ஊடக சுதந்திரத்தை பலிகொள்வோர்


பாரிஸ் மாநகரில் நிலைகொண்டுள்ள எல்லைகளற்ற ஊடகர்கள் அமைப்பு, “ஊடகசுதந்திரத்தை பலிகொள்வோரின் பட்டியல்” ஒன்றை வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கானஇப்பட்டியலில் 37 நாடுகளின் தலைவர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.


வழமைபோல் இரசிய, சீன, ஈரானிய, செளதி அரேபிய, பர்மிய, கம்போடிய, வட கொரிய… தலைவர்கள் அதில் அடங்கியிருக்கிறார்கள். தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் நால்வரும் அதில் இடம் பெற்றுள்ளார்கள்: மோதி (இந்தியா); கொதாபயா (இலங்கை); இம்ரான் கான் (பாகிஸ்தான்); ஹசினா (வங்காள தேசம்).


The Indian Telegraph, பி.பி.சி. தமிழோசை போன்ற ஒருசில ஊடகங்கள் மேற்படி செய்திக்கு முதன்மை கொடுத்துள்ளன. மற்றும்படி இந்நாடுகளின் தாய்மொழி, ஆங்கில மொழி ஊடகங்களில் இச்செய்தி இடம்பெற்றதாகத் தெரியவில்லை. ஊடக சுதந்திரம் இரைகொள்ளப்பட்டுள்ளதை இது உறுதிப்படுத்துகிறது. 


WhatsApp ஊடாக அந்தரங்க தரவுகளை ஒற்றியெடுக்கும் Pegasus எனப்படும் மென்பொருளை NSO என்ற இஸ்ரவேலிய பாதுகாப்பு நிறுவனம் விலைப்படுத்தி  வருகிறது. அதற்கு 10 பிரதம மந்திரிகளும், 3 ஜனாதிபதிகளும், 1 மன்னரும், பலியகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.


ஊடக சுதந்திரத்தை பலிகொள்வோரின் பட்டியலுடன் “பலிகொள்வோரின் களரி” சேர்க்கப்பட்டுள்ளது. ஆட்சியாளரின் படங்களும், பலிகொள்ளும் விதங்களும் அதில் இடம்பெற்றுள்ளன:


எல்லைகளற்ற ஊடகர்கள் அமைப்பு 

இந்திய பிரதமர் குறித்து முன்வைக்கும் குறிப்பு


 

பிரதமர் மோதி 2014 மே 26ம் திகதி பதவியில் அமர்ந்தது முதல் ஊடக சுதந்திரத்தை பலிகொண் வந்துள்ளார். தேசியவாதம், மக்களீர்வாதம், பொய்த்தகவல் என்பவற்றின் மூலம் அவர் அதைச் சாதித்து வருகின்றார்

.

2001ல் குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, செய்திகளையும் தகவல்களையும் கட்டுப்படுத்தும் முறைகளைத் தேர்ந்து தெளியும் களமாக  அந்த மாநிலத்தை மோதி பயன்படுத்தினார். 2014ல் இந்தியாவின் பிரதமராக அமர்ந்த பிறகு, அதே முறைகளை அவர் கையாளத் துவங்கினார். 

 

தமது தேசியவாத, மக்களீர்வாத கருத்தியலை நியாயப்படுத்தும் உரைகளையும் தகவல்களையும் மைய ஊடகங்களுக்குப் பாய்ச்சுவதே அவரது தலையாய உத்தி. அந்த இலக்கினைக் கருத்தில் கொண்டு பேரூடக வணிகம் புரியும் கோடாதிபதிகளுடன் அவர் ஒட்டி உறவாடி வருகின்றார். 


நயவஞ்சகம்


இந்த நயவஞ்சகம் மூன்று விதங்களில் செயற்படுகிறது: 


(1) பேரூடக வணிக முதலாளிகளுக்கு உவந்தவராக அவர் தன்னை காட்டிக்கொள்கின்றார். தன்னைத் தட்டிக்கேட்கும் ஊடகர்களை மேற்படி பேரூடக முதலாளிகள் பதவிநீக்கும் ஆபத்து நிலவுவதை அந்த ஊடகர்களுக்கு அவர் உணர்த்தி வருகின்றார். 


(2) பெரிதும் பொய்த்தகவல் கொண்டு மக்களைப் பிளவுபடுத்தும் வண்ணம் தீவிரமான முறையிலும், அவமதிக்கும் மொழியிலும் அவர் ஆற்றும் உரைகளுக்கு மிகுந்த பிரசித்தம் கொடுப்பதன் மூலம் மேற்படி பேரூடகங்கள் என்றுமிலாவாறு தமது வியாபாரத்தைப் பெருக்கி வருகின்றன. இனி பிரதமர் மோதிக்கு எஞ்சியிருக்கும் அலுவல், மக்களைப் பிளவுபடுத்தும் தனது நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்கும் ஊடகங்களுக்கும், ஊடகர்களுக்கும் வாய்ப்பூட்டுப் போடுவது மட்டுமே!  


அதற்கான நீதித்துறைப் படைக்களம் அவர் கைவசம் இருக்கவே இருக்கின்றது. ஊடக சுதந்திரத்தைப் பேராபத்துக்கு உள்ளாக்கும் ஏற்பாடுகள் கொண்ட நீதித்துறைப் படைக்களமே அது. எடுத்துக்காட்டாக, தன்னைத் தட்டிக்கேட்கும் ஊடகர்கள் மீது, மக்களை கலகம் புரிய ஏவிய குற்றச்சாட்டை அவரால் சுமத்த முடியும். தெட்டத்தெளிவாக வரையறுக்கப்படாத இக்குற்றச்சாட்டின் பேரில் அத்தகைய ஊடகரை வாழ்நாள் முழுவதும் அவர் சிறைவைக்க முடியும்.


அத்தகைய படைக்களத்தை முழுமை அடையச்செய்வதற்கு, இந்தியில் மறவர்கள் என்று பொருள்படும் “யோதா” என்னும் இணையப் புரளியாளர்களை அவர் வேறு கையாள முடியும். தாம் வெறுக்கும் ஊடகர்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் வாயிலாக அருவருப்பான முறையில் காழ்ப்பினை உமிழ்ந்து பரப்புரை மேற்கொள்ளும் மேற்படி இணையப் புரளியாளர்களின் வாடிக்கையான கோரிக்கைகளுள் ஒன்று: “ஊடகர்களைக் கொல்ல வேண்டும்!” என்பதாகும்!



(3) 2017ல் பிரதமர் மோதி இஸ்ரவேல் பிரதமர் நெத்தன்யாகுவை சென்று சந்தித்தார். ஓர் இந்தியப் பிரதமர் இஸ்ரவேலுக்கு மேற்கொண்ட  முதலாவது  பயணம் அது. அப்பொழுது Pegasus ஒற்றுமென்பொருளை இந்தியாவுக்கு விற்பதற்கான அனுமதியை NSO என்ற இஸ்ரவேலிய நிறுவனத்துக்கு நெத்தன்யாகு வழங்கிய சேதியை எட்வேட் சினோடன் கசிய விட்டுள்ளார் (அவர் உலகளாவிய இரகசியங்களை அம்பலப்படுத்தும் மேதாவி என்பது தெரிந்ததே). 


இந்தியாவில் Pegasus ஊடாக அந்தரங்க தரவுகளை ஒற்றியெடுக்கும் சூழ்ச்சிக்கு ஏறத்தாழ 1,400 பேர் இரையாகியுள்ளதாகத் தெரிகிறது. இவர்களுள் 40 ஊடகர்கள், 3 எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், 1 அரசியல்யாப்பு மன்ற அதிகாரி, 2 மத்திய அமைச்சர்கள், முன்னாள் - இந்நாள் பாதுகாப்பு அதிகாரிகள், வணிகர்கள், பாகிஸ்தான், சீனா, ஆவ்கானானிஸ்தான், ஈரான், நேபாளம், செளதி அரேபிய இரசதந்திரிகள்… அடங்குவர். 

 

மதச்சார்பற்ற நோயாளிகள்


2017 புரட்டாதி மாதம் தனது வீட்டுக்கு வெளியே வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட கெளரி லங்கேஷ் என்னும் பேர்போன ஊடகர் இந்துத்துவத்துக்கு இரையானவர். இந்துத்துவம் தோற்றுவித்த இந்து தேசியவாத இயக்கம் பிரதமர் மோதியை வழிபட்டு வருகிறது. அவரது தேசியவாத, மக்களீர்வாத கருத்தியலை தட்டிக்கேட்கும் எந்த ஊடகரும் அல்லது ஊடக அமைப்பினரும் “மதச்சார்பற்ற நோயாளி” (SICKULAR) என்று தூற்றப்படுவது வழக்கம். அவர்கள்மீது பிரதமர் மோதியின் அடியார்கள் வழக்குத்தொடுத்து, மைய ஊடகங்களில் அவர்களை இழித்துப்பழித்து, இணையவெளித் தாகுதல்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.   


ஊடக விபசாரிகள் 


ஊடகர்கள் பெண்மணிகள் என்றால், அவர்கள் மீது மிகவும் கொடூரமான தாக்குதல் தொடுக்கின்றார்கள். அவர்களை “ஊடக விபசாரிகள்” (PRESSTITUTES) என்று சாடுகின்றார்கள். எடுத்துக்காட்டாக ரனா அயூப், பர்கா தத் இருவரையும் குழும வல்லுறவுக்கு உள்ளாக்க வேண்டும் என்று கோரியுள்ளார்கள். அத்தகைய தாக்குதலுக்கு ஏதுவாக அவர்களது தனிப்பட்ட விபரங்களை இணைய வாயிலாக வெளியிட்டுள்ளார்கள்.


“ஊடகங்கள் ஊடகத்துறைக்கு எதிரானவை” என்பதே இன்றைய ஆட்சியாளரின் அதிகாரபூர்வமான நிலைப்பாடு!


பிரதமர் மோதியின் கூற்று


“இன்று ஊடகர்கள் அனைவரதும் முகத்திரைகள் அகன்றுவிட்டன. ஊடகங்களின் நம்பகத்தன்மை பற்றியது அல்ல இன்றைய நெருக்கடி; அங்கு செயற்படுபவரின் நம்பகத்தன்மை பற்றியதே இன்றைய நெருக்கடி. எனவே, எங்களைக் கண்டிப்பதை நிறுத்துவீர்! ” (பிரதமர் மோதி, 2019-05-12).  


எல்லைகளற்ற ஊடகர்கள் அமைப்பு 

இலங்கை அதிபர் குறித்து முன்வைக்கும் குறிப்பு



கொதாபயா ராஜபக்சா 2005 முதல் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையிலும், 2019 முதல் நாட்டின் அதிபர் என்ற வகையிலும் ஊடக சுதந்திரத்தை பலிகொண்டு வந்துள்ளார். 


2005 முதல் அவரது வெள்ளை வான் சேனை ஊடகர்களைக் கடத்தி, வதைத்து, கொன்று வந்தது. மொத்தம் 14 ஊடகர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமல் போக்கடிக்கப்பட்டார்கள். வதைக்கும், கொலை அச்சுறுத்தலுக்கும் உள்ளான 20 ஊடகர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடினார்கள். 


2019 முதல் ஊடகர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்படுகிறது. ஊடக அமைப்புகள் அதிரடிச் சோதனைக்கு உள்ளாகி வருகின்றன. தந்திரமான முறையில் பொய்த்தகவல்கள் பரப்பப்படுகின்றன. கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. 


ஆதலால் இலங்கை ஊடகர்கள் பெரிதும் தம்மைத் தாமே தணிக்கை செய்து வருகின்றனர். அவர்கள் ஓர் இக்கட்டை எதிர்நோக்கியுள்ளார்கள். தமது பணியை ஆற்றுவதா? அல்லது உயிராபத்தை தவிர்ப்பதா? கொலையுண்ட சக ஊடகர்களின் ஆவிகளுடன் அவர்கள் கூடிவாழ வேண்டியுள்ளது! ஆட்சியாளரின் ஆணைப்படி, ஊடகர்களைத் தாக்கும் குற்றவாளிகள் தண்டனைக்கு உள்ளாவது எங்ஙனம்? 


இத்தகைய சூழ்நிலையில் தமிழ், முஸ்லீம் மக்கள் படும் இன்னல்களை புலன்விசாரித்து அறிவிப்பது பேராபத்து விளைவிக்கும். புலன்விசாரிக்கத் துணிவோர் எதிர்நோக்கும் ஆபத்துகள் இரண்டு: (1) காவல்துறை பிடியாணையுடன் வந்து அவர்களைக் கைதுசெய்யும். (2) அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படும். அது பற்றிய முறைப்பாட்டை காவல்துறை பதிவுசெய்ய மறுக்கும். எப்படிப் பார்த்தாலும், அவர்களது பயங்கரம் நீடித்து வருகின்றது. 


அதிபர் கொதாபயாவின் கூற்றுகள்:


“கடந்த காலத்தை பார்க்க வேண்டாம். நான் இலங்கையின் வருங்கால அதிபராக விரும்புகிறேன். எனவே நீங்கள் வருங்காலத்தில் கவனம் செலுத்துவதே நல்லது” (2019 தேர்தல் பிரசாரம்).


“You pig that eats shit! You shit shit dirty fucking journalists! People will kill you!” (July 2012).


உலக ஊடக சுதந்திர சுட்டி


180 நாடுகள் இடம்பெறும் உலக ஊடக சுதந்திர சுட்டியில் இலங்கை 127வது இடத்திலும், இந்தியா 142வது இடத்திலும், பாகிஸ்தான் 145வது இடத்திலும், வங்காள தேசம் 152வது இடத்திலும் இருப்பது கவனிக்கத்தக்கது. 


சர்வதேய மன்னிப்புச் சபை அண்மையில் விடுத்த அறிக்கையின்படி அசபைஜான், ஹங்கேரி, இந்தியா, மொரக்கோ உட்பட 20 நாடுகளில் 180 ஊடகர்கள் ஆட்சியாளரின் அடாவடிக்கு உள்ளாகியுள்ளார்கள்.

__________________________________________________________________________
Predators of Press Freedom, 2021, RSF, translated by Mani Velupillai, 2021-07-08.

https://rsf.org/en/portraits/predator

https://www.amnesty.org/en/latest/news/2021/07/the-pegasus-project

https://www.telegraphindia.com/world/pegasus-nso-to-investigate-any-credible-proof-of-misuse-of-spyware/cid/1823349

No comments:

Post a Comment