வழக்குரை (3)
சாக்கிரத்தீஸ்
உண்மை இதுவே, பெரியோர்களே! சிறந்த நிலைப்பாடாகத் தனக்குத் தென்படுவதால் அல்லது தனக்கு இடப்பட்ட ஆணைகளுக்குப் பணிந்து ஒரு நிலைப்பாட்டை ஒருவன் எடுத்துக்கொண்டவுடன், மானத்துக்கு மேலாக இறப்பை அல்லது வேறெதையும் பொருட்படுத்தாமல், அதே நிலைப்பாட்டில் நின்றுபிடித்து ஆபத்தை எதிர்கொள்ள அவன் கடமைப்பட்டவன் என்றே நான் நம்புகிறேன்.
எனக்கு ஆணையிட நீங்கள் தேர்ந்தெடுத்த படையதிகாரிகள் பொதிதேயா, அம்விபொலிஸ், தீலியம் ஆகிய இடங்களில் என்னைக் களமிறக்கியபொழுது, வேறெவரையும் போலவே எனக்குரிய இடத்தில் இறப்பை எதிர்நோக்கி நான் நிலைகொண்டிருந்தேன். அதன் பிறகு என்னையும் பிறரையும் ஆராய்ந்து மெய்ஞான வாழ்வில் ஈடுபடும் கடமையில் கடவுள் என்னை அமர்த்தியதாக நான் நினைக்கிறேன், நம்புகிறேன். ஆதலால், பெரியோர்களே, இவ்விரு சூழ்நிலைகளிலும் நான் இறப்பையோ வேறெந்த ஆபத்தையோ எதிர்நோக்க அஞ்சி நிலைபிறழ்ந்திருந்தால், எனக்கிட்ட பணியை நான் உதறித்தள்ளியிருந்தால், நான் படுமோசமான முறையில் முன்பின்முரணாக நடந்துகொண்டவன் ஆவேன். உண்மையில் அது படுமோசமான முரண்பாடாகும். அப்புறம் கடவுளரில் நான் நம்பிக்கை வைக்காததற்காகவும், இறைவாக்கிற்குப் பணியாததற்காகவும், இறப்பை எதிர்நோக்க அஞ்சியதற்காகவும், ஞானமற்றவனாக இருக்கும் என்னை ஞானவான் என்று கருதியதற்காகவும் நீதிமன்றில் வெளிப்படும்படி எனக்கு மிகவும் நீதியான முறையில் அழைப்பாணை இட்டிருக்க முடியும் அல்லவா?
பெரியோர்களே, ஒருவர் இறப்புக்கு அஞ்சுவது என்பது அவர் ஞானமற்றவராக இருக்கும் அதேவேளை தன்னை இன்னொரு வகையில் ஞானவான் என்று கருதுவதற்கு நிகராகும் என்று உங்களிடம் நான் கூற விரும்புகிறேன். தான் அறியாததை அவர் அறிந்திருப்பதாக எண்ணுவதற்கு அது நிகராகும் அல்லவா? உண்மையில் இறப்பு என்பது ஒருவருக்கு நேரக்கூடிய மாபெரும் அருட்பேறு ஆகாதா என்பது எவருக்குமே தெரியாது. ஆனாலும் அது மாபெரும் கேடே என்பதை உறுதியாக அறிந்தவர்கள் போல் மக்கள் அதற்கு அஞ்சி நடுங்குகிறார்கள். அறியாததை அறிந்ததாகக் கருதும் இந்த அறியாமையே பாரிய குற்றமாகக் கொள்ளப்பட வேண்டும் என்று நான் உறுதியாகக் கூறுவேன். இதனையே, பெரியோர்களே, ஏனைய மானுடருக்கு மேலாக நான் துய்க்கும் அனுகூலத்தின் அளவாகவும் தன்மையாகவும் கருதுகிறேன். நான் எந்த வகையிலேனும் எனது அயலவரை விட ஞானம் மிகுந்தவன் என்று வலியுறுத்துவேன் என்றால், அது இந்த வகையிலேயே: அதாவது இறப்பை அடுத்து நேர்வது என்ன என்பது பற்றிய மெய்யறிவு படைத்தவனல்ல நான்; அதேவேளை நான் அத்தகைய அறிவு படைத்தவனல்ல என்பதை உணர்ந்துகொண்டுள்ளேன். ஆனாலும் எனது மேலவர் கடவுளாயினும், மனிதராயினும், அவருக்குத் தவறிழைப்பதும், அவருக்குப் பணியமறுப்பதும் தீய, ஈனச் செயல்களாகும். ஆதலால், பெரியோர்களே, எனது அறிவு எத்தகையதாயினும் ஆகட்டும்; ஆனால் நான் தீயவை என்று அறிந்த தீயவற்றை விட, உண்மையிலேயே ஓர் அருட்பேறாக அமையக்கூடிய ஏதோ ஒன்றுக்கு ஒருபொழுதும் நான் அதிகம் அஞ்சப்போவதில்லை, அதை அதிகம் வெறுக்கப்போவதில்லை.
ஒன்றில் இந்த நீதிமன்றின் முன் நான் வெளிப்பட்டிருக்கவே கூடாது, அல்லது, இங்கு நான் வெளிப்பட்டுள்ளபடியால், நான் சாகடிக்கப்பட வேண்டும், ஏனெனில் நான் தப்பிய கையோடு உங்கள் புதல்வர்கள் சாக்கிரத்தீசின் போதனைகளின்படி செயற்பட்டு முற்றிலும் ஒழுக்கம் கெட்டவர்களாக மாறிவிடுவார்கள் என்று தெரிவித்துள்ள அனைட்டசைப் பொருட்படுத்தாமல் என்னை நீங்கள் விடுதலை செய்வதாக வைத்துக்கொள்வோம். அதன்படி, "சாக்கிரத்தீஸ், நீ இந்த அறிவுத் தேட்டத்தில் உனது பொழுதைக் கழிப்பதைக் கைவிடவும் வேண்டும்; மெய்யியற் போதனையை நிறுத்தவும் வேண்டும் என்று ஒரேயொரு நிபந்தனை விதித்து நாங்கள் இந்தத் தடவை அனைட்டசைப் புறக்கணித்து உன்னை விடுதலை செய்கிறோம். நீ தொடர்ந்தும் அதே வழியில் செல்ல நாங்கள் உன்னை மடக்கிப்பிடிதால், நீ சாகடிக்கப்படுவாய்" என்று நீங்கள் என்னிடம் கூறுவதாக வைத்துக்கொள்வோம்.
சரி, நான் கூறியவாறு, அப்படிப்பட்ட நியதிகளின்படி என்னை விடுதலைசெய்ய நீங்கள் முன்வருவதாக வைத்துக்கொண்டால், நான் இப்படி விடையளிக்க வேண்டியுள்ளது: பெரியோர்களே, நான் மிகவும் நன்றியுணர்வும் அர்ப்பணிப்பும் கொண்ட உங்கள் பணிவிடையாளன். ஆனாலும் உங்களைக் காட்டிலும் கடவுளுக்கே நான் அதிகம் பணிந்தொழுகக் கடமைப்பட்டவன்.
எனது மூச்சும் வலுவும் நிலைக்கும்வரை என் மெய்யியற் போதனையை நான் நிறுத்தப் போவதில்லை; உங்களைச் சிந்திக்க உந்துவதை நான் நிறுத்தப் போவதில்லை; நான் எதிர்கொள்ளும் அனைவருக்கும் உண்மையைத் துலக்குவதை நான் நிறுத்தப் போவதில்லை. எனது வாடிக்கைப்படி இப்படி நான் தொடர்ந்து வினவப்போகிறேன்:
"என் இனிய நன்பனே, நீ ஓர் அதென்சு மாநகரவாசி; நீ உலகிலேயே மிகவும் மகத்தான மாநகரத்தைச் சேர்ந்தவன்; நீ ஞானத்துக்கும் வலிமைக்கும் மிகவும் புகழ்பெற்ற மாநகரத்தைச் சேர்ந்தவன். நீ இயன்றளவு பணம் ஈட்டிக்கொள்வதில் புலனைச் செலுத்துவது குறித்து வெட்கப்படவில்லையா? பெருமையும் மானமும் ஈட்டுவதில் நாட்டம் கொள்ளாமல், உண்மையிலும் நியாயவிளக்கத்திலும் ஆன்மீகச் செம்மையிலும் புலனைச் செலுத்தாமல் வாழ்வது குறித்து நீ வெட்கப்படவில்லையா?" என்று நான் தொடர்ந்து வினவப்போகிறேன்.
உங்களுள் எவராவது என்னுடன் பிணக்குப்பட்டால், அத்தகைய சங்கதிகளில் தமக்கு அக்கறை இருப்பதாக மார்தட்டினால், அவரை நான் கையோடு போக விடமாட்டேன்; அவரை விட்டு நான் புறப்படமாட்டேன். மாறாக, அவரிடம் நான் வினாத்தொடுப்பேன்; அவரை ஆராய்வேன்; அவரைப் பரிசீலிப்பேன். அப்படி அவர் மார்தட்டியும் கூட, அவர் உண்மையில் நன்னலத்தை நோக்கி முன்னேறவில்லை என்று எனக்குத் தென்பட்டால், அவர் வெறும் அற்ப விடயங்களில் புலனைச் செலுத்தி, மிகமிக முக்கிய விடயத்தைப் புறக்கணித்ததாக அவரை நான் கடிந்துகொள்வேன். இளையோரோ, மூத்தோரோ, குடிமக்களோ, பிறநாட்டவரோ... நான் எதிர்கொள்ளும் எவரிடமும் அப்படியே நடந்துகொள்வேன். என்னுடன் நெருங்கி உறவுகொண்ட சககுடிமக்களே, குறிப்பாக உங்களுடன் நான் அப்படியே நடந்துகொள்வேன். எனது கடவுள் எனக்கிட்ட ஆணை இதுவே என்று உங்களிடம் நான் உறுதிகூறுகிறேன். நான் கடவுளுக்குப் புரியும் பணிவிடையைக் காட்டிலும் சிறந்த நன்னலம் என்றுமே இந்த மாநகரத்துக்கு வாய்த்ததில்லை என்பது எனது நம்பிக்கை. உங்கள் உடலையும், உடைமையையும் விடுத்து உங்கள் ஆன்மநலத்துக்கு அதிமுதன்மை அளிக்கும்படி உங்களை, இளையோரை, மூத்தோரைத் தூண்டுவதில் எனது நேரம் முழுவதையும் நான் கழித்து வருகிறேன். "செல்வம் என்பது ஆளுக்கும் அரசுக்கும் நன்னலம் பயக்காது; நன்னலமே செல்வம் பயக்கும்; நன்னலம், மற்றெல்லா அருட்பேறுகளையும் அளிக்கும்" என்றெல்லாம் நான் முழங்கித் திரிவேன்.
இனி, இந்தச் செய்தியை விடுப்பதன் மூலம் நான் இளையோரின் உள்ளத்தைக் கெடுக்கிறேன் என்றால், இது கேடு விளைவிக்கும் செய்தியாகவே தென்படும். ஆனாலும் எனது செய்தி இதுவல்ல, அது வேறு செய்தி என்று ஒருவர் கூறினால், அவர் விழலளக்கிறார் என்பதே கருத்து. ஆதலால், பெரியோர்களே, நான் கூறுவது இதுவே: நீங்கள் அனைட்டஸ் கூறுவதைக் கேட்டால் என்ன, கேட்காவிட்டால் என்ன, நீங்கள் என்னை விடுதலை செய்தால் என்ன, செய்யாவிட்டால் என்ன, நீங்கள் விரும்பியபடி செய்யலாம். நான் நூறு தடவைகள் இறந்தாலும் கூட எனது போக்கை மாற்றமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா!
அமைதி, பெரியோர்களே, அமைதி! குறுக்கீடின்றி எனது பேச்சைக் கேட்கும்படி நான் வேண்டிக்கொண்டதை நினைவில் வைத்திருக்கவும். தவிரவும், எனது பேச்சைக் கேட்பது உங்களுக்கு நன்மை பயக்கும் என்றும் நான் நம்புகிறேன்.
நான் உங்களுக்கு இன்னொரு சங்கதி சொல்லப் போகிறேன். அது ஓர் எதிர்மறைப் புயலைக் கிளப்பக் கூடும். ஆனாலும் தயவுசெய்து பொறுமை காக்கவும். நான் எப்படிப்பட்டவன் என்று மார்தட்டுகிறேனோ அப்படிப்பட்டவன் என்றால், அதற்காக எனக்கு நீங்கள் இறப்புத் தண்டனை விதித்தால், என்னைவிட உங்களுக்கே நீங்கள் அதிகம் தீங்கு புரிந்தோர் ஆகுவீர்கள் என்பதை உங்களிடம் நான் உறுதிபடக் கூறுகிறேன். மெலிட்டசோ, அனைட்டசோ எனக்கு அறவே தீங்கெதுவும் புரிய முடியாது. அதற்கான வலு அவர்களிடம் கிடையாது. காரணம், ஒரு மோசமானவரால் ஒரு சிறந்தவருக்குத் தீங்கு விளைவதை, கடவுள் வகுத்த விதி அனுமதிக்காது என்று நான் நம்புகிறேன்.
என்மீது குற்றஞ்சுமத்தியவர் எனக்கு இறப்புத் தண்டனை விதிக்கவோ, என்னை நாடுகடத்தவோ, எனது குடியுரிமைகளைப் பறிக்கவோ வகைசெய்யக் கூடும் என்பதில் ஐயமில்லை. அவற்றை அவரும் மற்றவர்களும் பெருங்கேடுகள் என்று கருதக்கூடும் என்று நான் துணிந்து கூறுகிறேன். எனினும் நான் அவற்றைப் பெருங்கேடுகள் என்று கருதவில்லை. அவை பெருங்கேடுகள் என்பதே அவரது படுமோசமான நிலைப்பாடு; அதாவது ஓர் அப்பாவிக்கு இறப்புத் தண்டனை விதிக்க அவர் இப்பொழுது மேற்கொள்ளும் முயற்சியை விட அது படுமோசமான நிலைப்பாடு.
இதுவரை நான் எனக்காகவே மன்றாடுகிறேன் என்று எவரும் எண்ணக்கூடும். உண்மை எதிர்மாறானது. நான் உங்களுக்காகவே மன்றாடுகிறேன். என்னைத் தண்டிப்பதன் மூலம் கடவுளின் கொடையைத் துர்ப்பிரயோகம் செய்வதிலிருந்து உங்களைத் தடுத்தாட்கொள்வதற்காகவே நான் மன்றாடுகிறேன். நீங்கள் எனக்கு இறப்புத் தண்டனை விதித்தால், எனது இடத்தை நிரப்புவதற்கு எவரையும் எளிதில் நீங்கள் கண்டறிய மாட்டீர்கள்.
ஆதலால், பெரியோர்களே, இந்த மாநகரத்தை ஓர் உயர்குலக் குதிரையாகக் கணித்து, அதன் மாபெரும் பருப்பத்தினால் அது சோம்பித்திரிய முற்படுவதாக எண்ணி, அதனைத் தீண்டி ஊக்குவிக்கும் ஈ எனும் வண்ணம் என்னை இந்த மாநகரத்துக்கென்றே கடவுள் நியமித்துள்ளார் என்று கூறுவது சற்று வேடிக்கையாகத் தென்பட்டாலும் கூட, அது முற்றிலும் உண்மையே. அத்தகைய ஓர் ஈயின் பணியை மேற்கொள்ளவே கடவுள் என்னை இந்த மாநகரத்துக்கு நியமித்துள்ளார் என்று எனக்குத் தென்படுகிறது. நாள் முழுவதும் இங்கும், அங்கும், எங்கும் தரித்து, உங்கள் ஒவ்வொருவரையும் எழுப்பி, தூண்டி, கடிந்துகொள்வதை நான் நிறுத்தப் போவதில்லை. பெரியோர்களே, என்னைப் போல் இன்னொருவரை நீங்கள் கண்டறிதல் எளிதல்ல. நீங்கள் எனது புத்திமதியை ஏற்றால், என் உயிரைப் பறிக்கமாட்டீர்கள். எவ்வாறாயினும், எனக்குப் பதிலாக உங்களைப் பராமரிக்க வேறொருவரைக் கடவுள் அனுப்பி வைத்தாலொழிய, நீங்கள் விரைவில் அருண்டெழுந்து, ஆக்கினைப்பட்டு, அனைட்டசின் புத்திமதியை ஏற்றுக்கொண்டு, என்னை ஒரே அடியில் தீர்த்துக்கட்டிவிட்டு, எஞ்சிய வாழ்நாள் முழுவதும் தூங்கி வழிவீர்கள் என்றே நான் ஐயுறுகிறேன்.
கடவுளின் கொடை எனும் வண்ணம் இந்த மாநகரத்துக்கு அனுப்பி வைக்கத்தக்க ஆள்தான் நான் என்பதை உண்மையில் நீங்கள் ஐயப்பட்டால், அதை இப்படி நோக்கி நீங்கள் ஐயந்தெளியலாம்: நான் இத்தனை ஆண்டுகளாக எனது சொந்த அலுவல்களைப் புறக்கணித்து, எனது குடும்பம் புறக்கணிப்புக்கு உள்ளாகும் இழிவைச் சகித்துக்கொண்டு, எப்பொழுதுமே உங்களுக்காகப் பாடுபட வேண்டியிருப்பது, ஒரு தந்தையைப் போலவோ தமையனைப் போலவோ உங்கள் ஒவ்வொருவரையும் தனிப்படச் சந்தித்து, உங்கள் சிந்தையை நன்னலம் நோக்கிச் செலுத்த வேண்டியிருப்பது ஓர் இயல்பான சங்கதியாகத் தென்படுகிறதா? அதில் நான் ஏதேனும் இன்பம் துய்த்திருந்தால், அல்லது எனது நற்பணிக்கு கட்டணம் செலுத்தப்பட்டிருந்தால், அப்படி நான் நடந்ததற்கு ஒரு நியாயவிளக்கம் கிடைத்திருக்கும். ஆனால், என்மீது குற்றஞ்சுமத்தியோர் வெட்கமின்றி மற்றெல்லா வகைப்பட்ட குற்றச்சாட்டுகளையும் என்மீது சுமத்தினாலும் கூட, நான் எப்பொழுதாவது, எவரிடமாவது கட்டணம் கேட்டதாகவோ அறவிட்டதாகவோ எச்சான்று கொண்டும் பாசாங்குசெய்ய அவர்கள் திமிர் கொண்டதில்லை. எனது கூற்று உண்மையே என்பதை எண்பிக்க என்னால் முன்வைக்கக்கூடிய உறுதியான சான்று எனது வறுமையே என்று நினைக்கிறேன்.
இப்படி எல்லாம் நான் சுற்றித்திரிந்து, குடிமக்களின் தனிப்பட்ட அலுவல்களில் தலையிட்டு, அவர்களுக்குப் புத்திமதி கூறவேண்டியிருந்தும் கூட, என்றுமே உங்கள் அவைமுன் வெளிப்பட்டு, அரச அலுவல்களைக் கவனத்தில் கொண்டு, உங்களை விளித்துப் புத்திமதி கூறத் துணியாதது உங்களுக்கு வினோதமாகத் தென்படலாம். அதற்கான காரணம் ஏற்கெனவே பல தடவைகள் நீங்கள் கேட்டது தான்; அடிக்கடி நான் கூற நீங்கள் கேட்டது தான்; தனது குற்றச்சாட்டில் அதை ஏளனம் செய்வது தகும் என்று மெலிட்டஸ் நினைத்திருக்கிறார். அதாவது, நான் ஒரு தெய்வ அனுபவத்துக்கு, தெய்வீக அனுபவத்துக்கு உட்பட்டுச் செயற்படுபவன். எனது பாலியப் பராயத்தில் அது தொடங்கியது. எனக்கு ஒருவகையான குரல் கேட்கிறது. என்றுமே நான் செய்ய எண்ணுவதை செய்யாவாறு தடுக்கும் குரலாகவே அது எனக்குக் கேட்கிறது. என்றுமே என்னை அது தூண்டியது கிடையாது. பொது வாழ்வினுள் புகாவாறு என்னைத் தடுப்பதும் அதுவே. அது மிகவும் நல்லதும் கூட. ஏனெனில், நான் நீண்ட காலத்துக்கு முன்னரே அரசியலில் ஈடுபட்டிருந்தால், என்னால் உங்களுக்கோ எனக்கோ எந்த நன்மையும் விளைய வாய்ப்பின்றி அப்பொழுதே என் உயிர் போயிருக்கும் என்று கருதுகிறேன்.
உங்களுக்கு நான் உண்மையைக் கூறினால், தயவுசெய்து குறைவிளங்க வேண்டாம். இப்பூவுலகில் உங்களையோ வேறு குடியாட்சி அமைப்பு எதையுமோ உளச்சான்றுக்கமைந்து எதிர்க்கும் எவரும், தனது சொந்த அரசில் பெருந்தொகையான பிழைகளும், சட்டமீறல்களும் இடம்பெறுவதை அடியோடு தடுக்கும் எவரும் உயிர்தப்புவது இயலாது. உண்மையான நீதிமான் எவரும் குறுகிய காலத்துக்காவது உயிர்தப்ப எண்ணினால், அரசியலை விடுத்து, தானும் தன்பாடுமாக இருக்க வேண்டும்.
நான் கூறியதற்கு உருப்படியான சான்றுகளை முன்வைப்பேன்; வெறுங் கோட்பாடுகளை அல்ல, உங்களால் பெரிதும் புரிந்துகொள்ளக்கூடிய விவரங்களை முன்வைப்பேன். என்றுமே நான் சாகப்பயந்து தவறான முறையில் எந்த அதிகாரபீடத்துக்கும் அடிபணிய மாட்டேன்; என் உயிர் போனாலும் அடிபணிய மறுப்பேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் நான் மெய்யாகப் பட்டறிந்தவற்றை உங்களுக்கு எடுத்துரைக்கும்பொழுது, அவற்றைச் செவிமடுக்கவும். அது நீதிமன்றுகளில் நீங்கள் அடிக்கடி கேட்பது போன்ற கதை; கேட்டுச் சலித்த கதை; ஆனாலும் உண்மை:
பெரியோர்களே, நான் ஒரு தடவை மாநகராட்சி மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டபொழுது மட்டுமே எங்கள் மாநகரத்தில் பதவி வகித்தேன். கடல்மோதலில் உயிரிழந்தவர்களைக் காப்பாற்றத் தவறிய பத்து தளபதிகளை ஒட்டுமொத்தமாக விசாரணை செய்யவேண்டும் என்று நீங்கள் முடிவுசெய்தபொழுது, எங்கள் குழுமம் நிறைவேற்று பீடமாகச் செயற்பட நேர்ந்தது. அத்தகைய விசாரணை சட்டவிரோதம் என்பதை பிறகு நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டீர்கள். அப்பொழுது நிறைவேற்று பீட உறுப்பினர்களுள் நான் மட்டுமே, நீங்கள் அரசியல்யாப்புக்கு மாறாகச் செயற்படக் கூடாது என்று வலியுறுத்தி, அந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்தேன். உங்கள் தலைவர்கள் அனைவரும் என்னைக் கைதுசெய்து கண்டிப்பதற்குத் தயாராக இருந்தும் கூட, அப்படியே செய்யும்படி நீங்கள் அனைவரும் உரத்த குரலில் அவர்களை ஏவியும் கூட, நான் சிறைக்கோ சாவுக்கோ அஞ்சி உங்கள் தவறான முடிபை ஆதரிப்பதை விடுத்து, சட்டத்தின் பக்கம் சாய்ந்து, நீதியின் பக்கம் சாய்ந்து, அதை எதிர்கொள்வது எனது கடமை என்று எண்ணினேன். நாங்கள் குடியாட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில்தான் அப்படி நடந்தது.
செல்வர்குழாம் ஆட்சியேற்ற பின்னர் கூட, முப்பது ஆணையாளர்களும் சலாமிஸ் நகரத்து லியோனுக்கு இறப்புத்தண்டனை நிறைவேற்றுவதற்காக, என்னையும் வேறு நால்வரையும் வட்டக் கூடத்துக்கு கூப்பிட்டு, அவரைக் கொண்டுவரும்படி அறிவுறுத்தினார்கள். அவர்கள் அத்தகைய அறிவுறுத்துரைகளை விடுத்த பல தடவைகளுள் அது ஒன்று என்பது உண்மையே. எத்தனை பேர்மீது பழிமுடிய முடியுமோ அத்தன பேர்மீது பழிமுடியும் கெட்ட நோக்குடன் அவர்கள் அறிவுறுத்துரைகளை விடுத்தார்கள். அப்பொழுதும் கூட இறப்பை நான் இம்மியும் பொருட்படுத்தவில்லை என்பதை எனது சொல்லால் அல்ல, செயலால் தெளிவுபடுத்தினேன். இறப்பை நான் இம்மியும் பொருட்படுத்தவில்லை என்பது ஒரு வலிய கூற்றல்ல என்றால் இப்படி எடுத்துக்கொள்ளுங்கள்: அதாவது, நான் பிழையான செயல் அல்லது கெட்ட செயல் எதையும் செய்யக் கூடாது என்பதையே பெரிதும் பொருட்படுத்தினேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள். அத்துணை அதிகாரம் படைத்த அரசாங்கத்துக்கு அஞ்சி ஒரு பிழையான செயலை நான் செய்யவில்லை. வட்டக் கூடத்தை விட்டு நாங்கள் வெளியேறிய பின்னர், மற்ற நால்வரும் சலாமிஸ் நகரத்துக்குப் போய் லியோனைக் கைதுசெய்தார்கள். நான் வீடு திரும்பினேன். அதனை அடுத்து அரசாங்கம் கவிழ்ந்திராவிட்டால், எனது செயலுக்காக நான் சாகடிக்கப்பட்டிருக்கக் கூடும். பலரும் எனது கூற்றுகளுக்குச் சான்று பகர்வார்கள்.
நான் பொதுவாழ்வில் இறங்கி, மானமுள்ள மனிதனாக இயங்கி, நேரிய குறிக்கோளைக் கைக்கொண்டு, உளச்சாட்சிக்கு அமைந்து மற்றெல்லாவற்றுக்கும் மேலாக அக்குறிக்கோளுக்கு முதன்மை அளித்திருந்தால், இவ்வளவு நீண்டகாலம் வாழ்ந்திருப்பேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? இவ்வளவு நீண்டகாலம் நான் வாழ்ந்திருக்க மாட்டேன், பெரியோர்களே! வேறெவரும் கூட வாழ்ந்திருக்க மாட்டார்கள். என் வாழ்நாள் முழுவதும் நான் ஆற்றிய பொதுவாழ்வுக் கடமைகள் எவற்றிலும், என்னை உறுதியுடன் அர்ப்பணித்ததை நீங்கள் கண்டுகொள்வீர்கள். எனது சொந்த வாழ்வுக்கும் அது பொருந்தும். வன்ம நோக்குடைய சிலரால் எனது மாணவர்கள் எனப்படுவோர் உட்பட எவருமே நீதிக்கு ஒவ்வாத செயலில் ஈடுபடுவதை என்றுமே நான் ஏற்றுக்கொண்டதில்லை. எவருடைய ஆசானாகவும் என்றுமே நான் அமர்ந்ததில்லை. எனினும் இளையோரோ, மூத்தோரோ எனது உரையாடலில், எனது சொந்தப் பணியில் நான் ஈடுபடுவதைச் செவிமடுக்க ஆவல் கொண்டால், அவர்களுக்கு வாய்ப்பளிக்க என்றுமே நான் தயங்கியதில்லை. அவர்களுடன் கதைப்பதற்கு நான் கட்டணம் அறவிட்டதுமில்லை, கட்டணமின்றிக் கதைக்க மறுத்ததுமில்லை. செல்வந்தரையும், வறியோரையும் சரிநிகராக நோக்கி வினாக்களுக்கு விடையளிக்க நான் தயாராக இருக்கிறேன். அதேபோல, எவராவது நான் கூறுவதைச் செவிமடுத்து, எனது வினாக்களுக்கு விடையளிக்க விரும்பினால், அதற்கும் நான் தயாராக இருக்கிறேன். நான் என்றுமே எவர்க்கும் எதையும் புகட்டவுமில்லை, புகட்ட வாக்குறுதி அளிக்கவுமில்லை. ஆதலால் இவர்களுள் எவரும் நல்ல குடிமகனாகவோ, கெட்ட குடிமகனாகவோ மாறினால் அதற்கு என்னைப் பொறுப்பாளி ஆக்குவது தகாது. மற்றவர்கள் அனைவருக்கும் கிடைக்காத எதையும் என்றாவது என்னிடம் கற்றுக்கொண்டதாகவோ, அந்தரங்கமாகக் கேட்டறிந்த்தாகவோ எவராவது வலியுறுத்தினால், அவர் உண்மை கூறவில்லை என்று நீங்கள் மிகவும் உறுதியாக நம்பலாம்.
சிலர் என்னுடன் நெடும்பொழுது கழிப்பதில் இன்பம் துய்ப்பது எங்ஙனம்? பெரியோர்களே, அதற்கான காரணத்தை நானே உளந்திறந்து கூறியது உங்கள் காதில் விழுந்திருக்கிறது. தங்களை ஞானவான்கள் என்று கருதும் அஞ்ஞானிகளை நான் ஆய்விடக் கேட்டு அவர்கள் இன்புறுகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு கேளிக்கையான அனுபவமும் கூட.
நான் கூறியவாறு இறைவாக்குகள், கனவுகள் ஊடாகவும், வேறு தெய்வ நிர்ணய வழி எதன் ஊடாகவும் மனிதனுக்கு ஒரு கடமை உணர்த்தப்படுகிறதோ அந்த வழி ஒவ்வொன்றின் ஊடாகவும் எனக்கு இடப்பட்ட இறையாணைக்கு அடிபணிந்து நான் ஏற்றுக்கொண்ட கடமை அது. இது எளிதில் நிச்சயிக்கக்கூடிய மெய்யான கூற்று, பெரியோர்களே! இளையோருள் சிலரை நான் கெடுத்துவருவது உண்மை என்றால், மற்றவர்களைக் கெடுப்பதில் ஏற்கெனவே நான் வெற்றி பெற்றுள்ளேன் என்றால், இப்பொழுது வளர்ந்துள்ள இம்மற்றவர்களுள் சிலர் தமது இளமைக் காலத்தில் எப்பொழுதாவது நான் தகாத புத்திமதி கூறியதைப் பின்னர் கண்டுபிடித்திருந்தால், அவர்கள் இப்பொழுது கட்டாயமாக முன்வந்து என்னைக் கண்டித்திருக்கவும், தண்டித்திருக்கவும் வேண்டும் அல்லவா? அவர்கள் தாமாக அப்படிச் செய்ய விரும்பாவிட்டாலும் கூட, அவர்களது குடும்பத்தவர்களுள் சிலர் - அவர்களது தந்தையர், உடன்பிறந்தார், சுற்றத்தார் – தமது உறவினர்க்கு நான் இழைத்த தீங்கினை இப்பொழுது நினைந்து நடவடிக்கை எடுப்பதை நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள் அல்லவா?
அவர்களுள் பெருந்தொகையானோர் போகடிபோக்காக இந்த நீதிமன்றத்துக்கு வந்திருப்பது எனது கண்களுக்குத் துலக்கமாகத் தெரிகிறது. முதலாவதாக அதோ கிறித்தோ, என் வயதினர், நெருங்கிய அயலவர், இளைஞன் கிறித்தொபியூலசின் தந்தை; இதோ ஈசையின்சின் தந்தை, ஸ்வீட்டஸ் நகரத்து லைசானியாஸ்; அதோ எபியீனிசின் தந்தை, செவிசஸ் நகரத்து அந்திபோன்; இனி எங்கள் வட்டத்தைச் சேர்ந்தவர்களின் சகோதரர்கள் அனைவரும் வந்திருக்கிறார்கள்; இதோ தியொசொதைசின் மகன் நிக்கொஸ்ராட்டஸ்; அதோ தியொடொட்டசின் சகோதரன்; அவரால் தியொடொட்டசைத் தடுக்க முடியாது; ஏனென்றால் தியொடொட்டஸ் இப்பொழுது உயிருடன் இல்லை; இதோ டெமொடக்கசின் மகன் பரலஸ்; மறைந்த தியகேஸ் அவருடைய சகோதரன்; அதோ அரிஸ்டனின் மகன் அடிமன்டஸ்; இதோ அடிமன்டசின் சகோதரன் பிளேட்டோ; அதோ ஏந்தோரஸ், இதோ அவரது சகோதரன் அப்போலோதரஸ்.
இன்னும் பலரின் பெயர்களை என்னால் கூறமுடியும். அவர்களுள் சிலரை மெலிட்டஸ் தனது பேச்சில் சாட்சிகளாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதை என்னால் மிகவும் உறுதிபடக் கூறமுடியும். தனது பேச்சில் சாட்சிகளைக் குறிப்பிட அவர் மறந்துபோனார் என்றால், இப்பொழுது குறிப்பிடட்டும்! அவருக்கு நான் வழிவிடுகிறேன். இங்கு முன்னிறுத்துவதற்கு அத்தகைய சாட்சிகள் எவரும் அவரிடம் உண்டா என்பதை அவர் கூறட்டும்! மாறாக, பெரியோர்களே, தமது பேரன்புக்குரிய உற்றார், உறவினரைக் கெடுத்த தீய மேதாவி என்று மெலிட்டசும், அனைட்டசும் பழிதூற்றும் எனக்குத் துணைநிற்க அவர்கள் அனைவரும் தயாராக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். எனது கேடுகெட்ட செல்வாக்கிற்கு மெய்யாகவே இரையானோர் எனக்குத் துணைநின்றால், அவர்களை மன்னிக்கலாம் அல்லவா? ஆனால், அவர்களின் வயதுமுதிர்ந்த உறவினர்கள், என்னால் கெடுக்கப்படாதவர்கள், எனக்குத் துணைநிற்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? மெலிட்டஸ் கூறுவது பொய், நான் கூறுவது மெய் எனும் தகுந்த நேரிய காரணத்தை விட வேறென்ன காரணம் இருக்க முடியும்?
இதுவே, பெரியோர்களே, நான் முன்வைக்கக்கூடிய பதில்வாதத்தின் சாரம். அத்துடன் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம். அதைக் கேட்டு உங்களுள் எவரும் தனது சொந்த வழக்கு எதையும் நினைந்து எரிச்சலடையலாம். உங்களுள் ஒருவர் நடுவர்களின் முன்னிலையில் இதைவிடக் கடுமை குறைந்த விசாரணையை எதிர்கொள்கையில் கண்கலங்கி, அவர்களை இயன்றவரை இரங்க வைப்பதற்காகத் தனது குழந்தைகளையும், உறவினர்கள் - நண்பர்கள் பலரையும் நீதிமன்றில் வெளிப்படவைத்து, ஈனத்தனமாக மன்றாடியிருக்கலாம். மாறாக நானோ, உயிராபத்தாகத் தென்படக்கூடிய இப்பேராபத்தை எதிர்நோக்கியும் கூட, அப்படி எதுவும் செய்ய எண்ணவில்லை. உங்களுள் ஒருவர் இந்த விவரங்களைச் சிந்தித்துப்பார்த்து, தனது சிந்திப்புகளால் எரிச்சலடைந்து, எனக்கெதிராகப் பக்கம்சாய்ந்து, வெகுண்டெழுந்து வாக்களிக்கக் கூடும். உங்களுள் எவரும் அப்படிச் செய்ய முற்படுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை; ஆனாலும் அப்படிச் செய்ய வாய்ப்புண்டு; அப்படி என்றால், அவரிடம் நான் இப்படிக் கூறுவதில் பெரிதும் நியாயம் உண்டு: அன்புடையீர், எனக்கும் குடும்பத்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஹோமர் கூறியதுபோல், நான் "கருவாலி மரத்திலிருந்தோ, கரும்பாறையிலிருந்தோ" உதிக்கவில்லை. என்னைப் பெற்றோர் மானுடப் பிறவிகளே! ஆதலால், பெரியோர்களே, எனக்கும் குடும்பத்தவர்கள் உண்டு. ஆம், மூன்று புதல்வர்கள். ஒருவன் ஏறக்குறைய வளர்ந்துவிட்டான். மற்ற இருவரும் சிறுவர்கள். ஆனாலும் அவர்களை இங்கு முன்னிறுத்தி, என்னை விடுதலை செய்யும்படி நான் மன்றாடப் போவதில்லை.
அப்படி எதையும் செய்ய நான் ஏன் எண்ணவில்லை? வக்கிரத்தனம் கொண்டல்ல, பெரியோர்களே! உங்களை அவமதிக்க எண்ணியுமல்ல. எனக்கு இறப்பை எதிர்கொள்ளும் தீரம் உண்டா இல்லையா என்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை. எனக்கு கிடைத்த பெயர் மெய்யாகலாம், பொய்யாகலாம். எனினும் மானுடரின் பொதுவான போக்கிலிருந்து சாக்கிரத்தீஸ் வேறுபட்டவன் என்று கொள்ளப்படுகிறான். அந்த வகையில் நான் இந்த வயதில் மேற்படி முறைகள் எவற்றையும் பயன்படுத்துவது எனது சொந்தப் பெயருக்கும், உங்கள் பெயருக்கும், முழு அரசின் பெயருக்கும் தகும் என்று எண்ணவில்லை.
உங்களுள் ஞானத்துக்கோ, தீரத்துக்கோ, வேறு அறம் எதற்குமோ பேரெடுத்தோர் அப்படி எல்லாம் நடந்துகொள்வது வெட்கக்கேடு. இத்தகைய சிலர் விசாரணைக்கு உள்ளாகும் வேளைகளில் தமது மேன்மையைத் துறந்து மட்டுமீறி மன்றாடுவதை நான் அடிக்கடி அவதானித்திருக்கிறேன். உயிரிழப்பது அவர்களுக்குப் பயங்கரமாய்த் தெரிவதை இது காட்டுகிறது; அவர்களுக்கு நீங்கள் இறப்புத் தண்டனை விதிக்காவிட்டால், அவர்கள் இறவாப்பேறு பெற்றுவிடுவார்கள் என்பது போல!
இத்தகையோர் எங்கள் மாநகரத்தின் மானத்தைக் கெடுப்பவர்கள் என்றே நான் கருதுகிறேன். அதென்சு மாநகரத்தின் குடிமக்கள் தம்மை ஆள்வதற்கும், மற்றும் பிற உயர்பதவிகளை வகிப்பதற்கும் தகுதிவாய்ந்த ஆடவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். எங்கள் ஆடவர்களுள் மணிமுத்துக்கள் எனத்தக்க அவர்களை இங்கு வந்துசெல்வோர் வெறும் பெண்டிரெனக் கருதினால், அவர்களை மன்னிக்கலாம். பெரியோர்களே, உங்கள் மானம் கடுகளவானாலும் கூட, மேற்படி முறைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு நீங்கள் தாழ்ந்துவிடக் கூடாது. நாங்கள் அப்படிச் செய்வதையும் நீங்கள் அனுமதிக்கக் கூடாது. மாறாக, வாயை மூடிக்கொண்டிருக்கும் ஒருவரை விட, எங்கள் மாநகரத்தைப் பிறர் எள்ளிநகையாடும் வண்ணம் ஈனத்தனமான காட்சிகளை அரங்கேற்றும் எவரும் தண்டிக்கப்பட அதிக வாய்ப்புண்டு என்பதை நீங்கள் அடித்துக்கூற வேண்டும்.
பெரியோர்களே, பாசாங்குகள் பற்றிய சங்கதி முழுவதும் ஒருபுறம் இருக்கட்டும்! நடுவர்களிடம் ஒருவன் மன்றாடுவதும், மன்றாடி விடுதலை பெறுவதும் தகும் என்று நான் நினைக்கவில்லை. அவர்களிடம் அவன் விவரங்களை முன்வைத்து வாதாடி நம்பச்செய்ய வேண்டும். நடுவர்கள் தயவு காட்டுவது நீதிபாலிப்பதாகாது. தாம் துணிந்தவாறு தயவு காட்டுவதற்கு அவர்கள் சூளுரைக்கவில்லை. எது நீதி என்பதையே அவர்கள் தீர்மானிக்க வேண்டும். நீதிநியாயப்படி, சட்டதிட்டப்படி தீர்ப்பளிக்கவே அவர்கள் சூளுரைத்துள்ளார்கள். இதிலிருந்து பெறப்படுவது என்னவென்றால், உங்களிடையே பொய்ச்சாட்சியம் மேலோங்க நாங்களும் விடக்கூடாது, நீங்களும் விடக்கூடாது; விட்டால் எங்கள் இரு தரப்புகளுக்கும் பழிபாவம் விளையும்.
ஆதலால், பெரியோர்களே, நான் மானமிழந்து, நெறிபிறழ்ந்து, எனது ஆன்மீகக் கடமைதிறம்பி உங்களிடம் மன்றாடுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, நான் கடவுட்பற்று அற்றவன் என்று மெலிட்டசால் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டு நிற்கும்பொழுது, நீங்கள் அதை எதிர்பார்க்கக் கூடாது. நீங்கள் பற்றுறுதியுடன் இட்ட சூளுரையை மீறும்படி நான் உங்களிடம் கெஞ்ச முயன்றால், உங்களைத் தூண்ட முயன்றால், ஆன்மீக நெறியை அவமதிக்கும்படி நானே உங்களுக்குப் போதிப்பதாகப் புலப்படுதல் திண்ணம். அத்தகைய பதில்வாதத்தின் ஊடாக நான் ஆன்மீக நம்பிக்கை அற்றவன் என்று என்னை நானே குறஞ்சாட்டுவதாகப் புலப்படும். ஆனால் அதில் கொஞ்சமும் உண்மை இல்லை. பெரியோர்களே, என்மீது குற்றஞ்சுமத்தியோரை விட எனக்கு ஆன்மீக நெறியில் மிகவும் உளமார்ந்த நம்பிக்கை உண்டு. இனி, எனக்கும் உங்களுக்கும் சிறந்த பெறுபேறு கிடைக்கும் வண்ணம் எனது பதில்வாதத்தைச் சீர்தூக்கிப் பார்க்கும் பொறுப்பை நான் உங்களிடமும் கடவுளிடமும் விட்டுவிடுகிறேன்.
500 நடுவர்களின் தீர்ப்பு
குற்றவாளி: 280 வாக்குகள்
நிரபராதி: 220 வாக்குகள்
பெரியோர்களே, இப்பெறுபேறு குறித்து, நீங்கள் என்னைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது குறித்து, நான் வருத்தப்படவில்லை. அதற்குப் பற்பல காரணங்கள் உண்டு. தலையாய காரணம், இது எதிர்பார்க்கப்படாத பெறுபேறு அல்ல. அதேவேளை, எனக்குச் சார்பாகவும் எதிராகவும் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையே என்னை வியக்க வைக்கிறது. எண்ணிக்கை வேறுபாடு இவ்வளவு குறுகும் என்று நான் என்றுமே நம்பியிருக்கவில்லை. வெறுமனே 30 வாக்குகள் மாறி விழுந்திருந்தால், நான் விடுதலை செய்யப்பட்டிருப்பேன் என்பது இப்பொழுது தெரிகிறது. எவ்வாறாயினும், மெலிட்டசின் குற்றச்சாட்டிலிருந்து நான் விடுவிக்கப் பட்டுள்ளதாகவே கருதுகிறேன். அது மாத்திரமன்று; அனைட்டசும், லைக்கனும் என்மீது குற்றஞ்சுமத்த முன்வந்திராவிட்டால், 1/5 வாக்குகளைப் பெறத்தவறியதற்கு தனது 1,000 வெள்ளி கட்டுப்பணத்தை மெலிட்டஸ் இழந்திருப்பார்.
*
சாக்கிரத்தீசுக்கு இறப்புத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது மெலிட்டசதும் மற்ற இருவரதும் கோரிக்கை. சாக்கிரத்தீசின் மாற்றுக் கோரிக்கை:
*
மெத்த நல்லது, பெரியோர்களே! எனக்கு இறப்புத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று மெலிட்டஸ் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு எத்தகைய மாற்றுக் கோரிக்கையை நான் முன்வைக்க வேண்டும்? தகுந்த மாற்றுக் கோரிக்கையை நான் முன்வைக்க வேண்டும் என்பது வெளிப்படை. சரி, நான் செய்த வேலைக்கு நான் என்ன தண்டம் செலுத்த வேண்டும் அல்லது நான் என்ன தண்டனை அனுபவிக்க வேண்டும்?
நான் என்றுமே வழமையான, அமைதியான வாழ்வு வாழ்ந்ததில்லை. எங்கள் மாநகரத்தில் பெரும்பாலோர் அக்கறை கொள்ளும் சங்கதிகளில், பணம் சம்பாதிப்பதில், வசதியான வீடுவளவு தேடிக்கொள்வதில், படைத்துறையில் அல்லது குடித்துறையில் உயர்பதவி வகிப்பதில், மற்றும் பிற அலுவல்களில், அரசியல் நியமனங்களில், தலைமறைவுச் சமாசங்களில், கட்சி அமைப்புகளில் நான் அக்கறை கொண்டதில்லை. உயிர்வாழ்வதை விட எனது நெறிகளிலேயே நான் மிகவும் அக்கறை கொண்டிருந்தேன். எனது நெறிகளிலேயே நான் கருத்தூன்றி இருந்ததாக நினைத்தேன். ஆதலால் உங்களுக்கோ எனக்கோ நலம் பயக்காத நெறி எதையும் மேற்கொள்வதை விடுத்து, உங்களுக்கு தனித்தனியாக, அந்தரங்கமாகப் புரியக்கூடிய மாபெரும் பணி என்று நான் கருதும் பணியை ஆற்றத் தலைப்பட்டேன். உளநலத்தையும் அறநலத்தையும் விட நடைமுறை அனுகூலங்களை அதிகம் கருத்தில் கொள்ளாதிருக்க உங்கள் ஒவ்வொருவரையும் நான் தூண்ட முயன்றேன். பொதுவாக அரசு விடயத்தில் அல்லது வேறு விடயம் எதிலும் அனுகூலத்தை விட நன்னலத்தை அதிகம் கருத்தில் கொள்ள உங்கள் ஒவ்வொருவரையும் நான் தூண்ட முயன்றேன்.
இப்படி நடந்து கொண்டதால், நான் எதைப் பெறும் தகுதி உடையவன்? அதை நானே தெரிவிக்க வேண்டும் என்றால், எனக்குத் தகுந்த கைமாறு ஏதாவது என்று வைத்துக்கொள்ளுங்கள், பெரியோர்களே! அதைவிட அதிகமாக வேறு எதுவுமில்லை. சரி, பொதுநலம் புரிந்த ஓர் ஏழைக்கு, அறநெறிநிற்க உங்களை ஊக்குவித்த ஓர் ஏழைக்கு, ஓய்வில் திளைக்க வேண்டிய ஓர் ஏழைக்குத் தகுந்த கைமாறு என்ன? அரசின் செலவில் இலவச பராமரிப்பை விட மிகவும் தகுந்த கைமாறு வேறெதுவும் இருக்க முடியாது. ஒலிம்பிய பந்தயத்தில் ஒரு குதிரை கொண்டு, அல்லது ஒரு சோடி குதிரைகள் கொண்டு, அல்லது நான்கு குதிரைகள் கொண்டு ஓடி வெற்றிவாகை சூடிய எவரையும் விட இந்த ஏழைக்கே அதைப் பெறும் தகுதி மிகவும் அதிகம். இவர்கள் உங்களுக்கு வெற்றியின் சாயலை அளிப்பவர்கள். நானோ உங்களுக்கு மெய்ம்மையை அளிப்பவன். அவர்களுக்கு பராமரிப்பு தேவையில்லை. எனக்கே அது தேவை. ஆதலால், கண்டிப்பான நீதிநெறிப்படி தகுந்த தண்டத்தை நானே முன்வைக்க வேண்டும் என்றால், அரசின் பராமரிப்பையே நான் முன்வைக்கிறேன்.
இப்படிக் கூறும்பொழுது நான் வேண்டுமென்றே வக்கிரத்தனம் காட்டுவதாக நீங்கள் எண்ணக்கூடும். நடுவர்களைப் பரிவுகொள்ள வைப்பதற்காக உணர்ச்சிததும்ப மன்றாடுவது பற்றி நான் ஏற்கெனவே கருத்துரைத்த பொழுதும் இப்படிக் கூறியிருந்தேன். இது வக்கிரத்தனம் அல்ல, பெரியோர்களே! இதுவே எனது உண்மையான நிலைப்பாடு: நான் வேண்டுமென்றே எவருக்கும் தீங்கிழைக்கவில்லை என்று உறுதிபட நம்புகிறேன். ஆனால் நீங்கள் அதை நம்பும்படி செய்ய என்னால் முடியாது. காரணம், நாங்கள் கலந்துரையாடுவதற்கு கிடைத்த அவகாசம் மிகவும் குறுகியது. பிறநாடுகளில் ஒதுக்கப்படுவது போல் இறப்புத் தண்டனைக்குரிய வழக்கு விசாரணைகளுக்கு ஒரு நாள் அல்ல, பல நாட்களை ஒதுக்கும் வழக்கத்தை நீங்கள் கைக்கொண்டிருந்தால், உங்களை என்னால் நம்பவைக்க முடிந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கிடைக்கும் குறுகிய அவகாசத்துள் பாரதூரமான குற்றச்சாட்டுகளை முறியடிப்பது எளிதல்ல.
நான் எவருக்கும் தீங்கிழைப்பதில்லை என்று உறுதிபட நம்புகிறேன். எனவே நான் ஏதாவது கெடுதிக்கு உள்ளாக வேண்டியவன் என்று வலியுறுத்துவதன் ஊடாகவோ, மாற்றுத் தண்டனையை முன்மொழிவதன் ஊடாகவோ எனக்கு நானே தீங்கிழைப்பேன் என்று கொஞ்சமும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. நான் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? மெலிட்டஸ் முன்மொழியும் (இறப்புத்) தண்டனைக்கு உள்ளாக அஞ்சியா? அது நல்லதா கெட்டதா என்பது எனக்குத் தெரியாது என்று கூறினேனே! மாற்று முன்மொழிவை இடுவதன் ஊடாக, கெட்டது என்று எனக்கு நன்கு தெரிந்த ஏதோ ஒன்றை நான் தேர்ந்துகொள்வேன் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? சிறைவாசம்? எனது வாழ்நாளை நான் ஏன் சிறையில் கழிக்க வேண்டும்? அவ்வப்பொழுது அமர்த்தப்படும் சிறை அதிகாரிகளுக்கு நான் ஏன் அடிபணிய வேண்டும்? அபராதம்? அபராதம் செலுத்தும்வரை சிறைவாசம்? என்னைப் பொறுத்தவரை அபராதமும் சிறையும் ஒரே தாக்கத்தையே விளைவிக்கும். காரணம், அபராதம் செலுத்த என்னிடம் வக்கில்லை. என்னை நாடுகடத்தும்படி நான் யோசனை கூறவேண்டுமா? அந்த யோசனையை நீங்கள் பெரிதும் ஏற்கக்கூடும்.
பெரியோர்களே, அப்படிச் செய்வதற்கு நான் வாழ்வில் கடுங்காதல் கொண்டவனாக இருக்க வேண்டும். எனது சக குடிமக்களாகிய நீங்கள் எனது வாதங்களையும், உரையாடல்களையும் செவிமடுத்து, உங்கள் பொறுமையின் எல்லைக்கு வந்துவிட்டீர்கள் என்பதைக் கண்டுகொள்ள முடியாத குருடன் அல்ல நான். அவை உங்களுக்கு ஆக்கினையும் எரிச்சலும் ஊட்டியது கண்டு, அவற்றை இப்பொழுது நீங்கள் ஒழித்துக்கட்ட முயல்கிறீர்கள். பிறநாட்டு மக்கள் எவர்க்கும் அவற்றைச் சகித்துக்கொள்வது எளிதாகுமா? அதற்குப் பெரிதும் வழியில்லை, பெரியோர்களே!
நான் இந்த வயதில் இந்த நாட்டைத் துறந்து, மாநகரத்துக்கு மாநகரம் பெயர்ந்து, ஒவ்வொரு தடவையும் விரட்டப்பட்டவனாக எஞ்சிய எனது வாழ்நாளைக் கழிக்க நேர்வது எத்துணை சிறந்த வாழ்வு! எனது உரையாடலை இளையோர் இங்கு செவிமடுப்பது போல் நான் செல்லும் இடமெல்லாம் செவிமடுப்பார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். நான் அவர்களை அப்புறப்படுத்த முயன்றால், தமது மூத்தோரைக் கொண்டு என்னை அவர்கள் விரட்டியடிப்பார்கள். நான் இளையோரை அப்புறப்படுத்தாவிட்டால், இளையோர் நலன்கருதி அவர்களது தந்தையரும் மற்றும் பிற உறவினரும் தாமாகவே முன்வந்து என்னை விரட்டியடிப்பார்கள்.
"ஆனாலும், சாக்கிரத்தீஸ், நீ எங்களைத் துறந்த பிறகு உன் சொந்த அலுவலில் புலனைச் செலுத்தி எஞ்சிய உன் வாழ்நாளை அமைதியாகக் கழிக்க முடியும் என்பது உறுதி அல்லவா?" என்று எவராவது வினவக்கூடும்.
உங்களுள் சிலருக்கு மற்றெல்லாவற்றையும் விட இதைப் புரியவைப்பது மிகவும் கடினம். நான் "எனது சொந்த அலுவலில் புலனைச் செலுத்த முடியாது;" காரணம், அது கடவுள் இட்ட ஆணைக்குப் பணிய மறுப்பதாகும் என்று நான் கூறினால், நான் கருத்தூன்றித்தான் அப்படிக் கூறுகிறேன் என்பதை நீங்கள் நம்பமாட்டீர்கள். மறுபுறம், நன்னலம் குறித்தும், உங்கள் காதில் விழும் வண்ணம் நான் பேசும் மற்றெல்லா விடயங்கள் குறித்தும், என்னையும் பிறரையும் நான் ஆராயும் விடயங்கள் குறித்தும் ஒவ்வொரு நாளும் தவறாது ஆராய்வதே ஒரு மனிதன் செய்யக்கூடிய தலைசிறந்த செயல்; அவ்வாறு ஆராயாது வாழும் வாழ்வு ஒரு வீண் வாழ்வு என்று நான் உங்களிடம் கூறினால், நீங்கள் இன்னும் குறைவாகவே என்னை நம்ப முனைவீர்கள்.
உங்களை நம்பவைப்பது எளிதல்ல, பெரியோர்களே! எனினும் நிலைமை அதுவே. அதை ஏற்கெனவே நான் வற்புறுத்திக் கூறினேன். அத்துடன், நான் தண்டிக்கப்பட வேண்டியவன் என்று கருதும் வழக்கம் என்னிடம் இல்லை. என்னிடம் பணம் இருந்தால், நான் செலுத்தக்கூடிய அபராதத்தை தெரிவித்திருப்பேன். அபராதம் செலுத்துவதால் எனக்கு எதுவித தீங்கும் விளையாது. என்னிடம் பணம் இல்லாதபடியால், அபராதத்தை என்னால் நிர்ணயிக்க முடியாது. ஆனாலும், நீங்கள் விரும்பினால், நான் செலுத்தக்கூடிய அபராதத்தை நீங்களே நிர்ணயிக்கலாம். என்னால் 1 மினா (65 வெள்ளி) செலுத்த முடியும் என்று நினைக்கிறேன். ஆம், எனக்கு ஒரு மினா கட்டணம் விதிக்கவும்!
ஒரு நொடி பொறுத்துக்கொள்ளுங்கள், பெரியோர்களே! இங்கே பிளேட்டோ, கிறித்தோ, கிறித்தோபியூலஸ், அப்போலோதொரஸ் கூடி, தமது பொறுப்பில் 30 மினா கட்டணம் செலுத்தும் யோசனையை முன்வைக்கும்படி கேட்கிறார்கள். மெத்த நல்லது, பெரியோர்களே, அவ்வளவு தொகை செலுத்த நான் உடன்படுகிறேன். கொடுப்பனவுப் பொறுப்பை இவர்களிடம் சுமத்தவும்.
500 நடுவர்களின் தீர்ப்பு: இறப்புத் தண்டனையை
ஆதரித்து 360 வாக்குகள்
எதிர்த்து 140 வாக்குகள்
நல்லது, பெரியோர்களே, ஒரு குறுகியகால வெற்றிக்காக சாக்கிரத்தீசை, "அந்த ஞானவானை," சாகடித்த புகழையும், எங்கள் மாநகரத்தை இகழ விரும்புவோர் சுமத்தும் பழியையும் நீங்கள் ஈட்டப் போகிறீர்கள். நான் ஞானமற்றவன் என்றாலும் கூட, உங்களைக் குறைகூற விரும்புவோர் என்னை ஞானவான் என்றே கூறுவார்கள். இன்னும் கொஞ்சக்காலம் நீங்கள் தாமதித்திருந்தால், இயற்கை வழியிலேயே உங்கள் எண்ணம் கைகூடியிருக்கும். நான் பெரிதும் வாழ்ந்து முடிந்து, மாளும் வயது நெருங்குவதை உங்களால் காண முடிகிறதே! இதை உங்கள் எல்லோருக்கும் நான் கூறவில்லை; எனது இறப்புத் தண்டனைக்கு வாக்களித்தவர்களுக்கே கூறுகிறேன். அவர்களுக்கு நான் வேறொன்றையும் கூறவேண்டியுள்ளது:
பெரியோர்களே, எனது விடுதலையை ஈட்டிக்கொள்வதற்கு வேண்டிய அனைத்தையும் சொல்வதும், செய்வதும் தகும் என்று நான் எண்ணியிருந்தால் எத்தகைய வாதங்களைக் கையாண்டிருப்பேனோ அத்தகைய வாதங்களைக் கையாளாதபடியால் நான் குற்றத்தீர்ப்புக்கு உள்ளானதாக நீங்கள் கருதுகிறீர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது சற்றும் உண்மை அல்ல. வாதங்கள் அற்றநிலையில் நான் குற்றத்தீர்ப்புக்கு உள்ளாகவில்லை. அகந்தையும் துடுக்கும் அற்ற நிலையிலேயே நான் குற்றத்தீர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறேன். உங்களுக்குப் பேரின்பம் பயக்கும் வண்ணம் உங்களை விளித்து நான் உரையாற்ற மறுத்தேன். நான் சொல்லவும் செய்யவும் தகாதவை என்று கொள்பவை அனைத்தையும் கூறி, மற்றவர்களிடம் நீங்கள் கேட்டுப் பழகியவை அனைத்தையும் கூறி அழுது புலம்புவதைக் கேட்க நீங்கள் ஆசைப்பட்டிருப்பீர்கள். எனினும் ஆபத்தை எதிர்நோக்கிய காரணத்துக்காக நான் கூனிக்குறுகி மண்டியிட வேண்டும் என்று அப்பொழுது நான் நினைக்கவுமில்லை; எனது பதில்வாதத்தை நான் முன்வைத்த விதம் குறித்து இப்பொழுது நான் வருந்தவுமில்லை. வேறு வகையான பதில்வாதத்தின் பெறுபேறாக வாழ்வதை விட, இத்தகைய பதில்வாதத்தின் பெறுபேறாக மாள்வதையே நான் பெரிதும் விரும்புகிறேன்.
போர்க்களத்தைப் போலவே நீதிமன்றத்திலும் நானோ பிறரோ எந்த வழியிலும் உயிர்தப்புவதற்காக அவரவர் சாமர்த்தியத்தைப் பயன்படுத்தக் கூடாது. போர்க்களத்தில் உங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, உங்களைப் பின்தொடரும் எதிரிகளிடம் மண்டியிட்டு, நீங்கள் உயிர்தப்பி ஓடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது தெரிந்ததே. நீங்கள் உளவுறுத்தலின்றி நெறிபிறழ்வோர் என்றால், எல்லா வகையான ஆபத்துகளிலிருந்தும் உயிர்தப்பி ஓடுவதற்கு பெருமளவு உபாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். உயிர்தப்பி ஓடுவது அத்துணை கடினமல்ல, பெரியோர்களே! தவறிழைக்காமல் தப்பியோடுவதே மிகவும் கடினம். மிகவும் வேகம்கூடிய ஓட்டம் அது! தற்போதைய ஓட்டப் பந்தயத்தில் பங்குபற்றும் இரு அணிகளுள் வேகம்குறைந்த என் முதிய அணியை வேகம்குன்றிய அணி தாண்டிவிட்டது. என்மீது குற்றஞ்சுமத்தியோர் விரைவாகவும் கெட்டித்தனமாகவும் ஓடவல்லவர்கள். எனினும் வேகம்கூடிய அநீதி அவர்களைத் தாண்டிவிட்டது.
உங்களால் இறப்புத் தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக இந்த நீதிமன்றத்தை விட்டு நான் புறப்படப் போகிறேன். அவர்கள் வன்மமும் வக்கிரத்தனமும் புரிந்த குற்றவாளிகள் என்று மெய்யுலகினால் தீர்ப்பளிக்கப்பட்டவர்களாகப் புறப்படப் போகிறார்கள். எனது தண்டனையை நான் ஏற்கும் அதேவேளை தமது தண்டனையை அவர்கள் ஏற்பார்கள். அப்படி நிகழ்தல் திண்ணம்; அதில் ஐயமில்லை; இது பெரிதும் செவ்விய பெறுபேறு என்றே கருதுகிறேன்.
இறக்குந்தறுவாயில் நிற்கும் நான், மானுடர்க்கு தீர்க்கதரிசனம் எனும் கொடை கைகூடும் தறுவாயில் நிற்கும் நான், எனக்கெதிராக வாக்களித்த உங்களுக்கு, என்னைச் சாகடிக்கும் உங்களுக்குச் சொல்வேன்: நான் இறந்தவுடன், வஞ்சம் உங்களைத் தாக்கும்; நீங்கள் என்னைக் கொல்வதை விடவும் வேதனைமிகுந்த தண்டனையை உங்களுக்கு அளிக்கும். என்னைச் சாகடிப்பதன் ஊடாக உங்கள் நடத்தைக்கு நீங்கள் கண்டனத்துக்கு உள்ளாகாமல் தப்பலாம் என்ற நம்பிக்கையில் என்னைச் சாகடிக்கத் தீர்மானித்தீர்கள். அதன் பெறுபேறு எதிர்மாறாய் அமையப் போகிறது. உங்களை இன்னும் பலர் கண்டிக்கப் போகிறார்கள். உங்களுக்குத் தெரியாமலேயே அவர்களை இதுவரை நான் கட்டுப்படுத்தி வைத்துள்ளேன். அந்த இளைஞர்கள் உங்களுடன் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளப் போகிறார்கள். உங்களுக்கு மிகவும் எரிச்சலூட்டப் போகிறார்கள். ஆட்களைச் சாகடிப்பதன் ஊடாக உங்கள் தகாத வாழ்க்கைப் போக்கிற்கு எதிரான கண்டனத்தை முடக்கலாம் என்று நீங்கள் எதிர்பார்த்தால், உங்கள் நியாய விளக்கத்தில் ஏதோ ஒரு தவறுண்டு என்பது பெறப்படுகிறது. இவ்விதமாக நீங்கள் தப்பிக்கொள்வது கைகூடப் போவதில்லை; அதைப் பிறர் மெச்சப் போவதில்லை. மற்றவர்களின் வாயைப் பொத்தாமல், உங்களால் இயன்றவரை உங்களை நல்லவர்களாக மாற்றிக்கொள்வதே மிகவும் எளிதான தலைசிறந்த வழி. இதுவே என்னைச் சாகடிக்க வாக்களித்தவர்களுக்கு நான் விடுக்கும் இறுதிச் செய்தி.
அதிகாரிகள் தமது அலுவல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். நான் சாகவேண்டிய இடத்துக்குப் புறப்பட இன்னும் நேரம் இருக்கிறது. ஆதலால் என்னை விடுதலைசெய்ய வாக்களித்த உங்களுக்கும் ஒருசில சொற்களை உதிர்க்க விரும்புகிறேன்: பெரியோர்களே, வழக்கின் பெறுபேற்றை ஏற்றுகொள்ளுங்கள்! கிடைத்த சில நொடிகளில் என்னைத் திளைக்க விடுங்கள்! சட்டம் அனுமதிக்கும் இத்தருணத்தைப் பயன்படுத்தி நாங்கள் உரையாடி மகிழக்கூடாது என்பதற்கு எதுவித நியாயமும் இல்லை. உங்களை என் நண்பர்களாகவே நான் நோக்குகிறேன். எனது தற்போதைய நிலைமையைச் சரிவர விளங்கிக்கொள்ளும்படி உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
நடுவர்-குழாத்துப் பெருமக்களே! நீங்கள் அப்படி விளிக்கப்பட வேண்டியவர்களே! எனக்கு கிடைத்துள்ள பட்டறிவு வியக்கத்தக்கது. கடந்த காலத்தில் நான் செவிமடுத்துப் பழகிய தெய்வக்குரல், என்றென்றும் என்னுடன் கூடி வலம்வந்தது. மிகவும் அற்ப விடயங்களில் கூட நான் தவறாக வழிநடக்கத் தலைப்பட்டால், என்னை அது தடுத்தாட்கொண்டு வந்தது. இப்பொழுது எனக்கு ஏதோ நடந்துவிட்டது; நீங்களும் அதைக் காண முடிகிறதே! அதைப் பேரிடி என்று கருதலாம்; பெரிதும் பேரிடி என்றே கொள்ளப்படுகிறது.
இன்று காலை வீட்டிலிருந்து நான் புறப்படுந் தறுவாயிலோ, இங்கே நீதிமன்றில் எனக்குரிய இடத்தில் நான் அமருந் தறுவாயிலோ, எனது உரையின் எந்தக் கட்டத்திலோ மேற்படி தெய்வக்குரல் என்னைத் தடுத்ததில்லை. வேறு கலந்துரையாடல்களில் பெரிதும் ஒரு வசனத்தின் இடையில் அது குறுக்கிட்டதுண்டு. ஆனால் இப்பொழுது இந்த வழக்காடலின் எந்தக் கட்டத்திலும் நான் கூறிய அல்லது செய்த எதிலுமே அது குறுக்கிட்டதில்லை. அதற்கான நியாயவிளக்கம் என்ன? நான் கருதுவதை உங்களுக்கு சொல்லிவிடுகிறேன்: எனக்கு நேர்ந்தது ஓர் அருட்பேறே என்பது எனது ஊகம். நாங்கள் இறப்பை ஒரு கேடு என்று கொள்வது மிகவும் தவறு. அப்படி நான் நினைப்பதற்குத் தகுந்த ஆதாரம் உண்டு: நான் புரியப்போகும் செயலினால் நல்ல பெறுபேறு எதுவும் விளையாது என்பது உறுதி என்றால், நான் செவிமடுத்துப் பழகிய தெய்வக்குரல் என்னத் தடுத்தாட்கொள்ளத் தவறியிருக்க முடியாது!
இறப்பு ஒரு கேடல்ல
இனி, இறப்பு என்பது உணர்வற்ற ஒன்று என்றால், அது கனவற்ற வெறும் உறக்கம் என்றால், அது ஓர் அற்புதப்பேறாதல் வேண்டும். ஒருவர் கனவே காணாவண்ணம் நன்கு உறங்கிய இரவைச் சுட்டிக்காட்டும்படியும், அவரது வாழ்நாளின் ஏனைய இரவுபகல்கள் அனைத்துடனும் அதை ஒப்பிட்டுப் பார்க்கும்படியும், அவற்றை உரியமுறைப்படி கருத்தில் கொண்டு, அவரது வாழ்நாளில் அவர் நலம்பட மகிழ்ந்து கழித்த இரவுபகல்கள் எத்தனை என்று கூறும்படியும் கேட்டால், (பாரசீக) மாமன்னன் கூட அத்தகைய நாட்களை ஏனைய நாட்களுடன் எளிதில் ஒப்பிட்டுக் கூறிவிடுவான்; குடிமகன் எவரிடமும் கேட்கத் தேவையில்லை. இறப்பும் அது போன்றதே என்றால், அதை நான் ஓர் ஆதாயமாகவே கருதுவேன். காரணம், காலம் முழுவதையும் வெறுமனே ஒரு தனியிரவாகக் கருதமுடியும் அல்லவா?
மறுபுறம் இறப்பு என்பது இவ்விடம் விட்டு வேறிடம் பெயர்வது என்றால், இறந்தவர்கள் அனைவரும் அவ்விடம் வாழ்வதாக எங்களிடம் கூறப்படுவது உண்மை என்றால், அதைவிட மகத்தான அருட்பேறு வேறென்ன கிடைக்க முடியும்? எமது பெயரளவிலான நீதியின் கைக்கு அகப்படாத மறுவுலகைச் சென்றடையும் எவரும் அவ்வுலக நீதிமன்றுகளில் தலைமை வகிப்பவர்கள் எனப்படும் மினோஸ், ரதமந்தஸ், ஏக்கஸ், திரித்தொலெமஸ் ஆகிய மெய்நீதிபதிகளையும், மண்ணுலக வாழ்வில் நெறிநின்ற மற்றும் பிற தேவர்களையும் கண்டுகளிப்பர். அங்ஙனமாயின் மறுவுலகப் பயணம் பலன்தராத பயணமாவது எங்ஙனம்?
இன்னொரு விதமாகவும் வினவுகிறேன்: ஓவியஸ், மியுசேயஸ், எசியோட், ஹோமர் ஆகிய புலவர்களைச் சந்திக்க உங்களுள் ஒருவர் எவ்வளவு கட்டணம் செலுத்துவார்? உண்மையில் அவர்களைச் சந்திக்கலாம் என்றால், நான் திருமபத் திரும்ப பத்து தடவைகள் இறக்கத் தயார். அங்கே அவர்களுடன் இணைந்து பலடெஸ், தெலமனின் மகன் ஏஜாக்ஸ், அநீதியான விசாரணையின் ஊடாகச் சாகடிக்கப்பட்ட வேறு பழைய வீரர்கள் அனைவரையும் சந்தித்து, எனது நற்பேறை அவர்களது நற்பேறுடன் ஒப்புநோக்குவது எனக்கு அருஞ்சுவையூட்டும் அனுபவமாகும், கேளிக்கை மிகுந்த அனுபவமாகும் என்று நினைக்கிறேன்.
அனைத்துக்கும் மேலாக, இங்குபோல் அங்கும் மக்களின் உள்ளங்களைத் துருவி ஆராய்ந்து, அவர்களுள் யார் உண்மையில் ஞானவான் என்பதையும், உண்மையில் தன்னை ஞானவான் என்று வெறுமனே கருதுபவர் யார் என்பதையும் கண்டறிவதில் எனது பொழுதைக் கழிக்க ஆசைப்படுகிறேன். துரோய் மீது போர்தொடுத்த (கிரேக்கப்) படையின் மாபெரும் தலைவன் (மன்னன் அகமெம்னன்), ஒடிசியஸ், சிசிபஸ், ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் ஆகியோரிடம் வினவுவதும், அவர்களுடன் பேசுவதும், கூடி விவாதிப்பதும் கற்பனைக்கும் எட்டாத இன்பம் பயக்கும். அத்தகைய செயலுக்கு அங்கு எவரும் சாகடிக்கப்படுவதில்லை என்று எண்ணுகிறேன். ஏனெனில், எங்களிடம் கூறப்படுவது உண்மை என்றால், அவர்களது உலகு வேறுபட்ட இன்பம் துய்ப்பதில் எங்களது உலகை விஞ்சியுள்ளது; அதைவிட அவர்கள் எஞ்சிய காலம் முழுவதும் இறவாப்பேறு பெற்றுள்ளார்கள்.
நடுவர்-குழாத்துப் பெருமக்களே, நீங்களும் இறப்பை நம்பிக்கையோடு எதிர்பார்க்க வேண்டும். உங்கள் உள்ளத்துள் இந்த உறுதியான நம்பிக்கையை ஊட்டவேண்டும். நல்லவனுக்கு வாழ்விலோ மாள்விலோ எதுவுமே தீங்கிழைக்க முடியாது. அவனது நற்பேறுகளைக் கடவுளர் புறக்கணிப்பதில்லை. தற்பொழுது எனக்கு ஏற்பட்டுள்ள பட்டறிவு தன்பாட்டில் ஏற்பட்டதல்ல. நான் இறந்து, எனது பராக்குகளிலிருந்து விடுபடுவதற்கு எந்தக் காலம் நல்லதோ, அந்தக் காலம் வந்துவிட்டது என்பது எனக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. ஆகவேதான் எனது தெய்வக்குரல் என்னைத் தடுக்கவே இல்லை. என்மீது குற்றஞ்சுமத்தியோர், என்னைக் குற்றத்தீர்ப்புக்கு உள்ளாக்கியோர் கனிவான நோக்கத்துடன் அப்படிச் செய்யவில்லை. என்னை ஊறுபடுத்துவதாக எண்ணியே அப்படிச் செய்தார்கள். அந்த வகையில் அவர்கள் குற்றம் இழைத்தவர்கள் ஆகிறார்கள். ஆனாலும் கூட அவர்கள் மீது நான் இம்மியும் உளத்தாங்கல் கொள்ளவில்லை.
எவ்வாறாயினும், எனக்கோர் உதவிபுரிய இணங்கும்படி அவர்களிடம் நான் வேண்டிக்கொள்கிறேன். எனது புதல்வர்கள் வளர்ந்த பிறகு, அவர்கள் நன்னலத்தை விடப் பணத்துக்கோ வேறு எதற்குமோ முதன்மை கொடுப்பதாக நீங்கள் எண்ணினால், நான் உங்களுக்குத் தொல்லை கொடுத்தது போல் அவர்களுக்குத் தொல்லை கொடுத்து வஞ்சம் தீர்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் நியாயமின்றிக் கொட்டமடித்தால், முக்கிய சங்கதிகளைப் புறக்கணித்தால், எதிலுமே கையாலாகாதவர்களாக இருந்துகொண்டு எதிலோ கையாலானவர்கள் என்று எண்ணினால், நான் உங்களைக் கடிந்தவாறு அவர்களைக் கடியுங்கள். நீங்கள் அப்படிச் செய்தால், உங்கள் கையினால் எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் நீதி கிடைத்ததாகும்.
நாங்கள் புறப்படவேண்டிய நேரம் இது; நான் மாளவும், நீங்கள் வாழவும் புறப்படவேண்டிய நேரம் இது. ஆனாலும் எங்களுக்குள் யாருக்கு மிகுந்த இன்பம் கிடைக்கும் என்பது கடவுளைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.
_____________________________________________________________________
Apologia de Socrates, as recorded by his pupil Plato, The Last Days of Socrates,
translated from Greek to English by Hugh Tredennick, 1954,
translated by Mani Velupillai.
http://faculty.sgc.edu/rkelley/The%20Apology%20of%20Socrates.pdf
https://www.sjsu.edu/people/james.lindahl/courses/Phil70A/s3/apology.pdf
No comments:
Post a Comment