ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு

   மொழிபெயர்ப்பு என்பது ஒரே சமயத்தில் இரண்டு எசமானர்களுக்குப் பணியாற்றுவது போன்றது.[i] தமிழ், ஆங்கில எசமானர்கள் இருவரும் திருப்திப்படும் வண்ணம், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதில், நாம் எதிர்நோக்கக்கூடிய சிரமங்களையும், அவற்றை எதிர்கொள்வதில் எமக்குத் துணைநிற்கக்கூடிய உத்திகளையும் இயன்றவரை இனங்காண்பதே இந்த ஆய்வின் தலையாய நோக்கம். சொல், தொடர், பாணி என்னும் மூன்று உபதலைப்புகளின் கீழ் அவற்றை இங்கு நாம் பகுத்தாராய எண்ணியுள்ளோம்.

(1) சொல்: ஆங்கிலப் பதங்களை முதற்கண் ஆங்கிலத்தில் விளங்கிக்கொண்ட பின்னரே, அவற்றுக்குத் தமிழில் பொருள்கொள்ளும் விதத்தை, நாம் கருத்தில் கொள்வது நலம் பயக்கும். சாக்கிரத்தீசின்[ii] தத்துவத்தை மீள்நோக்கத் தலைப்பட்ட ஓர் அமெரிக்க அறிஞர் கூறுகிறார்:

         மொழிபெயர்ப்புகளைக் கொண்டு ஏற்புடைய முறையில் அரசியல், தத்துவ அனுமானங்களை எவராலும் மேற்கொள்ள முடியாது என்பதை நான் கண்டுகொண்டேன். மொழிபெயர்ப்பாளர்கள் திறமையற்றவர்கள் என்பதல்ல அதற்கான காரணம். கிரேக்க மொழிப் பதங்கள் – கேத்திரகணிதத்தில் கூறப்படுவதுபோல் – அவற்றுக்கு நிகரான ஆங்கிலப் பதங்களுடன் முற்றிலும் ஒத்திசையாமையே அதற்கான காரணம். ஆங்கிலத்தில் பருமட்டாகப் பொருந்தும் பல்வேறு பதங்களுள் ஒன்றைத் தெரிவுசெய்யவேண்டிய நிர்ப்பந்தம் மொழிபெயர்ப்பாளருக்கு ஏற்படும். கிரேக்க மொழியிலுள்ள கருதுபொருட் பதம் ஒன்றை விளங்கிக்கொள்ள முற்படும் ஒருவர், கிரேக்க மொழியிலேயே அந்தப் பதத்துடன் மல்லாடி அதனை விளங்கிக் கொள்வதற்குப் போதிய அளவுக்காவது கிரேக்க மொழியைக் கற்றிருக்க வேண்டும். அந்தப் பதம் உணர்த்தக்கூடிய கருத்துகள், நயம் அனைத்தையும் ஒருவரால் அந்த மொழியிலேயே புரிந்துகொள்ள முடியும்.[iii]

       இதனை உறுதிப்படுத்தும் வண்ணம் தொகுக்கப்பட்டுள்ள க்ரியாவின் தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி,[iv] தற்காலத் தமிழ்-தமிழ்-ஆங்கில மரபுத்தொடர் அகராதி,[v] ஒக்ஸ்போர்ட் ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி,[vi] போன்றவை தலைசிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.

        எந்த மொழியிலும் ஒருபொருட் பதங்களை விட, பல்பொருட் பதங்களே அதிகம். சில எடுத்துக்காட்டுகள்:


  1. abbreviate = குறுக்கு

  2. abide armchair-critics = திண்ணைத் திறனாய்வாளர்களைச் சகித்துக்கொள்

  3. abide by the rules = விதிகளுக்கு அமைந்தொழுகு

  4. abandon  property = உடைமையைக் கைவிடு

  5. act with abandon = பராமுகத்துடன் செயற்படு

  6. abandon yourself to nostalgia = (1) தாயக வேட்கையில் மூழ்கு (2) மீட்சி 

வேட்கையில் மூழ்கு

  1. address a meeting = கூட்டத்தில் உரையாற்று

  2. address card = முகவரி அட்டை

  3. address the needs = தேவைகளைக் கவனத்தில் கொள்

  4. address your application to me = உன் விண்ண்ப்பத்தை எனக்கு அனுப்பிவை

  5. peace accord = சமாதான உடன்பாடு

  6. in accord with our policy = எமது கொள்கைக்கு இணங்க

  7. of my own accord = நானாக விரும்பியே = நானே உளமுவந்து

  8. with one accord = ஒருமனதுடன் = ஏகமனதாக

  9. accord importance to education = கல்விக்கு முக்கியம் கொடு 


    மேற்படி எடுத்துக்காட்டுகளில் பெரிதும் வினை வினையாகவும், பெயர் பெயராகவும், உரிச்சொல் உரிச்சொல்லாகவும்… பெயர்க்கப்பட்டுள்ளன. அதேவேளை abandon வினையாகவும் (4,6); பெயராகவும் (3) பயன்படுத்தப்பட்டுள்ளது. address வினையாகவும் (7,9,10); பெயராகவும் (8) கொள்ளப்பட்டுள்ளது. accord பெயராகவும் (11,12,13,14,); வினையாகவும் (15) இடம்பெற்றுள்ளது. ஒரு சொல்லின் பொருள் இடத்துக்கிடம் மாறுபடும் விதம் இங்கு உணர்த்தப்பட்டுள்ளது.  முன்னொட்டுகளையோ, பின்னொட்டுகளையோ கூட ஒரு குறிப்பிட்ட கருத்துக்குள் ஒடுக்க முடியாது. பின்வருபவை -ize என்னும் பின்னொட்டுடன் கூடிய  பதங்களின் தமிழாக்கங்கள்: 


                amortize = தவணைக்கடன் தீர் 

                Capitalize your possessions = உன் உடைமைகளை விற்றுக் காசாக்கு

                I realized my mistake = எனது தவறை நான் உணர்ந்தேன்

                prioritize = முதன்மைப்படி வரிசைப்படுத்து    

               Visualize your future = உன் வருங்காலத்தை எண்ணிப் பார்


    அதேவேளை, -ize பின்னொட்டுடன் கூடிய ஒரே சொல்லையே பல்வேறு பொருள்களில் எடுத்தாளலாம்:


             I realized my mistake = எனது தவறை நான் உணர்ந்தேன்

            We realized our ambition = எமது குறிக்கோளை நாம் எய்தினோம்

            Our worst fears were realized = நாம் மிகவும் அஞ்சியபடியே நிகழ்ந்தது

            Realize your assets = உன் சொத்துகளைக் காசாக்கு

            The stage designs were realized = மேடை வடிவமைப்புகளுக்கு செயலுருவம் 

            கொடுக்கப்பட்டது = மேடை வடிவமைப்புகள் செயலுருப்பெற்றன

    

           Socialize with students = மாணவர்களுடன் ஊடாடு

           Socialize the children = பிள்ளைகளுக்கு சமூக நடத்தை கற்பி

           Socialize the nation = நாட்டை சமூகவுடைமைமயமாக்கு

           Capitalism socializes the cost and privatizes the profits[vii] = முதலாளித்துவம், 

           செலவை சமூகத்தின்மீது பொறுப்பிக்கிறது, இலாபத்தை தனியாருக்கு 

          அளிக்கிறது  


(2) தொடர்: பின்வரும் தமிழாக்கங்கள் திரும்பத் திரும்ப எமது கண்ணில் படுபவை அல்லது காதில் விழுபவை:


            travel preparation = பயணத் தயாரிப்பு

            cultural values = பண்பாட்டுப் பெறுமதிகள்

            economic pressure = பொருளாதார அழுத்தம்

            reflective mood = பிரதிபலிக்கும் மனநிலை


இவற்றை நாம் கண்ணுற்றோ, செவிமடுத்தோ பழகியபடியால், எமக்கு இவை பொருத்தமானவையாகவே தென்படக்கூடும். எனினும், இவை தேராது தெளிதலின் பாற்படும். இங்கு சம்பந்தப்படும் சொற்களுக்கு வேறு பொருள்களும் உள்ளன. எமது உடனடித் தேவைக்காக, அவை ஒவ்வொன்றுக்கும் இரு பொருள்களை மாத்திரம் கருத்தில் கொள்வோம்:


            preparation = 1. தயாரிப்பு  2. ஆயத்தம்

            value =  1. பெறுமதி  2. விழுமியம்

            pressure =   1. அழுத்தம்  2. நிர்ப்பந்தம்

            reflective =  1. பிரதிபலிக்கும்  2. சிந்திக்கும்

மேற்படி நிரலை நாம் தேர்ந்து தெளிந்தால், எமது தமிழாக்கம் பின்வருமாறு அமையும்:


            food preparation = உணவு தயாரிப்பு

            travel preparation = பயண ஆயத்தம்

            monetary value = நாணயப் பெறுமதி

            cultural values = பண்பாட்டு விழுமியங்கள்

            blood pressure = குருதி அழுத்தம்

            economic pressure = பொருளாதார நிர்ப்பந்தம்

            reflective plate = பிரதிபலிக்கும் தகடு

            reflective mood = சிந்திக்கும் மனநிலை


தேராது தெளிதல் விந்தையான மொழிபெயர்ப்புக்கு இட்டுச்செல்லும் என்பதற்கு இன்னோர் எடுத்துக்காட்டு: பிரித்தானியப் பிரதமர் கேட்பதற்காகவும், கற்றுக்கொள்வதற்காகவும், பிரதிபலிப்பதற்காகவும் பாலஸ்தீனத்துக்கு சென்றார் [viii]. இதன் தோற்றுவாய்: …to listen, learn and reflect… மிகவும் கனதி வாய்ந்த இம்மூன்று வினைகளும் மேலே கருத்தூன்றி மொழிபெயர்க்கப்படவில்லை. Lost in translation என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! இதன் நேரிய தமிழாக்கம்: அவர் ...செவிமடுப்பதற்காகவும், கற்பதற்காகவும், சிந்திப்பதற்காகவும்... பாலஸ்தீனத்துக்கு சென்றார்.


          மரபுத்தொடர்கள் (idioms), பழமொழிகள் (proverbs), உருவகங்கள் (metaphors), இடக்கரடக்கல்கள் (euphemisms) முதலியவற்றுள் ஒருசிலவற்றை மட்டுமே சொல்லுக்குச் சொல்லாக மொழிபெயர்க்கலாம். எடுத்துக்காட்டாக:


            at a snail’s pace = நத்தை வேகத்தில்

            People who live in glass-houses shall not throw stones = கண்ணாடி மாளிகையில்

            வசிப்பவர்கள் கல்லெறியக் கூடாது

            a deafening silence = செவிடுபடும்படியான அமைதி


பெரும்பாலான மரபுத்தொடர்களையும், பழமொழிகளையும், உருவகங்களையும், இடக்கரடக்கல்களையும் நாம் நெகிழ்த்தியோ, மாற்றியோ பெயர்க்க வேண்டியுள்ளது:


            in limbo = கிடப்பில்

            Put the cart before the horse = மாட்டுக்கு முன்னே வண்டியைப் பூட்டு

            a heart of stone = கல்நெஞ்சம்

            an accessible building = மாற்றுத்திறனாளர் உட்புகவல்ல கட்டிடம்


இடக்கரடக்கல் கருதி, handicap (ஊனம்) என்னும் சொல் பயன்படுத்தப்படுவது குறைவு. அதற்குப் பதிலாக disability (வலுவீனம்) என்னும் சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. அதுவும் தற்பொழுது மங்கி, differently abled (மாற்றுவலுவினர்), special needs persons (தனி வசதியினர்) போன்ற பதங்கள் ஓங்கி வருகின்றன. அவர்களை physically challenged என்று குறிப்பிடும் வழக்கமும் உண்டு. எமக்கு வந்த ஒரு மின்னஞ்சலின்படி, சென்னை விமான நிலையத்தில் இது மெய்ப்புல அறைகூவலர் என்று பொறிக்கப்பட்டுள்ளது! இங்கு physical மெய்யை, அதாவது உடலைக் கருதுகிறது. புலம் என்பது இடம், புலன், மையம்… என்றெல்லாம் பொருள்பட வல்லது. எனினும் அறைகூவலர் என்பது இங்கு அறவே பொருந்தாது. ஒரு விவாதத்துக்கு அறைகூவல் விடுப்பது challenge for a debate ஆகும். அதில் எதுவித இடக்கரடக்கலும் இல்லை. Physically challenged என்பது handicap (ஊனம்) என்பதற்கு ஓர் இடக்கரடக்கல் ஆகும். அதனை உடல்வலு தளர்ந்தோர் என்றோ, மெய்வலு தளர்ந்தோர் என்றோ… கொள்ளலாம்.     


(3) பாணி: ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்புகளில் இழைக்கப்படும் வழுக்களின் தாக்கத்தால், தமிழ்ப் பாணி மங்கி வருகிறது. ஆங்கிலப் பாணி தமிழ்ப் பாணியாய் ஓங்கி வருகிறது. எடுத்துக்காட்டாக, (வேற்றுமை உருபுடன் கூடிய) தமிழரின் அடையாளம் அல்லது (பெயரடை உருவில் அமையும்) தமிழின அடையாளம் உருபிழந்து, அடையிழந்து தமிழ் அடையாளம் ஆகி வருகிறது. அவ்வாறே தமிழரின் சைவம் என்பது தமிழ்ச் சைவம் எனப்படுகிறது:


தமிழ்ப் பாணி                       ஆங்கிலப் பாணி     ஆங்கிலப் பாணியில் தமிழ்    

தமிழரின் அடையாளம்                    Tamil identity                    தமிழ் அடையாளம்

தமிழரின் சைவத்தில்                       in Tamil Saivaism              தமிழ்ச் சைவத்தில்

தமிழரின் மத அடையாளங்கள்    Tamil religious identities    தமிழ் மத அடையாளங்கள்


தமிழின் அடையாளம் வேறு, தமிழரின் அடையாளம் வேறு. Tamil identity என்னும் ஆங்கிலத் தொடரில் Tamil ஒரு பெயர்ச்சொல் அல்ல, ஓர் உரிச்சொல் ஆகும். Identity என்பதன் பெயரடையாகவே இங்கு Tamil அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் Tamil  பெயர்ச்சொல்லாகவோ, உரிசொல்லாகவோ அமையவல்லது:


            I am a Tamil (பெயர்ச்சொல்)  

            A Tamil word (உரிச்சொல் = பெயரடை)


     ஆங்கிலத்தில் Tamil  பெயர்ச்சொல்லாகவோ, உரிச்சொல்லாகவோ அமையவல்லது என்னும் உண்மை கருத்தில் கொள்ளப்பட்டிருந்தால், தமிழரின் அடையாளம், தமிழரின் சைவம், தமிழரின் தேசியவாதம்… போன்று தமிழ்ப் பாணியில் அமைந்த தொடர்கள் மங்கவோ, தமிழ் அடையாளம், தமிழ்ச் சைவம், தமிழ்த் தேசியவாதம்… போன்று ஆங்கிலப் பாணியில் அமைந்த தொடர்கள் ஓங்கவோ வாய்ப்பில்லை.    

            

        பெயர் பெயராகவும், வினை வினையாகவும், உரிச்சொல் உரிச்சொல்லாகவும்… மாத்திரமே பெயரும் என்பதற்கில்லை. எடுத்துக்காட்டாக, flute accompaniment என்னும் தொடரை மிகவும் இலகுவாகவும், சொல்லுக்குச் சொல்லாகவும் குழல் பக்கவாத்தியம் என்று பெயர்க்கலாம். Violence is a common accompaniment to hatred என்னும் வசனத்தையும் கூட, வன்முறை என்பது வெறுப்புக்கு ஒரு பொதுவான பக்கவாத்தியம் என்றோ, வன்முறை என்பது வெறுப்புக்கு ஒரு பொதுவான சேர்மானம் என்றோ… மொழிபெயர்க்கலாம். இத்தகைய மொழிபெயர்ப்பையே பாரதியார், ஆங்கில நடையில் தமிழ் என்று சாடினார். Violence is a common accompaniment to hatred என்னும் ஆங்கிலக் கூற்று ஓர் அரிய உண்மையை உணர்த்தி நிற்கிறது. இதன் தமிழாக்கம் என்ன என்று சிந்திப்பதைவிட, அது எத்தகைய தமிழ்க் கூற்றின் ஆங்கில உருவம் என்பதை இனங்காண்பதே புத்திசாலித்தனம். அந்த வகையில், இதனை இப்படி மொழிபெயர்க்கலாம்:

            வெறுப்புடன் வன்முறை சேர்வது வழமை.

           Violence is a common accompaniment to hatred.

     மேலே violence (வன்முறை), hatred (வெறுப்பு) என்னும் பெயர்கள் இரண்டும் தமிழிலும் பெயர்களாகவே அமைந்துள்ளன. Common என்னும் உரிச்சொல்லுக்கு தமிழில் வழமை என்னும் பெயர் உருவம் கொடுக்கப்பட்டுள்ளது. Accompaniment என்னும் பெயர் தமிழில் சேர்வது என்று வினைப்பெயர் ஆகியுள்ளது. அதாவது, வெறுப்புடன் வன்முறை சேர்வது வழமை எனத்தக்க ஒரு கூற்றே ஆங்கிலத்தில் Violence is a common accompaniment to hatred என்று குறிப்பிடப்பட்டுள்ளது! இனி, வெறுப்புடன் வன்முறை சேர்வது வழமை என்னும் வசனத்தை, It’s usual for violence to accompany hatred என்று நாம் மீளவும் மொழிபெயர்க்கலாம்:

          வெறுப்புடன் வன்முறை சேர்வது வழமை.

          Violence is a common accompaniment to hatred.

          It’s usual for violence to accompany hatred.

        மேற்படி ஆங்கில வசன சோடியின் சொல்தொடரியல் மாறுபட்டாலும், பொருள் மாறுபடாமை கவனிக்கத்தக்கது. ஓர் ஆங்கிலக் கூற்றின் தமிழாக்கம் என்ன என்று சிந்திப்பதைவிட, அது எத்தகைய தமிழ்க் கூற்றின் ஆங்கில உருவமாய் அமையத்தக்கது என்று சிந்திப்பதே, எம்மை இயல்பான தமிழ் நடைக்கு இட்டுச்செல்லும்.

      எந்த ஒரு கூற்றையும் ஒன்றுக்கு மேற்பட்ட விதங்களில் மொழிபெயர்க்கலாம் என்பதும் மேற்படி எடுத்துக்காட்டுகளிலிருந்து புலனாகிறது. இதற்கு இன்னோர் எடுத்துக்காட்டு: தற்கால இலக்கியத் திறனாய்வாளர் ஒரு பல்கலைகழகத்தில் வசிப்பது அவர்தம் குணவியல்பாகும். இந்த வசனத்தின் தோற்றுவாய் தமிழே என்பதில் ஐயமில்லை.  ஆங்கிலத்தில்  இதனைப் பின்வருமாறு எடுத்துரைக்கலாம்: It is characteristic for a modern literary critic to inhabit a university. இதனை வேறொரு விதமாகவும் முன்வைக்கலாம்: The modern literary critic characteristically inhabits a university.[ix] உண்மையில் எம் கண்ணில் பட்ட இந்த ஆங்கில வசனத்தையே மேலே, தற்கால இலக்கியத் திறனாய்வாளர் ஒரு பல்கலைகழகத்தில் வசிப்பது அவர்தம் குணவியல்பாகும் என்று நாம் குறிப்பிட்டோம்.  “இதன் தோற்றுவாய் தமிழே என்பதில் ஐயமில்லை” என்று நாம் குறிப்பிட்டது வேண்டுமென்றே! 

            (அவள்) மிகவும் சந்தோஷமாக உணர்ந்தாள் [x]

           தாத்தா களைப்பாய் உணர்ந்தார் [xi]

மேற்படி வசனங்களின் ஆங்கிலத் தோற்றுவாயும், தமிழ்ப் பாணியும் பின்வருமாறு:

            (She) felt very happy = (அவள்) மிகவும் சந்தோஷப்பட்டாள்.

            Grandpa felt tired = தாத்தா களைப்படைந்தார்.   

I feel good, We feel happy, They feel tired போன்ற வசனங்களில் feel செயப்படுபொருள் குன்றிய வினை (intransitive verb) ஆகும். தெம்பு, மகிழ்ச்சி, களைப்பு போன்ற சொற்களில் சம்பந்தப்பட்ட உணர்வு பொதிந்துள்ளமை கவனிக்கத்தக்கது. ஒருவர் மகிழ்ந்தார் அல்லது மகிழ்ச்சி அடைந்தார் என்பதே உரிய பொருளை உணர்த்த வல்லது. அவர் மகிழ்ச்சியாக உணர்ந்தார் அல்லது களைப்பாய் உணர்ந்தார் என்று கொள்வது தமிழ்ப் பாணி ஆகாது. எனினும் feel என்னும் சொல் செயப்படுபொருள் குன்றா வினயாக (transitive verb)  அமையும் இடங்களில் உணர் பொருந்தக்கூடும். எடுத்துக்காட்டாக, I felt something crawl up my leg = என் கால்மீது ஏதோ  ஊர்வதை நான் உணர்ந்தேன்.       

      தமிழ், ஆங்கில எசமானர்கள் இருவரும் நிறைவுறும் வண்ணம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதில் எழும் சிரமங்கள், அவற்றை எதிர்கொள்வதில் பயன்படும் உத்திகள் சிலவற்றை சொல், தொடர், பாணி வாரியாக நாம் கருத்தில் கொண்டோம். அன்று பாரதியார் இட்ட முழக்கம் இன்றும் எம் காதில் விழுகிறது:

    “தமிழ் நாட்டிலோ முழுவதும் தமிழ் நடையை விட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம் காணப்படுகிறது. முதலாவது, நீ எழுதப்போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு. அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பர்த்துக்கொண்டு, பிறகு எழுது. அப்போதுதான் நீ எழுதுகிற எழுத்து தமிழ்நாட்டிற்குப் பயன்படும்” [xii] என்று முழங்கிய பாரதியின் ஆவலையும், “எங்கள் அறியாமையை நாங்கள் தமிழின் வறுமை ஆக்கக்கூடாது” [xiii] என்று வலியுறுத்திய ஹன்டி பேரின்பநாயகம் அவர்களின் அறைகூவலையும் நாம் கருத்தில் கொள்வோமாக. 

            சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

         வெல்லும்சொல் இன்மை அறிந்து.[xiv]                          



[i] Translation is like serving two masters at the same time (Chandra Rajan, The Loom of Time, Penguin, 2006, London, p.17).

[ii] Socrates, 469-399 BC.

[iii] I found that one could not make valid political or philosophical inferences from translations, not because the translators were incompetent, but because the Greek terms were not fully congruent – as one would say in geometry- with their English equivalents. The translator was forced to choose one of several English approximations. To understand a Greek conceptual term, one had to learn at least enough Greek to grapple with it in the original, for only in the original could one grasp the full potential implications and color of the term” (I.F.Stone, The Trial of Socrates, Little Brown & Co., Boston-Toronto, 1988, x).   

[iv] க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, சென்னை, 2009.

[v] தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்), அடையாளம், சென்னை, 2004.

[vi] Oxford English-English-Tamil Dictioanry, Edited by Dr. Dr.V.Murugan and Dr.V.Jayadevan, Oxford University Press, New Delhi, 2009.

[vii] Noam Chomsky.

[viii] BBC Tamilosai, 2007-07-23.

[ix] The modern literary critic characteristically inhabits a university” (D.A.Russell & Michael Winterbottom, Classical Literary Criticism, Oxford University Press, 2008, vii).

[x] கவிநயா, தனிமை, திண்ணை, 2004-01-15.

[xi] காஞ்சனா தாமோதரன், மரகதத் தீவு, உயிர்மை, சென்னை, 2009, ப.102.

[xii] பாரதியார் கட்டுரைகள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 1997, ப.207.

[xiii] கல்விமான் ஹன்டி பேரின்பநாயகம் (1899-1977). 

[xiv] திருக்குறள்: 645.

மணி வேலுப்பிள்ளை   2010-03-25 

No comments:

Post a Comment