வாக்கா? துவக்கா?


இரா. சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்
மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது மேற்படி இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்வது இலகுபோலவே தென்படும். எனினும் அது அத்துணை இலகுவல்ல என்பதை எமது அனுபவம் புலப்படுத்துகிறது. அது ஏன் அத்துணை இலகுவல்ல என்பதை விளங்கிக்கொள்வது மிகவும் கடினம்.
மனித சமூகம் மிகவும் சிக்குப்பிக்கானது, பல்வகைப்பட்டது. ஆதலால் அத்தகைய சிக்குப்பிக்கு, பல்வகைமை இரண்டுக்கும் ஈடுகொடுக்கும் வண்ணம்  ஓர் ஆட்சிமுறையை அமைக்க வேண்டியுள்ளது. அதேவேளை வாக்குத்துண்டையா, துவக்குக்குண்டையா தெரிவுசெய்வது என்பதை ஆட்சி முறைமையும் ஆளும் விதமுமே தீர்மானிக்கின்றன.
ஒரு நாட்டின் ஆட்சிக்கு அடிப்படை அதன் அரசியல்யாப்பே. ஆட்சிக் கட்டமைப்பில் அரசியல்யாப்பு இன்றியமையாத பங்கு வகிக்கிறது. சட்டம் ஆக்கும் அதிகாரம், சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம், நீதிபாலிக்கும் அதிகாரம் என்பவற்றைக் கையாள்வது எல்லாம் ஆட்சி புரிவதுள் அடங்கும். ஒரு நாட்டை ஆளும் விதத்தில் மேற்படி அதிகாரத் துறை ஒவ்வொன்றும் தீர்க்கமான தாக்கத்தை விளைவிக்கும்அரசாங்கம் சம்பந்தப்பட்டவரையும்,  அரசாங்கமும் மக்களும் சம்பந்தப்பட்டவரையும் மக்களின் வாழ்வில் மேற்படி அதிகாரத் துறை ஒவ்வொன்றும் தீர்க்கமான தாக்கத்தை விளைவிக்கும். எனவேதான் அரசியல்யாப்பு தீர்க்கமானதோர் அடிப்படை ஆகின்றது.
ஒவ்வொரு நாடும் தான் விரும்பும் அரசியல்யாப்பினை வகுத்துக் கொள்கின்றது. அரசியல்யாப்பினை வகுக்கும் பணியில் அந்த நாடு அளிக்கும் தலைமைத்துவத்தில் அது பெரிதும் தங்கியிருக்கிறது. பெரிதும் நியாயமான கருத்தொருமையின் அடிப்படையில் அந்த நாட்டின் அரசியல்யாப்பு வகுக்கப்படுவதை விவேகமான தலைமைத்துவம் உறுதிப்படுத்தும். கருத்தொருமை என்பது இங்கு சிக்குப்பிக்கினைத் தவிர்த்து, பல்வகைமைக்கு இடங்கொடுக்கும்.
மனித சமூகம் பல்வகைப்பட்டது, சிக்குப்பிக்கானது. பெரும்பாலான நாடுகள் பற்பல மொழிகளும், பற்பல இனங்களும், பற்பல பண்பாடுகளும், பற்பல குணவியல்புகளும் கொண்ட சமூகங்களால் ஆனவை. அவை ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து ஒன்று பெரிதும் வேறுபடுபவை.
அரசியல்யாப்பு வாரியான ஏற்பாடுகள் அத்தகைய பல்வைகைமைக்கும், சிக்குப்பிக்கிற்கும் இடங்கொடுக்க வேண்டியுள்ளது. அத்தகைய இடங்கொடுப்பு உண்டானால் சமூகம் உறுதி பெறும். உறுதிப்பாட்டுடன் கூடவே விருத்தியும், அமைதியும், செழிப்பும் ஓங்கும். அத்தகைய இடங்கொடுப்பு இல்லாவிட்டால் மனக்குறையும், முரண்பாடும் மேலோங்கும். உறுதிப்பாடும், விருத்தியும் குன்றும். அமைதியும், செழிப்பும் மங்கும்.
வாக்களிப்பது குடியாட்சி வழி; பேசிப்பறைந்து, சுதந்திரமான முறையில் கருத்துப் பரிமாறி, நிதானித்து முடிவெடுக்கும் வழி அது; நியாயம் பேசும் வழிமுறை அது. நியாயம் பேசும் வழிமுறை தோற்றுப் போனால், துவக்குவெடி கேட்கும். துவக்குவெடி என்பது வெறுமனே மனக்குறைக்கும் முரண்பாட்டுக்கும் ஆன பதில்வினை அல்ல; எத்தகைய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உணரப்படுகிறதோ அத்தகைய அநீதிக்குப் பரிகாரம் தேடுவதற்கான வழிவகையாகவும் தோன்றுவது அது. 
பல்வேறு நாடுகளின் பட்டறிவுகள் எங்கள்முன் இருக்கின்றன; அவற்றுள் இணக்கமான பட்டறிவுகளும், எதிர்மறையான பட்டறிவுகளும் அடங்கியுள்ளன; வாக்களிப்பு மேலோங்கி வெற்றி பெற்றவையும் அடங்கியுள்ளன; துவக்குவெடியை நாடி நொந்து போனவையும் அடங்கியுள்ளன.
இந்த இடத்தில் வைத்து எனது இலங்கை நாட்டைப் பற்றி எடுத்துரைக்க விரும்புகிறேன். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கை ஒரு சிறிய நாடு; ஆனாலும் இது ஒரு முக்கியமான நாடு; பல்லின, பல்மொழி, பல்பண்பாட்டு நாடு. இங்கு பெரும்பான்மையோர் சிங்களவர். அவர்கள் தமக்கே உரிய தனித்துவ அடையாளம் கொண்டவர்கள்.  தமிழரும் முஸ்லீங்களும் எண்ணிக்கையில் சிறுபான்மையோர். அவர்களும் தமக்கே உரிய தனித்துவ அடையாளங்கள் கொண்டவர்கள். இலங்கையில் இது ஏற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிவிவரம்; அங்கு இது சர்ச்சைக்குரிய சங்கதி அல்ல.  
தமிழ் பேசும் மக்களுக்கு நாட்டின் வட-கீழ்ப் புலத்தில் வாழ்ந்துவந்த வரலாறு உண்டு. வட-கீழ்ப் புலத்து மாவட்டம் ஒவ்வொன்றிலும் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையோர். நாட்டின் எஞ்சிய புலத்தில் சிங்களவர் பெரும்பான்மையோர். இதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிவிவரமே; இது சர்ச்சைக்குரிய சங்கதி அல்ல.
இலங்கையை முதலில் சிங்களஅரசுகளும், தமிழ் அரசுகளும் ஆண்டு வந்தன. பிறகு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வல்லரசுகள் அதைக் கைப்பற்றி, கட்டியாண்டு வந்தன. பிரித்தானியர் இலங்கையைக் கட்டியாண்ட காலத்தில், அதாவது 1833ல், நாட்டின் வெவ்வேறு ஆள்புலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. பிறகு சிங்களவர், தமிழர், முஸ்லீங்கள் அனைவரும் ஒருமித்து விடுதலை கோரினார்கள். 1948ல் நாடு விடுதலை பெற்றது. 
இலங்கையின் முதலாவது அரசியல்யாப்பு, எம்மைக் கட்டியாண்டவர்களால் வரையப்பட்டது. (சிறுபான்மைத் தரப்பினரை) பாதுகாக்கும் ஏற்பாடுகளுடன் கூடிய பெரும்பான்மை ஆட்சிக்கு அது வழிவகுத்தது. அவ்வேற்பாடுகள் விரைவில் புறக்கணிக்கப்பட்டன. அதன் பிறகு 1972ல் ஒன்றும், 1978ல் ஒன்றுமாக இரண்டு அரசியல்யாப்புகள் வகுக்கப்பட்டன. 1978ல் வகுக்கப்பட்ட அரசியல்யாப்பே இன்று நடைமுறையில் உள்ளது.
1972ல் இரண்டு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளுள் ஒன்றினால், மற்றைய பிரதான சிங்கள அரசியல் கட்சியின் இசைவையோ, பெரிதும் வட-கீழ்ப் புலத்தின் பிரதிநிதிகளைக் கொண்ட தமிழ் அரசியல் கட்சியின் இசைவையோ பெற்றுக்கொள்ளாமல் ஓர் அரசியல்யாப்பு வரையப்பட்டது.  
1972ல் அரசியல்யாப்பு வரைந்த பிரதான சிங்கள அரசியல் கட்சியின் இசைவையோ, பெரிதும் வட- கீழ்ப் புலத்தின் பிரதிநிதிகளைக் கொண்ட தமிழ் அரசியல் கட்சியின் இசைவையோ பெற்றுக்கொள்ளாமல் அடுத்த பிரதான சிங்கள அரசியல் கட்சியால் 1978ல் ஓர் அரசியல்யாப்பு வரையப்பட்டது.  
1972ல் வரையப்பட்ட அரசியல்யாப்பும், 1978ல் வரையப்பட்ட தற்போதைய அரசியல்யாப்பும் கருத்தொருமையின் அடிப்படையில் வரையப்படவில்லை. சம்பந்தப்பட்ட காலப்பகுதிகளில் ஆட்சி புரிந்த அரசியல் கட்சிகளால் ஒருதலைப்பட்சமாக வரையப்பட்ட அரசியல்யாப்புகளே அவை இரண்டும். அவை பெரும்பான்மையின் ஆட்சியதிகாரத்துக்கு வழிகோலிய அரசியல்யாப்புகள்.   
இலங்கையில் ஓர் அவப்பேறான அரசியற் பண்பாடு நிலவுகிறது. உண்மைக்கும் நீதிக்கும் சமத்துவத்துக்கும் முதன்மை அளிப்பதை விடுத்து, அரசியலதிகாரத்தை ஈட்டி வைத்திருக்கும் நோக்குடன் பெரும்பான்மைச் சமூகத்துக்கு மேலாதிக்க நிலை வழங்கும் போக்கு இங்கு காணப்படுகிறது. இத்தகைய போக்கின் பெறுபேறாக, உலகில் தனக்குரிய இடத்தை இலங்கையால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.   
நாடு விடுதலைபெற்று குறுகிய காலத்துக்குள்ளேயே ஆட்சிக் கட்டமைப்பை மாற்றும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. வட-கீழ்ப் புலத்தில் வாழும் தமிழ் மக்களால் அக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தாம் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுவதாகவும், குடியுரிமைகள், அரசியல் உரிமைகள், பொருளாதார உரிமைகள், பண்பாட்டு உரிமைகள் விடயத்தில் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர்கள் குறைகூறினார்கள். அவர்கள் நீதிநியாயமான அரசியற் கோரிக்கைகளை முன்வைத்த வேளைகளில் எல்லாம், தாக்கப்பட்டார்கள். பல தசாப்தங்களாக அவர்கள் தாக்கப்பட்டார்கள். அப்பொழுதெல்லாம் தமிழ் மக்கள் திருப்பித் தாக்கியதில்லை.
ஆட்சிக் கட்டமைப்பில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளும்படி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அரசியற் கோரிக்கையை முன்வைத்தார்கள். 1956 முதல் இற்றைவரை 60 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல்கள், மாகாணமன்றத் தேர்தல்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒவ்வொன்றிலும் மேற்படி கோரிக்கைக்கு தமிழ் மக்கள் குடியாட்சி நெறிநின்று பேராதரவு தெரிவித்து வாக்களித்தார்கள்.  
தமிழ் மக்கள் குடியாட்சி நெறிநின்று வழங்கிய தீர்ப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.  தமிழ் மக்களது இசைவின்றியும், அவர்களின் விருப்புக்கு மாறாகவும், ஐ. நா. ஏற்றுக்கொண்ட உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தை மீறியும் அவர்கள் ஆளப்பட்டு வருகிறார்கள்.  
நாடு விடுதலைபெற்று மூன்று தசாப்தங்கள் கழிந்த பின்னர், குடியாட்சி வழிமுறைகளும் அரசியல் வழிமுறைகளும் தோல்வியடைந்த பின்னர், தமிழ் இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சி துவங்கியது. அவர்களின் ஆயுதக் கிளர்ச்சி ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் நீடித்தது. வாக்களிப்பு வழிமுறை தோல்வியடைந்த பிறகு எழுந்த வெற்றிடத்தை துவக்கு வழிமுறை இட்டுநிரப்பிய விதத்துக்கு இது ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு. வாக்களிப்பின் ஊடாக அளிக்கப்பட்ட தீர்ப்புகளை ஏற்று மதித்து ஒப்புக்கொள்வது எத்துணை முக்கியம் என்பதை இது வலியுறுத்துகிறது. அத்தகைய தீர்ப்புகளை ஏற்று மதித்து ஒப்புக்கொள்வதே, துவக்குத் தேவையை ஒழிப்பதற்கு மிகவும் உறுதிவாய்ந்த வழிமுறை.  
மேற்படி நிகழ்வுகள் அனைத்தினதும் பெறுபேறாக இலங்கைத் தமிழ் மக்களுள் அரைவாசிப்பேர் புலம்பெயர்ந்து, உலக நாடுகள் பலவற்றிலும் வாழ்ந்து வருகிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். 1½ இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆயுதக் கிளர்ச்சியின்பொழுது சிங்களவர், தமிழர், முஸ்லீங்கள் அனைவரும் பாரிய பாதிப்புக்கு உள்ளானார்கள். நாட்டில் மேற்கொண்டும் வன்முறை இடம்பெற்றால், மேலும் தமிழர்கள் புலம்பெயர்வார்கள்.
இலங்கை உள்நாட்டு மோதல் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2012, 2013, 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ. நா. மனித உரிமை மன்றத்தில் மொத்தம் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மோதலில் ஈடுபட்ட இலங்கை அரசு மற்றும் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட இயக்கம் ஆகிய தரப்புகள் இரண்டும் சர்வதேய மனித உரிமைச் சட்டங்களையும், சர்வதேய மனிதாபிமானச் சட்டங்களையும் மீறியமை பற்றிய தீர்மானங்கள் அவை. 2015 அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தற்பொழுது ஜெனீவாவில் ஐ. நா. மனித உரிமை மன்றத்தால் மீள்நோக்கப்பட்டு வருகின்றன. மாறுகால நீதிபாலிக்கும் படிமுறை மற்றும் காணி, காணாமல்போனோர், தடுப்புக்காவல் கைதிகள் சம்பந்தமான பிசகுகள் மற்றும் உள்நாட்டு மோதலுக்கு நீதியான, ஏற்கத்தக்க ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு அரசியல்யாப்பு வாரியான ஏற்பாடுகள் போன்றவை அவற்றுள் அடங்கும்.
அண்மையில், அதாவது 2015ல், குடியாட்சிப் படிமுறை ஊடாக, வாக்களிப்பு வழிமுறை ஊடாக காத்திரமான அரசியல் மாற்றங்கள் இலங்கையில் கைகூடியுள்ளன. அரசியல்யாப்பில் விதிக்கப்பட்ட இரண்டு பதவிக்காலங்களுக்கு மேலாக அப்பதவிக்கு அன்றைய ஜனாதிபதி போட்டியிடுவதற்கு ஏதுவாக இலங்கை அரசியல்யாப்பு திருத்தப்பட்ட பின்னர், உரிய தவணைக்கு முன்னரே நடத்தப்பட்ட தேர்தலில், வாக்களிப்பு வழிமுறை ஊடாக, நாட்டு மக்கள் அனைவரையும் அரவணைக்கத் தவறிய சுரணையற்ற ஒரு யதேச்சாதிகார ஆட்சிபீடம் அகற்றப்பட்டு, புதியதொரு ஜனாதிபதியும், பிரதமரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவ்வாறு குடியாட்சிப் படிமுறையின் பாரிய முக்கியத்துவம் மீண்டும் அங்கு வலியுறுத்தப்பட்டது.
கருத்தொருமையின் அடிப்படையில் நாட்டுக்கு ஓர் அரசியல்யாப்பினை வகுப்பதற்கு புதிய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. அரசியல்யாப்பு வரையும் படிமுறையில் அது இறங்கியுள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் அரசாங்கத்தில் இணைந்துள்ளபடியால் 1972ம், 1978ம் ஆண்டுகளில் அரசியல்யாப்பு வரையுந் தறுவாயில் கிடைக்காத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பு இப்பொழுது நாட்டுக்கு கிடைத்துள்ளது. வட-கீழ்ப் புலத்து தமிழ் மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளைப் பெரிதும் உள்ளடக்கிய பிரதான தமிழ் அரசியல் கூட்டணி, நீதியான-ஏற்கத்தக்க அரசியல்யாப்பு முன்மொழிவுகளை வரைவதில் புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைத்து வருகிறது. பிரிக்கப்படாத, பிரியவொண்ணாத ஒரே இலங்கைக்குள் நீதியான, ஏற்கத்தக்க, செயற்படுத்தக்கூடிய, நீடித்த அரசியல் தீர்வு காண்பதற்கு தமிழ் மக்கள் உறுதி பூண்டுள்ளார்கள். பெரிதும் முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட கட்சிகளும் இப்படிமுறையில் பங்குபற்றுகின்றன. சுதந்திர இலங்கையில் முதல் தடவையாக நாட்டு மக்கள் அனைவரதும், எல்லா அரசியல் கட்சிகளினதும் கணிசமானளவு, நியாயமானளவு கருத்தொருமையின் அடிப்படையில் ஓர் அரசியல்யாப்பினை வரைய வாய்ப்புக் கிட்டியுள்ளது. உண்மையான அர்ப்பணிப்புடன் இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
2015 மார்ச் 13ம் திகதி இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோதி அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பந்தியை மேற்கோள்காட்டி எனது உரையை நிறைவுசெய்ய விரும்புகிறேன்:
"எமது பிராந்தியத்தில் வாழும் எங்கள் அனைவருக்கும் இந்த விடயம் பொருந்தும்; அதாவது, ஒரு நாட்டவர்கள்  என்ற வகையில் எங்களை நாங்கள் எவ்வாறு வரையறுத்துக் கொள்கிறோம் என்பதிலேயே எங்கள் வெற்றி தங்கியுள்ளது. மக்களின் அடையாளங்கள், மக்களை அரவணைத்தல், மக்களின் உரிமைகள், கோரிக்கைகள், கண்ணியம், மற்றும் எமது சமூகங்களின் வெவ்வேறு பிரிவினருக்கும் வாய்ப்பளித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக எல்லாம் இப்பிராந்தியத்தில் வாழும் நாங்கள் அனைவரும் நடவடிக்கை எடுத்து வந்துள்ளோம்; உண்மையில் பல்வகைமை படைத்த நாடுகள் அனைத்தும் நடவடிக்கை எடுத்து வந்துள்ளன. இப்பிரச்சனை பல விதங்களில் வெளிப்படுவதை நாங்கள் அனைவரும் கண்டுள்ளோம். துன்பதுயர வன்முறையை நாங்கள் எதிர்நோக்கியதுண்டு; கொடிய பயங்கரவாதத்தை நாங்கள் எதிர்கொண்டதுண்டு; அமைதிவழித் தீர்வுகள் வெற்றிபெற்ற விதங்களையும் நாங்கள் கண்டுகொண்டதுண்டு. சிக்குப்பிக்கான இப்பிரச்சனைகள் குறித்து எமது சொந்த வழியில் நடவடிக்கை எடுக்க நாங்கள் ஒவ்வொருவரும் முனைந்ததுண்டு. அவற்றைத்  தணிக்க நாங்கள் எப்படி எல்லாமோ முனைந்ததுண்டு. அது எப்படியாயினும், எனக்கு ஒரு விடயம் வெளிப்படையாகவே புலப்படுகிறது; அதாவது பல்வகைமை என்பது நாட்டுக்கு வலிமை சேர்க்கும்.
"எங்கள் சமூகத்தின் பிரிவினர் அனைவரதும் வேட்கைகளுக்கு நாங்கள் இடங்கொடுக்கும்பொழுது அவர்கள் ஒவ்வொருவரின் வலிமையும் நாட்டுக்கு கிடைக்கிறது. நாங்கள் மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் அதிகாரம் அளிக்கும்பொழுது எங்கள் நாட்டை நாங்கள் மேன்மேலும் வலுப்படுத்துகிறோம். நான் 13 ஆண்டுகள் முத்லமைச்சராகவும், ஓராண்டுக்கும் குறைவாக பிரதம மந்திரியாகவும் பதவி வகித்துள்ளேன். ஆதலால் நான் பக்கச்சார்பாகப் பேசுகிறேன் என்று கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
"இந்திய மாநிலங்களை மேலும் வலுப்படுத்துவதற்கே இன்று நான் அதிமுதன்மை அளித்து வருகிறேன். ஒத்துழைப்புடன் கூடிய இணைப்பாட்சி நெறியில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. ஆதலால் மாநிலங்களுக்கு நாங்கள் மேன்மேலும் அதிகாரங்களும், வளங்களும் அளித்து வருகிறோம். தேசிய முடிபுகளை எடுக்கும் படிமுறையில் மாநிலங்களை உரியமுறைப்படி நாங்கள் பங்குபற்ற வைக்கிறோம்.
"இலங்கை பல தசாப்தங்களாக துன்பதுயர வன்முறையையும் மோதலையும் எதிர்கொண்டு கடைத்தேறியுள்ளது. நீங்கள் பயங்கரவாதத்தை தோற்கடித்து, வெற்றிபெற்று, மோதலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். இனி இதயங்களை வெற்றிகொண்டு, சமூகத்தின் எல்லாப் பிரிவினரதும் வடுக்களை ஆற்றுவதற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் நாட்டின் ஒருமித்த குரல் ஓங்கி ஒலித்தது: மாற்றமும், மீளிணக்கமும், ஒற்றுமையும் மலரும் என்ற நம்பிக்கை அதில் எதிரொலித்தது. அண்மையில் நீங்கள் துணிந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் மெச்சத்தக்கவை. ஒரு புதிய துவக்கத்தை அவை புலப்படுத்துகின்றன.
"வருங்காலத்தில் இலங்கை ஒற்றுமையும், திண்மையும், அமைதியும், இசைவும் நிலவும் நாடாகவும், அனைவர்க்கும் வாய்ப்பும் கண்ணியமும் ஈயும் நாடாகவும் மேலோங்கும் என்று நான் உறுதிபட நம்புகிறேன். அந்த இலக்கை எய்தும் இலங்கையின் வல்லமையில் எனக்கு நம்பிக்கை உண்டு. எங்கள் நாடுகளுக்குப் பொதுவாக அமைந்துள்ள நாகரிகத்தின் பாரம்பரியத்தில் அந்த வல்லமை வேரூன்றியுள்ளது. மேற்கொண்டு முன்னேறும் பாதை ஒன்றை இலங்கையே தெரிவுசெய்ய வேண்டியுள்ளது. அதைத் தெரிவுசெய்வது தேசிய சமூகத்தின் எல்லாப் பிரிவினரதும், எல்லா அரசியல் தரப்பினரதும் கூட்டுப் பொறுப்பாகும். அதேவேளை உங்களுக்கு ஒரு சங்கதியை என்னால் உறுதிபடக் கூறமுடியும்: இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கையின் ஒற்றுமையும், திண்மையும் மிகமிக முக்கியமானவை. எங்கள் நலன் அதில் வேரூன்றியுள்ளது. மேற்படி அடிப்படை நெறியில் நாங்கள் கொண்ட நம்பிக்கையின் பெறுபேறாக வேரூன்றிய நலன் அது."
எனவே துவக்குக்குண்டை அறவே உதறித்தள்ளி, வாக்குத்துண்டை இறுகப் பற்றிக்கொள்ளக் கிடைத்த இந்த வாய்ப்பினைத் தவறவிடக் கூடாது.
R. Sampanthan, Ballot or Bullet, Counter Terrorism Conference, New Delhi, 15th of March 2017, translated by Mani Velupillai.  

No comments:

Post a Comment