இலங்கையில் மூடிமறைக்கப்படும்  

பெளத்த தமிழர் வரலாறு  

பி. கே. பாலச்சந்திரன்


மொழி, சமயம், இனம் குறித்து தமிழரும் சிங்களவரும் முன்வைக்கும் மேலோட்டமான வாதங்கள் சுதந்திர இலங்கை அரசியல் அரங்கை குழப்பியடித்துள்ளன. 

பெளத்தம் முற்றிலும் சிங்களவருக்கு மட்டுமே உரிய சமயம் என்று முழங்கி சிங்களவர் பெருமைப்படுகிறார்கள். மறுபுறம், தாங்கள் அப்பழுக்கற்ற இந்துக்கள் என்றும், தமக்கும் சிங்கள ஆதிக்கத்துடன் கூடிய பெளத்தத்துக்கும் தொடர்பில்லை என்றும் தமிழர் சரிநிகராக முழங்குகிறார்கள்.   

தமிழர் பெருகி வாழும் வட, கீழ் மாகாணங்களில் காணப்படும் பழம்பெரும் பெளத்த தலங்கள் சிங்கள-பெளத்த தொன்மையின் எச்சமிச்சங்கள் என்றும்,    ஆகையால் அவை அமைந்துள்ள காணிகள் மீட்கப்பட வேண்டும் என்றும் பெளத்த-சிங்கள தீவிரவாதிகள் வலியுறுத்துகிறார்கள். மறுபுறம், பெளத்த சின்னங்கள் சிங்களவரின் சின்னங்கள் என்பதால், அத்தகைய தொல்லியல் கண்டுபிடிப்புகள் தமது காணி உரிமைக் கோரிக்கைக்கு மாறாக அமையும் என்றும், தமது வாழ்வுக்கு ஆபத்து விளைவிக்கும் என்றும் அஞ்சுகின்றனர் தமிழர்.  

இலங்கையில் சில வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்வேறு தரப்பினர் அவற்றில் கரிசனை எடுத்தனர். அவற்றைப் பாதுகாக்கும் நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. அதனைத் தொடந்து கிழக்கு மாகாணத்தில் பழம்பெரும் தலங்களை முற்றுமுழுதாக ஆய்விட்டு, பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கு அதிபர் கொதாபய ராஜபக்சா 2020ல் பாதுகாப்புச் செயலாளர்  தலைமையில் நடவடிக்கை அணி ஒன்றை அமைத்தார். அது முற்றிலும் சிங்கள-பெளத்தரைக் கொண்ட நடவடிக்கை அணி என்பது கவனிக்கத்தக்கது. 

கொழும்பு பல்கலைக்கழக வரலாறு-அரசறிவியல் துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி ஜிந்தோட்டை பி. வி. சோமரத்தினா “இலங்கை பெளத்த தமிழர்” பற்றிய தமது ஆய்வேட்டில், மேற்படி சின்னங்கள் சிங்களவருக்கு உரியவை என்ற வாதத்துக்கும், அதனால் தமிழர் படும் அந்தரத்துக்கும் நியாயம் இல்லை என்று வலியுறுத்துகிறார். வரலாற்றை சரியான கண்ணோட்டத்தில் நோக்கினால் அது புரியும் என்கிறார். 

கடந்தகாலத்தில் பெரும்பாலான தமிழர்கள் பெளத்தர்களாகவும் விளங்கியதுண்டு. அன்றுதொட்டு இற்றைவரை கைக்கொள்ளப்படும் சிங்கள பெளத்தத்தில் தமிழரின் இந்துசமயக் கூறுகள் பொதிந்துள்ளன. இலங்கையில் என்றென்றும் பண்பாட்டுக் கலப்பு நிலவி வந்துள்ளது.   காலங்காலமாக இந்து, பெளத்த சமயத்தவர் இங்கு அமைதிகாத்து கூடிவாழ்ந்ததும் உண்டு, முட்டி மோதியதும் உண்டு. 

தமது நம்பிக்கைகளையும் வழமைகளையும் அவர்கள் பகிர்ந்து கொண்டபடியால், என்றுமே அவர்களிடையே திட்டவட்டமான பிளவு காணப்படவில்லை. எடுத்துக்காட்டாக, இந்திய வழிவந்த இலங்கை மன்னர்கள் அகத்தில் செயலளவில் இந்துசமயத்தைக் கைக்கொண்டு, புறத்தில் பெயரளவில் பெளத்தராக விளங்கி, தமது அரசில் பெளத்தத்தை உறுதிபடக் காத்து நின்றார்கள். 1739 முதல் 1815 வரை கண்டியை ஆண்ட நாயக்க மன்னர்கள் இந்து சமயத்தவர்கள். எனினும் அவர்கள் பெளத்த சமயத்தைக் காத்தபடியால், பெரும்பான்மையோரான பெளத்த சிங்களர் அவர்களை ஏற்றுக்கொண்டார்கள்.   

பிரித்தானியர் வரமுன்னர் இங்கு இன-சமய வாரியான பதற்றம் நிலவியதற்கு எதுவித சான்றும் இருப்பதாகத் தெரியவில்லை  என்கிறார் கே. எம். டி சில்வா எனும் வரலாற்றறிஞர். ஒல்லாந்தர் காலத்தில் சாதிப்பிளவுகள் மட்டுமே நிலவின, தமிழர்-சிங்களவர் பிளவு நிலவவில்லை என்கிறார் கத்தோலிக்க வரலாற்றறிஞர் வி. பேர்னியோலா. 1871 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை குடித்தொகை கணிக்கப்பட்டு வந்துள்ளது. 1931ல் வயதுவந்தோருக்கான வாக்குரிமை புகுத்தப்பட்டது. அப்புறம் அரசியல் ஆதரவு திரட்டுவதற்கு இன அடையாளத்தை பயன்படுத்தும் உத்தி தோன்றியது என்கிறார் சோமரத்தினா.  

ஈழநாட்டு பெளத்தத்துக்கும் தமிழ்நாட்டு பெளத்தத்துக்கும்  இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். தமிழ்நாட்டில் மூன்று காலகட்டங்களில் பெளத்தம் மேலோங்கியது: முதலாவது காலகட்டம் (3ம் நூற்றாண்டு முதல் 7ம் நூற்றாண்டு வரை); இரண்டாவது காலகட்டம்  பல்லவர் காலம் (கி. பி. 400 முதல் 650 வரை); மூன்றாவது காலகட்டம் சோழர்காலம் (9 ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரை). 

அசோக மாமன்னன் பிறப்பித்த 2ம், 5ம், 13ம் இலக்க ஆணைகளில் சேர, சோழ, பாண்டிய, மலையாள அரசுகளும், இலங்கையைச் சேர்ந்த தம்பபண்ணியும் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கெல்லாம் பெளத்த சமயத்தூதுவர்களை அவன் அனுப்பிவைத்தான். தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர் மற்றும் பிற மாவட்டக் குகைகளில் பிராமி எழுத்தில் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.  அசோகனின் பெளத்த சமயத்தூதுவர்களே பிராமி எழுத்தை தென்னகத்துக்கு கொண்டுவந்தனர். அசோகனின் மைந்தன் மகிந்த தேரர் இலங்கையை வந்தடைய முன்னர் தமிழ்நாட்டில் அவர் பெளத்த நெறியைப் பரப்பியதற்கு சான்றுண்டு. ஒரு வட இந்திய துறையிலிருந்து கடல்வழியாகப் புறப்பட்ட மகிந்தர் தென்னகத்து காவிரிப்பட்டினத்தை அடைந்து, அங்கிருந்து யாழ்ப்பாணத்து சம்புத்துறையை வந்தடைந்தார். அசோகனின் அரசவைக்கு இலங்கை மன்னன் தேவநம்பியதீசன் அனுப்பிவைத்த தூதுக்குழுவினர் சம்புத்துறையிலிருந்தே புறப்பட்டனர்.

தமிழ் பிராமி எழுத்துக்கள்

புத்தகோசர், புத்ததத்தர், தருமபாலா ஆகிய மூவரும் தமிழநாட்டைச் சேர்ந்த மாபெரும் பாளிமொழிப் புலமையாளர்கள். கி. பி. 7ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த சுவான் சாங் எனும் சீன பெளத்த முனிவர், பல்லவரின் தலைநகரமாகிய காஞ்சிபுரத்தை நூற்றுக்கு மேற்பட்ட பெளத்த மடங்களுடனும், ஆயிரத்துக்கு மேற்பட்ட பெளத்த முனிவர்களுடனும் செழிக்கும் மாநகரம் என்று வர்ணித்துள்ளார். 

கி. பி. 2ம் நூற்றாண்டில் சீத்தலைச் சாத்தனார் எனும் பெளத்த முனிவர் இயற்றிய தமிழ்ச் செவ்விலக்கியமாகிய மணிமேகலையில் தமிழக, இலங்கைப் பெளத்த முனிவர்கள் ஒட்டி உறவாடியது பற்றிக் கூறப்பட்டுள்ளது. சிறைகளை வணக்க நிலையங்களாக மாற்றும்படியும், அங்கு பெளத்த முனிவர்களை அமர்த்தும்படியும்  காவியநாயகியாகிய மணிமேகலை சோழ மன்னனிடம் வேண்டிக்கொள்வதையும் அது குறிப்பிடுகிறது.  புத்தர் போதிக்கும் கருணையை அது முன்வைக்கிறது. 

சிலப்பதிகாரம், வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி என்பன பெளத்தநெறி பொதிந்த தமிழ்க் காப்பியங்கள் ஆகும். கி. மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியமே காலத்தால் முற்பட்ட தமிழ் இலக்கண நூல். தொல்காப்பியர் ஒரு பெளத்தர். 10ம் நூற்றாண்டு வரை தமிழருள் ஒரு சாரார் பெளத்த சமயத்தை ஓம்பிவந்தனர். 

சமய விவாதங்களில் தோற்கடிக்கப்பட்ட பெளத்த தமிழ் முனிவர்கள், தமது ஆட்சியாளர் மதம்மாறுமிடத்து ஏற்படக்கூடிய பதிலடிகளுக்கு அஞ்சி இலங்கைக்கு தப்பி ஓடிய சூழ்நிலைகளை சுவான் சாங் பதிவிட்டுள்ளதாகக் கூறுகிறார் சோமரத்தினா. 13ம் நூற்றாண்டில் தம்பதெனிய (வடமேல் மாகாணம்) மன்னன் 6ம் பராக்கிரமபாகு தனது அரசில் பெளத்த சமயத்துக்கு புத்துயிரூட்ட சோழநாட்டிலிருந்து பெளத்த முனிவர்களையும் நெறிநூல்களையும் தருவித்ததாக சூளவம்சம் கூறுகிறது.  

யாழ் குடாநாட்டில் பெளத்த விகாரைகள் பலவும் இருந்தமைக்கான சான்று மகாவம்சத்தில் காணப்படுகிறது. சம்புத்துறைக்கு அருகே தீசமகா விகாரை, பசின விகாரை எனும் இரு விகாரைகளை தேவநம்பிய தீசன் கட்டினான். துட்டகைமுனுவின் சமயக்கடன்களில் புங்குடுதீவைச் சேர்ந்த பெளத்த முனிவர்கள் பங்குபற்றினார்கள். தாதுசேனன் (கி. பி. 455 - 473) மகாநாக விகாரையை புதுக்கி அமைத்தான். 

யாழ் குடாநாட்டில் கந்தரோடை, வல்லிபுரம், பொன்னலை, நிலாவரை, உடுவில், நைனாதீவு, புங்குடுதீவு, நெடுந்தீவு ஆகிய இடங்களில் பெளத்த கட்டுமானங்களின் சிதைவுகள் காணப்படுகின்றன. இவை கிறிஸ்தவ ஊழியின் துவக்ககாலத்தில் எழுந்தவை. வல்லிபுரத்தில் பெளத்தம் நிலைகொண்டிருந்தது. 

கந்தரோடையில் பழைய குடியிருப்புகளின் தடயங்கள் காணப்படுகின்றன. 1ம், 2ம் நூற்றாண்டுகளில் இங்கே ஒரு பேரங்காடி இருந்திருக்கலாம் என்கிறார் சோமரத்தினா. 1917ல் அரசாங்க நிருவாகியும், வரலாற்றறிஞருமாகிய போல் ஈ. பீரிஸ், அவை கந்தரோடை விகாரையின் சிதைவுகள் என்று கண்டறிந்தார். அவை பெளத்த முனிவர்களின் மடங்கள் (தகோபாக்கள்) ஆகும். ஒரு வழிபாட்டு மனைக்கூடம், புத்தரின் பற்பல சின்னங்கள், நாணயங்கள், ஏறத்தாழ 60 சிறிய - பெரிய தூபிகள் (பகோடாக்கள்),    தூபிகளின் கூம்புகள், புத்தரின் பாதச்சுவடு கொண்ட கல்லுத்துண்டுகள், ஓடுகள்… ஆகியவற்றை பீரிஸ் கண்டறிந்தார். தமிழ் பிராமி எழுத்துகளும், கருஞ்சிவப்பு நிறமும் கொண்ட மட்பாண்டத் துண்டுகள்  அங்கு தோண்டி எடுக்கப்பட்டன. அவை கி. மு. 300ம் ஆண்டைச் சேர்ந்தவை. அத்துடன் சேர, பாண்டிய, உரோம நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன. 


கந்தரோடை

நைனாதீவில் ஒரு மணிமுடி குறித்து யாழ்ப்பாண நாக இளவரசர்கள் இருவர் கொண்ட பிணக்கை புத்தர் தீர்த்துவைத்ததாக மணிமேகலையும், மகாவம்சமும் கூறுகின்றன.  

இலங்கையில் எல்லாக் காலகட்டங்களிலும் பெளத்தர்கள் அனைவரும் சிங்களவர்களாகவே விளங்கியுள்ளார்கள் எனும் எடுகோளை அடிப்படையாகக் கொண்டு, மேற்படி இடங்களில் கண்டறியப்பட்ட பெளத்த சின்னங்களை  அங்கெல்லாம் சிங்களவர்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகளாகக் கருதும்  சிங்கள எழுத்தாளர்களை எண்ணி வருந்துகிறார் சோமரத்தினா. அந்தக் காலத்தில் பெரும்பாலான தமிழர்கள் பெளத்தர்களாக விளங்கிய உண்மை மறக்கப்பட்டு வருகிறது. 

நைனாதீவு நாகவிகாரை

யாழ் குடாநாட்டில் பெளத்த தலங்கள் இனங்காணப்படுவதுடன் தொடர்புடைய அரசியல் தாக்கங்களால் தமிழரதும், சிங்களவரதும் உள்ளங்களில் இன்று பதற்றம் மேலோங்கியுள்ளது.

____________________________________________________________________________________

P. K. Balchandran, Buddhism in Sri Lanka, News in Asia, 2021-08-08, translated by Mani Velupillai, 2021-08-13.

https://www.thecitizen.in/index.php/en/NewsDetail/index/6/20730/In-Sri-Lanka-the-Tamil-Link-with-Buddhism-is-Brushed-Under-the-Carpet

No comments:

Post a Comment