அலந்தே
1970-சிலிய ஜனாதிபதி-1973
“...நான் மக்களின் ஆணையையும் தொழிலாளிகளின் ஆணையையும் பெற்றவன். அந்த ஆணையை நிறைவேற்றுவதற்காக நான் இறுதிவரை போராடுவேன். அதுவே எனது தீர்மானம். நான் சரணடைய மாட்டேன். ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற மாட்டேன். நாட்டை விட்டுத் தப்பியோட மாட்டேன். நீங்கள் காட்டும் விசுவாசத்துக்கும் ஆதரவுக்கும் நான் நன்றி கூறுகிறேன். ஆனால் உங்களுள் எவரும் அநாவசியமாகப் பலியாகக் கூடாது. உங்களுள் அநேகர் இளவயதினர். உங்களுக்கு மனைவி மக்கள் இருக்கிறார்கள். அவர்களையும் சிலியநாட்டு மக்களையும் காப்பதே உங்கள் கடன். இது இறுதிச் சமர் அல்ல. எதிர்காலத்தில் எத்தனையோ கட்டங்களில் உங்கள் சேவை நாட்டுக்குத் தேவைப்படும். இங்கிருக்கும் பெண்;கள் உடனடியாக மாளிகையை விட்டு வெளியேற வேண்டும். இது வெறும் வேண்டுகோள் அல்ல, இது எனது கட்டளை. குறித்த அலுவல்களில் ஈடுபடாதவர்கள், ஆயுதம் ஏந்தாதவர்கள், ஏந்தத் தெரியாதவர்கள் அனைவரும் உடனடியாக மாளிகையை விட்டு வெளியேற வேண்டும். உங்களுள் சிலர் இங்கு நடந்ததை உலகுக்கு அறிவிக்க வேண்டும்...”
1973 செப்டெம்பர் 11 காலை 9.30 மணியளவில் லா மொனிடா எனப்படும் சிலிய ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி சல்வடோர் அலந்தே (Salvador Allende 1908-1973) தனது பணியாளர்களையும், மருத்துவர்களையும், மெய்காவலர்களையும், பாதுகாப்புப் பிரிவினரையும் விளித்துக் கூறிய வார்த்தைகளே அவை. அப்பொழுது திருமதி அலந்தே மாளிகையில் இருக்கவில்லை (வீட்டில் இருந்தார்). நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த மகள் பீட்றிஸ், அவருடைய சகோதரி, பெறாமகள் (எழுத்தாளர்) இசபெல் உட்பட அங்கிருந்த மாதர்கள் ஒருமனதாக மாளிகையை விட்டு வெளியேற மறுக்கிறார்கள்:
“அப்பா, நாங்கள் போகமாட்டோம், அப்பா.” என்கிறாள் மகள் பீட்றிஸ்.
“உங்கள் அம்மாவை நீங்கள் பத்திரமாகப் பார்க்க வேண்டும் அல்லவா?” என்கிறார் தகப்பன்.
“அப்பா, நாங்கள் வெளியே போனால், அவர்கள் எங்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்து உங்களுக்கு நெருக்குதல் கொடுப்பார்கள், அப்பா.”
“அப்படி என்றால் அந்தத் துரோகிகள்; உங்களைச் சுட்டுத்தள்ளட்டும். சுட்டுத்தள்ளி, கோழைகள் என்ற பட்டத்தையும் தட்டிக்கொள்ளட்டும்”என்று முழங்குகிறார் அலந்தே.
பெண்கள் ஒவ்வொருவராக வெளியேறுகிறார்கள். அலந்தே வாயில்வரை சென்று வழியனுப்பி வைக்கிறார்.
நண்பகல் மாளிகைமீது வான்படை குண்டு வீசுகிறது. மாலையில் எதிரிகள் மாளிகைக்குள் புகுந்து தாக்குகிறார்கள். தன்னைப் புடைசூழ்ந்தவர்கள் பலியாவதை விரும்பாத அலந்தே அவர்களைச் சரணடையும்படி பணிக்கிறார். மாலை 4.30 மணியளவில் அலந்தேயின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்படுகிறது. எதிரியின் கையில் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதற்காக அலந்தே தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். துப்பாக்கிக் குழலை வாய்க்குள் வைத்துச் சுட்டிருக்கிறார். உச்சந்தலை பிளந்திருக்கிறது. துப்பாக்கி இரு கால்களுக்கும் இடையில் கிடக்கிறது. அது ஓர் இயந்திரக் கைத்துப்பாக்கி. அதில் “எனது உற்ற நண்பர் சல்வடோர் அலந்தே அவர்களுக்கு எனது அன்பளிப்பு – பிடல் காஸ்ட்றோ” என்று பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது!
“…உங்களுள் சிலர் இங்கு நடந்ததை உலகத்துக்கு அறிவிக்க வேண்டும்...” என்று அலந்தே பணித்தார் அல்லவா. அப்பொழுது உடனிருந்து குறிப்பெடுத்த அவருடைய மருத்துவர் ஒஸ்கார் சொட்டோ உலகத்துக்குத் தெரிவித்த விபரங்களே இவை (Dr.Oscar Soto, The Last Day of Salvador Allende: A Chronicle of the Assault on La Moneda Palace, Santiago de Chile, Madrid,El Pais/Aguilar, 1998).
என்றோ ஒரு நாள் அலந்தே ஆட்சி ஏற்பார் என்பதை மோப்பம் பிடித்து வைத்திருந்த சி.ஐ.ஏ. அதனைத் தடுப்பதற்காக 1963ம் ஆண்டிலுருந்தே அரும்பாடுபட்டு வந்துள்ளது. அந்த நல்ல நோக்கத்துக்காக 1964ல் 30 இலட்சம் அமெரிக்க டாலரையும், 1970 முதல் 1973 வரை 80 இலட்சம் டாலரையும், 1972ல் மாத்திரம் 30 இலட்சம் டாலரையும் அது செலவிட்டுள்ளது. அலந்தேயை எதிர்ப்பதையே பிழைப்பாகக் கொண்ட படையணிகள், கட்சிகள், கம்பனிகள், ஊடகங்கள், கும்பல்கள்... அனைத்துக்கும் அந்தப் பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1964ல் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்கு 26 இலட்சம் டாலர் வழங்கப்பட்டது. El Mercurio என்ற பத்திரிகைக்கு 1971ல் 7 இலட்சம் டாலரும், 1972ல் 9 இலட்சத்து 65,000 டாலரும் வழங்கப்பட்டது. 1971 முதல் 1973 வரை கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் மொத்தமாக 40 இலட்சம் டாலர் கொடுக்கப்பட்டது. 1972 செப்டெம்பரில் ஒரு முதலாளிமார் சங்கத்துக்கு 24,000 டாலரும் அக்டோபரில் வேறோரு சங்கத்துக்கு 1 இலட்சம் டாலரும் வழங்கப்பட்டது. 1970ல் அமெரிக்க பல்தேசியக் கம்பனியாகிய ஐவுவு முன்னாள் ஜனாதிபதி அலெசாந்திரியின் (Alessandri) தேர்தல் பிரசாரத்துக்கு 3½ இலட்சம் டாலர் கொடுத்துதவியது. ஏனைய கம்பனி ஒவ்வொன்றும் அந்தக் கட்சிக்கு அதேயளவு பணம் கொடுத்துதவியது.
“ஒரு நாட்டு மக்களின் பொறுப்பற்ற போக்கினால் அந்த நாடு பொதுவுடைமை நாடாக மாறுவதை நாங்கள் ஏன் பார்த்துக்கொண்டு நிற்கவேண்டும்?” என்று கிசிஞ்சர் (Henry Kissinger) வேறு வினா எழுப்பினார். கிசிஞ்சர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மதியுரைஞர், அரசியல் கலாநிதி, மேற்குலகின் தலையாய சாணக்கியர், இந்தோ சீனாவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் அமெரிக்க ஆட்சியாளர் புரிந்த போர்க் குற்றங்களுக்குத் தூபமிட்டவர், எனினும் சமாதானத்துக்கான நோபல் பரிசில் சரிபாதி பெற்றவர்! அத்தகைய கீர்த்திவாய்ந்த கிசிஞ்சர் சிலிய மக்களின் பொறுப்பற்ற போக்கினால் வெறுப்புற்றார் என்றால், அது நல்லதுக்கல்ல என்று அடித்துச் சொல்லலாம்!
எத்தனையோ முட்டுக்கட்டைகள் போடப்பட்டும் கூட 1970 செப்டெம்பர் 4ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் சிலிய சமூகவுடைமைக் கட்சியின் (The Socialist Party of Chile) நிறுவனரும் தலைவருமாகிய அலந்தேயின் கை ஓங்குவதை எவராலும் தடுக்க முடியவில்லை. ஆனால் அவருக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சமூகவுடைமைவாதிகள், பொதுவுடைமைவாதிகள், புரட்சிகர இடதுசாரி இயக்கம் உள்ளடங்கிய அவருடைய கூட்டணிக்கு ஏறத்தாழ 37மூ வாக்குகளே கிடைத்தன. அவருக்கு 10,76,616 வாக்குகளும், தேசியக் கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்ட அலெசாந்திரி (Alessandri) என்பவருக்கு 10,36,278 வாக்குகளும், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தோமிக் (Tomic) என்பவருக்கு 8,24,849 வாக்குகளும் கிடைத்தன.
அப்பொழுது சிலியில் அமெரிக்க தூதராக இருந்த கொறி (Edward Korry) வாசிங்டனுக்கு அனுப்பிய சேதி: “சிலிய மக்கள் மிகவும் நாகரிமானவர்கள் ஆகிவிட்டார்கள். அலந்தே என்ற அநாகரிகமான ஆளை ஏற்றுப் போற்றும் அளவுக்கு அவர்கள் நாகரிகமானவர்கள் ஆகிவிட்டார்கள்...” என்று அவர் தெரிவித்திருக்கிறார் (1970-09-08). அவர் அனுப்பிய அடுத்த சேதியில் கவிதை சொட்டுகிறது: “சிலி மீது புதைகுழி நெடி கவிகிறது. இங்கு மக்களாட்சி அழுகி மணக்கிறது...” (1970-09-11). தூதர் மூக்கைப் பொத்திக்கொண்டு தீட்டி அனுப்பிய கவிதையைக் கிசிஞ்சர் எட்டி நின்றுதான் வாசித்திருப்பார் போலும்!
அப்புறம் வெள்ளை மாளிகையில் நான்கு நீதிமான்கள் சந்திக்கிறார்கள்: ஜனாதிபதி நிக்சன், கிசிஞ்சர், சட்ட மா அதிபர் மிற்செல் (John Mitchell), சி.ஐ.ஏ.பணிப்பாளர் ஹெல்ம்ஸ் (Richard Helms). அந்தச் சந்திப்பில் சி.ஐ.ஏ.பணிப்பாளர் தன் கைப்பட எழுதிய குறிப்பில் இருக்கும் வார்த்தைகள் இவை: “பத்திலொரு வாய்ப்பாக இருந்தாலும் பரவாயில்லை... சிலியைக் காப்பாற்ற வேண்டும்... செலவுக்கேற்ற வரவு கிடைக்கும்... கையோடு 1 கோடி டாலர் தரப்படும்... தேவைப்பட்டால் மேலும் தரப்படும்... சிலியின் பொருளாதாரத்தைச் சீரழிக்க வேண்டும்... 48 மணித்தியாலங்களுக்குள் செயலில் குதிக்க வேண்டும்...” (1970-09-15).
அடுத்த நாள் சி.ஐ.ஏ. பணிப்பாளர் தென் அமெரிக்காவுக்குரிய தனது ஒற்றர் சிட்டர்களை வரவழைத்து வெள்ளை மாளிகையில் எடுக்கப்பட்ட முடிபுகளைத் தெரிவிக்கிறார்: “அலந்தே ஆட்சி ஏற்பதை ஜனாதிபதி ஏற்கப்போவதில்லை. அலந்தேயைத் தடுக்கும்படி அல்லது அகற்றும்படி அவர் எங்களிடம் சொல்லியிருக்கிறார். அதற்காக 1 கோடி டாலரை அவர் ஒதுக்கியிருக்கிறார். தேவைப்பட்டால் மேலும் பணம் கிடைக்கும் என்று அவர் அறிவித்திருக்கிறார். நாங்கள் இந்தக் காரியத்தை எப்படி ஒப்பேற்றப் போகிறோம் என்பதைத் தனக்கு முன்கூட்டியே அறிவிக்கும்படி கிசிஞ்சர் என்னிடம் கேட்டிருக்கிறார். நான் அவரை நாளை மறுதினம் சந்தித்து எங்கள் திட்டத்தை முன்வைக்கப் போகிறேன்...” (1970-09-16).
சி.ஐ.ஏ. தலைமை அலுவலகத்திலிருந்து சிலிய தலைநகர் சந்தியாகோவில் இருக்கும் அதன் கிளை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட சேதி: “அலந்தே ஆட்சி ஏற்றால், அது சதி மூலம் கவிழ்க்கப்பட வேண்டும். இதில் நாங்கள் உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் ஈடுபட வேண்டும். ஆனவரை முயன்று இயன்றவரை நெருக்குதல் கொடுக்க வேண்டும். இரகசியமாகவும் பத்திரமாகவும் செயற்பட வேண்டும். அமெரிக்காதான் பின்னணியில் நின்று செயற்படுகிறது என்பது வெளியே தெரியக்கூடாது. உங்கள் பிரசார வேலைகள், நாச வேலைகள், கயிறு திரிப்புகள், ஆள் - தொடர்புகள் அனைத்தையும் மீள்நோக்கி காரியத்தை ஒப்பேற்ற வேண்டும்...” (1970-10-16).
சி.ஐ.ஏ. தலைமை அலுவலகத்திலிருந்து அந்தக் கிளை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட இன்னொரு சேதி: “துவக்குகளும் குண்டுகளும் வழமையான வழியில் வந்துசேரும். சரக்கு அக்டோபர் 19ம் திகதி காலை வாசிங்டனைவிட்டு வெளியேறும். 20ம் திகதி மாலை அல்லது 21ம் திகதி காலை சந்தியாகோவை வந்தடையும்...” (1970-10-11).
சிலியப் பொருளாதாரத்தைத் தமது பிடிக்குள் வைத்திருந்த அமெரிக்க பல்தேசியக் கம்பனிகளாகிய ITT, Anaconda, Kennecott போன்றவை அனைத்தும் அலந்தேக்கு எதிராக அணிதிரண்டன. அவர் ஆட்சி ஏற்பதை விரும்பாத தரப்புகளுக்கு அவை பணத்தை வாரி இறைத்தன. அமெரிக்க ஆட்சியாளர் தமக்குக் கைகொடுப்பர் என்ற துணிச்சல் அவற்றுக்கு ஏற்பட்டதில் வியப்பில்லை. அமெரிக்கா சிலிமீது படையெடுக்க வேண்டும் என்று TIME (என்ற அமெரிக்க) வார இதழ் அப்பட்டமாகக் கோரிக்கை விடுத்தது! அலந்தே ஆட்சி ஏற்பதைச் சட்டப்படி தடுக்க முடியாது என்று அவருடைய உள்ளூர் அரசியல் எதிரிகளுக்கு நன்கு தெரியும். அவர்களுக்கு ஒரேயொரு மாற்றுவழிதான் தென்பட்டது. அதுதான் படையாட்சி!
அப்பொழுது சேனாதிபதியாக விளங்கிய சினைடர் (Rene Shneider) சிலிய மக்களாட்சி மரபை ஏற்றுப் போற்றியவர். படையாட்சியை வேண்டியோரின் செவிப்பறை தகரும் வண்ணம் அவர் ஓர் அறிக்கையை விடுத்தார்: “ஆயுதப் படையினரால் மாற்றங்களைத் தடுக்க முடியாது. சிலிய மக்களுள் ஒரு முக்கியமான பிரிவினர் தாம் ஈட்டிய வெற்றியைப் பிறர் கவர்ந்துசெல்ல அனுமதிக்கப் போவதில்லை. தாம் ஈட்டிய வெற்றி தமது வாழ்க்கையை மாற்றியமைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அரசியலமைப்பையும் சட்டத்தையும் கட்டிக்காப்பதாக அலந்தே எமக்கு உறுதியளித்துள்ளார். அதை அவர் என்னிடம் நேரில் தெரிவித்துள்ளார். நான் அதனை ஏற்றுக்கொண்டுள்ளேன். இன்றைய சூழ்நிலையில் அலந்தே அமைக்கும் ஓர் அரசினாலேயே ஒரு வன்முறைக் கிளர்ச்சி மூள்வதைத் தடுக்க முடியும்...”
சிலிய ஆட்சிப் பேரவை கூடி அலந்தேயை முறைப்படி ஜனாதிபதியாக உறுதிப்படுத்துவதற்குச் சற்று முன்னதாக சேனாதிபதி சினைடர் துப்பாக்கித் தாக்குதலுக்கு உள்ளானார். அவருடைய வாகனம் பல வாகனங்களால் முட்டிமோதப்பட்டது. அவரைக் கடத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடையவே அந்த வாகனங்களிலிருந்து இருவர் இறங்கினார்கள். ஒருவன் ஒரு சம்மட்டியினால் சேனாதிபதியின் கார்க் கண்ணாடிகளைத் தகர்த்தான். மற்றவன் சேனாதிபதியை மூன்று தடவைகள் சுட்டான். சேனாதிபதியின் உயிர் வைத்தியசாலையில் பிரிந்தது (1970-10-26). தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட துவக்குகளுள் மூன்று சி.ஐ.ஏ.யினால் கொடுத்துதவப்பட்டவை!
சிலிய ஆட்சிப் பேரவை கூடியபொழுது கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி அலந்தேயை ஆதரித்து வாக்களித்தது – அலெசாந்திரி 35 வாக்குகளைப் பெற, அலந்தே 153 வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ஆனார் (1970-10-24). உலக வரலாற்றில் மக்களாட்சி முறைப்படி ஒரு நாட்டின் ஆட்சித் தலைவராக அமர்ந்த முதலாவது மார்க்சியவாதி அலந்தே அவர்களே (கேரள முதல்வர் நம்பூதிரிபாத் மாநில முதல்வர் - 1957). அன்று கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும், இன்று கிழக்கு ஐரோப்பாவிலும் பொதுவுடைமைக் கட்சிகள் பொதுத் தேர்தல் மூலம் ஆட்சி ஏற்பதையும் இழப்பதையும் காண்கிறோம். 1970ல் அலந்தே ஆட்சி ஏற்றதும் அவ்வாறே. ஜனாதிபதி காஸ்ட்றோ நேரில் சென்று அலந்தேiயைச் சந்தித்து, “பொதுவுடைமைவாதிகள் மக்களாட்சி முறைப்படி ஆட்சிக்கு வரமுடியும்” என்பதை ஒப்புக்கொண்டார். (பெரிய பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, ஒல்லாந்து தேசங்களில் சமூகவுடைமைப் புரட்சி அமைதியான முறையில் இடம்பெறக்கூடும் என்று மார்க்ஸ் குறிப்பிட்டமையும், எங்கெல்ஸ் அந்தப் பட்டியலில் ஜேர்மனியைச் சேர்த்தமையும் கவனிக்கத்தக்கது).
அலந்தே பாமரமக்களின் பரந்துபட்ட ஆதரவுடன் தனது சீர்திருத்தங்களை மேற்கொண்டார். வறிய மக்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. பெரிய ஆதனங்கள் துண்டாடப்பட்டு பாமர மக்களுக்கு வழங்கப்பட்டன. செப்பு, நிலக்கரி, உருக்குத் தொழில்துறைகள், வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. கூலிகள் உயர்த்தப்பட்டன. விலைகள் நிலைநிறுத்தப்பட்டன. சலுகை விலையில் பால் விநியோகிக்கப்பட்டது. சிறுவர்களுக்கு இலவசக் கல்வி, மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டன. கியூபா, சீனா, வட கொறியா, அல்பேனியா, வியற்நாம் முதலிய நாடுகளுடன் உறவு பூணப்பட்டது... இவைதான் அலந்தே புரிந்த குற்றங்கள்! அமெரிக்க ஆட்சியாளரைப் பொறுத்தவரை அவை மாபெரும் குற்றங்கள்!
“ஒரு நாட்டின் ஜனாதிபதியைச் சாகடிப்பதன் மூலம் அந்த நாட்டின் வரலாற்றை நிரந்தரமாகத் திசைதிருப்பிவிட முடியாது” என்று அலந்தே குறிப்பிட்டிருக்கிறார். ஜனாதிபதி ஆவதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். ஜனாதிபதி பதவியால் தனக்கு உயிராபத்து நேரும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார், உணர்த்தியிருக்கிறார். காஸ்ட்றோகூட அதனை உணர்ந்திருக்கிறார். இயந்திரத் துப்பாக்கியை அன்பளிப்புச்செய்து அதனை உணர்த்தியிருக்கிறார். சோவியத் யூனியனும் அதனை உணர்ந்திருக்கிறது. அமெரிக்க ஆட்சியாளருடன் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கும்படி அது அலந்தேயிடம் கேட்டுக்கொண்டது. அலந்தேயின் தேசியமயமாக்கல் கொள்கையினால் அமெரிக்க பல்தேசியக் கம்பனிகள் மேற்கொண்டு கொள்ளையிலாபம் ஈட்ட முடியவில்லை. அதனால் அவையும் அமெரிக்க அரசும் சிலிமீது சீற்றம் கொண்டன. ஏதோ பேச்சுவார்த்தை நடந்தது உண்மை. சிலியும் அமெரிக்காவும் தமது பிரச்சனையைப் பேசித்தீர்க்க முடியவில்லை. ஆடும் ஓநாயும் தமது பிரச்சனையைப் பேசித்தீர்க்க முடியுமா?
அப்புறம் சிலிக்கு வெளிநாட்டு உதவி கிடைப்பதை அமெரிக்க அரசு தடுத்தது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவை சிலிக்கு கடன் வழங்குவதை அது தடுத்து நிறுத்தியது. ஓர் ஆணி தன்னிலும் சிலிக்குள் செல்லக்கூடாது என்றும் சிலியை ஏழ்மையில் உழலச் செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க தூதர் நெஞ்சுருகிக் கேட்டுக் கொண்டார். இயந்திர உபகரணங்களும் உதிரிப் பாகங்களும் கிடைக்காதபடியால் சிலியின் சுரங்கங்களும் தொழிற்சாலைகளும் கட்டுமானங்களும் முடங்கிப் போய்விட்டன. பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. விலைவாசி உயர்ந்தது. நாட்டில் நெருக்கடி ஏற்பட்டது. மேற்குடியினரின் உடைமைகளாய் விளங்கிய ஊடகங்கள் நெருக்கடியைப் பெரிதுபடுத்தி மேலும் மோசமாக்கின. நிலைமையைக் கட்டுப்படுத்தும் வழிவகைகளை ஆராய்வதற்காக அலந்தே தமது கூட்டணியைக் கூட்டினார். அவருடைய சமூகவுடைமைக் கட்சியும் சிலிய பொதுவுடைமைக் கட்சியும் புரட்சிகர இடதுசாரி இயக்கமும் பங்குபற்றிய அந்தக் கூட்டத்தில் முதலிரு கட்சிகளும் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் ஆதரவை வென்றெடுக்கு முகமாக மிதவாதப் போக்கை ஆதரித்தன. மூன்றாவது கட்சி வன்முறைப் புரட்சிக்குத் தாவும் நோக்குடன் தீவிரவாதப் போக்கை வேண்டி நின்றது. ஈற்றில் அவ்விரு போக்குகளையும் ஒருசேரக் கடைப்பிடிக்கலாம் என்று அலந்தே முன்வைத்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. (1972 யூன்).
அரசு கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் ஆதரவை வென்றெடுக்கப் பாடுபட்ட அதேவேளை அதன் அடிமட்ட ஆதரவாளர்கள் காணிகளையும் தொழிற்சாலைகளையும் கைப்பற்றினார்கள். நாடு இரு துருவங்களாகப் பிளவுண்டது. சரக்கு லொறிச் சாரதிகளும் சில்லறை வியாபாரிகளும் துறைஞர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்தார்கள். அது அரசுக்கு எதிரான முதலாளிகளின் வேலைநிறுத்தம் என்று வர்ணிக்கப்பட்டது. அரசு அதன் தொழிற் சங்கங்கள், அயல் குழுமங்கள் (Neighbourhood Groups) மூலம் உணவு விநியோகத்தை மேற்கொண்டது. எனினும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதனால் அரசு நடுக் குடியினரின் ஆதரவை இழக்க நேர்ந்தது.
எனினும் 1973ல் ஆட்சிப் பேரவைக்கான தேர்தலில் அலந்தேயின் கூட்டணிக்கு 44மூ வாக்குகள் கிடைத்தன. அரசுக்கு கீழ்க்குடியினரின் ஆதரவு பெருகியதையே இது உணர்த்துகிறது. தேர்தல் மூலம் அரசைக் கவிழ்க்க முடியாது என்பது அதன் எதிரிகளுக்கு உறுதியாகத் தெரிந்தது. ஆகவே அவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தை மேற்கொண்டார்கள். உணவுத் தட்டுப்பாட்டினாலும் விலையேற்றத்தினாலும் பாதிக்கப்பட்ட காரணத்தினாலோ என்னவோ ஆங்காங்கே தொழிலாளிகள்கூட அரசுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தார்கள். அவர்களுள் செப்புச் சுரங்கத் தொழிலாளிகள் முக்கியமானவர்கள். வலதுசாரிகள் அதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அரசைக் கவிழ்க்கச் சதி செய்தார்கள். ஆனால் அரசுக்கு விசுவாசமான சேனாதிபதி பிறாற்ஸ் (Prats) அந்தச் சதியை முறியடித்தார் (1973-06-19).
எனினும் வலதுசாரிகள் தமது சதிமுயற்சியைக் கைவிடவில்லை. அவர்களுடைய ஆதரவுடன் யூலை 29ம் திகதி சரக்கு லொறிச் சாரதிகள் இரண்டாவது தடவையாக வேலைநிறுத்தத்தில் குதித்தார்கள். அவர்கள் லொறிகளையும் பேருந்துகளையும் புகையிரதங்களையும் எரிபொருள் நிலையங்களையும் எண்ணெய்க் குழாய்களையும் நாசம் செய்தார்கள். இதற்கிடையே ஜனாதிபதி படைத் தலைமையில் செய்த மாற்றங்களால் அதிருப்தியடைந்த சேனாதிபதி பிறாற்ஸ் பதவிதுறந்தார். அலந்தே துணைச் சேனாதிபதி பினோசேயை (Pinochet) சேனாதிபதியாக நியமித்தார். மூன்று மாதங்களுக்கு முன்னர் படையினரில் ஒரு பிரிவினர் அரசைக் கவிழ்க்கச் செய்த சதியை முறியடிப்பதற்கு உதவிய தருணத்தில் அரசின் பலவீனத்தையும் படையின் பலத்தையும் நன்கு புரிந்துகொண்டவர் பினோசே. அலந்தேயும் பினோசேயும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அதன் பெயர் வால்பறைசோ ((Valpariso). பினோசே அரசுக்கு விசுவாசமாகச் செயற்படுவார் என்று அலந்தே திடமாக நம்பினார். ஆனால் வால்பறைசோவில்தான் சதி மூண்டது. பினோசேதான் சதிபதி!
சதிக்கு உடந்தையாய் இருந்த தரப்புகளின் பட்டியல் மிகவும் நீளமானது: அமெரிக்கா, கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி, பாசிசவாதிகள், நிலக் கிழார், தொழிலதிபர்கள், ஊடக உடைமையாளர்கள், லொறிச் சாரதிகள், தொழில்துறையாளர்கள், சில்லறை வியாபாரிகள்... இத்தனை தரப்புகளும் அலந்தேயின் ஆட்சியில் முற்றுமுழுதான சுதந்திரத்தை அனுபவித்தவர்கள். உணவுத் தட்டுப்பாட்டினாலும் விலையேற்றத்தினாலும் பெரிதும் தாக்குண்ட நடுக்குடியினரும் அரசுக்கு எதிராக அணிதிரளவே செய்தார்கள். உண்மையில் இவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட அரசை ஆதரித்த கீழ்க்குடியினரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அலந்தேயின் மக்களாட்சிக்கு ஆட்பலம் கிடைத்த அளவுக்குப் படைபலமோ பொருள்வளமோ கிடைக்கவில்லை. படைபலமும் பொருள்வளமும் ஒன்றுசேர்ந்தே ஆட்பலத்தை (மக்களாட்சியை) முறியடித்தன. பினோசேயின் தலைமையில் முப்படை அதிபதிகளும் காவல்துறைப் பணிப்பாளரும் ஒப்பமிட்டு விடுத்த அறிக்கையில் அலந்தே பதவிதுறக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அலந்தே தனது குடும்பத்துடன் நாட்டைவிட்டுப் புறப்படுவதற்குத் தனி விமானம் ஒன்றைத் தயாராக வைத்திருப்பதாக அந்தச் சதிகாரர்கள் திரும்பத் திரும்ப அவருக்குச் சேதி அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
சதிகாரர்கள் நால்வரும் வௌ;வேறு இடங்களில் இருந்துகொண்டு ஒரே சமயத்தில் தங்களிடையே வானொலி மூலம் தொடர்புகொண்டார்கள். அவர்களுடைய உரையாடல் ஒற்றுக்கேட்கப்பட்டது. சதிபதி பினோசேயுக்கும் துணைக் கடற்படை அதிபதி கர்வஜாலுக்கும் இடையே இடம்பெற்ற உரையாடல் ஸ்பானிய மொழியிலுருந்து ஆங்கிலத்துக்குப் பெயர்க்கப்பட்டுள்ளது. அந்த உரையாடலின் தமிழாக்கம் பின்வருமாறு:
பினோசே: அதி உத்தமர் கவச வாகனத்தில் புறப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் (அதி உத்தமர் - பினோசேவின் வஞ்சப் புகழ்ச்சி;!)
கர்வஜால்: இல்லை. அவன் கவச வாகனத்தில் தப்பி ஓடவில்லை. நான் அவனுடன் தொலைபேசியில் கதைத்தேன். கவச வாகனங்கள் ஏற்கெனவே புறப்பட்டுவிட்டன.
பினோசே: சரி, சரி. அப்படி என்றால் நாங்கள் அவனை வெளியே போக விடக்கூடாது. வெளியே போனால் கைதுசெய்ய வேண்டும்.
கர்வஜால்: நான் (ஜனாதிபதியின்) கடற்படைத் துணைவனுடனும் தொடர்புகொண்டேன். அலந்தே லா மொனிடாவில் (ஜனாதிபதி மாளிகையில்) இருப்பதை அவன் உறுதிப்படுத்தி இருக்கிறான்.
பினோசே: அப்படி என்றால் நாங்கள் இவனை ஒரு கைபார்க்கத் தயாராக இருக்க வேண்டும். அதற்கு ஒருத்தன் தயாராக இருக்க வேண்டும். அந்த நாயைக் கொல்வதுதான் புத்தி (நாய் எசமானைக் கொல்ல வேண்டும் என்று சொல்லுகிறது!).
கர்வஜால்: சரி. கடற்படைத் துணைவனும் படைத்துறைக் காவலர்களும் (லா மொனிடாவை விட்டு) வெளியேறுவதற்காகத்தான் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.
பினோசே: நாங்கள் 11 மணிக்கு லா மொனிடாவைத் தாக்க வேண்டும். இந்தக் கிறுக்கன் கிறுங்கமாட்டான் (Pablo Neruda) (This cock won’t surrender).
கர்வஜால்: தாக்குதல் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. நம்மவர்கள் சுற்றிவர நிலைகொண்டு தீவிரமாகத் தாக்குகிறார்கள். சீக்கிரம் பிடித்துவிடுவார்கள்.
பினோசே: சரி. விமானம் உடனடியாகப் புறப்படும்.
கர்வஜால்: அவன் விமானத்தில் ஏறிப் புறப்பட மறுத்துவிட்டான்.
பினோசே: மறுத்துவிட்டானா?
கர்வஜால்: பிரச்சனையைப் பேசித் தீர்க்கலாம் என்கிறான்.
பினோசே: நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும். பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை.
கர்வஜால்: சரி. அதுதான் நல்லது. நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும். அவனைக் கைதுசெய்ய வேண்டும். அவனுடைய உயிரைத் தவிர வேறு எதையும் திருப்பிக் கொடுக்கக் கூடாது. அப்படித்தானே?
பினோசே: உயிர்...உடம்பு... அவனை உடனடியாக வேறொரு நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும்.
கர்வஜால்: சரி. புரிகிறது. அவனை நாடு கடத்துவது... அப்படித்தானே?
பினோசே: நாடு கடத்துவது என்றுதான் சொல்லுவது. ஆனால் அவனைக் கொண்டு பறக்கும் விமானம் விழுந்து நொருங்கப் போகிறது.
கர்வஜால்: சரி. அப்போ அவன்..., அவன்..., அவன்... (சிரிப்பு).
பினோசே: ?
கர்வஜால்: கஸ்தாவோ (லெய்), ஒகஸ்தோ (பினோசே), நான் கதைப்பது உங்களுக்கு சரிவரக் கேட்கிறதா? பற்றிசியோ (கர்வஜால்) ஆகிய நான் இத்தால் அறியத்தருவது என்னவென்றால், லா மொனிடாவுக்குள் புகுந்த எங்கள் காலாட்படைக் கல்லூரிச் சிப்பாய்கள் தனிப்பட்ட முறையில் என்னிடம் வந்து சேதி தெரிவித்திருக்கிறார்கள்... அலந்தே தற்கொலை செய்துவிட்டான், அவன் செத்துப்போனான்... எங்கள் செய்தித் தொடர்பில் குறுக்கீடுகள் ஏற்படலாம். நான் நேரில் போய்ப் பார்த்துவிட்டு ஆங்கிலத்தில் சேதி தெரிவிக்கிறேன். உங்களுக்கு விளங்குகிறதா? .
பினோசே: விளங்கிக்கொண்டேன்.
லெய்: சரிவர விளங்கிக்கொண்டேன்.
கர்வஜால்: குடும்பத்தவர்களின் விமானப் பயணம்... அதற்கு அவசரமில்லை... குடும்பத்தை அவசரப்பட்டு வெளியேற்றத் தேவையில்லை என்று நினைக்கிறேன்...
பினோசே: இப்போதைக்கு அவனை (அலந்தேயின் உடலை) எங்கேயாவது ஒரு கொட்டிலில் கொண்டுபோய் வீசிவிட்டு, அப்புறமாக அவனையும் குடும்பத்தையும் விமானத்தில் ஏற்றி அனுப்ப வேண்டியதுதான்... அவர்கள் அவனை வேறொரு நாட்டில்... கியூபாவில் கொண்டுபோய் அடக்கம் செய்யட்டும்... நாங்கள் அவனை அடக்கம் செய்வதில் பிரச்சனை வரும். இந்தக் கிறுக்கன் சாகும்வரை எங்களுக்குப் பிரச்சனை தந்திருக்கிறான்...
மேற்படி சதியாடலின் இறுதியில் பினோசே எரிச்சலடைவதும் சினப்பதும் தெரிகிறது. அலந்தே சரணடைய மறுத்ததுதான் அதற்கான காரணம். மக்களின் ஆணையைப் பெற்ற ஜனாதிபதி சரணடைந்தால் (பதவிதுறந்தால்) வரலாறு சதியை ஏற்கக்கூடும், பினேசேயை மன்னிக்கக்கூடும். அலந்தே சரணடைய மறுத்தபடியால் (உயிர்துறந்தபடியால்) வரலாறு சதியை ஏற்காது போகக்கூடும், பினோசேமீது குற்றம் சுமத்தக்கூடும். அந்த வகையில் பினோசே எரிந்து விழுந்ததில் அர்த்தம் இருக்கிறது. அண்மையில் பிரித்தரினியாவிலும் சிலியிலும் பினோசே கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டமை, வரலாறு அவரையோ சதியையோ மன்னிக்கவில்லை என்பதையே புலப்படுத்துகிறது. பினோசே சொன்னது போல அலந்தே சாகும்வரை பிரச்சனை கொடுத்திருக்கிறார். அதாவது பினோசே சாகும்வரை அலந்தே பிரச்சனை கொடுத்திருக்கிறார். நான் சாகப் போகிறேன் என்று சொல்லித்தான் பினோசே விடுதலை பெற்றிருக்கிறார்!
அலந்தே இறப்பதற்கு ஒருசில மாதங்கள் முன்னதாக சுவீடன் போக்குவரத்து அமைச்சருடன் உiயாடியபொழுது குறிப்பிட்டிருக்கிறார்: “சிலிய மக்களாட்சியின் எதிரிகள், அவர்கள் அமெரிக்கரோ அல்லது வேறு தரப்பினரோ யாராயினும், என்னைக் கவிழ்த்தால் இந்த நாட்டின் விருத்தி தற்காலிகமாகவே தடைப்படும். சிலிய இளைஞர்கள் நாடு சீரழிக்கப்படுவதை ஒருபொழுதும் அனுமதிக்கப் போவதில்லை. நீங்கள் ஒரு ஜனாதிபதியைத் தீர்த்துக்கட்டலாம். ஆனால் அவர் ஒரு தனி ஆள். நீங்கள் சுதந்திர சிலியைத் தீர்த்துக்கட்ட வேண்டுமாயின், இளைஞர்கள் அனைவரையும் தீர்த்துக்கட்ட நேரும்” (1972). பினேசேயின் ஆட்சியில் 3,000 பேர் கொல்லப்பட்டார்கள்.
சிலிய தேசியக் கவிஞர் பப்லோ நெருடாவுக்கு (Pablo Neruda) இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தபொழுது அலந்தே அவரைப் பாராட்டி எழுதிய கடிதத்தில் திரும்பத் திரும்ப மனித நேயத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் (1970). மனித நேயம் மிகுந்த அமரர் அலந்தே மக்கள் அளித்த ஆணையை கடைசிவரை உதறித்தள்ளவில்லை. அதனை அவர் தனது உயிருடன் பிணைத்துக்கொண்டு போயிருக்கிறார். உலக அரசியல் வரலாற்றில் அலந்தே வகிக்கும் பங்கு எத்துணை முக்கியம் என்ற வினாவுக்கு விடையளிக்கத் தலைப்படுவோர் எவரும் அவர் மக்களின் ஆணையைப் பெற்றவர் என்ற உண்மையை உணர்த்தக் கடமைப்பட்டவர்கள்.
_______________________
மணி வேலுப்பிள்ளை
பி.கு: இந்தக் கட்டுரையை எழுதி முடித்த பின்னர் எம்முடன் பணியாற்றும் ஓர் இஸ்பானிய மொழிபெயர்ப்பாளருடன் இதன் உள்ளடக்கம் குறித்து உரையாடியபொழுது, தமது மொழியில் அயந்தே என்பதே சரியான உச்சரிப்பு என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment