பிரகீத் எக்னெலிகொடை 

விடை கிடையாத பதினாறு ஆண்டுகள்

நீதிக்கான போராட்டம் இன்னும் முற்றுப்பெறவில்லை

     லயனல் போபகே

இலங்கை ஊடகர் பிரகீத் எக்னெலிகொடை காணாமல்போன சங்கதிக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. பதினாறு ஆண்டுகளாக சட்டச் சமர்கள் நடைபெற்றுள்ளன. சாட்சிகள் மிரட்டப்பட்டுள்ளார்கள். வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளன. இலங்கையில் மனித உரிமைகளையும், ஊடக சுதந்திரத்தையும் மீறும் செயலுக்கு தண்டனை கிடையாது என்பதை இது காத்திரமான முறையில் உணர்த்துகிறது.  


இன்றைய ஆட்சியிலும் அவர் மனைவி சந்தியா தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகிறார். கொலை மிரட்டலுக்கு உள்ளாகி வருகிறார். அவரைக் கடைசியாக அச்சுறுத்தியவர், ஓய்வுபெற்ற ஒரு மூத்த படையதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது ஒரு பாரதூரமான சங்கதி மட்டுமல்ல; பாதிப்புக்கு உள்ளான ஒரு பெண்ணின் தன்மானத்துக்கு விழுந்த அடியுமாகும். 


2010 ஜனவரி 24ம் திகதி இலங்கை ஊடகரும் கேலிச் சித்திர ஓவியருமாகிய பிரகீத் எக்னெலிகொடை தடயமின்றிக் காணாமல் போக்கடிக்கப்பட்டு பதினாறு ஆண்டுகள் கழியுந் தறுவாயில், தாமதங்கள், மிரட்டல்கள், அலுவலக எதிர்ப்புகளால் தாக்குண்ட எமது நீதிக் கட்டுக்கோப்பினை ஊடறுத்து, தளர்ச்சி அடையாமல் உண்மையைத் தேடி அலைகின்றார் மனைவி சந்தியா. கணவர் பிரகீத் பலவந்தமாக காணாமல் போக்கடிக்கப்பட்ட சங்கதி, பொறுப்புக்கூறலுக்காகவும் ஊடக சுதந்திரத்துக்காகவும் நடத்தப்படும் போராட்டத்தின் துயரச் சின்னமாக விளங்குகின்றது.  


கிடப்பில் இட்ட வழக்கு

பிரகீத்தை காணாமல் போக்கடித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது உளவுப்படை அதிகாரிகள் மீதான விசாரணை நத்தை வேகத்தில் நகர்ந்து வருகிறது. அவர்களுள் ஓய்வுபெற்ற தானாபதி சம்மி குமாரரத்தினா ஒருவர். இவர் கிரித்தலை படை முகாம் ஆணையதிகாரியகப் பதவி வகித்தவர். கடத்தப்பட்ட பிரகீத்தை அங்கு கண்டதாக சாட்சிகள் தெரிவித்தனர். எனினும், நிரந்தர நீதாய மன்றின் முன்னிலையில் ஆண்டுக் கணக்காக விசாரணைகள் நடந்துங் கூட, ஒரு தீர்ப்பும் அளிக்கப்படாமை  எம்மை விசனப்பட வைக்கிறது. 


வழக்கின் தற்போதைய கட்டத்தில் தொலைபேசி உரையாடற் பதிவுகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் உட்பட சூழ்நிலைச் சான்றுகளைப் பகுத்தாய்வதில்  கவனம் செலுத்தப்படுகிறது. அதைக்கொண்டு, பிரகீத் பட்டப்பகலில் காணாமல் போக்கடிக்கப்பட்ட பிறகு என்ன நடந்தது என்பதை நிதானிக்க முடியும்.  முழுமுதல் புலன்விசாரணையை நெறிப்படுத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளராகிய சானி அபயசேகரா இந்த விசாரணையில் 109வது சாட்சியாக குறிப்பிடப்பட்டமை ஒரு தீர்க்கமான நடவடிக்கை ஆகும். இதனால் இந்த வழக்கு சூடு பிடிக்கும் என்று வழக்குரைஞர்கள் நம்புகிறார்கள்.  


எனினும், 2025 பிற்கூறு முதல் 2026 வரை இந்த வழக்கு திரும்பத் திரும்ப ஒத்திவைக்கப்பட்டு வந்துள்ளது. மூன்று நீதிபதிகள் விசாரிக்கவேண்டிய மன்றில் அடுத்தடுத்து வெற்றிடங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. ஒவ்வொரு தடவையும் விசாரணை மாதக் கணக்காக ஒத்திவைக்கப்பட்டு வந்துள்ளது.  நீதித்துறை நியமனங்கள் அதிகாரிகளால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தனது கணவருக்கு நேர்ந்த கதி அறியாமல் பதினாறு ஆண்டுகளாகப் போராடிவரும் சந்தியாவுக்கு, ஒவ்வொருநாள் தாமதமும் வேதனையைப் பெருக்கியுள்ளது. 


2024 இறுதியில் நிலவிய நம்பிக்கை 2025 இறுதியில் சிதறடிக்கப்பட்டதாக வெளிவந்த கூற்று, வழக்குடன் நெருக்கமானவர்கள் தெரிவித்த விசனத்தைப் புலப்படுத்துகிறது. ராஜபக்சாக்கள் ஆளாத காலத்தில் கூட நீதித்துறையில் ஏற்படும் வெற்றிடங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதில் ஆறேழு மாத தாமதம் ஏற்படுவது ஒரு தீயூழாகும்.  


பின்தொடர்வுகளும் மிரட்டல்களும்

சாட்சிகளைத் திட்டமிட்டு மிரட்டுவதை விட வேறெந்தக் காரணியும் நீதிபாலிப்பை அதிகம் கெடுத்ததில்லை எனலாம். முக்கிய சாட்சிகள் தமது வாக்குமூலங்களை மாற்றிக்கொண்டுள்ளனர் அல்லது நீதிமன்றில் தோன்றத் தவறியுள்ளனர். அவர்கள் வாய்பொத்திக்கொள்வது, இந்த வழக்கினைச் சூழ்ந்த அச்சத்தை அறவே உணர்த்துகிறது. முரட்டுத்தனமாக மிரட்டத் தெண்டிப்பதால்,  சாட்சியம் அளிக்கத் துணிந்தவர்கள் வாய்பொத்திக் கொண்டுள்ளார்கள்.   


2025 யூன் மாதம், ஒரு சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில், சம்மி குமாரரத்தினாவே குறுகிய தடுப்புக்காவலுக்கு உள்ளாக்கப்பட்டார். ஓர் ஊடகரை காணாமல் போக்கடித்த குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் வெளிப்படையாகவே நீதிக்குத் தடங்கல் விளைவிக்கத் துணியும் விதத்தை இது அப்பட்டமாக உணர்த்துகிறது.  கிரித்தலை படைமுகாமில் என்ன நடந்தது என்பது பற்றி தீர்க்கமான சாட்சியம் அளிக்கக்கூடியவர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை இங்கு தெளிவாகிறது. சாட்சியம் அளிப்பவர்களுக்கு ஆபத்து விளையும் என்பதே அந்த எச்சரிக்கை.


ஆட்களை அச்சுறுத்துவதற்கு அப்பாலும், மிரட்டல் விரிவடைந்துள்ளது. இலங்கைப் படைத்துறையிடம் விபரம் கோரும் வேளைகளில் எல்லாம், தேசிய பாதுகாப்பைக் காரணம்காட்டி, விபரம்தர மறுப்பது வழக்கம். படைத்துறை வாயை மூடிக்கொள்வதால், கிரித்தலை முகாமில் சம்பந்தப்பட்ட சாட்சிகள் பிரகீத்தை கடைசியாகப் பார்த்த பிறகு என்ன நடந்தது என்பதை பெரிதும் உறுதிப்படுத்த முடியாமல் இருக்கிறது.   


அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும், மீறப்பட்ட வாக்குறுதிகளும்

2024 செப்டம்பர் மாதம் அனுர குமர திசநாயக்கா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட துவக்கத்தில், மனித உரிமைகளுக்காக வாதாடுவோருக்கும் பிரகீத் குடும்பத்தவருக்கும் புதிய நம்பிக்கை பிறந்தது. அரசியற் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள், புரியப்பட்ட கொலைகள் தொடர்பான வழக்குகளைத் துரிதப்படுத்துவதாக, தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் அமைந்த புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்தது. ஈற்றில் நீதி கிடைக்கப் போவதுபோல் ஒரு குறுகிய காலத்துக்குத் தென்பட்டது. எனினும், அந்த நம்பிக்கை குறுகிய காலத்துள் குன்றிவிட்டது. 


பொறுப்புக்கூறலை நிலைநிறுத்த வாக்குறுதி அளித்த அதே அரசாங்கம், பிரகீத் வழக்கில் சம்பந்தப்பட்டவரெனச் சந்தேகிக்கப்பட்ட டீ. ஈ. ஆர். எரந்த பீரிஸ் என்பவரை ஏனாதி பதவிக்கு உயர்த்திய சங்கதி 2026 ஜனவரி மாதம்  தெரிய வந்தது.  இப்பதவி உயர்வு மனித உரிமைத் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அனைத்துநாட்டு அவதானிகளின் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஓர் ஊடகரை காணாமல் போக்கடித்தவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கும் அதே அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவதாக மார்தட்டுவது எங்ஙனம்?   

முன்னைய அரசாங்கங்களைப் போலவே இந்த அரசாங்கமும் நடந்துகொள்கிறது என்பதையே இம்முரண்பாடு புலப்படுத்துகிறது. முன்னாள் ஜனாதிபதி கொதாபய ராஜபக்சாவின் ஆட்சியில், அரசியற் பழிவாங்கல் பற்றிய விசாரணை ஆணையம் ஒன்று, பிரகீத் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது பேரையும் விடுதலைசெய்யும்படி விதந்துரைக்கும் அளவுக்குச் சென்றது. அது புலன்விசாரணையை வேண்டுமென்றே தடம்புரள வைக்கும் முயற்சியென அனைத்துநாட்டு அவதானிகள் கண்டித்தார்கள். தண்டனைப் பயமின்றி அப்படி விதந்துரைக்க முடியும் என்பது, படையினர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பொறுப்புக்கூறலுக்கு காட்டப்படும் கட்டமைப்புவாரியான எதிர்ப்பின் ஆழத்தைப் புலப்படுத்துகிறது.  


வெளியுலகத்தின் கவனம்

இலங்கையில் ஊடக சுதந்திரத்துக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் மிகவும் பரந்துபட்ட முறையில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களின் குறியீடாக எக்னெலிகொடை விடயம் மாறியிருக்கிறது. 2025ம் ஆண்டுக்கான புள்ளிவிவரத்தின்படி, 180 நாடுக்ளைக் கொண்ட உலக ஊடக சுதந்திர சுட்டியில் இலங்கை 150வது இடத்தில் இருக்கிறது. இந்த நாட்டில் ஊடகர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தான நிலைமையைப் புலப்படுத்தும் இழிந்த நிலை இது. 


அனைத்துநாட்டு அமைப்புகள் அமைதி காக்கவில்லை. நீதியை நிலைநிறுத்த உருப்படியான சீர்திருத்தங்கள் செய்யும்படி எல்லைகளற்ற ஊடகர்கள் அமைப்பும், அனைத்துநாட்டு மன்னிப்புச் சபையும் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வருகின்றன. பிரகீத் காணாமல் போக்கடிக்கப்பட்டது போன்ற கடந்தகாலக் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதைக் கண்காணிப்பதற்காகவே இலங்கை மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் ஆணைக்காலத்தை ஐ. நா. மனித உரிமைகள் மன்றம் 2025ம் ஆண்டு  மேலும் ஈராண்டுகள் நீட்டியது.  


எக்னெலிகொடை விடயத்தை முடித்து வைப்பதற்கு நிறைவேற்றப்பட வேண்டிய  மூன்று முக்கிய தேவைகளை மேற்படி அனைத்துநாட்டு கண்காணிப்பு அமைப்புகள்  சுட்டிக்காட்டியுள்ளன: (1) சாட்சிகளைப் பாதுகாத்தல், (2) முழுவிபரங்களையும் முன்வைத்தல், (3) நீதிவிசாரணையைத் தொடர்தல். படையினருக்கு எதிராகச் சாட்சியம் அளிப்பவர்களை, மிரட்டலுக்கும் பதிலடிக்கும் உள்ளாகாவாறு, பாதுகாப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய பாதுகாப்புகள் இல்லையேல், அச்சம் எனும் குழியில் உண்மை புதையுண்டிருக்கும்.  


கிரித்தலை படை முகாமில் காணப்பட்ட பிறகு பிரகீத் என்ன ஆனார் என்பதை முற்றுமுழுதாகத் தெரிவிக்கும் பொறுப்பு படைத்துறை மீது சுமத்தப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பு எனும் திரையைக் கொண்டு மனித உரிமை மீறல்களை நிரந்தரமாக மூடிமறைக்க முடியாது. மேலும், இந்த வழக்கினை இழுத்தடிக்கும் சூழ்ச்சிகளைத் தடுக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட சிறப்பு மேல் நீதிமன்ற வெற்றிடங்கள் முற்றிலும் நிரப்பப்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.  காலம்தாழ்த்திய நீதி, வழங்கப்படாத நீதி அல்லவா! நீதிமன்ற வெற்றிடங்களை நிரப்பாதிருப்பது, நீதிக்குத் தடங்கல் விளவிப்பதேயன்றி வேறெதுவுமல்ல. 


திடசித்தம் தளராத மனைவி

16 ஆண்டுகளாக நீதிமன்றச் சமர்களை, வாக்குறுதி மீறல்களை, அலுவலக எதிர்ப்பினை எதிர்கொண்டும் கூட, மனைவி சந்தியாவின் உறுதி குன்றவில்லை. கணவர் காணாமல் போக்கடிக்கப்பட்ட சங்கதியை, இலங்கையின் பிரச்சனைகள் மிகுந்த வரலாற்றின் கோடிப்புறத்தில் மங்கிமறையவிட மறுத்து, நீதியை நிலைநாட்டக் கோரி அவர் மேற்கொள்ளும் போராட்டம் அவரது கணவரை நாட்டு மக்களின் உள்ளத்தில் நிலைத்திருக்க வைத்துள்ளது. 


“பிரகீத் விடயம் விரைவில் முடித்து வைக்கப்பட வேண்டும்; இந்த வேண்டுகோளை விடுக்க எனக்கு உரிமை  உண்டு” என்று கண்ணியமும் திடசித்தமும் தொனிக்க சந்தியா கூறியிருக்கிறார். நீதிபாலிப்பதை விடுத்து, நீதியை ஒழிக்கவென வடிவமைக்கப்பட்டது போல் தென்படும் கட்டமைப்பை ஊடறுத்து ஏறத்தாழ 20 ஆண்டுகளாக விடைதேடிய கனதி அவரது கூற்றுக்கு உண்டு.

சந்தியாவின் போராட்டம் வெறுமனே ஒரு தனியாள் காணாமல் போக்கடிக்கப்பட்டது பற்றியதல்ல. புரிந்த குற்றத்துக்கு தண்டனைக்கு உட்படாத வழமையிலிருந்து இலங்கையால் விடுபட முடியுமா,  படையினர் மக்களுக்கு எதிராக இழைக்கும் குற்றங்களுக்கு, அவர்களைப் பொறுப்பேற்க வைக்க முடியுமா, நிரந்தராமாக வாயடைக்கப்படும் அச்சமின்றி ஊடகர்களால் பணியாற்ற முடியுமா என்பன பற்றியதே அது.  


அவசரமாக முடிவு காணவேண்டிய தேவை 

2026 ஜனவரி 24ம் திகதியுடன், பிரகீத் வலிந்து காணாமல் போக்கடிக்கப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பிரகீத் விடயத்துக்கு முடிவு காணவேண்டிய தேவை முன்னரை விட இப்பொழுதுதான் மிகவும் அவசர தேவையாக உள்ளது. வெளிப்படையான, பக்கச்சார்பற்ற இறுதித் தீர்ப்பு என்பது வெறுமனே ஒப்புக்கு அளிக்கப்படும் தீர்ப்பல்ல; வன்கோன்மை நிலவிய சென்றகாலத்தைக் கடந்து  முன்னகர முனையும் சமூகத்தில் உடனடியாக நிலைநிறுத்தப்பட வேண்டிய அறம் அது.


சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள்; அலுவலகங்களில் எதிர்ப்புக் காட்டப்படுகிறது; அரசாங்க நடவடிக்கைகள் முன்பின் முரண்படுகின்றன; படையினர் தொடர்ந்தும் தம்மவரைப்  பாதுகாத்து வருகின்றனர். இவை கடுமையான தடங்கல்கள் ஆகும். ஆனாலும், இத்தகைய இக்கட்டுகளால் நீதிபாலிப்பு என்பது காலவரையறையின்றித் தடைப்பட அனுமதிக்கக் கூடாது. என்றென்றும் தீர்க்கப்படாதுள்ள எண்ணிறந்த காணாமல் போக்கடிப்புகள் பிறவற்றுடன் பிரகீத் விடயமும் சேர்ந்துவிடுமா, அல்லது பதவி, சீருடை என்ற பாகுபாடின்றி சட்டத்தின் முன் யாவரும் நிகர் என்பதை இந்த நாடு ஈற்றில் நிலைநாட்டுமா என்பதே இன்று நாடு எதிர்நோக்கும் கேள்வி.  


சந்தியாவையும், ஊடக சுதந்திரம் - மனித உரிமைகள் என்பவற்றில் நம்பிக்கை வைத்திருக்கும் ஒவ்வொருவரையும் பொறுத்தவரை, அந்த வினாவுக்கான விடை, இலங்கையின் கடந்த காலத்தைச் சித்தரித்த அளவுக்கு வருங்காலத்தையும் சித்தரிப்பதாக அமையும். 16 ஆண்டுகளாக நீதிக்காகக் காத்திருப்பது சாலவும் போதும். இனி இறுதி முடிபு எடுக்கவேண்டிய தருணம் இது (Lionel Bopage, Sixteen Years Without Answers: The Unfinished Fight For Justice In The Prageeth Eknaligoda Case, The Colombo Telegraph, 2026-01-19, translated by Mani Velupillai, 2026-01-26).



No comments:

Post a Comment