வழக்குரை (2)

 

சாக்கிரத்தீஸ் 

(பொ. ஊ. மு. 469-399)

 

 


பிளேட்டோ

(பொ. ஊ. மு. 427-347)


சாக்கிரத்தீசின் வழக்குரை (2)

(பிளேட்டோவின் பதிவு)


இங்கே உங்களுள் ஒருவர் குறுக்கிட்டு, "சாக்கிரத்தீஸ், நீ பார்க்கும் அலுவல் என்ன? உன்னைப் பற்றி இப்படி எல்லாம் தவறாகக் கூறப்படுவது எங்ஙனம்? நீ சாதாரண அலுவல்களில் மட்டும் ஈடுபட்டிருந்தால், உன்னைப் பற்றிய பேச்சும் அரட்டையும் கிளம்பியிருக்க மாட்டா; அவை நீ வழமையை மீறி நடந்தபடியால் கிளம்பியமை உறுதி அல்லவா? இதற்குரிய விளக்கத்தை நாங்களே கண்டுபிடிக்கக் கூடாது என்று நீ கருதினால், நீயே உனது விளக்கத்தை எங்களிடம் தெரிவிக்கலாமே!" என்று கேட்கக்கூடும்.

 

இது ஒரு நியாயமான வேண்டுகோளாகவே எனக்குப் படுகிறது. என்மீது போலிப்பழி கிளம்பிய காரணத்தை உங்களுக்கு நான் விளக்கியுரைக்க முயல்வேன். தயவுசெய்து கவனமாகக் கேட்கவும். நான் கருத்தூன்றிப் பேசவில்லை என்று உங்களுள் சிலர் எண்ணக்கூடும். எனினும் நான் முழு உண்மையையும் உங்களிடம் தெரிவிக்க உறுதியளிக்கிறேன்.

 

பெரியோர்களே, வேறெதனாலும் அல்ல, ஏறத்தாழ ஒரு வகையான ஞானத்தால் தான் இப்படி ஒரு பெயரை நான் ஈட்டிக்கொண்டேன். நான் கருதுவது எத்தகைய ஞானத்தை? அது மனித ஞானம் என்றுதான் நினைக்கிறேன். இந்த வரையறைக்கு உட்பட்டுப் பொருள்கொள்ளுமிடத்து, உண்மையில் எனக்கு ஞானம் இருப்பதாகவே தென்படுகிறது.

 

சற்று முன்னர் நான் குறிப்பிட்ட மேதைகள் மனித ஞானத்தை விஞ்சிய ஞானம் படைத்தவர்கள் என்று ஊகிக்க இடமுண்டு. அதற்கு வேறு விளக்கம் அளிக்கும் விதம் எனக்குத் தெரியாது. அத்தகைய ஞானம் என்னிடம் இல்லை என்பது உறுதி. என்னிடம் உண்டு என்று கூறுபவர் எவரும் ஒரு பொய்யர், வேண்டுமென்றே வசை கற்பிப்பவர்.

 

பெரியோர்களே, நான் உங்களிடம் கூறப்போவது எனது சொந்த அபிப்பிராயம் அல்ல. எனவே நான் மட்டுமீறி மார்தட்டுவதாகத் தென்பட்டால், தயவுசெய்து குறுக்கிட வேண்டாம். ஐயத்துக்கு இடங்கொடாத பாண்டித்தியம் படைத்த இறையிடம் உங்களை நான் பாரப்படுத்தப் போகிறேன். என்னிடம் எத்தகைய ஞானம் உண்டோ அத்தகைய ஞானத்துக்குச் சாட்சியாக தெல்பிப் பதியில் உறையும் தெய்வத்தை நான் அழைக்க வேண்டியுள்ளது.

 

சயரபோனை உங்களுக்குத் தெரியும் அல்லவா! அவர் இளமை தொட்டு எனது நண்பர். நல்ல குடியாட்சிவாதி. அண்மையில் சர்வாதிகாரிகளை நாடுகடத்தி, குடியாட்சியை மீண்டும் நிலைநாட்டுவதில் அவர் உங்களுடன் சேர்ந்து தொண்டாற்றியவர். அவர் எப்படிப்பட்டவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் எந்த அலுவலையும் மேற்கொண்ட கையோடு, அதை ஊக்கமுடன் நிறைவேற்றுபவர். போகட்டும்!


தெல்பிப்பதி


ஒருநாள் அவர் தெல்பித்தலத்துக்குப் போய், தெல்பிப்பதியிடம் இந்த வினாவை எழுப்பியது உண்மை. பெரியோர்களே, ஏற்கெனவே உங்களிடம் கூறியிருக்கிறேன், தயவுசெய்து குறுக்கிட வேண்டாம்! என்னை விட ஞானம் மிகுந்தவர் எவரும் உண்டா என்று அவர் வினவினார். எவருமே இல்லை என்று தெல்பிப்பூசகி விடையளித்தார். இன்று சயரபோன் உயிருடன் இல்லை. அவரது சகோதரன் இங்கு அமர்ந்திருக்கிறார். அவர் எனது கூற்றுக்குச் சான்று பகர்வார்.

 

நான் இதை உங்களிடம் தெரிவிக்கும் நோக்கத்தை தயவுசெய்து எண்ணிப் பார்க்கவும். எனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி முதலில் எப்படித் தொடங்கியது என்பதை உங்களுக்கு நான் விளக்க விரும்புகிறேன். தெல்பிப் பதியின் விடையாக வெளிவந்த இறைவாக்கை நான் கேள்விப்பட்டபொழுது, என்னையே நான் வினவினேன்: தெல்பிப்பதி கருதுவது என்ன? ஏன் தெல்பிப்பதி தெளிவான மொழியில் பேசவில்லை? பெரியோர்களே, நான் பெருஞானமோ, குறுஞானமோ படைத்தவன் என்று கொள்வதற்கு எனக்கு அருகதை இல்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்டவன். எனவே உலகிலேயே மிகுந்த ஞானவான் நானே என்று வலியுறுத்தும் தெல்பிப்பதி கருதுவது என்ன? தெல்பிப்பதி பொய்யுரைக்க முடியாது; பொய்யுரைத்தலாகாது.

 

அதையிட்டுக் கொஞ்சக்காலம் நான் திகைத்துப் போயிருந்தேன். ஈற்றில் மிகுந்த தயக்கத்துடன் அக்கூற்றின் உண்மையை நான் இப்படி உரைத்துப்பார்க்க முற்பட்டேன்: பெரும் ஞானவான் என்று பேரெடுத்த ஒருவரை நான் சந்திக்கச் சென்றேன். அவரிடம் அந்த இறைவாக்கைப் பொய்ப்பிப்பதில் என்னால் வெற்றிபெற முடிந்தால், அதை எனது ஞான தெய்வத்திடம் சுட்டிக்காட்டி, "நானே மிகுந்த ஞானவான் என்று தாங்கள் கூறினீர்களே! ஆனால் இதோ என்னிலும் மிகுந்த ஞானவான் ஒருவர் இருக்கிறாரே!" என்று மார்தட்டலாம் அல்லவா?

 

சரி, அவரை நான் தீர ஆராய்ந்து பார்த்தேன். அவர் பெயரை நான் கூறத் தேவையில்லை. ஆனால் எங்கள் அரசியல்வாதிகளுள் அவர் ஒருவர். அவரை நான் ஆய்விட்டபொழுது, எனக்கு இப்படி ஒரு பட்டறிவு ஏற்பட்டது. பலரது கண்களில், ஏன் அவரது சொந்தக் கண்களில் கூட, அவர் ஒரு ஞானவானாகவே தென்பட்டவர். ஆனால் அவருடன் நான் உரையாடியபொழுது, உண்மையில் அவர் ஒரு ஞானவான் அல்ல என்ற எண்ணமே என் உள்ளத்துள் பதிந்தது. தன்னை ஒரு ஞானவானாக அவர் கருதியிருந்தார்; உண்மையில் அவர் ஒரு ஞானவான் அல்ல என்பதை அவருக்கு உணர்த்தும் முயற்சியில் பிறகு நான் இறங்கியபொழுது, எனது முயற்சியால் அவருக்கும், உடனிருந்த பலருக்கும் முகங்கடுத்தது.

 

நான் எழுந்து நடந்தபடியே சிந்தித்துப் பார்த்தேன்: சரி, நான் அவரை விட மிகுந்த ஞானவான் என்பது உறுதியாகத் தெரிகிறதே! எப்படி என்றால், கொட்டமடிக்கும் அளவுக்கு எங்கள் இருவருக்கும் எந்த அறிவும் கிடையாது; ஆனாலும் தான் அறியாத எதையோ அறிந்தவர் என்று அவர் நினைக்கிறார் போலும்; நானோ எனது அறியாமையை நன்கு உணர்ந்துகொண்டவன்; அதாவது நான் அறியாததை அறிந்தவன் என்று நான் கொள்ளவில்லை; அந்த வகையில், அந்தக் குறுகிய வரையறைக்குள், நான் அவரை விட மிகுந்த ஞானவான் என்று படுகிறது.

 

அதன் பிறகு அவரைவிட மிகுந்த ஞானவான் என்று பேரெடுத்த ஒருவரை நான் சந்திக்கச் சென்றேன். திரும்பவும் என் உள்ளத்துள் அதே எண்ணமே பதிந்தது. அங்கே கூட அவருக்கும், உடனிருந்த பலருக்கும் முகங்கடுத்தது.

 

அதிலிருந்து ஒருவர் பின் ஒருவராக நான் பலரைச் சந்தித்தேன். அதேவேளை பிறர் என்னை வெறுக்கும்படியாக நான் நடந்துகொள்கிறேனே என்பதை உணர்ந்து வேதனைக்கும், திகிலுக்கும் உள்ளானேன். ஆனாலும் எனது ஆன்மீகக் கடமையை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற உணர்வு என்னை உந்தியது. இறைவாக்கின் பொருளை நான் கண்டறிய முயன்றபடியால், அறிவாளி என்று பேரெடுத்தோர் அனைவருடனும் நான் உரையாட நேர்ந்தது. போனால் போகட்டும், பெரியோர்களே, நான் ஒளிவுமறைவின்றி என் உள்ளத்துள் பதிந்ததை நேர்மையுடன் உங்களிடம் கூறிவிட வேண்டும். இறையாணைப்படி எனது புலனாய்வை நான் மேற்கொள்ளுந்தோறும், மாபெரும் ஞானவான்கள் என்று பேரெடுத்தோர் ஏறக்குறைய முற்றிலும் ஞானவலு குன்றியோராகவே எனக்குத் தென்பட்டார்கள்; அவர்களைவிட அறிவில் தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்டோர் நடைமுறை நுண்மதி மிகுந்தவர்களாகத் தென்பட்டார்கள்!

 

இறைவாக்கின் உண்மையை ஐயந்திரிபற நிச்சயிப்பதற்கு நான் மேற்கொண்ட ஒருவகைப் பயணமாக எனது அருமுயற்சிகளைக் கணிக்கும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அதன்படி அரசியல்வாதிகளை முடித்துக்கொண்டு நாடகக் கவிஞர்கள், இசைக் கவிஞர்கள், எஞ்சிய கவிஞர்கள் அனைவரிடமும் சென்றேன். அவர்களுடன் ஒப்பிடுமிடத்து நான்  ஓர் அறிவிலி என்பதை அம்பலப்படுத்துவதற்கு அங்கே வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பினேன். அவர்களுடைய தலைசிறந்த படைப்புகள் என்று நான் கருதியவற்றைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு, அவர்கள் எழுதியவற்றின் பொருளைக் குறித்து அவர்களிடம் நான் நுணுகி வினவுவது வழக்கம். கதையோடு கதையாக எனது சொந்த அறிவைப் பெருக்கும் நம்பிக்கையுடன் அந்த வழக்கத்தைக் கைக்கொண்டேன்.

 

சரி, பெரியோர்களே, உங்களுக்கு உண்மையைக் கூறுவதில் எனக்குத் தயக்கம் உண்டு. ஆனாலும் அதைக் கூறத்தான் வேண்டும்.  கவிஞர்களை விட, பக்கத்தில் நின்றவர்களுள் எவருமே அவர்களுடைய கவிதைகளுக்குச் சிறந்த விளக்கம் அளிக்கக்கூடியவர்களாக விளங்கினார்கள் என்றால், அது மிகையாகாது. ஆதலால் கவிஞர்களையும் நான் கையோடு நிதானித்து விட்டேன். அவர்களைக் கவிதை எழுத வைத்தது ஞானம் அல்ல என்று நான் நிதானித்துக்கொண்டேன்; தமது விழுமிய சேதிகளின் பொருளை இம்மியும் அறியாமல் அவற்றை உதிர்க்கும் ஞானிகளிடமும் தீர்க்கதரிசிகளிடமும் நீங்கள் காண்பது போன்ற ஒருவகை இயல்பூக்கமே அல்லது உள்ளுந்தலே அவர்களைக் கவிதை எழுத வைத்தது என்று நான் நிதானித்துக் கொண்டேன்; முன்னர் நான் குறிப்பிட்டவர்களைப் போன்றவர்களே கவிஞர்களும் என்பது எனக்குத் தெளிவாகத் தென்பட்டது. அவர்கள் கவிஞர்கள் என்ற சங்கதி, ஏனைய சங்கதிகள் அனைத்தையும் தாங்கள் செவ்வனே புரிந்துகொண்டவர்கள் என்று அவர்களை எண்ண வைத்ததையும் நான் அவதானித்தேன். ஆனால் ஏனைய சங்கதிகளைப் பொறுத்தவரை அவர்கள் முற்றிலும் அறிவிலிகள். அதலால் அத்தகையோரை ஆய்விடும் முயற்சியையும் நான் கைவிட்டேன். அரசியல்வாதிகளை ஆய்விட்டுப் பயனடைந்த அதே உணர்வு கவிஞர்கள் விடயத்திலும் எனக்கு ஏற்பட்டது.

 

நான் ஈற்றில் நாடியது தேர்ச்சிபெற்ற கைவினைஞர்களை. எனக்குத் தொழினுட்பத் தகைமைகள் கிடையா என்பது எனக்கு நன்கு தெரியும். அவர்களோ எவரையும் ஆட்கொள்ளவல்ல அறிவு படைத்தவர்களாக விளங்குவார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன். அதில் நான் ஏமாற்றம் அடையவில்லை. நான் புரிந்துகொள்ளாத சங்கதிகளை அவர்கள் புரிந்துகொண்டிருந்தார்கள். அந்த வகையில் அவர்கள் என்னைவிட மிகுந்த ஞானவான்களாகவே விளங்கினார்கள். ஆனாலும், பெரியோர்களே, கவிஞர்களிடம் நான் அவதானித்த அதே குறைபாடு, துறைமைத்திறம் படைத்த இந்நிபுணர்களிடமும் தென்பட்டது. தமக்குத் தொழினுட்பத் தேர்ச்சி என்னும் வல்லமை இருப்பதால், ஏனைய விடயங்கள் அனைத்தையும், அவை எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததாயினும், தாங்கள் செவ்வனே புரிந்துகொண்டிருப்பதாக அவர்கள் வலியுறுத்தினார்கள். அது தவறு. அவர்களது ஞானம் நம்பிக்கை ஊட்டிய போதிலும், அவர்களின் தவறு அந்த ஞானத்தை விஞ்சியதாகவே எனக்குத் தென்பட்டது.

 

ஆதலால் நானே இறைவாக்கின் குழலூதியாக மாறினேன். அவர்களின் ஞானம் கொண்ட ஞானவானாக விளங்காமல், அவர்களின் அறியாமை கொண்ட அறிவிலியாக விளங்காமல், நான் முன்னர் எப்படி இருந்தேனோ அப்படியே இனியும் இருப்பதா, அல்லது இனிமேல் அவர்களைப் போல் அவ்விரு தன்மைகளும் கொண்டவனாக இருப்பதா என்று என்னையே நான் வினவினேன். நான் முன்னர் எப்படி இருந்தேனோ அப்படி இருப்பதே சிறந்தது என்று நானே இறைவாக்கிற்கு விடையளித்தேன்.

_____________________________________________________________________

தொடர்ச்சி: சாக்கிரத்தீசின் வழக்குரை (3)

தமிழ்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment