பெரியையாவும் நாய்களும்

               மணி வேலுப்பிள்ளை

                அவர்     புறப்பட்டபொழுது     நாய்கள்     பத்தலில்     தண்ணீர்  குடித்துக்   கொண்டிருந்தன.    ஒருநொடி    நின்று,  இரண்டு பயணப் பைகளையும் முற்றத்தில் வைத்து,     திரும்பிப்     பார்த்தார்.     அவரை     அவை பொருட்படுத் தியதாகத் தெரியவில்லை.

 ஒருசில கிழமைகளுக்கு முன்னர்தான் அவர் ஊர்திரும்பியிருந்தார். சொகுசுப் பேருந்திலிருந்து பயணப்பைகளுடன் வந்து ஊர்ச்சந்தியில் இறங்கிய அவரை மூவுருளிகள் சூழ்ந்துகொண்டன. “தாய்மண்ணில் நடந்துபோக குடுத்து வைக்கவேணும்!” என்று சொல்லியபடியே அவர் தெருவைக் கடந்து ஒழுங்கையில் அடியெடுத்து வைத்தார். நீண்ட காலமாக உறைந்து கெட்டிபட்ட வியர்வை அவர் மேனி எங்கும் கொப்புளித்தது.

ஒழுங்கையோர வேலிகள் மதில்களாய்  மாறியிருந்தன. வெள்ளம் பாயமுடியாமல் தேங்கிநின்ற சுவடுகள் மதில்நெடுகத் தெரிந்தன. ஒவ்வொரு வீட்டினது சங்கடத்தின் இரு மருங்கிலும் நாவல் நிறத்தில் வைக்கப்பட்ட தண்ணீர்ப் போத்தில்கள் அவரை வியக்க வைத்தன. நாய்களை விரட்டுவதற்கான நாவல்-போத்தில்களை அவர் முன்னொருபோதும் கண்டதில்லை.

அவருக்கு நெருக்கமான மரஞ்செடிகொடிகள் மின்னிமறைந்தன. பனையும், பூவரசும், முள்முருக்கும், கிளுவையும்… அவர் கண்ணில் படவேயில்லை. பப்பாசியும், கறிமுருக்கும், எலுமிச்சையும் தோட்டப் பயிர்களாய் மாறியிருந்தன. காகங்களையும், கிளிகளையும், குயில்களையும், நாகணவாய்க் குருவிகளையும்… அண்ணாந்து தேடினார். அணில்கள், ஓணான்கள், கீரிகள்… அவர் பார்வைக்கு அகப்படவில்லை.

அன்றாடம் பிள்ளையார் கோயிலிலிருந்து ஒலிக்கும் சமயப் பாட்டுக்களை தனது தாய்மனையில் இருந்தபடியே அவரால் கேட்கமுடிந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் தொலைவிலிருக்கும் தேவாலயத்தில் இடம்பெறும் ஆராதனையும், வெள்ளிக்கிழமைகளில் அதற்கும் அப்பாலிருக்கும் பள்ளிவாசலில் ஓதப்படும் சலவாத்தும் காதில் விழுந்தன. திடீர்திடீரென வேள்விக்கோயில் பாட்டுக்கள் எல்லாவற்றையும் விஞ்சி செவிப்பறையில் மோதின… “அப்துல் ஹமீட்டின் பாட்டுக்குப் பாட்டு…” என்று அவர் வாய் முணுமுணுக்கும்.

இழவுச்செய்திகள் ஊர்முழுவதும் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படுவது அவர் முன்னொருபோதும் அறிந்திராத சங்கதி. உண்மையில் அது இழவுச் செய்தியுடன் கூடிய புலம்பெயர் விபரம் என்பதை அவர் உடனடியாகவே புரிந்துகொண்டார்: “…துன்னாலையில் பிறந்தவரும், ஆவரங்காலில் வசித்தவரும் ஆகிய ஏரம்பு மார்க்கண்டு  ……….ம் திகதி வெள்ளிகிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் வள்ளியம்மையின் அன்புக் கணவரும், சிந்துமதி (ஆஸ்திரேலியா), செந்திவேல் (ஜேர்மனி), இளவரசன் (கனடா), மதிவதனா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கணவதிப்பிள்ளை (இங்கிலாந்து), சரவணமுத்து (நியூசிலாந்து), பொன்மணி (பின்லாந்து) ஆகியோரின் அருமைச் சகோதரரும், மல்லிகா (அமெரிக்கா), சோபியா (யப்பான்), கோகிலன் (துபாய்) ஆகியோரின் பாட்டனாரும்… 

தற்பொழுது இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு ஊர்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். ஆளுக்கோர் அலைபேசியும், வீட்டுக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களும், ஆண்கள் வெளியில் சிறுநீர் கழிப்பதும் அவர்களின் ஏற்றத்தாழ்விலும் ஒரு சமத்துவத்தை நிலைநாட்டின. இவ்வளவு காலமும் அடக்கிவைத்த சிறுநீர் எனும்படியாக அவரும் ஆசைதீர அதை வெளியில கழித்து அவர்களுக்கு சரிநிகரானவர் ஆனார்.

ஒரு பனாட்டுத்துண்டு போல, சிவந்த உறையுடன்கூடிய,  ஓர் அலைபேசி எப்பொழுதும் அவர் கைவசம் இருந்தது. ஊர்வாசிகளிடம் அவர் பேச்சுக் கொடுத்தபொழுது, “பெரியையா எல்லாருடனும் கதைக்கிறாரே!” என்று சொல்லி அவர்கள் அவரைக் குறைத்து மதிப்பிட்டார்கள். அவர் சைவச் சாப்பாடு சாப்பிடுவதும், சோறு சாப்பிடாததும், சீனி சேர்க்காமல் தேநீர் பருகுவதும், புகைக்காததும், குடிக்காததும்… அவர்களுக்கு ஒரு வெகுளித்தனமாகத் தெரிந்தது. அவர் வேட்டி கட்டுவதும், கால்நடையாக நடமாடுவதும், வேப்பங்குச்சியால் பல்விளக்குவதும், ஓலைக்கினாட்டினால் நாக்கு வழிப்பதும்… அவர்களுக்கு இளக்காரமாகப் பட்டது.   

மரியாதையின் பொருட்டு ஒருதடவை விதானையாரைப் போய்ப் பார்த்து வந்தார். மற்றவர்களை அவருக்கு அவ்வளவாகத் தெரியாது. அவர் காதில் விழும்படியாக அவர்கள் தங்களுக்குள் வினவினார்கள்:

“பெரியையா ஏன் எங்களுக்கு விருந்து வைக்கேல்லை?”

“பெரியையா ஏன் கிடாய் அறுக்கேல்லை?”

“பெரியையா ஏன் கோழி அரியேல்லை?”

“பெரியையா ஏன் போத்தில் உடைக்கேல்லை?”

புலம்பெயர்வது ஒரு குற்றம் என்பது போலவும், புலம்பெயர்ந்தோர் அதற்குத் தண்டம் செலுத்துவது போல் தங்களை வரவழைத்து, விருந்தோம்பி, அன்பளிப்புகள் தந்து உறவாட வேண்டும் என்பது போலவும்  அவர்கள் நடந்துகொள்வதாக அவருக்குத் தென்பட்டது.

ஊரில் சைக்கிள்களை விட மோட்டார் சைக்கிள்களின் தொகை அதிகம். ஒழுங்கைவழியே நடந்து போகும் அவரை மோட்டார் சைக்கிள்கள் மோதாத குறை! ஒருமுறை சுடிதார் அணிந்த மூதாட்டி ஒருவர் மோட்டார் சைக்கிளில் அவரை மோதியும் மோதாமலும் கடந்து விரைந்ததைப் பார்த்து அவர் மலைத்து நின்றார்.

மோட்டார் சைக்கிள்களை விட நாய்களின் தொகை இன்னும் அதிகம். அவை அவர்மீது எஃகி வாய்வைக்க முற்பட்டன. ஒருதடவை அவர் பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு கல்லை எடுத்தார். எடுத்த கையோடு நாய்களின் குரைப்பும், உறுமலும், நெருக்கமும் எல்லைமீறுவது கண்டு, எடுத்த கல்லை அவர் நழுவவிட்டார். உடனே கோயில்முகப்புக் கடுவன் அவருடைய வேட்டித் தலைப்பைக் கவ்வி இழுத்துக் கிழித்துவிட்டது.

          அடுத்தநாள் நாய்களை ஆட்கொள்ள அவர் வகுத்த வியூகத்தின்படி பாண்கடையில் வாங்கிய மூன்றுசோடி வாட்டிய பாணுடன் மெல்ல நடந்து வந்தார். அவர் வேட்டியைப் பதம்பார்த்த கோயில்முகப்புக் கடுவன் அவரை எதிர்கொண்டு, ஒரு பயங்கர உறுமலுடன் நிலையெடுத்தது.  அவர் மெத்த நிதானமாக தனது பொதியைப் பிரித்தபொழுது, அது எச்சரிக்கை அடைந்து தனது சகபாடிகளை அறைகூவி அழைத்தது. நாய்க்குலம் தன்னைச் சூழமுன்னரே அவர் ஒரு பாண்துண்டைப் பிடுங்கி கடுவனை நோக்கி எறிந்தார். அதை ஒரு கல்லென்று எண்ணியோ என்னவோ, அது அவரை அணுகி யாடுபாய்ந்தது. அவர் கடுவனுக்கு அடிபணிந்து ஒரு முழுப்பாணை முன்வைத்தார். கடுவன் குரைப்பை நிறுத்தி வாலை ஆட்டியது. மூலைமுடுக்குகளிலிருந்து பாய்ந்து வந்த நாய்கள் தமது தோரணையை மாற்றி, வாலாட்டி, இருமியும் செருமியும் தமது உடனிருப்பை உணர்த்தின. கடுவன் படக்கென அந்த முழுப்பாணைக் கவ்விக்கொண்டு தலைமறைவாகியது. மடிவிட்ட நாய் ஒன்று இன்னொரு பாணைத் தட்டிப்பறித்தது.

          நாய்கள் புடைசூழ அவர் ஒழுங்கைவழியே பவனிவருவதை ஊரவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். ஒருதடவை நின்று சுற்றவரப் பார்த்து நாய்களை எண்ணினார். பத்துப் பதினைந்து நாய்கள் தேறும். அந்த வேளையில் சரசரவென்று அவர் பாதம் வெதுவெதுத்தபொழுது குனிந்து பார்த்தவர், “நாசம் கட்டிப்போட்டுது!” என்று வைதார். மதிலுக்கு மேலால் எட்டிப் பார்த்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்:

          “பெரியையாவிடம் நாய்கள் உரிமை கொண்டாடத் துவங்கிவிட்டுதுகள்!”

“ஒரு  நாயாவது அவருக்கு நன்றி செலுத்தாமல் விடுமா?”

“கலகலவென்று மலசலம் வந்து…” சைவப்புலவர் முணுமுணுத்தார்.

“கால்வழி மேல்வழி சார நடந்து…” பண்டிதர் ஒத்தூதினார்.

வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வீடுதிரும்பியவர் நேரே பத்தலுக்குப் போய்  முகம் கைகால் கழுவினார்.

பத்தலடியில் ஒரு பப்பாசி மரமும், கிணற்றடியில் நாலைந்து இரதை வாழைகளும் நின்றன. ஒரு வாழை குலைதள்ளியிருந்தது. வீட்டுக்கோடிக்குள் நின்ற எலுமிச்சையின் தூசுபடிந்த கிளைகள் கூனிக்குறாவி புழுதி அளைந்தன. மாவும் பலாவும் மாத்திரமே தான்தோன்றித்தனமாக ஓங்கி வளர்ந்திருந்தன.

முற்றத்து மாமரத்துக் கொப்புகள் சிலவற்றை வெட்டியெடுத்து, நிலத்தில் தோய்ந்த எலுமிச்சங் கிளைகளைத் தூக்கி ஆளுயரத்துக்கு மிண்டுகொடுத்த பிறகு குலைவாழையையும் நிமிர்த்தி மிண்டுகொடுத்தார். “வாழையும் எலுமிச்சையும் கொடுத்து வைச்சவை!” என்று அக்கம் பக்கத்தவர்கள் கருத்துரைத்தார்கள். அவ்வப்பொழுது கண்ணில்படும் முக்கனிகளையும் அபகரிப்பவர்கள்  என்ற வகையில் அம்மரங்களின் நலனில் அவர்கள் அக்கறை எடுப்பது  இயற்கை தானே!

பத்தல்-தண்ணீர் அக்கம் பக்கத்தில் தேங்காமல் நேரே எலுமிச்சைப் பாத்தியை அடையத்தக்கதாக ஒரு வாய்க்காலை அவர் இழுத்துவிட்டார். ஒருசில நாட்களில் மதாளித்த எலுமிச்சை ஒரு தேர்போல் காட்சி அளித்தது. கேட்கவா வேண்டும் நாய்களை? எலுமிச்சைப் பாத்தி நாய்களின் போக்கிடமாய் மாறியது.  எலுமிச்சை நிழலும் குளுமையும், வாய்க்கால்  வழிவந்த தண்ணீரும் அவற்றை ஈர்த்து வைத்திருந்தன.

மாலன், வேலன், சிறுக்கி, பொறுக்கி... என்றெல்லாம் நாய்களை விளித்து அவர் அளவளாவுவது சாடைமாடையாக அயலவர்களின் காதில் விழுந்தது. “பெரியையாவுக்கு மதியம் திரும்பிவிட்டது!” என்று அவர்கள் குசுகுசுத்தார்கள்.

ஒருநாள் உச்சிவெயில் சுட்டெரிக்கும் வேளையில் அவர் “அடிக்… அடிக்!” என்று கத்தி நாய்களை விரட்டும் சத்தம் அயலை உலுக்கியது. ஏழெட்டு நாய்கள் எலுமிச்சைப் பாத்தியிலும் வாய்க்காலிலும் தலைக்கொரு பளைதோண்டிப் படுத்துக் கிடந்தன. அவை நொடிக்கொரு தடவை எழுந்து பின்னங்காலை உயர்த்தி சிறுநீர் கழித்து தமது குலவொழுக்கத்தைப் பேணிக்கொண்டன! அப்படியாகத் தத்தம் ஆள்புலத்தை அவை கட்டிக்காப்பதையும், இச்சைப்படி மலங்கழிப்பதையும் அவரால் தடுக்க முடியுமா, என்ன? என்றாலும் கழிவுநெடி கிளம்பி வளவுமுழுவதும் அடர்ந்து படர்வதை இம்மியும் அவரால் சகிக்க முடியவில்லை. ஆதலால் அவற்றை அதட்டி விரட்டியடித்தார். அவையோ மறுப்புத் தெரிவிக்காமல் நிதானமாய் எழுந்து பல்லிளித்து வாலாட்டி வளவுக்குள்ளேயே சுழன்றபடி இருந்தன. ஒரு நாயேனும் வளவை விட்டு அகலவில்லை. தனது விருந்தோம்பலின் விளைவை எண்ணி  அவர் விசனப்பட்டார்.

அதேவேளை இச்சைப்படி மலங்கழிக்கும் நாய்கள்மீது அவரால் பொறாமைப்படாமல் இருக்க முடியவில்லை.  அவை தங்குதடையின்றிக் கழிப்பதையும், தனக்கு அரைகுறையாகக் கழிவதையும் ஒப்பிட்டு மனம்வெதும்பினார்.            

          பாண்போறணையில் வேலைசெய்யும் காளி வழமைபோல் ஒருநாள் கருக்கலுக்குள் வீட்டிலிருந்து வெளிப்பட்டு ஒழுங்கைக்கு வந்தான். அங்கே அலைபேசியும் கையுமாக, கைகால்களை எறிந்து அவர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். புலரிப்பொழுதில் அவர் குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சி செய்வதை நாய்கள் அமைதியாகவும், பலாக்கொட்டைக் குருவிகள் கீச்சிட்டபடியும் வேடிக்கை பார்ப்பதாக அவனுக்குத் தோன்றியது.

அடுத்தநாள் அதேநேரம் வேலைக்குப் புறப்பட்ட காளியின் கண்ணில் அவர் படவில்லை. தனது மின்விளக்கொளியைப் பாய்ச்சியபடி அவன் ஒழுங்கை வழியே நடந்து வந்தான். அப்பால் இருந்த பற்றைக்குள் இன்னொரு மின்விளக்கொளி ஊசலாடியது. காளிக்கு கரவு வந்துவிட்டது! விளக்கை அணைத்து அடிமேல் அடிவைத்து பற்றையை அணுகினான். 

“கைகாலை எறியேக்கை அலைபேசியை நழுவவிட்டு விட்டேனடா, காளி!” என்றார் அவர், நிதானமான தொனியில்.

“பெரியையா பொல்லாத ஆள்தான். இருட்டுக்குள் என்னை இன்னார் எண்டு கண்டுபிடிச்சுவிட்டாரே!” என்று தனது வாய்க்குள் முணுமுணுத்த காளி,  “அதை ஒரு பினாட்டுத் துண்டெண்டு நினைச்சு நாய்கள் கவ்விக்கொண்டு போயிருக்கும், பெரியையா! உங்களுக்கு நுளம்பு கடிக்கேல்லையோ, பெரியையா? விடிஞ்சபிறகு தேடிப்பாக்கலாம், வெளியாலை வாங்கோ பெரியையா!” என்று கூப்பிட்டான்

அவர் உடற்பயிற்சியை இடைநிறுத்தி வளவுக்குத் திரும்பி மறுபடி உறங்கிவிட்டார். ஏழு மணி அளவில் விழித்தெழுந்தவர் பற்றையடிக்குப் போய் தேடிப்பார்த்தார். அலைபேசி கண்ணில் படவில்லை. நுளம்புகள் மொய்க்கவே அவர் தேடுதலை நிறுத்தி பின்வாங்கிவிட்டார். அடுத்தநாள் பயிற்சிவேளையில் காளியுடன் தனிப்படப் பேசவேண்டும் என்று எண்ணியிருந்தார்.

அடுத்தநாள் காளி வெளிப்படவில்லை. பொழுதுபுலர்ந்த பிறகு அயலில் விசாரித்தபொழுது காளி வன்னிக்குப் புறப்பட்ட சங்கதி தெரியவந்தது. அவன் திரும்பிவர நாளாகும் என்றும் சொன்னார்கள். அப்பொழுது பளுவில் கடித்த நுளம்பை அடித்து எடுத்துப் பார்த்தார். ஒரு தேனீபோல் பருத்த நுளம்பு!

அவர் கொஞ்ச நாட்கள்தான் தனது தாய்மனையில் தங்கியிருப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். தனது தாய்மனை சரிவரப் பேணப்படவேண்டும் என்பதில் அவர் குறியாய் இருப்பது நியாயந்தான் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். ஆகவே பத்தலுக்கும் கக்கூசுக்கும் குளியலறைக்கும் பளிங்குக்கல் பதித்துப் புதுப்பிக்கும் வேலையில் அவர் இறங்கியபொழுது அவர்களால் அதை நயக்காமல் இருக்க முடியவில்லை. அந்த வேலை கடுகதியில் முடிவடையத்தக்கதாக அவர் கூலிக்குமேல் கூலிகொடுத்ததை மெச்சாத கூலியாட்களும் இல்லை.

அவர் செய்த ஒரேயொரு தப்பு, நாய்களை விளித்து ஒரு சொல்லுக் கேட்காதது! வேலை முடித்து கூலியாட்கள் புறப்பட முன்னரே மூன்று இடங்களிலும் தத்தம் ஆள்புலக் குறியீடுகளை அவை போதுமான அளவில் பொறித்துவிட்டன.  “ஏன், வாய்க்காலையும் பாத்தியையும் கெடுத்தது போதாதோ?” என்று கேட்டு நாய்களை அவர் விரட்டியடித்தார். அவரது தடியடியையும் கல்லெறியையும் வாங்கிக்கொண்டு வளவுக்குள்ளேயே அவை வலம்வந்தன. அடுத்தநாள் மூன்று இடங்களிலும் அவை இயற்கைக் கடன் செலுத்திய தடயங்களைக் கண்டு, அதை எப்படித் தடுக்கலாம் என்று யோசித்தார். அவை பத்தலையும் கக்கூசையும் குளியலறையையும் நாடுவதற்கு தண்ணீர்விடாயே காரணம் என்று மட்டுக்கட்டியவர், அதைத் தடுக்க வகுத்த உத்தியின்படி மூன்று வாசல்-படிகளிலும் ஒவ்வொரு வாளி தண்ணீர் வைத்தார். அதன்பிறகு நாய்கள் படிதாண்டி நுழையவில்லை என்பது மெய்தான்.

அதேவேளை வீட்டுக்குள்ளேயே அவரை நுளம்புகள் தாக்கத் துவங்கின. வீட்டுக்கு வெளியே இடைக்கிடை அவை கடிப்பதில் ஓரளவு நியாயம் இருக்கிறது. ஒழுங்கையில் இடைவிடாது கடிப்பது அவற்றின் அடிப்படை உரிமை. ஆதலால் ஊராட்சி மன்றம் எதுவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால் வீட்டுக்குள் புகுந்து ஆள்மீது வாய்வைப்பது அடாத்து மட்டுமல்ல, அடாவடியும் கூட!

பத்தலடி வாளித்தண்ணீரில் நுளம்பு முட்டைகளும் குஞ்சுகளும் பெருகிய சங்கதி தெரியவந்ததும் அவர் ஏங்கிப்போனார். தனது புண்ணியம் ஒவ்வொன்றும் தனக்குப் பாவம் புரிவதாக உள்ளம் வெதும்பியவர், நாய்களுக்குத் தீனும் தண்ணீரும் வைப்பதை இடைநிறுத்தினார். அவற்றுக்குப் பாவம் செய்தால்தான் அவருக்குப் புண்ணியம் கிடைக்கும் எனத்தக்க முரணிலை அது. “நான் புறப்பட்ட பிறகு இந்த வளவவில் அதுகளுக்குத் தீனும் தண்ணீரும் கிடைக்கப் போவதில்லை; நான் நிற்கும்பொழுது கிடைக்காது போவது மட்டும் ஒரு கேடா?” என்று அமைதிகண்டார். 

ஒருநாள் உடற்பயிற்சி முடியும் வேளையில் கோயில்மணி மடார், மடார் என்று செவியில் விழுந்தபொழுது “ஒருக்கால் போய்த்தான் பார்ப்போமே!” என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டார். சாரிசாரியாக மாணவிகள் ஏட்டுப்பைகளுடன் அவரைக் கடந்து சென்றார்கள்.

கோயில்முகப்பில் அடியார்களுக்குப் பதிலாக பெருவாரியான நாய்கள் அவரை வரவேற்றன. கோயிலுக்குள் புகுந்து நோட்டமிட்டார். வழிபடுவார் எவரையும் காணமுடியவில்லை. ஐயரே கைமணியையும் கோபுர மணியையும் மாறிமாறி அடிப்பதைக் கண்டு கண்கலங்கியவர், ஐயரிடம் சங்கிலியை வாங்கி, தானே கோபுரமணியை அடித்தார். வெளியேறுந் தறுவாயில் ஐயருக்கு அவர் தெட்சணை கொடுக்கத் தவறவில்லை. ஐயர் நெகிழ்ந்து குழைந்து அவர் பேரில் அர்ச்சனை செய்தார்.

“ஐயாவை ஒண்டு கேட்கலாமோ?”

“தாராளமா கேளுங்கோ, பெரியையா!”

“பொம்பிளைப் பிள்ளையள் தானே பள்ளிக்கூடம் போகுதுகள், ஐயா! ஆம்பிளைப் பிள்ளையள் போவதாகத் தெரியேல்லையே?”

“சாராயக் கடைக்குப் போய்வரத்தான் அவங்களுக்கு நேரம் போதும், பெரியையா; பள்ளிக்கூடத்தில் வீண்பொழுது போக்க அவங்கள் என்ன பொம்பிளைப் பிள்ளையளா, பெரியையா?”

அதிர்ச்சியில் அவருக்கு மேற்கொண்டு பேச நா எழவில்லை.

“பெரியையா!”

“?”

“வேறை ஏதாவது?”

“ஓம், ஐயா! வெறும் வீடுகள் ஒருபுறம்… வீடில்லாத ஆட்கள் மறுபுறம்…?

“சரிதான், பெரியையா! வேறை?”

“காகமும் பனையும் யாழ்ப்பாணத்தின் சின்னங்கள், ஐயா! காகமும் அணிலும் கொந்தி விழுத்தும்  நொங்குகளைக் குடிக்க எவ்வளவு ஆசையாய் இருக்கு!”

“அழிந்த பனை!” என்றார் ஐயர். “யாழ்ப்பாணத்தின் சின்னம் இப்ப நாய்தான், பெரியையா!” அதை ஒப்புக்கொள்வது போல் தலையசைத்துவிட்டு அவர் வீடுதிரும்பினார்.

அவர் எதிர்பார்த்தபடி சிறுக்கி கடுவனைத் தேடியது. கோயில்முகப்புக் கடுவனுடன் அது சரசமாடியபொழுது, வளவுக் கடுவன்கள் குரைத்துக்கொண்டு போய் அவற்றை விலக்கி வைத்தன. சிறுக்கியை அடைவது யார் என்பதை தீர்மானிப்பது போல் அவை நாள்முழுவதும் குரைத்து ஊளையிட்டு வாதப்பிரதிவாதம் புரிந்தன.

 மறுநாள் அவரது செருப்புகளில் ஒன்றைக் காணவில்லை. பொறுக்கி அதைப் பற்றைக்குள் வைத்து நன்னிக்கொண்டிருந்த சங்கதி சில நாட்களுக்குப் பிறகு துலங்கியது. கொஞ்சநாள் கழித்து அவர் முன்னிலையில் வேலன் சுழன்றடித்து விழுந்து உயிர்துறந்தது. அதன் கண்கள் திறந்திருந்தன. வாயிலிருந்து நுரை தள்ளியது. வயிற்றாலும் போயிருந்தது. அவர் அதிர்ந்துபோனார். உடனடியாக மற்ற நாய்களுக்கு தீன் போட்டுவிட்டு வேலனை அவர் எலுமிச்சையடியில் அடக்கம் செய்தார்.

அருமைத்தம்பி வளவினுள் புகுந்த வேலன் கோழிக்கூட்டைப் பிரித்து ஒரு சேவலைக் கவ்விக்கொண்டு வந்து பசியாறிய சங்கதி பிறகு தெரியவந்தது. அருமைத்தம்பி தருணம்பார்த்து ஒரு கருவாட்டுத் துண்டை பொலிடோலில் தோய்த்து மதிலுக்கு மேலால் வேலனை நோக்கி வீசியதாக ஒரு கதை பரவியது. 

பிறகு ஒரு கிழமை கழித்து அவர் புறப்பட்டபொழுது நாய்கள் பத்தலில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தன. ஒருநொடி நின்று, இரண்டு பயணப்பைகளையும் முற்றத்தில் வைத்து, திரும்பிப் பார்த்தார். அவரை அவை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

ஒழுங்கையில் எதிர்ப்பட்டவர்கள் தலையை மட்டும் ஆட்டி விடைகொடுத்தார்கள். அவரும் பதிலுக்கு ஒரு தலையசைப்புடனும் புன்னகையுடனும் நடந்தபடியே விடைபெற்றார். விதிவிலக்காக விதானையாரின் வளவுக்குள் புகுந்து உத்தியோகபூர்வமாக விடை பெற்றுக்கொண்டார்.

ஒழுங்கையில் இறங்கி திரும்பவும் ஒருதடவை திரும்பிப் பார்த்தார். மாலன், சிறுக்கி, பொறுக்கி உட்பட அவர் வளவுநாய்கள் முழுவதும் அவருக்கு மரியாதை செலுத்துவதுபோல் ஏறத்தாழ நூறு கவடு தூரத்தில் பின்தொடர்வது போலத் தெரிந்தது.

அப்பொழுது கோயில்முடக்கில் காளி ஒரு முதுகுப்பையுடன் எதிர்ப்பட்டான். அவரைக் கண்டதும் அவன் அப்படியே நின்றுவிட்டான். அவரோ அவனைக் கண்டுகொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. அவனே பேச்சுக் கொடுத்தான்: “பெரியையா, அந்த அலைபேசி…” என்று இழுத்தான் காளி. அந்த நேரம்பார்த்து அந்த நாய்க்கூட்டம் அவர்களைக் கடந்து போய்விட்டது.

காளியைப் பார்க்காமலேயே “அது உனக்கு என்ரை அன்பளிப்படா, காளி!” என்று சொல்லி, அவர் நாய்களைப் பின்தொடர்ந்தார். காளி விறைத்துப்போய் நின்றான்: “பொல்லாத பெரியையா!”

அவருக்குப் பிரியாவிடை கொடுப்பதுபோல் ஊர்நாய்கள் கோயில்முகப்பில் குழுமியிருந்தன. அவர் திரும்பிப்பார்த்து, “காளி!” என்று கூப்பிட்டார். ஓடிவந்த காளியிடம், “இதுகளுக்கு ஏதாவது தீன் போடடா!” என்று சொல்லி தனது சட்டைப்பையுக்குள் கையை விட்டார்.

“பரவாயில்லை, பெரியையா! இருக்கட்டும் பெரியையா! நானே வாங்கிப் போடுறன், பெரியையா! வேண்டாம் பெரியையா, வைச்சிருங்கோ, பெரியையா!...”

“எட, பிடியடா, காளி! இதை வைச்சிரடா! நான் திரும்பி வரும்வரை அதுகளுக்கு இடைக்கிடை எண்டாலும் ஏதாவது தீன் போடடா! இந்தக் காட்டுப் பிராணிகளை மனுசர் வீட்டுப் பிராணிகளாக்கியது பெரிய கொடுமையடா! காட்டில் அதுகள் தப்பிப் பிழைத்திருக்கும். வீட்டில் மனுசரின் தயவில்தான் அதுகளால் உயிர்வாழ முடியும்!”

கடைசிவரை காளி கைநீட்டவில்லை. தனது கையில் அகப்பட்ட பச்சைத்தாள்களை அவரே அவனுடைய சட்டைப்பையுக்குள் திணித்துவிட்டார். காளி வாய்ப்பிறப்பு ஏதுமின்றி இரண்டு பயணப்பைகளையும் அவரிடமிருந்து பிடுங்கிக்கொண்டு சந்தியை நோக்கி நடந்தான்.  ஒரு முறுவலுடன் அவர் பின்தொடர்ந்தார்.

சந்தியில் அவரை வழியனுப்பி வைத்துவிட்டு வீடுதிரும்பும் வழியில் சாராயக்கடைக்குள் நுழைந்த காளி புயல்வெறியுடன் வெளிப்பட்டான்: “வம்பிலை பிறந்து வரம்பிலை கிடந்ததுகள்! பரதேசிப்பயல்கள்! ஈனப்பிறவிகள்! தேசிக்காய்த் திருடிகள்! வாழைப்பழக் கள்ளிகள்! கள்ள மாம்பழம் தின்னிகள்! பிலாப்பழக் கொள்ளையர்! … ஒரு பண்டியும் பெரியையாவுக்கு கைகொடுக்கேல்லை… ஒரு செம்மறியும் பெரியையாவின் பைகளைத் தூக்கிவரேல்லை... எடியே…! பலகாரப் பரத்தை…! ஒரு நாளேனும் பெரியையாவுக்கு நாலு தோசை சுட்டுக் குடுத்தனியோடி? எடே, சாப்பாட்டுக்கடைச் சண்டாளா!  எப்ப எண்டாலும் பெரியையாவுக்கு ஒரு பிரியாணிப் பொதி கொண்டுபோய்க் குடுத்தனியோடா? எடியே, பனம்பாத்திப் பரதேசி! ஒருநாளாவது ஒரு பனங்கிழங்கு, ஒரு புழுக்கொடியல், ஒரு பூரான், ஒரு பினாட்டுத்துண்டு கொண்டுபோய்த் பெரியையாவுக்கு குடுத்தனியோடி?...”

          படுவெறியிலும் கூட, விதானைவளவு நெருங்கியதும் வாயைப் பொத்தினான் காளி. பிறகு: “எடே, அசைவப் புலையா! எடே, செந்தமிழ்ப் பண்டாரி!” என்று கூப்பிட்டு, இரண்டு வீடுகளுக்கும் மும்மூன்று கற்களை விட்டெறிந்தான். சாளரக் கண்ணாடிகள் நொருங்கிய சத்தம் கேட்டு ஊர்நாய்கள் அவன்பின்னே அணிதிரண்டு குரைத்த விதம் அவனுக்கு மேலும் தெம்பூட்டியது. அப்பால் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு கல்லெறிந்து திட்டியபடி அவன் வீடுபோய்ச் சேர்ந்தான்.

கையோடு ஒரு கோடாலியுடன் வெளிவந்த காளி “எடே, எருமைத்தம்பி!” என்று கர்ச்சித்தபடி பாய்ந்துசென்று கோழிக்கூட்டைக் கொத்தியெறிந்தான். கோழிகளும் குஞ்சுகளும் வீலிட்டபடி சிதறி ஓடின. மாலன், சிறுக்கி, பொறுக்கி உட்பட பெரியையா-வளவு நாய்கள் எல்லாம் தலைக்கொரு கோழியைக் கவ்விக்கொண்டன. அருமைத்தம்பிக்கு எஞ்சிய கோழிகளைவிட மோசம்போன கோழிகளே அதிகம் என்று கேள்வி.

அருமைத்தம்பியும், சைவப்புலவரும், பண்டிதரும் கூட்டாக எழுதிக்கொடுத்த முறைப்பாட்டின் பேரில் விதானையாரிடமிருந்து காளிக்கு அழைப்பாணை வந்தது. அப்பொழுது காளிக்கு வெறி தணிந்திருந்தது. அழைப்பாணைக்குப் பணியாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என்பது காளிக்குத் தெரியும். பெரியையாவுக்கு அலைபேசி ஊடாகத் தகவல் கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டு விதானைவளவுக்குப் புறப்பட்டான் காளி.

ஒழுங்கைவழியே ஓடிவந்த குத்தியன் காளியை வழிமறித்து  “அடே, காளி, நீ பெரிய இடத்து ஆளடா! விதானையார் உன்னை வரவேண்டாமாம்! திரும்பிப்  போகட்டாம்! என்னடா யோசிக்கிறாய்? திரும்பிப் போடா! எட, வீட்டை போடா!” வீம்புடன் திரும்பி நடந்தான் காளி.

“எடே, காளி!” என்று கைதட்டிக் கூப்பிட்டான் குத்தியன்.

“என்னடா, குத்தியா?”

“ஏதாவது மிச்சம் கிச்சம் கிடக்கோடா?”

“சரி வந்து துலையடா!” குத்தியன் ஓடிவந்தான். “பெரியையா, விதானையாரைக் கூப்பிட்டுக் கதைச்சவரோடா?”

“ஓமடா! அல்லாவிட்டால் நாங்கள் உன்னைத் தென்னைமரத்தோடு சேர்த்துக் கட்டிப் போட்டிருப்போமடா!”

“விதானையார் கட்டிப்போடச் சொன்னவரோடா?”

“விதானையார் என்னடா சொல்லுறது? அவற்றை எழுதாயாப்பு அப்படித் தானே சொல்லுது!”

“சரி, சரி! இந்தா, இதைப் பிடியடா! அந்த எருமையிட்டைப் போய் இதைக் குடுத்து என்னைச் சொல்லி ஒரு சேவல் வாங்கிக்கொண்டு வாடா!”  

அருமைத்தம்பியின் வளவிலிருந்து சேவலோடு திரும்பிய குத்தியன், “அவன் காசு வேண்டாம் எண்டு சொல்லிப் போட்டானடா!” என்றான். இருவரும் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டார்கள்.

“அது சரியில்லையடா! இந்தாடா, இந்தப் போத்திலைக் கொண்டுபோய் அவனிட்டைக் குடடா! பிறகு கோழிக்கறி கொண்டுவருவதாகவும் சொல்லிப்போட்டு வாடா!” என்றான் காளி.

தற்சமயம் பெரியையாவின் வளவில் மாத்திரம் கிட்டத்தட்ட பதினைந்து நாய்கள் குடியிருக்கின்றன. காளிதான் அவற்றுக்கு எசமான்.

காளியின் கணக்குப்படி இந்த ஊரில் வசிக்கும் ஆட்களின் எண்ணிக்கை பருமட்டாக ஐம்பது; மோட்டார் சைக்கிள்கள் நூறு;  நாய்கள் இருநூறு!

திட்டவட்டமான புள்ளிவிவரம் விதானையாரிடம் இருக்கும் தானே!

___________

2019-08-17

No comments:

Post a Comment