நீதிமன்றின் முன் (1)

 

சாக்கிரத்தீஸ் 

(பொ. யு. மு. 469-399)

 

 பிளேட்டோ
(பொ. யு. மு. 427-347)

சாக்கிரத்தீசின் வழக்குரை: 1

(பிளேட்டோவின் பதிவு)

பெரியோர்களே, என்மீது குற்றஞ்சுமத்தியோர் உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்தியிருக்கக்கூடிய தாக்கத்தை நான் அறியேன். ஆனால் நானோ அவர்களால் ஆட்கொள்ளப்படும் நிலைக்கு உள்ளாகிப்போனேன். அத்துணை நம்பிக்கை ஊட்டும் வாதங்களை அவர்கள் முன்வைத்தார்கள். ஆனாலும் அவர்கள் உதிர்த்த சொல் ஒன்று கூட கொஞ்சமும் உண்மை இல்லை.

 

அவர்களின் தவறான கூற்றுக்களுள் குறிப்பாக ஒன்று என்னை வியக்க வைத்தது. நான் ஒரு திறமையான பேச்சாளன் என்று பொருள்படும் வண்ணம், நான் உங்களை ஏய்க்கா வண்ணம், நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறியது என்னை வியக்க வைத்தது.

 

திறமையான பேச்சாளன் என்பதற்கு உண்மை உரைக்கும் பேச்சாளன் என்று அவர்கள் பொருள் கொண்டிருக்க வேண்டும்; மற்றும்படி, என்னிடம் பேச்சுத்திறன் அறவே கிடையாது என்பது தெரியவரும்பொழுது, அவர்களுடைய கூற்று அடியோடு பொய்த்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்; ஆதலால், நான் ஒரு திறமையான பேச்சாளன் என்று அவர்கள் சற்றும் கூசாமல் உங்களிடம் கூறியது, அவர்களின் சிறப்பியல்பான இறுமாப்பை உணர்த்துவதாகவே நான் எண்ணிக் கொண்டேன். திறமையான பேச்சாளன் என்பதற்கு உண்மை உரைக்கும் பேச்சாளன் என்று அவர்கள் பொருள்கொண்டால், நான் ஒரு பேச்சாளன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் அவர்களைப் போன்ற ஒரு பேச்சாளன் அல்ல.

 

என்மீது குற்றஞ்சுமத்தியோர் கூறியதில் உண்மை எதுவும் இல்லை, அல்லது உண்மை கொஞ்சமும் இல்லை என்பதே எனது வாதம். பெரியோர்களே, நான் கூறும் முழு உண்மையையும் நீங்கள் காதில் விழுத்த வேண்டும். அதேவேளை அவர்கள் கையாண்டது போன்ற செவ்விய சொற்களுடன், தொடர்களுடன் கூடிய அணிமொழியில் நான் பேசமாட்டேன் என்று உங்களுக்கு உறுதிகூறுகிறேன். எனது குறிக்கோளில் பொதிந்துள்ள நீதியில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதைவிட வேறெதையும் எனது பேச்சில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. ஆகவே என் உள்ளத்துள் முதன்முதல் எழும் சொற்களில் ஒரு நேர்சீரான பேச்சை நீங்கள் செவிமடுக்கப் போகிறீர்கள்.

 

பெரியோர்களே, என்னைப் போல் ஒரு முதியவர் நாவன்மை படைத்த ஒரு பாடசாலைப் பையனைப் போல் செயற்கை மொழியில் உங்களை விளித்துப் பேசுவது கொஞ்சமும் பொருந்தாது. இந்த மாநகரத்தின் வெட்ட வெளிகளிலும், மற்ற இடங்களிலும் நான் பேசுவதை நீங்கள் பலரும் கேட்டிருப்பீர்கள். அவ்வாறு நான் கையாண்டு பழகிய மொழியில் என் பதில்வாதத்தை நான் முன்வைக்கக் கேட்டால், தயவுசெய்து திடுக்கிட்டுக் குறுக்கிட வேண்டாம் என்று உங்களிடம் உளமார மன்றாடி வேண்டிக் கொள்கிறேன்.

 

முதலில் எனது நிலைப்பாட்டை உங்களுக்கு நான் நினைவுறுத்த விரும்புகிறேன். நீதிமன்ற மொழி எனக்கு அடியோடு தெரியாது. இந்த எழுபது வயதில் முதல் தடவையாக நான் நீதிமன்றில் வெளிப்பட்டுள்ளேன். உண்மையில் நான் ஒரு பிறநாட்டவன் என்றால், என்னை ஊட்டிவளர்த்த முறையிலும் மொழியிலும் நான் பேச முற்பட்டால், நீங்கள் என்னை மன்னிக்கத் தலைப்படுவது இயற்கையே. ஆதலால் தற்போதைய சூழ்நிலையில் இந்த வேண்டுகோளை உங்கள்முன் வைக்கிறேன். நான் பேசும் விதம் நன்றோ மோசமோ, அதைப் பொருட்படுத்த வேண்டாம்; எனது வாதங்கள் செவ்விய வாதங்களா அல்லவா என்ற வினாவில் மட்டுமே புலனைச் செலுத்தவும்; இப்படிக் கேட்பதை மிகவும் நியாயமான ஒரு வேண்டுகோளாகவே நான் கருதுகிறேன். அதுவே யூரரின் தலையாய கடமை. எப்படி உண்மை உரைப்பது வழக்குரைஞரின் கடமையோ, அப்படி.  

 

யூரர் பெருமக்களே, என்மீது சுமத்தப்பட்ட ஆகப்பழைய போலிக் குற்றச்சாட்டுகளையும், குற்றஞ்சுமத்தியோருள் ஆகப்பழையவர்களையும் முதற்கண் கருத்தில் கொண்ட பின்னர், அடுத்தவற்றையும் அடுத்தவர்களையும் கருத்தில் கொள்வதே தகும். நான் இப்படி வேறுபடுத்தக் காரணம் உண்டு. ஏற்கெனவே பல ஆண்டுகளாகப் பெருந்தொகையானோர் உங்கள் காதில் விழும் வண்ணம் என்மீது குற்றஞ்சுமத்தியுள்ளனர். அவர்களுடைய குற்றச்சாட்டுக்களில் ஒரு சொல்லும் உண்மை இல்லை. புதுக்க என்மீது குற்றஞ்சுமத்தியுள்ள அனைட்டசும், அவரது சகபாடிகளும் பயங்கரமானவர்கள். எனினும் அவர்களை விட  பழையவர்களுக்கே நான் மிகவும் அஞ்சுகிறேன். புதியவர்களை விட பழையவர்கள் மிகவும் பயங்கரமானவர்கள்.

 

உங்களுள் பலர் சிறுவர்களாக இருந்தபொழுது உங்களைப் பிடித்து, உங்கள் உள்ளத்துள் எனக்கெதிரான போலிக் குற்றச்சாட்டுகளை இட்டு நிரப்பியவர்களைக் கருதியே அப்படிக் கூறுகிறேன். "சாக்கிரத்தீஸ் என்றொரு ஞானி இருக்கிறான்; அவன் விண்ணுலகு பற்றிய கோட்பாடுகள் கொண்டவன்; மண்ணுலகத்துக்கு கீழ்ப்பட்ட அனைத்தையும் ஆராய்ந்தவன்; வலுவுற்ற வாதத்தை வலுவற்ற வாதம் வெல்லும்படி செய்பவன்" என்று உங்களிடம் தெரிவித்தவர்களைக் கருதியே அப்படிக் கூறுகிறேன்.  

 

மேற்படி சங்கதிகளை ஆராயும் எவரும் ஒரு நாத்திகராகவே இருக்க வேண்டும் என்று அத்தகைய வதந்திகளைக் கேட்பவர்கள் நினைப்பார்கள். ஆதலால், பெரியோர்களே, வதந்திகள் பரப்பி என்மீது குற்றஞ்சுமத்துவோரே மிகவும் பயங்கரமானவர்கள். உங்களுள் சிலர் சிறுவர்களாகவோ வளரிளம் பருவத்தவர்களாகவோ விளங்கிய காலத்தில், ஏதாவது உங்கள் உள்ளத்துள் மிகவும் பதியத்தக்க வயதில், உங்களை அவர்கள் அணுகியிருக்கிறார்கள். அப்பொழுது எனக்காக வாதாட எவருமே இல்லை. ஆகவே அறவே எதிர்வாதமற்ற வெற்றியை அவர்கள் ஈட்டிக்கொண்டார்கள். 

 

இங்கு மிகவும் விசித்திரமான சங்கதி என்னவென்றால், அவர்களுள் ஒருவர் ஒரு நாடகாசிரியராக விளங்கினாலொழிய, அவர்களின் பெயர்களை அறிந்து உங்களிடம் கூறுவது கூட எனக்குச் சாத்தியப்படாது. என்மீது பொறாமைப்பட்டு, அவதூறுபடுத்த ஆசைப்பட்டு, உங்களை எனக்கெதிராக ஏவிவிட முயன்ற இவர்கள் அனைவரையும், வெறுமனே மற்றவர்கள் கூறியதைக் கேட்டு அப்படியே அடுத்தவர்களிடம் கூறிய சிலரையும் இங்கு விசாரணைக்கு உட்படுத்துவது மிகவும் கடினம். குறுக்கு விசாரணைக்கு அவர்களை இங்கு கொண்டுவருவது அசாத்தியம். எனக்குப் பதில்கூற எவருமே இல்லை. ஆதலால், எனது பதில்வாதத்தை மட்டுமே நான் நிகழ்த்த வேண்டியுள்ளது. கண்ணுக்குப் புலப்படாத ஓர் எதிராளிக்கு எதிராகவே எனது பதில்வாதத்தை நான் நிகழ்த்த வேண்டியுள்ளது.

 

என்மீது குறைகூறுவோர் இரு பிரிவினர் என்று நான் கூறுவதை ஏற்றுக்கொள்ளும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். என்மீது குற்றஞ்சுமத்திய பழையவர்கள் என்று நான் கூறியோர் ஒருபுறம், புதியவர்கள் மறுபுறம். பழையவர்களின் குற்றச்சாட்டுகளுக்கே எனது பதில்வாதத்தை நான் முதலில் முன்வைக்க வேண்டியுள்ளது என்று நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னதான் கூறினாலும், மிகவும் நீண்ட காலத்துக்கு  முன்னரே, புதியவர்களை விட மிகவும் வன்மையான முறையில்,  பழையவர்கள் என்னைப் பழிதூற்றியதை நீங்கள் செவிமடுத்ததுண்டு.

 

மெத்த நல்லது, பெரியோர்களே, எனது பதில்வாதத்தில் இனி நான் இறங்க வேண்டியுள்ளது. பல்லாண்டுகளாக உங்கள் உள்ளத்துள் பதிந்துள்ள தவறான எண்ணத்தை எனக்கு கிடைத்த குறுகிய நேரத்துள் களைவதற்கு நான் முயல வேண்டியுள்ளது. எனது பதில்வாதத்தின் பெறுபேறாக அது களையப்படுவதையே நான் விரும்புகிறேன். பெரியோர்களே, அது உங்களுக்கும் எனக்கும் நலம்பயக்கும் என்று எண்ணுகிறேன். எனது பதில்வாதத்தில் நான் வெற்றியீட்ட விரும்புகிறேன். ஆனால் அது கடினம் என்று நினைக்கிறேன். எனது முயற்சியின் தன்மையை நான் நன்கறிந்தவன். எவ்வாறாயினும், கடவுள் விரும்பியபடி அது நிகழட்டுமே! நானோ சட்டத்துக்கு அடிபணிந்து எனது பதில்வாதத்தை முன்வைக்க வேண்டியுள்ளது.

 

இனி நாங்கள் பின்னோக்கிச் சென்று, என்னை இகழ்ச்சிக்கு இட்டுச்சென்ற குற்றச்சாட்டு என்ன, இப்பொழுது மெலிட்டசை கடுங்குற்றச்சாட்டு வரையத் தூண்டியது என்ன என்பதைக் கருத்தில் கொள்வோம். மெத்த நல்லது, பெரியோர்களே, என்மீது குறைகூறுவோர் எனது குணவியல்பைக் கண்டித்துக் கூறியது என்ன? அவர்களை என்மீது சட்டப்படி குற்றஞ்சுமத்தியோராகப் பாவனைசெய்து, அவர்களுடைய சத்தியக் கடதாசியை நான் இப்படி வாசித்துக் காட்ட வேண்டியுள்ளதாக வைத்துக்கொள்ளலாம்:

 

சாக்கிரத்தீஸ் மண்ணுலகின் கீழேயும், விண்ணுலகின் மேலேயும் உள்ளவற்றை ஆராய்ந்து திரிவுபடுத்திய குற்றத்தையும், வலுவுற்ற வாதத்தை வலுவற்ற வாதம் வெல்லும்படி செய்யும் குற்றத்தையும், தனது எடுத்துக்காட்டைப் பின்பற்றும்படி மற்றவர்களுக்குப் போதித்த குற்றத்தையும் புரிந்தவன்…


அரிஸ்டோபேன்ஸ்

அப்படி அமைந்த ஏதோ ஒரு குற்றச்சாட்டு அது. அரிஸ்டோபேன்ஸ் என்னைக் குறித்து அரங்கேற்றிய நாடகத்தில் நீங்களே அதைப் பார்த்திருக்கிறீர்கள். அந்த நாடகத்தில் சாக்கிரத்தீஸ் என்றொரு பாத்திரம் சுற்றிச் சுழன்று திரிகிறான். தான் காற்றில் நடப்பதாக முழங்கி வருகிறான். எனக்கு அறவே தெரியாதவற்றைப் பற்றி எல்லாம் விழலளந்து குவிக்கிறான்... அப்படிப்பட்ட சங்கதிகளில் எவருக்கும் உண்மையான பாண்டித்தியம் இருப்பதாக வைத்துக்கொண்டால், அத்தகைய அறிவை நான் அவமதிக்கவில்லை. ஏனெனில் மெலிட்டஸ் மேற்கொண்டும் எனக்கெதிராக வழக்குத் தொடுப்பதை நான் விரும்பவில்லை. ஆனால், பெரியோர்களே, எனக்கு அதில் எல்லாம் நாட்டம் இல்லை. அதைவிட முக்கியமாக, உங்களுள் பெரும்பாலானோரை எனது கூற்றுக்குச் சாட்சிகளாக விளங்கும்படி நான் வேண்டிக்கொள்கிறேன்.

 

என்றாவது நான் பேசுவதைக் கேட்டவர்கள் உங்களுக்குள் இருக்கிறார்கள். உங்களுள் பெருந்தொகையானோர் கேட்டிருக்கிறீர்கள். இந்த விடயம் குறித்து உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு தெளிவுபடுத்தும்படி அனைவரிடமும் வேண்டிக் கொள்கிறேன். என்றாவது அத்தகைய சங்கதிகள் குறித்து சுருக்கமாகவோ விளக்கமாகவோ நான் கலந்துரையாட நீங்கள் கேட்டீர்களா அல்லவா என்பதை ஒருவருக்கொருவர் கூறுங்கள். அவ்வாறே என்னைப் பற்றிப் பரவிய பிற வதந்திகளும் நம்பத்தக்கவை அல்ல என்பதை அதன் பிறகு நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.


 

                       கோர்ஜியாஸ்                 புரோடிக்கஸ்            ஹிப்பியாஸ்     

இக்குற்றச்சாட்டுகள் எவற்றிலும் எதுவித உண்மையும் இல்லை. நான் ஆட்களுக்கு கற்பித்து, கட்டணம் வசூலிக்க முயல்வதாக எவராவது கூறுவதை நீங்கள் கேட்டிருந்தால், அதிலும் கூட உண்மை இல்லை. ஆனாலும் அதில் உண்மை இருந்திருக்க வேண்டும் என்பதே எனது ஆசை! ஏனெனில் லியோந்தினி நகரத்து கோர்ஜியாஸ் போல், சியோஸ் நகரத்து புரோடிக்கஸ் போல், எலிஸ் நகரத்து ஹிப்பியாஸ் போல் கற்பிக்கும் தகைமை உடையவர் ஒருவர் இருக்கிறார் என்றால், அது ஒரு சிறந்த விடயம் அல்லவா! இம்மூவருள் எவரும் எந்த மாநகரத்துக்கும் சென்று இளைஞர்களை ஈர்க்கும் வல்லமை படைத்தவர்; தத்தம் மாநகரவாசிகளுடன் பூண்ட பயனற்ற உறவைக் கைவிட்டு தன்னுடன் இணையும்படியும், அப்படி இணையும் சலுகைக்குப் பணம் செலுத்தும்படியும், அத்தகைய பேரத்தைக் குறித்து நன்றி பாராட்டும்படியும் இளைஞர்களைத் தூண்டும் வல்லமை படைத்தவர்.

 

இன்னொரு நிபுணர் பரோஸ் நகரத்தைச் சேர்ந்தவர். அவர் இந்த மாநகரத்துக்கு வந்திருப்பதை நான் கண்டறிந்துள்ளேன். அத்தகைய பேராசான்களுக்கு மற்றவர்கள் செலுத்திய மொத்தக் கட்டணத்தை விட அதிக கட்டணம் செலுத்திய ஒருவரை நான் சந்திக்க நேர்ந்தது. ஹிப்பொனிக்கசின் மகன் கல்லியாஸ் தான் அவர். ஹிப்பொனிக்கசுக்கு இரண்டு பையன்கள்.

 

ஹிப்போனிக்கசிடம் நான் சொன்னேன்: "உனது பையன்கள் குதிரைக் குட்டிகளாக அல்லது மாட்டுக் கன்றுகளாக இருந்தால், அவர்களது இயற்கைப் பண்புகளைச் செம்மைப்படுத்துவதற்கு ஒரு பயிற்றுநரைக் கண்டறிந்து பணிக்கமர்த்துவதில் எமக்குச் சிரமம் ஏற்படாது. அப்பயிற்றுநர் ஒருவகையான குதிரை வியாபாரியாக அல்லது பண்ணையாளராக இருப்பார். ஆனால் உனது பையன்கள் மனிதப் பிறவிகளாக இருக்கிறபடியால், யாரை அவர்களது போதனாசிரியராக அமர்த்த எண்ணுகிறாய்? மனித, சமுதாயப் பண்புகளைச் செம்மைப்படுத்துவதில் யார் நிபுணர்? உனக்குப் புதல்வர்கள் இருக்கிறபடியால், இந்தக் கேள்வியை நீ கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி ஒருவர் இருக்கிறாரா, இல்லையா?"

"ஆம், இருக்கிறார்" என்றார் அவர்.

"யார் அவர்? எந்த ஊர்? அவர் விதிக்கும் கட்டணம் எவ்வளவு?" என்று நான் கேட்டேன்.

"பரோஸ் நகரத்து எவெனஸ், சாக்கிரத்தீஸ்! அவரது கட்டணம் ஐந்து மினா" என்றார் அவர்.

 

உண்மையில் எவெனசுக்கு இந்தக் கலையில் பாண்டித்தியம் இருந்தால், மிதமான கட்டணம் பெற்று அதை அவர் போதிப்பவர் என்றால், அவர் பாராட்டப்பட வேண்டியவர் என்றே நான் எண்ணினேன். பெரியோர்களே, உண்மையில் இத்தகைய சங்கதிகள் எனக்குத் தெரியாது. இவற்றை நான் புரிந்துகொண்டிருந்தால், நான் செட்டைகட்டிப் பறந்திருத்தல் திண்ணம்.   

 

இங்கே உங்களுள் ஒருவர் குறுக்கிட்டு, "சாக்கிரத்தீஸ், நீ பார்க்கும் அலுவல் என்ன? உன்னைப் பற்றி இப்படி எல்லாம் தவறாகக் கூறப்படுவது எங்ஙனம்? நீ சாதாரண அலுவல்களில் மட்டும் ஈடுபட்டிருந்தால், உன்னைப் பற்றிய பேச்சும் அரட்டையும் கிளம்பியிருக்க மாட்டா; அவை நீ வழமையை மீறி நடந்தபடியால் கிளம்பியமை உறுதி அல்லவா? இதற்குரிய விளக்கத்தை நாங்களே கண்டுபிடிக்கக் கூடாது என்று நீ கருதினால், நீயே உனது விளக்கத்தை எங்களிடம் தெரிவிக்கலாமே!" என்று கேட்கக்கூடும்.

 

இது ஒரு நியாயமான வேண்டுகோளாகவே எனக்குப் படுகிறது. என்மீது போலிப்பழி கிளம்பிய காரணத்தை உங்களுக்கு நான் விளக்கியுரைக்க முயல்வேன். தயவுசெய்து கவனமாகக் கேட்கவும். நான் கருத்தூன்றிப் பேசவில்லை என்று உங்களுள் சிலர் எண்ணக்கூடும். எனினும் நான் முழு உண்மையையும் உங்களிடம் தெரிவிக்க உறுதியளிக்கிறேன்.

 

பெரியோர்களே, வேறெதனாலும் அல்ல, ஏறத்தாழ ஒரு வகையான ஞானத்தால் தான் இப்படி ஒரு பெயரை நான் ஈட்டிக்கொண்டேன். நான் கருதுவது எத்தகைய ஞானத்தை? அது மனித ஞானம் என்றுதான் நினைக்கிறேன். இந்த வரையறைக்கு உட்பட்டுப் பொருள்கொள்ளுமிடத்து, உண்மையில் எனக்கு ஞானம் இருப்பதாகவே தென்படுகிறது.

 

சற்று முன்னர் நான் குறிப்பிட்ட மேதைகள் மனித ஞானத்தை விஞ்சிய ஞானம் படைத்தவர்கள் என்று ஊகிக்க இடமுண்டு. அதற்கு வேறு விளக்கம் அளிக்கும் விதம் எனக்குத் தெரியாது. அத்தகைய ஞானம் என்னிடம் இல்லை என்பது உறுதி. என்னிடம் உண்டு என்று கூறுபவர் எவரும் ஒரு பொய்யர், வேண்டுமென்றே வசை கற்பிப்பவர்.

 

பெரியோர்களே, நான் உங்களிடம் கூறப்போவது எனது சொந்த அபிப்பிராயம் அல்ல. எனவே நான் மட்டுமீறி மார்தட்டுவதாகத் தென்பட்டால், தயவுசெய்து குறுக்கிட வேண்டாம். ஐயத்துக்கு இடங்கொடாத பாண்டித்தியம் படைத்த இறையிடம் உங்களை நான் பாரப்படுத்தப் போகிறேன். என்னிடம் எத்தகைய ஞானம் உண்டோ அத்தகைய ஞானத்துக்குச் சாட்சியாக தெல்பிப் பதியில் உறையும் தெய்வத்தை நான் அழைக்க வேண்டியுள்ளது.

 

சயரபோனை உங்களுக்குத் தெரியும் அல்லவா! அவர் இளமை தொட்டு எனது நண்பர். நல்ல குடியாட்சிவாதி. அண்மையில் சர்வாதிகாரிகளை நாடுகடத்தி, குடியாட்சியை மீண்டும் நிலைநாட்டுவதில் அவர் உங்களுடன் சேர்ந்து தொண்டாற்றியவர். அவர் எப்படிப்பட்டவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் எந்த அலுவலையும் மேற்கொண்ட கையோடு, அதை ஊக்கமுடன் நிறைவேற்றுபவர். போகட்டும்!


தெல்பிப்பதி

ஒருநாள் அவர் தெல்பித்தலத்துக்குப் போய், தெல்பிப்பதியிடம் இந்த வினாவை எழுப்பியது உண்மை. பெரியோர்களே, ஏற்கெனவே உங்களிடம் கூறியிருக்கிறேன், தயவுசெய்து குறுக்கிட வேண்டாம்! என்னை விட ஞானம் மிகுந்தவர் எவரும் உண்டா என்று அவர் வினவினார். எவருமே இல்லை என்று தெல்பிப்பூசகி விடையளித்தார். இன்று சயரபோன் உயிருடன் இல்லை. அவரது சகோதரன் இங்கு நீதிமன்றில் இருக்கிறார். அவர் எனது கூற்றுக்குச் சான்று பகர்வார்.

 

நான் இதை உங்களிடம் தெரிவிக்கும் நோக்கத்தை தயவுசெய்து எண்ணிப் பார்க்கவும். எனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி முதலில் எப்படித் தொடங்கியது என்பதை உங்களுக்கு நான் விளக்க விரும்புகிறேன். தெல்பிப் பதியின் விடையாக வெளிவந்த இறைவாக்கை நான் கேள்விப்பட்டபொழுது, என்னையே நான் வினவினேன்: தெல்பிப்பதி கருதுவது என்ன? ஏன் தெல்பிப்பதி தெளிவான மொழியில் பேசவில்லை? பெரியோர்களே, நான் பெருஞானமோ, குறுஞானமோ படைத்தவன் என்று கொள்வதற்கு எனக்கு அருகதை இல்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்டவன். எனவே உலகிலேயே மிகுந்த ஞானவான் நானே என்று வலியுறுத்தும் தெல்பிப்பதி கருதுவது என்ன? தெல்பிப்பதி பொய்யுரைக்க முடியாது; பொய்யுரைத்தலாகாது.

 

அதையிட்டுக் கொஞ்சக்காலம் நான் திகைத்துப் போயிருந்தேன். ஈற்றில் மிகுந்த தயக்கத்துடன் அக்கூற்றின் உண்மையை நான் இப்படி உரைத்துப்பார்க்க முற்பட்டேன்: பெரும் ஞானவான் என்று பேரெடுத்த ஒருவரை நான் சந்திக்கச் சென்றேன். அவரிடம் அந்த இறைவாக்கைப் பொய்ப்பிப்பதில் என்னால் வெற்றிபெற முடிந்தால், அதை எனது ஞான தெய்வத்திடம் சுட்டிக்காட்டி, "நானே மிகுந்த ஞானவான் என்று தாங்கள் கூறினீர்களே! ஆனால் இதோ என்னிலும் மிகுந்த ஞானவான் ஒருவர் இருக்கிறாரே!" என்று மார்தட்டலாம் அல்லவா?

 

சரி, அவரை நான் தீர ஆராய்ந்து பார்த்தேன். அவர் பெயரை நான் கூறத் தேவையில்லை. ஆனால் எங்கள் அரசியல்வாதிகளுள் அவர் ஒருவர். அவரை நான் ஆய்விட்டபொழுது, எனக்கு இப்படி ஒரு பட்டறிவு ஏற்பட்டது. பலரது கண்களில், ஏன் அவரது சொந்தக் கண்களில் கூட, அவர் ஒரு ஞானவானாகவே தென்பட்டவர். ஆனால் அவருடன் நான் உரையாடியபொழுது, உண்மையில் அவர் ஒரு ஞானவான் அல்ல என்ற எண்ணமே என் உள்ளத்துள் பதிந்தது. தன்னை ஒரு ஞானவானாக அவர் கருதியிருந்தார்; உண்மையில் அவர் ஒரு ஞானவான் அல்ல என்பதை அவருக்கு உணர்த்தும் முயற்சியில் பிறகு நான் இறங்கியபொழுது, எனது முயற்சியால் அவருக்கும், உடனிருந்த பலருக்கும் முகங்கடுத்தது.

 

நான் எழுந்து நடந்தபடியே சிந்தித்துப் பார்த்தேன்: சரி, நான் அவரை விட மிகுந்த ஞானவான் என்பது உறுதியாகத் தெரிகிறதே! எப்படி என்றால், கொட்டமடிக்கும் அளவுக்கு எங்கள் இருவருக்கும் எந்த அறிவும் கிடையாது; ஆனாலும் தான் அறியாத எதையோ அறிந்தவர் என்று அவர் நினைக்கிறார் போலும்; நானோ எனது அறியாமையை நன்கு உணர்ந்துகொண்டவன்; அதாவது நான் அறியாததை அறிந்தவன் என்று நான் கொள்ளவில்லை; அந்த வகையில், அந்தக் குறுகிய வரையறைக்குள், நான் அவரை விட மிகுந்த ஞானவான் என்று படுகிறது.

 

அதன் பிறகு அவரைவிட மிகுந்த ஞானவான் என்று பேரெடுத்த ஒருவரை நான் சந்திக்கச் சென்றேன். திரும்பவும் என் உள்ளத்துள் அதே எண்ணமே பதிந்தது. அங்கே கூட அவருக்கும், உடனிருந்த பலருக்கும் முகங்கடுத்தது.

 

அதிலிருந்து ஒருவர் பின் ஒருவராக நான் பலரைச் சந்தித்தேன். அதேவேளை பிறர் என்னை வெறுக்கும்படியாக நான் நடந்துகொள்கிறேனே என்பதை உணர்ந்து வேதனைக்கும், திகிலுக்கும் உள்ளானேன். ஆனாலும் எனது சமயக் கடமையை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற உணர்வு என்னை உந்தியது. இறைவாக்கின் பொருளை நான் கண்டறிய முயன்றபடியால், அறிவாளி என்று பேரெடுத்தோர் அனைவருடனும் நான் உரையாட நேர்ந்தது. போனால் போகட்டும், பெரியோர்களே, நான் ஒளிவுமறைவின்றி என் உள்ளத்துள் பதிந்ததை நேர்மையுடன் உங்களிடம் கூறிவிட வேண்டும். இறையாணைப்படி எனது புலனாய்வை நான் மேற்கொள்ளுந்தோறும், மாபெரும் ஞானவான்கள் என்று பேரெடுத்தோர் ஏறக்குறைய முற்றிலும் ஞானவலு குன்றியோராகவே எனக்குத் தென்பட்டார்கள்; அவர்களைவிட அறிவில் தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்டோர் நடைமுறை நுண்மதி மிகுந்தவர்களாகத் தென்பட்டார்கள்!

 

இறைவாக்கின் உண்மையை ஐயந்திரிபற நிச்சயிப்பதற்கு நான் மேற்கொண்ட ஒருவகைப் பயணமாக எனது அருமுயற்சிகளைக் கணிக்கும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அதன்படி அரசியல்வாதிகளை முடித்துக்கொண்டு நாடகக் கவிஞர்கள், இசைக் கவிஞர்கள், எஞ்சிய கவிஞர்கள் அனைவரிடமும் சென்றேன். அவர்களுடன் ஒப்பிடுமிடத்து நான்  ஓர் அறிவிலி என்பதை அம்பலப்படுத்துவதற்கு அங்கே வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பினேன். அவர்களுடைய தலைசிறந்த படைப்புகள் என்று நான் கருதியவற்றைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு, அவர்கள் எழுதியவற்றின் பொருளைக் குறித்து அவர்களிடம் நான் நுணுகி வினவுவது வழக்கம். கதையோடு கதையாக எனது சொந்த அறிவைப் பெருக்கும் நம்பிக்கையுடன் அந்த வழக்கத்தைக் கைக்கொண்டேன்.

 

சரி, பெரியோர்களே, உங்களுக்கு உண்மையைக் கூறுவதில் எனக்குத் தயக்கம் உண்டு. ஆனாலும் அதைக் கூறத்தான் வேண்டும்.  கவிஞர்களை விட, பக்கத்தில் நின்றவர்களுள் எவருமே அவர்களுடைய கவிதைகளுக்குச் சிறந்த விளக்கம் அளிக்கக்கூடியவர்களாக விளங்கினார்கள் என்றால், அது மிகையாகாது. ஆதலால் கவிஞர்களையும் நான் கையோடு நிதானித்து விட்டேன். அவர்களைக் கவிதை எழுத வைத்தது ஞானம் அல்ல என்று நான் நிதானித்துக்கொண்டேன்; தமது விழுமிய சேதிகளின் பொருளை இம்மியும் அறியாமல் அவற்றை உதிர்க்கும் ஞானிகளிடமும் தீர்க்கதரிசிகளிடமும் நீங்கள் காண்பது போன்ற ஒருவகை இயல்பூக்கமே அல்லது உள்ளுந்தலே அவர்களைக் கவிதை எழுத வைத்தது என்று நான் நிதானித்துக் கொண்டேன்; முன்னர் நான் குறிப்பிட்டவர்களைப் போன்றவர்களே கவிஞர்களும் என்பது எனக்குத் தெளிவாகத் தென்பட்டது. அவர்கள் கவிஞர்கள் என்ற விடயம், ஏனைய சங்கதிகள் அனைத்தையும் தாங்கள் செவ்வனே புரிந்துகொண்டவர்கள் என்று அவர்களை எண்ண வைத்ததையும் நான் அவதானித்தேன். ஆனால் ஏனைய சங்கதிகளைப் பொறுத்தவரை அவர்கள் முற்றிலும் அறிவிலிகள். அதலால் அத்தகையோரை ஆய்விடும் முயற்சியையும் நான் கைவிட்டேன். அரசியல்வாதிகளை ஆய்விட்டுப் பயனடைந்த அதே உணர்வு கவிஞர்கள் விடயத்திலும் எனக்கு ஏற்பட்டது.

 

நான் ஈற்றில் நாடியது தேர்ச்சிபெற்ற கைவினைஞர்களை. எனக்குத் தொழினுட்பத் தகைமைகள் கிடையா என்பது எனக்கு நன்கு தெரியும். அவர்களோ எவரையும் ஆட்கொள்ளவல்ல அறிவு படைத்தவர்களாக விளங்குவார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன். அதில் நான் ஏமாற்றம் அடையவில்லை. நான் புரிந்துகொள்ளாத சங்கதிகளை அவர்கள் புரிந்துகொண்டிருந்தார்கள். அந்த வகையில் அவர்கள் என்னைவிட மிகுந்த ஞானவான்களாகவே விளங்கினார்கள். ஆனாலும், பெரியோர்களே, கவிஞர்களிடம் நான் அவதானித்த அதே குறைபாடு, துறைமைத்திறம் படைத்த இந்நிபுணர்களிடமும் தென்பட்டது. தமக்குத் தொழினுட்பத் தேர்ச்சி என்னும் வல்லமை இருப்பதால், ஏனைய விடயங்கள் அனைத்தையும், அவை எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததாயினும், தாங்கள் செவ்வனே புரிந்துகொண்டிருப்பதாக அவர்கள் வலியுறுத்தினார்கள். அது தவறு. அவர்களது ஞானம் நம்பிக்கை ஊட்டிய போதிலும், அவர்களின் தவறு அந்த ஞானத்தை விஞ்சியதாகவே எனக்குத் தென்பட்டது.

 

ஆதலால் நானே இறைவாக்கின் குழலூதியாக மாறினேன். அவர்களின் ஞானம் கொண்ட ஞானவானாக விளங்காமல், அவர்களின் அறியாமை கொண்ட அறிவிலியாக விளங்காமல், நான் முன்னர் எப்படி இருந்தேனோ அப்படியே இனியும் இருப்பதா, அல்லது இனிமேல் அவர்களைப் போல் அவ்விரு தன்மைகளும் கொண்டவனாக இருப்பதா என்று என்னையே நான் வினவினேன். நான் முன்னர் எப்படி இருந்தேனோ அப்படி இருப்பதே சிறந்தது என்று நானே இறைவாக்கிற்கு விடையளித்தேன்.

 

பெரியோர்களே, எனது புலனாய்வுகளின் விளைவாக என்மீது  பெரும்பகை கிளம்பியது. கடுங்கசப்புடன் கூடிய பகை நிலைகொண்டது. அதன் பெறுபேறாக வன்மம் கொண்ட கதைகள் பலவும் எழுந்தன. நான் ஒரு ஞானப் பேராசிரியர் என்ற கதை அவற்றுள் ஒன்று.

 

ஒருவர் ஒரு துறையில் ஞானவான் எனப்படுவதைப் பொய்ப்பிப்பதில் நான் வெற்றிபெறுந்தோறும், அத்துறையில் நான் அனைத்தும் அறிந்தவன் என்று உடனிருப்பவர்கள் கருதுவதால் அப்படி நேர்கிறது. ஆனால், பெரியோர்களே, மிகவும் உறுதிபடப் புலப்படும் உண்மை இதுவே:  அதாவது மெய்ஞானமோ இறைவனின் சொத்து; மனித ஞானமோ பெறுமதி குன்றியது அல்லது பெறுமதி அற்றது; இதை அந்த இறைவாக்கின் ஊடாக எங்களிடம் தெரிவிப்பது இறைவனின் பாணி; அவர் சாக்கிரத்தீஸ் என்று கூறியது ஆனானப்பட்ட என்னை அல்ல; வெறுமனே என்னை ஓர் எடுத்துக்காட்டாகக் கொண்டு எங்கள் அனைவரிடமும் அவர் கூறியதாகவே எனக்குத் தென்படுகிறது: "மனிதர்களே, உங்களுள் மிகுந்த ஞானவான் என்பவன், சாக்கிரத்தீசைப் போல், உண்மையில் அற்ப ஞானவானே" என்று அவர் கூறியதாகவே எனக்குத் தென்படுகிறது. 

 

ஆதலால்தான் அந்த இறையாணைக்குப் பணிந்து இன்னமும் நான் ஞானவான்களைத் தேடித்திரிகிறேன்; ஞானவானாகத் தென்படும் குடிமகன், அந்நியர் எவரதும் ஞானத்தை நான் ஆராய்ந்து பார்க்கிறேன்; அவர் ஞானமற்றவர் என்றால், இறைவாக்கை மெய்ப்பிக்கும் வண்ணம், அவர் ஞானமற்றவர் என்பதை அவரிடம் சுட்டிக்காட்டுகிறேன். நான் அரசியலிலோ எனது சொந்த அலுவல்களிலோ ஈடுபட முடியாவாறு இப்பணி என்னை ஈர்த்து வைத்துள்ளது. உண்மையில் என் தெய்வப்பணி என்னை மிகுந்த ஏழ்மைக்குள் ஆழ்த்தியுள்ளது.

 

எனக்கு இகழ்ச்சி ஏற்பட்டதற்கு இன்னொரு காரணம் உண்டு. செல்வந்த தந்தையரின் இளம் புதல்வர்கள் திளைப்புவேளை மிகுந்தவர்கள். மற்றவர்களிடம் குறுக்குவினாத் தொடுக்கப்படுவதை அவர்கள் கேட்டுத் திளைத்தார்கள். ஆதலால் அவர்கள் வேண்டுமென்றே என்னுடன் ஒட்டிக்கொண்டார்கள். என்னைத் தமது முன்மாதிரியாகக் கொண்டு மற்றவர்களிடம் அடிக்கடி வினாத்தொடுக்க முயன்றார்கள். தாம் எதையோ அறிந்தவர்கள் என்று எண்ணிறந்தோர் நினைக்கிறார்கள்; ஆனால் உண்மையில் அவர்கள் அறிவுகுன்றியவர்கள் அல்லது அறிவிலிகள் என்பதை இளைஞர்கள் கண்டுகொள்கிறார்கள்.

 

ஆதலால் பாதிப்புக்கு உள்ளானோர், இளைஞர்கள் மீதல்ல, என்மீது எரிச்சல்கொண்டு, "சாக்கிரத்தீஸ் என்றோர் அதிகப்பிரசங்கி இருக்கிறான்; அவன் ஒரு பீடை; இளையோரின் தலைக்குள் அவன் தவறான எண்ணங்களை இட்டு நிரப்புகிறான்" என்று முறையிடுகிறார்கள். "சாக்கிரத்தீஸ் என்ன பண்ணுகிறான்? அப்படி நீங்கள் முறையிடும்படி என்ன போதிக்கிறான்?" என்று நீங்கள் திருப்பிக் கேட்டால், பதில் கூறத் தெரியாமல், வாயை மூடிக்கொள்வார்கள்; தமது மனக்குழப்பத்தை ஒப்புக்கொள்ள முன்வரமாட்டார்கள்; மெய்யியலாளர் எனப்படும் எவர்மீதும் சுமத்தப்படும் வாடிக்கையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள்; விண்ணுலகத்துக்கு மேற்பட்ட சங்கதிகளையும்,  மண்ணுலகத்துக்கு கீழ்ப்பட்ட சங்கதிகளையும் தனது மாணவர்களுக்கு அவர் புகட்டுவதாகக் கூறுவார்கள்; கடவுளரை நம்பவேண்டாம் என்று அவர் போதிப்பதாகக் கூறுவார்கள்; வலுவற்ற வாதம் கொண்டு வலுவுற்ற வாதத்தை அவர் முறியடிப்பதாகக் கூறுவார்கள்.

 

முற்றிலும் அறிவிலிகளான அவர்களுக்கு உண்மையை ஒப்புக்கொள்வது, அதாவது தாங்கள் அறிவாளிகளாகப் பாசாங்குசெய்த குற்றத்தை ஒப்புக்கொள்வது, மிகுந்த அருவருப்பைக் கொடுப்பதாக எண்ணுகிறேன். தமது சொந்த மானம் காக்க அவர்கள் என்மீது பொறாமை கொண்டதாக எண்ணுகிறேன். அவர்கள் ஆற்றல் வாய்ந்தவர்கள். ஆட்பலம் மிகுந்தவர்கள். நெடுங்காலமாக உங்கள் காதுகளில் என்னை வன்மையாகக் கடிந்துரைத்து வந்தவர்கள். இப்பொழுது எனக்கெதிராகப் போலி வழக்கொன்றை அவதானமாகச் சோடித்து வைத்துள்ளார்கள்.


 

                           மெலிட்டஸ்            அனைட்டஸ்          இலைக்கன்                          மெலிட்டஸ், அனைட்டஸ், இலைக்கன் மூவரும் என்மீது வழக்குத் தொடுத்த காரணங்கள் இவையே. என்னால் இடருற்ற கவிஞர்கள் சார்பாக மெலிட்டசும், துறைஞர்கள்-அரசியல்வாதிகள் சார்பாக அனைட்டசும், நாவலர்கள் சார்பாக இலைக்கனும் என்மீது வழக்குத் தொடுத்துள்ளார்கள். எனவே தொடக்கத்தில் நான் கூறியது போல், உங்கள் உள்ளத்துள் ஆழமாக ஊன்றப்பட்டுள்ள தப்பெண்ணங்களை, எனக்குக் கிடைத்துள்ள குறுகிய நேரத்துள், என்னால் களையமுடிந்தால், நான் வியப்படைந்தே ஆகவேண்டும்.    

 

இவையே உண்மையான விபரங்கள், பெரியோர்களே! சிறிதோ, பெரிதோ எதையுமே ஒளிவுமறைவின்றி உங்கள்முன் வைத்துள்ளேன். இப்படி நான் வெளிப்படையாகப் பேசுவதே எனக்கு இகழ்ச்சி ஏற்படக் காரணம் என்று சற்று உறுதியாகவே நான் நம்புகிறேன். எனது கூற்றுகள் உண்மையானவை என்பதை இது மெய்ப்பிக்கிறது. என்மீது சுமத்தப்பட்ட பழியின் தன்மையையும், அடிப்படைகளையும் நான் சரிவர எடுத்துரைத்துள்ளேன் என்பதை இது மெய்ப்பிக்கிறது. அவற்றை இப்பொழுதோ இனிமேலோ நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், நான் எடுத்துரைத்தவாறே அவை அமைந்திருக்கக் காண்பீர்கள். முதலாவது தரப்பினர் என்மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு எனது பதில்வாதம் இது. தன்னை ஓர் உயர்நெறியாளர் என்றும் நாட்டுப்பற்றாளர் என்றும் வலியுறுத்தும் மெலிட்டசின் குற்றச்சாட்டுக்கும், அதன் பிறகு ஏனையோரின் குற்றச்சாட்டுக்கும் எனது பதில்வாதத்தை முன்வைக்மும் முயற்சியில் இனி நான் இறங்கப் போகிறேன்.

 

முதலில் அவர்களது சத்திய வாக்குமூலத்தை ஒரு புதிய வழக்குத்தொடுப்பாக எண்ணி ஆராய்ந்து பார்ப்போம். அது இந்த மாதிரி அமைந்திருக்கிறது: சாக்கிரத்தீஸ் இளைஞர்களின் உள்ளத்தைக் கெடுத்த குற்றவாளி;  அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுளரை விடுத்து, தானே சொந்தமாகக் கண்டுபிடித்த தேவர்களில் நம்பிக்கை கொண்ட குற்றவாளி.அத்தகைய குற்றச்சாட்டே என்மீது சுமத்தப்பட்டுள்ளது. அதன் அம்சங்களை இனி ஒவ்வொன்றாக ஆராய்வோம்:

 

நான் இளைஞர்களின் உள்ளத்தைக் கெடுத்த குற்றச்சாட்டு முதலாவது. மெலிட்டஸ் இங்கே அற்ப ஆதாரங்களைக் கொண்டு, ஆட்களை ஆணையிட்டழைத்து, விசாரணைக்கு உட்படுத்துகிறார். தான் என்றுமே சற்றும் நாட்டம் கொள்ளாத சங்கதிகளில் தனக்கு கரிசனையும் ஆவலும் இருப்பதாக அவர் மார்தட்டுகிறார். ஆதலால், பெரியோர்களே, இத்தகைய பாரதூரமான சங்கதியை ஒரு விளையாட்டாக எடுத்த குற்றத்தை மெலிட்டஸ் புரிந்திருப்பதாக நான் கூறுகிறேன். உங்கள் உள்ளம் நிறைவுறும் வண்ணம் அதை நான் மெய்ப்பித்துக் காட்டுகிறேன்

_________________________________________

தொடர்ச்சி: சாக்கிரத்தீஸ் வழக்குரை (2)

No comments:

Post a Comment