இராமச்சந்திர குகா
நேருவின் பதவிக் காலத்தில் ஆஸ்திரேலியாவின் தூதராக இந்தியாவில் பணியாற்றியவர் வால்டர் குரொக்கர் (Walter Crocker, 1902-2002); நேருவை நயந்துவந்து, அவருடன் ஒட்டி உறவாடியவர். அதேவேளை கோவா படையெடுப்பு, காஷ்மீர், ஐந்தாண்டுத் திட்டம் குறித்து நேருவைக் கண்டித்தவர். நேரு மறைந்த பிறகு எழுதிய நூலில் குரொக்கர் இவ்வாறு கூறுகிறார்:
வால்டர் குரொக்கர்
“இந்தியக் குடியரசில் தென்னிந்தியா பெறும் முக்கியத்துவம் மிகவும் குறைவு. இது இந்தியாவுக்கு ஓர் இழப்பு; தென்னிந்தியாவுக்கு இழைக்கப்படும் ஓர் அநீதி. தென்னகம் சில முக்கிய துறைகளில் மேம்பட்டு விளங்குகிறது: அங்கு வன்முறை நிகழ்வது குறைவு; முஸ்லீங்களை வெறுப்பது குறைவு; பல்கலைக்கழகங்களில் ஓழுங்கீனமோ நெறிபிறழ்வோ கிடையாது; கல்வித் தராதரங்கள் சிறந்து விளங்குகின்றன; சிறந்த ஆட்சியும், துப்புரவும் பேணப்படுகின்றன; ஊழல் குறைவு; இந்து மறுமலர்ச்சி வாதம் தென்னக மக்களுக்கு இனிப்பதரிது” (Walter Crocker, Nehru: A Contemporary’s Estimate, Oxford, 1966).
தென்னகத்தின் பொருள்வளம்
அரை நூற்றாண்டு கழித்து சாமுவேல் போல், கலா சீதராம் ஶ்ரீதர் ஆகிய இருவம் சேர்ந்து எழுதிய நூலில், தென்னகம் பொருள்வளத்தில் மேம்பட்டுள்ளதை அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் கொண்டு நிறுவியுள்ளார்கள் (Samuel Paul & Kala Seetharam Sridhar, The Paradox of India’s North-South Divide, Sage, 2015).
1960ல் தமிழ்நாட்டு ஆள்வருமானம் உத்தர பிரதேச ஆள்வருமானத்தை விட 51% அதிகமாய் இருந்தது. 1980 துவக்கத்தில் அந்த வேறுபாடு 39% ஆக குறுகியது. எனினும் பின்வந்த தசாப்தங்களில் தமிழ்நாட்டு ஆள்வருமானம் விரைந்து பெருகியது. 2005ல் சராசரி தமிழகவாசியின் வருமானம் சராசரி உத்தர பிரதேசவாசியின் வருமானத்தை விட 128% அதிகமாய் இருந்து, 2021ல் ஏறத்தாழ 300% அதிகமாய் உயர்ந்துள்ளது!
அதேவேளை வட இந்திய மாநிலங்களையும், தென்னிந்திய மாநிலங்களையும் ஒப்பிடுமிடத்து, 1960ல் 39% ஆக இருந்த ஆள்வருமான வேறுபாடு, 40 ஆண்டுகள் கழித்து, 2000ம் ஆண்டில் 101% ஆக அதிகரித்து, 2021ல் 250% அதிகரித்துள்ளது! தற்பொழுது வட மாநிலங்கள் நான்கிலும் ஒருவரின் சராசரி ஆண்டு வருமானம்: US $4,000; தென் மாநிலங்கள் நான்கிலும்: US $10,000!
தென்னகத்தில் தொழிற்கல்வி, மின்வள உற்பத்தி, வீதியமைப்பின் தரமும் பரிமாணமும் அதிகம். உற்பத்தித் துறையில் ஆக்கத்திறனும், வினைத்திறனும் ஓங்க அது வழிவகுத்துள்ளது.
தெற்கில் அரசாங்கப் பாடசாலைகள் திறம்பட நிர்வகிக்கப்படுகின்றன. மாணவர்கள் கல்வியை இடைநிறுத்துவது குறைவு. மருத்துவசாலைகளில் மருத்துவர்களும், மருந்துவகைகளும் அதிகம். தூய குடிநீர் வசதியும், நகர்ப்புற சேரிகளில் துப்புரவான கழிப்பறைகளும் அதிகம்.
1960ல் கிராமப்புற வறுமை உத்தர பிரதேசத்தை விட தமிழ்நாட்டில் அதிகமாய் இருந்தது. 1980 முதல் 1990 வரையான காலப்பகுதியில் தமிழ்நாட்டில் கிராமப்புற வறுமை குன்றிவிட்டது.
1991ல் இந்திய பொருளாதாரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபொழுது, மிகுந்த தேர்ச்சியும், உடனலமும் வாய்ந்த தென்னகம் அத்தகைய கொள்கை-மாற்றத்துக்கு தயாராகவே இருந்தது. 1990 முதல் 2000 வரை தமிழக, ஆந்திர பிரதேச மாநிலங்களில் ஆலைகளும், எந்திரவியல் கல்லூரிகளும், கணினி மென்பொருள் வலயங்களும், மருந்தாக்க நிலையங்களும் பல்கிப் பெருகின.
இன்று இந்தியாவின் பொருள்வளத்தில் தென்னகம் பெருமளவு பங்கு வகிக்கிறது. தென்னகத்து சமூக, பண்பாட்டு மேம்பாடே அதற்கான காரணம். அதாவது தென்னகம் கல்வியிலும், ஆளுகையிலும் கவனம் செலுத்தியமை ஒரு காரணம்; இந்துத்துவ மறுமலர்ச்சி வாதத்தில் புலன் செலுத்தாமை மறு காரணம்.
சமய சகிப்புணர்வு
தென்னக விருத்திக்கு இந்து-முஸ்லீம் அமைதி துணைநிற்கிறது. உத்தர பிரதேசமும், பீகாரும் இடைவிடாமல் இன மோதலகளிலும், சாதி மோதல்களிலும் ஈடுபட்டிருந்தன. இந்துத்துவ கொடூரங்களை இராம்ஜன்மபூமி இயக்கம் கட்டவிழ்த்துவிட்டது. தென்னகத்தில் அது எடுபடவில்லை. இந்திய-பாகிஸ்தானிய பிரிவினையின் கொடூரங்களை தென்னகம் பட்டறியவில்லை; கடுப்பும், கசப்பும் மிகுந்த பிரிவினையின் பின்விளைவுகளிலிருந்தும் தென்னகம் தப்பிக்கொண்டது.
சமூக சீர்திருத்தம்
தென்னக சமூக சீர்திருத்தமும் இங்கு குறிப்பிடத்தக்கது. அந்தணரின் ஆதிக்கத்துக்கு எதிரான முழக்கம் வேளைக்கே தென்னகத்தில் எழுந்துவிட்டது. ஶ்ரீ நாராயண குரு, பெரியார் போன்ற சிந்தனையாளர்கள் சாதி, பால்மை விடயங்களில் பெரிதும் சரிநிகரான அணுகுமுறை ஓங்க வழிவகுத்தார்கள். உழுகுலத்தின் உள்ளிருந்து கூட தொழில்முனைவர்கள் உதித்தார்கள். பெருந்தொகையான பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. இது ஒன்றும் தற்செயலாக நிகழவில்லை; நெடுங்கால சமூக சீர்திருத்த இயக்கங்களின் பெறுபேறாகவே நிகழ்ந்தது.
மனிதவள விருத்தி
வடக்கை விட தெற்கில் ஆயுட்காலமும், பெண்களின் கல்வி அறிவும், அதிகம்; சிசு இறப்பு குறைவு. பொருள்வளத் துறைக்கு உகந்த உடனலமும், கல்வியறிவும் மிகுந்தவர்கள் தென்னகத்தில் அதிகம்.
பால்மை உறவு
“வடக்கிற்கும் தெற்கிற்கும் இடைப்பட்ட பாரிய வேறுபாடு பால்மை உறவிலேயே காணப்படுகிறது” என்கிறார் அலிஸ் எவன்ஸ் (Alice Evans) என்னும் சமூகவியலர். “தென்னகப் பெண்குழந்தைகள் உயிர்தப்பி வாழ்வதும், கல்வி கற்பதும், தமது கணவரை தாமே தேர்ந்தெடுப்பதும், காலந்தாழ்த்தி மணம் முடிப்பதும், கணவருடன் ஒட்டி உறவாடி, பிள்ளைகளைக் குறைத்து, சொத்தினைப் பெருக்கி, சீதனத்தைக் கட்டுப்படுத்துவதும், பிறருடன் நட்புக்கொண்டு, தத்தம் சமூகத்தவரிடையே தாராளமாக உறவாடுவதும், ஆண்களுடன் சேர்ந்து பணியாற்றுவதும் அதிகம்” என்கிறார் அவர்.
தென்னகம் நோக்கிய இடப்பெயர்வு
அதேவேளை வட இந்தியாவை விட தென்னிந்தியாவே தேசிய பொருளாதாரத்துக்கும், இந்திய ஒன்றிய அரசிறைக்கும் பெருந்தொகை அளித்து வருகிறது. தென்னக மக்கள் உடனலம், நல்லுணவு, வாழ்க்கை வளம், உயர்கல்வி வாய்ப்புகளுடன், அரச சேவைகளை எளிதில் பெற்று வாழ்ந்து வருகிறார்கள். வடமாநில மக்கள் கூட அதை எல்லாம் புரிந்து கொண்டுள்ளார்கள். ஆதலால்தான் அவர்கள் தெற்குநோக்கி நகர ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்.
நான் வாழும் பெங்களூரில் இந்து-கங்கை சமவெளியைச் சேர்ந்தவர்கள் தொழில்முனைவர்களாக விளங்குகிறார்கள். வடபுல லக்னோ மாநகரில் தமிழ், கன்னட, மலையாள தொழில்முனைவர்கள் எவரும் நிலைகொண்டுள்ளதாக நான் நினைக்கவில்லை. மத்திய வகுப்பினரும், தொழிலாளரும் வடக்கிலிருந்து தெற்குநோக்கிப் பெயர்வதே அதிகம்; தெற்கிலிருந்து வடக்குநோக்கிப் பெயர்வது மிகக்குறைவு.
வரலாறு
தென்னகத்தின் சிறப்பினைப் புரிந்துகொள்வதற்கு, வெறுமனே கடந்த தசாப்தங்களை நோக்குவதை விடுத்து, கடந்த நூற்றாண்டுகளை நோக்க வேண்டும்: தென்னகம் கடல்சூழ்ந்த ஆள்புலம்; வெளிநாட்டவர்கள் அதைக் கைப்பற்றுவோராக வரவில்லை; வணிகராகவும், பயணிகளாகவுமே வந்தார்கள்; அவர்களை தென்னகம் இன்முகம் கொண்டு வரவேற்றது.
இழுக்கு
எனினும் தென்னகம் முழுநிறைவானதல்ல. தமிழகத்தின் சில பகுதிகளில் அதன் மாநில, அரசியல் பண்பாட்டுக்கு இழுக்குண்டாகும் வண்ணம் தலித்துக்கள் கொடுமைகளுக்கு உள்ளாகின்றார்கள். கர்நாடக சமூக, அரசியல் வாழ்வில் இந்துத்துவம் உறுதிபட ஊடுருவி வருகிறது. அதன் விளைவுகள் கசக்கின்றன. 1960ல் தென்னகத்தில் ஊழல் குறைவாகவே இருந்தது. இன்று சுரங்க அகழ்வு மற்றும் கீழ்க்கட்டுமான ஒப்பந்தங்கள் செய்வதில் ஐதரபாத், பெங்களூரு, சென்னை மாநகர அரசியல்வாதிகள் வடமாநில அரசியல்வாதிகளைப் போல், அல்லது அவர்களை விட அதிகமாக, இலஞ்சம் வாங்கி வருகிறார்கள்.
மக்களவைத் தொகுதிகளை மீட்டியமைக்கும் திட்டம்
இந்தியக் குடியரசின் அரசியல் வாழ்வில் தென்னகம் வகிக்கும் பங்கு தொடர்ந்தும் தாழ்ந்த நிலையிலேயே இருந்து வருகிறது. அது மேலும் தாழக்கூடும். இந்திய மக்களவைத் தொகுதிகளை குடித்தொகையின்படி மீட்டியமைக்கும் திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது.
அவ்வாறு மீட்டியமைக்கப்பட்டால், தத்தம் மக்களுக்கு ஓரளவு நற்பணியாற்றும் கேரள, தமிழக மாநிலங்கள் இந்திய ஒன்றிய அரசின் கொள்கைகளிலும், முதன்மைத் திட்டங்களிலும் கொண்டுள்ள அற்பசொற்ப செல்வாக்கு மேலும் குன்றிவிடும். மறுபுறம், தத்தம் மக்களுக்கு ஏனோதானோ என்று வெறுக்கத்தக்க விதமாகப் பணியாற்றும் உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள் இந்திய ஒன்றிய அரசின் கொள்கைகளிலும், முதன்மைத் திட்டங்களிலும் ஏற்கெனவே கொண்டுள்ள வலுத்த செல்வாக்கு மேலும் பெருகும்.
அத்தகைய ஏற்றத்தாழ்வினால், ஏற்கெனவே நொந்துபோயுள்ள இந்திய இணைப்பாட்சி முறைமை மேலும் பளுவுக்கும், நெருக்கடிக்கும் உள்ளாகும்.
__________________________________________________________________________
Ramachandra Guha, Ahead of the Curve, The Indian Telegraph, 2021-06-19,
translated by Mani Velupillai, 2019-06-20.
https://www.telegraphindia.com/opinion/ahead-of-the-curve-taking-the-south-seriously/cid/1819266
No comments:
Post a Comment