வெண்முரசில் மிளிரும் மானுடம்

__________________________________________________________________________

“எழுக புதியவேதம்! ஒவ்வொருவருக்கும் உரியது என எழும் அழியாச்சொல்! ஆழிவண்ணா, ஆயர்குலவேந்தே, உன் அறம் எழுக! ஆம், எழுக!” (பன்னிரு படைக்களம் - 87) என்று கூவுகிறாள் திரெளபதி.  

“கால-இட-சூழலை மீறிய அறத்தையே நாம் ‘அறம்’ என்கிறோம்... அரசியல் பிழைத்தோர்க்குக் கூற்றாக வரும் அறம் என்பது அதுவே” என்கிறார் ஜெயமோகன் (அறமெனப்படுவது யாதெனின்...)                                              

இளங்கோவரின் “அறம் கூற்றாகும்”, பூங்குன்றனாரின் “யாவருங் கேளிர்”, வள்ளுவரின் “மறத்திற்கும் (அன்பே) துணை,” கம்பரின் “வேறுள குழுவை யெல்லாம் மானுடம் வென்றதம்மா” உட்பட தமிழ்ப் பேரிலக்கிய விழுமியங்கள் பலவும் 26 நாவல்களிலும் மண்டிக் கிடக்கின்றன.

நாவல்-திரட்டு முழுவதும் “உளச்சான்று” எனும் சொல் திரும்பத் திரும்ப எடுத்தாளப்படுகிறது. திருதராஷ்டிரர், பாண்டு, விதுரர் மூவரிடமும் இது ஆழ வேரூன்றியுள்ளது. காந்தாரி, பானுமதி, கிருஷ்ணை, அசலை… உட்பட கெளரவப் பெண்குலம் முழுவதையும் உளச்சான்று ஆட்கொள்கிறது. துரியோதனன் அதிலிருந்து வழுகுந்தோறும் பிதாமகராலும், பிதாவினாலும், கர்ணனாலும் கண்டிக்கவும் தண்டிக்கவும் படுகிறான். 

பிதாமகர் இறக்குந் தறுவாயில் தமது அரசகுலநெறியை துரியோதனனுக்கு அறிவுறுத்துகிறார்: “குருதியும் குடியும் காப்பவனே நல்லரசன்… மைந்தா, வஞ்சத்தைவிட, மண்ணைவிட, நெறிகளைவிட, அறத்தைவிட, தெய்வங்களைவிட குலம் வாழ்வதே முதன்மையானது” (திசைதேர் வெள்ளம் – 76).

பிதாமகரின் பட்டியலில் மானுடமோ உளச்சான்றோ இடம்பெறவில்லை! திரெளபதி எழுப்பும் வினாக்களுக்கு பிதாமகர், துரோணர், கிருபர் இறுக்கும் விடைகளில் அவை ஒப்புக்கொள்ளப்படவில்லை.

துரோணர்: “தேவி, நால்வேதங்களும் வேந்தனை வழுத்துபவையே… அறங்கள் வாழவேண்டுமென்றால் அரசன் ஆற்றல்கொண்டு அரியணையில் அமர்ந்திருக்க வேண்டும்… மறம் இழக்காது கோல்கொண்டமைய அரசர் எவராலும் இயலாது.”

கிருபர்: “நான்கு வேதங்களையும் பேணி அவையமர்ந்த ஷத்ரியன் மண்ணுக்கு வந்த தெய்வத்திருவுருவே என்பதுதான் வேதநெறி என்றறிக!... அவனுக்கு சொல்லளிக்க கடமைகொண்டிருக்கிறோம், அவன் கோலை மறுக்க உரிமைகொண்டவர்கள் எவருமிருக்க இயலாது. தனியொருவருக்கு இழைக்கப்படும் தீயறத்தின்மேல் அரசின் வெற்றியும் அதன் குடிகளின் பெருநலனும் வாழும் என்றால் அதுவும் அரசனுக்கு அறமே.”

பிதாமகர்: “பெண்ணே, ஆசிரியர்கள் முறைமையேதென்று சொல்லிவிட்டனர்… எதன்பொருட்டும் வேதக்கொடி இறங்கலாகாது… இங்கெழுந்தது அரசாணை. அவையில் அதை குடிகள் மீறலாகாது. நானும் குடியே… ஒருநாளும் அவையில் அமர்ந்து அரசனை ஆளமுயலமாட்டேன்… இது வேதம்புரந்த வேந்தர் அமர்ந்தாண்ட அரியணை. வேதம் காக்க வாளேந்தி எழுந்த அரசு…”

திரௌபதி: (துச்சாதனனை நோக்கி கைசுட்டி) “இதுவா அரசன் சூடும் அறம்? பிதாமகரே, இதுவா நால்வேதம் ஈன்ற குழவி?”

பிதாமகர்: “ஆம், இதுவும்தான். ரஜோகுணம் எழுந்தவனே ராஜன் எனப்படுகிறான். வெல்வதும் கொள்வதும் அவனுக்குரிய நெறியே. விழைவே அவனை ஆளும் விசை. காமமும் குரோதமும் மோகமும் அவனுக்கு இழுக்கல்ல. புவியை பசுவென ஓட்டிய பிருதுவையே பேரரசன் என்கிறோம். வான்கங்கையை ஆடைபற்றி இழுத்துக் கொண்டுவந்த பகீரதனையே வேந்தர்முதலோன் என்கிறோம். பெருவிழைவால் உருவாகிறார்கள் பேரரசர்கள். அரசன் கொள்ளும் விழைவுகளுக்காகவே பூதவேள்விகளில் அனலோன் எழுகிறான். மண்ணையும் பொன்னையும் பெண்ணையும் அவனுக்களிக்கவே அதர்வவேதச் சொல்லுடன் வைதிகர் அவியளிக்கிறார்கள்… ஆம், இங்கு நிகழ்ந்தது குலநெறி அழியும் தருணம்… இது அறப்பிழை… ஆம், இது பெரும்பழியே… ஆனால் இதன்பொருட்டு நான் தந்தைக்களித்த சொல்லைத் துறந்தால் அஸ்தினபுரி அழியும். பாரதவர்ஷத்தில் வேதப்பெருநெருப்பு அழியும். வேதம் மறந்த கீழோர், புறவேதம் கொண்ட பகைவர், வேதம் மறுக்கும் விலங்கோர் வேல்கொண்டெழுவர். எங்கும் இருள்சூழும். என் குடிக்கு நூறுமடங்கு பழிசூழும்… அரசாணையை மீற எவருக்கும் உரிமையில்லை, பெண்ணே!” (பன்னிரு படைக்களம் - 87).

மகாபாரதத்துக்கு முற்பட்ட (வால்மீகி) இராமாயணத்தில் இராமன் இடும் அரிய முழக்கம் ஒன்று இங்கு சுட்டிக்காட்டத்தக்கது: “நன்னெறியும் துன்னெறியும் ஒருங்கிணைந்த அரசநெறியை நான் நிராகரிக்கிறேன்; இழிந்த, கொடிய, அவாபடைத்த, தீய மனிதர் கடைப்பிடிக்கும் அந்த அரசநெறியை நான் நிராகரிக்கிறேன்” (அயோத்தியா காண்டம்: 101-17-21; ஆங்கிலத்திலிருந்து கட்டுரையாளரின் எளிய தமிழாக்கம்).

வெண்முரசில் பிதாமகர், துரோணர், கிருபர் மற்றும் கண்ணன், கர்ணன், துரியோதனன் அனைவரிடமும் இராமனின் நிலைப்பாட்டுக்கு மாறான  நிலைப்பாடு தெரிகிறது.   

திரெளபதிக்கு கிடைக்கும் விடைகளில், வள்ளுவர் கூற்றுக்கு மாறாக, அன்புசாரா மறமே அறமென நிலைநாட்டப்படுகிறது. சில திறனாய்வாளர்கள் இதை “நக்குண்டார் நாவிழந்தார்” என்று சொல்லிக் கடந்து செல்வதுண்டு. “எங்கே உனது செஞ்சோற்றுக் கடன்?” என்று துரியோதனன் கர்ணனிடம் வினவுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டுவதுண்டு. பிதாமகரும், விதுரரும் கூட செஞ்சோற்றுக் கடனை நினைந்து விம்முகிறார்கள்.

அவையில் அவர்கள் உதிர்த்த சொற்கள் அரச சூழ்வியலின் பாற்பட்டது என்பதில் ஐயமில்லை. அரச சூழ்வியலுடன் கூடிய அவர்களின் வாய்மொழி எதுவாயினும், பாண்டவருக்கும், திரெளபதிக்கும் அநீதி இழைக்கப்படுவது, அவர்களின் உளச்சான்றுக்குப் புலனாதல் திண்ணம்.

மானுடர் எவர்க்கும் உளச்சான்று உண்டு. அதை எல்லோரும் எளிதில் ஒப்புக்கொள்வதில்லை. ஆனானப்பட்ட பிதாமகரோ, ஆசிரியர்களோ கூட தத்தம் வாயினால் அதை ஒப்புக்கொள்ளவில்லை. எனில், அவர்களின் மைந்தனும் மாணவனுமாகிய துரியோதனன் அரசனென அரியணையில் அமர்ந்துகொண்டு அதை தனது வாயினால் ஒப்புக்கொள்வது எங்ஙனம்?

எனினும், “அரசவையில் திரௌபதி ஆற்றிய வஞ்சினம் (பிதாமகரின் உள்ளத்துள்) குற்றவுணர்வை உருவாக்கியிருந்தது. அவருடைய கனவுக்குள் அம்பையின் வஞ்சத்துடன் அதுவும் கலந்துவிட்டிருக்கக்கூடும். பிதாமகர் பீஷ்மர் கொல்லப்படவில்லை, தற்கொலை செய்துகொண்டார். அதனூடாக அவர் தன்னுள் உணர்ந்த ஒரு பழியை நிகர் செய்துகொண்டார்” (திசைதேர் வெள்ளம் – 77). பிதாமகரை இங்கு சரியாகவே மட்டுக்கட்டுகிறான் துரியோனன்!

துச்சாதனன் திரெளபதியை அவைக்கு இழுத்துவரும்பொழுது, தம்மை அறியாமல் கைகூப்பும் துரியோதனனும் கர்ணனும், அவளது மணத்தன்னேற்பில் தமக்கு நேர்ந்த ஏமாற்றம் மற்றும் இந்திரப்பிரஸ்தத்தில் துரியோதனன் விழ திரெளபதி உதிர்த்த புன்னகை நினைவுக்கு வர, தமது உளச்சான்றை அடியோடு உதறித்தள்ளி விடுகிறார்கள்.

வெகுண்டெழுந்து பாய்ந்துவரும் கிருஷ்ணை தனது மேலாடையை திரெளபதிமீது வீசி தாய்க்குலத்தின் மானத்தைக் காக்கிறாள். தன்னைத் தடுக்க முனைந்த துரியோதனனை - தந்தையை – அரசனை விளித்து, “அன்னைப்பன்றி என எரியும் விழிகளுடன் உறுமினாள். விலகி நில்! மூடா. உன் நெஞ்சு பிளந்து குருதி உண்பேன்!” அவன் கால்தளர்ந்து நடுங்கும் கைகளுடன் விலக, அவள் ஓடிச்சென்று திரௌபதியை தழுவிக்கொண்டாள்… அசலை ஓடிவந்து அவர்கள் இருவரையும் தழுவினாள். பானுமதியும் துச்சளையும் கௌரவர்களின் துணைவியர் அனைவரும் ஓடிவந்து ஒருவரை ஒருவர் தழுவி ஒற்றை உடற்சுழிப்பென்றாயினர். பன்னிரு படைக்களத்தின் நடுவே அச்சுழி மெல்ல சுழன்றது. அவள் அதன் மையமென்று தெரிந்தாள்…” (பன்னிரு படைக்களம் - 87).

காந்தாரியின் ஒன்பது சகோதரிகள், பானுமதி, நூற்றுவர் மனைவியர், ஆயிரத்தவர் மனைவியர், கிருஷ்ணை, மாயை… உட்பட அரண்மனைப் பெண்டிர் அனைவரும் தமது உளச்சான்றை மட்டுமே நிலைக்களனாகக் கொண்டு, மேலாடை ஈந்து, திரெளபதியை அரவணைக்கும் காட்சி மானுடத்தின் உச்சத்தை எட்டுகிறது. “வேறுள குழுவை யெல்லாம் மானுடம் வென்றதம்மா!”

“அறம் வெல்க!” என்று மும்முறை மொழிந்து துரியோதனனுக்கு விடைகொடுக்கிறார்கள் திருதராஷ்டிரரும் காந்தாரியும். கெளரவர் வெல்க என்றோ, பாண்டவர் வெல்க என்றோ அவர்கள் மொழியவில்லை. பிதாமகரும் ஆசிரியர்களும் எடுத்தியம்பிய வெற்றுவெறிதான அரசமறத்தைக் கடந்த மானுட விழுமியத்தின் ஊற்றிடமாக விளங்கும் உளச்சான்றே அவர்களை உறுத்துகிறது. “அறம் வெல்க!” எனும் அவர்களின் வாழ்த்து “மானுடம் ஓங்குக!” என்றே பொருள்படுகிறது.  

பாண்டவர் தரப்புக்கு மாறிய யுயுத்சுவிடம் “நீங்கள் உங்கள் உள்ளத்தில் எழுந்த அறத்தின்பொருட்டு எடுத்த முடிவு அது. அதுவே உங்களுக்கு உகந்தது” என்று சம்வகி கூறுவதும் உளச்சான்றில் நிலைகொண்ட மானுட விழுமியமே (நீர்ச்சுடர் - 35: 5).

வெண்முரசு பற்றிய தமது உரைகளில் ஹோமரின் இலியத், ஒடிசி, தால்ஸ்தாயின் போரும் வாழ்வும்… பற்றிக் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். இம்மூன்று படைப்புகளிலும் நிகழும் போர்கள் முற்றிலும் மறம் சார்ந்தவை. எடுத்துக்காட்டாக,  இலியத் காவியத்தில் துரோயின் பட்டத்து இளவரசனும் தானைத்தலைவனுமாகிய எக்டரை தனிப்போருக்கு அறைகூவி அழைக்கிறான் கிரேக்க மறவனும் காவிய நாயகனுமாகிய அகிலீசு. 

எக்டர்: சமரில் தோற்பவரின் உடலுக்கு உரிய மரியாதை அளிக்க உடன்படுக!

அகிலீசு: மூடா, உடன்பாடுகள் பற்றி என்னிடம் உளறாதே! மனிதனும் சிங்கமும் உடன்பட முடியாது; ஓநாயும் ஆடும் உடன்பட முடியாது. அவை ஒன்றன் மீதொன்று தீராத காழ்ப்புடையவை அல்லவா? ஆகவே எம் இருவருள் ஒருவர் மடியும்வரை எம்மிடையே புரிந்துணர்வோ, உடன்பாடோ எழமுடியாது.

அகிலீசு வீசிய வேல் கழுத்தில் ஏறி மாளும் எக்டரின் கணுக்காலைத் துளைத்து, அதில் ஒரு தோல்நாடாவைக் கோத்து, தேர்க்காலில் கட்டி இழுத்துச்செல்கிறான் அவன். இது வெறும் மறத்தை - வள்ளுவர் கடியும் அன்புசாரா மறத்தை - உரைக்கிறது. ஆம், அதுவே போர்மறம். அதன்படியே என்றென்றும் போர்கள் தொடுக்கப்பட்டு வந்துள்ளன. அன்றுதொட்டு இற்றைவரையும், இனிமேலும் போர்களின் இலக்கு எதிரிகளை ஒழித்துக்கட்டுவதே. அகிலீசும் எக்டரும், நெப்போலியனும் அலெக்சாந்தரும், கண்ணனும் வீமனும் அதை அறிவார்கள். 

அதையே பிதாமகரிடமும், துரோணரிடமும், கர்ணனிடமும் கோருகிறான் துரியோதனன். பாண்டவர்களை அவர்கள் கொல்லவேண்டும். வாரணாவதம் முதல் குருசேத்திரம் வரை அதுவே அவன் இலக்கு. வெற்றுவெறிதான மறநியதிகளின்படி அவனது கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவே எவர்க்கும் தென்படும்­­. எனினும் துரியோதனனின் தீயூழ் எனும்படியாக, அவர்கள் அவனிடம் அளிக்கும் வாக்குறுதிகள் அவர்தம் அகத்தின் ஆழத்தில் உறங்கும் உளச்சான்றை எதிரொலிக்கவில்லை.  

என்றென்றும் செல்லுபடியாகும் மறநெறியின்படி அல்லது படைநெறியின்படி பிதாமகர், துரோணர், கர்ணன் மூவரையும் துரியோதனன் தனது படைநீதிமன்றின் விசாரணைக்கு உட்படுத்தி, கழுவேற்றியிருக்க முடியும். அப்படிச் செய்வதற்கு, அவையில் பிதாமகரும் ஆசிரியர்களும் முன்வைக்கும் நியாயங்களே போதும். ஆனால் அப்படிச் செய்தால் அவன் யாரை வைத்துப் போரில் வெல்வது? உண்மையில் அவன் நிலை வருந்தத்தக்கது.

கி. மு. 5ம் நூற்றாண்டில் பாரசீக மன்னன் செர்செஸ் கிரேக்கம் மீது போருக்கு எழுந்தறுவாயில், பைதியாஸ் எனும் முதிய மறவன் மன்னனிடம் மன்றாடுகிறான்:

பைதியாஸ்: அரசே, எனது ஐந்து மைந்தர்களும் தங்கள் படையில் இருக்கிறார்கள். தள்ளாத வயதில் என்னைப் பராமரிக்க மூத்தவனை மட்டும் விட்டுச் செல்லுங்கள்! மற்ற நால்வரையும் கொண்டுசென்று வெற்றியுடன் மீளுங்கள்!

செர்செஸ்: (வெகுண்டெழுந்து கர்ச்சிக்கிறான்): எனது மனைவி மக்கள் அனைவருடனும் நான் போருக்குப் புறப்படுவது உனக்குத் தெரியவில்லையா, அடிமைப் பிறவியே!

ஈற்றில் மன்னனின் ஆணைப்படி மூத்தவன் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு, ஒரு துண்டு படைசெல்லும் பாதையின் வலதுபுறத்திலும், மறுதுண்டு இடதுபுறத்திலும் இடப்படுகிறது, படையினருக்கு ஒரு பாடமாக அமையட்டும் என்பதற்காக...   (Herodotus, Histories). 

என்றுமுள படைமறம் அது, படைநெறி அது. கண்ணனும் வீமனும் அதே படைமறத்தையே கைக்கொள்ளுகிறார்கள். அதற்கமையவே அருச்சுனனைக் கொண்டு பிதாமகரையும், கர்ணனையும் கொல்லுவிக்கிறான் கண்ணன். வீமன் நூற்றுவரைக் கொல்கையில் அவர்கள் “மூத்தவரே! மூத்தவரே!” என்று விம்முகிறார்கள். ஆயிரத்தவர் “பெரியதந்தையே! பெரியதந்தையே!” என்று தேம்புகிறார்கள். அவற்றை எல்லாம் வீமன் பொருட்படுத்த வேண்டியதில்லை; பொருட்படுத்தக்கூடிய நிலையிலும் அவன் இருக்கவில்லை. 

அதேவேளை தாமே ஊட்டிவளர்த்த பாண்டவ இளவரசர்களை கெளரவர்களால் கொல்ல முடியவில்லை (அபிமன்யுவைத் தவிர). அபிமன்யு மடியும்பொழுது துரியோதனன் கலங்குகிறான். தனது புதல்வர்களும், பேரப்பிள்ளைகளும் களம்படுகையில் வாய்விட்டுப் புலம்பாத காந்தாரி, அபிமன்யு களம்படுவதை அறிந்து வாய்விட்டுப் புலம்புகிறாள்.  

குருசேத்திரத்தில் நிகழ்வது வழியுரிமைப் போர் (அல்லது அரசுரிமைப் போர்).  இவை உலக வரலாற்றில் இடைவிடாது நிகழ்ந்துவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய அரசுகளிலும், கண்டி-கோட்டை-யாழ்ப்பாண அரசுகளிலும் இவை தொடர்கதைகள். இவை ஒரே அரச குடும்பத்தவரிடையே இடம்பெறுபவை. வள்ளுவரின் அன்புசார் மறத்துக்கு இங்கு இடமில்லை. அப்பழுக்கற்ற மறமே இங்கு கைகூடுவது.    

பிதாமகரும், துரோணரும், கர்ணனும் பாண்டவர்களைக் கொல்லும் வல்லமை படைத்தவர்களாய் விளங்கியும் கூட, அதை அவர்கள் தவிர்த்துக் கொள்வதில் மானுடத்தின் உறைவிடமாய் விளங்கும் உளச்சான்று வெளிப்படுகிறது. அவர்கள் வாரணாவதத்துக்காக தன்னை வஞ்சிப்பதாக குமுறும் துரியோதனனில் உளச்சான்றின் தாக்கம் புலப்படுகிறதே!       

போரைத் தவிர்ப்பது மிகவும் கடினம் என்பது வள்ளுவருக்கு நன்கு தெரியும். 10 அதிகாரங்களை (100 குறள்களை) அவர் போருக்கு ஒதுக்கியுள்ளார். அதேவேளை மறத்துக்கும் அன்பே துணை என்பதை அவர் இடித்துரைக்கத் தவறவில்லை. கண்ணணின் கீதை அதையே ஓதுகிறது. 

அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே ஒளவைப் பாட்டியால் அமைதியை நிலைநாட்ட முடிகிறது. அத்தகைய அமைதி வரலாற்றில் அரிதாக நிகழ்வது. பாண்டவருக்கும் கெளரவருக்கும் இடையே போர் மூள்வதை ஆனானப்பட்ட கண்ணனால் தடுக்க முடியவில்லை. சேர, சோழ, பாண்டியர்கள் இடைவிடாது போரிட்டவர்கள் அல்லவா? 

“யாவரும் கேளிர்” என்பதை ஆட்சியாளரால் உளமார ஏற்க முடியாது. உலக வரலாற்றில் எந்த தரப்பினால், எந்த நாட்டினால், எந்த அரசினால் கணியனின் வாக்கை உளமார ஏற்க முடியும்?  

___________________________________

மணி வேலுப்பிள்ளை 2021-08-23

No comments:

Post a Comment