வழக்குரை (2)

 

சாக்கிரத்தீஸ் 

 

 


பிளேட்டோ

சாக்கிரத்தீசின் வழக்குரை: 2

(பிளேட்டோவின் பதிவு)

சாக்கிரத்தீஸ்: இதோ பார், மெலிட்டஸ், இதை எனக்குச் சொல்லு: எங்கள் இளைஞர்களை இயன்றவரை நல்வழிப்படுத்த வேண்டியது மிகமுக்கியம் என்று நீ கருதுகிறாய், அல்லவா?

மெலிட்டஸ்: ஆம்.

மெத்த நல்லது. அப்படி என்றால், இளைஞர்களை நல்வழிப்படுத்துவோர் யார் என்பதை இப்பெரியோர்களிடம் எடுத்துக்கூறு. அதில் உனக்கு அத்துணை அக்கறை இருந்தால், அது யார் என்பது உனக்குத் தெரிய வேண்டுமே! அவர்களைக் கெடுப்பது நானே என்பதை நீ கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகிறாய். அதற்காக இப்பெரியோர்கள் முன்னிலையில் என்மீது நீ வழக்குத் தொடுத்துள்ளாய். இளைஞர்களை நல்வழிப்படுத்துவோர் யார் என்பதை, உன் வாயைத் திறந்து இப்பெரியோர்களிடம் எடுத்துக்கூறு... இதோ பார், மெலிட்டஸ், விடையளிக்க முடியாமல் நீ வாயடைத்து நிற்கிறாய். இது வெட்கக்கேடு என்று உனக்குப் படவில்லையா? இந்த விடயத்தில் உனக்கு அக்கறை இல்லை என்று நான் கூறியதற்கு இதுவே போதிய சான்றாகத் தென்படவில்லையா? இளைஞர்களை நல்வழிப்படுத்துவோர் யார் என்பதை எனக்குக் கூறு, நண்பனே!

மெலிட்டஸ்: சட்டங்கள்.

சாக்கிரத்தீஸ்: நான் கருதுவது அவற்றையல்ல, அருமை ஐயனே! சட்டங்களை அறிவது யாருடைய தலையாய பணி என்றுதான் உன்னிடம் கேட்கிறேன்.

மெலிட்டஸ்: இங்கே அமர்ந்திருக்கும் பெரியோர்கள், நடுவர்-குழாத்துப் பெருமக்கள், சாக்கிரத்தீஸ்!

சாக்கிரத்தீஸ்: இளைஞர்களுக்கு கற்பித்து, அவர்களை நல்வழிப்படுத்தும் ஆற்றல் இவர்களுக்கு உண்டென்று நீ கருதுகிறாயா, மெலிட்டஸ்?

மெலிட்டஸ்: உறுதியாகக் கருதுகிறேன்.

சாக்கிரத்தீஸ்: அது நடுவர்கள் அனைவருக்கும் பொருந்துமா? அல்லது சிலருக்கு மட்டும் பொருந்துமா?

மெலிட்டஸ்: அனைவருக்கும்.

சாக்கிரத்தீஸ்: மிக்க நன்று! ஏராளமான தொண்டர்கள்! சரி, அப்படி என்றால், இந்த நீதிமன்றில் இருக்கும் பார்வையாளர்கள் என்ன பாடு? அவர்களும்  இளைஞர்களை நல்வழிப்படுத்துவோரா?

மெலிட்டஸ்: ஆம், அவர்களும் அப்படித்தான்.

சாக்கிரத்தீஸ்: மன்ற உறுப்பினர்கள் என்ன பாடு?

மெலிட்டஸ்: ஆம், மன்ற உறுப்பினர்களும் தான்.

சாக்கிரத்தீஸ்: ஆனாலும், மெலிட்டஸ், அவையுறுப்பினர்கள் இளைஞர்களைக் கெடுப்பதில்லை என்று உறுதிபடக் கூறுகிறாயா? அல்லது அவர்கள் அனைவரும் இளைஞர்களை நல்வழிப்படுத்துவோரா?

மெலிட்டஸ்: ஆம், அவர்கள் நல்வழிப்படுத்துவோரே.

சாக்கிரத்தீஸ்: அப்படி என்றால், என்னைத் தவிர அதென்சு மாநகரவாசிகள் அனைவரும் இளைஞர்களை நல்வழிப்படுத்துவோராகவே தென்படுகின்றனர். நான் மட்டுமே அவர்களைக் கெடுப்பவன். அப்படித்தானே நீ கருதுகிறாய்?

மெலிட்டஸ்: ஆம், அதை மிகவும் வற்புறுத்திக் கூறுகிறேன்.

சாக்கிரத்தீஸ்: நீ என்னிடம் கண்டுபிடித்தது மிகவும் அவப்பேறான தன்மை என்பது உறுதி. சரி, உன்னிடம் இன்னொரு கேள்வி கேட்கிறேன். குதிரைகளை எடுத்துக்கொள்வோம். மனிதர்கள் அனைவரும் குதிரைகளைச் செம்மைப்படுத்துவோர் என்றும்ஒரே ஒருவரே அவற்றைக் கெடுப்பவர் என்றும் நீ நம்புகிறாயா? அல்லது உண்மை எதிர்மாறானதா? அதாவது, குதிரைகளைப் பயிற்றும் ஒருவரே அல்லது ஒருசிலரே குதிரைகளைச் செம்மைப்படுத்த வல்லவரா? அல்லது குதிரைகளை வைத்திருந்து பயன்படுத்தும் பெரும்பாலானோர் அவற்றுக்குக் கெடுதி விளைவிப்பவர்களா? குதிரைகளுக்கும் ஏனைய விலங்குகள் அனைத்துக்கும் இது பொருந்துகிறது அல்லவா, மிலிட்டஸ்? நீயும் அனைட்டசும் மறுத்தால் என்ன, மறுக்காவிட்டால் என்ன, இது இயல்பாகவே அனைத்துக்கும் பொருந்துகிறது அல்லவா?  

இளைஞர்களைக் கெடுப்பது ஒருவர் மட்டுமே என்பதும், ஏனையோர் அனைவரும் அவர்களை நல்வழிப்படுத்துவோர் என்பதும் அவர்களுக்கு அருளப்பட்ட தனித்துவமான பேறாகும் அன்றோ! ஆனாலும், மெலிட்டஸ், இளைஞர்களைப் பற்றி நீ என்றுமே அலட்டிக்கொண்டதில்லை என்பதற்கு மிகைபட்ட சான்றுண்டு.  இப்பொழுது எந்த நோக்கத்துக்காக நீ என்மீது குற்றம் சுமத்துகிறாயோ அந்த நோக்கத்தில் நீ இம்மியும் அக்கறை கொண்டதில்லை என்பதை நீ செவ்வனே வெளிப்படுத்திவிட்டாய். அதைப் பற்றி நான் மேற்கொண்டு கூறத் தேவையில்லை.

இதோ இன்னொரு சங்கதி, மெலிட்டஸ்! கருத்தூன்றி எனக்கு விடை கூறு: ஒருவர் நல்ல சமூகத்திலா, கெட்ட சமூகத்திலா வாழ்வது நல்லது? ஒரு நல்ல சகபாடியைப் போல் எனது கேள்விக்கு விடை கூறு. இது கடினமான கேள்வி அல்லவே! கெட்டவர்கள் தம்முடன் நெருங்கி உறவாடுவோரைக் கெடவைப்பதும், நல்லவர்கள் மற்றவர்களை நலம்பட வைப்பதும் உண்மையா?

மெலிட்டஸ்: மிகவும் உண்மை.

சாக்கிரத்தீஸ்: தனது சகபாடிகளால் எவரும் நன்மைக்கு உள்ளாவதை விடுத்து தீமைக்கு உள்ளாக விரும்புவாரா? என் அன்பனே, எனக்கு விடை கூறு. நீ விடை கூறவேண்டும் என்பது சட்டம். எவரும் தீமைக்கு உள்ளாக விரும்புவாரா?

மெலிட்டஸ்: இல்லை, இல்லை.

சாக்கிரத்தீஸ்: நான் இளைஞர்களைக் கெடுத்து, அவர்களின் குணத்தை மோசமாக்கியதாக என்மீது குற்றஞ்சுமத்தி, என்னை இந்த நீதிமன்றில் வெளிப்படும்படி எனக்கு நீ அழைப்பாணை விடுத்துள்ளாய். சரி, அப்படி என்றால், நான் வேண்டுமென்றே அவ்வாறு செய்கிறேனா, அல்லது மனமிசையாது அவ்வாறு செய்கிறேனா?

மெலிட்டஸ்: நீ வேண்டுமென்றே அவ்வாறு செய்வதாகவே கருதுகிறேன்.

சாக்கிரத்தீஸ்: எப்படி, மெலிட்டஸ், எனது வயதில் எனக்குள்ள ஞானத்தை விட உனது வயதில் உனக்குள்ள ஞானம் அதிகமாக இருக்கிறது? என்றுமே தீயவர்கள் தம்மை நெருங்கிய அயலவர்கள் மீது தீயதாக்கத்தை விளைவிப்பவர்கள் என்பதையும், நல்லவர்கள் நல்ல தாக்கத்தை விளைவிப்பவர்கள் என்பதையும் நீ கண்டுபிடித்துள்ளாய். எனது கூட்டாளிகளுள் ஒருவரின் குணத்தை நான் கெடுப்பதன் மூலம் அவரால் ஒரு தீங்கிற்கு உள்ளாகும் ஆபத்தை நான் எதிர்கொள்ளக்கூடும் என்பதைக் கூட அறவே புரிந்துகொள்ள முடியாத அறிவிலியா நான்? அத்தகைய பாரதூரமான குற்றத்தை வேறெதுவும் என்னை வேண்டுமென்றே செய்ய வைக்காது என்பதால் உன்னிடம் அப்படிக் கேட்கிறேன். நான் அதை நம்பமாட்டேன், மெலிட்டஸ். வேறெவரும் கூட அதை நம்பமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஒன்றில் நான் கெடுதி விளைவிப்பவன் அல்ல, அல்லது உளமிசையாது கெடுதி விளைவிப்பவன். ஆதலால், இரண்டில் எதுவாயினும், உனது குற்றச்சாட்டு, பொய்த்துப் போகிறது. நான் உளமிசையாது கெடுதி விளைவிப்பவன் என்று வைத்துக்கொண்டால், அவ்வாறு உளமிசையாது புரியும் பொல்லாங்குகளுக்கு, அவ்வாறு பொல்லாங்கு புரிந்தவரை இந்த நீதிமன்றின்முன் வெளிப்படும்படி அழைப்பாணையிடுவதை விடுத்து, அவரைத் தனிப்பட ஒருபுறமாகக் கூட்டிச்சென்று, கடிந்து, அறிவுறுத்தி அனுப்புவதே தகுந்த நடைமுறை. என் அறிவுக் கண்கள் திறக்கப்பட்டால், நான் செய்ய எண்ணாததைச் செய்யும் வழக்கத்தை நிறுத்திக்கொள்வேன் அல்லவா? ஆனால், மெலிட்டஸ், கடந்தகாலத்தில் என்னுடன் கூடுவதை நீ திட்டமிட்டே தவிர்த்து வந்துள்ளாய். எனக்கு அறிவொளியூட்ட மறுத்து வந்துள்ளாய். இப்பொழுது இந்த நீதிமன்றுக்கு என்னை இழுத்து வந்துள்ளாய். இது தண்டனை தேவைப்படுவோருக்கு ஒதுக்கப்பட்ட இடமேயொழிய, அறிவொளி தேவைப்படுவோருக்கு ஒதுக்கப்பட்ட இடம் அல்ல.

பெரியோர்களே, நான் முன்னர் கூறியது போல், மெலிட்டஸ் இந்த விடயத்தில் என்றுமே எத்துணை அக்கறையும் கொண்டதில்லை என்பது இப்பொழுது மிகவும் தெளிவாகியுள்ளது. போகட்டும், மெலிட்டஸ், இளைஞர்களின் உள்ளத்தை எந்த வகையில் நான் கெடுத்ததாக நீ வலியுறுத்துகிறாய் என்பதை எங்களிடம் எடுத்துக்கூற வேண்டுகிறேன். அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுளரை விடுத்து புதிய தேவர்களில் நம்பிக்கை வைக்கும்படி நான் போதிப்பதாக நீ என்மீது குற்றஞ்சுமத்துவது உனது குற்றச்சாட்டிலிருந்து தெளிவாவது உறுதி அல்லவா! எனது போதனையே இளைஞர்களைக் கெடுப்பதாக நீ கூறவில்லையா?

மெலிட்டஸ்: ஆம், இழையும் வழுவாமல் அதுவே எனது வாதம்.

சாக்கிரத்தீஸ்: அப்படி என்றால், மெலிட்டஸ், உனது வாதத்தை எனக்கும் நடுவர்-குழாத்துக்கும் இன்னும் கொஞ்சம் தெளிவாக விளக்கியுரைக்கும்படி  நாங்கள் குறிப்பிடும் கடவுளரின் பெயரால் உன்னிடம் வேண்டிக் கொள்கிறேன். காரணம், உனது கூற்றை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. குறித்த சில கடவுளரில் நம்பிக்கை வைக்கும்படி நான் ஆட்களுக்குப் போதிக்கிறேன் என்கிறாயா? அப்படி என்றால், கடவுளரில் நான் கூட நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்பது அதன் உட்கிடை அல்லவா? ஆகவே நான் ஒரு முழுநாத்திகன் அல்லவே! அந்த வகையில் நான் ஒரு குற்றவாளி அல்லவே! அல்லது அரசினால் ஏற்றுக்கொள்ளப்படாத வேறு கடவுளரில் நம்பிக்கை வைக்கும்படி நான் ஆட்களுக்குப் போதிக்கிறேன் என்கிறாயா? அப்படி என்றால், அவர்கள் வேறு கடவுளர்கள் என்பதே உனது குற்றச்சாட்டின் அடிப்படையா? அல்லது எந்தக் கடவுளரிலும் நான் நம்பிக்கை வைக்கவில்லை, அதையே மற்றவர்களுக்கும் போதிக்கிறேன் என்று வலியுறுத்துகிறாயா?

மெலிட்டஸ்: ஆம், நீ எந்தக் கடவுளரிலும் நம்பிக்கை வைக்கவில்லை என்கிறேன்.

சாக்கிரத்தீஸ்: நீ என்னை வியக்க வைக்கிறாய், மெலிட்டஸ். அப்படி நீ கூறுவதன் பொருள் என்ன? மனுக்குலம் முழுவதும் நம்புவது போல் கதிரவனும் தண்மதியும் கடவுளர் என்று நான் நம்பவில்லை என்று நீ கருதுகிறாயா?

மெலிட்டஸ்: நடுவர்-குழாத்துப் பெருமக்களே, கதிரவனைக் கல் என்றும், வெண்மதியை மண் என்றும் கூறும் இவர், அவற்றைக் கடவுளர் என்று நம்பவில்லை என்பது உறுதி.   

சாக்கிரத்தீஸ்: என் அருமை மெலிட்டஸ், நீ அனக்சகோரஸ் மீது வழக்குத் தொடுத்திருப்பதாகக் கற்பனைபண்ணியா பேசுகிறாய்? நடுவர்-குழாத்துப் பெருமக்களை நீ அவ்வளவு குறைவாக மதிப்பிட்டு வைத்திருக்கிறாயா? கிளாசோமெனே நகரத்து அனக்சகோரசின் நூல்களில் அத்தகைய கோட்பாடுகள் நிறைந்திருப்பதை அறியாத அளவுக்கு இவர்களை எழுத்தறிவற்றவர்கள் என்று நீ கருதுகிறாயா? இளைஞர்கள் என்னிடமிருந்தே மேற்படி கருத்துக்களை எடுத்துக்கொள்கிறார்கள் என்று கருத்தூன்றித்தான் நீ கூறுகிறாயா? இடைக்கிடை அவர்கள் கடைகண்ணிக்குப் போய் ஆகக்கூடியது ஒரு வெள்ளிக்காசுக்கு அத்தகைய நூல்களை வாங்கி வாசிக்க முடியும் அல்லவா? அவை தனது கோட்பாடுகள் என்று சாக்கிரத்தீஸ் மார்தட்டினால், குறிப்பாக அவை மடைத்தனமான கோட்பாடுகளாகத் தென்படுவதால், அவர்கள் அவனை எள்ளி நகையாட முடியும் அல்லவா? நேர்மையாக எனக்கு விடைகூறு, மெலிட்டஸ்! என்னைப் பற்றி அப்படியான எண்ணமா வைத்திருக்கிறாய்? எந்தக் கடவுளிலும் நான் நம்பிக்கை வைத்திருக்கவில்லையா?

மெலிட்டஸ்: இல்லை, இல்லவே இல்லை, எள்ளளவும் இல்லை.

சாக்கிரத்தீஸ்: உனது பதில் எனக்கு சற்றும் நம்பிக்கை தரவில்லை, மெலிட்டஸ். ஏன், உனக்கும் கூட நம்பிக்கை தரவில்லை என்றே நான் ஊகிக்கிறேன். பெரியோர்களே, இந்த ஆள் கடைந்தெடுத்த சுயநலப்புலி என்பதே எனது கருத்து. முற்றிலும் தறிகெட்டு, இறுமாந்து, வன்மம் கொண்டு என்மீது இந்த வழக்கை இவர் தொடுத்துள்ளார். எனக்கு ஏதோ ஒருவகையான நுண்மதிப் பரிசோதனையை இவர் தயாரிப்பதாகத் தெரிகிறது. "எனது சொந்தக் கேளிக்கைக்காக என்னுடன் நானே முரண்படுகிறேன் என்பதை, தவறேதும் இழைக்காத சாக்கிரத்தீஸ் புரிந்துகொள்வானா? அல்லது அவனையும், எஞ்சிய எனது அவையோரையும் ஏய்ப்பதில் நான் வெற்றிபெறுவேனா?" என்று இவர் தன்னைத் தானே வினவுவதாகத் தெரிகிறது. 

இந்தக் குற்றச்சாட்டில் இவர் தன்முரண்பாட்டுக்கு உள்ளாவதாக எனக்கு உறுதியாகத் தெரிகிறது. அவரது குற்றச்சாட்டு இப்படி அமைவதாகவும் கொள்ளலாம்: சாக்கிரத்தீஸ் கடவுளரில் நம்பிக்கை வைக்காத குற்றவாளியானாலும் கூட, கடவுளரில் நம்பிக்கை வைக்கும் குற்றவாளி! இது அப்பழுக்கற்ற புரளி.

பெரியோர்களே, இந்த முடிபுக்கு என்னை இட்டுச்செல்லும் நியாயநெறியை என்னுடன் சேர்ந்து ஆராயும்படி உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். மெலிட்டஸ், எனது கேள்விகளுக்கு நீ மறுமொழிகூறித் துணைநிற்க வேண்டும். நான் துக்கத்தில் வேண்டிக்கொண்டது போல், எனது வழமைப்படி நான் கலந்துரையாடலை நடத்தினால், குறுக்கிட வேண்டாம் என்பதை நீங்கள் அனைவரும் நினைவில் வைத்திருப்பீர்களா?

மெலிட்டஸ், மனிதப் பிறவிகளில் நம்பிக்கை வைக்காமல் மனிதரின்  செயல்களில் நம்பிக்கை வைப்பவர் எவராவது உலகத்தில் உண்டா? பெரியோர்களே, இவரை விடையளிக்க வையுங்கள்! இவர் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்க அனுமதிக்காதீர்கள்! குதிரைகளில் நம்பிக்கை வைக்காமல் குதிரைகளின் செயல்களில் நம்பிக்கை வைப்பவர் எவராவது உண்டா? அல்லது இசைஞர்களில் நம்பிக்கை வைக்காமல் இசையலுவல்களில் நம்பிக்கை வைப்பவர் யார்? இல்லை, எவரும் இல்லை, என் அருமை நண்பனே! நீ விடையளிக்க விரும்பாவிட்டல், உனக்காகவும் இப்பெரியோர்களுக்காகவும் நானே விடையளிப்பேன். ஆனாலும் அடுத்த கேள்விக்கு நீயே விடையளிக்க வேண்டும்: தெய்வச் செயல்களில் நம்பிக்கை வைக்கும் அதேவேளை தெய்வப் பிறவிகளில் நம்பிக்கை வைக்காத எவரும் உண்டா?

மெலிட்டஸ்: இல்லை.

சாக்கிரத்தீஸ்: நீதிமன்றின் நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டு நீ நேரடியாக விடையளித்தது எவ்வளவோ நல்லது! சரி, தெய்வச் செயல்களில் நம்பிக்கை வைக்கும்படி மற்றவர்களுக்கு நான் போதிப்பதாக நீ அடித்துக் கூறுகிறாயா? அவை பழைய தெய்வங்களா, புதிய தெய்வங்களா என்பதை நாங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை. உனது கூற்றின்படி எனக்கு அவற்றில் நம்பிக்கை உண்டு என்பது தெளிவு. உண்மையில் அப்படி உனது சத்தியக் கடதாசியில் நீ பற்றுறுதியுடன் சூளுரைத்துள்ளாய். ஆனாலும், தெய்வச் செயல்களில் எனக்கு நம்பிக்கை உண்டென்றால், தெய்வப் பிறவிகளிலும் எனக்கு நம்பிக்கை உண்டென்பது பெறப்படுகிறது அல்லவா? ஆம், பெறப்படுகிறது. நீ பதில் கூறாமல் அமைதி காப்பதை உனது சம்மதமாக எடுத்துக்கொள்கிறேன். தெய்வப் பிறவிகள் ஒன்றில் கடவுளர் அல்லது கடவுளரின் பிள்ளைகள் என்று நாங்கள் கொள்ளவில்லையா? நீ உடன்படுகிறாயா, அல்லவா?

மெலிட்டஸ்: உறுதியாக உடன்படுகிறேன்.

சாக்கிரத்தீஸ்: அப்படி என்றால், நீ வலியுறுத்துவது போல் தெய்வப் பிறவிகளில் எனக்கு நம்பிக்கை உண்டென்றால், இத்தெய்வப் பிறவிகள் ஏதோ ஒருவகையில் கடவுளர்கள் என்றால், உனது கேளிக்கைக்காக எனது நுண்மதியை நீ பரிசோதிக்கிறாய் என்று சற்று முன்னர் நான் கூறியபொழுது தெரிவித்த அதே முடிபுக்கே நாங்கள் வரவேண்டியுள்ளது. காரணம்: முதலில் கடவுளரில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும், பிறகு, தெய்வப் பிறவிகளில் எனக்கு நம்பிக்கை உள்ளபடியால், கடவுளரில் எனக்கு நம்பிக்கை உண்டென்றும்  நீ கூறியிருக்கிறாய்!

மெலிட்டஸ்

மறுபுறம், கடவுளருக்கு அணங்குகள் அல்லது வேறு அன்னையர் பெற்ற புறமணப் பிள்ளைகளே இத்தெய்வப் பிறவிகள் என்று கொள்ளப்படுகின்றனர்; அவர்கள அத்தகைய தெய்வப் பிறவிகள் என்றால், இவ்வுலகில் கடவுளரின் பிள்ளைகளில் நம்பிக்கை வைக்கும் அதேவேளை கடவுளரில் நம்பிக்கை வைக்காதவர் யார்? குதிரைக் குட்டிகளில் அல்லது கழுதைக் குட்டிகளில் நம்பிக்கை வைக்கும் அதேவேளை குதிரைகளில் அல்லது கழுதைகளில் நம்பிக்கை வைக்காத வேடிக்கை போன்றதே அது.

எனது ஞானத்தைப் பரிசோதிக்க எண்ணியே, அல்லது என்மீது சுமத்துவதற்கு ஒரு மெய்யான குற்றத்தைக் கண்டறிய முடியாமல் உளமொடிந்த நிலையிலேயே இந்தக் குற்றச்சாட்டை நீ என்மீது சுமத்தியிருக்கிறாய் என்ற முடிபைத் தவிர்க்க வழியில்லை, மெலிட்டஸ், தவிர்க்க வழியில்லை. தெய்வச் செயல்களிலும் தெய்வீகச் செயல்களிலும் நம்பிக்கை வைப்பது, தெய்வப் பிறவிகளிலும் தெய்வீகப் பிறவிகளிலும் நம்பிக்கை வைப்பதாகாது என்று கடுகளவு நுண்மதியுடன் உயிர்வாழும் எவரையும் கூட நம்பவைக்க உனக்கு அறவே வாய்புக் கிடைக்கப் போவதில்லை; மறுதலையாக நம்பவைக்கவும் உனக்கு வாய்புக் கிடைக்கப் போவதில்லை.

உண்மை இதுவே, பெரியோர்களே! மெலிட்டசின் குற்றச்சாட்டிலிருந்து என்னை விடுவிப்பதற்கு அதிக பதில்வாதம் தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். அது குறித்து ஏற்கெனவே நான் கூறியதே போதும். அத்துடன் எனது தொடக்கப் பேச்சின் ஒரு கட்டத்தில் நான் கூறியதன் உண்மை உங்களுக்கு நன்கு தெரியும்: கடும்பகையை நான் பெருமளவு சம்பாதித்துள்ளேன். வேறெதுவும் அல்ல, மெலிட்டசோ, அடைட்டசோ அல்ல, இந்தப் பகையே எனக்கு அழிவைக் கொணரும்.  பெருந்தொகையானோரின் வசையும், பொறாமையும் எனக்கு அழிவைக் கொணரும். பெருந்தொகையான அப்பாவிகளை அவர்கள் அழித்துள்ளார்கள்; தொடர்ந்தும் அழிப்பார்கள் என்று எண்ணுகிறேன்; என்னை அழிப்பதுடன் அவர்கள் நின்றுவிட வாய்ப்பில்லை.

போகட்டும்! உங்களுள் எவரும் இப்படி வினவக்கூடும்: "சாக்கிரத்தீஸ், மரண தண்டனை என்னும் ஆபத்துக்கு உன்னை இட்டுச்செல்லும் வழியில் நடைபயின்ற உனக்கு மனச்சாட்சி உறுத்தவில்லையா?"

அவருக்கு நான் செவ்வனே பதிலளிக்கலாம்: சற்றேனும் மானமுள்ள ஒருவர், உயிர்வாழும் வாய்ப்புகளையும், உயிர்போகும் வாய்ப்புகளையும் எடைபோட்டுப் பார்ப்பதில் தனது வாழ்நாளைக் கழிக்க வேண்டியவர் என்று நீ கருதினால், நீ தவறிழைத்தவன் ஆகுவாய், நண்பனே! அவர் எந்தச் செயலைப் புரிந்தாலும், ஒரேயொரு சங்கதியை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்: அவர் சரிவரச் செயற்படுகிறாரா அல்லது வழுபடச் செயற்படுகிறாரா, நல்லவராகச் செயற்படுகிறாரா அல்லது தீயவராகச் செயற்படுகிறாரா என்பதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். உனது கண்களுக்குகுறிப்பாக (கடல் அணங்காகிய) தேற்றிசின் மகன் (அகிலீஸ்) உட்பட, துரோய் மாநகரில் மாண்ட வீரர்கள் அனைவரும் ஈனப்பிறவிகள் போலும். அவமானத்துக்கு உள்ளாவதை விட ஆபத்துக்கு உள்ளாவதை அகிலீஸ் துச்சமாக மதித்தான். (துரோய் இளவரசனாகிய) எக்டரைக் கொல்ல அகிலீஸ் வெகுண்டெழுந்தபொழுது, அவனது தாய்த்தேவதை குறுக்கிட்டு அவனை எச்சரித்தது உங்களுக்கு நினைவிருக்கும். அத்தேவதை இப்படிச் சொல்லி எச்சரித்திருக்கும் என்று நான் கற்பனை செய்கிறேன்: "என் மகனே, உனது தோழன் பற்றோக்கிளசைக் கொன்றதற்குப் பழிவாங்கத் தலைப்பட்டு எக்டரை நீ கொன்றுவிட்டால், நீயும் மாண்டுபோவாய். எக்டரின் தலைவிதியை அடுத்து உனது தலைவிதியும் நிர்ணயிக்கப்படும்." இந்த எச்சரிக்கை அவன் காதில் விழுந்தும் கூட இறப்பையும், ஆபத்தையும் அவன் துச்சமாக மதித்தான். தனது நண்பர்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கத் தவறியவன் என்ற இழிவுடன் வாழ்வதற்கே அவன் அதிகம் அஞ்சினான். "மோதுமுனைகளுடன் இங்கு தரித்துநிற்கும் போர்க்கப்பல்களின் அருகில் மொக்கேனப்பட்டு, மண்ணுக்குப் பாரமாய் நிற்பதை விட, அந்தப் பாதகனைப் பழிவாங்கிய கையோடு நான் மாண்டுவிடுகிறேன்" என்று சூளுரைக்கிறான். இறப்பையும், ஆபத்தையும் அவன் எண்ணிப்பார்த்தான் என்றா நினைக்கிறீர்கள்?

_________________________________________

தொடர்ச்சி: சாக்கிரத்தீஸ் வழக்குரை (3)

தமிழ்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment