ஆவ்கானிஸ்தானில் மண்கவ்விய அமெரிக்கா

[திரம்ப் அமெரிக்க அதிபராக விளங்கியபொழுது (2017-2021), அதாவது 2018 திசம்பர் 17ம் திகதி அமெரிக்க, செளதி அரேபிய, பாகிஸ்தானிய பிரதிநிதிகள் அபு தாபியில் தலிபானிய தலைவர்களை சந்தித்தார்கள். அதனை அடுத்து ஆவ்கானிஸ்தானிலிருந்து படையினரை மீட்கப்போவதாக அமெரிக்கா அறிவித்தது. 2020 பெப்ரவரி 29ம் திகதி அதற்கான உடன்பாட்டில் ஒப்பமிடப்பட்டது. அதாவது: (1) அமெரிக்க படையினர் 14 மாதங்களுக்குள் கட்டம் கட்டமாக மீட்கப்பட வேண்டும்; (2) ஆவ்கானிய அரசுடன் தலிபான் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; (3) ஆவ்கானிஸ்தானில் அல்-கைதா, ஐ. எஸ். ஐ. எஸ் (Islamic State in Iraq and Syria) இயக்கங்கள் இயங்க அனுமதிக்கலாகாது. அப்புறம் ஆவ்கானிய அரசும் தலிபானும் இணங்கியபடி 2020 மே மாதம் முதல் 5000 தாலிபானிய கைதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்பட்டார்கள். அதையடுத்து 2021 மே 1ம் திகதி இறுதிப் படைமீட்பை துவங்க அமெரிக்க உடன்பட்டது. 2021 ஜனவரி 20ம் திகதி பைடன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். இறுதிப் படைமீட்பை பைடன் 2021 ஆகஸ்ட் மாதம்வரை தள்ளிவைத்தார். 2021 ஆகஸ்ட் 31ம் திகதிக்குள் இறுதிப் படைமீட்பை முற்றுவிக்க அவர் உறுதிபூண்டார்.]


தாரிக் அலி


2021 ஆகஸ்ட் 15ம் திகதி ஆவ்கான் தலைநகர் தலிபான் கைகளில் வீழ்ந்தது. அரசியல், கருத்தியல் வாரியாக அமெரிக்க பேரரசுக்கு அது ஒரு பாரிய வீழ்ச்சி. அமெரிக்க தூதரக பணியாளர்களை ஏற்றிக்கொண்டு தும்பிவானூர்திகள் காபுல் வான்துறைக்குப் பறந்து சென்றன. 1975 ஏப்பிரில் மாதம் சைகோனில் (இன்றைய ஹோ சி மின் மாநகரத்தில்) அரங்கேறிய காட்சிகளை அவை வியக்கத்தக்க முறையில் நினைவூட்டின. 


தலிபானின் வேகம்

தலிபான் படைகள் நாடு முழுவதையும் தம்வசப்படுத்திய வேகம் எம்மை மலைக்க வைக்கிறது. அவர்களின் கூரிய தந்திரோபாயம் கவனிக்கத்தக்கது. ஒரு கிழமை நீடித்த அவர்களது தாக்குதல் காபுல் மாநகரத்தில் பெருவெற்றியுடன் முடிவடைந்தது. 3 இலட்சம் ஆவ்கானிய படையினர் நிலைகுலைந்தனர். பலர் போரிட மறுத்தனர். ஆயிரக் கணக்கானோர் தலிபான் தரப்புக்கு மாறினர். மாறிய கையோடு, பொம்மை அரசினர் நிபந்தனையின்றி சரணடைய வேண்டுமென தலிபான் அறைகூவியது. அமெரிக்க ஊடகங்களுக்குப் பிடித்தமான அதிபர் அஷ்ரவ் கானி ஓமானில் அடைக்கலம் நாடி ஓடினார். புத்துயிர்பெற்ற அமீரகத்தின் கொடி இன்று அதிபர் மாளிகையில் பறக்கிறது.


சூடான் - வியற்நாம் - ஆவ்கானிஸ்தான்

20ம் நூற்றாண்டில் அமெரிக்கர் வியற்நாமில் அடைந்த தோல்வியை விடுத்து, 19ம் நூற்றாண்டில் பிரித்தானியர் சூடானில் அடைந்த தோல்வியுடன் இதை மேலும் திட்பமாக ஒப்பிடலாம். அப்பொழுது மாதிய (இஸ்லாமிய மீட்சி) படைகள் தலைநகர் கார்ட்டூமைக் கைப்பற்றின. பிரித்தானிய தளபதி கோர்டன் கொலையுண்டார். மாதியப் படைகளின் வெற்றியை மெச்சிய பிரித்தானிய புலமையாளர் வில்லியம் மொறிஸ், அதை பிரித்தானிய பேரரசின் பின்னடைவு என்றார். சூடானில் ஒரு பிரித்தானிய அரண்படை முழுவதையும் கிளர்ச்சிப்படை கொன்றொழித்தது. ஆனால் ஆவ்கானிஸ்தானில் குருதி சிந்தாமலேயே காபுல் கைமாறியது. அமெரிக்க தூதரகத்தைக் கூட தலிபான் கைப்பற்ற முயலவில்லை. அமெரிக்கப் படையினரை கைப்பற்றாதது மட்டும் ஒரு கேடா?  


பயங்கவாதத்துக்கு எதிரான போர்

“பயங்கவாதத்துக்கு எதிரான போர்” துவங்கி 20 ஆண்டுகள் நிறைவடையும் இந்த வேளையில் அமெரிக்காவும், நேட்டோவும், அவற்றுடன் அணிதிரண்ட மற்றும் பிற நாடுகளும் அதில் தோல்வி அடைந்துள்ளன. தலிபானின் கொள்கைகளை பல ஆண்டுகளாக நான் கடுமையாகச் சாடிவந்துள்ளேன். எனினும் அவர்களின் சாதனையை மறுக்க முடியாது. அறபு நாடுகளை அமெரிக்கா அடுத்தடுத்து ஆக்கிரமித்து சீரழித்த காலப்பகுதியில், அதை தட்டிக்கேட்கவல்ல இயக்கம் எதுவும் மேலோங்கவில்லை. இப்பொழுது அமெரிக்கா அடைந்துள்ள தோல்வி ஒரு திருப்புமுனையாக அமையக் கூடும். ஆதலால்தான் ஐரோப்பிய ஆட்சியாளர்கள்  பலரும் சிணுங்குகின்றார்கள் போலும். அவர்களே ஆவ்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு நிபந்தனையின்றி முண்டு கொடுத்தவர்கள். அவர்களின் மானமும் போய்விட்டது.  அது பிரித்தானியர் இழந்த மானத்தை விடக் குறைந்ததல்ல. 



பைடனுக்கு வேறு வழி இல்லை

படையை மீட்பதை விட பைடனுக்கு வேறு வழி இல்லை. தனது விடுதலைவாத இலக்குகளை, அதாவது தலிபானை அழிப்பது, சுதந்திரத்தையும் குடியாட்சியையும் பெண்களின் சமத்துவத்தையும் நிலைநாட்டுவது எனும் இலக்குகளை எய்தாமலேயே 2021 செப்டம்பர் மாதம் ஆவ்கானிஸ்தானை விட்டு வெளியேறப் போவதாக அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்திருந்தது. 


அமெரிக்கா படைபலவாரியாக தோற்கடிக்கப்படவில்லை. எனினும் தாராண்மைவாதிகள் உளம்கசந்து கண்ணீர் சிந்துவது, அமெரிக்கா அடைந்த தோல்வியின் தாக்கத்தை உறுதிப்படுத்துகிறது. தலிபானை அப்புறப்படுத்தி வைத்திருக்கும்வரை படைமீட்பு நடவடிக்கையை பின்தள்ளியிருக்க வேண்டுமென பிரடெரிக் ககன் (New York Times), கிதியோன் ரச்மன் (Financial Times), உட்பட பெரும்பாலானோர் கருதுகிறார்கள். 


திரம்ப் மேற்கொண்ட படிமுறை

திரம்ப் மேற்கொண்ட படிமுறையையே பாதுகாப்பு அமைச்சின் ஆதரவுடன் பைடன் முன்னெடுத்தார். 2020 பெப்ரவரி மாதம் அமெரிக்க, தலிபானிய, இந்திய, சீன, பாகிஸ்தானிய பிரதிநிதிகள் முன்னிலையில் அதற்கான இணக்கம் காணப்பட்டது. தமது படையெடுப்பு தோல்வியடைந்த சங்கதி அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு நன்கு தெரியும். அமெரிக்கா எவ்வளவு காலம் நின்றுபிடித்தாலும், தலிபானை தோற்கடிக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே பைடன் அவசர அவசரமாக படைகளை மீட்டபடியால்தான் தலிபான்கள் வலுவடைந்தார்கள் என்பது வெறும் மதியீனம். 

அமெரிக்க செயலாளர் பொம்பியோ, தலிபான் அரசியல் தலைவர் பரதார்

(தோகா, கட்டார், 2020-09-12)


அமெரிக்காவின் தவறு

கடந்த 20 ஆண்டுகளில் தமக்கு மீட்சி அளிக்கவல்ல எதனையும் கட்டியெழுப்ப அமெரிக்கர் தவறிவிட்டனர் என்பதே உண்மை. ஒளிரும் பசுமை வலயத்தை, அங்கு வசிப்பவர்களால் அளந்தறிய முடியாத இருள் எப்பொழுதுமே சூழ்ந்திருந்தது. உலகின் மிகவறிய நாடுகளுள் ஒன்றாகிய ஆவ்கானிஸ்தானில் ஆண்டுதோறும் அமெரிக்க படையினரின் பாசறைகளுக்கும், அலுவகங்களுக்கும் குளிரூட்டுவதற்கு கோடிக் கணக்கான பணம் செலவிடப்பட்டது. கட்டார், செளதி அரேபியா, குவைத் ஆகியவற்றில் இருக்கும் அமெரிக்க தளங்களிலிருந்து உணவும், உடையும் ஒழுங்கான முறையில் வான்வழியாக தருவிக்கப்பட்டன. அமெரிக்க குப்பைவாளிகளை சல்லடை போடுவதற்கு ஏழைகள் முண்டியடிக்கவே, காபுல் மாநகர விளிம்புகளை அண்டி ஒரு மாபெரும் சேரி தோன்றியதில் வியப்பில்லை. 


ஆவ்கானிய பாதுகாப்பு படையினருக்கு குறைந்த கூலி

ஆவ்கானிய பாதுகாப்பு படையினருக்கு குறைந்த கூலி செலுத்தப்பட்டபடியால், தமது சொந்த நாட்டவருக்கு எதிராகப் போரிட அவர்கள் உறுதிபூணவில்லை. இரு தசாப்தங்களாக கட்டியெழுப்பிய படையில், துவக்கத்திலேயே தலிபான் ஆதரவாளர்கள் ஊடுருவியிருந்தார்கள். நவீன படைக்கலங்களைப் பயன்படுத்தும் விதத்தை இலவசமாகவே அவர்கள் பயின்றுகொண்டார்கள். தலிபான்களின் உளவாளிகளாகவும் அவர்கள் செயற்பட்டார்கள். 


“மனிதாபிமான தலையீட்டின்” அவல மெய்நிலை அது. எனினும் ஆவ்கானிஸ்தான் அடைந்த நன்மைகளை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். எடுத்துக்காட்டாக, நாட்டின் ஏற்றுமதிகள் பல்கிப் பெருகியுள்ளன. 


அபின் போர்

பழைய தலிபான் ஆட்சியில் அபின் உற்பத்தி கண்டிப்பான முறையில் கண்காணிக்கப்பட்டது. அமெரிக்க படையெடுப்பை அடுத்து அபின் உற்பத்தி விண்ணைத் தொட்டது. இன்று உலக சந்தையில் கிடைக்கும் ஹெரொயின் போதைமருந்தில் 90 விழுக்காடு ஆவ்கானிஸ்தானில் ஆக்கப்படுவது. 


18ம், 19ம் நூற்றாண்டுகளில் சீனாவில் “அபின் போர்” ஒன்று நிகழ்ந்தது. அங்கு அபின் வியாபாரத்தைப் புகுத்திய பிரித்தானியரையும், பிரஞ்சுக்காரரையும் எதிர்த்து சீன மன்னர்கள் போரிட்டார்கள். ஆவ்கானிதானில் நீடித்து நிகழ்ந்த மோதலை புதியதோர் அபின் போராக, ஓர் அரைகுறை அபின் போராகவேனும் நோக்க வேண்டுமோ என எவரும் ஐயுற இடமுண்டு. கோடி கோடியாக ஈட்டப்பட்ட இலாபம், படையெடுப்பாளருக்கு பணிவிடை புரிந்த ஆவ்கானிய தரப்புகளிடையே பகிரப்பட்டது. அபின் வியாபாரம் புரியவென மேல்நாட்டு அதிகாரிகளுக்கு கைநிறைய இலஞ்சம் கொடுக்கப்பட்டது. இன்று பத்திலொரு ஆவ்கானியர் அபின் நுகர்வுக்கு அடிமைப்பட்டுள்ளனர். நேட்டொ படைகளின் அபின் நுகர்வு விபரம் கிடைக்கவில்லை. 


பெண்களின் தகுநிலை 

பெண்களின் தகுநிலை பெரிதும் மாறவில்லை. அரசு சாரா அமைப்புகள் குடிகொண்ட பசுமை வலயத்துக்கு வெளியே சமூக முன்னேற்றம் ஏற்பட்டதரிது. ஆவ்கான் பெண்களின் எதிரிகள் மூவர்: (1) மேல்நாட்டு ஆக்கிரமிப்பாளர், (2) தலிபான், (3) வடபுலக் கூட்டமைப்பு (ஐக்கிய இஸ்லாமிய முன்னணி) என்று நாடுகடந்து வாழும் தலையாய பெண்ணியவாதி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்கா வெளியேறிய பிறகு எஞ்சுவோர் இருவர் என்றார். (தலிபான் காபுலை கைப்பற்ற முன்னரே அது வடக்கு நோக்கி முன்னேறி வந்தது. அப்பொழுது வடபுலக் கூட்டமைப்பின் முக்கிய அணிகள் பின்வாங்கின. ஆதலால் பெண்களின் எதிரிகளை இனிமேல் ஒன்றாகக்  குறைக்கலாம்).


 ஆக்கிரமித்த படையினருக்கு பணிவிடை 

ஆக்கிரமித்த படையினருக்கு பணிவிடை புரிய எழுந்த பாலியல் பணித்துறை பற்றிய நம்பிக்கையான புள்ளிவிபரங்களை நாடி ஊடகர்களும் தொண்டர்களும் திரும்பத் திரும்ப விடுத்த வேண்டுகோள்களுக்கு பதில் கிடைக்கவில்லை.  “சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள்” மீது அமெரிக்க படையினர் பாலியல் வன்முறை புரிந்தார்கள்; ஆவ்கன் குடிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள்; ஒட்டுப்படையினர் சிறாரைத் துன்புறுத்த விட்டுக்கொடுத்தார்கள்... எனினும் பாலியல் வன்புணர்வு பற்றிய வினாக்களுக்கும் கூட விடை கிடைக்கவில்லை. யூகோசிலேவிய உள்நாட்டுப் போரின்பொழுது விபசாரம் பெருகவே, அப்பிராந்தியம் பாலியல் வியாபார மையமாகியது. இலாபம் மிகுந்த அவ்வியாபாரத்தில் ஐ. நா. தரப்பினர் ஈடுபட்ட சங்கதி நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆவ்கானிஸ்தானைப் பொறுத்தவரை இனிமேல்தான் முழு விபரங்களும் வெளிவர வேண்டியுள்ளது. 


அமெரிக்க பாதுகாப்புத் துறை

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கணக்குப்படி 2001 முதல் இற்றைவரை 7¾ இலட்சத்துக்கு மேற்பட்ட அமெரிக்க படையினர் ஆவ்கானிஸ்தானில் போரிட்டுள்ளனர். அவர்களுள் 2448 அசல் படையினரும், 4000 ஒப்பந்தப் படையினரும் கொல்லப்பட்டார்கள். ஏறத்தாழ 20,589 பேர் காயப்பட்டார்கள். 


ஆவ்கானியரின் இழப்புகளைக் கணிப்பது கடினம். பொதுமக்கள் உட்பட “எதிரிகளின் இறப்புகள்” அமெரிக்கரால் எண்ணப்படவில்லை. 2002 சனவரி நடுக்கூறு வரை அமெரிக்க குண்டுபொழிவின் விளைவாக நேரடியாகவும், அதனைத் தொடர்ந்து மக்களுக்கு நேர்ந்த  நெருக்கடிகளினால் மறைமுகமாகவும்  குறைந்தது 4200 முதல் 4500 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்று காழ் கொனெடா (Project on Defense Alternatives) மதிப்பிட்டிருந்தார். 2021 வரை அமெரிக்க ஆக்கிரமிப்பினால் 47,245 பொதுமக்கள் மடிந்ததாக Associated Press அறிவித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சம் என்றும், அவர்களுள் பலர் பொதுமக்கள் என்றும், காயப்பட்டோரின் எண்ணிக்கை 3 இலட்சம் என்றும் ஆவ்கானிய குடியுரிமைப் பணியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். 


ஆவ்கானிஸ்தான் ஆவணங்கள்

அமெரிக்க அரசு அதன் மிகநீண்ட போரில் அடைந்த தோல்விகள், அதன் ஆணைப்படி  2019ல் ஒரு பகுப்பாய்வு அறிக்கையாக முன்வைக்கப்பட்டது. 2000 பக்கங்கள் கொண்ட “ஆவ்கானிஸ்தான் ஆவணங்கள்” எனப்படும் அந்த உள்ளக அறிக்கையை Washington Post வெளியிட்டது. ஓய்வுபெற்ற மற்றும் தற்போதைய அமெரிக்க தளபதிகள், அரசியல் மதியுரைஞர்கள், சாணக்கியர்கள், உதவிப் பணியாளர்கள் முதலியோரை செவ்விகண்டு தயாரிக்கப்பட அறிக்கை அது. அவர்களது ஒட்டுமொத்தமான கணிப்பில் கண்டனமே மேலோங்கியது. 


ஆவ்கானிஸ்தான் பற்றிய அடிப்படை அறிவு

“ஆவ்கானிஸ்தான் பற்றிய அடிப்படை அறிவே எங்களுக்கு இருக்கவில்லை. நாங்கள் செய்தது என்ன என்பது எங்களுக்கே தெரியாது. நாங்கள் மேற்கொண்டது என்ன என்பது எங்களுக்கு இம்மியும் தெரியாது. இந்தக் குளறுபடியின் பருப்பத்தை அமெரிக்க மக்கள் அறிந்திருந்தால்…” என்பதை எல்லாம் புஷ், ஒபாமா அரசுகளில் ஆவ்கானிய போர்வலராக விளங்கிய தளபதி லூட் ஒப்புக்கொண்டார். புஷ், ஒபாமா அரசுகளிலும் வெள்ளை மாளிகையிலும் பணியாற்றி ஓய்வுபெற்ற கடல்-வான்-தரைப்படை அதிகாரி ஜெவ்ரி எகேர்ஸ் இன்னொரு சாட்சி. பொருள்வளங்கள் பெருவாரியாக வீணடிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். “கோடி கோடியாகப் பணத்தை வாரியிறைத்து நாம் பெற்றதென்ன? நாம் பெற்றது கோடானு கோடி பணத்துக்கு நிகராகுமா?… ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டு, கடலில் வீசப்பட்ட பிறகு, ஆவ்கானிஸ்தானில் நாம் செலவழித்த பணத்தொகையை எண்ணி, ஈமக்கடலில் மூழ்கிய நிலையில் அவர் சிரித்திருக்கக்கூடும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்” என்றார் அவ்வதிகாரி. “அப்படிச் செய்தும் கூட நாம் தோற்றுவிட்டோம்” என்றும் அவர் சொல்லியிருக்கலாம்!


எதிரி யார்? 

எதிரி யார்? தலிபானா, பாகிஸ்தானா, ஆவ்கானியர்கள் அனைவருமா? ஆவ்கானிய காவல்துறையினருள் குறைந்தது ⅓ தொகையினரும், தலிபானிய ஆதரவாளர்களுள் கணிசமான தொகையினரும் போதைமருந்துக்கு அடிமைப்பட்டவர்கள் என்று வலியுறுத்துகிறார் நெடுங்காலமாகப் பணியாற்றும் ஓர் அமெரிக்கப் படையதிகாரி. அது அமெரிக்கப் படையினருக்கு பெரிய தொல்லையைக் கொடுத்தது. ஓர் அமெரிக்க சிறப்பு படை அதிகாரி 2017ல் இப்படி சாட்சியமளித்தார்: “நண்பர்களும் பகைவர்களும் வசிக்கும் இடங்களைக் காட்டுவதற்கு ஒரு வரைபடத்தை நான் கொண்டுவரப் போகிறேன் என்று அவர்கள் நினைத்தார்கள்… ‘சரி, பகைவர்கள் யார்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?’ என்று அவர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அந்த விபரம் என் கைவசம் இல்லை என்பதை பல உரையாடல்களின் பின்னர்தான் அவர்கள் புரிந்துகொண்டார்கள்.” 



டொனால்ட் றம்ஸ்வெல்ட்

2003ல் பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் றம்ஸ்வெல்ட் அதே எண்ணத்தை வெளியிட்டார்: “ஆவ்கானிஸ்தானிலோ ஈராக்கிலோ பகைவர்கள் என் கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆவ்கானிய சமூகத்திலிருந்து கிடைக்கக்கூடிய துப்புகள் அனைத்தையும் நான் வாசித்தேன். வாசிக்கும்பொழுது எமக்கு அதிக விபரம் தெரிவதாகப் புலப்படும். ஆனால் அவற்றை கருத்தூன்றி நோக்கும்பொழுது, நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான துப்புகள் கிடைக்கவில்லை என்பது புரியும். ஆவ்கானிய ஆட்களிடமிருந்து உருப்படியான துப்புகள் எமக்குப் போதியளவு  கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.” 


சொல்லளவில் மட்டுமன்றி செயலளவிலும் நண்பரையும் பகைவரையும் பிரித்தறிய முடியாமை ஒரு பாரதூரமான பிரச்சனை அல்லவா? இட்டுக்கட்டிய ஒரு குண்டுத் தாக்குதல், ஆட்கள் நிறைந்த ஒரு சந்தையில் இடம்பெற்ற பிறகு, உங்களால் நண்பர்களையும் பகைவர்களையும் பிரித்தறிய முடியாத சூழ்நிலையில், நீங்கள் எல்லோரையும்  தாக்கி, பகைவர்களைப் பெருக்கிக் கொள்கிறீர்கள் அல்லவா?


கிறிஸ்தோபர் கொலந்தா

தற்போதைய தளபதிகள் மூவருக்கு மதியுரைஞராக விளங்கும் ஏனாதி கிறிஸ்தோபர் கொலந்தா, அமெரிக்கா எதிர்கொண்ட இன்னொரு பிரச்சனையை சுட்டிக்காட்டினார். துவக்கத்திலிருந்தே ஊழல் தலைவிரித்தாடியதாக அவர் தெரிவித்தார். முன்னாள் ஆவ்கானிய அதிபர் கார்சாயின் அரசு “தன்னை ஒரு திருடராட்சிப் பீடமாகவே” அமைத்துக்கொண்டது. அமெரிக்க ஆக்கிரமிப்பைக் கடந்து, 2002ம் ஆண்டின் பின்னர் நிலைகொள்ளவல்ல ஓர் அரசைக் கட்டியெழுப்பும் நோக்குடன் தீட்டப்பட்ட திட்டத்துக்கு அது சுங்கம் வைத்தது. 


ஊழல்

“சில்லறை ஊழல் என்பது தோல்-புற்றுநோய் போன்றது. அதை எதிர்கொள்ள வழிவகைகள் உண்டு. அதிலிருந்து நீங்கள் கடைத்தேறலாம். அமைச்சுகளின் உள்ளே, உயர் மட்டத்தில் இடம்பெறும் ஊழல் படுமோசமானது. அது குடல்-புற்ற்நோய் போன்றது. அதற்கு வேளைக்கே சிகிச்சையளித்தால், தப்பிவிடுவீர்கள். திருடராட்சி என்பது மூளை-புற்றுநோய் போன்றது. அது உயிரைக் குடிக்கும்.” (திருடராட்சியில் நீக்கமற மூழ்கிய பாகிஸ்தான் பல தசாப்தங்களாக நின்றுபிடிப்பது உண்மையே.) ஆவ்கானிஸ்தானைக் கட்டியெழுப்பும் பணி, அதனை ஆக்கிரமித்த படையினால் முன்னெடுக்கப்பட்டது. அங்கு மத்திய அரசுக்கு மக்களின் ஆதரவே கிடைத்ததரிது. ஆதலால் அங்கு திருடராட்சி கைகூடவில்லை.  .


போலி அறிக்கைகள்

தலிபான்கள் நிமிரமுடியாவாறு முறியடிக்கப்பட்டனர் என்ற போலி அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், தனது கூட்டாளிகள் பொய்களைப் பரப்புவதாகத் தெரிவித்தார்: “அவை அவர்களின் விளக்கங்கள். தாலிபான்களின் தாக்குதல்கள் மோசமடைந்து வருவது உண்மையே. அவர்கள் சுடுவதற்கு அதிக இலக்குகள் உள்ளன அல்லவா? ஆனால். எமது கட்டுக்கோப்பு குலைவதை அவை காட்டவில்லை.” பிறகு மூன்று மாதங்கள் கழித்து “தலிபான்களின் தாக்குதல்கள் மேலும் மோசமடைந்துள்ளனவே!” என்றபொழுது, “தலிபான்களின் ஆற்றாமையே அதற்கான காரணம். நாங்கள் வெற்றிபெற்று வருகிறோம் என்பதையே அது காட்டுகிறது” என்றார். 


இத்தகைய விளக்கமளிப்புகள் தொடர்ந்தமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு: (1) சம்பந்தப்பட்ட தரப்பினர் எல்லோருக்கும் நல்ல பெயர் ஈட்டிக்கொடுப்பது;  (2) படைகளாலும் படைவளங்களாலும் பயன் விளைகிறது; ஆகவே அவற்றை அப்புறப்படுத்தினால் நாடு சீரழிந்துவிடும் என்று காட்டுவது!


பிரித்தானியா

நேட்டோவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சுகளிலும், தூதரகங்களிலும் இது ஒரு பகிரங்க இரகசியமாய் இருந்தது. “படைத்துறைவாரியாக தவறுகள் இழைக்கப்பட்டன. துவக்கத்திலிருந்து 10, 13 ஆண்டுகளாக அரசியல்வாதிகள் தவறிழைத்தார்கள். இனிமேல் எக்காரணம் கொண்டும் போரிடும் படையினரை நாங்கள் அனுப்பப் போவதில்லை” என்று 2014 அக்டோபர் மாதம் பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். நான்கு ஆண்டுகள் கழித்து, “வலுவிழந்த பாதுகாப்பு நிலைவரத்தை சமாளிக்க உதவும்பொருட்டு” பிரதமர் தெரெசா மே மீண்டும் பிரித்தானியப் படையினரை ஆவ்கானிஸ்தானுக்கு அனுப்பினார். அவர்களின் எண்ணிக்கை இரு மடங்கானது. 


இன்று பிரித்தானிய ஊடகங்கள் தமது வெளிநாட்டு அனமைச்சின் குரலை எதிரொலிக்கின்றன. பைடன் பிழையான நேரத்தில் பிழையான நகர்வை மேற்கொண்டதாகச் சாடுகின்றன. ஒரு புதிய படையெடுப்பு தேவைப்படலாம் என்று பிரித்தானிய தலைமைத் தளபதி நிக் கார்ட்டர் கருதுகின்றார். போரினால் வதையுண்ட ஆவ்கானிஸ்தானில் பிரித்தானியர் நிரந்தரமாக நிலைகொண்டிருக்க வேண்டுமென்று கோருவதற்கு பழமைபேண் கட்சியின் பின்வரிசையாளர்களும், கட்டியாண்ட காலத்துக்கு மீள வேட்கை கொண்டவர்களும், கூலி ஊடகர்களும், முன்னாள் பிரதமர் பிழையரின்  அடிவருடிகளும் முண்டியடிக்கிறார்கள்.


“ஆவ்கானிஸ்தான் ஆவணங்கள்” எனும் அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டபடி அமெரிக போரியந்திரம் எதிர்கொண்ட நெருக்கடியின் பருப்பத்தை தளபதி கார்ட்டரோ அவரது வழித்தோன்றல்களோ ஒப்புக்கொள்வதாகத் தெரியவில்லை. அது எம்மை மலைக்க வைக்கிறது. அமெரிக்க படைத்துறையின் திட்டங்களைத் தீட்டுவோர் மெல்லமெல்ல மெய்நிலையை உணர்ந்து கொண்டுள்ளார்கள். ஆனால் பிரித்தானிய படைத்துறைஞர்களோ ஆவ்கானிஸ்தான் பற்றி இன்னமும் கனவு காண்கிறார்கள். 


அல்-கைதா

புதிய ஆவ்கானிய இஸ்லாமிய அமீரகத்தின் கீழ் அல்-கைதா மறுபடி அணிதிரளும் சூழ்நிலையில், அங்கிருந்து படைகளை மீட்டுக்கொள்வதால், ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு ஆபத்து நேரும் என்று சிலர் வாதிக்கின்றனர். இவை நயவஞ்சகமான ஆரூடங்கள். அமெரிக்காவும் பிரித்தானியாவும் பொஸ்னியா, லிபியா இரண்டிலும் செய்தது போல் சீரியாவில் அல்-கைதாவுக்கு படைக்கலங்களையும் மற்றும் பிற உதவிகளையும் பல்லாண்டுகளாக அளித்து வந்துள்ளன. ஆகவே மக்களை அச்சுறுத்தும் அத்தகைய ஆரூடங்கள் அறியாமை எனும் சகதியில் மட்டுமே பலிக்கும். வேறு தரப்புகளை விட்டுவிடுவோம். பிரித்தானிய மக்களிடையே மேற்படி ஆரூடங்கள் எடுபடுவதாகத் தெரியவில்லை. 

  

விவரங்களை துடிப்புடன் வெளிப்படுத்தியே அல்லது மேட்டிமைக் குழாங்களை அம்பலப்படுத்தியே உண்மைகளை அவசர அவசரமாக வரலாறு இடித்துரைக்கிறது.   தற்போதைய அமெரிக்க படைமீட்பு அத்தகைய ஒரு வரலாற்றுக் கணம் போலும். ஏற்கெனவே “பயங்கரவாதத்துக்கு எதிரான போரை” எதிர்த்த பிரித்தானிய மக்கள் எதிர்காலப் படையெடுப்புகளை இனிமேல் காத்திரமாக எதிர்க்கக்கூடும். 


எதிர்காலம்

எதிர்காலம் என்ன தரும்? ஏற்கெனவே ஈராக், சீரியா இரண்டுக்குமென வகுத்த அதே பாங்கில், 2500 படையினரைக் கொண்ட நிரந்தர சிறப்பு படையணி ஒன்று குவைத்தில் உள்ள ஓர் அமெரிக்க தளத்தில் நிலைகொண்டிருக்கும் என்றும், தேவைப்பட்டால் அது ஆவ்கானிஸ்தானுக்குப் பறந்துசென்று, குண்டுபொழிந்து, கொன்று, குதறும் என்றும்   அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த மாதம் உயர்மட்ட தலிபானிய குழு ஒன்று சீனாவுக்குச் சென்று, தமது நாடு இனிமேல் மற்ற நாடுகளைத் தாக்கும் ஏவுதளமாக என்றுமே பயன்படுத்தப்பட மாட்டாது என்று உறுதியளித்தது.  வணிக, பொருளாதார உறவுகள் பற்றி சீன வெளிநாட்டு அமைச்சருடன் அது உளமாரக் கலந்துரையாடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


முஜாகிதீன் 

அத்தகைய சந்திப்புகள் 1980களில் ஆவ்கானிய முஜாகிதீன் குழுவினருக்கும் மேல்நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்றமை நினைவுக்கு வருகிறது. முஜாகிதீன் குழுவினர் வகாபி உடை அணிந்து, விதிமுறைப்படி கத்தரித்த தாடியுடன், கண்கவர் வெள்ளை மாளிகை முன்றலிலோ, பிரித்தானிய பிரதமரின் வளவிலோ (10 Downing Street)  தோன்றியதுண்டு. இன்று நேட்டோ பின்வாங்கும் தறுவாயில் சீனா, இரசியா, ஈரான், பாகிஸ்தான் முதலியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. (தலிபானுக்கு பாகிஸ்தான் தந்திரோபாய உதவி புரிந்தது என்பதில் ஐயமில்லை. இதனால் பாகிஸ்தான் அரசியல் வாரியாகவும், படைத்துறை வாரியாகவும் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது). ஆவ்கானிஸ்தானிலிருந்து சோவியத் யூனியன் வெளியேறிய பிறகு அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் நாடியதுபோல் இன்று இந்த நாடுகளுள் எதுவுமே புதியதோர் உள்நாட்டுப் போரை நாடவில்லை. சீனாவுக்கு ஈரானுடனும் இரசியாவுடனும் நெருங்கிய உறவுண்டு. ஆவ்கானிய வடபுலத்தில் இரசியாவின் செல்வாக்கு தொடர்கிறது. ஆதலால் புண்பட்ட ஆவ்கானிய மக்களுக்கு ஒரு தளர்வான அமைதியாவது கிடைக்கும் வண்ணம் செயற்படுவது சீனாவுக்கு இயலக்கூடும்.  


தஞ்சம்  

4 கோடி மக்கள் வாழும் ஆவ்கானிஸ்தானில் சராசரி வயது 18 என்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனளவில் அது பொருளற்றது. எனினும் 40 ஆண்டுப் போரை அடுத்து இளம் ஆவ்கானியர் தம் வாழ்வு மேம்படப் பாடுபடுவர் என்று நம்பபப்படுகிறது. ஒரேயொரு எதிரியேனும் எஞ்சும்வரை ஆவ்கானிய பெண்களின் போராட்டம் சற்றும் முடிவுறாது.


பிரித்தானியாவிலோ வேறு நாடுகளிலோ இருந்துகொண்டு தொடர்ந்தும் ஆவ்கானிஸ்தானில் போரிட விரும்புவோர் அனைவரும் நேட்டோவின் கதவுகளைத் தட்டப்போகும் அகதிகள்மீது தமது புலனைத் திருப்ப வேண்டும். அவர்களுக்கு தஞ்சம் அளிக்கவேனும் மேலைத்தேயம் கடமைப்பட்டுள்ளது அல்லவா? வேண்டாத போருக்கு உங்கள் தஞ்சம் சிறியதோர் இழப்பீடு அல்லவா?  

__________________________________________________________________________


Tariq Ali, Debacle in Afghanistan, SideCar, 2021-08-16, translated by Mani Velupillai, 2021-08-23.

https://newleftreview.org/sidecar/posts/debacle-in-afghanistan

No comments:

Post a Comment