அந்தணரும் ஆகமமும்


2019ல் பேராசிரியர் சச்சிதானந்தம் சுகிர்தராஜா எழுதிய The Brahmin and his Bible என்னும் நூல், 1820ல் ராம் மோகன் ராய் (1772-1883) வெளியிட்ட The Precepts of Jesus என்னும் பனுவலின் திறனாய்வாகும். தமது முதலாவது அத்தியாயத்தின் முதலாவது வரியிலேயே ராயின் தற்கால முக்கியத்துவத்தை பேராசிரியர் சுகிர்தராஜா இடித்துரைத்துள்ளார்:

“இன்று ஊடக சூழ்ச்சித்திறம் கொண்டும், நயந்துவக்கும் அடிவருடிகளின் புகழாரம் கொண்டும் இந்தியப் பிரதம மந்திரி நரேந்திர மோதி ஓர் உலகளாவிய காவிய நாயகனாக ஏற்றிப் போற்றப்படுகின்றார். ஆனாலும், அவருக்கு முன்னரே தோன்றிய ராம் மோகன் ராயே உண்மையில் முதலாவது உலகளாவிய இந்தியர்!”  

ராய் இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவர். அப்பொழுது இந்திய விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை. சமூக, சமய சீர்திருத்தமே அவர் நாட்டத்தை ஈர்த்தது. இந்துக்களும், இஸ்லாமியரும் யேசு போதித்த விழுமியங்களைத் தேர்ந்து தெளிந்து கைக்கொள்வது, அவர்களுக்கு நலம் பயக்கும் என்பதே என்றென்றும் அவர் நிலைப்பாடாக இருந்து வந்தது.

இந்து மனைவியர் உடன்கட்டையேறும் கொடுமையை ஒழிப்பதில் ராய் தலையாய பங்கு வகித்தார். சமூக சீர்திருத்தவாதி என்ற வகையில் மாதருக்கு சொத்துரிமை வேண்டியும், கல்விச் சீர்திருத்தம் கோரியும், ஊடக சுதந்திரம் நாடியும் அவர் போராடி வந்தார். அதற்காக வங்காள, பார்சி, ஆங்கில, வடமொழிகளில் அவர் கட்டுரைகளையும், மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டு வந்தார். 


ராய் (1772-1883), நாவலர் (1822-1879), வள்ளலார் (1823-1874), அனகாரிக தருமபாலா (1864-1933) ஆகிய நால்வரும் சமூக, சமய சீர்திருத்தங்களில் ஈடுபட்டவர்கள். அனகாரிக தருமபாலா ஆரிய பெளத்த சிங்கள மறுமலர்ச்சியிலும், தேசிய அரசியலிலும் கருத்தூன்றி ஈடுபட்டார். நாவலரும், வள்ளலாரும் தம்மிடையே மோதிக்கொண்டாலும், சைவத்தையும் தமிழையும் முன்னெடுக்க முயன்றார்கள். 


ராயின் நிலைப்பாடு பெரிதும் வேறுபட்டது. அவர் இந்துசமய வரம்பினுள் தன்னை குறுக்கிக் கொள்ளவில்லை.  நாவலரையும், தருமபாலாவையும் போல் கிறீஸ்தவத்தை எதிர்ப்பதில் அவர் ஈடுபடவில்லை. யேசுவை ஓர் ஆசியக் கண்டத்தவராகவே அவர் கொண்டாடினார். இந்து, இஸ்லாமிய சமயத்தவர்களுக்கு கிறீஸ்தவ விழுமியங்கள் என்றென்றும் நலம் பயக்கும் என்பதே அவர் நிலைப்பாடு. 

யேசுவின் வாக்குகளை தேர்ந்து தெளிந்து, அவற்றை கிறீஸ்தவ விழுமியங்களாக அவர் முன்வைத்தார். ஐரோப்பியரின் நாகரிகம், பண்பாடு, கல்வி என்பவற்றால் இந்து, இஸ்லாமிய மக்கள் பயனடைந்தது போலவே, யேசுவின் வாக்குகளால் அவர்கள் பயனடைய முடியும், பயனடைய வேண்டும் என்பதே ராயின் எதிர்பார்ப்பு. 

1902ல் பொன். இராமநாதன் (1851-1930) வெளியிட்ட An Eastern Exposition of the Gospel of Jesus according to St. John என்னும் பனுவலில், யேசுவின் வாக்குகளை யோக போதனைகளாகக் கொள்ளமுடியும் என்று தெரிவித்தமை கவனிக்கத்தக்கது.

இந்தியாவின் இறைமை முகலாயர் வசமிருந்து வெள்ளையர் வசமாகுந் தறுவாயில் உதித்தவர் ராய். கண்மூடித்தனமான இறைப்பற்றிலும், சமயச் சடங்குகளிலும், மூடநம்பிக்கைகளிலும் மூழ்கியிருந்த இந்தியர்களிடம், தமது சுயேச்சையை நிலைநாட்டும் வல்லமை இல்லையே என்று அவர் உள்ளம் பதைத்தது. ஒழுக்கமும் நியாயமும் பொதிந்த யேசுவின் வாக்குகள் அவர்களை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் என்று அவர் நம்பினார். பேராசிரியர் சுகிர்தராஜா சுட்டிக்காட்டுவது போல், “படையெடுத்து வந்தவர்கள் கொண்டுவந்த யேசுவின் வாக்குகளைக் கொண்டே அவர்களை இந்துக்களாலும், இஸ்லாமியராலும் எதிர்கொள்ள முடியும்” என்று கருதினார். 

யேசுநாதரின் பேர்போன “மலைப் பிரசங்கம்,” நீதிக்கதைகள் உட்பட அவரது வாக்குகளைத் தேர்ந்து தெளிந்து சல்லடைபோட்டு எழுதப்பட்ட பனுவலாகவே The Precepts of Jesus தென்படுகிறது. தொன்மங்கள், அற்புதங்கள், வைதீக போதனைகள் போல் புலப்பட்டவற்றை ராய் தவிர்த்துள்ளார். அதே விதமாக இந்துக்களின் வேதாகமங்களை சல்லடைபோட்டால், அவையும் யேசுவின் வாக்குகளும் ஒன்றை ஒன்று நிகர்க்கும் என்று முழங்கினார்.   

யூத-கிறீஸ்தவ தொன்மம், உரோமப் பேரரசு, விவிலியம், யேசுவின் அவதாரம், சிலுவையேற்றம், உயிர்ப்பு, அற்புதங்கள்… என்பவற்றைப் புகட்டுவதில் புலனைச் செலுத்திய கிறீஸ்தவ சமய பரப்புரைஞர்களுக்கு ராய் புத்திமதி கூறத் துணிந்தபொழுது, “ஓர் அந்தணர் எமக்குப் புத்தி கூறுவதா?” என்று அவர்கள் வெகுண்டெழுந்தார்கள். 

1820ல் The Precepts of Jesus வெளிவந்தபோது, ராயை “ஓர் அஞ்ஞானி” என்றும், அப்பனுவலை “ஓர் எரிகுண்டு” என்றும், “கிறீஸ்தவத்தின் உயிர்மையத்தை நோக்கி எய்யப்பட்ட கொலையம்பு” என்றும் கிறீஸ்தவ சமய பரப்புரைஞர்கள் சாடினார்கள். மறுபுறம், சக அந்தணர்கள் அவரை “நெறிதுறந்தவர், மதம்மாறி, வேதாகமங்களை காட்டிக்கொடுத்தவர், வெள்ளையரின் ஊதுகுழல்…” என்றெல்லாம் தூற்றினார்கள். 

இந்தியாவில் கிறீஸ்தவ சமய பரப்புரைஞர்களுக்கும் ராய்க்கும் இடையே மூண்ட சமரைவிட, இலங்கையில் அவர்களுக்கும் நாவலருக்கும்  இடையே மூண்ட போர் மிகவும் மும்முரமானது. 1923ல் ஜோன் எச். மார்ட்டின் வெளியிட்ட “யாழ்ப்பாணக் குறிப்புகள்” என்னும் அரிய தொகுப்பு அதற்குச் சான்று பகர்கின்றது: 

 “ஆறுமுகவர் எமது சமய பரப்புரைஞர்களைப் பின்பற்றி பழம்பெரும் தமிழ் நூல்களையும் பாடநூல்களையும் தேர்ந்து தெளிந்து தொடர்ந்து வெளியிட்டார். இந்து சமயத்தையும் கிறீஸ்தவ சமயத்தையும் உடன்படுத்தியும் முரண்படுத்தியும் கலப்படம் செய்தார். வேட்கையும் திறமையும் கொண்ட அந்த இயக்கத்தின் உச்சக்கட்டம் எனும்படியாக “சிவ தூஷண பரிகாரம்” 1854ல் வெளிவந்தது. அதன் ஆசிரியர் ஆறுமுகவரே என்பதில் ஐயமில்லை. திருவிவிலியத்தை அவர் கருத்தூன்றிக் கற்றுத் தேர்ந்தவர் என்பதை “சிவ தூஷண பரிகாரம்” வியக்கத்தக்க முறையில் உறுதிப்படுத்துகிறது. யூதர்களின் எண்ணங்களும் சடங்குகளும் சைவர்களின் எண்ணங்களையும் சடங்குகளையும் போன்றவை என்றும், அவற்றின் தோற்றுவாய் சாலவும் தெய்வீகமானது என்றும், அவற்றை ஏற்றிப்போற்றுவதால் பயன்கிடைக்கும் என்றும் காட்டுவதற்கு ஆறுமுகவர் கெட்டித்தனமாக முயன்றுள்ளார். தந்திரமான முறையில் எங்கள் புனிதநூல்களை ஆதாரமாகக் கொண்டு இந்துக்களின் நெறிமுறை, தவம், யாத்திரை, இலிங்க வழிபாடு, முழுக்கு, சடங்கு வகைகளை அவர் நியாயப்படுத்தியுள்ளார்” (Rev. E. J. Robinson, Hindu Pastors, John H. Martyin, Notes on Jaffna).    

ஏனைய அறிவார்ந்த இந்தியர்களைப் போலவே ராயும் ஆங்கிலேயரின் கல்விமுறைமை, அரசியல்-நிருவாக முறைமை, தனிமனித ஆளுமை, புறவய அணுகுமுறை… என்பவற்றின் தாக்கத்துக்கு உள்ளானவர். அந்த வகையில் முகலாயரின் கொடுங்கோன்மையிலிருந்து இந்தியாவை விடுவித்தவர்களாகவே அவர் பிரித்தானியரை நோக்கினார். இந்தியாவைக் கைப்பற்றியவர்களாகவோ, கட்டியாள்பவர்களாகவோ பிரித்தானியரை அவர் நோக்கவில்லை.

“மகத்தான பிரித்தானியாவுடன் கொண்ட உறவினால் இந்திய பாமரமக்கள் நன்மை அடைவார்கள்” என்று அவர் உளமார நம்பினார். எனவே தமது இளமைக்கால நிலைப்பாட்டை மாற்றி, இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று விரும்பினார். அதே விதமாகவே இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சி நீடிப்பதை பொன் இராமநாதன் விரும்பியதாக அவர்மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. 1931ல் இலங்கையில் சர்வசன வாக்குரிமை புகுத்தப்பட்டபோது, Casting pearls before swine (குரங்கின் கையில் பூமாலை) என்று அவர் கருத்துரைத்ததாகத் தெரிகிறது.

அன்றைய ராயின் கருத்துக்கள் சிலவற்றுடன் இன்றைய இந்துத்துவர்களின் கருத்துக்கள் ஒத்திருப்பதை பேராசிரியர் சுகிர்தராஜா சுட்டிக்காட்டியுள்ளார்: 

  1. இந்தியாவின் தொன்மையும் பன்மரபுகளும் பெருமை வாய்ந்தவை

  2. இந்துக்களே இந்தியாவின் ஆதிக்குடிகள்

  3. இந்துக்கள் ஏனைய சமயத்தவரை விட சகிப்புத்தன்மை மிகுந்தவர்கள்

  4. இந்துக்கள் மதம்மாறக் கூடாது

இவை மேலோட்டமான ஒற்றுமைகள் மாத்திரமே. ராயின் ஆழ்ந்து பரந்து விரிந்த புலமைக்கு எட்டிய சங்கதிகள் அவை. அதேவேளை அவர் இந்துத்துவத்துடன் முரண்படும் விதங்களும் கவனிக்கத்தக்கவை:

  1. “இந்துஸ்தான்” என்பது சமயம்சார்ந்த சொல் அல்ல, ஆள்புலம் சார்ந்த சொல்

  2. “ஆரியவர்த்தம்” என்ற மனுவின் சொல்லாட்சி புரியாத, தெளிவற்ற ஒன்று

  3. உலகமும் மானுடமும் எல்லைகளால் கூறுபட்டவை ஆகா

  4. இஸ்லாமியரின் தனியிறை வழிபாடும், இறையியலும் மெச்சத்தக்கவை

  5. இந்து, இஸ்லாமிய, கிறீஸ்தவ விழுமியங்கள் ஒன்றை ஒன்று மேவுபவை

  6. உலகளாவிய விழுமியங்கள் இந்தியாவுக்கு உதவும்.

வெவ்வேறு சமயங்கள் மாத்திரமல்ல, வெவ்வேறு இயல்களும், நெறிகளும், வாதங்களும் கூட உலகளாவிய மானுட விழுமியங்களால் ஒருங்கிணைய வல்லவை. மானுட வரலாறு (மெய்யியல் - அறவியல் வரலாறு) அதையே உணர்த்துகின்றது. அந்த வகையில் யேசுவின் போதனைகளைப் புகட்ட வந்த வீரமாமுனிவரால் 1730 வாக்கில் “திருக்குறள்” இலத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டமை ஒன்றும் தற்செயலான சங்கதி அல்ல என்பது புரிகிறது.  ராம் மோகன் ராய் பிறப்பதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்னரே, குறள் கூறும் விழுமியங்களை மேல்நாடு அறிந்துகொண்டது. மானுட விழுமியங்கள் குறித்த ராயின் நிலைப்பாட்டை அது மெய்ப்பிக்கின்றது. 

யேசுவின் வாக்குகளை ராய் கைக்கொண்டாலும் கூட, வேதங்களே அவரது இறுதிப் பற்றுக்கோடு. வேதங்களை சரிவரக் கையாண்டால், தமது நாட்டவர்கள் தூய, சீரிய இறைநிலை எய்தி இன்புற்று வாழமுடியும் என்று அவர் திடமாக நம்பினார்.  

2019ல் பேராசிரியர் சுகிர்தராஜா T&T Clark வெளியீடாக முன்வைத்த The Brahmin and his Bible என்பது 150 பக்கங்கள் கொண்ட ஒரு குறுநூல். புலமைமொழியில் எழுதப்பட்ட இந்நூல் புலமையாளர்களுக்கு மட்டுமல்லாது, பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அறிவார்ந்த பிறர்க்கும் பயன்படவல்லது.  

மணி வேலுப்பிள்ளை  2021-06-10         

https://www.bestofdocument.com/pdf/the-brahmin-and-his-bible


No comments:

Post a Comment