காந்தியின் தலைமையில் இந்திய விடுதலை இயக்கத்தை வழிநடத்திய அமைப்பு Indian National Congress என்னும் ஆங்கிலப் பெயர் சூடியமை ஒன்றும் தற்செயலான சங்கதி அல்ல. பல்வேறு மொழிகள் வழங்கும் ஒரு நாட்டில் வாழும் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் மொழியாக விளங்கும் ஆங்கிலத்தில் பெயர்சூட்டுவதே பொருத்தம் என்பது தேசிய பிதாக்களுக்கு தெரிந்தே இருந்தது.
காந்தியின் முதன்மையான தொடர்புமொழி ஆங்கிலம். காந்திக்கும் தால்ஸ்தோய்க்கும் இடையே இடம்பெற்ற கடிதத் தொடர்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டும்படி போதித்த யேசுவின் அகிம்சை நெறியை, தால்ஸ்தோயுடன் வைத்துக்கொண்ட கடிதத்தொடர்பு மூலமாக அவர் தெரிந்துகொண்டார்.
காந்தி இலண்டனில் வைத்து எட்வின் ஆர்னோல்டின் (Edwin Arnold) ஆங்கில மொழிபெயர்ப்பு மூலமாக பகவத் கீதையை அறிந்துகொண்டார். குஜராத்தி மொழியில் காந்தி எழுதிய “சத்திய சோதனை”யை தேசாய் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்னர் அதை எஞ்சிய இந்தியாவும் வெளியுலகமும் கண்டுகொண்டது.
சுவாமி விவேகானந்தர் வங்கமொழியைக் காட்டிலும் அதிகமாக ஆங்கிலத்தில் பேசியதாகவும், எழுதியதாகவும் தெரிகிறது. தாகூரின் புறவுலகத் தொடர்புமொழி ஆங்கிலமே “கீதாஞ்சலி”யை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்னர் அதற்கு நோபல் பரிசு கிடைத்தது. ராதாகிருஷ்ணன் தமது மெய்யியல் நூல்களை ஆங்கிலத்தில் எழுதிக் குவித்தார்.
நேரு தமது பேர்போன நூல்கள் இரண்டையும் (Glimpses of World History, 1934 & The Discovery of India, 1946) நேரே ஆங்கிலத்தில் எழுதினார். இந்திய சுதந்திர தின உரையை நேரு இந்தியில் அல்ல, ஆங்கிலத்தில் ஆற்றினார். நாட்டு மக்களின் செவியிலும், உலக மக்களின் செவியிலும் விழும் வண்ணம் அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையில் அவரது நாடளாவிய நோக்கும், உலகளாவிய கண்ணோட்டமும், இந்து பண்பாட்டு மரபும், குடியாட்சி விழுமியங்களும் பொதிந்துள்ளன.
1915ல் இந்து மகா சபையை அமைத்த சவார்க்கர் கூட (அந்தமான் சிறையிலிருந்து) ஆங்கிலத்தில்தான் எழுத நேர்ந்தது. அதில் இந்துக்களை ஒரு தனி இனத்துவ, பண்பாட்டு, அரசியற் குழுமத்தவர் என்று அவர் வரையறுத்தார். இந்துசமயத்திலிருந்து தாம் சிலாவியெடுத்த இந்துத்துவ நகலை அசல் இந்துசமயமாக முன்வைத்தார்:
ஹிட்லர் சிறையிலிருந்து எழுதிய Mein Kampf 1925ல் வெளிவந்தது. அதே ஆண்டில் ஹெஜேவர் தோற்றுவித்த இயக்கம்: ராஷ்ட்ரிய ஸ்வயம் செவக் சங். இந்தியில் இதன் பொருள்: தேசிய தொண்டர் அணி. அதாவது இந்தி மற்றும் தேசியவாதம் மூலம் இந்திய தேசத்துக்கு ஆர். எஸ். எஸ். தொண்டாற்றப் புறப்பட்டது! 1980ல் அதன் அரசியல் கிளையாகிய அகில் பாரதிய ஜன சங்கின் வழித்தோன்றியதே பாரதிய ஜனதா கட்சி.
“இந்தியே இந்துக்களின் மொழி; வெள்ளையர் வருமுன் இந்தியா முழுவதும் இந்தி வழங்கிவந்தது; இராமேசுவரம் முதல் ஹரிதுவாரா வரை இந்தி பேசியபடியே ஒரு சாதுவினால் பயணிக்க முடிந்தது; அதுவே பழைய வரலாறு; இந்தியை அதற்குரிய பீடத்துக்கு ஏற்றுவதில் எதுவித புதுமையும் இல்லை; அது இந்தித் திணிப்பு ஆகாது...” (Essentials of Hindutva, 1923).
இலங்கைத் தீவைக் கட்டியாண்ட வெள்ளையர் 1833ல் தான்தோன்றித்தனமாக தமிழ், சிங்கள ஆள்புலங்கள் இரண்டையும் ஒரே ஆள்புலமாகக் கட்டியடித்தார்கள். அதுமுதல் 1948 வரை வெள்ளையர் ஆட்சியிலும், பிறகு 1956 வரை இலங்கையர் ஆட்சியிலும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் அடங்கிய மும்மொழி நெறிநின்று ஒரே நாடாக விளங்கிய இலங்கை, 1956ல் இயற்றப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்தினால் அடியோடு பிளவுண்டது. 1972ல் பெளத்தம் அரசமதம் ஆக்கப்பட்டது. தமிழ் ஈழக் கோரிக்கை வேர்விட்டது.
இங்கு ஒரு பெயர்ப் பொருத்தம் எமது கவனத்தை ஈர்க்கிறது. 1915ல் சவார்க்கர் தோற்றுவித்த இந்துமதவாத அமைப்பின் பெயர்: இந்து மகா சபை; 1937ல் பண்டாரநாயக்கா தோற்றுவித்த சிங்கள இனவாத அமைப்பின் பெயர்: சிங்கள மகா சபை! சொல்லளவிலும், செயலளவிலும் எத்துணை பொருத்தம்!
கொதாபய ராஜபக்சா இலங்கை அதிபராகப் பதவியேற்க முன்னர், அவர் ஒரு ஹிட்லர் என்று சாடப்பட்டார். அவரை ஆதரித்த ஒரு பிக்கு அவரிடம், உண்மையான ஹிட்லராக மாறி, அவ்வாறு சாடுவோர் கூறுவதை மெய்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டார்! ஹிட்லரையும் முசோலினியையும் ஏற்றிப்போற்றிய ஆர். எஸ். எஸ்., ஜனசங் தரப்பினர் ஜின்னாவின் நிலைப்பாடு நியாயமே என்பதை மெய்ப்பித்தது போல! இந்த ஒப்பீட்டை வேறேந்த நாட்டுத் தலைவரும் கண்டித்தல் திண்ணம். ஆனால் இலங்கையில் இதுவரை இது கண்டிக்கப்படவில்லை. இலங்கையில் இது நயக்கப்படவும், உவக்கப்படவும் கூடும்! அதனால் தானோ, என்னவோ, எந்த ஆட்சியாளரும் பின்பற்ற முடியாத கொடியவரே ஹிட்லர் என்பதை இலங்கையில் உள்ள ஜேர்மன் தூதரே இடித்துரைக்க நேர்ந்துள்ளது!
இலங்கையிலும், இந்தியாவிலும் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்று முழங்குவோர் ஒரு தனிப்பட்ட தரப்பின் தலைவர்களாகத் தம்மைத் தாமே வரித்துக்கொண்டவர்கள். ஆகவே முழு நாட்டுக்கும் பிரதிநிதிகளாக விளங்குவதற்கு அவர்கள் இம்மியும் அருகதை அற்றவர்கள். காந்தியின் மொழியில் மேற்படி “கிணற்றுத் தவளைகள்” தமது சிற்றறிவினைக் கொண்டு நாட்டு வளப்பத்துக்கு விளக்கமளிக்கத் தலைப்பட்டவர்கள்.
பி. ஜே. பி. அரசு இந்திய அரசியல்யாப்பையும், குடியாட்சி விழுமியங்களையும், நீதித்துறையின் நியாயாதிக்கத்தையும் மீறுவது கண்டு “நான் அச்சம் அடைகின்றேன்” என்று கூறுகிறார் அமர்த்தியா சென் (London Guardian, 2020-10-26). “இந்து தேசியவாத அரசு சமயப் பகையை மேம்படுத்தியுள்ளது; இந்தியாவின் சமயச்சார்பற்ற மரபுகளை கருவறுத்துள்ளது” என்று அவர் சாடுகின்றார்.
“இந்திய பன்மைத்துவ மரபு நீண்ட வரலாறு கொண்டது. அசோக மாமன்னர் எல்லா மதங்களையும் சகிப்புணர்வுடன் நோக்கினார். மாமன்னர் அக்பர் தமது அரசவையில் முஸ்லீங்களுக்கும் இந்துக்களுக்கும் சரிநிகர் இடங்கொடுத்தார். 16ம் நூற்றாண்டில் உரோமாபுரியில் புறநெறியாளர்கள் எரித்துக் கொல்லப்பட, இந்தியாவில் அக்பரின் அரசவையில் பன்மைத்துவ மரபு மேலோங்கியிருந்தது. அத்தகைய மதச்சார்பற்ற மரபை அகற்றும் வண்ணம் இந்திய வரலாற்றை பாரதிய ஜனதா கட்சி மீட்டியுரைத்து வருகிறது. மனந்திறந்துரைக்கும் இந்திய மரபை ஒழித்துக்கட்டுவதில் இந்திய ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
“பொது ஊழிக்கு முன் 3ம் நூற்றான்டில் அசோக மாமன்னர் அமைத்த நாலந்தா பல்கலைக்கழகம் உலகின் முதலாவது பல்கலைக்கழகம் என்று கொள்ளப்படுவதுண்டு. 2014ல் அதற்கு புத்துயிரூட்டப்பட்டு, அமர்த்தியா சென் வேந்தராக அமர்த்தப்பட்டார். மோதி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியேற்ற கையோடு, நாலந்தா பல்கலைக்கழகம் ஓர் இந்துவிரோத அமைப்பு என்று பழிக்கப்பட்டு, அதற்கான பொருளுதவி நிறுத்தப்பட்டது. 2015ல் சென் பதவி விலகினார். அறவே இந்திய மரபில் எழுந்த சமயநெறியை உலகிற்கு ஈந்த மெய்ஞான இளவரசராகிய புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கே மோதியின் அரசு மறுப்புத் தெரிவித்தது” (Edward Luce quoted by Amit Roy, Home in the World: Amartya's memoir of ‘ideas, people & places’, Indian Telegraph, 2021-07-04).
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இந்தி பேசாத நாடாளுமன்ற உறுப்பினராகிய கனிமொழியிடம் “நீர் இந்தியரா?” என்று மத்திய கைத்தொழில் பாதுகாப்பு படை (CISF) அதிகாரி ஒருவர் கேட்டிருக்கிறார். அதாவது, இந்தி பேசாத இந்தியர்கள், இந்தியர்கள் அல்லர்! இந்திய முஸ்லீங்கள் மட்டுமல்ல, இந்தி பேசாத இந்தியர்களும் இந்தியர்கள் அல்லர்!
இதே பேரினவாதப் போக்கு இலங்கையிலும் உச்சத்தை தொட்டுள்ளது. அதற்கோர் எடுத்துக்காட்டு: சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படைமுகாங்களுக்குச் சென்று கொரனா தடுப்பூசி ஏற்ற மறுப்புத் தெரிவித்தார்கள். “அவர்கள் இந்த நாட்டவர்கள் அல்லர்” என்று சாடியிருக்கிறார் படைத்தளபதி சர்வேந்திர சில்வா!
எத்தனையோ சாபங்களையும், ஆரூடங்களையும் மீறி, ஒருங்கிணைந்து நீடித்து நிலைத்துள்ள இந்தியக் குடியரசை, இந்திய அரசியல்யாப்பின் சிறப்பியல்புகளை, குடியாட்சி விழுமியங்களை, சுதந்திர நீதித்துறையை, ஆங்கிலக் கல்வியின் கொடையை தேர்ந்து தெளிவதற்கு வேண்டிய ஞானமும் முதிர்ச்சியும் மதிநுட்பமும் அற்றவர்கள் இந்துத்துவத்தையும் இந்தியையும் கொண்டு இந்தியாவை ஒருங்கிணைக்க முனையும் பைத்தியக்காரத்தனத்தில் பொதிந்துள்ள ஒழுங்குமுறை வியக்கத்தக்கது (Though this be madness, yet there is method in't - Shakespeare).
இந்தியாவின் பல்வண்மை சவார்க்கர், ஹெஜேவர் முதலியோரின் கண்களுக்கு நாடளாவிய சிதைவாகவும் சிதிலமாகவும் தெரிந்தது அன்று. தனது தனித்துவத்தை இழந்து, சிதறுண்டு, சீரழியும் இந்தியாவை இந்தியையும், இந்துத்துவத்தையும் கொண்டு ஒன்றுபடுத்த முனைந்து, அதைச் சிதறடிக்கப் பாடுபடுகிறது பி. ஜே. பி. இன்று.
உருதுமொழி மட்டுமே பாகிஸ்தானின் ஆட்சிமொழி என்று கிழக்கு பாகிஸ்தானில் வைத்து ஜின்னா முழங்கியமை வங்கதேசப் பிரிவினைக்கு வித்திட்டதையும், இலங்கையில் தனிச்சிங்களச் சட்டம் பிரிவினைப் போராட்டத்துக்கு இட்டுச்சென்றதையும் ராமச்சந்திர குகா, சசி தரூர் இருவரும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
1930களில் எழுந்த திராவிடக் கோரிக்கையையும், 1947ல் நிகழ்ந்த பாகிஸ்தான் பிரிவினையையும், 1971ல் தோன்றிய வங்கதேசத்தையும், 1976ல் ஓங்கிய தமிழ் ஈழக் கோரிக்கையையும், 1980களில் ஒலித்த காலிஸ்தான் முழக்கத்தையும், அத்தகைய நிலைப்பாடு நியாயப்படுத்துகிறது.
1948ல் மத்திய நிதி அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி இந்தி திணிப்பை “இந்தி ஏகாதிபத்தியம்” (Hindi Imperialism) என்று சாடியதையும், “இந்திபேசும் இந்தியாவா, முழு இந்தியாவா வேண்டும் என்பதை வடமாநில நண்பர்களே தெரிவுசெய்யட்டும்!” என்று முழங்கியதையும் அதே நிலைப்பாடு நியாயப்படுத்துகிறது.
1947ல் என்றென்றும் செல்லுபடியாகும் வண்ணம் நேரு ஆங்கிலத்தில் ஆற்றிய சுதந்திர தின உரையில் ஒரு கூறு:
“பற்றுறுதி கமழும் இத்தருணத்தில் இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும், இன்னும் பாரிய மானுட குறிக்கோளுக்கும் தொண்டாற்ற எங்களை நாங்கள் அர்ப்பணிக்க உறுதிபூணல் தகும்.
“சுதந்திர தீபத்தை ஏந்தி, எங்களைச் சூழ்ந்த இருள்மீது ஒளிபாய்ச்சிய சுதந்திர சிற்பியை, எங்கள் நாட்டின் பிதாவை, இந்தியாவின் பழம்பெரும் ஆத்மாவின் திருவுருவை இன்றைய நாளில் முதன்முதல் நாங்கள் எண்ணிப் பார்க்கின்றோம்.
“நாங்கள் பெரிதும் அருகதையின்றியே அன்னாரைப் பின்தொடர்ந்து வந்துள்ளோம். அவரது வழியிலிருந்து நாங்கள் விலகிச் சென்றுள்ளோம். ஆனாலும் நாங்கள் மட்டுமல்ல, அடுத்த தலைமுறையினரும் அந்த வழியை நினைவில் வைத்திருப்பார்கள்; வீறார்ந்த விசுவாசமும், வலிமையும், தீரமும், பணிவும் கொண்ட மகத்தான இந்திய மகனை தமது இதயங்களில் பதித்து வைத்திருப்பார்கள்; காற்று எவ்வளவு தூரம் கிளம்பி வீசினாலும், புயல் எவ்வளவு தூரம் எழுந்து சூறையாடினாலும், அந்த சுதந்திர தீபத்தை என்றுமே நாங்கள் அணையவிடப் போவதில்லை” (நேரு, 1947-08-14).
சரியாக 73 ஆண்டுகள் கழித்து, பூமிபூசை நடத்தி, புதிய நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டி, இந்தியில் உரையாற்றியிருக்கிறார் பிரதமர் மோடி! இந்துத்துவத்துக்கும், இந்தித்துவத்துக்கும் புதுவீடு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார் (2020-12-10).
கோல்வால்க்கர் ஹிட்லரை நயந்தவர். மனுவின் சாதியத்தை மெச்சியவர். இந்திய அரசியல்யாப்பைக் கடிந்தவர். அவரது பெயரை கேரளாவில் ராஜீவ் காந்தியின் பெயர்கொண்ட ஒரு தொழில்நுட்ப நிலையத்தின் இரண்டாவது வளாகத்துக்கு சூட்டும் முடிபை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஒரு பெண்ணை மானபங்கப்படுத்திய காமுகனையே அந்த அபலையின் கணவனாக நிறுத்துவதற்கு நிகரானது.
புனே மாநகரில் ஒரு கோட்சே அறிவகத்தை (Godse Gyan Shala) இந்து மகா சபை, அமைத்துள்ளது. காந்தியை இந்தியாவின் துரோகி என்றும், அவரை கோட்சே கொன்றது நியாயமே என்றும், இந்தியா இந்துக்களுக்குரிய நாடு என்றும், 20 கோடி இந்திய முஸ்லீங்களும் பாகிஸ்தானுக்குப் பெயரவேண்டும் என்றும்... இந்து மகா சபையின் செயலாளர் தேவேந்திர பாண்டே முழங்கியுள்ளார்!
“உங்கள் சமயம் எது?” என்ற வினாவுக்கு, “நான் ஒரு முஸ்லீம், இந்து, கிறீஸ்தவன், யூதன்” என்று விடையளித்தார் காந்தி. “ஓர் இந்துவால் மட்டுமே அப்படிக் கூற முடியும்” என்றார் ஜின்னா. ஆதலால்தான் “எல்லாச் சமயங்களையும் மெய்யானவை என்றே நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்” என்று முழங்கினார் சுவாமி விவேகானந்தர் (உலக சமய மாநாடு, சிக்காகோ, 1893-09-11).
“இறைவன் உண்டு என்பவருக்கும், இறைவன் இல்லை என்பவருக்கும் இந்துசமயத்தில் சரிநிகர் இடம் உண்டு” என்பதை தரூர் தமது நூலில் (Why I am a Hindu, 2018) விளக்கியுரைத்துள்ளார். இந்து பண்பாட்டு மரபு வேறு, இந்துத்துவம் வேறு என்பதைப் புரிந்துகொண்டவர்கள் காந்தியும், நேருவும். காந்தி கோயிலுக்கே போனதில்லை என்கிறார் குகா. ஒரேயொரு தடவை (மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் தலித்து மக்களை அனுமதிக்கும் நிகழ்வுக்கு மட்டும்) அவர் போனதுண்டு.
காந்தி பிரிவினையை தடுக்கும் நோக்கில் பிரதமர்-பதவியை ஜின்னாவுக்கு ஈந்தபொழுது, அதற்கு நேருவோ, பட்டேலோ மறுப்புத் தெரிவிக்கவில்லை. பிறகு நேருவுக்கு அதை ஈந்தபொழுது, பட்டேல் மறுப்புத் தெரிவிக்கவில்லை. மூவரின் பெருந்தன்மைக்கும் தோழமைக்கும் இவ்விரு நிகழ்வுகளும் சான்று பகர்கின்றன.
“எனது வழித்தோன்றல் ராஜாஜியுமல்ல, சர்தார் வல்லபாயுமல்ல, ஜவகர்லாலே! நான் போன பிறகு, அவரே எனது மொழியைப் பேசுவார்” என்று அறிவித்தார் காந்தி. “எனது மொழி” என்று காந்தி கூறியது அவரது தாய்மொழியாகிய குஜராத்தியை அல்ல. தமது நாடளாவிய நோக்கையும், உலகளாவிய கண்ணோட்டத்தையுமே “எனது மொழி” என்று அவர் குறிப்பிட்டார்.
நேருவின் அமைச்சரவையில் துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர், மாநில அமைச்சர் பதவிகளை பட்டேல் உளமுவந்து ஏற்றுக்கொண்டார். எனினும் காந்தியும், நேருவும் பட்டேலுக்கு அநீதி இழைத்துவிட்டது போலவும், அதற்காக அவர்களைத் தண்டிப்பது போலவும் பி. ஜே. பி. நடந்துகொள்கிறது. பட்டேலுக்கு நர்மதா ஆற்றங்கரையில் 2,989 கோடி ரூபா செலவில், 597 அடி உயரமான சிலையெழுப்பி அம்மூவரதும் பெருந்தன்மையை சிறுமைப்படுத்தியுள்ளது; அவர்களது தோழமையை கீழ்மைப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி திரைநீக்கம் செய்துவைத்த அச்சிலைக்கு “ஒற்றுமைச் சிலை” என்று பெயர் சூட்டப்பட்டமை ஒரு முரண் அணி போல் சுவைக்கிறது. பட்டேல் தம் வாழ்நாள் முழுவதும் ஒரு காங்கிரஸ்காரராகத் திகழ்ந்தவர். வேண்டுமானால், காந்தியின் இடதுபுறம் நேருவும், வலதுபுறம் பட்டேலும் நிலைகொண்டதாக வைத்துக் கொள்ளலாம். அத்தகைய தோழமையைப் பொருட்படுத்தாமல், காந்தியையும், அவர் தேர்ந்தெடுத்த நேருவையும் பி. ஜே. பி. திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்கிறது.
இந்தியா ஒரு பாகிஸ்தானாக மாறக்கூடாது என்று எச்சரித்தார் காந்தி. பாகிஸ்தானிய புலமையாளர் அக்கானி (Husain Haqqani) “இந்தியா ஒரு பாகிஸ்தானாக மாறக்கூடாது, பாகிஸ்தானே ஒர் இந்தியாவாக மாறவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார் (Reimagining Pakistan, 2018). காந்தியின் எச்சரிக்கையையும், அக்கானியின் வேண்டுகோளையும் புறக்கணித்து, வேற்றுமைக்குத் தூபமிட்டு வருகிறது பி. ஜே. பி.
காந்தியும், நேருவும் கோலோச்சிய இந்திய நாட்டிலிருந்து சர்வதேய அபயத் தாபனம் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில், அதைக் குறித்து இந்திய மைய ஊடகங்களோ அறிவார்ந்தோரோ பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நோம் சொம்ஸ்கி திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டுவது போல், மைய ஊடகத் துறைஞரும், அறிவார்ந்தோரும் ஆட்சியாளருக்குப் பணிவிடை புரிவோரே. இந்தியாவுக்கு இது பேரிழிவு அல்லவா!
இந்தியாவின் இன்றைய நிலையை சல்மன் ருஷ்டி இப்படி எடுத்துரைத்துள்ளார்: “1975 முதல் 1977 வரை நிலவிய அவசரகால கட்டத்தை விடவும் இருண்ட காலகட்டத்துள் இந்தியா இன்று புகுந்து கொண்டதாகவே எனது உள்ளம் கொண்ட ஒருவருக்குத் தென்படுகிறது. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடூரமான தாக்குதல்கள் பெருகியுள்ளன. அரசின் எதேச்சாதிகாரத் தன்மை அதிகரித்துள்ளது. எதேச்சாதிகாரத்தை எதிர்க்கத் துணிவோர் நியாயமின்றிக் கைதுசெய்யப்படுகிறார்கள். சமய வெறித்தனம் மேலோங்கியுள்ளது. இந்தியாவை ஓர் இந்து தேசிய பெரும்பான்மைவாத அரசாக மாற்ற எண்ணுவோரின் வியாக்கியானத்துக்கு உசிதமான முறையில் வரலாறு மீட்டி எழுதப்படுகிறது. இப்படி எல்லாம் நடந்தும் கூட, அதைவிட மோசம் எனும்படியாக, இப்படி எல்லாம் நடந்தபடியால் ஆட்சிபீடத்துக்கு மக்களின் ஆதரவு பெருகியுள்ளது - இவை எல்லாம் ஓர் ஆற்றாமை உணர்வை ஏற்படுத்துகின்றன (Salman Rushdie, London Guardian, 2021-04-03).
இன்று ருஷ்டிக்கு ஏற்பட்டுள்ள ஆற்றாமை உணர்வு அன்று அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கையை நினிவூட்டுகிறது: “கடந்தகாலம் மீண்டும் நிகழ்காலம் ஆகுமா? அந்த எண்ணமே என்னைப் பதைக்க வைக்கிறது. சாதிகளின் உருவிலும், சமயங்களின் உருவிலும் எங்கள் பழைய எதிரிகளை நாங்கள் எதிர்கொள்ளப் போகின்றோம்; அத்துடன் எதிரெதிரான பல்வேறு அரசியல் நெறிகளுடன் கூடிய கட்சிகளையும் நாங்கள் எதிர்கொள்ளப் போகின்றோம்; அதை உணரும்பொழுது என் பதைப்பு அதிகரிக்கிறது. இந்தியர்கள் தமது சமயநெறிக்கு மேலாக நாட்டை மதிப்பார்களா, அல்லது நாட்டுக்கு மேலாகச் சமயநெறியை மதிப்பார்களா? எனக்குத் தெரியாது? ஆனால் ஒன்று மட்டும் உறுதி: எங்கள் கட்சிகள் நாட்டுக்கு மேலாக சமயநெறியை மதித்தால், எங்கள் சுதந்திரம் இரண்டாவது தடவை இக்கட்டுக்கு உள்ளாகும்; என்றென்றும் அதை நாங்கள் இழக்கவும் கூடும். அவ்வாறு நேராவாறு நாங்கள் அனைவரும் உறுதிபடக் கண்காணிக்க வேண்டும். எங்கள் குருதியில் கடைசித் துளி உள்ளவரை எங்கள் சுதந்திரத்தைக் கட்டிக்காக்க நாங்கள் திடசித்தம் கொள்ள வேண்டும்” (Ambedkar, Constituent Assembly, India, 1949-11-25).
தமிழகத்தில் தாமும் தம் பாடுமாகத் திரியும் நடிகர்களை தம்பக்கம் வலிந்திழுத்து, திரைக்கவர்ச்சி மூலம் தமிழக மக்களை அடிப்படுத்தி, அங்கு தமது குறிக்கோளை எய்த பி. ஜே. பி. காய்நகர்த்தி வருகிறது. 1930களில் ராஜாஜியின் இந்திக் கொள்கைக்கு எதிராகப் பெரியார் தலைமையிலும், 1960களில் பக்தவத்சலத்தின் இந்திக் கொள்கைக்கு எதிராக அண்ணா தலைமையிலும் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்துக்கு இனி தமிழகத்தில் புத்துயிரூட்ட நேர்ந்தால், அதற்குத் திராவிடத்துவமல்ல, இந்துத்துவமே காரணமாகும்.
இந்தி மத்திய ஆட்சிமொழியாவதை காந்தி, நேரு, பட்டேல் போன்றவர்கள் விரும்பியது உண்மையே. அதற்கு ஏனைய மாநிலங்களில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பியபொழுது, “மாநிலங்கள் ஏற்கும்வரை ஆங்கிலம் தொடர்புமொழியாக நிலைக்கும்” என்று 1959ல் நேரு வாக்குறுதி அளித்தார். அவரது வாக்குறுதிக்கு 1963ல் சட்டப்பேறு அளிக்கப்பட்டது.
மேற்படி சட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய தேவையை உணர்த்திய பி. ஜே. பி.க்கு நன்றி செலுத்த வேண்டும்! இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கட்டிக்காப்பதற்கு (இந்தியுடன்) “ஆங்கிலமும் மத்திய ஆட்சிமொழி ஆகும்” என்று அரசியல்யாப்பில் பொறிக்கப்படுவது இன்றியமையாத ஒன்றாகியுள்ளது.
ஏற்கெனவே பெரிதும் செயலளவில் (இந்தியுடன்) ஆங்கிலம் மத்திய ஆட்சிமொழி போலவே வழங்கி வருகிறது. பெயரளவிலும் அது யாப்பில் இடம்பெறுவதை இந்தி வழங்காத மாநிலங்கள் வரவேற்றல் திண்ணம். இந்தியாவின் ஒருமைப்பாட்டினைக் கருத்தில் கொண்டு, (இந்தியுடன்) ஆங்கிலத்தையும் மத்திய ஆட்சிமொழி ஆக்கும் வாய்ப்பினை மத்திய அரசும், மாநில அரசுகளும் சீர்தூக்கிப் பார்த்தல் நன்று.
_________________________________
மணி வேலுப்பிள்ளை, 2020-12-25.
No comments:
Post a Comment