காலநிலை மாற்றம்
கிரேதா தன்பேர்க்
நாங்கள் உங்களை அவதானித்துக் கொண்டிருப்போம். உங்களிடம் நான் தெரிவிக்கும் சேதி அதுவே.
இது முற்றிலும் தவறான நிலைவரம். நான் இங்கு வந்திருக்கக் கூடாது. எழுகடலுக்கு அப்பால் பள்ளிக்கூடத்துக்கு திரும்பவேண்டிய சிறுமி நான். எனினும் எங்கள் இளந்தலைமுறையிடமே நீங்கள் நம்பிக்கையை நாடி வருகின்றீர்கள். அப்படிச்செய்ய உங்களுக்கென்ன துணிச்சல்!
உங்கள் வெற்றுச் சொற்களைக் கொண்டு எனது கனவுகளையும் பாலியத்தையும் நீங்கள் திருடிவிட்டீர்கள். எனினும் நற்பேறு பெற்றவர்களுள் நானும் அடங்குவேன். அதேவேளை மக்கள் வருந்துகிறார்கள். மக்கள் இறக்கிறார்கள். சூழல்தொகுதிகள் முழுவதும் நிலைகுலைகின்றன. பாரிய அழிந்தொழிவு துவங்குந் தறுவாயில் உங்களால் பணத்தைப் பற்றியும், நிலைபெற்ற பொருளாதார வளர்ச்சி தொடர்பான மாய்மாலக் கதைகளைப் பற்றியுமே கதைக்க முடிகிறது. அப்படிச்செய்ய உங்களுக்கென்ன துணிச்சல்!
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அறிவியல்துறை தெட்டத் தெளிவாகத் தெரிவித்துவரும் உண்மையைப் புறக்கணித்துவிட்டு, மேற்கொள்ளவேண்டிய அரசியல் நடவடிக்கைகளையும் தீர்வுகளையும் மேற்கொள்ளாமல் இருந்துவிட்டு, இங்கு வந்து "நாங்கள் போதியளவு செயற்பட்டு வருகின்றோம்" என்று சொல்ல உங்களுக்கென்ன துணிச்சல்!
எங்களைக் காதுகொடுத்துக் கேட்பதாகவும், அவசரத்தைப் புரிந்துகொள்வதாகவும் கூறுகின்றீர்கள். அதைக் கேட்டு நான் எவ்வளவு கவலையும் சீற்றமும் அடைகிறேன் என்பது வேறு கதை. ஆனால் உங்களை நான் நம்பத் தயாராக இல்லை. ஏனெனில், நீங்கள் உண்மையிலேயே நிலைவரத்தைப் புரிந்துகொண்டிருந்தும் கூட, தொடர்ந்தும் செயற்படத் தவறியவர்கள் என்றால், நீங்கள் தீயவர்கள் ஆவீர்கள். என்னால் அதை நம்பவே முடியவில்லை.
பத்து ஆண்டுகளுள் எங்கள் கால்வுகளை அரைவாசியாகக் குறைக்கும் பேர்போன எண்ணத்தின்படி நாங்கள் 1.5 பாகை செல்சியசை விடக் குறைவான நிலையை அடையும் வாய்ப்பு 50% மாத்திரமே. அத்துடன் மனிதரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு, மனிதரால் கட்டுப்படுத்த முடியாவாறு, தொடரடி விளைவுகளை அது முடுக்கிவிடும் ஆபத்தையும் நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்.
மேற்படி 50% என்பது நீங்கள் ஏற்கக்கூடிய எண்ணிக்கை ஆகலாம். ஆனால் அந்த எண்ணிக்கையில் மேவுபுள்ளிகள், மீளூட்டுதடங்கள், நச்சுவளி மாசினுள் மறையும் மேலதிக வெக்கை, காலநிலை ஒப்புரவு, காலநிலை நீதி போன்ற அம்சங்கள் அடங்கவில்லை. அவையும் எனது இளந்தலைமுறையயே நம்பியுள்ளன. தற்பொழுது பெரிதும் இல்லாத தொழினுட்பவியல்கள் மூலம் உங்கள் கரியமிலவாயுவில் கோடிக்கணக்கான தொன்களை அவை வளியிலிருந்து உறிஞ்சியெடுக்கின்றன.
எனவே 50% வாய்ப்பு, அதன் விளைவுகளுடன் வாழவேண்டிய எங்களுக்கு, உடன்பாடானதல்ல. அவ்வளவுதான்!
1.5 பாகை புவி வெப்ப உயர்வினுள் நிலைகொள்ள 67% வாய்ப்பை காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கு இடைப்பட்ட குழாம் விதந்துரைத்தது. அந்த வாய்ப்பை அடைய 2018 சனவரி 1-ம் திகதி வாக்கில் 42,000 கோடி தொன் வரையான கரியமிலவாயுவை உலகம் காலவேண்டியிருந்தது. இன்று ஏற்கெனவே அந்த எண்ணிக்கை 35,000 கோடியிலும் குறைவான தொன்வரை தாழ்ந்துள்ளது.
இந்தப் பிரச்சனைக்கு "வழமையான அலுவல்" மூலமாகவும், சில தொழினுட்ப பரிகாரங்கள் மூலமாகவும் தீர்வுகாண முடியும் என்று பாவனை செய்ய உங்களுக்கென்ன துணிச்சல்! இன்றைய கால்வுகளின்படி எஞ்சிய கரியமிலவாயு வரம்பு எட்டரை ஆண்டுகளுள் முற்றிலும் எட்டப்பட்டுவிடும்.
இந்த எண்ணிக்கைகளுக்கு ஏற்ற தீர்வுகள் அல்லது திட்டங்கள் எவையும் இன்று இங்கு முன்வைக்கப்படப் போவதில்லை. ஏனெனில் இவை மிகவும் எரிச்சலூட்டும் எண்ணிக்கைகள். உள்ளதை உள்ளபடி ஒப்புக்கொள்ளப் போதிய முதிர்ச்சியை நீங்கள் இன்னும் எய்தவில்லை.
நீங்கள் எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறீர்கள். உங்கள் காட்டிக்கொடுப்பை இளந்தலைமுறை புரிந்துகொள்ளத் துவங்கியுள்ளது. வருங்காலத் தலைமுறையினர் அனைவரும் உங்களைக் கண்காணித்து வருகின்றார்கள். நீங்கள் தொடர்ந்தும் எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வழியைத் தேர்ந்தெடுத்தால், நாங்கள் என்றுமே உங்களை மன்னிக்க மாட்டோம் என்பதை இத்தால் உங்களிடம் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
இப்படிச் செய்துவிட்டு நீங்கள் தப்பிச்செல்ல நாங்கள் விடப்போவதில்லை. இங்கேயே, இப்பொழுதே உங்களுக்கு நாங்கள் கோடு கிழிக்கின்றோம். உலகம் விழித்தெழுகின்றது. நீங்கள் விரும்பினால் என்ன, விரும்பாவிட்டால் என்ன, மாற்றம் வருகின்றது.
நன்றி!
_____________________________________________________________________
Greta Thunberg, Climate Change, UN, 2019-09-23, translated by Mani Velupillai.
No comments:
Post a Comment