தகுதிவாய்ந்தவர்களே ஆளவேண்டும்

பேராசிரியர் அசோகா எக்கநாயக்கா

அரைவேக்காடுகளின் 

அனைத்துக் கட்சிப் பாசாங்கு வேண்டாம்!

தகுதிகெட்ட அரைவேக்காட்டு மொட்டுக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சிபுரியும் ரணில் விக்கிரமசிங்காவும், அவரது கூட்டாளிகளும் அனைத்துக் கட்சிகளின் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நகைப்புக்கிடமான விழல் வேலைகள் என்பது பின்னோக்கிப் பார்க்கும்பொழுது தெரிகிறது. அப்படித் தெரிவதில் நியாயமும் உண்டு.

சர்வதேய அமைப்புகளையும், இருதரப்புக் கொடையகங்களையும் கவரும் வண்ணம் அரசாங்கத்துக்கு முலாம் பூசுவதற்காக, அதை உறுதிவாய்ந்த அரசாங்கமாகக் காட்டுவதற்காக, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை வசப்படுத்தி, தேசிய கூட்டரசாங்கம் எனும் பம்மாத்தில் சேர்ப்பதற்கு வீசப்பட்டிருக்கக்கூடிய வலைகள், கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய நெருக்குதல்கள், புரியப்பட்டிருக்கக்கூடிய திருகுதாளங்கள், மன்றாட்டங்கள், ஏவல்கள் எல்லாம் படுதோல்வி அடைந்துள்ளன.

அது ஐயத்துக்கிடமான முயற்சி என்பது துவக்கத்திலேயே புலப்பட்டது. அதன் அவல முடிபை முன்கூட்டியே முற்றிலும் புரிந்துகொள்ள முடிந்தது. ஒழுக்கநெறி வழுகி ஐயத்துக்கிடமான நோக்குடன் எடுக்கப்படும் முயற்சி எதுவும் தோல்வி அடைதல் திண்ணம்.

அனைத்துக் கட்சிக் கூட்டணி அமைக்க இரங்கத்தக்கவிதமாக விக்கிரமசிங்கா மேற்கொண்ட முயற்சி நல்லதோர் எடுத்துக்காட்டு. அந்த முயற்சி முழுவதும் ஐயத்துக்கிடமான உள்நோக்கங்களால் உந்தப்பட்டது என்பது முதலாவது சங்கதி. தன்னலம் கருதாது பொதுநலம் கருதி அத்தகைய முயற்சி எடுக்கப்படவில்லை.

உருக்குலையும் நாட்டில் நலிபடும் மக்கள்மீது உண்மையிலேயே கருணைகூர்ந்து அத்தகைய முயற்சி எடுக்கப்படவில்லை. அரசியற் சூழ்ச்சியில் ஈடுபடவேண்டிய தேவையால் உந்தப்பட்டே அத்தகைய முயற்சி எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சர்வதேய சமூகம் கேட்டுக்கொண்டபடி, சர்வதேய உதவி கிடைப்பதற்கு ஏதுவாக மூளைசாலிகள், திறமைசாலிகள், ஆற்றலும் அர்ப்பணிப்பும் நேர்மையும் மிகுந்த ஆண்கள், பெண்கள் அனைவரையும் உளமார உள்வாங்கி, சர்வதேய சமூகத்தின் நம்பிக்கையை ஈட்டி, உண்மையான அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்த அத்தகைய முயற்சி எடுக்கப்படவில்லை.

மாறாக, மக்களின் வெறுப்புக்கும், உலகத்தின் ஐயுறவுக்கும் உள்ளாகி ஈடாடிய ஓர் அரசாங்கத்துக்கு ஒரு மதிப்புமுலாம் பூசுவதற்காகவே அத்தகைய முயற்சி எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. சமகி ஜன பலவேகய (SJB) கட்சியை உடைத்து, சஜித் பிரேமதாசாவை ஓரங்கட்டி, சேடமிழுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியை உயிர்ப்பிக்கும் கள்ள நோக்குடன் அனைத்துக் கட்சி அரசாங்கம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டிருக்கலாமோ என்பது விவாதத்துக்குரிய சங்கதி.

ரணில் விக்கிரமசிங்கா

விக்கிரமசிங்காவின் குணவியல்பு

விக்கிரமசிங்கா மக்கள் விரும்பாத, திறமையற்ற அரசியல் பேர்வழி. சென்ற தேர்தலில் தனது கட்சியை இழிவுக்கும் தோல்விக்கும் இட்டுச்சென்றவர். தனது சொந்த இருக்கையையும் மானத்தையும் இழந்தவர். நாடறிந்த பின்கதவால் நாடாளுமன்றத்துள் நுழைந்தவர். நடைப்பிணமாய் நகர்ந்தவரை அவரது நல்லூழும் யாப்புமூலமான செப்படிவித்தையும் சேர்ந்து நாட்டின் அதிபராய் உயர்த்தின. அது முற்றிலும் சட்டபூர்வமான பதவியேற்பாயினும், சற்றும் அறத்தின் பாற்பட்டதல்ல.

அன்று கசந்த அரசியல் எதிரிகளின் ஐயத்துக்கிடமான ஆதரவுடன் இன்று ரணில் உச்சத்தை எட்டியிருக்கிறார். ஊழலில் ஊறிக் கீழ்மையடைந்த பழைய மொட்டுச்-சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் 134 அரசியற் கழிசடைகளின் ஆதரவுடன், பழிபாவங்களுக்கு அஞ்சாத படுமோசமான பேர்வழிகளின் ஆதரவுடன், நாட்டின் அழிவுக்கும் மக்களின் சொல்லொணாத் துன்பத்துக்கும் பொறுப்பேற்க வேண்டிய பேர்வழிகளின் ஆதரவுடன் அவர் உச்சாணிக் கோப்பில் ஏறி அமர்ந்திருக்கிறார்.

அவர்களிடையே உள்ளூர வேகும் வெறுப்பினை அவர்களது மேலெழுந்தவாரியான ஆதரவு மறைக்கவும் கூடும். அவர்களின் ஆதரவு மின்னி மறையவும் கூடும். எனினும் காரியத்தில் கண்வைத்து ஊதியம் பெற்ற ரணிலை மேற்படி ஆதரவாளர்களின் கானல் போன்ற காதல் உறுத்துவதாகத் தெரியவில்லை. சிந்தனைவளமின்றி கற்றுக்குட்டித்தனமாக குறுகிய சட்டதிட்ட விளக்கத்துடன் அரியணையில் அமர்ந்த புதிய பவிசாளருக்கு யாப்பின் நுட்பநுணுக்கப்படி அமைவன எல்லாம் சரியானவை போலும்!

மாக்பெத்”; நாடகத்தில் ஷேக்ஸ்பியர் கூறுவது போல், “மேடையில் ஏறி எடுப்புச்சாய்ப்புடன் சிடுசிடுத்து மறையும் ஓர் இழிந்த நடிகருக்கு,” அவையோர் எள்ளிநகையாட, கற்பனையில் மிதந்தபடி, உணர்ச்சியற்று நாடகம் ஆடும் பேர்வழிக்கு தனது பாத்திரத்தை நம்பிக்கையுடன் ஏற்று நடிப்பது மாத்திரமே முக்கியம் போலும்!

நம்பிக்கை வைக்கமுடியாத, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தலைவரைக் கொண்ட உறுதியற்ற அரசாங்கம் நாட்டை ஆள்கிறது. நாட்டைப் பாழ்படுத்திய அதே அரசியற் பேர்வழிகளின் தயவில் ஈடாடியபடி ரணில் கோலோச்சி வருகிறார். ஆனால் நாட்டுக்கு நேர்ந்த கதியிலிருந்து எளிதில் தப்ப முடியாது.

அனைத்துக் கட்சி அரசாங்கம் அமைக்கும் எண்ணமே தகாது. அத்தகைய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிக்கு ஐயத்துக்கிடமான உள்நோக்கம் உண்டு. இந்த ஈடாடும் குழுமம் பதவியேற்றதிலிருந்து, ஒரு சொட்டு மரியாதையை ஈட்டிக்கொள்ளும் பொருட்டு, அனைத்துக் கட்சித் தேசிய அரசாங்கம் எனும் கோவணத்தைக் கொண்டு, தமது அம்மணத்தை மறைக்க அரும்பாடுபட்டு வருகிறது.

அரசியற் கட்சிகள் பற்றிய மக்களின் நிலைப்பாடு

அரசியற் கட்சிகள்மீது ஒட்டுமொத்தமாக ஐயுறவுகொண்டு, அவற்றை ஏளனம் செய்யும் இன்றைய மக்களிடையே ஓங்கியிருக்கும் உணர்வலைக்கு மாறான எண்ணம் அது. 2019ம், 2020ம் ஆண்டுத் தேர்தல்களில் தமது சொந்த அழிவுக்காக கழுதைகள் போன்று வாக்களித்த 69 இலட்சம் பேரைப் போல் இன்றைய மக்கள் பேதைகள் அல்ல. அரசியற் கட்சிகள் பெரிதும் அமைதியைக் கெடுப்பவை என்பதை இப்போதாவது மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள். அரசியற் கட்சிகளை அவர்கள் வெறுத்து வருகிறார்கள்.

நாட்டின் வீழ்ச்சிக்கு அரசியற் கட்சிகளின் ஒருமித்த செயற்பாடே காரணம் என்பதையும், நாட்டின் பிரச்சனைக்கு அவற்றால் தீர்வுகாண முடியாது என்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளார்கள். அரசியல்வாதிகள் தியாகம் புரிவதற்காக அரசியலை நாடியவர்கள் அல்ல என்றும், அதிகாரப் பேறுகளாலும், சலுகைகளாலும் ஈர்க்கப்பட்டு, தம்மை வளப்படுத்திக்கொள்வதற்காக அரசியலை நாடிய ஒட்டுண்ணிகள் என்றும் மக்கள் ஐயப்படுவதும், கருதுவதும், வெறுப்பதும் தெரிகிறது.

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து அதைப் பாழ்படுத்தியவை அரசியற் கட்சிகளே என்பதை பலரும் கண்டுகொண்டுள்ளார்கள். நலமான சூழ்நிலை நிலவிய காலத்தில் கூட நாட்டை ஆண்ட அரசியற் கட்சி ஒவ்வொன்றும் நாட்டைச் சீரழித்து வந்தது. எனவே அத்தகைய அரசியற் கட்சிகள் ஒன்றுகூடி அமைக்கும் அனைத்துக் கட்சி அரசாங்கம் படுமோசமான சூழ்நிலை நிலவும் இக்காலத்தில் நாட்டை மீட்டெடுக்கக்கூடும் என்று கற்பனைசெய்வது உண்மையில் நகைக்கத்தக்கது!

இலங்கைச் சுதந்திரக் கட்சி

1956ல் இலங்கைச் சுதந்திரக் கட்சி (SLFP) படுகேவலமான முறையில் மூடத்தனமான பாமரமக்களின் ஈனத்தனமான உணர்ச்சிகளைத் தூண்டி, குறுகிய பௌத்த சிங்கள மொழித் தேசியவாத இனவெறிப் பிரசாரம் புரிந்து ஆட்சியைக் கைப்பற்றிய விதத்தை இங்கு பின்னோக்கிப் பார்ப்பது நலம் பயக்கும்.  “இலங்கையின் நிலைகுலைவு துவங்கிய இடம் அது” என்றார் (சிங்ககப்பூர் பிரதமர்) லீ குவான் யூ. 24 மணித்தியாலங்களுக்குள் இனங்களுக்கிடையே நிலவிய நம்பிக்கை சிதறடிக்கப்பட்டு, இனப்பகைக்கு வித்திடப்பட்டது.

அதன்பிறகு சிறுபான்மை இனத்தவரைத் தாக்கும் வழமை துவங்கியது. தவிர்க்கவியலாவாறு பயங்கரவாத பதில்வினை எழுந்தது. அதன் பெறுபேறாக கொடிய, பயங்கரப் போர் மூண்டு, பல்லாண்டுகளாக நீடித்து, இலட்சக் கணக்கான மக்களின் வாழ்வு சிதைந்தது.

1956ல் பொதுமக்களின் ஊழி எனப்பட்ட ஒன்றையும் புகுத்தினார்கள். கீழ்த்தரமான முறையில், தனிமொழி வரம்பினுள், சரிநிகரான அரைவேக்காட்டுத்தனத்தை ஏற்றிப்போற்றினார்கள். அதை நோக்கி மக்களை ஈர்த்து, சமூக நியமங்களை மட்டந்தட்டி, அரித்தெடுத்தார்கள். செம்மை, மேட்டிமை சார்ந்த விழுமியங்களைத் தூக்கி வீசினார்கள். அன்றிலிருந்து தேசிய கட்டமைப்புகளுள் ஏறத்தாழ அனைத்துமே தாக்குண்டு வந்துள்ளன.

1956 முதல் 2022 வரை கீழ்நோக்கிய சரிவு நீடித்து வந்துள்ளது. அவ்வப்பொழுது நம்பிக்கைகள் துளிர்விட்டதுண்டு. காலத்துக்கு காலம் மெச்சத்தக்க முன்னெடுப்புகள் இடம்பெற்றதுண்டு. எனினும் அரசியற் கட்சிகள் தத்தம் தனித்துவமான முறைப்படி, அடுத்தடுத்து மக்களை ஏய்த்து, நாட்டின் சிதைவுக்கு துணைநின்றபடியால், மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.

நாட்பட்ட கருத்தியல் நிலைப்பாடுகளுக்கு அடிப்பட்டு, பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசிமக்களை ஏய்க்க வரிந்துகட்டிய அரசியற் கட்சிகளால் நியாயமான, நிலைபெற்ற பொருளாதாரக் கொள்கை எதையும் கைக்கொள்ள முடியவில்லை. வன்போக்குடைய தொழிற்சங்கங்களுக்கு அவை அஞ்சிமிரண்டு வந்துள்ளன.

இனவெறி, அதிகாரவெறி பிடித்து ஊழலில் ஊறித்தேறிய பௌத்த பீடத்துக் காவியுடையின் முன்னே அவை கூனிக்குறுகி வந்துள்ளன. அது பௌத்த சமயத்துக்கே ஓர் இழுக்கு. காவியுடையின் பிடியிலிருந்து விடுபட்டு, மதச்சார்பற்ற சமூகத்தை நாடித் துணிந்து குரல் கொடுக்க முடியாத கட்சிகளாகவே இன்னமும் அவை காணப்படுகின்றன.

அண்மைக் காலத்தில் அரைப்படிப்புக் கொண்ட கழிசடைகளும், குண்டர்களும், ஊழல் மோசடிப் பேர்வழிகளும், பழிபாவங்களுக்கு அஞ்சாத படுபாவிகளும் மேன்மேலும் அரசியற் கட்சிகளுக்குள் ஊடுருவி, அவற்றை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள். நாடாளுமன்றம் எனும் தூய கட்டமைப்பை அவர்கள் மேன்மேலும் இழிவுபடுத்தி வருகிறார்கள்.

இடதுசாரிகள்

நாடு சுதந்திரம்பெற்ற நாள்தொட்டு அதனைக் காட்டிக்கொடுத்த அரசியற் கட்சிகள் பலவும் 1956ல் நாட்டைச் சிதைக்கத் துவங்கிய முழுமுதல் சுதந்திரக் கட்சியின் (SLFP-யின்) மறுபதிப்புகளாக அல்லது அதனை உள்ளடக்கிய கூட்டணியின் அங்கங்களாகவே இயங்கி வந்துள்ளன.

அவற்றுள் சிறுபிள்ளைத்தனமான பல்வேறு இடதுசாரி மார்க்சியக் கட்சிகளும் அடங்கியிருந்தன. மக்கள் விடுதலை முன்னணியை (JVP-ஐ) போன்ற அக்கட்சிகள் தாமே ஒழுக்கசீலமான கட்சிகள் என்று முழங்கி விமர்சித்து எரிச்சலூட்டி, தமது ஊடுருவலுக்கும் கருத்துத் திணிப்புக்கும் உள்ளான தொழிற் சங்கங்களையும் மாணவர் சங்கங்களையும் பயன்படுத்தி, பொதுவாழ்வினைக் குழப்பியடித்ததை விட வேறெதுவும் செய்யவில்லை.

அத்தகைய இடதுசாரித்துவ சமூகவுடைமைக் கட்சிகளின் தலைவர்கள் இப்பொழுது மாண்டு மடிந்துவிட்டார்கள். மக்களை ஆட்கொண்ட அவர்களது அறிவாற்றல் தகைமைகளும், அரும்பெரும் உரைகளும், தாராண்மைப் பாசாங்கும் அன்று பெரிதும் ஏற்றிப்போற்றப்பட்டன. அடிப்படையில் அவர்கள் கடும்பிடியான கருத்தியல்வாதிகளே. அன்று சோவியத் ஒன்றியத்திலும், சீனாவிலும் கருத்தியலைச் சாட்டி இலட்சக் கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். இன்று கண்டனத்துக்கு உள்ளாகிவரும் படுமோசமான முன்னாள் சோவியத், சீன ஆட்சிபீடங்களுக்காக அன்று வக்காலத்து வாங்கியவர்கள் அவர்கள்.  

ஐக்கிய தேசியக் கட்சி

அரசியல் அழுகல் என்பது ஈற்றில், குறிப்பாக 1977ன் பின்னர், புற்றுநோய் போல் பரவி  ஐக்கிய தேசியக் கட்சியையும் பீடித்தது. நலிந்து, ஊழல்வாய்ப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி 2020 தேர்தலில் துடைத்தெறியப்பட்டது. பிடிவாதமும் சோம்பலும் மிகுந்த கட்சித் தலைவரே தன் இருக்கையை இழந்து இழிவுபட்டார். கட்சியின் மிகச்சிறந்த அங்கத்தவர்கள்  பிரிந்துசென்று தமது சொந்தக் கட்சியை அமைத்தார்கள். 

இவை அனைத்தையும் கண்டு, மாயை அகன்று, சீற்றம்கொண்ட 77 வயதான இக்கட்டுரையாளரின் கண்ணோட்டத்தில், நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இயங்கிவந்த அரசியற் கட்சிகளின் கேவலமான வரலாற்றுச் சுருக்கம் இதுவே.

கப்பல் கவிழ்ந்த மாதிரி மாபெரும் பேரிடியால் நாடு தாக்குண்ட இந்த வேளையில் அத்தகைய அரசியற் கட்சிகள் ஓர் உப்புச்சப்பற்ற அனைத்துக் கட்சிக் கட்டமைப்பாக அணிதிரள்வதே தீர்வாகும் என்பது வெறும் விழல் பேச்சு.

கும்பல்கள்

பல குப்பைக் கும்பல்களின் நெடியினால் நிலைமை மோசமடைவதாக நாம் மேலும் அறிகிறோம். ஏற்கெனவே அழுகி வீசும் நாற்றம், கும்பல்களின் துணையுடன் இன்னும் ஓங்கி எழுகிறது. ஒவ்வொரு கும்பலிலிருந்தும் எடுக்கப்படும் கூறுகளைக் கொண்ட புதிய சேர்க்கை நறுமணம் கமழும் என்று எதிர்பார்ப்பது வெறும் நப்பாசை!

ஒவ்வொரு கட்சிக்கும் ஏனைய எல்லாக் கட்சிகளையும் போல் ஒரே பெறுமதியே உண்டு; தனிக்கட்சிக்கூறுகளை விட முழுக்கட்சிக்கூட்டு ஏதோ ஒரு வகையில் மேம்பட்டது எனும் பொய்மையே அனைத்துக் கட்சி ஆட்சி எண்ணங்களின் அடிப்படை. அரிஸ்டோட்டில் முன்வைத்த மெய்த்தள நெறி இங்கு அறவே தகாத முறையில் கையாளப்படுகிறது.

இலங்கைச் சுதந்திரக் கட்சி (SLFP) உட்பட இலங்கை மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் (SLPFA-யில்) 17 அரசியற் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 2019ல் கொதாபயாவை அவை ஆட்சியாளராக்கின. அவர்களுள் 145 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2020ல் அரசாங்கத்தை அமைத்து, படுகேவலமான 20வது திருத்தத்துக்கு வாக்களித்தார்கள். அவர்களுள் எவருமே அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியாது. அவர்களது அரசாங்கமே இன்றைய பேரிடியை ஏற்படுத்தியது; ஏற்படுத்திய கையோடு அதில் அங்கம் வகிக்கும் அருகதையை அவர்கள் இழந்துவிட்டர்கள். 

அவர்கள் அனைவரும் ஊழலில் ஊறிய குற்றவாளிகளைக் கொண்ட பேர்போன செல்வந்தக் குடும்பம் ஒன்றின் வெட்கம்கெட்ட அடிவருடிகள். அவர்களின் கேடுகெட்ட ஆட்சியில் நாடு சிதைக்கப்பட்டுள்ளது. பிரச்சனைக்குக் காரணமானவர்கள் தீர்வு காண்பதில் பங்குவகிக்க முடியாது. நாட்டை மீட்டெடுக்கும் அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தில் அவர்களை உள்ளடக்க நியாயமில்லை.

என்றோ ஒரு நாள் இந்த நாட்டில் ஏதாவது நீதிநியாயம் நிலவுமாயின், இந்த நாட்டை கற்காலத்துக்கு இட்டுச்சென்ற அத்தகைய கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் குடியுரிமையாவது பறிக்கப்பட வேண்டும்! 

சமகி ஜன பலவேகய (SJB)

அனைத்துக் கட்சி அரசாங்கம் அமைக்க அறநெறியோ, நியாயநெறியோ கிடையாது.  அப்படியிருக்க, அத்தகைய ஐயத்துக்கிடமான கூட்டில் இணைவதைத் தவிர்த்த எஸ். ஜே. பி. கட்சியையும், அதன் தலைவரையும் குறித்து (கற்றவர்கள், துறைஞர்கள் எனப்படுவோர் உட்பட) பலரும் ஏமாற்றம் அடைந்து, அத்தகைய தயக்கம் ஒரு பலவீனம் என்று தப்புக்கணக்குப் போட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் குறைகூறுவது வருத்தம் அளிக்கிறது.

அவ்வாறு குறைகூறுவோர் மேலே ஆராயப்பட்ட சங்கதிகளை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கவில்லையோ தெரியவில்லை. யார் யாருடன் சேர்ந்தால் என்ன, எந்த நெறிகள் விட்டுக்கொடுக்கப்பட்டால் என்ன, தமது சொந்த இக்கட்டு உடனடியாகப் போக்கப்பட வேண்டும் என எண்ணுவோரின் சுயநலமோ தெரியவில்லை. 

சஜித் பிரேமதாசா

எவ்வாறாயினும், முழு உண்மை பற்றிய எண்ணம் எதையும் மறுத்து, உண்மை வேறொன்றில் தங்கியிருக்கிறது என்ற எண்ணத்தையும், எல்லோரும் பங்களிக்க வல்லவர்கள் என்று அனைவரும் நம்புவது நலம்பயக்கும் என்ற எண்ணத்தையும் அடிப்படையாகக் கொண்டு, அனைத்தையும் உள்வாங்கும் கோட்பாட்டில் நம்பிக்கை வைக்கும் நவீனத்துவ பின்னெறியுடன் அவர்களது நிலைப்பாடு பொருந்துகிறது.

ஒற்றுமையே உச்ச விழுமியமாக அமையவேண்டும் எனவும், என்ன விலை செலுத்தியேனும் அமைதி காண்பதே இறுதி இலக்காக அமையவேண்டும் எனவும் கொள்ளப்படும் நாட்டில் அத்தகைய சிந்தனை ஓயாத சகிப்புத்தன்மைக்கும், அரவணைப்புக்கும் இட்டுச்சென்றே தீரும்.

நேரிய சர்ச்சையை விட போலி அமைதியே விரும்பப்படுகிறது. “நலமான முரண்பாடு, ஓயாத ஒத்துமேவல், கூடி நடைபோடுதல்” போன்ற பாசாங்குகளில் ஈடுபடுவது நவீனத்துவ பின்னிலைப் பண்பாட்டில் ஒரு பாணியாய் ஓங்கியுள்ளது. பிறரிடம் குறைகாணாமல், அவர்களுக்கு இயன்றளவு நெகிழ்ந்து கொடுத்து, எமது நம்பிக்கைகளை நாம் பேணிக்கொள்ளலாம் என்று நம்பப்படுகிறது.

அனைத்துக் கட்சி அரசாங்கம் எனப்படும் பாசாங்கில் பங்குபற்றும்படி விக்கிரமசிங்கா விடுத்த அழைப்பு எனும் இரையைக் கவ்வமறுத்து, தமது நெறிகளுக்கு உறுதிபட அமைந்தொழுகும் எதிர்க்கட்சிகளின் மதிநலத்தில் குறைகாணும் இலங்கையரின் வலுவற்ற, உப்புச்சப்பற்ற உளப்பான்மை அதுவே.

தகுதிவாய்ந்தவர்களின் இடைக்கால ஆட்சிக்கான நியாயம்

அனைத்துக் கட்சி அரசாங்கம் எனும் பம்மாத்தை விடுத்து, தகுதிவாய்ந்தவர்களின் வலுவான, நம்பிக்கையான இடைக்கால ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்பது வெளிப்படையாகவே புலப்படுகிறது.

விக்கிரமசிங்கா நம்பத்தகாதவர் என்றாலும் கூட, அந்த நம்பிக்கையீனத்தைக் கடந்து, இந்த இறுதிக் கட்டத்திலாவது அவர் நன்கு நிதானித்து தகுதிவாய்ந்தவர்களின் இடைக்கால ஆட்சியை அமைக்கும் முயற்சியில் இறங்குவார் என்றொருவர் எதிர்பார்ப்பது இயல்பு.

இதை நடைமுறைப்படுத்துவதற்கு மேட்டிமைவாய்ந்த சிறப்புக் குழுமம் ஒன்றினை அணிதிரட்டி, எதிர்க்கட்சித் தலைவரை பிரதமராகக் கொண்டு, ஓர் உயரிய ஐக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுள் கல்வி, மதிநுட்பம், நேர்மை, விடாமுயற்சி, தகுதி என்பவற்றின் உச்சத்தில் நெறிநிற்பவர்களென அறியப்பட்ட “தகுதிவாய்ந்தவர்களின் ஆட்சியாக” அது அமைய வேண்டும். இந்த அணியில் ஒப்பாருள் முதல்வர் எனும் வரையறையை விஞ்சாமல் நிலைகொள்ளும் தன்னடக்கம் விக்கிரமசிங்காவுக்கு அமைய வேண்டும்.

தற்போதைய நாடாளுமன்றத்தில் திறமையும் மேன்மையும் மிகுந்தவர்கள் மிகவும் குறைவு. ஆதலால் தகுதிவாய்ந்தவர்களின் ஆட்சியை அமைப்பது மிகவும் கடினம். எனினும் தகுதிவாய்ந்தவர்களின் ஆட்சியில் அங்கம் வகிப்பதற்கு கண்டிப்பாக இருக்கவேண்டிய தகைமையுடைய 25-30 பேரையவது நாடாளுமன்றத்தில் இனங்காண முடியும்.

அத்தகைய மேட்டிமைக் குழுமத்தை ஒரு கட்சியிலிருந்தா, பல கட்சிகளிலிருந்தா தெர்ந்தெடுப்பது எனும் வினாவுக்கு இங்கு இடமில்லை. தகுதிவாய்ந்தவர்களின் ஆட்சியில் அங்கம் வகிப்பதற்கு கண்டிப்பாக இருக்கவேண்டிய தகைமை அவர்களுக்கு உண்டா இல்லையா என்பதை மட்டுமே பொருட்படுத்த வேண்டும். இன்றைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்டு மட்டுமே அத்தகைய தகுதிவாய்ந்தவர்களின் ஆட்சியை அமைக்க வேண்டி நேரலாம். அப்படி நேரலாம் என்றால் அப்படியே ஆகட்டும்!

முந்திய அரசாங்கத்தில் அங்கம் வகித்த கட்சிகளைச் சேர்ந்த 145க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், நாம் ஏற்கெனவே எடுத்துரைத்த காரணங்களால், தாமாகவே தகைமை இழந்தவர்கள் ஆகுவார்கள். அவர்கள் மட்டுப்பட்ட தகைமை படைத்தவர்கள். நாட்டைச் சிதைத்த கேடுகெட்ட அரசாங்கத்தை அண்டிப்பிழைத்து நாட்டைக் காட்டிக் கொடுத்த வரலாறு படைத்தவர்கள். ஆதலால் தகுதிவாய்ந்தவர்களின் ஆட்சியில் அங்கம் வகிப்பதற்கு கண்டிப்பாக இருக்க வேண்டிய தகைமை அற்றவர்கள். 

அனைத்துக் கட்சி அரசாங்கம் அமைக்கும் பயனற்ற முயற்சி கைவிடப்பட்டால், அரசியற் கட்சிகளை வெறுக்க முற்பட்டுள்ள இலட்சக் கணக்கான குடிமக்களுக்கு, தமது குரல் செவிமடுக்கப்படுகிறது எனும் உணர்வு பிறக்கும். அத்தகைய தகுதிவாய்ந்தவர்களின் ஆட்சி அமைக்கப்பட்டவுடன் நாட்டில் அரசியல் உறுதிப்பாடு தழைக்கும்.

தகுதிவாய்ந்தவர்களின் ஆட்சி அமைக்கப்படுவதன் மூலம், ஊழலை ஒழிக்க உறுதிபூண்ட நல்லோரைக் கொண்ட நேரிய அரசாங்கம் தற்காலிகமாகவேனும் இலங்கையில் அமைக்கப்பட்ட செய்தி உலகிற்குக் கிடைக்கும். சர்வதேய அமைப்புகளும், கொடையகங்களும், கடன் கொடுக்கும் அமைப்புகளும் மீண்டும் இலங்கை மீது நம்பிக்கை வைக்கவும், உலகம் எம்மீது பரிவு கொள்ளவும் வழி பிறக்கும்.  

நாம் முன்மொழிந்த மாதிரியான தகுதிவாய்ந்தவர்களின் ஆட்சி நாட்டுக்குப் புதிய மூச்சு நல்கும். வேதனையின் நடுவே ஓரளவு நம்பிக்கையை ஊட்டும். இயன்றளவு விரைவாக தேர்தல் நடைபெறுவதற்கு ஏற்ற சூழ்நிலை தோன்றும் வரை நாம் காத்திருக்க வாய்ப்பு வரும்.                   

True Meritocracy, not the Sham of All Party Mediocracy, Prof. Asoka N.I. Ekanayaka,

The Colombo Telegraph, 2022-09-08, translated by Mani Velupillai, 2022-09-15.

https://www.colombotelegraph.com/index.php/true-meritocracy-not-the-sham-of-all-party-mediocracy

No comments:

Post a Comment