தோல்வியை நிறைவுபடுத்தல்

விக்டர் ஐவன்


தற்பொழுது இலங்கையை ஓர் அவப்பேறான அவலம் சூழ்ந்துகொண்டுள்ளது. நாட்டின் உள்ளேயும் வெளியேயும் இலங்கை அரசின் தோல்வி  முழுமையடையும் கட்டத்தை எட்டியுள்ளது. உருக்குலைவு, களேவரம் என்பவற்றுடன் கூடிய இருள் இந்த நாட்டின் ஆட்சியை மங்க வைத்துள்ளது. அரசும், அரசியற் கட்டுக்கோப்பும் பெரிதும் நிலைகுலையும் நிலையை அடைந்துள்ளன. பொருளாதாரம் பெரிதும் நொடிப்பின் விளிம்பை நெருங்கியுள்ளது. புவியரசியல் வாரியாக நாடு பெரிதும் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கிறது. 

நாடு எதிர்நோக்கும் களேவரமும், பொருளாதார நொடிப்பும் தங்களை நசுக்கத் துவங்கியுள்ளன என்ற உருப்படியான உண்மையை மக்களே உணர்ந்து கொள்ளக் கூடும். 


கட்டமைப்பு


இத்தகைய அரசியல் நிலைவரத்தில் இன்னொரு முக்கிய அம்சமும் தெரிகிறது: ஆளும் கட்சி அடையும் சரிவின் அளவுக்கு ஈடாக எதிர்க்கட்சித் தரப்பு எதனாலும்  மக்களின் அங்கீகாரத்தை தம்வசம் பெருக்க முடியவில்லை. இலங்கையில் எழுந்துள்ள நெருக்கடி என்பது இலங்கையின் கட்டமைப்பு சார்ந்த நெருக்கடி என்பதையே இது தெளிவுபடுத்துகிறது. அதாவது இலங்கையில் எழுந்துள்ள நெருக்கடி என்பது ஒரு தலைவரால், அல்லது அரசுத் தலைவரால், அல்லது அரசாங்கத்தால் விளைந்த நெருக்கடி என்பதற்கு அப்பால், இலங்கை எனும் கட்டமைப்பினால் வழிவழியாகத் தோற்றுவிக்கப்பட்ட  தலைவர்களும் அரசியல் கட்சிகளும் அடைந்த தோல்விகளால் விளைந்துள்ள நெருக்கடி என்பதையே இது தெளிவுபடுத்துகிறது. 


படைத்துறை


குடித்துறை ஆட்சியைக் கருவறுக்கும் வண்ணம் படைத்துறை அணுகுமுறைக்கு கனதி கொடுக்கும் கொள்கையை அதிபர் ராஜபக்சா கடைப்பிடித்தும் கூட, குறித்த இலக்குகளை அவரால் எய்த முடியவில்லை. கணிசமானளவு குடித்துறை அதிகாரிகள் மட்டுமல்ல, முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்ட படைத்துறை அதிகாரிகளும் கூட பதவி விலகியுள்ளார்கள். 


நீதித்துறை


இந்த நெருக்கடியில் நீதித்துறையின் செயற்பாடு பெருமளவு சுருங்கி, சீரழிந்துள்ளதாகவும் குறிப்பிடலாம். இலங்கை நீதித்துறை செவ்வனே நீதிபாலிக்க முடியாத கட்டத்தையும், பொதுமக்களுக்கு மட்டுமல்ல, சமூக-அரசியல் கட்டமைப்புக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத கட்டத்தையும் எட்டியுள்ளதாகவும் கூறலாம். ஷானி அபயசேகரா எதிர்கொண்டிருக்கும் அவலம்,  அந்த நிலைவரத்தை வெளிப்படுத்த நல்லதோர் எடுத்துக்காட்டு. தலைமைச் சட்டவாளர் திணைக்களமும், நீதித்துறையும் காட்டிய வழியிலேயே தமது புலனாய்வுகள் அனைத்தையும் அவர் மேற்கொண்டிருந்தார். எனினும், இவ்விரு துறைகளும் இன்று அவருக்குரிய பாதுகாப்பை அளிக்கத் தவறியுள்ளன. 


ஆட்சியாளரின் அக்கறைகள் 


இந்த நாட்டில் பெரும்பாலும் எல்லா அலுவல்களுமே முறைதவறி, அபத்தமான முறையில் நடத்தப்படுகின்றன. மூன்று துறைகளில் மாத்திரமே உரிய அலுவல்கள் முனைப்பாகவும், திட்பமாகவும் நடந்தேறி வருகின்றன: (1) முந்திய ஆட்சியில்  வழக்கு விசாரணைக்கு உட்பட்ட இன்றைய அரசுத் தலைவர்களை விடுதலை செய்வதிலும்,  (2) இன்றைய அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் மீது வழக்குத் தொடுப்பதிலும், (3) பல்வேறு துறைகளிலும் பொதுச்சொத்தை சூறையாடுவதிலும் மாத்திரமே உரிய அலுவல்கள் முனைப்பாகவும், திட்பமாகவும் நடந்தேறி வருகின்றன.


பொருளாதார நொடிப்பு


பொருளாதார நொடிப்பு வெளிப்படையாகவும் உருப்படியாகவும் புலப்படுகிறது. அதுவே மக்களை நசுக்கும் காரணிகளுள் பாரியது. இந்த நிலைவரம் விரைவில் தாங்கமுடியாத சுமையாக மாறுவதை தவிர்க்க முடியாது. ஓர் அமெரிக்க டாலரின் பெறுமதி ஏற்கெனவே 200 ரூபாவை விஞ்சிவிட்டது என்று நிதி அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். விரைவில் அது 350 ரூபாவையும் எட்டக்கூடும். ஆதலால், இனிமேல் ஒரு பை நிறையப் பொருட்களை வாங்குவதற்கு ஒரு பைநிறையக் காசு தேவைப்படும். இறக்குமதியாகும் பொருட்களை, அவை சந்தையில் கிடைக்கும் வரையே, வாங்க முடியும். சந்தையில் உரோதைகளுக்கு தட்டுப்பாடு நிலவும் அறிகுறிகள் தெரிகின்றன. ஆதலால் எந்த வேளையிலும் ஊர்திப் போக்குவரத்து நிலைகுலையக் கூடும்.

ஏற்கெனவே பெருந்தொகையானோர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளார்கள். தமது வேலைவாய்ப்புகளைப் பேணிக் கொண்டவர்களின் வருமானம் இன்னும் பெருமளவு சரிந்துள்ளது. மக்களின் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நிகழும் அறிகுறிகள் ஏற்கெனவே ஓங்கியுள்ளன. அத்தகைய நிலைவரம் எதிர்காலத்தில் மேலும் தீவிரமடையக் கூடும். 

இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு வேண்டிய நடைமுறையை வகுப்பதற்கான அகநோக்கு ஆட்சியாளரிடம் இல்லை. இந்த நிலைவரத்தை ஒரு பொது அம்சம் என்று கொள்ளலாம். ஏனெனில், அது அரசாங்கத்திடம் மட்டுமல்ல, எதிர்க்கட்சியிடமும் இல்லை! (1) ஆட்சியாளர் நாட்டைக் கட்டியெழுப்பத் தவறியுள்ளனர்; (2) பொதுச்சொத்தை சூறையாடியுள்ளனர்; இலங்கையின் இன்றைய அவலத்துக்கு வழிவகுத்த தலையாய காரணிகள் என்று அவை இரண்டையும் கொள்ளலாம்.  

நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். அரசையும், அரசியற் கட்டமைப்பையும் மறுசீரமைக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு, மனித உரிமை மீறல்கள் குறித்து பரந்துபட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். பொதுச்சொத்தை கொள்ளையடிக்கும் வாய்ப்பை ஆட்சியாளர் ஈட்டிக்கொள்வது என்பது அரச நிருவாகத்தில் ஒரு நிரந்தர அம்சமாக நிலைத்துள்ளது. அத்தகைய வாய்ப்பு அறவே ஒழிக்கப்பட வேண்டும்.  

தமது துர்ச்செயல்களால் நாட்டுக்கு நேர்ந்த பேரழிவு, ஆளும் கட்சியையோ, எதிர்க்கட்சியையோ இம்மியும் உறுத்துவதாகத் தெரியவில்லை. பொதுச்சொத்தைச் சூறையாடும் பேராசையை அவை இரண்டுமே கைவிட்டதில்லை. நேர்மைத்திறமோ, சிந்தனைத்திறனோ இன்றி இரண்டு தரப்புகளுமே பாரிய ஒழுக்கக்கேட்டுக்கு உள்ளாகியுள்ளன. அடுத்த பொதுத்தேர்தலில் தாம் ஆட்சியைக் கைப்பற்றுவதிலேயே இலங்கையின் நெருக்கடிக்கான தீர்வு தங்கியுள்ளதாக எல்லா எதிர்க்கட்சிகளுமே எண்ணுவதாகத் தெரிகிறது.  


புவியரசியல் மெய்நிலையைப் புறக்கணித்தல் 


புவியரசியல் துறையில் இலங்கை கடைப்பிடிக்கும் தீவிர சீனசார்புக் கொள்கை இலங்கையின் நெருக்கடியை தடல்புடலாக வெடிக்கும் நிலைக்கு இட்டுச்செல்லக் கூடும்.  ஏற்கெனவே சீனாவுக்கு செலுத்தவேண்டிய பாரிய கடன்சுமைப் பொறியினுள் நாடு அகப்பட்டுள்ளது. அப்பொறியிலிருந்து தப்பிப்பிழைப்பது இலகுவல்ல. 

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இலங்கையிலிருந்து  இந்து சமுத்திரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதேவேளை இந்தியாவை இலங்கையின் மிக நெருங்கிய அயல்நாடாகவும், பெரிய பிராந்திய வல்லரசாகவும், இப்பிராந்தியத்தின் ஆதிக்க வல்லராக அல்லது பெருவல்லரசாக விளங்க வேட்கை கொள்ளும் நாடாகவும் கொள்ளலாம். 

இலங்கையின் அமைவிடத்தை மாற்ற முடியாது. அது சீனாவின் வாயடியில் அல்ல, இந்தியாவின் வாயடியில் அமைந்துள்ளது. ஆதலால் இந்தியாவின் எதிர்பார்ப்புகளைப் புறக்கணிக்கும் சீனசார்புக் கொள்கையினால் இந்தியாவில் கடுஞ்சீற்றம் மூளக்கூடும். இலங்கையில் தலையிடும் கொள்கையை இந்தியா முன்னெடுத்தால், அதை எதிர்க்கும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கப் போவதில்லை என்பது உறுதி. 


ஐ. நா. மனித உரிமை மன்றத்தின் தீர்மானம்


இலங்கை ஏற்கெனவே ஒரு நெருக்கடிக்குள் ஆழ்ந்துள்ளது. அண்மையில் இலங்கையைக் குறித்து ஐ. நா. மனித உரிமை மன்றம் நிறைவேற்றிய தீர்மானம் இலங்கையின் மீது இன்னும் தாக்கம் விளைவிப்பதை தவிர்க்கவியலாது. இலங்கை தொடர்ந்தும் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டால், அதன்மீது வெளியுலகம் முட்டுக்கட்டைகள் இடும் நிலைவரம் எழக்கூடும். 


மனித உரிமை அலுவலகம்


மேற்படி தீர்மானத்தின் முக்கிய பெறுபேறாக ஐ. நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தில் 12 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமை அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. இலங்கையில் முன்னர் நிகழ்ந்ததாகவும், தற்பொழுது நிகழ்வதாகவும் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றிய புலனாய்வுகளைப் படிமுறையிடும் அலுவலகம் அது. அதன் 22 மாத அலுவலக செயற்பாட்டுக்கு 28 இலட்சம் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைப் பொறுத்தவரை இந்த அலுவலகம் ஒரு திருப்புமுனையைக்  குறிக்கிறது என்பதிலும், இலங்கையின் உள்நாட்டு அலுவல்களில், ஒரு வழியில் மட்டுமல்ல, பல வகைகளில் அது மிகுந்த தாக்கத்தை விளைவிக்கும் என்பதிலும் ஐயமில்லை:

  1. மனித உரிமைகள் பெரிதும் பறிக்கப்பட்ட தமிழ், முஸ்லீம் மக்களையும்,  உரிமைகள் பறிக்கப்பட்ட, தொடர்ந்தும் உரிமைகள் பறிக்கப்படும் சிங்கள மக்களையும் பாதுகாக்கும் முக்கிய அமைப்பாக அது விளங்கும். 

  2. சிங்கள மக்கள் மேற்கொண்ட இரு கிளர்ச்சிகளின் பொழுதும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டவர்களின் உள்ளக்குறைகளுக்கு நியாயம் கிடைக்க உதவும் அமைப்பாக இது விளங்கும். 

  3. தமிழரின் கிளர்ச்சியின்பொழுது வடக்கில் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானவர்களுக்கும், அதனைத் தொடர்ந்து  மனித உரிமை மீறல்களுக்கு உள்ளான முஸ்லீங்களுக்கும் இது ஒரு முக்கிய அமைப்பாக விளங்கும். பாதிக்கப்பட்ட தரப்புகள் அனைத்தும் இந்த அலுவலகத்திடம் தமது உள்ளக்குறைகளை எடுத்துரைத்து, நிவாரணம் கோரமுடியும். 

  4. கப்பம் வசூலிக்கவெனக் கைதுசெய்யப்பட்டு, காணாமல் போக்கடிக்கப்பட்ட 11 இளைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் படுகொலை, பிரகீத் எகனலிகொடவின் கடத்தலும், காணாமல் போக்கடிப்பும், கொடிய தாக்குதல்கள் குறித்த புலன்விசாரணையைக் கருவறுக்கவென ஊடகர்களைக் கடத்தியமை போன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட தரப்பினர் அனைவரும் தமது வாதாட்டத்துக்கும்  பாதுகாப்புக்கும் இந்த அலுவலகத்திடம் உதவி கோரி, நீதியை நிலைநாட்டும்படி வற்புறுத்த முடியும். குறிப்பாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹெஸ்புல்லா, ஷானி அபயசேகரா ஆகியோரும் தமது வாதாட்டத்துக்கும்  பாதுகாப்புக்கும் இந்த அலுவலகத்திடம் உதவிகோர முடியும்.

  5. இன்று சட்டத்துக்கு மாறாக அமைக்கப்படும் ஆணையங்களின் கட்டமைப்பினால் தமது குடியுரிமைகள் பறிக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கும் அரசியல் தலைவர்கள் அனைவரும் தமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இந்த அலுவலகத்திடம் உதவிகோர முடியும். 

  6. சர்வதேய குடியியல்-அரசியல் உரிமைகள் உடன்பாட்டுக்கமைய பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ. நா. மனித உரிமை ஆணையத்திடம் நான், தொனி எமானுவேல் பர்னாந்து, பாலித பண்டாரநாயக்கா ஆகியோர் முறையிட்டோம். எமது உரிமைகள் மீறப்பட்டதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது; எமக்கு இழப்பீடு செய்யும்படி அரசாங்கத்துக்கு ஆணையம் உத்தரவிட்டது; அந்த உத்தரவை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. எம்மைப் போன்றவர்களும் இந்த அலுவலகத்திடம் நீதிநாடி விண்ணப்பிக்கலாம். 

  7. சீரழிந்துபோன இலங்கை அரசை வெற்றிகொள்வதில் நாட்டம் கொண்டோர், அதற்குரிய கட்டமைப்புவாரியான சீர்திருத்தங்களைக் கைக்கொள்வதில்  அக்கறை உடையோர், மக்கள் பங்குபற்றும் அரசியல்யாப்பை வகுத்து, இலங்கையின் கட்டமைப்பில் உருப்படியான மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஈடுபாடு கொண்டோர் கூட மேற்படி அலுவலகத்திடம் வேண்டிய வழிமுறையையும், தொழினுட்ப உதவியையும் கோரி விண்ணப்பிக்கலாம்.    


நீதித்துறை எதிர்நோக்கும் சவால் 


மேற்படி தீர்மானத்தில் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்குவது நீதித்துறையே. இலங்கையின் நீதித்துறைக்கு உலகத்தில் நற்பெயர் கிடையாது. இத்தீர்மானத்தின் பெறுபேறாக இலங்கையின் நீதித்துறையில் புதிய மாற்றங்கள் ஏற்படக்கூடும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கையின் உச்ச நீதிமன்று நீதிவழங்காவிட்டால், அவர்கள் வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றில் நீதிகோருவதற்கான மாற்றுவழி ஒன்று  தோற்றுவிக்கப்படக் கூடும். அதற்காக ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியாவிலும் இயங்கும் நீதிமன்றுகளின் கதவுகள் திறக்கப்பட்டால், கட்டுப்படுத்த முடியாத காட்டாறு ஒன்று பாய்வதைத் தவிர்க்க முடியாது. இந்தக் குறிகாட்டியை இலங்கையின் நீதித்துறை எவ்வாறு நோக்கும்?

____________________________________________________________________________________

Victor Ivan, Perfecting failure, FM, 2021-04-02, translated by Mani Velupillai, 2021-04-03.

No comments:

Post a Comment