போருக்குப் பின்
மீளிணக்கமும் மனித உரிமை மீறல்களும்
எஸ். டபிள்யூ. பிரேமரத்தினா
ஜெனீவாவில் ஐ. நா. மனித உரிமை மன்றம் கூடிய ஒவ்வொரு தடவையும் இலங்கையில் போருக்குப் பிற்பட்ட மீளிணக்கப் படிமுறை கருத்தில் கொள்ளப்பட்டது. போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து தனிக்கவனம் செலுத்தப்பட்டது. மனித உரிமை நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு வேண்டிய பரிகார நடவடிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
மீளிணக்கப் படிமுறையில் ஐ. நா.வின் பங்கினைக் குறித்து இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிபுரிந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த கொள்கைகள் ஒன்றுடன் ஒன்றும், முன்னுக்குப் பின்னும் முரண்பட்டன. இலங்கை ஆட்சியாளர் இராசதந்திர வழிநின்று உறுதியான செயல்நோக்குடன் செயற்படத் தவறியதால் விளைந்த பாதிப்புகளைச் சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
2009-ல் ஐ. நா. தலைமைச் செயலாளரும் இலங்கை அதிபரும் விடுத்த கூட்டறிக்கை
2009 மே 23-ம் திகதி ஐ. நா. தலைமைச் செயலாலர் பான் கி மூன் இலங்கை சென்று, அதிபர் மகிந்த ராஜபக்சாவைச் சந்தித்த பின்னர், இருவரும் விடுத்த கூட்டறிக்கையில் மூன்று முக்கிய கூறுகள் அடங்கியிருந்தன:
போரினால் தாக்குண்ட மக்களின் உடனடித் தேவைகளைக் கவனிக்க இலங்கை உடன்பட்டது.
இலங்கை மக்கள் அனைவரதும் நலன்கருதி நிலையான அமைதியையும் பொருள்வள விருத்தியையும் எய்தும் நோக்குடன் மீளிணக்கப் படிமுறையை மேற்கொள்ள இலங்கை உடன்பட்டது.
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தல், சேதமடைந்த கீழ்க்கட்டுமானங்களை மீளமைத்தல், முன்னாள் போராளிகளுக்கும் போர்ச்சிறுவர்களுக்கும் மறுவாழ்வளித்தல் ஆகிய மிக அவசர அலுவல்களில் கவனம் செலுத்த இலங்கை உடன்பட்டது.
மகிந்த ராஜபக்சா, பான் கி மூன்
மனித உரிமைகள்
சர்வதேய மனித உரிமை நியமங்களுக்கு அமைவாக மனித உரிமைகளை மேம்படுத்தவும், கட்டிக்காக்கவும், இலங்கையின் சர்வதேயக் கடப்பாடுகளைப் பேணவும் தாம் உறுதிபூண்டுள்ளதாக இலங்கை அதிபர் தெரிவித்தமை மேற்படி கூட்டறிக்கையின் மிக முக்கிய கூறு.
சர்வதேய மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் படிமுறையின் முக்கியத்துவத்தை ஐ. நா. தலைமைச் செயலாளர் வலியுறுத்தியமையும் அக்கூட்டறிக்கையின் இன்னொரு முக்கிய கூறு.
போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள், படைகள் ஆகிய இரு தரப்பினரும் மனித உரிமைகளையும், மனிதாபிமானச் சட்டத்தையும் மீறியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சுதந்திரமான முறையில் புலன்விசாரிப்பதற்கு ஒரு பொறிமுறையை வகுக்க இலங்கை அதிபர் உடன்பட்டார்.
மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான கடப்பாடுகளை நிறைவேற்ற அரசாங்கம் உறுதிபூண்டது. அதை வெளிப்படுத்து முகமாக 2009 மே 27-ம் திகதி ஐ. நா. மனித உரிமை மன்றத்தில் ஒரு முன்மொழிவை இலங்கை முன்வைத்தது. “மனித உரிமைகளை மேம்படுத்தி, கட்டிக்காப்பதில் இலங்கைக்கு உதவுதல்” என்பது அதன் தலைப்பு.
கற்றுக்கொண்ட பாடங்கள்-மீளிணக்க ஆணையம்
இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள்-மீளிணக்க ஆணையம், உள்நாட்டுப் போருக்கான காரணங்களை ஆய்விட்டு, நாட்டில் அமைதி நீடிப்பதற்கும், மீளிணக்கம் கைகூடுவதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய பரிகார நடவடிக்கைகளை விதந்துரைத்தது:
அரசிடம் சரணடைந்த பிறகு காணாமல் போனவர்கள் பற்றி முழுமையான புலன்விசாரணை மேற்கொள்ள வேண்டும். தேவைப்படுமிடத்து வழக்குத் தொடுக்க வேண்டும். குற்றசாட்டப்படுவோர் மீது வழக்குத் தொடுத்தே ஆகவேண்டும். “சரணடைவுப் படிமுறையில் ஏறத்தாழ எடுத்துக்காட்டான முறையில் நடந்துகொண்டதாகக்” கூறப்படும் அரச படையினரின் நற்பெயரைக் காப்பதற்கு அவர்கள் மீது வழக்குத் தொடுத்தே ஆகவேண்டும்.
இந்த அறிக்கையிலும், பொதுமக்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட மற்றும் பிற அறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்ட விடயங்களைப் புலன்விசாரிக்க வேண்டும். குற்றங்கள் புரியப்பட்டதாகப் புலன்விசாரணையில் தெரியவந்தால், குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத்தொடுத்து, அவர்களைத் தண்டிப்பதற்கு ஏற்ற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்ச்சைக்குரிய Channel 4 Video பற்றிய உண்மையை அல்லது அதனைக் குறித்து வேறு விவரம் எதையும் அறிவதற்கு சுதந்திரமான புலன்விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றங்கள் புரியப்பட்டதாகப் புலன்விசாரணையில் தெரியவந்தால், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத்தொடுக்க வேண்டும்.
ஆட்கள் காணாமல் போகும்படி செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து புலன்விசாரிக்க வேண்டும். அரச தலைமைச் சட்டவாளர் அவற்றைக் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வகைசெய்ய வேண்டும்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கமைய நெடுங்காலமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் மீது அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
புலிகளும் படைகளும் புரிந்த மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து தாம் வாக்குறுதி அளித்தவாறு விசாரணை செய்யும் கடப்பாட்டை நிறைவேற்ற மகிந்த ராஜபக்சாவின் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை அரச படையினர் எண்ணிறந்த தியாகங்களைப் புரிந்து, பயங்கரவாத இயக்கத்தவர்கள் எனப்பட்ட புலிகளைத் தோற்கடித்து, நாட்டை ஒருங்கிணைத்து, அமைதியை நிலைநாட்டியபடியால், மீளிணக்கப் படிமுறை என்பது இனி வேண்டியதில்லை எனும் நிலைப்பாடே ஆட்சியாளரை வழிநடத்தியது.
ஐ. நா. மனித உரிமை மன்றத்தில் 19/2-ம் இலக்கத் தீர்மானம்
கற்றுக்கொண்ட பாடங்கள்-மீளிணக்க ஆணையத்தின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தும்படி, 2012-ம் ஆண்டு மனித உரிமை மன்றத்தில் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 19/2-ம் இலக்க தீர்மானத்தை முன்வைத்த நாடுகளே அக்கோரிக்கைய முன்வைத்தன. 4-ம் ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள், படைகள் ஆகிய இரு தரப்பினரும் மனித உரிமைகளையும், மனிதாபிமானச் சட்டத்தையும் மீறியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் புலன்விசாரிக்க வேண்டும் என்று 2012-ம், 2013-ம், 2014-ம் ஆண்டுகளில் மனித உரிமை மன்றம் அடுத்தடுத்து வலியுறுத்தியது.
ஐ. நா.விலும் மனித உரிமை மன்றத்திலும் அங்கம் வகிக்கும் நாடுகள் என்ற வகையில் சர்வதேய சமூகம் மீளிணக்கப் படிமுறையில் பங்குபற்றுவது குறித்து மகிந்த ராஜபக்சாவின் அரசாங்கம் பின்வரும் நிலைப்பாட்டை எடுத்தது:
இலங்கை ஓர் இறைமைவாய்ந்த அரசு; இலங்கையில் தலையிட்டு, அதன் உள்நாட்டுச் சர்ச்சையைத் தீர்ப்பது குறித்து எந்த நடவடிக்கையையும் விதந்துரைக்க பிற நாடுகளுக்கு, ஏன் ஐ. நா.வுக்கு கூட, அருகதை கிடையாது; அப்படிச் செய்வது இலங்கையின் இறைமையை மீறுவதாகும்; அத்தகைய தலையீடுகள் சட்டத்தையும் மீறுவதாகும். ஆதலால் அத்தகைய விதப்புரைகளை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை; 4-ம் ஈழப்போர் ஒரு மனிதாபிமான நடவடிக்கை; அறவே மனித உரிமைச் சட்டத்துக்கும், மனிதாபிமானச் சட்டத்துக்கும் அமைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை; படை நடவடிக்கையின் பொழுது மனித உரிமைகளை மீறியோர் புலிகள் மாத்திரமே.
அதுவே ராஜபக்சா-அரசாங்கத்தின் நிலைப்பாடு.
2015-ல் ஆட்சிமாற்றம்
2015 முதல் 2019 வரை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் நல்லாட்சி நிகழ்ந்தபொழுது, சர்வதேய சமூகம் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு மாறியது.
மைத்திரிபால சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்கா
ஜெனீவாவில் 30/1-ம் இலக்க தீர்மானத்தை முன்வைத்த நாடுகளுடன் இலங்கையும் சேர்ந்துகொண்டது. போரின் இறுதிக்கட்டத்தில் படைகளும் புலிகளும் புரிந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களையும், மனிதாபிமானச் சட்ட மீறல்களையும் உள்நாட்டு, வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்புத் தீர்ப்பாயம் ஒன்றின் முன்னிலையில், நம்பிக்கையான முறையில் புலன்விசாரிக்க வேண்டும் என்று இலங்கை அரசை அது கேட்டுக்கொண்டது. இந்தியாவும் அத்தீர்மானத்தை ஆதரித்தது. ஐ. நா.வின் தீர்மானங்களை தொடர்ந்தும் எதிர்த்து நின்றால், பாதிப்புகளுக்கு உள்ளாக நேரும் என்பதை நல்லாட்சி அரசாங்கம் புரிந்துகொண்டது.
மனித உரிமை மன்றத்தில் மங்கள சமரவீரா
திட்பமான மீளிணக்கத்துக்கு உகந்த சூழ்நிலை ஏற்படும் வண்ணம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் பலவற்றை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டது. ஜெனீவாவில் 30/1-ம் இலக்கத் தீர்மானம் நிறைவேறியபொழுது இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா உடனிருந்தார். மீளிணக்கப் படிமுறையில் கரிசனை கொண்ட தரப்பினர் அனைவருடனும் கலந்துசாவிய பின்னர் உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை இலங்கை அர்சாங்கம் வகுக்கும் என்று அவர் அறிவித்தார்.
இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகமும், இழப்பீட்டு அலுவலகமும் அமைக்கப்பட்டன. துவக்கத்தில் இரு அலுவலகங்களும் திறம்பட இயங்கின. வலுக்கட்டாயத்துக்கு உட்பட்டு காணாமல் போகாவாறு ஆட்களைப் பாதுகாப்பது தொடர்பான சர்வதேயப் பொருத்தனையில் 2016 மே 25-ம் திகதி ஒப்பமிடப்பட்டது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான முன்மொழிவு வரையப்பட்டது. இவை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட முற்போக்கான நடவடிக்கைகள்.
ராஜபக்சா சகோதரர்கள்
ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியமை
நல்லாட்சி அரசாங்கம் ஏனைய நடுகளுடன் சேர்ந்து 30/1-ம் இலக்கத் தீர்மானத்தை முன்வைத்த செயல், அரச படையினரைக் காட்டிக்கொடுத்த மன்னிக்கமுடியாத செயல் என்று தேர்தல்-பிரசாரம் செய்யப்பட்டது. 2015-க்கு முன்னர் ஆட்சிபுரிந்த அதே ராஜபக்சா குடும்பம் 2019-ல் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. அதனை அடுத்து மீளிணக்கப் படிமுறையில் ஐ. நா. பஙக்குவகிப்பது குறித்து அரசாங்கம் எதிர்மாறான கொள்கையைக் கடைப்பிடித்தது. மனித உரிமை மன்றத்தின் தீர்மானங்களை எதிர்த்தது. மீளிணக்கப் படிமுறையில் பங்குவகிக்கும் ஐ. நா.வுடன் மல்லுக்கட்டும் அணுகுமுறையைக் கடைப்பிடித்தது.
கொதாபய ராஜபக்சா
46-ம் அமர்வு
2021 மார்ச் 23ம் திகதி மனித உரிமை மன்றத்தின் 46-வது அமர்வில் “மிளிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள்” எனும் தலைப்புடன் கூடிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொறுப்புக்கூறல் குறித்து இலங்கைக்கு வெளியே புதிய விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கான ஆணை மனித உரிமை உயர் ஆணையாளருக்கு வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் வழக்குத் தொடுப்பதற்கான சான்றுகளைத் திரட்டும் அதிகாரம் அவருக்கு அளிக்கப்பட்டது.
ஜி. எல். பீரிஸ்
இலங்கையின் உள்நாட்டுச் சட்டவரம்புக்கு உட்பட்ட அலுவல்களில் வெளியுலகம் தலையிடுவதற்கு மேற்படி தீர்மானம் வழிவகுப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இறைமைவாய்ந்த ஒரு நாட்டின் அலுவல்களில் இவ்வாறு தலையிடும் உரிமை அறநெறிப்படி எவருக்கும் கிடையாது என்றார். “இத்தகைய தீர்மானம் முன்னொருபொழுதும் நிறைவேற்றப்பட்டதில்லை. ஆதலால் அதில் இடம்பெற்றுள்ள முன்மொழிவை இலங்கை திட்டவட்டமாக நிராகரிக்கிறது” என்று அறிவித்தார்.
48-ம், 49-ம், 50-ம் அமர்வுகள்
மனித உரிமை நிலைவரத்தில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்று என்று 48-ம், 49-ம், 50-ம் அமர்வுகளில் மனித உரிமை ஆணையாளர் மிசேல் பசெலொ தெரிவித்தார். மனித உரிமைகள் மீறப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் புலன்விசாரிக்கவும் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
ராஜபக்சா-குடும்ப ஆட்சியில் மனித உரிமைகள் மீறப்பட்டமை, குடிநிர்வாகம் மேன்மேலும் படைமயமாக்கப்பட்டமை, அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்த மனித உரிமைத் தொண்டர்களும் ஊடகர்களும், சமூக உரிமை அமைப்பாளர்களும் மிரட்டப்பட்டு அலைக்கழிக்கப்பட்டமை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்படி கைதுசெய்யப்படுவோர் நெடுங்காலமாக விசாரணையின்றித் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டமை பற்றி எல்லாம் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.
மிசேல் பசெலொ
“இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம்” ஏற்கெனவே துவக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதாகவும் 49-ம் அமர்வில் ஆணையாளர் தெரிவித்தார். இலங்கைக்கு வெளியே “பொறுப்புக்கூறல் திட்டம்” பற்றி 50-ம் அமர்விலும் அவர் குறிப்பிட்டர். பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளினால் இந்நாடு திண்டாடும் இவ்வேளையில் முன்னிலைக் குடியாட்சி நாடுகளுடன் அது கொண்ட உறவில் கடும் விளைவுகளை இனி எதிர்நோக்க நேரலாம்.
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்
அதிபர் ரணில் விக்கிரமசிங்கா பதவியேற்று ஒருசில மணித்தியாலங்களுக்குள், அதாவது யூலை 22-ம் திகதி அதிகாலை, காலிமுக ஆர்ப்பாட்டம் சிதறடிக்கப்பட்டது. அதிபர்-செயலக வளவில் ஆயுதம் ஏந்தாமல் அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் செய்தோர் காவல்துறையின் அதிரடிப் பிரிவினராலும், பாதுகாப்பு படையினராலும் சிதறடிக்கப்பட்டனர். குடியாட்சி நெறிக்கு மாறான முறையில் அவசரநிலை புகுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தலையாய பங்கு வகித்தோர் கைதுசெய்யப் பட்டார்கள்.
“காலிமுகத் திடலில் இடம்பெற்ற மனித உரிமை மீறலைக் கண்டு ஐ. நா. மனித உரிமை மன்றின் இலங்கை தொடர்பான மையக் குழுமம் அதிர்ச்சி அடைந்துள்ளது. மனித உரிமைகளுக்கும், சட்ட ஆட்சிக்கும் முழுமதிப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கின்றது” என்று அமெரிக்காவும் மையக் குழுமமும் அறிவித்தன.
யூலை 22-ம் திகதி சட்டத்துக்கு மாறான முறையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்படுவதற்கு முன்னர், அதாவது யூன் மாதம், அமைதிவழியில் குழுமும் சுதந்திரம் பற்றிய சிறப்பு அறிக்கையாளர் மனித உரிமை மன்றத்தின் 50-ம் அமர்வில் ஓர் அறிக்கையை முன்வைத்தார். அமைதிவழியில் குழுமும் சுதந்திரத்தை மீறி ஆர்ப்பாடக்காரர்களை காவல்துறை அடிக்கடி கைதுசெய்து வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
முடிவுரை
போரின் இறுதிக் கட்டத்தில் மனித உரிமைகளும், மனிதபிமானச் சட்டமும் பாரதூரமான முறையில் மீறப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கைக்கு வெளியே வைத்து விசாரிக்கும் திட்டத்தை முன்னெடுத்துச்செல்ல மையக் குழுமமும், அதனை ஆதரிக்கும் ஐ. நா. மனித உரிமை மன்ற அங்கத்துவ நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.
போர் முடிந்த பிறகு மனித உரிமை நிலைவரம் தொடர்ந்தும் சீரழிந்து வருவதை அக்குடியாட்சி நாடுகள் கண்காணித்து வருகின்றன. ஆதலால் மேற்படி நட்புநாடுகளுடன் இலங்கை கொண்ட உறவு மேம்பட முடியாவாறு பாதிக்கப்பட்டுள்ளது.
போர் முடிந்த பிறகு நம்பகமான, வெளிப்படையான மீளிணக்கப் படிமுறை ஒன்றை இலங்கை அரசு மேற்கொள்வதற்கு ஏதுவாகச் செயற்பட ஐ. நா. முன்வந்தது. ஐ. நா.வின் பங்கு தொடர்பாக இலங்கை அரசு இராசதந்திர வழியில், உறுதியான செயல்நோக்குடன் செயற்படத் தவறியது. அதனால் விளைந்த பாதிப்புகளில் இலங்கை அரசு தற்பொழுது கரிசனை கொண்டுள்ளது என்பதில் ஐயமில்லை.
___________________________________________________________________
Dr. S.W. Premaratne, Post-War Reconciliation Process: Human Rights violation,
The Island, Colombo, 2022-08-10,
translated by Mani Velupillai, 2022-08-13.
https://island.lk/post-war-reconciliation-process-human-rights-violation/
No comments:
Post a Comment