மக்களுக்கு நீதிகோரி ஓலமிடும் 

செம்மணிப் புதைகுழிகள்

அகழ்வாராய்ச்சியின் முதலாவது கட்டம் முடிவுடைந்த பிறகு, 

ஆகக்குறைந்தது 19 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதை

தடயவியல்-தொல்லியலர் பேராசிரியர் ராஜ் சோமதேவா உறுதிப்படுத்தினார். 

சகுனா எம். கமகே

வெறுமனே சான்றுகள் மாத்திரமல்ல, குற்றச்சாட்டும் மனச்சாட்சியின் நிலைகுலைவும் கூட செம்மணியில் தென்படுகின்றன; எலும்புகள் மட்டுமல்ல, திட்டமிட்டு தணிக்கை செய்யப்பட்ட நிகழ்வுகளும், போரையடுத்து, மக்களின் மறதிக்கோளாறைப் பயன்படுத்தி மெளனத்தை நிலைநாட்டிய ஓர் அரசினால் நெரிக்கப்பட்ட குரல்வளைகளும் கூட இத்தீவில் புதையுண்டவை என்பதை காத்திரமான முறையில் செம்மணி எமக்கு நினைவூட்டுகிறது.

மீண்டும் செம்மணி ஓலம் கேட்கிறது

அலரிப்பூ மரத்தடியில் நீ வீழ

உன் மார்பிலிருந்து குருதி பாய

இந்த நாட்டுக்கல்ல,

இந்த மண்ணுக்கே

உனை நான்  ஈந்தேன்.

எழாதே! நீ எழுந்தால்

நாம் எங்கே போவது?

நீதியே புதையுண்ட பிறகு 

மக்கள் எங்கே போவது? இனி,

யார்தான் குரல்கொடுப்பார் மக்களுக்கு?

சொற்களுள் அடங்காத ஒரு போர் நிகழ்ந்த காலத்தில், ரத்ன சிறி விஜேசிங்கா எழுதிய மேற்படி சிங்களக் கவிதை வரிகள், இன்று மீண்டும் எதிரொலித்து, மேலும் எம்மை வருத்துகின்றன.

2025 யூலைமாதம் செம்மணியில் மறு அகழ்வாராய்ச்சி துவங்கிய 7ம் நாள், ஒரு மண்வெட்டி ஆழங்கொண்ட புதைகுழியின் முன்னே, நான் நின்றிருந்தேன். ஒரு பொம்மையுடன் கூடிய பள்ளிப்பையை ஏந்தியபடி ஒரு பிள்ளையின் எலும்புக்கூடு தென்பட்டது. ஐ. நா. அனைத்துலக சிறார் அவசரகால நிதியம் (UNICEF) வழங்கிய பள்ளிப்பை அது! 

இது வெறுமனே ஒரு போரின் நினைவுத் தடமல்ல; தண்டனைக்கு உட்படாமல் இழைக்கப்படும் கொடுமையின் தொடர்ச்சி இது; செம்மணியில் நாம் செவிமடுப்பது கடந்தகாலத்தின் எதிரொலி அல்ல; அங்கு நிகழ்காலம் வெகுண்டெழுந்து குமுறுகிறது; அந்த மண்ணே மெளனத்தை விரட்டி அடிக்கிறது. 

செம்மணிக்கு மீள்வது என்பது, எமது நினைவை நாம் எதிர்கொள்வதாகும்; எமது மெளனத்துடன் நாம் மல்லாடுவதாகும்; நினைப்பதற்கல்ல, மறப்பதற்கு வகுக்கப்பட்ட ஒரு நீதிக் கட்டமைப்பின் மீது நாம் குற்றம் சுமத்துவதாகும். 

1996-ல் கிரிசாந்தி குமாரசாமி கூட்டு வன்புணர்ச்சிக்கு உட்பட்டு, கொலையுண்டதை அடுத்து, செம்மணியில் பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்று, 30 ஆண்டுகள் கழித்து, அச்சிறுமியின் கதையும், இங்கும் அங்குமாக எமது மண்ணில் புதையுண்ட எண்ணிறந்த மக்களின் கதைகளும் மறுபடி வெளிவந்து, மறக்கடிக்கும் கலையில் துறைபோன எமது நாட்டைப் பிடித்து ஆட்டுகின்றன. 

காரணம்: மெளனம் தற்செயலாய் நேர்வதல்ல; அது திட்டமிட்டு அரங்கேற்றப்படுவது; மறுப்பின் முழக்கமே மெளனம்; அந்த மெளனம் இன்னமும் கலைக்கப்படவில்லை.

செம்மணியில் மறு அகழ்வாராய்ச்சி: படிமுறையும் வேதனையும் 

செம்மணியில் தெரியவந்த பாரிய புதைகுழிகளை மறுபடி அகழும் பணி 2025-ல் தற்செயலாகவே துவங்கியது. பெப்ரவரி மாதம் ஒரு கட்டுமானப் பணியின்பொழுது எலும்புகள் தென்பட்டபடியால், அதிகாரபூர்வமாக நடவடிக்கை எடுக்க நேர்ந்தது. 

ஆனாலும் அதனைத் தொடர்ந்து, அதற்குரிய அலுவல்கள்  ஒருங்கிணைக்கப்பட்டு, பரந்துபட்ட முறையில் முன்னெடுக்கப்படவில்லை. பொருள்வசதி குன்றிய நிலையில், அரைகுறையாக, ஏனோதானோ என்று பதில்வினையாற்றும் மற்றுமோர் அரசியல் நடவடிக்கையாய்  அது மாறியது. 

அகழ்வாராய்ச்சியின் முதலாவது கட்டம் முடிவடைந்த பிறகு, ஆகக்குறைந்த்து 19 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதை தடயவியல்-தொல்லியலர் பேராசிரியர் ராஜ் சோமதேவா உறுதிப்படுத்தினார். பிறந்து 10 மாதங்கள் ஆகாத 3 குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் அவற்றுள் அடங்கும்.  

சுரும்பூர்தி மூலமும், செய்மதி மூலமும் எடுக்கப்பட்ட படங்களைக் கொண்டு, மேலும் புதைகுழிகள் இருக்கக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டன. ஆயினும் அவ்வாறு அறியப்பட்ட இடங்களுள் 40 விழுக்காட்டிலும் குறைந்தளவு பகுதியே அகழ்ந்து பார்க்கப்பட்டது. 

செம்மணி, ஒரு தனிப்பட்ட அகழ்வுப்புலம் அல்ல; நாடு புண்பட்ட இடம் இது; உண்மை புதையுண்ட இடம் இது. 2025 யூலை 4-ம் திகதி வெள்ளிக்கிழமை மேலும் 4 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2 பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அவற்றுள்  அடங்குவதாக நம்பப்படுகிறது. தற்பொழுது இடம்பெற்றுவரும் அகழ்வாராய்ச்சியின் மூலம் இதுவரை 40 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காணாமல் போக்கடிக்கப்பட்டவர்களது குடும்பங்களின் பிரதிநிதியாக மனித உரிமைகள் சட்டவாளர் ரனிதா ஞானராஜா செயற்படுகிறார். சம்பந்தப்பட்ட குடும்பங்கள் வெறும் பார்வையாளர்களாக அல்ல, இழப்புகளின் நினைவைக் கட்டிக்காப்பவர்களாகச் செயற்படுகிறார்கள். 

யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 600 குடும்பங்கள் இன்னமும் தம்மவரைத் தேடித்திரிகிறார்கள். ஏற்கெனவே நிகழ்ந்த காட்டிக்கொடுப்புகள், நிறைவேறாத உடல்மீட்புகள்,  நீதித்துறையின் தட்டிக்கழிப்புகள், ஈற்றில் அரசியல் மெளனம் போன்றவை மேற்கொண்டும் நிகழக்கூடுமெனப் பலரும் அஞ்சுகிறார்கள். 

அவர்கள் அஞ்சுவதற்குப் போதிய நியாயம் உண்டு. மன்னார் முதல் களவாஞ்சிக்குடி வரை, மாத்தளை முதல் சூரியக்கந்தை வரை பாரிய புதைகுழிகளை அகழ்ந்தாராய்ந்த போதெல்லாம், அவற்றுக்குத் தடங்கல் விளைந்த வரலாறு படைத்தது இலங்கை. 

2018 முதல் 2019 வரை மன்னாரில் இடம்பெற்ற அகழ்வாராய்ச்சியில் 346 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இற்றைவரை அவை இன்னாரின் உடல்கள் என்பது உறுதிப்படுத்தப்படவோ, அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார் என்பது  நிச்சயிக்கப்படவோ, அதற்கு இழப்பீடு முன்வைக்கப்படவோ இல்லை. அதிகாரிகளின் கவலையீனம் என்பது வெறுமனே படிமுறைத் தவறல்ல; அது அறநெறிக்கு நேர்ந்த கேடு! அறநெறிக்கு நேர்ந்த குலைவு!

மானுடப்பண்பின் மறைவு

செம்மணியில் தென்படும் துன்பியல் வெறுமனே இந்த நாட்டில் மட்டும் இடம்பெறவில்லை; உலகம் முழுவதும் பரந்துபட்ட முறையில் புதையுண்டுவரும் மானுட விழுமியங்களுடன் அது பின்னிப் பிணைந்தது.   

இந்த 2025-ம் ஆண்டில், காசாவிலிருந்து போர்க் குற்றங்கள் நேரடியாக ஒளிபரப்பப்படும் உலகில், அங்கு சிறுவர்களின் இறப்புகள் நிகழுந்தோறும் எண்ணப்படும் உலகில், ஐக்கிய நாடுகள் அவையில் பெரிய வல்லரசுகளின் வெட்டுவாக்குகளினால் அனைத்துலகச் சட்டம் முடங்கிப்போன உலகில் நாங்கள் வாழுகின்றோம். இப்பொழுதெல்லாம் தலைமறைவாக அல்ல, அபட்டமாகவே இனப்படுகொலை புரியப்படுகிறது. 

உலகில் காத்திரமான விசையாக விளங்கிய குடியாட்சி நெறிசார்ந்த மானுடத்துவம் மடிவதை இப்பொழுது நாம் காண்கிறோம். இரண்டாம் உலகப் போர்க்களத்து சாம்பல்மேட்டில் முளைவிட்ட நிறுவனங்கள், அமைதியையும் கண்ணியத்தையும் கட்டிக்காக்கவென அமைக்கப்பட்ட நிறுவனங்கள், இப்பொழுது செல்லாக்காசுகள் ஆக்கப்பட்டுள்ளன. 

ஐ. நா. மனித உரிமைகள் மன்றம் ஏதேதோ பேசுகின்றது. ஆனால் தண்டனைக்கு உட்படாமல் நடத்தப்படும் புவியரசியல் அரங்கில், அதன் சொற்கள் கனதி குன்றி நிற்கின்றன. 

காசாவில் காலந்தள்ளும் குடிமக்கள் மீது இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்வதும்,  அதனை நிறுத்த ஐ. நா. பாதுகாப்பு மன்றம் இம்மியும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் அதன் நிலைகுலைவை உறுதிப்படுத்துகின்றன. 

2025 யூன்மாத இறுதியில் ஐ. நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோக்கர் தேர்க், பாரிய செம்மணிப் புதைகுழிப் புலத்துக்கு மிகுந்த பற்றுணர்வுடன் சென்று, அங்கு 3 குழந்தைகள் உட்பட 19 பேரின் எலும்புக்கூடுகள் அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டார்; “மிகவும் உணர்ச்சிவசப்பட வைக்கும்” நிலைவரம் என்று கருத்துரைத்தார்; சுதந்திரமான தடயவியல் நிபுணர்கள் அவசரமாகத் தேவைப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார்; அகழ்வில் சம்பந்தப்பட்ட குடும்பங்களையும், சட்டவாளர்களையும் சந்தித்தார்; அகழ்வுக்கு ஐ. நா. பொறுப்பேற்க வேண்டும் என்ற அவர்களது மன்றாட்டத்தைச் செவிமடுத்தார்; நீதிகோரும் குடும்பங்களுடன் தோழமை பூணுவதைக் குறிக்குமுகமாக, “அணையா விளக்கு”டன் அஞ்சலி நடைபெறும் இடத்தில் மலர்கள் தூவினார்; செம்மணியைக் கவனத்தில் கொண்டதன் மூலம், இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் தீரா விளைவுகளைக் குறித்துக்கொண்டார்; பொறுப்பேற்பு, வெளியுலகப் பொறுப்பு இரண்டையும்  வலியுறுத்தினார். 

அந்த வகையிலே செம்மணி உலக வரலாற்றில் ஓர் அங்கமாகிறது; மீறப்பட்ட உடன்பாடுகளும், நிறைவேற்றப்படாத கடப்பாடுகளும், திட்டமிட்டு மறுக்கப்பட்ட நீதியும் புதையுண்ட புலமாக இப்பூவுலகு மாறிவிட்டது என்பதை அது குறிக்கிறது.    

மாறுகால நீதியும், மறதிக்கோளாறும்

செம்மணியின் முதலாவது புதைகுழியை இலங்கை அரசு அம்பலப்படுத்தவில்லை; 1998-ல் ஒரு தனியாளே அதை அம்பலப்படுத்தினார். கிரிசாந்தி குமாரசாமியை வன்புணர்ச்சிக்கு உட்படுத்திக் கொலைசெய்த குற்றத்தில் பங்குவகித்தமைக்காக,  இறப்புத்தண்டனையை எதிர்நோக்கியிருந்த, இளம்படைஞர் சோமரத்தின ராஜபக்சாவே இப்பாரிய புதைகுழிகளை அம்பலப்படுத்தினார். குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும், உடல்கள் புதைக்கப்பட இடங்களையும் அவர் அம்பலப்படுத்தினார். அப்பொழுது இலங்கை அரசு முன்வந்து நீதியை நிலைநாட்டுவதற்குப் பதிலாக, சோமரத்தினா மீது சேற்றை வாரி இறைத்தது. 

ஈற்றில், அதாவது 1999-ல், அகழ்வாராய்ச்சி துவங்கியபோது, 15 உடல்கள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டன. பலரின் கண்களும், கைகளும் கட்டப்பட்டிருந்தன; கொலைஞர்கள் நேருக்குநேர் நின்று, அவர்களைச் சுட்டுப் புதைத்தது போல் தென்பட்டது. எஞ்சிய புதைகுழிகள் என்று சந்தேகிக்கப்பட்டவை என்றுமே அகழப்படவில்லை. இது தற்செயலான ஒன்றல்ல. 

அடுத்தடுத்து எந்தக் கட்சி, எந்த ஆணையுடன் ஆட்சியேற்றாலும், அவை எல்லாம் செம்மணியை மறந்துவிடத் தீர்மானித்தன; சான்றுத் தடம் பதுக்கப்பட்டது; உயரதிகாரிகள் பாதுகாக்கப்பட்டார்கள்; சாட்சிகள் அச்சுறுத்தப்பட்டார்கள் அல்லது காணாமல் போக்கடிக்கப்பட்டார்கள். 

குற்றத்தீர்ப்புக்கு உள்ளான படையினர் என்ன பாடு என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர்களுள் பலர் ஜனாதிபதியினால் மன்னிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 2010 வாக்கில் அவர்கள் பொதுவாழ்வுக்கு மீண்ட்டுவிட்டார்கள் போலும்!

சட்டப் விற்பன்னர் கிசாலி பிந்தோ ஜயவர்த்தனா செவ்வனே எடுத்துரைத்தது போல், “இங்கு சான்றுகள் கிடையாதபடியால் மாறுகாலநீதி தடங்கலுக்கு உள்ளாகவில்லை; அதிகாரபீடத்தின் உள்ளேயும், அச்சத்தின் உள்ளேயும் உண்மை திட்டமிட்டுப் புதைக்கப்பட்டுள்ளபடியால்தான், இங்கு மாறுகாலநீதி தடங்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.” 

தேசிய மக்கள் சக்தி அரசின் மெளனம் காதை அடைக்கிறது

நிலையூன்றிய ஊழல், தங்குதடையற்ற படைமயமாக்கம், மேல்தட்டு அரசியற் குழாத்தினரை தண்டனைக்கு உள்ளாகாவாறு என்றென்றும் பாதுகாக்கும் கட்டுக்கோப்பு என்பவற்றைக் குறித்து விசனமடைந்து அலைதிரண்ட மக்களின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தி 2024ல் ஆட்சியேற்றது. உண்மை, நீதி, மீளிணக்கம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அக்கட்சி அள்ளிவீசியது. தென்னிலங்கைச் சிங்கள மக்களிடையே மட்டுமல்ல, தமிழ்மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கிலும் கிழக்கிலும் கூட அது வாக்குகளை வாரிச்சென்று வெற்றிபெற்றது. 

தேசிய மக்கள் சக்தி ஆட்சியேற்று 8 மாதங்கள் கழிந்தும் கூட, செம்மணி குறித்த மெளனம் காதை அடைக்கிறது. அதிகாரிகள் எவரும் வந்து பார்க்கவில்லை; பொது அறிவிப்பு விடுக்கப்படவில்லை; ஒரு சைகையேனும்  காட்டப்படவில்லை; போகடி போக்காகவேனும் ஒரு கருத்து உதிர்க்கப்படவில்லை. 

நீதிக்காகப் போராடுவதாக அரசாங்கம் மார்தட்டுகிறது; ஆனால், இலங்கையின் படுமோசமான பாரிய புதைகுழிகளுள் ஒன்றை மறுபடி அகழ்ந்தாராய்வதிலும், காணாமல் போக்கடிக்கப்பட்டோரின் எலும்புகள் அங்கு மண்டிக்கிடப்பதிலும் அதே அரசாங்கம் அறவே பராமுகம் காட்டுகிறது.   

இந்த முறையாவது நீதித்துறை சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்படும் என்று சிலர் வாதிக்கிறார்கள். ஆயினும், அரசியல் தலைமையின் மெளனத்தை, குறிப்பாக திறந்தமனதுடன் செயற்படுவதாக மார்தட்டும் ஒரு கட்சியின் மெளனத்தை, நாம் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது. 

சூரியக்கந்தை முதல் மாத்தளை வரை, தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் பலரும் அரச பயங்கரத்தால் தாக்குண்டவர்கள். வன்முறை புரியும் இயந்திரத்தையும், தண்டனைக்கு உள்ளாகாத கட்டமைப்பின் தாக்கத்தையும் அவர்கள் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டவர்கள். அப்படி இருந்தும் கூட, இன்று ஆட்சியில் அவர்கள் முடங்கி  இருப்பதாகவே தெரிகிறது. இது திட்டமிட்டுக் கவனமாக நடத்தும் அரசியலாகுமா? அல்லது, இன்னும் அமைதியாகவும், நயவஞ்சகமாகவும் குற்றத்துக்கு உடந்தையாய் இருப்பதாகுமா? 

தேசிய மக்கள் சக்திக்கு இன்னமும் ஒரு வாய்ப்பிருக்கிறது. சொற்சிலம்பத்தின் ஊடாக அல்ல, ஆட்சியாளரால் நெடுங்காலமாகக் கைவிடப்பட்ட சமூகங்கள் கடந்த தேர்தலில் வழங்கிய ஆணையின் ஊடாக ஈட்டிய வாய்ப்பு; எல்லா இனங்களையும் உள்ளடக்கி, அறம் காக்க அது ஈட்டிய அரிய வாய்ப்பு; அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, உண்மையைக் கண்டறியும் பொறிமுறை ஒன்றை அவர்கள் தோற்றுவிக்கலாம்; பல தரப்புகளும் பங்குபற்றும் வண்ணம், பலியானவர்களின் கண்ணியத்தைப் பேணும் வண்ணம், நம்பத்தகுந்த, வெளிப்படையான பொறிமுறை ஒன்றை அவர்கள் தோற்றுவிக்கலாம். 

காலம் கடந்து வருகிறது; அரசாங்கம் எவ்வளவு காலத்துக்கு மெளனம் காக்கிறதோ அவ்வளவு காலத்துக்கு அதன் மெளனம் காதை அடைக்கப் போகிறது; பக்கஞ்சாரா மெளனம் அல்ல, காட்டிக்கொடுக்கும் மெளனம் காதை அடைக்கப் போகிறது.

எதிர்முனைப்பட்ட ஊடகங்கள்

2025-ம் ஆண்டு செம்மணியில் பாரிய புதைகுழிகள் மறுபடி அகழப்பட்டபொழுது, அங்கு எலும்புகள் மாத்திரம் வெளிப்படவில்லை. இலங்கை ஊடக அரங்கில் உள்ள ஆழ்ந்த பிளவுகளையும் அது அம்பலப்படுத்தியது.

தமிழ் ஊடகங்கள் செம்மணியில் நிலைகொண்டு, அன்றாடம் செய்திகளை வெளியிட்டன; துக்கம் கொண்டாடும் குடும்பங்களின் செவ்விகளைத் தாங்கிவந்தன; அகழப்பட்ட உடற்கூறுகளின் படங்களையும், தடயவியல் நிபுணர்களின் பகுப்பாய்வுகளையும் வெளிக்கொணர்ந்தன; அதேவேளை, பிரதான சிங்கள ஊடகங்கள் காத்த மெளனம் காதை அடைத்தது!

பல தசாப்தங்களாக சிங்கள-பெளத்த தேசியத்தில் ஊறி, படையினரை வெற்றிவீரர்களாகக் கொண்டாடிக் கதையளக்கும் ஊடக வழமைக்கு செம்மணியால் ஆபத்து நேரும் அல்லவா! ஆதலால் சிங்கள ஊடகங்கள் பலவும் இந்த அகழ்வாராய்ச்சியைப்  பொருட்படுத்தவே இல்லை; அல்லது அதை ஓர் ஓரச்செய்தியாகத் தாழ்த்தியும், பின்பக்கங்களில் புதைத்தும் வெளியிட்டன; “பாதுகாப்புக் கரிசனைகள்” எனும் கண்ணாடி அணிந்து, அதை வெட்டிக்குறைத்து வெளியிட்டன. இது ஊடகப் பொறுப்புணர்வல்ல; திட்டமிட்டுத் தட்டிக்கழிக்கும் ஊடக வேலைப்பாடு! அத்தகைய மெளனம் நடுநிலை ஆகாது; திட்டமிட்டு மறுத்துரைக்கும் கட்டமைப்பின் வேலை அது.  

அரச படைகளுடன் சம்பந்தப்பட்ட பாரிய புதைகுழிகள் கண்டறியப்பட்டதை ஒப்புக்கொள்வது, நெடுங்காலமாகப் பேணப்பட்டுவரும் கட்டுக்கதைகளுக்கு  ஆப்பு வைப்பதாகலாம்; படையினர் புரிந்த குற்றங்களைப் பற்றிப் பேசுவோருக்கு புலி ஆதரவாளர்கள், தேசவிரோதிகள், தேசத்துரோகிகள்  என்று முத்திரை குத்தப்படலாம்.

எனினும், இத்தகைய அரசியலை விட, அந்தப் பிள்ளையின் பள்ளிப்பையினுள் இருந்த காலணியும், பொம்மையும் உள்ளத்தை ஆழமாகப் புண்படுத்துகின்றன; நாட்டின் மனச்சாட்சியை நோக்கி அறைகூவுகின்றன.

உண்மையை அறிவிக்க மறுப்பது, வெறுமனே நெறிபிறழ்ந்த கோழைத்தனம் மட்டுமல்ல; அது குற்றத்துக்கு உடந்தையாய் இருக்கும் செயலாகும்; நீதியை ஓர் அச்சுறுத்தலாகவும், பொறுப்பேற்பை ஒரு காட்டிக்கொடுப்பாகவும் திரிக்கும்  செயலாகும்.

ஆனாலும் அரசியல்யாப்பின்படி இன, மத, அரசியற் பேதமின்றி மக்கள் அனைவரையும்  பாதுகாப்பதற்கு இலங்கை அரசு  கடமைப்பட்டுள்ளது. சிங்கள பெளத்தர்களை மட்டும் பாதுகாத்து, அதே மக்களை நோக்கி அறைகூவும் உண்மைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் அரசு, ஒரு குடியரசாகச் செயற்படாமல் நின்றுவிடுகிறது; ஓர் இன அரசாக மாறிவிடுகிறது.  

செம்மணியில் இடம்பெற்றது ஒரு தனி நிகழ்வல்ல; திரும்பத் திரும்ப, திட்டமிட்டு, தண்டனைக்கு உட்படாமல், புரிந்த குற்றத்தின் தடத்தை ஒழித்துக்கட்டிய வரலாற்றில் செம்மணி ஒரு கூறு மாத்திரமே. 

1990-ம் ஆண்டு சூரியக்கந்தையில் 33 பள்ளிச்சிறுவர்களை படையினர் படுகொலை செய்தனர். அதற்கு எவருமே பொறுப்பேற்க வைக்கப்படவில்லை. 1989-ல் ஜே. வி. பி. நடத்திய கிளர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பாரிய புதைகுழி ஒன்று 2012-ல் மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பாதகத்தைப் புரிந்தவர்கள் இன்னனமும் இனங்காட்டப்படவில்லை. மன்னாரில் 346 உடல்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. எனினும் மெளனமே தொடர்ந்தது. கொக்குத்தொடுவாய், திருக்கேதீஸ்வரம், களுவாஞ்சிக்குடி முதலிய இடங்களில் தென்பட்ட புதைகுழிகள் ஒருகணம் செய்திச் சுழற்சியில் இடம்பெற்று, ஒப்புக்கொள்ளப்படாமல், விசாரிக்கப்படாமல், தீர்க்கப்படாமல், மறைந்து போயின. 

இவை வெறுமனே தமிழரோ சிங்களவரோ அல்ல, இலங்கையர் புதையுண்ட குழிகள்; கசக்கும் உண்மைகள் புதையுண்ட குழிகள்; தேசியத்திலும், படைபலத்திலும், அரசியல் உபாயத்திலும் புதையுண்ட குழிகள். 

சட்டத்தின் முன் யாவரும் சமன். அரசியற் பாதிப்பு ஏற்படாவிடத்து அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவதும், ஆதிக்கத்தரப்பின் கதையளப்புக்கு மாறான விபரங்கள் தெரியவருமிடத்து அகழ்வாராய்ச்சியை நிறுத்துவதும் உண்மையைக் கடைப்பிடிப்பதாகாது; உண்மையை விட்டு ஓட்டமெடுப்பதாகும். 

வெளியுலகப் பொறுப்பு

2024-ல் மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அலுவலகம் குறிப்பிட்டது போல், உலக நியமங்களுக்கேற்ப அகழ்வாராய்ச்சியில் ஈடுபடும் தொழினுட்பமோ, பணபலமோ, நெறிதிறமோ இலங்கைக்கு கிடையாது. 

ஏற்கெனவே இந்த இடைவெளியை நிரப்பவென அமைக்கப்பட்ட காணாமல் போனோரின் அலுவலகம் ஒரு “வீண் உருப்படி” ஆகிவிட்டது. அதற்கு நிதியுதவியும் போதாது; அதிகாரமும் போதாது; சம்பந்தப்பட்டவர்களுக்கு அதில் நம்பிக்கையும் இல்லை. 

அகழ்வாராய்ச்சிக்குப் பொறுப்பேற்கும்படி பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வெளியுலகத்திடம் கோருவது நியாயமே. அது வெளியுலகத் தலையீடல்ல; இன்றியமையாத ஒன்று. நம்பிக்கையான முறையில் கண்காணிக்கப்படாவிட்டால், செம்மணியும் மற்றுமோர் ஆறாத புண்ணாகிப் புரையோடக் கூடும். 

வெளியுலகப் பொறிமுறைகள் இலங்கையின் இறைமையை மீறுவதாகும் என்று வாதிடுவோருக்கு, நீதிவழங்கா இறைமை கொடுங்கோன்மை ஆகும் என்று எளிதாக நாம் பதிலளிக்கலாம்!

மக்கள் கூறிவிட்டார்கள்; அரசாங்கம் செவிசாய்க்குமா?

கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி ஈட்டிய வெற்றி, வெறுமனே ராஜபக்சாக்களை மக்கள் நிராகரிகரித்துவிடார்கள் என்று பொருள்படாது. அது நீதியை நிலைநாட்டுவதற்கான ஆணை; இனங்களை ஊடறுத்து ஓங்கிய மக்கள்-கூட்டணியின் நம்பிக்கை.  

மக்கள் தமது பங்கினை ஆற்றிவிட்டார்கள்; இனி அரசாங்கம் அதன் பங்கினை ஆற்றவேண்டிய தருணம் இது. செயற்படுவதற்கான அரசியல்வலு அரசாங்கத்திடம் உள்ளதா என்பதல்லக் கேள்வி; செயற்படும் துணிவு அரசாங்கத்திடம் உள்ளதா என்பதே கேள்வி.

வெளியுலக உத்தரவாதங்களுடன் உள்நாட்டு உண்மை ஆணையம் ஒன்றை அரசாங்கம் அமைக்கலாம்; இழப்பீடுகளை முன்வைக்கலாம்; ஒரு முன்னீடாய் அமையும் வண்ணம், அதிகார ஏணி ஒன்றின் மீதாவது வழக்குத்தொடரலாம்; தடயவியல் அணிகளைப் புறக்கணிக்காமல், அவற்றுக்குத் துணைநிற்கலாம்; மெளனம் சாதிக்காமல், வாய்திறந்து பேசலாம்; செம்மணி பேசுகின்றதே! 

எமது குடியரசுக்கு செம்மணி ஒரு தேர்வு

செம்மணி வெறுமனே ஒரு புதைகுழி அல்ல; அது ஒரு கண்ணாடி; கடந்த போரின் கொடுமையை மாத்திரமன்றி, நிகழ்கால அறச்சீரழிவையும் அது புலப்படுத்துகிறது. உண்மையின் மீதா, இதமான பொய்களின் மீதா கட்டியெழுப்பப்படும் குடியரசாக விளங்க நாம் விரும்புகிறோம் என்று அது எங்களிடம் வினவுகிறது. 

யாழ்மண்ணில் புதையுண்ட எலும்புகள் எதிரிகளின் எலும்புகள் அல்ல; அவர்கள் குடிமக்கள்; பிள்ளைகள்; குடும்பத்தவர்கள்; அனைவரையும் காக்க வாக்குறுதியளித்த ஓர் அரசினால் அவர்கள் பொறுப்பேற்கப்பட வேண்டியவர்கள். செம்மணியில் நாம் செவிமடுப்பது வெறுமனே நீதிக்கான கூப்பாடல்ல; விசாரணைக்கு உட்பட்ட ஒரு குடியரசின் ஓசையும் எமது காதில் விழுகிறது. 

பொறுப்பேற்பதற்கான புதிய ஆணை

2025ம் ஆண்டு செம்மணியில் அகழ்வாராய்ச்சி தொடர்கையில், அரசியல் வசதிக்காக அல்ல, வரலாற்றுப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக, அரசாங்கம் செயற்பட வேண்டும். 

புண்பட்ட தெற்கிலிருந்தும், துயர்காக்கும் வடக்கிலிருந்தும் தேசிய மக்கள் சக்திக்கு ஓர் அசாதாரண ஆணை அளிக்கப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைத்தலாகாது. 

பொறுப்பேற்பு என்பது ஐக்கியத்துக்கு ஓர் அத்திவாரம் ஆகுமேயொழிய, அதற்கோர் அச்சுறுத்தலாகாது. இந்த நாட்டைக் காப்பதற்கு, அரசு அதன் பாவங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்; ஒரு புதிய இலங்கையை நிர்மாணிப்பதற்கு, உண்மையை அகழ்ந்தெடுக்க வேண்டும்; பொய்களைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும்.


Sakuna M. Gamage, What we hear from Chemmani… When the soil speaks for people’s justice, 

Daily Mirror, 2025-07-07, translated by Mani Velupillai, 2025-07-22.

https://www.dailymirror.lk/opinion/What-we-hear-from-Chemmani-When-the-soil-speaks-for-peoples-justice/172-313512