட அத்தகைய இணைப்பாட்சி முறைமையை விதந்துரைத்திருந்தார்கள்!
கண்டி மூப்பர்களும், பண்டாரநாயக்காவும் விதந்துரைத்த இணைப்பாட்சி முறைமையை தமிழரசுக் கட்சி முன்வைத்தபொழுது, அது பிரிவினைவாதம் என்றும் பிற்போக்குவாதம் என்றும் கண்டிக்கப்பட்டது. ஜின்னா எதிர்கொள்ளாத கண்டனங்களை செல்வா எதிர்கொண்டார்.
அதேவேளை 1976ல் தமிழ் ஈழக் கோரிக்கையை, அதாவது உண்மையான பிரிவினைக் கோரிக்கையை முன்வைத்து, அவர் தலைமையில் “வட்டுக்கோட்டை தீர்மானம்” நிறைவேற்றப்பட்டதை அடுத்து முளைவிட்ட ஆயுதப் போராட்டம் பயங்கரவாதம் என்று சாடப்பட்டது.
புதிய அரசதிபர் “எல்லோரும் இலங்கையர்” என முழங்கி வருகிறார். இது ஓநாய்கள் ஆடுகளை விளித்து “எல்லோரும் விலங்குகள்” என்று முழங்குவதற்கு நிகரானது. “எல்லோரும் இலங்கையர்” என்று பெரும்பான்மை இனத்தவர் முழங்குவது முக்கியமில்லை.
சிறுபான்மை இனத்தவர்கள் மனமுவந்து தம்மை “இலங்கையர்” என்று முழங்குவதற்கு ஏதுவாகப் பெரும்பான்மை இனத்தவர் ஒழுகுவதே முக்கியம். வட, கீழ், மலையக மக்களை பெரும்பான்மை இனத்தவர் இலங்கையராக மதித்து நடத்துவதே முக்கியம்.
“மாற்றம்” பற்றியும், “தூய இலங்கை” பற்றியும் அரசதிபர் வேறு முழங்கி வருகிறார். அந்த முழக்கத்தில் கூட வட, கீழ் மாகாணங்களிலிருந்து படைகளை விலக்குவது பற்றியோ குறைப்பது பற்றியோ அவர் மூச்சும் காட்டவில்லை. அவர் மாட்டுக்கு முன்னே வண்டியைப் பூட்டுகிறார்.
தமது பதவியேற்பு நிகழ்விலும், அமைச்சரவையை அமைத்தபிறகு நாடாளுமன்றத்திலும், இந்தியாவிலும், தூய இலங்கை உரையிலும் அரசதிபர் எதை திட்டமிட்டு, வேண்டுமென்றே தவிர்த்துக்கொண்டாரோ, அதுவே இந்த நாட்டின் தலையாய பிரச்சனை.
புதுக்க வரையப்படும் அல்லது தூசுதட்டி எடுக்கப்படும் யாப்பினை, மெருகூட்டப்படும் சட்டங்களை, மாறுவேடம் அணிவிக்கப்படும் நிருவாகத்துறையை, படைத்துறையை, காவல்துறையைக் கொண்டு நாட்டுப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது.
“எந்த மனநிலையில் ஒரு பிரச்சனை தோற்றுவிக்கப்பட்டதோ, அந்த மனநிலையைக் கொண்டு அப்பிரச்சனையைத் தீர்க்க முடியாது” (ஐன்ஸ்டைன்).
மணி வேலுப்பிள்ளை, 2025-01-10
No comments:
Post a Comment