உறு வரிகே வன்னிய அத்தோ
இந்த நிலம் அரசியல்வாதிகளுக்கு சொந்தம் அல்ல
இந்த நாட்டின் மூத்த வேடுவகுலம் இங்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது. "வரிக சபா" (வருட சபை) எனப்படும் வேடுவகுல மன்றம் ஆண்டுதோறும் கூடி, ஏறத்தாழ 5 இலட்சம் குலமக்கள் சார்பில் முக்கிய முடிபுகளை எடுத்து வருகிறது. உலக தொல்குடிமக்கள் நாளில் (Day of the World's Indigenous People) அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அது கூடுவது வழக்கம். இந்த ஆண்டு தம்பனை (Dambana) என்னும் இடத்தில் வேடுவ குலமன்றம் கூடியது. இப்பாரம்பரிய பண்டிகைக்கு அரசாங்கத்தின் நிதியுதவியை ஏற்பதில்லை என்றும், அரசாங்க தலைவர்களை வரவழைப்பதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது. சமூக, பண்பாட்டு, பொருளாதார ஊடுருவல்களுக்கு எதிராகப் போராடும் வேடுவ குலபதி உறு வரிகே வன்னிய அத்தோ, அரசாங்கத்தின் நிதியுதவியை ஏற்பதில்லை என்று தாம் முடிவெடுத்த காரணத்தையும், தமது பண்பாட்டைப் பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளையும் எமக்கு விளக்கியுரைத்தார். அவர் எமக்கு வழங்கிய செவ்வி:
கேள்வி: இந்த ஆண்டு கூடிய வரிக சபாவுக்கும், முந்திய ஆண்டுகளில் கூடிய வரிக சபாவுக்கும் இடையே என்ன வேறுபாடு?
முந்திய ஆண்டுகளில் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வரிக சபாவை நடத்தினோம். ஆனால் இந்த ஆண்டில் அதை எங்கள் சொந்த முயற்சியில் தம்பனையில் நடத்த முடிவுசெய்தோம். எங்கள் குலமக்கள் வாழும் கிராமங்கள் பலவற்றிலிருந்தும், குலத்துக்கு 25 பிரதிநிதிகளை வரவழைத்தோம். முந்திய ஆண்டுகளில் ஒவ்வொரு குறிச்சியிலிருந்தும் 50 அல்லது அதற்கு மேற்பட்டோர் பங்குபற்றினார்கள். இந்த ஆண்டு அதை 25 பிரதிநிதிகளாகக் குறைக்க முடிவுசெய்தோம்.
கேள்வி: முந்திய ஆண்டுகளில் இடம்பெற்றதற்கு மாறாக, இந்த ஆண்டில் உங்கள் பண்டிகைக்கு அரசாங்கத்தின் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதில்லை என்று நீங்கள் முடிவுசெய்துள்ளீர்கள். உங்கள் குலத்தின் உள்ளக்குறைகளையும் வேட்கைகளையும் அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதற்கு தெரிவிக்கப்படும் ஒருவகையான ஆட்சேபமா அது? அரசாங்கத்தின் தலைவர்களை நீங்கள் வரவழைக்காத காரணம் அதுவா?
முன்னர் இந்த நிகழ்வை அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பல்வேறு இடங்களில் நடத்தினோம்: தம்பனை, பொலவத்தை, எனனிகலை, வாகரை... அரசாங்கம் நிதியுதவி புரியும்பொழுது, எங்கள் கலந்துரையாடல்கள் இறுதிநாள்வரை நீடிக்கும். கலந்துரையாடல்களை நடத்துவதற்கு கொழும்பிலிருந்து குழுக்கள் வரும். அதற்கு பத்துப் பன்னிரண்டு ஊர்திகள் வேறு பயன்படுத்தப்படும். ஒரு தடவை சம்பந்தப்பட்ட அமைச்சிலிருந்து 30 பேர் வந்து கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள். இவர்கள் எல்லோரும் எங்களுக்கு உதவும் நோக்குடன் வருகிறார்கள். ஆனால் அவர்கள் பயணப்பட்டு வரும்பொழுது பொதுநிதியே செலவாகிறது. ஆதலால் இந்த ஆண்டு பண்டிகைக்கு ஒதுக்கப்படும் பணம் எங்கள் சமூகத்தின் நலன்கருதிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நான் முடிவுசெய்தேன். எங்கள் மக்கள் ஆங்காங்கே 60 கிராமங்களில் வசிக்கிறார்கள். எங்கள் கிராமங்களில் தண்ணீர், மருந்து, சிறுவர் கல்வி தொடர்பான பிரச்சனைகள் உள்ளன. அரசாங்கம் தரும் பணம் சமூகத்தின் நலன்கருதிப் பயன்படுத்தப்பட வேண்டும். எங்கள் பாரம்பரிய பண்டிகையை எங்கள் சொந்த முற்சியில் நாங்கள் கொண்டாடுவோம். நாங்கள் அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் அல்ல. அரசாங்கத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. நாங்கள் கேட்பது என்னவென்றால், பண்டிகைக்கு செலவிடப்படும் பணம் எங்கள் சமூகத்தின் நன்மைகருதிப் பயன்படுத்தப்பட வேண்டும். நான் உயிர்வாழும்வரை எங்கள் மக்கள் காட்டுக்குப் போவார்கள். அதை எவரும் தடுக்கப் போவதில்லை. ஆனால், எனக்குப் பிறகு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது.
கேள்வி: கடந்த ஆண்டு நடந்த பண்டிகையில் அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதா?
அரசாங்கம் பல வாக்குறுதிகளை அளித்தது. அவற்றுள் சில நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஆண்டு நடந்த பண்டிகையில் சம்பந்தப்பட்ட அமைச்சரை நான் சந்தித்தேன். அப்பொழுது பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதன் பிறகு நான் அமைச்சரையோ அவரது செயலாளர்களையோ காணாமல் ஓராண்டு கழிந்துவிட்டது. சில சங்கதிகளை நான் வெளியே சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் பொய் சொல்லும்பொழுது, நான் அமைதிகாக்க முடியாது. ஒரு பொய்யை மறைக்க அவர்கள் நூறு பொய்களைச் சொல்லுகிறார்கள். சில சங்கதிகளை நான் வெளியே சொல்லாமல், உள்ளத்துள் வைத்திருக்கிறேன்.
கேள்வி: கடந்த ஆண்டில் உங்கள் சமூகத்துள் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கடைசியாக நடந்த வரிக சபாவில் அப்பிரச்சனைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதா?
ஏனைய சமூகங்கள் சம்பந்தமாகவும் பல பிரச்சனைகள் பற்றி நாங்கள் கலந்துரையாடினோம். என்னதான் சொன்னாலும், அரசாங்கம் எங்கள் சமூகத்துக்கு பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளது. ஆனால் எங்கள் தலையாய பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. ஒருவரின் தலைவலிக்கு மாத்திரைகள் கொடுப்பது போல் இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, காட்டுக்குள் நுழைய எங்களுக்கு அடையாள அட்டை தந்தபொழுது, எங்கள் உரிமை நிலைநாட்டப்பட்டுவிட்டதாக நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். கையில் அடையாள அட்டையுடன் நாங்களும் காட்டுக்குள் புகுந்தோம். ஆனால் சட்டபூர்வமாக எங்களுக்கு விசேட நன்மை எதுவும் கிட்டவில்லை. மற்றவர்களுக்கு ஏற்புடைய சட்டமே எங்களுக்கும். நாங்களும் காலை 6 மணிக்குப் பிறகு போய், மாலை 6 மணிக்கு முன்னர் திரும்ப வேண்டியுள்ளது. காலை 6 மணிக்குப் பிறகு காட்டுக்குள் செல்வதற்கு, முதல்நாள் இரவே நாங்கள் ஊரைவிட்டுப் புறப்பட வேண்டியுள்ளது.
கேள்வி: உங்கள் சமூகத்தை பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியமாக என்ன தேவைப்படுகிறது?
நிலமும், சூழலும் இழக்கப்படுவதே எங்கள் சமூகத்தின் வாழ்வைப் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சனை. நிலமும், சூழலும் கைவசம் இருந்தால், எங்கள் சமூகத்தை எங்களால் நெடுங்காலம் காக்க முடியும். மற்றப் பிரச்சனை என்னவென்றால், இந்த வேளையில் எங்கள் கிராமங்களில் ஊர்திகள் பலவும் நடமாடி வருகின்றன. பல்வேறுபட்டோர் எங்கள் கிராமத்துக்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் அந்த வெளியாட்களைப் பார்த்து அவர்களுடைய மொழியைப் பேசவும், அவர்களுடைய பண்பாட்டைப் பின்பற்றவும் முயல்கிறார்கள். தாங்களும் வளர்ந்து அவர்களைப் போல் மாற விரும்புகிறார்கள். எங்கள் சமூகத்தை இது அழித்து வருகிறது. இதுவே எங்கள் மிகப்பெரிய பிரச்சனை. ஆனாலும் அதை எங்களால் நிறுத்த முடியாது. ஏனெனில் இடம் விட்டு இடம் மாறும் எங்கள் சமூகத்தின் பாரம்பரிய வாழ்க்கைப் பாங்கே மாறிவிட்டது. எங்கள் இளம்பராயத்தில் இந்தக் காட்டிலிருந்து நாங்கள் பல பாடங்களை கற்றறிந்தோம். எங்கள் தந்தையருடன் நாங்கள் காட்டுக்குப் போய்வந்தோம். ஆனால் இன்று எங்கள் பிள்ளைகள் காட்டுக்குள் நுழையாவாறு தடுக்கப்படுகிறார்கள். ஆதலால் அவர்களுக்கு வேட்டையாடும் விதமும் தெரியாது, எதை வேட்டையாடுவது என்பதும் தெரியாது. காட்டுவிலங்கின் காலடியும் தெரியாது. தேனீ தண்ணீர் குடிக்கப் போகிறதா, தேன் எடுக்கப் போகிறதா என்பதுவும் தெரியாது. எங்கள் தந்தையரிடம் நாங்கள் கற்றறிந்த பாடங்கள் அவை!
கேள்வி: உங்கள் சமூகத்தின் எதிர்காலம் பற்றிய உங்கள் உள்ளத்து உணர்வென்ன? அச்சமா, கலக்கமா?
நான் அஞ்சவோ, கலங்கவோ இல்லை. இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை. நாங்கள் எல்லோரும் இந்த உலகை விட்டு நீங்கவேண்டியுள்ளது. இந்த நிலம் எனக்குச் சொந்தம் இல்லை. இந்த நிலம் அரசியல்வாதிகளுக்கும் சொந்தம் இல்லை என்பதை நாங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த நிலத்தில் வாழும் உரிமை மட்டுமே எங்களுக்கு உண்டு.
கேள்வி: உங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஏதேனும் அரசியல் பிரதிநிதித்துவம் தேவைப்படலாம் என்று படுகிறது. உங்கள் குலத்துள் எவரேனும் அரசியலில் ஈடுபட விரும்புவாரா?
எங்கள் மக்கள் அரசியலில் ஈடுபட்டால், இவர்களும் அதே அரசியல்வாதிகளின் தரத்துக்கு தாழ்ந்துவிடுவார்கள். அவர்களிடமிருந்து இவர்கள் வேறுபடப் போவதில்லை.
கேள்வி: அப்படி என்றால், உங்கள் குலத்தின், காட்டின் எதிர்காலம் என்ன?
நான் உயிர்வாழும்வரை எங்கள் மக்கள் காட்டுக்குப் போவார்கள். அதை எவரும் தடுக்க முடியாது. ஆனால், எனக்குப் பிறகு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. சட்டப்படி காட்டில் வாழும் உரிமையே எமக்கு வேண்டும். வெறும் அடையாள அட்டை தந்தவுடன் முடிவடையும் சங்கதி அல்ல அது.
கேள்வி: அரசியலில் உங்கள் நிலைப்பாடு என்ன?
நான் அரசியலில் ஈடுபடுபவன் அல்ல. அதைப் பற்றிக் கதைக்கவே நான் விரும்பவில்லை. இதுவரை அரசியல் பேசிக்கொண்டு எவரும் இங்கு வந்ததில்லை. இங்கு வருவோர் எல்லோரும் வரவேற்கப்படுவார்கள். வணக்கத்துக்குரிய மகாநாயக்க தேரரிடம் போகும் எவரும் வரவேற்கப்படுவார். வணக்கத்துக்குரிய மகாநாயக்க தேரர் எவரையும் திருப்பி அனுப்புவதில்லை. அதேபோல இங்கு வரும் எவரையும் நான் வரவேற்பேன். எங்களுடன் பேச விரும்பும் எவருக்கும் நான் காது கொடுப்பேன்.
கேள்வி: இனிமேல் நீங்கள் அரசியலில் ஈடுபடும் எண்ணம் உண்டா?
நான் போட்டியிட்டால் எனக்கு கொஞ்ச வாக்குகள் கிடைக்கலாம். ஆனால் நான் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை. எங்கள் மக்களுள் சிலர் இனி அரசியலில் ஈடுபடக் கூடும். அதுவரை நான் உயிருடன் இருப்பேனோ தெரியாது.
கேள்வி: உங்கள் சமூகத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நீங்கள் நினைக்கிறீர்களா? நாட்டை வளப்படுத்த உங்கள் சமூகத்தால் எப்படி உதவ முடியும்?
சட்டநூல்களில் வெவ்வேறு இனக்குழுமங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் சமூகம் பற்றி அவற்றில் குறிப்புகள் இடம்பெறல் அரிது. இலங்கையில் 23 இனக்குழுமங்கள் இருக்கின்றன. ஆனால் சிறுபான்மையோர் பற்றிய கலந்துரையாடல்கள் பெரிதும் தமிழர், முஸ்லீங்கள் பற்றியவையாகவே அமைகின்றன. பல்வேறு இனத்துவங்கள் இருக்கவேண்டிய நாட்டில், தத்ததம் பண்பாட்டு அடையாளத்தை ஊட்டிவளர்க்கும் உரிமை அவை ஒவ்வொன்றுக்கும் இருக்க வேண்டும். அதன் பிறகுதான் நாடு அழகுபடும். ஒரு படத்தில் ஒரேயொரு நிறம் காணப்பட்டால், அது அவ்வளவு அழகுபடாது. ஆனால் அதில் பல நிறங்கள் காணப்பட்டால், அது மிகவும் அழகுபடும்.
கேள்வி: உங்கள் சமூகத்துக்கு எப்படியான சர்வதேய அங்கீகாரம் கிடைத்துள்ளது?
1996ல் இரண்டு தடவைகள் நாங்கள் வெளிநாடு சென்றோம். ஜெனீவாவுக்கும், நேபாளத்துக்கும் சென்றோம். அதற்கு முன்னர் இந்த நாட்டில் எங்களைப் போல் ஒரு சமூகம் இருப்பது எவருக்கும் தெரியாது. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் ஆட்சியில் நாங்கள் ஜெனீவா சென்றோம். 135 நாடுகள் ஒரு மனுவில் ஒப்பமிட்ட பிறகு எங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது. அப்படி நிகழ்ந்திராவிட்டால், இந்த சமூகம் இப்பொழுது மறைந்திருக்கும்.
கேள்வி: அப்படியான அரங்குகளில் மேன்மேலும் பங்குபற்றி, சர்வதேய அங்கீகாரம் ஈட்ட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
அதற்கான அழைப்பு அரசாங்கத்தின் ஊடாக வரவேண்டும். அப்படி ஒரு நிகழ்வுக்கு ஒருவர் போவதற்கு குறைந்தது 10 இலட்சம் ரூபா செலவாகும். இனி மொழிபெயர்ப்பாளர்களாக மேலும் இருவரையாவது நாங்கள் கொண்டுசெல்ல வேண்டியிருக்கும். ஆகவே 30 இலட்சம் ரூபா செலவாகும்.
_________________________________________________________________________
Susitha R. Fernando, Daily Mirror, Colombo, 2014-08-13, தமிழ்: மணி வேலுப்பிள்ளை
No comments:
Post a Comment