மாபெரும் செல்வந்தர்களின் அவலம்

கிளே காக்றெல்


நான் மாபெரும் செல்வந்தர்களுக்கு உளச்சிகிச்சை அளிப்பவன். அவர்களது வாழ்வு அவலம் மிகுந்தது. எனது செல்வந்த வாடிக்கையாளர்கள் பலர் ஐயுறவுக்கு உட்பட்டு, குறிக்கோளின்றி வருந்துகிறார்கள். மானக்கேடு, குற்ற உணர்வு, அச்சம் என்பவற்றுடன் மல்லாடுகிறார்கள்.   


நான் தற்செயலாகவே கோடாதிபதிகளுக்கு சிகிச்சையளிக்க நேர்ந்தது. ஒரு செல்வந்தர் எனக்கு வாடிக்கையாளராய் வந்து வாய்த்தார். தனக்குத் தெரிந்தவர்களிடம் எனது பெயரை அவர் தெரிவித்தார்.  மக்கள்தொகையில் இவர்கள்"ஒரு விழுக்காட்டினர்" எனப்படுகிறது. இவர்களது தொகை மிகவும் குறைவு. மிகவும் குறுகிய வட்டத்துள் இவர்கள் நடமாடுகிறார்கள்.


ஐயுறவு


காலப்போக்கில் மேற்படி செல்வந்தர்களை நான் பெரிதும் புரிந்துணர்ந்து கொண்டேன். ஒரு கோடாதிபதியாக விளங்குவதில் அப்படி என்ன சவால் இருக்க முடியும் என்று நீங்கள் கேட்கக் கூடும். சரி! உங்களுக்கு நெருக்கமானவர்களை உங்களால் நம்ப முடியவில்லை என்றால், உங்களுக்கு எப்படி இருக்கும்? அல்லது, உங்கள் வாழ்வில் நீங்கள் புதுக்கப் புதுக்க எதிர்கொள்ளும் ஒவ்வொருவரையும் நீங்கள் ஐயுற்றால், எப்படி இருக்கும்? 


“என்னிடம் அவர்கள் என்னத்தை எதிர்பார்க்கிறார்கள்? எப்படி அவர்கள் என்னை ஆட்டிப் படைக்கப் போகிறார்கள்? எனது பணத்துக்காக மட்டுந்தான் அவர்கள் என்னுடன் நட்புப் பாராட்டுகிறார்கள் போலும்!” இப்படித்தான் எனது வாடிக்கையாளர்கள் என்னிடம் திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். 


குறிக்கோள் இல்லை


எனது வாடிக்கையாளர்கள் குறிக்கோள் அற்றவர்கள். நீங்கள் படுக்கையிலிருந்து விழித்தெழத் தேவையில்லை என்றால்,  உளச்சோர்வு உங்களைப் பீடிக்கும். நீங்கள் கட்டியெழுப்பிய அல்லது இறப்புச்சொத்தாக ஈட்டிக்கொண்ட வணிகம் இப்பொழுது நீங்கள் இல்லாமலேயே இயங்குகிறது என்றால், நீங்கள் ஏன் வேலைக்குப் போவது பற்றி அலட்டிக்கொள்ள வேண்டும்? உங்கள் எஞ்சிய வாழ்க்கைத் தேவைகளுக்கும் இன்னும் பிறவற்றுக்கும் வேண்டிய ஏற்பாடுகள் ஏற்கெனவே செய்யபட்டுவிட்டன என்றால், அர்த்தமும் ஆசையும் அற்றவராய் நீங்கள் அல்லாட நேரலாம் அல்லவா? எனது வாடிக்கையாளர்களுக்கு வாழ்க்கை பெரிதும் சலித்துவிட்டது. அந்த வெறுமையை நிரப்பும் பொருட்டு அடுத்த உச்சத்தை தொடுவதற்கு அவர்கள் விரைந்தேறுகிறார்கள். 


பணம்


எனது வாடிக்கையாளர்களுள் பெரும்பாலோர் தமது வங்கிக் கணக்குகளை விட பாலுறவு அல்லது போதைமருந்து நுகர்வுப் பிரச்சனைகள் பற்றியே அதிகம் கதைக்க விரும்புகிறார்கள். பணத்தை ஒரு கேடுகெட்ட இரகசியமாகவே கருதுகிறார்கள். அதைப்பற்றிக் கதைக்க சங்கடப்படுகிறார்கள். குற்ற உணர்வு, மானக்கேடு, அச்சம் எனும் போர்வைக்குள் பணம் நிலைகொண்டுள்ளது. பணத்தைக் கொண்டு உங்கள் உளநலப் பிரச்சனைகளை வெற்றிகொள்ளலாம் என்று நீங்கள் எண்ணக்கூடும். உண்மையில் பணம் உங்களையும், உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களையும் உளநலப் பிரச்சனைகளுக்கு உள்ளாக்க வல்லது என்றே நான் கருதுகிறேன்.  


பிள்ளைகள்


தாழ்ந்த நிலையில் அரும்பி, வியக்கத்தக்க முறையில் மேலோங்கி, மாபெரும் ஊடக தாபனம் ஒன்றைக் கட்டியெழுப்பிய செல்வந்தர் ஒருவரை நான் அறிவேன். தன் வாழ்நாழ் முழுவதும் தனது வணிகத்தில் அவர் புலனைச் செலுத்தி வந்தார். அதேவேளை, தனது பிள்ளைகளை முழுவிருத்தி அடைந்த பிள்ளைகளாக வளர்க்கத் தவறிவிட்டார். “நான் வருந்த நேர்ந்தது போல் எனது பிள்ளைகள் வருந்தக்கூடாது” என்பதற்காக எனது வாடிக்கையாளர்களுள் பெருந்தொகையானோர் தமது வளரும் பிள்ளைகளுக்கு செல்லங்கொடுக்க விரும்புகிறார்கள். தியாகம், கடுமுயற்சி, தோல்வியைக் கண்டு துவளாமை, மீட்சித்திறன்... போல் எவை தம்மை வெற்றியீட்ட வைத்தனவோ அவற்றை தமது பிள்ளைகள் பட்டறியாவாறு தடுத்து விடுகிறார்கள். அதிக செல்லத்துக்கு உள்ளாகும் பிள்ளை, தான்  சிறப்புரிமைக்குரியவர் என்ற நினைப்புடன்தான் வளரும். தன்னம்பிக்கை, தன்மானம், திடசித்தம் குன்றிய ஒருவராகவே மாறும்.  


செல்வம் மிகுந்த பிள்ளைகள் மேட்டிமைவாய்ந்த விடுதிப் பாடசாலைகளில் கற்று, மேட்டிமைவாய்ந்த பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, தமக்கே உரிய மொழியையும், பண்பாட்டையும் ஈட்டிக்கொள்வர். செல்வம் குன்றிய மக்களுடன் அவர்கள் நட்புக்கொள்வதரிது. இது அவர்களை தனிமை உணர்வுக்கும், ஒரு சிறு குமிழுக்குள் அகப்பட்ட உணர்வுக்கும் இட்டுச்செல்லக் கூடும். 


தாம் உறவு கொள்ளக்கூடியோரை இவ்வுலகில் அவர்கள் காண்பதரிது. பிறரைப் புரிந்துணர்ந்து கொள்ளாத நிலைக்கு அவர்களை அது இயல்பாகவே இட்டுச்செல்கிறது. தமது செல்வந்த வட்டத்துக்கு வெளியே அவர்கள் நடந்துகொள்ளும் விதம் விசித்திரமாய் இருக்கும். மனிதருக்குரிய ஈடுபாடின்றி அவர்கள் சங்கடப்படுவதையும், ஒருவரை ஒருவர் படுமோசமாக நடத்துவதையும் காணலாம். எமக்கு மருட்சியும் மிரட்சியும் ஊட்டும்  அனுபவம் அது. (ஒரு பணிவிடையாளருடன் முரட்டுத்தனமாக அல்லது உடன்பிறந்தாருடன் கொடூரமாக நடந்துகொள்வதனால் ஆகும்) விளைவுகளுக்கு உள்ளாகாமல் வாழ்பவர் அப்படி எல்லாம் செய்வதற்கு எதுவித காரணமும் இல்லை. காலப்போக்கில் அத்தகைய நடத்தை வழமைப்பட்டுவிடும், ஏற்கப்பட்டுவிடும்.   அத்தகைய விதிமுறையற்ற வாழ்வு எவர்க்குமே நல்லதல்ல.


சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் செல்வந்தப் பிள்ளைகள் தமது பிதாவின் இடத்தை நிரப்புவதில் போட்டி போடுவதைக் காண்கிறோம்.  தன்னால் அது முடியும் என்பதை எவராலும் எண்பிக்க முடியாது போவதையும் காண்கிறோம். எவ்வித பொறுப்பையும் ஏற்க அறவே தயாரற்ற நிலையிலேயே அவர்கள் வளர்ந்துள்ளார்கள். செல்வந்தப் பெற்றோர் குற்ற உணர்வும், மானக்கேடும் மிகுந்தவர்கள். ஆதலால் தமது செல்வத்தை நிருவகிக்கும் சவாலை எதிர்கொள்ளும் வண்ணம் தமது பிள்ளைகளை அவர்கள் தயார்ப்படுத்துவதில்லை. “மூன்று தலைமுறைகளுக்குள் செல்வம் தேய்ந்துவிடும்” எனும் முதுமொழியில் உண்மை உண்டு. 


“நாங்கள் பணத்தைப் பற்றி என்றுமே கதைத்ததில்லை. எவ்வளவு பணம் இருக்கிறது என்பதோ, அதை வைத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதோ, அதை எப்படிப் பாதுகாப்பது என்பதோ எனக்குத் தெரியாது. அதெல்லாம் கேடுகெட்ட இரகசியம்” என்றெல்லம் செல்வந்தப் பிள்ளைகள் சொல்வது என் காதில் விழுந்த வண்ணம் உள்ளது. 

______________________________________________________________________

Clay Cockrell, I’m a therapist to the super-rich: they are as miserable as Succession makes out, London Guardian, 2021-11-22, translated by Mani Velupillai, 2021-11-24.

https://www.theguardian.com/commentisfree/2021/nov/22/therapist-super-rich-succession-billionaires?s=09

No comments:

Post a Comment