ஓராண்டு நல்லாட்சி

 Image result for goplakrishna gandhi

கோபாலகிருஷ்ண காந்தி 

"ஆழாக்கில் கிழக்கு,மேற்கு!" (ஒரு குறுணிக்குத் திசை ஏது?) என்பது தமிழ்ப் பழமொழி. எனினும் இலங்கை உட்பட சின்னஞ்சிறிய தீவுகளுக்கும் ஒரு திசை உண்டு. தமது நாடு செல்லவேண்டிய திசையை இலங்கை மக்கள்  சுட்டிக்காட்டியுள்ளார்கள். அத்திசையில் இலங்கை நடைபயின்று வருகிறது.
முதிர்ந்த தொலைநோக்கு மிகுந்த இலங்கை மக்கள் ஓர் அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். பயத்தையும், சந்தேகத்தையும் விடுத்து நம்பிக்கையை நிலைநிறுத்தியுள்ளார்கள். வஞ்சத்தை விடுத்து இணக்கத்தையும், பேதத்தை விடுத்து பேச்சுவார்த்தையையும், போரை விடுத்து அமைதியையும், இறப்பை விடுத்து வாழ்வையும் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஒரு செங்குத்துப் பாறையின் விளிம்பில் திண்டாடிய நாட்டை இலங்கை மக்கள் மீட்டெடுத்துள்ளார்கள். ஆட்களின் அகந்தையையும், கட்சிகளின் அகந்தையையும் அவர்கள் தகர்த்தெறிந்துள்ளார்கள்.
சந்தர்ப்பவாதம் பேசுவது போன்று கூட்டணி அமைப்பதும் நெடுங்கால வழமையே. அணிசேரும் அரசியலும் கூட நாட்பட்ட தந்திரமே. ஆனால் நம்பிக்கை என்பதோ இன்னமும் மழலையர் பள்ளியிலேயே நிலைகொண்டுள்ளது. 
சிறிலங்கா சுதந்திரக் கட்சியனரும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் பரம வைரிகள். எனினும் மாமரத்தில் தென்னங்கன்று வளர்வது போன்ற ஒரு முரண்பாட்டை, ஒரு பிரமையை, ஓர் இயலாமையை மீறி அவ்விரு கட்சிகளுக்கும் இடையே இன்று ஓர் ஒருங்கிணைவு மேலோங்கியுள்ளது.   
அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் இருவரும் அதிபர் சந்திரிகாவின் உறுதுணையுடன் அச்சத்தை விரட்டி நம்பிக்கையை வரவழைத்து, பேராபத்தை தவிர்த்துக்கொண்டார்கள். அவர்கள் தோற்றிருந்தால், அவர்களுக்கு எத்துணை ஆபத்து நேர்ந்திருக்கும்? இன்று லசந்த விக்கிரமதுங்கா இறந்த நாள் அல்லவா! வேறு கதை எதற்கு?
மமதையை, எதேச்சாதிகாரத்தை கையில் பற்றிப்பிடித்து வெளியே கொண்டுபோய், "பிறகுபார்க்கலாம்!" என்று சொல்லி விரட்டி விட்டுள்ளார்கள். தேர்தலை எதிர்கொண்டு, தேர்தலில் வென்று நாகரிகம் காத்துள்ளார்கள். முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்!   
உலக வரலாற்றில் அறக்கொடிய பயங்கர அத்தியாயத்தின் பக்கத்தைப் புரட்டியவர் என்ற வகையில் மகிந்த ராஜபக்சாவுக்கு அதில் ஓர் இடமுண்டு என்பதில் ஐயமில்லை. அதேவேளை அந்த அத்தியாயத்தின் இறுதியில் குருதிவெறிகொண்டு, அப்பாவிகளைக் கொன்றுகுவித்து, வஞ்சம் தீர்க்கப்பட்டுள்ளது. தனது தந்தையின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு பாலன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது கண்டு உலகம் அதிர்ச்சியில் உறைந்தது. ஆதலால் இலங்கையில் போர் முடிந்தும் அமைதி கைகூடவில்லை. பீரங்கிகள் ஓய்ந்தும் பேச்சுவார்த்தை ஓங்கவில்லை.
பிரபாகரன் வரலாறு ஆனார். ஆனால் அவருடைய இலக்கு என்ன ஆனது? அதுவும் வரலாறு ஆனதா, ஆகியுள்ளதா? அல்லது மீண்டும் வெளிப்படும்வரை அது தலைமறைவாகியுள்ளதா? பிரிவினை என்பது உடனடி நிகழ்ச்சிநிரலிலிருந்து விலகியிருக்கலாம். ஆனால் கொதிக்கும் உணர்வாக நீடிக்கும்வரை அது ஒழியப்போவதில்லை.
பிரச்சனை தீர்க்கப்படுந் தறுவாயில் "நீங்கள் அளவுக்கதிகமாக அவசரப்படுகிறீர்கள், நீங்கள் அளவுக்கதிகமாக விட்டுக்கொடுக்கிறீர்கள்" என்று சொல்வார்கள். "நீங்கள் அளவுக்கதிகமாக நம்புகிறீர்கள், நீங்கள் அளவுக்கதிகமானோரை நம்புகிறீர்கள்" என்றும் சொல்வார்கள்.  நாகபாம்பு விரியன்பாம்புடன் சேரும்பொழுது என்ன பாம்பு பிறக்கும்? ஒன்றுமே பிறக்காது போகலாம். ஆனால் பணமும் அதிகாரமும் சேரும்பொழுது, அருவருக்கத்தக்க பிறவிக்கு அது வழிவகுக்கும். அப்படிப்பட்டவர்களை பிறப்பியல்பு மாற்றப்பட்ட சட்டமன்றாளர்கள் என்று நாம் வரையறுக்கலாம். அப்படிப்பட்டவர்கள் இலங்கையை அதிகாரப் பரவலாக்கத்திலிருந்து திசைதிருப்ப நாம் அனுமதிக்கக் கூடாது.
இழப்பீடு போதும் என்று தெரிவிக்க வேண்டியவர் இழப்பீட்டுக்கு உரியவரே ஒழிய, இழப்பீடு செலுத்துபவர் அல்ல. விடாய் தீர்வதை தெரிவிக்க வேண்டியவர் தண்ணிர் பருகுபவரே ஒழிய, தண்ணீர் கொடுப்பவர் அல்ல. விமோசனத்தை ஒப்புக்கொள்ள வேண்டியோர் இலங்கைத் தமிழரே ஒழிய, விமோசனம் அளிப்பவர்கள்  அல்ல.   
பொன்னம்பலங்களும், செல்வநாயகங்களும், திருச்செல்வங்களும் தொலைநோக்கு மிகுந்தவர்கள், விடாமுயற்சி படைத்தவர்கள். பொன்னம்பலங்களும், செல்வநாயகங்களும் ஏமாற்றப்பட்டிராவிட்டால், பிரபாகரன் தேவைப்பட்டிருக்க மாட்டார்.
ஐக்கிய இலங்கைக்காகப் பாடுபட்ட அரசியல்வாதி ஒவ்வொருவரும் பயங்கரத்திலிருந்து உயிர்தப்பியவரே. ஐக்கிய இலங்கைக்குள் ஓர் அரசியல் தீர்வுக்காகப் பாடுபட்ட தமிழ்த் தேசியவாதி ஒவ்வொருவரும் பயங்கரத்திலிருந்து உயிர்தப்பியவரே. அது ஓர் அதிசயம் அல்லவா! அத்தகைய ஓர் அரசியல்வாதி நிலைகொண்டிருப்பது, அந்த விடாமுயற்சியின் திறனும், வலிமையும் முற்றுமுழுதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதை உணர்த்துகிறது அல்லவா!
அரசியல்யாப்பு வாதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஐக்கிய இலங்கையில் - நீதிபாலிக்கும் இலங்கையில் - நம்பிக்கை மிகுந்தவராகவும் விளங்கும் ஓர் இலங்கைத் தமிழர் ஏமாற்றம் அடையவோ, புறக்கணிக்கப்படவோ கூடாது. பழைய நச்சு வளையம் புதுப்பிக்கப்படக் கூடாது. தமிழ் மக்களின் வேட்கைகளை விரைந்து, உளமார ஈடுசெய்யும் நடவடிக்கை வெறுமனே பல்வேறு நடவடிக்கைகளுள் தெரிவுசெய்யப்படும் ஒரு நடவடிக்கை அல்ல; அவர்களின் வேட்கைகளை ஈடுசெய்வது இன்று வரலாற்று நியதி ஆகியுள்ளது. புதிய ஏமாற்றங்களும், புறக்கணிப்புகளும், ஓரங்கட்டலும் தமிழ் ஈழ இலக்கு மறுபிறவி எடுக்க வழிவகுப்பதைத் தடுப்பதற்கு இலங்கை தான்னால் இயன்றவரை பாடுபட வேண்டும்; புலம்பெயர்ந்த, புறங்கட்டப்பட்ட இலங்கைத் தமிழரின் உள்ளத்துள் பதுங்கியிருக்கும்  தமிழ் ஈழ இலக்கு மறுபிறவி எடுக்க வழிவகுப்பதைத் தடுப்பதற்கு இலங்கை தன்னால் இயன்றவரை பாடுபட வேண்டும். வஞ்சம் தீர்க்கும் வன்முறை மீள்வதோ, மறுபிறவி எடுப்பதோ, அதனோடு ஒட்டிப்பிறந்த கொடிய ஒடுக்குமுறை ஓங்குவதோ பேரழிவுக்கே இட்டுச்செல்லும்.
முந்திய அரசியல்யாப்பை நலிவுறுத்திய விடயங்கள் அனைத்தும் அறவே தவிர்க்கப்பட வேண்டும். ஒற்றையாட்சி முறைமைக்குள் இணைப்பாட்சிப் பொருண்மைக்கு இடங்கொடுக்கும் ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். அதற்கு இலங்கை-இந்திய ஒப்பந்தமும், 13+ ஏற்பாடும் துணைநிற்றல் திண்ணம். இலங்கைக் கப்பலுக்கு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை விடச் சிறந்த நங்கூரம் கிடைக்க முடியாது. ஐக்கிய இலங்கைக்கு இந்தியாவை விட வேறு மெய்யான நட்புநாடு இருக்கமுடியாது. 
ஜின்னாவுக்கு பிரதமர் பதவி வழங்கும்படி காந்தி யோசனை தெரிவிப்பதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே அப்படிச் செய்திருந்தால், அல்லது அம்பேத்கார் இந்தியாவின் துணை ஜனாதிபதி ஆகியிருந்தால், இந்திய உபகணடத்தின் வரலாறே மாறியிருக்கும். ஒரு தமிழர் இலங்கையின் ஜனாதிபதி ஆகியிருந்தால் அல்லது பிரதமர் ஆகியிருந்தால், இலங்கைக்கு நேர்ந்த சோதனைகள் அத்தனையும் நேர்ந்திருந்தாலும் கூட, ஒரு நம்பிக்கைகக் கீற்றாவது தென்பட்டிருக்கும். நான் ஓர் இந்தியன் என்ற வகையில் அல்ல, ஓர் அரைத்தமிழன் என்ற வகையில் அல்ல, ஒரு தெற்கு ஆசியன் என்ற வகையில் எனக்கோர் ஆசை உண்டு: இலங்கைத் தேசிய கீதம் இசைக்கையில் ஓர் இலங்கைத் தமிழர் ஆட்சியதிகாரியாகப் பதவியேற்பதைக் காண நான் ஆசைப்படுகிறேன்.
நெல்சன் மன்டேலாவின் முதலாவது அமைச்சரவையில் தென் ஆபிரிக்க இந்தியர்கள் பலர் இடம்பெற்றிருந்தார்கள். "மதிபா, அவர்களுக்கு எதற்காக அளவுக்கதிகமான அமைச்சுப் பதவிகள்?" என்று அவரது ஆபிரிக்க தேசிய பேரவைத் தோழர்கள் வினவினார்கள். அதற்கு மன்டேலா, "எனது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தென் ஆபிரிக்க இந்தியர்கள் எமது இந்தியர்களின் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கவில்லை. எமது போராட்டத்துக்கு அவர்கள் ஆற்றிய தொண்டினைப் பிரதிபலிக்கிறார்கள்" என்று விடையிறுத்தார். இதிலிருந்து இந்தியாவும் இலங்கையும் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். சிறுபான்மையோரின் எண்ணிக்கையை விடுத்து, அவர்கள் ஆற்றிய தொண்டினைக் கருத்தில் கொண்டு எமது அமைச்சரவைகளில் அவர்களுக்கு இடங்கொடுக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் சிங்களம் பேசும் அளவுக்கு இலங்கைச் சிங்களவர்கள் ஏன் தமிழ் பேசுவதில்லை? "ஒரு மொழி, இரு நாடுகள்; இரு மொழிகள், ஒரு நாடு" என்று கொல்வின் ஆர். டி சில்வா இட்ட முழக்கத்தில் பொதிந்துள்ள ஞானத்தை இலங்கைச் சிங்களவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை? பகிர்ந்துகொள்வதில்லை? என். எம். பெரரா பேரினவாதத்தை எள்ளிநகையாடி உரையாற்றியதை இலங்கைச் சிங்களவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை? பகிர்ந்துகொள்வதில்லை?
இனத்துவ நீதி என்பது ஓர் ஒருவழிப்பாதை அல்ல. "நான் வெள்ளையரின் இனவாதத்துக்கு எதிரானவன்" என்று முழங்கினார் மன்டேலா. அது அப்படி ஒன்றும் பெரிய சங்கதி அல்ல. கையோடு, "நான் கருப்பினவாதத்துக்கும் எதிரானவன்" என்றும்  அவர் முழங்கினார். அந்த முழக்கத்துக்கு மாபெரும் முக்கியத்துவம் உண்டு. "நான் சிங்கள இனவாதத்துக்கு எதிரானவன்" என்று ஓர் இலங்கைத் தமிழர் முழங்குவது அப்படி ஒன்றும் பெரிய சங்கதி அல்ல. கையோடு, "நான் தமிழினவாதத்துக்கும் எதிரானவன்" என்று அவர் முழங்கினால், அந்த முழக்கம் ஒரு மாபெரும் வேறுபாட்டை உணர்த்தும். நம்பிக்கையை அது ஏற்படுத்தும். அவ்வாறே இலங்கை முஸ்லீங்கள், கிறீஸ்தவர்கள். மலையகத் தமிழர்கள் அனைவருக்கும் நம்பிக்கை பிறக்கும் வண்ணம் முழக்கங்கள் மேலோங்க வேண்டும்.
இலங்கை ஒரு நாடாளுமன்ற குடியாட்சி நாடு. ஆதலால் என்றென்றும் ஒரு பெரும்பான்மையே அல்லது பெரும்பான்மைக் கட்சியே அரசாங்கத்தை அமைக்கும்.  தற்பொழுது உள்ளது போல் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்தும் பெரும்பான்மையை ஈட்டிக்கொள்ளலாம். அத்தகைய பெரும்பான்மை கொண்டாடப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. பெரும்பான்மை என்பது குடியாட்சி மரத்தின் கனி. ஆனால் பெரும்பான்மைவாதம் என்பது அப்படிப்பட்டதல்ல. பெரும்பான்மைவாதம் என்பது பெரும்பான்மைக் கனியை நஞ்சுபடுத்தி அழிக்கும் கிருமி. அத்தகைய பெரும்பான்மைவாதத்தை விலக்கிவைத்து, நீதிநியாயம் பொதிந்த ஏற்பாடுகளை உள்ளடக்கி வரையப்படும் புதிய அரசியல்யாப்புக்கமைய தமக்கு உரியவற்றை இலங்கைத் தமிழர் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பான்மைவாதம் குடியாட்சிக்கு மாறானது என்பது போலவே, சிறுபான்மைவாதமும் குடியரசுநெறிக்கு கேடு விளைவிக்கும் என்பதை இலங்கைத் தமிழர் மறந்துவிடக் கூடாது. சிறுபான்மையோரின் வேட்கைகள் ஓர் உரிமைப் பட்டயமாக அமைய வேண்டும்; அது ஒரு வாதமாக அமையக் கூடாது. வடக்கும் தெற்கும் ஒன்றை ஒன்று  புரிந்துகொள்ள வேண்டும்.
முற்றுமுழுதான நீதி வேறு, எண்ணிக்கையின் பாற்பட்ட நீதி வேறு. வெறும் எண்ணிக்கையின் பாற்பட்ட நீதியை விடுத்து, முற்றுமுழுதான நீதி நிலைநாட்டப்பட வேண்டும்; எண்ணிக்கையின் பாற்பட்ட உரிமைகளை விடுத்து, மனித உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். இந்திய தலித்துகளையும் இந்திய முஸ்லீங்களையும் போலவே இலங்கைத் தமிழரும் இக்குடியரசில் தமக்குரிய தகுநிலையை முற்றுமுழுதாக எய்திக்கொள்ள வேண்டியுள்ளது; எய்திக்கொள்ளும் வண்ணம் நிலைமையைச் சீர்ப்படுத்தல் பெரும்பான்மையோரின் கடமையாக மட்டுமல்ல, அவர்கள் உவந்தேற்கும் பணியாகவும் அமைய வேண்டும்.     
அரசியல்யாப்பு வழிவகை ஊடாக சீர்திருத்தம் காணும் நிலைப்பாட்டிலிருந்து வன்முறை ஊடாகப் பிரிவினை எய்தும் நிலைப்பாட்டுக்கு, அதாவது பயங்கரவாதம் ஊடாக ஈழத்தை எய்தும் நிலைப்பாட்டுக்கு மாறியாகிவிட்டது; அதை இனித் திசைதிருப்ப முடியாது... என்றெல்லாம் எண்ணப்பட்டது. அந்த எண்ணம் இப்பொழுது மாறிவிட்டது. பேச்சுவார்த்தை ஊடாக மாற்றம் காணும் நிலைப்பாடு தோன்றிவிட்டது. பேச்சுவார்த்தையை கிடப்பில் போட்டுவிடக் கூடாது. சீர்திருத்தம் இடம்பெறும் விதத்தை அறியக் காத்திருக்கிறது வஞ்சம்! அதேவேளை, தேசிய ஐக்கிய அரசாங்கம் அதன் சீர்திருத்த முயற்சியில் வெற்றிபெறுவதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது முழு உலகமும். இந்த வாய்ப்பைத் தவற விட்டால், மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காது போகலாம்.
அன்பர்களே, தீவு என்பது ஒரு சிறிய கண்டம்; கண்டம் என்பது ஒரு பெரிய தீவு. இலங்கையை எவரும் ஒரு சிறிய தீவாக எண்ணிவிடக் கூடாது. கடந்த ஆண்டில் சமூகங்களுக்கு இடையே, அரசியல் குழுமங்களுக்கு இடையே நம்பிக்கையை ஊட்டிவளர்ப்பதில், அகந்தையை வெட்டுவதில், செருக்கினை நறுக்குவதில் வெற்றிபெற்ற இலங்கைத் தீவு ஒரு பெரிய நாடு என்பதை, எனது இந்திய நாட்டைப் போன்ற பெரிய நாடுகளை விடவும் பெரிய நாடு என்பதை இலங்கை மெய்ப்பித்துள்ளது.
பல தசாப்தங்களாகப் பூசலுக்கு உள்ளாகிவந்த இலங்கைத் தீவில் தற்பொழுது நம்பிக்கை தளிர்த்துள்ளது. நம்பிக்கை அளிக்கும் ஒரு கண்டமாக இலங்கைத் தீவு மேலோங்குமாக!
Gopalkrishna Gandhi's address at the President Maithripala Sirisena's first year in office, on 8 January 2016,
 BMICH, ColomboColombo Telegraph, 2016-01-09, தமிழ்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment