இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள அதிபர் கொதாபயா ராஜபக்சாவின் அரசு, உள்நாட்டிலும் வெளியுலகிலும், பொருளாதார வாரியகவும், அரசியல் வாரியாகவும் பற்பல நெருக்குதல்களை எதிர்நோக்கி வருகிறது.
ஆளும் பொதுசன முன்னணிக்கு உள்ளேயும், அதன் பங்காளிக் கட்சிகளுக்கு உள்ளேயும் பிளவுகள் தோன்றியுள்ளன. கொள்ளை நோயினால் தடம்புரண்ட பொருளாதாரத்தை முன்னகர்த்துவதில் தொல்லை நேர்ந்துள்ளது. தீர்மானங்கள் எடுக்கும் முறையிலும், அவற்றை நடைமுறைப்படுத்தும் முறையிலும் காணப்படும் குறைபாடுகளே அதற்கான தலையாய காரணம். வெளிநாட்டுக் கடனை மீளச்செலுத்தும் பிரச்சனையும் பரந்து விரிந்து பயமுறுத்தி வருகிறது.
ஐ. நா.
போதாக்குறைக்கு போரின்பொழுதும், அதன்பிறகும் இடம்பெற்றுள்ள நிகழ்வுகளுக்குப் பொறுப்புக்கூறும் கடப்பாடு குறித்து ஐ. நா. மனித உரிமை மன்றம் நெருக்குதல் கொடுத்து வருகிறது. போரின்பொழுது புரியப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள், அதன்பிறகு புரியப்பட்டதாகக் கூறப்படும் உரிமைமீறல்கள் பற்றிய தரவுகளைத் திரட்ட அம்மன்றத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல.
இந்தியா
2018ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படாதுள்ள மாகாண மன்றத் தேர்தலை நடத்தும்படி இந்தியாவும், ஐ. நா.வும் அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றன. தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்படும், ஓரளவு தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய, மாகாண மன்றங்களுக்கு வித்திட்ட 13(அ) திருத்தத்தை அரசியல்யாப்பிலிருந்து நீக்கக்கூடாது என்று இந்தியா வற்புறுத்தி வருகிறது. அதேவேளை மாகாண மன்றங்கள், 13(அ) திருத்தம் இரண்டையும் குறித்து அரச தலைமைப் பீடத்துள் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
அதிகாரப் பரவலாக்கம்
அதிகாரப் பரவலாக்கத்துக்கு, குறிப்பாக 13(அ) திருத்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்டவாறான அதிகாரப் பரவலாக்கத்துக்கு, அதிபர் ராஜபக்சா எதிரானவர். “மற்ற நாடுகள் அதிகாரப் பரவலாக்கம் என்ற போர்வையில் இத்தீவகத்தில் பிரிவினையைப் புகுத்துவதன் மூலம் தமது புவியரசியல் தேவைகளை நிறைவேற்ற இலங்கை அனுமதிக்காது” என்று அண்மையில் ஒரு கிராம நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.
சிங்கள பெரும்பான்மை வாதம்
2019ம், 2020ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பொதுசன முன்னணி ஈட்டிய வெற்றியின் சூத்திரதாரிகள் தாங்களே என்று மார்தட்டும் தேசியவாத வன்போக்காளர்களும், சிங்கள பெரும்பான்மைவாத வன்போக்காளர்களும் இந்த விடயத்தில் அதிபர் ராஜபக்சாவை வலுவாக ஆதரிக்கிறார்கள். ஆனால் அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய மாகாண மன்றங்களை பிரதமர் ராஜபக்சாவும், பொதுசன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்சாவும் பயன்தரும் அரசியல் கட்டமைப்பாகவே நோக்குகின்றனர். அம்மன்றங்களுக்கு தேர்தல் நடத்துவதில் அவர்களுக்கு ஆவல் உண்டு.
எனினும், மாகாண மன்றங்களுக்கும், அவற்றுக்கு இப்பொழுது தேர்தல் நடத்துவதற்கும் தெரிவிக்கப்படும் எதிர்ப்பினைக் கருத்தில் கொண்ட பிரதமர் ராஜபக்சா, தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற கட்டமைப்பை ஆராய்வதற்கு நாடாளுமன்றக் குழு ஒன்றை நாடியுள்ளார். இந்த விடயம் நெடுங்காலமாக இழுபட்டு வருகிறது. தேர்தல்தொகுதி எல்லைநிர்ணயக் குழு சமர்ப்பித்த அறிக்கையை 2018ல் நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது.
எனினும் மாகாண மன்றத் தேர்தலை 2021 முடிவதற்குள் நடத்த வாய்ப்பில்லை. தேர்தல் நடக்காது என்ற எண்ணமே ஓங்கி வருகிறது. நாட்டுக்குப் புதியதோர் அரசியல்யாப்பை வழங்குவதாக தேர்தல்வேளையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முன்னர் தேர்தல் நடத்தக் கூடாது என்று பெளத்த குருமாருள் ஒரு சாரார் கோரியுள்ளார்கள். பொதுசன முன்னணியின் அடிமட்ட வாக்காளர்களுக்கு இனிக்கும் வண்ணம் புதிய அரசியல்யாப்பில் அதிகாரங்கள் ஒருமுகப்படுத்தப்படும் என்றும், அது சிங்கள பெரும்பான்மைவாத தன்மையைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே சிறுபான்மையோராகிய தமிழர் அதைப் பிரச்சனைக்கு உள்ளாக்குவர்.
பங்காளிக் கட்சிகள்
பொதுசன முன்னணியின் 11 பங்காளிக் கட்சிகளும் தற்பொழுது குமுறியும் திமிறியும் வருகின்றன. பொதுசன முன்னணியின் தலைமைப்பீடம் தீர்மானங்களை எடுக்கும்பொழுது, தம்மீது நம்பிக்கை வைப்பதில்லை என்று அவை முறையிடுகின்றன. பொதுசன முன்னணியின் அமைப்பாளராகிய பசில் ராஜபக்சாவே அவற்றின் இலக்கு. அதிபர் ராஜபக்சாவை சந்தித்து தமது உள்ளக்குறைகளை முன்வைக்க அவை திட்டமிட்டுள்ளன. இந்த ஆண்டு மேதினத்தை புறம்பாகக் கொண்டாடி, தமது சுயேச்சையை வெளிப்படுத்தவும் அவை முடிவுசெய்துள்ளன.
கொள்ளைநோய்
கொள்ளநோயை ஒடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளினால் 2020ம் ஆண்டின் முதற் கால்வாசியில் 1,60,996 வேலைவாய்ப்புகள் ஒழிந்து போயின. ஆதலால் முன்னர் 48 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பின்மை 2020ல் 56 விழுக்காடாக அதிகரித்த விவரம் ஒரு மதிப்பீட்டிலிருந்து தெரிய வந்துள்ளது. சுற்றுலாத்துறை கட்டுண்டு கிடக்கிறது. மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு சரிந்துள்ளது. வேலைவாய்ப்பு மேலோங்கும் அறிகுறியும் தென்படவில்லை. வேளாண்மை புத்துயிர் பெற்றாலும், உற்பத்தித்துறையும், சேவைத்துறையும் ஆமைவேகத்தில் நகர்கின்றன. கொள்ளநோயை ஒடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த அரசாங்கம் தயங்குகிறது. அதேவேளை 2021 பங்குனி முதல் மார்கழிக்குள் ஏறத்தாழ 350 கோடி அமெரிக்க டாலர் வரையான வெளிநாட்டுக் கடனை இலங்கை செலுத்தித் தீர்க்க வேண்டியுள்ளது.
தமிழரின் அவநம்பிக்கை
ஐ. நா. மனித உரிமை மன்றம் விடுக்கும் சவாலை எதிர்கொள்ளவதற்காக, போரின்பொழுதும், அதன்பிறகும் புரியப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை ஆராய்வதற்கு அதிபர் ராஜபக்சா ஓர் ஆணையத்தை நியமித்துள்ளார். அந்த ஆணையத்திடம் தமது நிலைப்பாட்டை முன்வைக்கும்படியும், சர்வதேய சமூகத்தின் அணைவையும், ஐ. நா. மனித உரிமை மன்றத்தின் அணைவையும் நாடுவதை விடுத்து, காணாமல் போனோரின் அலுவலகத்தையும், இழப்பீட்டு அலுவலகத்தையும் நாடும்படியும் தமிழ்த் தலைவர்களிடமும் ஆர்ப்பாட்டக்காரர்களிடமும் வெளியுறவு அமைச்சர் வேண்டிக்கொண்டுள்ளார்.
ஆனால் தமிழரோ, இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறைகளில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று கூறுகின்றனர். தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்து முகமாக, “காணாமல் போனோர் அனைவரும் மோதலின்போது இறந்துவிட்டனர்” என்று பிரதமர் ராஜபக்சா திரும்பத் திரும்பக் கூறுவதை அவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.
கத்தோலிக்கரின் எச்சரிக்கை
இதற்கிடையே, 2019 ஏப்பிரில் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை ஆராய்ந்த அதிபர்-ஆணையம் முன்வைத்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி அரசாங்கத்துக்கு மேன்மேலும் நெருக்குதல் கொடுக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 260 பேர், பெரும்பாலும் கத்தோலிக்கர் கொல்லப்பட்டார்கள். ஆணையத்தின் அறிக்கையைப் பார்த்து அரசாங்கம் தடுமாறி வருகிறது. இன்று பொதுசன முன்னணி அரசாங்கத்துடன் நட்புறவு பேணும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா உட்பட, அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பலரையும் தண்டிப்பது கடினம்.
இஸ்லாமிய தீவிரவாதிகளின் குண்டுத் தாக்குதல்களின் பின்புல சூத்திரதாரிகள் கண்டறியப்படாவிட்டால், குண்டுதாரிகளுக்குத் துணைநின்றோர் தண்டிக்கப் படாவிட்டால், ஆர்ப்பாட்டத்தில் இறங்கப்போவதாக பேராயர் மல்கம் ரஞ்சித் அச்சுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தில் அரசாங்கம் கவனமாகக் காய்நகர்த்த வேண்டியுள்ளது. ஐ. நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கும்படி மேல்நாடுகள் நெருக்குதல் கொடுத்தன. எனினும், பாகிஸ்தான் போன்ற முஸ்லீம் நாடுகள் இலங்கையை ஆதரித்தன. முஸ்லீங்களுக்கு எதிராக தறிகெட்டதனமாகவோ, அநியாயமாகவோ நடவடிக்கை எடுத்தால், அத்தகைய முஸ்லீம் நாடுகளை அரசாங்கம் பகைக்க நேரும்.
______________________________________________________________________________________
(P. K. Balachandran, Gotabaya regime comes under multiple pressures, Daily Express, Sri Lanka, 2021-04-05, translated by Mani Velupillai, 2021-04-07).
http://www.lankaweb.com/news/items/2021/04/05/gotabaya-regime-comes-under-multiple-pressures/
No comments:
Post a Comment