போருக்குப் பின் முஸ்லீங்கள்

அஹ்மெட் சஹீட்

சமய - நம்பிக்கை சுதந்திரம் குறித்த ஐ. நா. சிறப்பு அறிக்கையாளர்

“Muslims in Post-War Sri Lanka: Repression, Resistance and Reform”

நூல் வெளியீட்டில் ஆற்றிய உரை


பின்னடைவுகள்


இலங்கையில் இடம்பெற்றுள்ள பின்னடைவுகளை இப்படி வரிசைப்படுத்தலாம்:


  1. சட்ட ஆட்சிக்கு தடங்கல் விளைவித்தல்

  2. சுதந்திர நிறுவனங்களை கட்டுப்படுத்தல்

  3. மனித உரிமைகளை மட்டுப்படுத்தல்

  4. சில சிறுபான்மை சமூகங்கள் மீது இடைவிடாது காழ்ப்பும் வன்முறையும் மூட்டுதல்

  5. குற்றவாளிகள் என்றென்றும் தண்டனைக்கு உள்ளாகாமல் தப்புதல்

  6. மாறுகால நீதிப்படிமுறையை முன்னகர்த்தாமல் இருத்தல்


போரை அடுத்து சர்வதேய சமூகம் பின்வரும் விடயங்களைக் கருத்தில் கொண்டு இலங்கையுடன் இணைந்து செயற்பட்டது: 


  1. மீளிணக்கத்தை மேம்படுத்தல்

  2. ஆட்களின், அமைப்புகளின் செயல்திறனைப் பெருக்குதல்

  3. மாறுகால நீதிப்படிமுறைக்குத் துணைநிற்றல்


மனித உரிமை மீறல்கள்


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணையத்தின்  (LLRC-யின்) வரம்புக்கு உட்பட்ட காலப்பகுதியில் இழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள், அவற்றோடு தொடர்புடைய குற்றங்கள் குறித்து 2015ல் ஐ. நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் மேற்கொண்ட புலனாய்வை இங்கு நாம்  எடுத்துக்காட்டலாம். 


அடுத்தடுத்து இயங்கிய அரசாங்க ஆணையங்கள் உண்மையை நம்பத்தகுந்த முறையில் நிறுவவுமில்லை; பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவுமில்லை; மாறாக, மனித உரிமை மீறல் குறித்த வழக்குகள் தொடர்பான புலன்விசாரணைகளுக்கும், நீதிவிசாரணைகளுக்கும் அவை தடங்கல் விளைவித்துள்ளன.  


உண்மை-மீளிணக்க ஆணையம், சிறப்பு நீதிப் பொறிமுறைகள் என்பவற்றை தோற்றுவிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் என்பவற்றின் தகுநிலை, தொழிற்பாடு குறித்து மேன்மேலும் வினாக்கள் எழுகின்றன. 


முஸ்லீங்களை எதிரிகட்டல்


2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை தொடர்ந்து இனவாரியான பதற்றம் எழுந்தது. முஸ்லீங்கள் மீதும், பள்ளிவாசல்கள் மீதும் இலக்கு வைக்க்கப்பட்டது. அவர்களால் தேசிய ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் ஆபத்து விளையும் என்று ஊடகங்களும் சமய, அரசியல் தலைமைகளும் முழங்கி வந்துள்ளன. முஸ்லீங்கள் பல்லாண்டுகளாக வடுவுக்கு உள்ளாக்கப்பட்டு வந்த்துள்ளார்கள்.  


இந்த நாட்டின் சிறுபான்மை மதத்தவர்கள் தொடர்பான மனித உரிமை நிலைவரத்தை தடமொற்றி, அறிக்கையிடுவதே எனக்கிட்ட கடன். சிறுபான்மையோர் மீது காழ்ப்பும் வன்முறையும் மூட்டும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும்படியும், சமய-இனக்குழும பேதங்களை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியும் அரசாங்கத்திடம் திரும்பத் திரும்ப வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  


பாதகமான சூழ்நிலை


2019ல் இங்கு நான் வந்தபொழுது, நீண்டகால மோதலை அடுத்து எழுந்த இந்த மாறுகாலப்பகுதியில் பதற்றம் ஓங்குவதையும், அந்தரம் தொடர்வதையும், சட்டதிட்ட கட்டமைப்புகள் பெரும்பான்மை இனத்துக்கு சலுகை அளிப்பதையும், சிறுபான்மை இனங்களுக்கு சட்டப்படி சரிநிகரான பாதுகாப்பு கிடைக்கும் வாய்ப்பினை அவை கெடுப்பதையும் கண்டு கவலைப்பட்டேன். 


பின்வரும் விடயங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அரசாங்கத்திடம் நான் வேண்டிக்கொண்டேன்:


  1. கடந்தகால, நிகழ்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்தல்

  2. காழ்ப்பு மூட்டும் கட்டமைப்பை தகர்த்தல் 

  3. பாரபட்சமின்றி அனவருக்கும் சரிநிகர் நீதி கிடைக்க வகைசெய்தல்

  4. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குதல்

  5. சமய விடயங்களில் இழைக்கப்படும் பல்வேறு குற்றங்கள் குறித்து தண்டனைச் சட்டக்கோவையில் உள்ள ஏற்பாடுகளை மீட்டியமைத்தல்

  6. காழ்ப்பு மூட்டும் வாதங்களை எதிர்கொள்வதில் சமயத் தலைவர்கள் ஆற்றவேண்டிய பொறுப்புவாய்ந்த பணியை அவர்கள் புரிந்துகொண்டு சமூகங்களுக்கிடையே நம்பிக்கையும் கலந்துரையாடலும் மேம்படப் பாடுபடுவதை உறுதிப்படுத்தல் 

  7. சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வும் சகிப்புணர்வும் பால்மைச் சமத்துவமும் நட்பும் ஓங்குவதற்கு உகந்த கல்வித் திட்டங்களை வகுத்தல்


அதற்கு மாறாக, 30/1ம் இலக்க மனித உரிமை மன்றத் தீர்மானத்திலிருந்து 2020 மாசிமாதம் அரசாங்கம் பின்வாங்கியது. அதனால் மீளிணக்கமும், பொறுப்புக்கூறல் படிமுறையும் பின்னடைந்தன. 


குடிமைச் சுதந்திர வெளி


இலங்கையில் குடிமைச் சுதந்திர வெளி குறுகி வருகிறது. குடிமைச் சமூக அமைப்புகள், பாதிக்கப்பட்டோர் குழுமங்கள், மனித உரிமைவாதிகள், குறிப்பாக சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளுக்காக வாதாடுவோர் மேன்மேலும் வேவுக்கும் சல்லடைக்கும் உள்ளாக்கப்படுவது உள்ளத்தை உறுத்துகிறது. 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து பொறுப்புக்கூறல் குறித்தும், காணாமல் போக்கடிக்கப்பட்டோர் குறித்தும் ஆவணங்கள் தயாரிப்பதிலும், வழக்காடுவதிலும் ஈடுபட்ட பற்பல அமைப்புகளுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் சென்று வந்துள்ளார்கள். அத்தகைய அமைப்புகளைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கூப்பிட்டு விசாரித்துள்ளார்கள்.  


கொள்ளைநோய்


தற்போதைய கொள்ளைநோயினால் மனித உரிமைகள் மேன்மேலும் பின்னடைந்துள்ளன. சில சமூகத்தவரின், குறிப்பாக முஸ்லீங்களின் சமய, பண்பாட்டு மரபுகளையும், முறைமைகளையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மீது கட்டாய தகனம் திணிக்கப்பட்டது. உடல்களைப் புதைப்பதால் கொள்ளைநோய் ஆபத்து அதிகமாகும் என்பதற்கு உறுதியான மருத்துவ, அறிவியற் சான்று கிடையாத நிலையில் அவ்வாறு செய்யப்பட்டது.    


கருத்து மாறுபாட்டை குற்றமாக நோக்கல்


மாறுபட்ட கண்ணோட்டங்களுக்கும், அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பான விமர்சனங்களுக்கும் குற்றங்கள் என்று முத்திரை குத்தி ஒடுக்குவதற்கு பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அதன் பெறுபேறாக நூற்றுக்கணக்கானோர், பெரும்பாலும் சிறுபான்மை இனத்தவரும், சமயத்தவரும், மனித உரிமைவாதிகளும் சட்டவாளர்களும் விதிமுறையின்றிக் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 


சட்டவாளர் ஹீஜாஸ் ஹிஸ்புல்லா


சட்டவாளரும் கவிஞரும்  


முஸ்லீங்கள் மீது காழ்ப்பும் வன்முறையும் மூட்டும் போக்கு ஓங்குவதை எதிர்த்து வாதாடிய பேர்போன சட்டவாளரராகிய ஹீஜாஸ் ஓமர் ஹிஸ்புல்லா 2020 சித்திரைமாதம் முதல் தடுப்புக்காவலில் இருந்து வருகிறார். அவரது மனித உரிமைப் பணிக்காகவும், சட்டப்பணிக்காகவும் அவரை மிரட்டும் நோக்குடன் அவர்மீது ஐயத்துக்கிடமான பயங்கரவாத குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரைக் கொடுமைப்படுத்தி வருகிறார்கள். அதிகாரபூர்வமான குற்றச்சாட்டு எதுவும் சுமத்தப்படாமல் ஓராண்டுக்கும் மேலாக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை அவர் தலைமையில் இயங்கிய கல்வி அறக்கொடை ஒன்றில் முறைகேடு நடந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டில் அவரைத் தொடர்புபடுத்துவதில் இப்பொழுது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 


கவிஞர் அனவ் ஜசீம்


பொறுப்புக்கூறல் இல்லை


கடந்தகாலத்தில் சித்திரவதைகள், பலவந்தமாக காணாமல் போக்கடிப்புகள், நீதிமுறை மீறிய கொலைகளில் ஈடுபட்ட ஆட்கள், காவல்துறையினர், பாதுகாப்பு படையினர் ஆகியோரை புலன்விசாரணை செய்யவோ, அவர்கள்மீது வழக்குத் தொடுக்கவோ நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அத்தகைய குற்றங்கள் மறுபடியும் நிகழாவாறு தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.  


போரின்பொழுது படுமோசமான மீறல்களில் ஈடுபட்ட படையினரை வழிநடத்திய படையதிகாரிகளுக்கு உயர் படைப்பதவி அளிக்கப்பட்டுள்ளது. நீதித்துறையை ஜனாதிபதியின் நிறைவேற்றுத்துறை கட்டுப்படுத்தி வருகிறது. அரசியல்யாப்புக்கான 20வது திருத்தத்தின்படி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரையும் ஜனாதிபதியே தங்குதடையின்றி நியமித்து வருகின்றார். பொறுப்புக்கூறல், நீதி, தேசிய பரிகார படிமுறை என்பவற்றின் பொருளை இலங்கை ஆட்சியாளர் புரிந்துகொள்ளும் விதத்துக்கு இவை ஒருசில எடுத்துக்காட்டுக்கள் ஆகலாம்.  


“தீவிர வன்முறைச் சமயக் கருத்தியலின் மும்முரத்தை தணிக்கும் ஒழுங்குவிதிகள்”


இவ்வாண்டில் புகுத்தப்பட்ட “தீவிர வன்முறைச் சமயக் கருத்தியலின் மும்முரத்தை தணிக்கும் ஒழுங்குவிதிகள்” எமது கரிசனையப் பெரிதும் ஈர்த்துள்ளன. இவை பயங்கரவாத தடுப்புச் சட்ட ஏற்பாடுகளை விரிவுபடுத்தி வரையப்பட்டவை. சர்வதேய மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் கடப்பாடுகளுக்கு மாறானவை. பின்வரும் விடயங்கள் எம் உள்ளத்தை உறுத்துவது குறித்து நானும் ஐ. நா. நிபுணர்களும் அரசாங்கத்துக்கு ஆவணிமாதம் ஒரு மடல் அனுப்பினோம்:  


  1. “தீவிர வன்முறைச் சமயக் கருத்தியலின் மும்முரத்தை தணிக்கும் ஒழுங்குவிதிகள்” நடைமுறைப்படுத்தப்படுவது

  2. பேச்சு-சமய-நம்பிக்கை உரிமைகள்-சுதந்திரங்கள் மீறப்படுவது

  3. இன, சமய, சமூக குழப்ப வன்முறை உண்டாக்குவோரை அல்லது உண்டாக்குவோராக ஐயுறப்படுவோரை விசாரணையின்றி கட்டாய “மறுவாழ்வு”க்கு உட்படுத்துவதற்காக உரிய சட்டப் படிமுறை மீறப்படுவது

  4. விதிமுறை மீறிய கைது மேற்கொள்ளப்படுவது


பெண்கள்


பெண்களின் உரிமைகள் குறித்தும் இலங்கை நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. 2017 முதல் 2021 வரையான காலப்பகுதிக்குரிய தேசிய மனித உரிமை நடவடிக்கைத் திட்டத்தை அரசாங்கம் திட்பமான முறையில் முன்னெடுத்துச் செல்லவேண்டியுள்ளது. அதில் பெண்களின் உரிமைகள் தனி அத்தியாயமாக இடம்பெற்றுள்ளது. அத்துடன் 2016 முதல் 2020 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பால்மை-பாலியல் வாரியான வன்முறை பற்றிய கொள்கைக் கட்டுக்கோப்பினையும் தேசிய நடவடிக்கைத் திட்டத்தையும் முன்னகர்த்த வேண்டியுள்ளது. 


சமய-இனக் குழுமங்கள் பாரபட்சத்துக்கும் வன்முறைக்கும் உள்ளாகாவாறு பாதுகாக்கப்பட வேண்டும். அதேவேளை ஒரு சமூகத்தின் செயற்பாட்டினால் அல்லது நம்பிக்கையினால் அச்சமூகத்தைச் சேர்ந்த எவரது உரிமைகளும் மீறப்படலாகாது.  உலகளாவிய முறையில் சிறுபான்மைக் குழுமங்களின் உள்ளேயே சில சிறுபான்மைத் தரப்புகள் பலவிதமான பாரபட்சங்களுக்கு அல்லது ஊடறுப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன.  சமய சமூகங்களின் உள்ளேயே மாதரும் சிறுமியரும் அத்தகைய மீறல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மாதர், சிறுமியர், நெகிழ்பாலுறவினர் ஆகியோரின் மனித உரிமைகளை மீறுவதற்கு  என்றுமே சமய நம்பிக்கைகளையோ பண்பாட்டு மரபுகளையோ பயன்படுத்தலாகாது. 


இந்நூலில் மிகவும் நலம்பயக்கும் கூறுகள் காணப்படுகின்றன. முஸ்லீம் பெண்களின் பட்டறிவுகள் பற்றியும், முஸ்லீம் திருமணம் மற்றும் மணவிலக்குச் சட்டத்தை கருத்தூன்றிச் சீர்திருத்தும் வாய்ப்பினைப் பற்றியும் நபீலா இக்பால், அமீர் வைஸ் ஆகிய இருவரும் முன்வைக்கும் பல்துறை ஆய்வு  என்னை வெகுவாக ஈர்த்துள்ளது. அமைதி, பாதுகாப்பு என்பவற்றை மேம்படுத்துவதில் பெண்கள் வகிக்கும் பங்கு குறித்தும், அனைவரையும் அரவணைத்து வளம்பேணும் விருத்தி இலக்குகளை எய்துவது குறித்தும் உலகின் கவனம் பெரிதும் ஈர்க்கப்படும் இவ்வேளையில் இச்சீர்திருத்த முன்மொழிவுகள் வெளிவந்துள்ளன. முஸ்லீம் திருமணம் மற்றும் மணவிலக்குச் சட்டத்தை முற்றிலும் சீர்திருத்துவதற்கு இவ்வாண்டு சித்திரைமாதம் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக அறிகின்றேன்.  


ஆட்சட்ட சீர்திருத்தம்


பேராசிரியர் பிரான்சிஸ் ரதே குறிப்பிடும் “தீய வழக்கங்கள்,” குறுமீறல்கள்,  ஆண்கள் மட்டுமே காதிகளாக விளங்குதல் என்பவற்றிலிருந்து முஸ்லீம் பெண்களைப் பாதுகாத்து நீதிபாலிக்கும் ஏற்பாடுகள் உத்தேச சீர்திருத்தங்களுள் அடங்கியுள்ளன. இத்தகைய சீர்திருத்தங்களுக்காக நாம் 60 ஆண்டுகளாகப் போராடி வந்துள்ளோம். இந்த வாய்ப்பினை நாம் தவறவிடக் கூடாது. மேற்படி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்படியும், சமய-நம்பிக்கையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரிநிகர் உரிமையும் சுதந்திரமும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும்படியும் முஸ்லீம் தலைவர்களிடமும், அரசில்வாதிகளிடமும் நான் வேண்டிக்கொள்கின்றேன்.


பெண்களுக்கு எதிரான பாரபட்சங்கள் அனைத்தையும் ஒழிப்பதற்கான ஐ. நா. குழுவுடன் இணைந்து முஸ்லீம், கண்டி, தேசவழமை உட்பட ஆட்சட்டங்கள் அனைத்தையும் சீர்திருத்தும்படியும், மாதருக்கும் சிறுமியருக்கும் பாரபட்சம் காட்டும் ஏற்பாடுகள் அனைத்தையும் அகற்றும்படியும் இலங்கை அரசாங்கத்திடம் நான் கேட்டுக்கொள்கின்றேன்.   


தொடர்ந்து பாடுபடுக!


இலங்கையின் மனித உரிமை நிலைவரத்தை செவ்வனே கண்காணித்து, சுறுசுறுப்பாக அறிவித்துவரும் குடிமைச் சமூகத்தின் பணியையும், உறுதிபட எண்பிக்கப்பட்ட அவர்களின் வல்லமைகளையும் இத்தால் நான் மெச்சி அமைகின்றேன். உலகளாவிய மனித உரிமை இயக்கத்துடனும் பொறிமுறைகளுடனும் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்படி அவர்களை நான் ஊக்குவிக்கின்றேன். 


Muslims in Post-War Sri Lanka எனும் தலைசிறந்த இந்நூலின் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், கட்டுரையாளர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டி விடைபெறுகின்றேன். 

________________________________________________________________________

Dr. Ahmed Shaheed, UN Special Rapporteur on Freedom of Religion or Belief, Talking Points – Sri Lanka Muslims Event, Colombo Telegraph, 2021-10-07, translated by Mani Velupillai, 2021-10-10.

https://www.colombotelegraph.com/index.php/talking-points-sri-lanka-muslims-event

No comments:

Post a Comment