லசந்த விக்கிரமதுங்காவின்
படுகொலை
லசந்த விக்கிரமதுங்கா
அனுரா குணசேகரா
1986ல் பிரேமகீர்த்தி டி அல்விஸ் முதல், 2009ல் லசந்த விக்கிரமதுங்கா வரை, 40 ஊடகர்களும், ஊடகத் துறைஞர்களும் கொல்லப்பட்டுள்ளார்கள், அல்லது வன்முறைக்கு உட்பட்டு மடிந்துள்ளார்கள். அவர்களுள் 31 பேர் தமிழர்கள். இந்த இலங்கையர்கள் அனைவரும் தத்துவம்பெற்ற ஊடகத் துறைஞர்கள்.
அவற்றுள் 31 கொலைகள் மகிந்த ராஜபக்சாவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றவை. 2004 சித்திரை முதல் 2009 பங்குனி வரை முதலில் பிரதம மந்திரியாகவும், பிறகு ஜனாதிபதியாகவும் அவர் பதவிவகித்த காலத்தில் நிகழ்ந்தவை. பிறகு ஜனாதிபதியாகப் பதவியேற்ற அவருடைய தம்பி கொதாபயா 2005 முதல் 2015 வரை பாதுகாப்புச் செயலாளரக விளங்கியவர்.
மேற்படி காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்களைத் தவிர, வேறு பலர் கடத்தப்பட்டார்கள். தாக்கப்பட்டார்கள். வதைக்கப்பட்டார்கள், பல்வேறு வகைகளில் மிரட்டப்பட்டார்கள். ஒருசிலர் உயிருக்கஞ்சி நாட்டைவிட்டு வெளியேறினார்கள். அவ்வூடகர்களுள் பெரும்பாலானோர் அன்றைய அரசைக் கண்டித்து முழங்கியவர்கள் என்பதில் வியப்புக்கிடமில்லை. 2015ல் ராஜபக்சாவின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டவுடன், ஊடகர்களுக்கு இழைக்கப்பட்டஇன்னல்கள் ஒரு முடிவுக்கு வந்தன.
1990ல் ரிச்சார்ட் டி சொய்சாவும், 2009ல் லசந்த விக்கிரம்துங்காவும் கொல்லப்பட்டமை, 2010ல் பிரகீத் எக்னலிகொடை காணாமல் போக்கடிக்கப்பட்டமை என்பன அவற்றுள் மிகவும் முதன்மை பெறுபவை. அவை உலகத்தின் சீற்றத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளானபடியால் மட்டும் முதன்மை பெறவில்லை. அதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன.
இக்கொலைகள் அனைத்துக்கும் உள்ள பொதுத்தன்மை உள்ளத்தைப் பெரிதும் உறுத்துகின்றது: அதாவது, இவற்றுள் எதுவுமே முற்றிலும் புலனாய்வு செய்யப்படவுமில்லை, கொலையாளிகள் தண்டிக்கப்படவுமில்லை! அவற்றுடன் தொடர்புடைய நிகழ்வுகள் பெரிதும் அப்பட்டமாக இடம்பெற்றவை. வலிந்து ஈர்க்கும் சூழ்நிலைச் சான்றுகளைக் கொண்டு, இன்னார்தான் சூத்திரதாரிகள் என்று சுட்டிக்காட்டப்பட்டதுண்டு.
எனினும் முன்வரக்கூடிய சாட்சிகளை மிரட்டி, பிரேத பரிசோதனைகளைத் திசைதிருப்பி, அப்பட்டமான போலிப் புலனாய்வுகளைப் பெருமெடுப்புடன் மேற்கொண்டு, வேண்டுமென்றே வஞ்சகமான முறையில் அதிகாரபூர்வமான அறிக்கைகளை வெளியிட்டு, உருப்படியான சான்றுகளை திரும்பத்திரும்ப அமுக்கியோ பதுக்கியோ புலனாய்வுகளுக்குத் தடங்கல் விளைவிக்கப்பட்டது, அல்லது குழிபறிக்கப்பட்டது.
அண்மையில் வெளிவந்த “ராணி” திரைப்படத்தினால் ரிச்சார்ட் டி சொய்சாவின் கொலை மீளவும் கவனத்தை ஈர்த்துள்ளது. எனினும் அவரது கொலையைச் சூழ்ந்த புகார் விலகும் வாய்ப்பு இம்மியும் தென்படவில்லை.
லசந்த விக்கிரமதுங்கா கொல்லப்பட்ட நிகழ்வுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராகப் போதிய சான்று இல்லை என்று கூறி, அவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீக்கும்படி, அரச தலைமைச் சட்டவாளர் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, அக்கொலையைப் பற்றிய முக்கிய விவரங்கள் வெளிவந்துள்ளன.
லசந்தவின் கொலை முற்றுமுழுதாகப் புலனாய்வு செய்யப்பட்டு, அதற்குப் பொறுப்பானோர் தண்டிக்கப்படுவார்கள் என்று அடுத்தடுத்து ஆட்சியேற்ற நான்கு அரசாங்கங்கள், நாட்டுக்கும் உலகிற்கும் வாக்குறுதி அளித்தன. எனினும் “பின்தள்ளப்படும் நீதி” என்பதற்கு லசந்தவின் கொலை ஓர் உலகளாவிய உருவகமாக மாறியுள்ளது.
லசந்தவின் கொலை உட்பட, ஏற்கெனவே தீர்க்கப்படாதுள்ள குற்றங்களைப் புலனாய்வு செய்வதற்கும், ஊழல்நிறைந்த அரச யந்திரத்தை தூய்மைப்படுத்துவதற்கும் முதன்மை அளிக்கப்படும் என்று அனுர குமர திசநாயக்காவின் தலைமையில் ஆட்சியேற்றுள்ள தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் அறிக்கையில் சூளுரைத்திருந்தது. நடந்துமுடிந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றி ஈட்டியதற்கு, வாக்காளர்கள் அவாக்குறுதிகளை பெரிதும் நம்பியதே காரணம்.
லசந்த கொலையின் முக்கியத்துவம்
பொதுமக்களுக்கு உரிய தகவல்களை வழங்கி, ஊழலையும் அநீதியையும் அம்பலப்படுத்தி, ஆட்சியாளரின் நடவடிக்கைகளுக்கு அவர்களைப் பொறுப்பேற்கவும் விளக்கமளிக்கவும் வைப்பதன் மூலம் ஒரு வெளிப்படையான, சுதந்திர சமூகத்தைப் பேணிக்கொள்வதில் புலனாய்வு ஊடகர்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றார்கள்.
லசந்த கிழமைதோறும் தனது சண்டே லீடர் செய்தியேட்டின் ஊடாக அத்தகைய பணியில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா, அவரது இளவலும் பாதுகாப்புச் செயலாளருமான கொதாபயா, ராஜபக்சா குடும்பத்துடனும் அரசுடனும் ஒட்டி உறவாடியோர் அனைவரையும் குற்றச் செயல்களுடன் தொடர்புபடுத்தினார். ராஜபக்சாவின் அரசினுள் இடம்பெற்ற பாரிய ஊழலை அம்பலப்படுத்தினார். அவர்களின் கொடுக்கல் வாங்கல்களை புள்ளிவிபரங்களுடன் எடுத்துக்காட்டினார்.
குறிப்பாக ராஜபக்சா-குடும்பத்தைப் பொறுத்தவரை, இந்த நாட்டில் வேறு எவரையும் விட, லசந்தவை ஊமையாக்கும் செயலுக்குப் அதிக பெறுமதி உண்டு. லசந்த கொல்லப்பட முன்னர், 2007ல், மகிந்த ராஜபக்சாவினால் விதந்துரைக்கப்பட்ட ஒரு முதலீட்டாளருக்கு சண்டே லீடரை விற்க மேற்கொள்ளப்பட்ட தரகுமுயற்சி வெற்றியளிக்கவில்லை.
லசந்தவின் சகோதரர் லால் விக்கிரமதுங்காவிடமே அந்த யோசனை முன்வைக்கப்பட்டது. சங்கதிகளை வெளிப்படையாக எடுத்துரைக்கும் ஒரு செய்தியேட்டின் உடைமையாளரை மாற்றுவதற்கு ஒரு நாட்டின் ஜனாதிபதி முன்னின்று நடவடிக்கை எடுக்க முற்பட்டதற்கு, அதன் பொருளடக்கத்தையும், போக்கையும் கட்டுப்படுத்தும் எண்ணமே ஒரேயொரு காரணமாய் இருக்கக் கூடும். ஈராண்டுகள் கழித்து லசந்த கொல்லப்பட்ட பிறகு அந்த எண்ணம் நிறைவேற்றப்பட்டது!
அசங்க செனிவிரத்தினா எனும் வணிகர் ராஜபக்சாவின் கூட்டாளி எனப்படுகிறது. அவரது ஆதனக் கட்டுமான, முதலீட்டுப் பேரங்கள் பலவும் வெவ்வேறு காலகட்டங்களில் சண்டே லீடரின் கண்டனத்துக்கு உள்ளானவை. சண்டே லீடர், அதன் இணை ஏடான இருரெச இரண்டையும் சேர்ந்த 72 விழுக்காடு பங்கினை 2012ல் அவர் வாங்கினார். வாங்கிய அதே மாதத்தில் அன்றைய சண்டே லீடர் பதிப்பாளரும், லசந்தவின் நெடுநாளைய சகபாடியுமாகிய பிரெட்ரிக்கா ஜான்ஸ் கேட்டுக்கேள்வியின்றி பதவிநீக்கப்பட்டார்.
லசந்த பதிப்பாளராக விளங்கிய காலத்தில், உக்ரேனிலிருந்து இலங்கை வான்படைக்கென மிக்-27 வகை விமானங்கள் மோசடியான முறையில் கொள்வனவு செய்யப்பட்டமை குறித்து ஒரு கட்டுரைத் தொடரை வெளியிட்டமைக்காக, இப்பொழுது ராஜபக்சாவுக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்த சண்டே லீடர் நிபந்தனையின்றி மன்னிப்புக் கோரியது.
ராஜபக்சா குடும்ப உறவினரும், உக்ரேனுக்கான அன்றைய இலங்கைத் தூதருமான உதயங்க வீரதுங்கா மேற்படி பேரத்தை மேற்கொள்வதில் தலையாய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. மிகவும் கேவலமான, சிக்கலான மேற்படி பேரவிபரங்களை முற்றுமுழுதாக அம்பலப்படுத்தும் தறுவாயிலேயே தனது தந்தை கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் லசந்தவின் மகள் அகிம்சா.
லசந்த அம்பலப்படுத்திய முக்கிய சங்கதிகளுள் அது ஒன்று மட்டுமே. அவர் எதையுமே தப்புந்தவறுமக அம்பலப்படுத்தியது அரிது. அண்மைய தசாப்தங்களில் ஆட்சியாளரின் பழிபாதகங்களை அஞ்சாநெஞ்சுடன், அக்குவேறு ஆணிவேறாக, வெளிக்கொணர்ந்த ஊடகர்கள் ஒருசிலரே. அத்தகைய ஊடகர்களுள் மறைந்த விக்டர் ஐவன் இன்னொருவர்.
பல ஊடகர்கள் தவிர்த்துவிடும் சங்கதிகள் அவை. அவ்வாறு தவிர்த்துவிடுவது, உண்மையான ஊடகவியலில் இடம்பெறும் ஒரு சுயகட்டுப்பாடு ஆகிவிட்டது. ஆட்சியாளரின் பழிபாதகங்களை அம்பலப்படுத்தத் துணிந்தோர்மீது கட்டவிழ்த்துவிடப்படும் கொடிய அடக்குமுறையை எதிர்கொண்டு உயிர்தப்ப விதிக்கப்பட்ட ஒரு பொறிமுறை ஆகிவிட்டது.
“பிறகு அவர்கள் என்னைத்தேடி வந்தார்கள்” என்று தலைப்பிட்டு லசந்த எழுதிய மடல், அவர் கொலைக்குப் பிறகு வெளியிப்பட்டது. இன்று ஆசிய கண்டத்து ஊடகத்துறையில் அது ஒரு செம்மடலாகத் திகழ்கிறது. வாசகரின் குருதி உறையும் வண்ணம் தனது இறப்பை அவர் முன்கூட்டியே உணர்த்திய மடல் அது. தனது பழம்பெரும் நண்பரும், அன்றைய ஜனாதிபதியுமாகிய மகிந்த ராஜபக்சாவைச் சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டிய மடல் அது.
எந்த ஒருவரின் இறப்பும் சமூகத்தை நலியவைக்கும். அதேவேளை சமூகத்து, அதிகாரபீடத்து முறைகேடுகளை ஒரு கண்ணாடி போல் காட்டும் அஞ்சாநெஞ்சம் கொண்ட ஓர் ஊடகரின் இறப்பு எமது உலகத்தையே நலியவைக்கும். குறிப்பாக அரசியற்சாய வேறுபாடின்றி வஞ்சகம். மோசடி, ஊழல், இலஞ்சம் புரிந்து, தமது குடும்பத்தவருக்குச் சலுகையளித்துப் பிழைப்பவர்களாகக் கண்டறியப்பட்ட தலைவர்கள் ஆதிக்கம் செலுத்தும் எமது நாட்டைப் போன்ற ஓர் உலகத்தை தனிப்பட்ட முறையில் நலியவைக்கும்.
2009 ஆவணி மாதம் லசந்தவின் சாரதியான கருணாரத்தின டயஸ் கடத்தப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட ஆனந்த உடலகமை, லசந்தவின் கொலைக்குப் பிறகு அவரது ஊர்தியிலிருந்து மீட்கப்பட்ட ஒரு குறிப்பேடு காணாமல்போனதுடன் சம்பந்தப்பட்ட பிரதிக் காவல்துறை மேலாளர் பிரசன்னா நாணயக்காரா, துணை மேலாளர் சுகதபாலா ஆகிய மூவர்மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு உரிய சான்று இல்லை என்று காரணம்காட்டி, அவர்களை அக்குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கும்படி அரச தலைமைச் சட்டவாளர் பரிந்த ரணசிங்கா ஜனவரி 27ம் திகதி உத்தரவிட்டார். உடனடியாகவே பரந்துபட்ட முறையில் கண்டனங்கள் எழுந்து, ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றபடியால், அந்த உத்தரவு நீக்கப்பட்டது.
நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் வகையில் கிடைக்கக்கூடிய சான்றின் வலிதினையும், குற்றத்தீர்ப்பை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினையும் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட சந்தேகநபர்மீது குற்றம் சுமத்துவதா இல்லையா எனும் முடிவை, அரச தலைமைச் சட்டவாளர் முற்றிலும் தானே துணிந்தவாறு எடுக்கவேண்டும் என்பது மறுக்கவியலாத செந்நெறி.
இந்த வழக்கு எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருந்தாலும் கூட, அரச தலைமைச் சட்டவாளர் எடுத்த அத்தகைய முடிபை மீள்நோக்கும்படி, அவரிடம் யோசனை கூறுவதற்கோ, அவரை நிர்ப்பந்திப்பதற்கோ, அரசியற்பீடத்துக்கு அதிகாரம் கிடையாது.
அதேவேளை, அரச தலைமைச் சட்டவாளரும், அவரது திணைக்களத்து அதிகாரிகளும் கடந்தகாலத்தில் எவர்மீதும் விசுவாசம் கொண்டிருந்தால், அத்தகைய விசுவாவாசங்களையும், தமது தற்போதைய தனிப்பட்ட பக்கச்சாய்வுகளையும் பொருட்படுத்தாமல், குறிப்பாக அன்றைய ஆட்சியாளரோ இன்றைய ஆட்சியாளரோ சம்பந்தப்பட்ட பரபரப்பூட்டும் வழக்குகளில் பக்கஞ்சாயாமல் தமது கடமைகளை மேற்கொள்வார்கள் என்று கொள்ளப்படுகிறது.
கிடைத்துள்ள சான்றினை முற்றுமுழுதாகப் பகுத்தாய்விட்ட பின்னரே விடுவிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று வைத்துக்கொண்டால், அதனை அடுத்து அதே உத்தரவு தலைகீழாக்கப்பட்ட சங்கதி எம்மை மலைக்க வைக்கிறது. கிடைத்துள்ள ஆதாரங்களை அரச தலைமைச் சட்டவாளர் அல்லது வழக்கிற்குப் பொறுப்பான சட்ட அதிகாரிகள் மீண்டும் ஆராய்ந்து பார்த்ததன் பெறுபேறாக, முன்பு அவற்றை ஆராய்ந்து நிதானித்த வேளையில் ஒரு பாரதூரமான தவறை தாம் இழைத்துவிட்டதை அவர்கள் திடீரென உணர்ந்துகொண்டார்களா?
அல்லது அரச தலைமைச் சட்டவாளரின் திணைக்களம் அரசியல் தரப்பினரதும் பொதுமக்களதும் நெருக்குதலுக்கு அடிபணிந்து அதன் முடிபை மாற்ற எண்ணியதா?
அரச தலைமைச் சட்டவாளர் அரசியல் தரப்பினரதும் பொதுமக்களதும் விசனத்தை எதிர்த்துநின்று, முதற்கண் எடுத்த முடிபினை உறுதிபட வலியுறுத்தியிருந்தால், அது செவ்வனே ஏற்கத்தக்க, மெச்சத்தக்க நிலைப்பாடாய் அமைந்திருக்கும்.
ஆனால், அரச தலைமைச் சட்டவாளர் விடுத்த உத்தரவை நிறைவேற்றவேண்டிய குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இந்த வழக்கினைச் சூழ்ந்த சர்ச்சையைக் காரணங்காட்டி, அந்த உத்தரவு குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு, மேலும் அவகாசம் கேட்டு வேண்டுகோள் விடுத்தபடியால், முதற்கண் எடுத்த முடிபு இல்லாமல் செய்யப்பட்டதாக பொறுப்புவாய்ந்த பிரதான செய்தியேடுகள் தற்பொழுது செய்தி வெளியிட்டு வருகின்றன. தற்போதைய அதிகாரபூர்வமான கூற்றின்படி, முதற்கண் எடுத்த முடிபு தலைகீழாக்கப்படவில்லை, இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே லசந்தவின் மகள் அகிம்சா பெப்ரவரி 14ம் திகதி இலங்கை சட்டவாளர் சங்கத்தின் தலைவர் அனுரா மெடகொடைக்கு எழுதி, பகிரங்கப்படுத்திய மடலில், அவர் வஞ்சகமான முறையில் அரச தலைமைச் சட்டவாளரையும், அவரது நிலைப்பாட்டையும் ஆதரிப்பதைச் சாடியுள்ளார்.
இந்திகா பிரசாத் என்பவர் சிறப்புக் கடமைப் படையினரால் கொல்லப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பிறகு, அரச தலைமைச் சட்டவாளளர் இதே போன்ற சூழ்நிலையில் விடுத்த இதே போன்ற உத்தரவை அனுரா மெடகொடை ஆட்சேபித்ததை அகிம்சா சுட்டிக்காட்டியுள்ளார். கொல்லப்பட்டவரது மனைவியின் நலன்களுக்காக வாதாடுவதற்கு அமர்த்தப்பட்டிருந்தவர் மெடகொடையே!
லசந்த கொலையில் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் மூவருக்கும் எதிராக நம்பிக்கையான சான்று இருப்பதை தனது மடலில் சுட்டிக்காட்டி, அரச தலைமைச் சட்டவாளளரின் நிலைப்பாட்டை அகிம்சா கண்டித்துள்ளார். கொலையின் இன்றியமையாத சான்றினை அவர் வேண்டுமென்றே புறக்கணித்து, சந்தேகநபர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிக்கும்படி உத்தரவிட முடிவெடுத்தபடியால், துர்நடத்தை விசாரணைக்கு அவர் உள்ளாக்கப்பட வேண்டும் என்று அகிம்சா கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கட்டுரையாளர் போன்ற ஒரு சாதாரண குடிமகனுக்கு குற்றச்சட்டம் பற்றிய விளக்கம் மிகமிகக் குறைவு. சம்பந்தப்பட்ட வழக்கை அரச தலைமைச் சட்டவாளர் கையாண்ட விதத்தின் சட்ட வலிதினை அவரால் பகுத்தாராய முடியாது.
எனினும் தேசிய மக்கள் சக்தியை ஆட்சியில் அமர்த்தத் துணைநின்ற இக்கட்டுரையாளரையும் மற்றும் பிற இலட்சக் கணக்கானோரையும் பொறுத்தவரை நிருவாக ஊழல், அரசியற் காரணங்களுக்காக ஊக்குவிக்கப்பட்ட கொலைகள், அவை போன்ற குற்றங்கள் தொடர்பாக நீதி நிலைநாட்டப்படுவது மிகமிக முக்கியமான விடயமாகும்.
அஞ்சாநெஞ்சம் படைத்த லசந்த விக்கிரமதுங்கா போன்ற ஊடகர்கள் தமது ஊடகப் பணிக்காகவும், ஆட்சியாளரின் குற்றங்களை அம்பலப்படுத்தும் பணிக்காகவும் தமது இன்னுயிரை ஈந்தவர்கள். அத்தகைய குற்றங்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கே நீதி வழங்கப்பட வேண்டியுள்ளது. லசந்தவின் விடயம் வெறுமனே லசந்த குடும்பத்தின் தனிப்பட்ட விடயமல்ல என்ற நிலை தோன்றி நீண்ட காலம் கழிந்துவிட்டது.
முந்திய ஆட்சியாளர்கள் தம்மை ஊறுபடுத்தும் வழக்குகளில் தலையிட்டு, சட்டத்தை திசைதிருப்ப பெரிதும் முற்பட்டதுண்டு. அவர்களைப் போல் தனது அரசு சட்ட நடைமுறைகளில் தலையிடாது என்று ஜனாதிபதி அனுர குமர திசநாயக்கா இடைவிடாது வலியுறுத்தி வந்துள்ளார்.
எனினும் நீதியை நிலைநாட்ட வேண்டுமாயின், உரிய பொறுப்புகளை நிறைவேற்ற அமர்த்தப்பட்ட அரச அதிகாரிகள் நெறிதிறம்பாமல், இலக்குத்தவறாமல் பணியாற்றும் வண்ணம் தீர்க்கமான கட்டங்களில் தலையிட்டு அவர்களை நெறிப்படுத்த நேரக்கூடும். அதுவே புத்திசாலித்தனம் ஆகக்கூடும்.
__________________________________________________________
Anura Gunasekera, The Murder of a journalist, The Island, 2025-02-23,
translated by Mani Velupillai, 2025-03-08.
https://island.lk/the-murder-of-a-journalist/
No comments:
Post a Comment