புதிய உத்தியோகத்தருக்கு ஒரு வார்த்தை

Author photo courtesy U Idaho website 

தானியல் ஒரஸ்கோ 

        இதுதான் எங்கள் அலுவலகம். அறைகள் அந்தப் பக்கம். அடைப்புகள் இந்தப் பக்கம். அந்த அடைப்பு எனக்கு. உந்த அடைப்பு உனக்கு. உந்தத் தொலைபேசியும் உனக்குத்தான். தொலைபேசி அலறினால் மூச்சுக் காட்டப்படாது. தொலைபேசியே பதில் சொல்லட்டும். உது பதில் சொல்லக்கூடிய தொலைபேசிதான்! இந்தக் கையேட்டைப் பார்த்தால் அந்தக் கைங்கரியம் புரியும். உனது சொந்தத் தேவைக்குத் தொலைபேசி பாவிக்கப்படாது. அவசர தேவைக்குப் பாவிக்கலாம்தான்அதற்கு முதல் உன்னுடைய மேலதிகாரியைக் கேள். அவனைக் காணாவிட்டால் பிலிப்பனைக் கேள். பிலிப்பன் இருப்பது உங்கேதான். சொல்லாமல் கொள்ளாமல் தொலைபேசி பாவிக்கப்படாது. பாவித்தால் சீட்டுக் கிழியலாம்.
        இவைதான் வருகைபோகைப் பெட்டிகள். வருகைப் பெட்டிப் படிவங்களின் இடது பக்க மேல் மூலையில் ஒரு தேதி இருக்கும். அந்தத் தேதிக்குள் அவற்றை எல்லாம் பதிவு செய்துவலது பக்க மேல் மூலையில் ஒப்பமிட்டுபடிமுறை ஆய்வாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அந்தப் ஆளின் இலக்கம் இடது பக்கக் கீழ் மூலையில் இருக்கும். இதுதான் அந்த இலக்கம். வலது பக்கக் கீழ் மூலை வெறுமனே இருக்கும். இதுதான் அந்த ஆய்வாளரின் சுட்டிலக்கம். இதுதான் உனது படிவ நடைமுறைக் கையேடு.  
        மற்றதுசரிக்கட்டி வேலைசெய்யத் தெரியவேண்டும். என்னபுரிய வில்லையாநீ கேட்டது நல்லதாப் போச்சு. கேள்வி கேட்கத் தயங்கக் கூடாதுதான்! ஆனால் கண்டபடி கேள்வி கேட்கப்படாது. கேட்டால் சீட்டுக் கிழியலாம். சரிக்கட்டி வேலை செய்வது இப்படித்தான்: நாங்கள் ஒரு நாளுக்கு எட்டு மணித்தியாலம் தான் வேலைசெய்வோம். அதாவது உன்னுடைய வருகைப் பெட்டியில் பன்னிரண்டு மணித்தியால வேலை இருந்தால்அதை நீ எட்டு மணித்தியாலத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். வருகைப் பெட்டியில் ஒரு மணித்தியால வேலை இருந்தால்அதை நீ எட்டு மணித்தியாலத்துக்கு இழுத்தடிக்க வேண்டும்.
        அவள்தான் எங்கள் வரவேற்புக்காரி.  அவள் கொஞ்ச நாள்தான் வேலை செய்வாள். வரவேற்புக்காரிகள் சட்டென்று வேலையை விட்டுப் போய்விடுவார்கள். அதனால்தான் எங்களுக்கு ஏக்கம். அவர்களோடு நீ மரியாதையாகவும் பண்பாகவும் நடக்க வேண்டும். அவர்களுடைய பெயர்களைக் கேட்டறிந்துஇடைக்கிடை மத்தியானச் சாப்பாட்டுக்கு வரச்சொல்லிக் கேட்டுப் பார்க்கலாம். ஆனால் நெருங்கிப் பழகக் கூடாது. அவர்கள் வேலை மாறியே தீருவார்கள். நீ நெருங்கிப் பழகினால்பிறகு  சிரமப்பட்டே தீருவாய்!
        ஆண்களின் கழிப்பறை அங்கே. பெண்களின் கழிப்பறை இங்கே. அதில் இருப்பவன் ஜோன். அவன் இடைக்கிடை பெண்களின் கழிப்பறையைப் பாவிப்பான். தற்செயலாகப் பாவித்ததாகத்தான் சொல்லுவான்.  எங்களுக்கு  உண்மை தெரியும். நாங்கள் அதைப் பெரிதுபடுத்துவதில்லை. ஜோன் கெடுதியான ஆள் அல்ல. அது பெண்களின் ஆள்புலம்அங்கே ஆண்கள் போகக்கூடாது என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும். இருந்தும் அவன் அதற்குள் நுழையத் தவறுவதில்லை. அதில் அவனுக்கு ஒரு சுதி இருக்கத்தான் செய்கிறது. அதனால் அவனுடைய சோம்பிய வாழ்வில் ஒரு சூம்பிய சிலிர்ப்பு தோன்றத்தான் செய்கிறது. 
        உனக்கு வலது பக்கத்து அடைப்பில் அமந்தாஇடது பக்கத்து அடைப்பில்  றசல். றசலுக்கு அமந்தாவில் ஒரு கண். அவர்கள் வேலை முடிந்து கூடிப் போவது ஒரே பஸ்ஸில். அமந்தாவுக்கு பஸ் பிரயாணம் என்றால் ஒரே சலிப்பு. ஆனால் றசலின் அலம்பல், அவளுடைய சலிப்பைக் குறைக்கும். றசலுக்கோ அன்றாடம் அலம்பலே முக்கியம். ஏன்அவனுடைய வாழ்க்கையில் அலம்பலே முக்கியம். அவன் வீட்டில் வைத்து விறைத்த பீற்சாவும் ஐஸ் கிறீமும் விழுங்கியபடி நிர்வாணப் படங்களைப் பார்ப்பவன். அடைப்பில் வைத்து உருளைக் கிழங்குப் பொரியலும் விசுக்கோத்தும் கொறிப்பவன். அவனுடைய எடை நாற்பது இறாத்தல் கூடிவிட்டது. மாதத்துக்கு மாதம் அவன் கொழுத்து வருகிறான். வாயில் கொறிப்புமனத்தில் வாட்டம்அடைப்புக்கு மேலே எட்டி அமந்தாவை ஒரு நோட்டம் என்று அவனுடைய வாழ்வு கழிகிறது.  
        அமந்தாவுக்கு ஒரு மகன். ஜேமி என்று பெயர். ஆறு வயது. ஒரு தற்பித்துப் பையன். தாள் தாளாகவும் துல்லியமாகவும் கிறுக்கித் தள்ளுவான். அவன் கறுப்பு நிறத்திலும் மஞ்சள் நிறத்திலும் வட்ட  வடிவத்திலும் முட்டை வடிவத்திலும் கிறுக்கித் தள்ளிய படங்கள் அவளுடைய அடைப்பு முழுவதும் ஒட்டியிருக்கும். அந்தப் படங்களை அவள் ஒவ்வொரு வெள்ளியும்  இடம் மாற்றி  ஒட்டுவாள்  அவள்  கணவன்  ஒரு சட்டவாளன். அவன் வரிசைக் கிரமமாகப் பல்வேறு சிற்றின்ப விளையாட்டுகளுக்கு அவளை உட்படுத்துவான். அவள் தயங்கித் தயங்கிநோக நோக அந்த அவமானங்களுக்கு உட்படுவாள். அவள் ஒவ்வொரு நாளும் சப்பித் துப்பப்பட்டவளாய்புதுக்கப் புண்பட்டவளாய்வடுப்பட்ட மார்புடன்கன்றிய வயிற்றுடன்கொப்புளித்த தொடையுடன் பதைபதைத்தபடி வேலைக்கு வருவாள்.
        போகட்டும். இதெல்லாம் எங்களுக்குத் தெரியத் தேவையில்லை. இதை உளறிக் கொட்டப்படாது. உளறிக் கொட்டினால்சீட்டுக் கிழியலாம். 
        றசலின் கைங்கரியங்களை அமந்தா சகித்துக் கொள்ளுவாள். அவளுக்கு அல்பேட்டின் மீது ஒரு கண். அதுதான் அல்பேட்டின் அறை. அவன் அமந்தாவைப் போகிற போக்கில்தான் கவனிப்பான். ஆனால் அவன் எல்லியில்தான் கண் வைத்திருக்கிறான். எல்லி இருப்பது அங்கே. அவளுக்கு அல்பேட்டைப் பிடிக்காது. கேட்டிசைத்தான் பிடிக்கும். கேட்டிசை அடைவதற்கு அவள் தீக்குளிக்கவும் தயார். கேட்டிசுக்கோ எல்லியைப் பிடிக்காது. இதை எல்லாம் பகிடியாக எடுத்துச் சிரிப்பதற்காக நான் சொல்ல வில்லை. இது ஒரு வேடிக்கையான  உலகம் என்றுதான் சொல்லுகிறேன்.
        அந்தக் அடைப்பில் இருப்பது அனிக்கா. அவள் போன வருஷம் பேரியுடன் நின்று காலாண்டுக் கடதாசிகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென அவளுடைய வலது கையிலிருந்து-உள்ளங்கiயிலிருந்து இரத்தம் பீறிட்டது. அவள் மெய்மறந்துதனது கையை முழிசிப் பார்த்து பேரியின் பெண்சாதி சாகும் தேதியையும் விதத்தையும் அவனிடம் சொன்னாள். என்ன சொன்னாலும் அவள் புதுக்க வேலைக்கு வந்தவள். ஆனபடியால் நாங்கள் சிரித்துவிட்டுப் போய்விட்டோம். என்ன நடந்தது தெரியுமாபேரியின் பெண்சாதி செத்துப்போனாள்! ஆனபடியால் நீ சாகும் தேதியையும் விதத்தையும் திட்டவட்டமாக அறிய விரும்பினால் ஒழியஅனிக்காவிடம் போய் வாய்கொடுக்கக் கூடாது.   
        அந்த அடைப்புக்குள் இருப்பது கோலின். உன்னைப் போலவே அவனும் ஒரு காலத்தில் புதியவன். அனிக்காவிடம் போய் வாய்கொடுக்கக் கூடாது என்று நாங்கள் அவனை எச்சரித்திருந்தோம். அவன் கேட்டால் தானே! போன வருஷம் நத்தார் விருந்தின்பொழுது அனிக்காவுடன் ஒருவரும் கதைக்கவில்லை. அவனுக்கு அவள்மீது இரக்கம் ஏற்பட்டது. அவள் குடிப்பதற்கு என்னவோ கொண்டு போய்க் கொடுத்தான். அதிலிருந்து அவன் மாறிவிட்டான். அவன் கதை முடிந்துவிட்டது. இனி அவன் எதுவும் செய்ய முடியாது. நாங்களும் அவனுக்கு உதவ முடியாது. நீயும் கோலினை நெருங்கப்படாது. உனது வேலை எதையும் அவனிடம் கொடுக்கப்படாது. என்னிடம் தாரும்செய்து தருகிறேன் என்று சொல்லி அவன் எதையாவது கேட்டால்என்னுடன் கதைத்து சொல்லுவதாகச் சொல்லு. அவன் திரும்பவும் கேட்டால்நான் இன்னும் மறுமொழி சொல்லவில்லை என்று சொல்லு.
        நெருப்புப் பிடித்தால் தப்பி ஓடும் வழி இதுதான். இந்த மாடியில் தப்பி ஓடும் வழிகளுக்குக் குறைவில்லை. அவற்றுக்கெல்லாம் அடையாளம் போடப்பட்டிருக்கிறது. நாங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மாடியிலிருந்து தப்பி ஓடுவது பற்றி மீளாய்வு செய்வோம். தப்பி ஓடும்  பாதை  பற்றி எல்லாம் மாதத்துக்கு ஒரு தடவை வேடிக்கை வினாவிடைப் போட்டி நடத்துவோம். வருஷத்துக்கு இரண்டு தடவைகள் நெருப்புக்குத் தப்பி ஓடிப் பழகுவோம். வருஷத்துக்கு ஒரு தடவை நிலநடுக்கத் துக்கு தப்பி ஓடிப் பழகுவோம். இதெல்லாம் முன்னெச்சரிக்கைதான். இப்படி எல்லாம் நடப்பதே இல்லை.
        இன்னொரு சங்கதி: எங்களுடைய சுகாதாரத் திட்டம். அது முற்றுமுழுதான சுகாதாரத் திட்டம். எக்கச்சக்கமான சுகயீனம்எதிர்பாராத பேரிடி எதுவாயினும்அது முற்றுமுழுதாக ஈடுசெய்யப்படும். குடும்பத்தவர்கள் எல்லோருக்கும் இது பொருந்தும். உதில் குந்துவது லாறி. அவனுக்கு ஆறு பெட்டைகள். எந்தப் பெட்டைக்காவது அல்லது எல்லாப் பெட்டைகளுக்குமே எதாவது நடந்தால்அவர்களுடைய அலுவல்களை நாங்களே கவனிப்போம். ஆறு பெட்டைகளும் நோய்வாய்ப்பட்டால்அவர்கள் தசைநார் உரியும் கோர நோய்க்கு அல்லது இரத்தம் நஞ்சாகும் கோளாறுக்கு ஆட்பட்டால்அல்லது காயப்பட்டால்வகுப்புத் தோழிகளோடு வெளிக்களம் போகும் பொழுது அவர்களை யாரேனும் யந்திரத்  துப்பாக்கியால் சுட்டு விழுத்தினால் அல்லது இரவில் திரியும் விசரன் ஒருவன் அவர்கள் துயிலும் அடுக்குப் படுக்கையில் வைத்து அவர்களைப் பலிகொண்டால்அவர்களுடைய அலுவல்களை நாங்களே கவனிப்போம். லாறிக்கு ஒரு செப்புச் சல்லியும் செலவில்லை. அவன் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. கால் ஒடிந்து வேலைசெய்ய முடியாமல் போய்விட்டதாஏராளமாக நட்ட ஈடு தருவோம். ஓய்வூதியமாஓயாது தருவோம். கைநிறையத்  தருவோம். ஆளும் பேருமாக ஆடல்பாடல்பந்தாடல் காணப் போவோமானால் கட்டணத்தில் கழிவு கிடைக்கும். பயணம் செய்தபடியே சீட்டாடுவோமானால் இலவசமாகச் சீட்டுக் கட்டுகள் கிடைக்கும். எங்கள் சம்பளம் நேரே வங்கிக்குப் போகும். நாங்கள் எல்லோரும் கொஸ்ற்கோகாரர். என்ன முழிக்கிறாய்நாங்கள் அந்தச் சந்தையில்தான் மொத்தக் கொள்வனவு செய்வோம்.
        இதுதான் எங்கள் கோப்பிக் கூடம். இதுதான் எங்கள் கோப்பி உலை. நாங்கள் ஒரு கோப்பிச் சங்கம் வைத்திருக்கிறோம். நாங்கள் கிழமைக்குதலைக்கு இரண்டு டாலர் கட்டி கோப்பித் தூள்சீனிபால்மாவடி எல்லாம் வாங்குவோம். உனக்குப் பால்மாவைவிடப் பால்தான் பிடிக்கும் அல்லது அவற்றை அரைக்கரைவாசி கலப்பதுதான் பிடிக்கும் என்றால் அதற்காகவே ஒரு சங்கம் வைத்திருக்கிறோம். அதற்கு கிழமைக்கு மூன்று டாலர் கட்டவேண்டும். உனக்கு இனிப்புக் கூடிய சீனியைவிட இனிப்புக் குறைந்த சீனிதான் பிடிக்கும் என்றால் அதற்காகவும் ஒரு சங்கம் வைத்திருக்கிறோம். மற்றதுநாங்கள் ஒரு தடவை பாவித்த கோப்பித் தூளை மறுபடியும் பாவிக்கமாட்டோம். உனக்கு விருப்பமான கோப்பிச் சங்கத்தில் நீ சேரலாம். ஆனால் நீ கோப்பி உலையைத் தொடப்படாது. 
        இதுதான் மின்னலை அடுப்பு. வேண்டுமானால் உனது சாப்பாட்டை நீ இதில் சூடாக்கலாம். மறந்தும் உனது சாப்பாட்டை இதில் சமைக்கப்படாது.
        மதியச் சாப்பாட்டுக்கு எங்களுக்கு ஒரு மணித்தியால இடைவேளை கிடைக்கும். காலையும் மாலையும் ஒரு பதினைந்து நிமிட இடைவேளையும் கிடைக்கும். நீ ஒரு பொழுதும்  இடைவேளையை நழுவ விடப்படாது. விட்டியோ விட்டதுதான். இன்னொரு சங்கதி: உனது இடைவேளை ஒரு சலு கையே ஒழிய உரிமை இல்லை. நீ இடைவேளையைக் கெடுத்தால் நாங்கள் அசைய முடியாதுஉன்னை ஏறெடுத்தும் பார்க்க மாட்டோம். எங்களுக்கு அது பிடிக்காது.
        இதுதான் எங்களுடைய குளிர்பதனி. உனது மத்தியானச் சாப்பாட்டை நீ இதற்குள் வைக்கலாம். உதில் இருப்பது பேரி என்று சொன்னேன் அல்லவாஇந்தக் குளிர்பதனிக்குள் இருக்கும் சாப்பாடுகளை அவன் களவெடுப்பது வழக்கம். அவன் சின்னஞ்சிறிய களவில் பென்னம் பெரிய கவலையை மறப்பவன். போன புத்தாண்டு பிறப்பதற்கு முன்னதாக அவன் தனது பெண்சாதியைக் கொஞ்சிக் கொண்டிருந்தபொழுது, அவளுடைய மூளைக்குள் ஓர் இரத்த நாளம் வெடித்துவிட்டது. அப்பொழுது அவள் இரண்டு மாதக் கர்ப்பிணி. அவள் ஆறு மாதங்களாக மயங்கிக் கிடந்துஇழுபட்டுத்தான் செத்தவள். பேரிக்கு அது பேரிழப்பு. அதற்குப் பிறகு அவன் பழைய பேரி ஆகவே இல்லை. பேரியின் பெண்சாதி பேரழகி. அவளுக்கும் முழுக் காப்புறுதி இருந்தது. பேரி ஒரு சல்லியும் செலவழிக்கவில்லை. ஆனால் செத்தவள் அவனைப் பிடித்தாட்டுகிறாள்.  ஏன்?   அவள்  எங்கள் எல்லாரையும்தான் பிடித்தாட்டுகிறாள்! நாங்கள் அவளைப் பார்த்திருக்கிறோம். அவள் எங்களுடைய அடைப்புகளைக் கடந்து நகர்வது எங்களுடைய கணினித் திரைகளில் விழுந்திருக்கிறது. அவளுடைய மங்கிய முகத்தின் மெல்லிய சாயலை எங்களுடைய படப்பிரதிகளில் நாங்கள் பார்த்திருக்கிறோம். எங்களுடைய வரவேற்புக்காரியின் நேரகாலப் பதிவேட்டில் பேரியைச் சந்திப்பதற்கு என்று குறிப்பிட்டுத் தனது கைவண்ணத்தை அவள் காட்டியிருக்கிறாள். வரவேற்புக்காரியின் பதிவுத் தொலைபேசியில் குரல் வைத்துச் சேதி பதிந்திருக்கிறாள். தொலைபேசி இணைப்பில் கேட்கும் மின்னணு ஓசையாலும் இரைச்சலாலும் அவளுடைய சேதிகள் சிதைந்திருக்கும். இருந்தும் அவளுடைய குரல் வெகு தொலைவிலிருந்து பல ஓசைகளினூடே எதிரொலிக்கும். அது அவளுடைய குரல்தான். அந்தக் குரலுக்குள் அலை போன்ற சத்தங்களையும் கரகரப்பையும் மீறி ஒரு குழந்தை கேவி அழுவதும் கேட்கும்.
        போகட்டும். நீ மத்தியானச் சாப்பாடு கொண்டுவர விரும்பினால் பேரியை யோசித்து உனது சாப்பாட்டுச் சரைக்குள் மேலதிகமாக எதையாவது போட்டு வை. இந்த இடத்தில் நாலு பேரிகள் வேலை செய்கிறார்கள். அது தற்செயலாய் நடப்பதுதானே?
        இதுதான் மைத்தியூவின் அறை. அவன்தான் எங்களுடைய பிரிவு முகாமையாளன். அவனுடைய கதவு எப்பொழுதும் மூடியே இருக்கும். அவன் இங்கேதான் நிற்கிறான். நீ ஐமிச்சப்படத் தேவையில்லை. அவன் எங்களைச் சுற்றிக்கொண்டுதான் திரிகிறான். ஆனால் நாங்களும் அவனைக் கண்டதில்லை. நீயும் அவனைக் காணப்போவதில்லை.
        இது எங்கள் கண்காணியின் கூடு. இதற்குள் நீ எட்டியும் பார்க்கக் கூடாது.
        இதுதான் எங்களுடைய சாமான் பெட்டகம். உனக்கு ஏதாவது சாமான்  தேவைப்பட்டால்,  கேட்டிசைக் கேள். அவன் உனது பெயரைப் சாமான் பெட்டக அனுமதி ஏட்டில் பதிந்த பிறகு உனக்கு ஒரு சாமான் அனுமதி நறுக்கைத் தருவான். இந்த நறுக்கின் சிவப்புப் பிரதியை எல்லியிடம் கொடு. அவள் உனது பெயரைச் சாமான் பெட்டகச் சாவி ஏட்டில் பதிந்த பிறகு  சாவியைத் தருவாள். அந்தச் சாமான் பெட்டகம் இந்தப் பிரிவு-முகாமையாளனுடைய அறைக்கருகில்தான் வைக்கப்பட்டிருக்கிறது. நீ உன்னுடைய சாமான்களைச் சந்தடியில்லாமல் சேகரிக்க வேண்டும். சாமான் பெட்டகத்தில் நாலு கூறுகள் இருக்கும். முதலாவது கூறில் தாபனத்தின் முகவரித் தாள், வெறும் தாள்தபாலுறைசேதியேடுகுறிப்பேடு வகைகள் இருக்கும். இரண்டாவதில் பேனைபென்சில்தட்டெழுத்து - அச்செழுத்து யந்திர நாடா வகைகள் இருக்கும். மூன்றாவதில் அழிகட்டைஅழிதிரவம், கண்ணாடி நாடாபசை வகைகள் இருக்கும். நாலாவதில் செருகூசிகுண்டூசிகத்தரிக்கோல்சவர அலகு வகைகள் இருக்கும். இதுதான் தாளைத் தூளாக்கும் யந்திரம். இவையெல்லாம் அந்த யந்திரத்தின்  உதிரி அலகுகள. ஆனால்  இந்த யந்திரத்தை நீ தொடப்படாது. அதுக்கும் உனக்கும் சம்பந்தமில்லை.
        அந்த அறையில் இருப்பவள் குவின்டலின். அவளுக்குப் பெங்குவின் பைத்தியம். பெங்குவின் உருவம் பொறித்த சாமான்  சண்டிகளை  அவள்  சேகரித்து வருகிறாள். பெங்குவின் உருவம் பொறித்த விளம்பரங்கள்கோப்பிக் குடுவைகள்பேனை கடதாசி வகைகள்கம்பளிச் சட்டைகள்இறுகிய அரைக்கைச் சட்டைகள், பாத உறைகள்நகை நட்டுகள்பெங்குவின் பொம்மை வகைகளை அவள் சேகரித்து வருகிறாள். அவள் தனது  அறையில் நேரம் பிந்தி வேலைசெய்யும் வேளைகளில் பெங்குவின்  குஞ்சம் வைத்த செருப்புகளை அணிந்திருப்பாள். பெங்குவின் கொக்கரிப்பதை அவள் ஒரு நாடாவில்  பதிந்து வைத்திருக்கிறாள். ஆறுதல் வேண்டிய பொழுதெல்லாம் அவள் அதனை முடுக்கிக் கேட்டுத் தேறுதல் அடைவது வழக்கம். கறுப்பும் வெள்ளையும் தான் அவளுக்குப் பிடித்த நிறங்கள். பெங்குவின் கறுப்பு-வெள்ளைப் பறவைதானே?  அவளுடைய காரின்  இலக்கத் தகட்டில் பெங்குவின் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. அது பிரத்தியேக ஏற்பாடுதான். அவள் ஒவ்வொரு நாளும் வேலைக்கு வந்த கையோடு எல்லா அடைப்புகளையும் எட்டிப் பார்த்து எங்கள் ஒவ்வொருவருக்கும் வணக்கம் சொல்லிக்கொண்டு போவாள். புதன் கிழமை என்றால் காலை இடை வேளைக்குப் பணியாரம் வைத்துத் தின்னுவாள். வெள்ளிக் கிழமை என்றால் பின்னேர இடைவேளைக்கு மாப்பண்டம் வைத்துத் தின்னுவாள். வருஷா வருஷம் நத்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்வதும் அவள்தான். பிறந்தநாள் பட்டியலுக்கும் அவள்தான் பொறுப்பு. அவளுடைய கதவு எப்பொழுதும் எங்களுக்காகத் திறந்திருக்கும். அவள் எப்பொழுதும்ஒருவரைக் காது கொடுத்துக் கேட்டுமற்றவர் காதில் இதமாக ஒரு வார்த்தை போட்டு வைப்பவள். எவருக்குமே கை கொடுப்பவள்உடுக்கை இழந்தும்  இடுக்கண்  களைபவள்,  முகம்புதைத்து முனகுவோர்க்குத் தோள்கொடுத்து நிற்பவள். அவளுடைய கதவு எப்பொழுதும் திறந்திருப்பதால் அவள் மாதர் கூடத்து அடைப்பொன்றில் ஒளித்திருந்து புலம்புவது வழக்கம். அவள் அங்கே வாந்தி எடுத்த சத்தத்தை ஜோன்  கேட்டிருக்கிறான். ஜோன் தனது அடைப்பில் அருளாமல் குந்தியிருப்பவன். கூட்டுக்குள் ஒரு பெட்டை அடி எடுத்து வைத்தால் மெய்மறப்பவன். குவின்டலின் படிக்கட்டில் கூனிக் குறுகியபடிசீறிக் கிளம்பும் காற்றில் நடுநடுங்கியபடிபேணியிலடைத்த   பானத்தை  உறிஞ்சியபடிமுழங்கால்களை அரவணைத்தபடி பரிதவிப்பதை நாங்கள்  கண்டிருக்கிறோம். எதுவும் தனது வேலையைப் பாதிக்க அவள் விடுவதில்லை. அப்படி விட்டால் சீட்டுக் கிழியும்.
        அந்த அடைப்பில் இருப்பது கோவன். அவன் ஒரு கொலைகாரன். அடுத்தடுத்துக் கொலை செய்பவன். நகரம் பூராவும் ஆட்களைக் கண்ட துண்டமாய் வெட்டிக் கொல்பவன். ஆட்களைத் திட்டம் தீட்டித் தீர்த்துக் கட்டச் சித்தம் கொண்டவன். அந்த விபரம் எல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. அதை வெளியே சொல்லப்படாது. நீ பயப்பட வேண்டாம். அவனுக்கு முன்பின் தெரியாதவர்களைக் கண்டால்தான் கொலை வெறி பிடிக்கும். கறுத்த மயிர்கறுத்தக் கண்அப்படி இப்படி இருக்கக்கூடிய முப்பது வயதிலும் குறைந்த கொழுத்த வெள்ளைக்கார  ஆடவனாகப் பார்த்துத்தான் அவன் பலி எடுப்பான். இருளும் தறுவாயில் ஒரு வெளியிடத்தில் வைத்துப் போகடி போக்காகத் தான் இரைதேடுவான். வீடுவரை இரையை நிழல்போல் தொடர்வான். இரையாகுவோர் இடறுவதும் திமிறுவதும் அவனுக்கு வேட்கையை ஊட்டும்.  அப்புறம்  நடப்பது அப்பழுக்கற்ற படுகொலை. இலக்கு வைத்து நேர்த்தியாக உடலை அறுப்பான். தோலையும் தசைநாரையும் பட்டை பட்டையாய் உரிப்பான். உள்ளுறுப்புகளை அக்கு வேறு ஆணி வேறாக வெட்டிக் குதறுவான். இதை எல்லாம் தன்னுடைய வேலைக்குப் பாதிப்பு இல்லாமல்தான் செய்வான். உண்மையில் எங்கள்  தட்டெழுத்துக்காரருள்  கோவனே வேகம் கூடியவன். அடுப்பில்  இருப்பவனைப்  போலத்  தட்டித் தள்ளுவான். கோவனுக்கு  குவின்டலினில் ஒரு மோகம். ஒவ்வொரு நாளும் பின்னேரமாகப் பார்த்து அவளுடைய மேசையில்  ஹேர்சி சொக்கலட்டை சிவப்பு உலோகச் சருகில் சுற்றி வைப்பான். அவனுக்கு அனிக்காவைப்   பிடிக்காது.  அவளை  அவன் நெருங்குவதும் இல்லை. அவன் நெருங்கினால் அவளையும் மீறி அவளுக்கு உருவேறும். அவளுடைய இடது உள்ளங் கையிலிருந்து குருதி கொட்டத் தொடங்கும்.
        போகட்டும்! கோவன் கைதாகும்பொழுது நீ ஆச்சரியப்படுவது போல நடி. அவனைப் பார்ப்பதற்கு ஒரு நல்ல ஆளைப் போலவே இருந்ததாகச் சொல்லு. ஓரளவு தானும் தன்பாடுமாகத் திரிந்திருக்கலாம் என்று சொல்லு. அதேவேளை அமைதியாகவும் மரியாதையாகவும் நடக்கத் தவறவில்லை என்றும் சொல்லு.
        இதுதான் படப்பிரதி யந்திரக் கூடம். யந்திரம்  தென்மேற்கைப் பார்த்தபடி இப்படி இருக்கும். நாங்கள் அதனைப் பார்த்தபடி இப்படி நிற்போம். மேற்கில் தண்ணீர் குடிக்கும் இடம். அதற்குப் பின்னுக்கு வடக்கு. நாங்கள் பதினேழாம் மாடியில் இருக்கிறோம். அதனால் எங்கள் கண்ணுக்கு நல்ல விருந்து. இது கண்ணுக்கு விருந்தில்லையாஇந்தச் சோலையைப் பார். அந்த மரங்களின்  உச்சியைப் பார். இந்தக் கட்டடங்கள் இரண்டையும் பார். இந்தக் கட்டடங்களின் இடைவெளியைப் பார். அந்தக் கட்டடங்கள் இரண்டையும் பார். அந்தக் கட்டடங்களின் இடைவெளியில் சூரியன் மறைவதைப் பார். அந்த வீதிக்கு அப்புறமாக இருக்கும் கட்டடத்தின் யன்னல் கண்ணாடிகளைப் பார். இந்தக்  கட்டடம் அந்தக் கண்ணாடிகளில் பட்டுத் தெறிப்பதைப் பார். என்னதெரிகிறதாஇங்கே பார்நீ கை அசைப்பது தெரிகிறது. அங்கே பார்கோப்பிக் கூடத்திலிருந்து அனிக்கா பதிலுக்குக் கை அசைக்கிறாள்.
        பிரதி எடுக்கும்போது இந்தக் காட்சியைக் கண்டு களி. யந்திரம் தொந்தரவு தந்தால் றசலுக்குச் சொல்லு. ஏதாவது கேட்டறிய விரும்பினால் உனக்கு மேலே உள்ளவனைக் கேள். அவனைக் காணாவிட்டால் பிலிப்பனைக் கேள். அவன் அங்கே தான் இருப்பான். அவன் கிளிசாவைக் கேட்டுச் சொல்லுவான். கிளிசா இருப்பது அங்கே. அவர்களைக் காணாவிட்டால் தாராளமாக என்னைக் கேட்கலாம். அதுதான் என்னுடைய அடைப்பு. நான் அங்கேதான் இருப்பேன்.   
Daniel OrozcoOrientation, தமிழ்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment