புண்படும் தமிழ்மொழி
“இசை வெறும் ஓசையாய் மாறிவிட்டதே!” என்று புலம்பினார் எழுத்தாளர் மைலன்
குந்தேரா. பொருள்பொதிந்த தமிழ்ப் பெயர்கள் கூட வெறும் ஓசைகளாய் மாறிவிட்டனவே என்று
நாமும் புலம்ப வேண்டியுள்ளது.
எமது குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் பெரிதும் கிரந்த எழுத்துக்களுடன்
கூடிய ஓசைகளாய் ஒலிக்கின்றன. ஜதுமிதா, ஷொகினா, ஹம்ஷிகா, ஜிதாரா, நிஹாரிஜன், டுலக்ஷன், ஜிரஷ்டன்…
மரபார்ந்த தமிழறிவு குன்றியதால், கிரந்த எழுத்துகளுடன் கூடிய ஓசைகள் எம்மவர்க்கு
சிறந்த பெயர்களாகத் தென்படுகின்றன போலும். அவை தமிழும் இல்லை, அவற்றில் பொருளும் இல்லை, சுவையும் இல்லை.
வடமொழி வழிவந்த “ராஜா”, “சரஸ்வதி,” “ரட்ணம்” போன்ற பெயர்களை முறையே “இராசா”, “சரசுவதி”, “இரத்தினம்” என்று எழுதுவது தற்பவ மரபு. அவை திரும்ப “ராஜா”, “சரஸ்வதி”, “ரட்ணம்” என தற்சம வழிக்கு மீண்டுவிட்டன.
“மூத்த நயினார் கோயில்”, அது கட்டப்பட்ட காலந்தொட்டு, அப்பெயரால் வழங்கி வந்தது. அண்மையில் இக்கோயில் புனரமைக்கப்பட்ட பிறகு, அது “மூத்த நயினார் தேவஸ்தானம்” ஆகிவிட்டது!
கடைகள் எல்லாம் “ஸ்டோர்ஸ்” ஆகிப் பல்லாண்டுகள் கழிந்துவிட்டன. இன்று எந்தக்
கடையுமே “கடை” எனப்படுவதில்லை. “கடை” ஒரு கடைகெட்ட சொல்லாக ஒதுக்கித்
தள்ளப்பட்டுவிட்டது!
கடைகளின் பெயர்கள் 99 விழுக்காடு கிரந்த எழுத்துக்களில் அல்லது
ஆங்கிலத்தில் தான் வைக்கப்படுகின்றன. ஆங்காங்கே அவை தமிழில் ஒலிபெயர்த்து எழுதப்படுவதுண்டு.
ஆங்கிலத்தில் வைக்கப்படும், பதியப்படும், பொறிக்கப்படும் பெயர்கள் பிறகு தாறுமாறாகத்
தமிழில் ஒலிபெயர்க்கப்படுகின்றன: “கந்தன் சுப்பர் மார்க்கட், பஷன் அக்கடமி, மொடெர்ன் போட்டோகிராபர்ஸ், “நியூ ஷூ பலஸ்…”
அப்பால் ஒரு விடுதியில் “Sivagangai Aham” என்றும், அதன் கீழே “சிவகங்கை அஹம்” என்றும்
பொறிக்கப்பட்டுள்ளது. “அகம்” எனும் தூய தமிழ்ச் சொல் கிரந்த எழுத்துடன் “அஹம்”
என்று எழுதப்பட்டுள்ளது!
“பல்பொருள் வாணிபம்” என முழங்கும் பெயர்ப்பலகை ஆங்காங்கே தொங்குகிறது. Supercentre தான் அப்படிக் குறிப்பிடுகிறது. ஆனால் பெட்டிக்கடைகளுக்கும் அப்பெயர்
வைக்கப்பட்டுள்ளது!
தங்கி, உண்டு, உறங்கிச், செல்லும் இடமே hotel (விடுதியகம்). தேநீர்க் கடைக்கு “ஹோட்டல்” எனும் பெயர் அறவே பொருந்தாது.
எனினும் தேநீர்க் கடைகள் தொடர்ந்தும் தம்மை “ஹோட்டல்” என்றே பறைசாற்றி வருகின்றன.
“ஐயின்னா ஒரு பொல்லாத விலங்கு.” Hyena! இந்த விலங்கிற்கு பல தமிழ்ப் பெயர்கள்
இருக்கின்றன: கழுதைப்புலி, கடுவாய், குடத்தி, வங்கு… அவற்றை அறிந்து பயன்படுத்தாமல், “ஐயின்னா” என்று எழுதுவது பொறுப்பீனம்!
பெரிது + உந்து = பேருந்து. ஆயினும் பேருந்து நிலையங்களில் “பேரூந்து நிலையம்”
என்றே பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பேரகராதியின்படி “ஊந்து” என்பது ஏலக்காய்க்
கோது. பேரூந்து என்றால் பெரிய ஏலக்காய்க் கோது!
“ஆசனம்”, “அக்கிராசன உரை” எனும் சொற்கள் கண்ணில்படுகின்றன, காதில் விழுகின்றன. 1970களில் வெளிவந்த இலங்கை அரச சொற்கோவைகளின்படி இவை முறையே “இருக்கை”, “அரியணை உரை” ஆகும்.
பெரிதும் நாடாளுமன்றத்தில் கையாளப்படும் expenditure எனும் தொடரை ஊடகங்கள் பலவும் “செலவீனம்” என்று குறிப்பிட்டு வருகின்றன.
ஆட்சிமொழித் திணைக்களத்து சொற்கோவையின்படி இது “செலவினம்” ஆகும்.
பல்வேறு செலவுகள் ஒருமிக்க “செலவினம்” எனப்படும்.
செலவுக்கும், செலவினத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு அது. பலவீனம் என்றால் பலம் இல்லை. ஆகவே
செலவீனம் என்றால் செலவு இல்லை அல்லவோ?
“நிலைமை”, “நிலைவரம்” “சுயேச்சை”, “பயிற்சி”... என சரிவர எழுத்துக்கூட்டாமல், “நிலமை”, “நிலவரம்”, “சுயேட்சை”, “பயிர்ச்சி” ... என்று வழுபட எழுத்துக்கூட்டும் வழக்கு மேலோங்கி வருகிறது.
“நாடகர்” என்பவர் நாடக நடிகர். ”நாடகவியலாளர்” என்பவர் நாடகவியல் பயின்று
பட்டம் பெற்றவர். ”நாடகவியலாளர்கள்” எல்லோரும் நாடகர்களே. ஆனால், “நாடகர்கள்” எல்லோரும் ”நாடகவியலாளர்கள்” அல்லர்.
“நூலகர்” என்பவர் நூலகப் பொறுப்பாளர். “நூலகவியலாளர்” என்பவர் நூலகவியல்
பயின்று பட்டம் பெற்றவர். “நூலகவியலாளர்கள்” எல்லோரும்
நூலகர்களே. ஆனால், “நூலகர்கள்” எல்லோரும் “நூலகவியலாளர்கள்” அல்லர்.
“ஊடகர்” என்பவர் ஒரு நிருபர். “ஊடகவியலாளர்” என்பவர் ஊடகவியல் பயின்று பட்டம்
பெற்றவர். “ஊடகவியலாளர்கள்” எல்லோரும் ஊடகர்களே. ஆனால், “ஊடகர்கள்” எல்லோரும் “ஊடகவியலாளர்கள்” அல்லர்.
Test match என்பது இரு நாடுகளின் தேசிய விளையாட்டு அணிகளுக்கு இடையே நிகழும் போட்டி. இதை “நாட்டிடை விளையாட்டுப் போட்டி”
எனலாம். Test
cricket match என்பது “நாட்டிடைத் துடுப்பாட்டப் போட்டி.”
“பாடசாலை சீருடைகளின் தேவையை முழுமையாக வழங்கிய சீன அரசாங்கம்” எனுந் தலைப்பில்
ஒரு செய்தி. “பாடசாலைக்குத் தேவையான சீருடைகளை முழுமையாக வழங்கிய சீன அரசாங்கம்”
எனலாமே!
“அம்மாவும் அப்பாவும் சந்தைக்குப் போனார்கள்” என்று தமிழில் கொடுக்கப்படும்
வசனத்தை எனது மாணவர்கள், Mom and dad went to the market, என்று சரிவர மொழிபெயர்க்கிறார்கள்.
Mom and dad
went to the market என்ற அதே வசனத்தை திருப்பி ஆங்கிலத்தில்
கொடுத்தால், அதே மாணவர்கள், “அம்மா மற்றும் அப்பா சந்தைக்குப் போனார்கள்” என்று மொழிபெயர்க்கிறார்கள்!
“அம்மாவும் அப்பாவும்” என்ற உம்மைத்தொடரை விடுத்து, and-ஐ “மற்றும்” என்று பெயர்த்து, “அம்மா மற்றும் அப்பா…” என்றும், “இலங்கையும் இந்தியாவும்” என்பதை “இலங்கை மற்றும் இந்தியா” என்றும் மொழிபெயர்க்கிறார்கள்!
“கூகிள் மொழிபெயர்ப்பு பொறிமுறை (Google Translate) கூட அம்மாவும் அப்பாவும், இலங்கையும் இந்தியாவும்… என்றெல்லாம் சரிவர மொழிபெயர்க்கிறதே என்று கூறி
எனது மாணவர்களை நான் சீண்டுவதுண்டு.
“அவருக்கும் இவருக்கும்” என்பது தப்பு, “அவரிற்கும் இவரிற்கும்” என்பதே சரி என்ற எண்ணம்
மேலோங்கியுள்ளது. “விருந்தினர்களுக்கும் மற்றவர்களுக்கும்” அல்ல, “விருந்தினர்களிற்கும் மற்றவர்களிற்கும்!”
“தமிழர்களிற்கு ஒற்றையாட்சி தீர்வாகுமா?” என்ற வினாவை எழுப்பி, அதற்கு விடையளிக்கும் ஒரு கட்டுரை கண்ணில் பட்டது. “தமிழருக்கு…” என்றே
எழுதலாமே!
“அர்” விகுதி ஒருமையையும், ஆண்பாலையும் மட்டுமல்ல, பன்மையையும், பெண்பாலையும் குறிக்கும். “தமிழர்”, “தமிழரின்”, “தமிழரால்”, “தமிழருக்கு”... என்றே எழுதலாம்.
“இந்நாடு, இந்த நாடு, அம்மாகாணம், அந்த மாகாணம் …” என்பதெல்லாம் சிலருக்கு சரியாகப் படவில்லை. “இவ்நாடு, அவ்மாகாணம்…” என்று தப்பும் தவறுமாக எழுதுவதே அவர்களுக்கு சரியாகப் படுகிறது!
Arjuna Bakery-யினுள் புகுந்து கேடேன்:
“தம்பி, ஒரு சோடி சீனியப்பம் தாடா!”
“ஐயா, சீனியப்பம் எண்டால் என்ன?”
“உதுதான்!” என்று சொல்லி, சுட்டிக்காட்டினேன்.
“இது டீ பன்” (tea
bun), ஐயா! ஏன் பேரை மாத்தி, குழப்புறீங்கள்?” என்று முகம் சுழித்தான்
பையன்.
“அட, நீங்கள் எல்லோ சீனியப்பத்தை “டீ பன்” எண்டு மாத்திப் போட்டீங்கள்” என்று
பொருமினேன்.
பையன் என்னைப் புறக்கணித்துவிட்டு, அடுத்த வாடிக்கையாளரை வரவேற்றான்.
“ஒரு குழல் பிட்டு!” கட்டித்தரும்படி பக்கத்து உணவகத்தில் கேட்டேன்.
“எத்தினை, ஐயா?”
“ஒரு குழலில் எத்தனை அவிப்பியளோ, அத்தனை!”
“நாலு.”
“அதைத்தான் ஒரு குழல் பிட்டு எண்டு சொன்னேன்.”
“அதை ஒரு லைன் (line) பிட்டு எண்டுதான், ஐயா, சொல்லுறது.”
ஒரு பலகாரக் கடையினுள் நுழைந்து கேட்டேன்:
“தம்பி, ஒரு கலவைச் சரை தாடா!”
“கலவைச் சரையோ?”
“உதுதான்ரா!”
“இது மிக்சர், ஐயா!”
“அதைத்தான் தமிழில் சொன்னேன்!”
“ஏன், மிக்சர் தமிழ் இல்லையோ?”
“வாறனடா, தம்பி!”
அப்பால் நகர்ந்தபொழுது, “பேன்சிபூக்கடை” தென்பட்டது. அதனை அணுகி, “பேன்சீப்புக்கடை என்று சரிவர எழுத்துக்கூட்டி எழுதலாமே!” என்றேன். “ஐயா, இது Fancy
Florists எண்டது உங்களுக்கு விளங்கேல்லையோ?” என்று சீறினார் முதலாளி!
“வாட்டப்பம்…” கண்ணில் பட்டது. பாலப்பம், வெள்ளையப்பத்துடன் “வாட்டப்பம்” என ஒன்று
சேர்ந்துவிட்டது என்ற எண்ணத்துடன் நகர்ந்தபொழுது, அது “...வாடகைக்கு விடப்படும்” என்று நீண்டது!
Water pump என்பது பாமரமக்கள் வாயில் “வாட்டப்பம்” என்றே ஒலிக்கும். “வாடகைக்கு
விடப்படும்” என்ற தொடர்ச்சியே அது அப்பம் அல்ல நீர் இறைக்கும் இயந்திரம் என்பதை
உணர்த்தியது!
இலங்கையிலிருந்து (பெரிதும் புலம்பெயர்ந்த மக்களைக் கருத்தில் கொண்டு)
ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பால்மா பேணியின் புறத்தில் இப்படி பொறிக்கப்பட்டுள்ளது:
“திறந்த பின்பு, பால்மாவைக் காற்றுப் புகாத கொள்கலனில் இட்டு
மூடி வைக்கவும்.” அதன் ஆங்கில வரி: After opening,
please keep the tin tightly closed. “பேணியைத் திறந்தால், அதை இறுக்கி மூடி வைக்கவும்” என்பதே அதன் பொருள்.
"அமெரிக்காவின் சகோதரிகள் மற்றும் சகோதரர்களே!' என்று அவையோரை விளித்து சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உரையாற்றியதாக ஒரு
பேர்போன ஊடகம் குறிப்பிட்டுள்ளது. விவேகானந்தரின் அரும்பெரும் உரைக்கு நேர்ந்த கதி
அது.
"அமெரிக்காவின் சகோதரிகள்..." என்றால், அவர்கள் அமெரிக்கர்கள் அல்லர் என்பது கருத்து.
அமெரிக்கரையே அவர் Sisters and brothers of America!" என விளித்து, அதாவது "அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!" என விளித்து உரையாற்றினார்.
“யாழ்ப்பாணம் - பாசையூரில் மறைந்த தென்னிந்திய பழம் பெரும் புரட்சி நடிகரும்
தமிழக முதலமைச்சருமான வைத்தியர் எம்.ஜீ.இராமசந்திரனின் 108 வது ஜனனதின நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.”
“மறைந்த பழம்பெரும் புரட்சி நடிகரும், தமிழக முதலமைச்சருமான எம். ஜி. இராமசந்திரனின் 108 வது ஜனனதின நிகழ்வு நேற்று
வெள்ளிக்கிழமை (17) “யாழ்ப்பாணம் - பாசையூரில் நடைபெற்றது” என்று குறிப்பிட்டிருக்கலாம்.
அண்ணாத்துரை, கருணாநிதி, எம். ஜி. ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு honorary doctorate பட்டம் அளிக்கப்பட்டது. இது கெளரவ கலாநிதிப்
பட்டம். Dr.
MGR என்பது கெளரவ கலாநிதி எம். ஜி. ஆர்., “வைத்தியர் எம். ஜீ. ஆர்.” அல்ல.
“கெளரவி” எனும் வடமொழிச் சொல்லை சிலர் “மதிப்பளி” என தமிழ்ப்படுத்துகிறார்கள்.
“மறவர் கெளரவிக்கப்பட்டனர்” என்பதை அவர்கள் “மறவர் மதிப்பளிக்கப்பட்டனர்” என்கிறார்கள்.
அதை “மறவருக்கு மதிப்பளிக்கப்பட்டது” என்றாவது செப்பனிடலாமே! உண்மையில்
“கெளரவி” (to
honour) என்பது “மாண்புறுத்து” என்று பொருள்படுவது. “மறவர்
மாண்புறுத்தப்பட்டனர்” என்பதே மரபார்ந்த தமிழ்.
மாண்பு = honour (பெயர்)
மாண்புமிகு =
honourable (பெயரடை)
மாண்புறுத்து = honour (வினை)
…ஹிருணிகா பிரேமசந்திரன், நானும் ஹிரனும் தங்கள் திருமண வாழ்க்கையில்
இருந்து பிரிய முடிவு செய்துள்ளதாக, தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவொன்றை
இட்டுள்ளார்… என்கிறது ஒரு நாளேடு.
ஹிருணிகா… என்று பிறர்கூற்றில் துவங்கும் வசனம்
மேற்கோட்குறி இல்லாமல் நானும்… என்று தற்கூற்றுக்கு மாறி, பிறகு தங்கள்… என்று பிறர்கூற்றுக்கு மீள்கிறது!
ஹிரனும் நானும் எங்கள் திருமணத்திலிருந்து பிரிக்க முடிவு செய்துள்ளோம் என்று தொடர்கிறது செய்தி. ஒன்றில், எங்கள் திருமணத்திலிருந்து பிரிய முடிவு
செய்துள்ளோம் என்று, அல்லது எங்களை திருமணத்திலிருந்து
பிரிக்க முடிவு செய்துள்ளோம் என்றாவது குறிப்பிட்டிருக்கலாம்.
வேறு ஊடகங்களும் இதே செய்தியை வெளியிட்டுள்ளன. அவை அனைத்தும் “திருமணம்”, “மணவாழ்வு” இரண்டையும் குழப்பியடித்துள்ளன. மொழியின் பொருளைக் குழப்பியடிப்பது
ஒரு பொழுதுபோக்காய் மாறிவிட்டது.
ஆங்கிலத்தில் marriage
“திருமணம்” என்றும் “மணவாழ்வு” என்றும் பொருள்பட வல்லது. A happy
marriage என்பது பெரிதும் இனிய மணவாழ்வு என்று பொருள்படும். அது இனிய
திருமணம் (a
happy wedding) என்று பொருள்படல் அரிது.
அதேவேளை,
give in marriage என்பது மணம்முடித்துக் கொடு (marry off) என்று பொருள்படும். Our teacher doesn’t believe in marriage என்பது “எங்கள் ஆசிரியருக்கு மணவாழ்வில் நம்பிக்கை இல்லை” என்று பொருள்படும்.
ஹிருணிகாவின் முகநூற் குறிப்பில் உள்ள the life of our dreams எனும் அரிய தொடர் “எங்கள் கனவு வாழ்க்கை”, “நம் கனவுகளின் வாழ்க்கை”, “எங்கள் கனவுகளின் வாழ்க்கை”... என்றெல்லாம்
பெயர்க்கப்பட்டுள்ளது.
இந்த அரிய தொடரை “நாம் கனவுகண்ட வாழ்வு” என்றோ, “நாங்கள் கனவுகண்ட வாழ்க்கை”
என்றோ எளிதாகவும், சரியாகவும், தெளிவாகவும் பெயர்த்திருக்கலாமே!
“ஒரு பிரச்சனை ஏற்பட்டதற்கான காரணம் பற்றிய புரிதல் இல்லாமல் அந்தப்
பிரச்சனையைத் தீர்க்க முடியாது.” இவ்வாறு பலரும் "புரிதல்" பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.
“ஒரு பிரச்சனை ஏற்பட்டதற்கான காரணம் புரியாமல்” அல்லது “காரணத்தைப் புரிந்துகொள்ளாமல் அந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது” எனலாமே!
காரணம் புரிய வேண்டும், அல்லது காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
“இந்த விமானம் ஆளில்லா விமானம் என்பதுடன் இந்த வகை விமானம் 2020 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சுமார் 40 கிலோ எடையுடையது என்றும் விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்
படவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.”.
இப்படிப்பட்ட வசனங்களை வாசித்துப் பழகிய எங்களுக்கு, இது சரிவர எழுதப்பட்டுள்ளது என்றே தோன்றும். உரிய விபரம் எமக்குப் புரிவதே அதற்கான காரணம்.
அதாவது: இது ஆளில்லா விமானம்; இந்த வகை விமானம் 2020 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது; இது சுமார் 40 கிலோ எடையுடையது; இந்த விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை; இந்த விபரம் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது!
எனினும், மேற்படி வசனத்தில் “...என்பதுடன்…ஆகவும்… என்றும்… என… “ ஆகிய இணைப்புச் சொற்கள் ஒன்றுடன் ஒன்று இயைபுபடுத்தப்படவில்லை. அவற்றை
இயைபுபடுத்தாமல் எழுதுவது இன்றைய வாடிக்கை ஆகிவிட்டது!
இன்னும் மோசமான வசனம்: “நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் ஏறி நின்று வேலை செய்த இரும்பிலான
பலாஞ்சியில் மீது மின்சாரம் பாய்ந்ததில் அதனை தூக்கிச் சென்ற 4 பேர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.”
எனினும் சங்கதி புரிகிறது: ஒரு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது; 4 பேர் கட்டிடத்தில் ஏறிநின்று வேலை செய்தார்கள்; அவர்கள் இரும்புப் பலாஞ்சி ஒன்றை தூக்கிச் சென்றார்கள்; அதில் மின்சாரம் பாய்ந்து அவர்களைத் தாக்கியது.
இது ஒரு செய்தித்தலைப்பு: “Populationல் சரியும் South India, எகிறும் North, TNக்கு காத்திருக்கும் ஆபத்தை விளக்கும் Jeyaranjan”! பிட்டும் தேங்காய்ப்பூவும் போல் தமிழும் ஆங்கிலமும்! இப்பொழுது பரவிவரும்
கொள்ளைநோய் இது!
“பருப்பில் நமக்கேன் வெருப்பு?” என்பது ஒரு கட்டுரையின் தலைப்பு! அதற்கு யார்
“பொருப்பு” என்பது தெரியவில்லை! இனிமேல் “அரம் செய விரும்பு, ஆருவது சினம்…” என்றெல்லாம் எழுதுவார்கள் போலும்!
“காயப்படுத்து” எனும் சொல் ஒருவரின் “உள்ளத்தை ஊறுபடுத்து” எனும் பொருள்பட புனைவெழுத்துக்களில் கூட இடம்பிடித்துவிட்து. அதன்படி இக்கட்டுரைக்கு “காயப்படும் தமிழ்மொழி” என்றுதான் தலைப்பிட வேண்டும்!
மரபார்ந்த தமிழில் “புண்படுத்து” என்பது பெரிதும் ஒருவரின் “உள்ளத்தை ஊறுபடுத்து”
என்று பொருள்படும்; அவரை அடித்துக் காயப்படுத்து என்று பொருள்படல் அரிது.
இத்தகைய மொழிவதை தமிழ்கூறு நல்லுலகு முழுவதும் இடம்பெற்று வருகிறது. உலகளாவிய
தமிழ் ஊடகங்கள் அதை முன்னேடுத்துச் செல்கின்றன. ஆதலால், ஒருபுறம் வளங்கொழிக்கும் அதே தமிழ்மொழி, மறுபுறம் புண்பட்டு வருகிறது.
அதேவேளை, தமிழை விரும்பியவாறு பயன்படுத்தும் உரிமை எவர்க்கும்
உன்டு. பெயர்களையும் விளம்பரங்களையும் விரும்பியவாறு வைத்துக்கொள்ளும் உரிமையும்
எவர்க்கும் உண்டு.
ஆங்கில, கிரந்த எழுத்துக்களை இடைச்செருகி, மொழியமைதியை மீறுவதற்கும் உரிமையுண்டு. மீறினால், அதை எதிர்கொள்வதற்கு இன்று பாண்டியனும் இல்லை, மதுரை தமிழ்ச் சங்கமும் இல்லை!
ஆதலால், தமிழை இயன்றளவு சரிவரப் பயன்படுத்தும்படியும், அதை தாறுமாறாகப் பயன்படுத்துவதை இயன்றளவு
தவிர்த்துக் கொள்ளும்படியும் வேண்டுகோள் மட்டுமே விடுக்க முடியும்.
மணி வேலுப்பிள்ளை, 2024.11.01 -
2025.03.13
பயன்மிக்க கட்டுரை! ; நன்றி.
ReplyDelete