ஜோன் எச். மார்ட்டின் (John H. Martyn) திரட்டிய “யாழ்ப்பாண குறிப்புகள்” என்று பொருள்படும் Notes on Jaffna என்னும் அரிய நூலின் முதற்பதிப்பு 1923ல் வெளிவந்தது. தெல்லிப்பளை அமெரிக்க - இலங்கை ஆதீனம் (American Ceylon Mission) வெளியிட்ட இந்நூலின் மீள்பதிப்புகளை சென்னை ஆசிய கல்விச் சேவையகம் 2002ம், 2008ம் ஆண்டுகளில் வெளியிட்டது.
1505ல் போர்த்துக்கேயர் இலங்கை வந்தது முதல் 1920 வரை 4 நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட காலகட்டத்தை உள்ளடக்கிய வரலாற்றுக் குறிப்புகள் இவை. 16ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், பிரித்தானியரும் அடுத்தடுத்து யாழ்ப்பாணம் உட்பட இலங்கைத் தீவு முழுவதையும் கட்டியாண்ட காலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிகழ்வுகளை இந்நூல் திரட்டித் தந்துள்ளது. போர்த்துக்கேயரின் வருகையோடு இலங்கை வரலாற்றில் ஏற்படவிருந்த திடீர் திருப்பத்துக்கு கட்டியம் கூறும் வண்ணம் அன்றைய தென்னிலங்கை மக்களின் உள்ளப்பதிவை நூலாசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார்: “1505ல் போர்த்துக்கேய கப்பலில் வந்தவர்கள் வெள்ளை வெளேரென, அழகுடன் தோன்றினார்கள். தலைக்கும் பாதத்துக்கும் இரும்புமூடி அணிந்திருந்தார்கள். சுறுசுறுப்பாக நடமாடினார்கள். அவர்கள் பருகும் பானம் இரத்த நிறம். உண்ணும் உணவு வெள்ளைக்கல் போன்றது. ஏவும் பீரங்கியிலிருந்து இடிமுழக்கத்துடன் வெளிப்படும் இரும்புக் குண்டு நெடுந்தூரம் பாய்ந்து மலையையும் கோட்டையையும் பிளந்து தள்ளுகிறது” (Extract from a book in Sinhala quoted by Henry Charles Sirr in Ceylon and the Cingalese).
குருவரர் பிரான்சிஸ் சேவியர் இலங்கையில் கத்தோலிக்க சமயத்தை புகுத்தியது (1544), யாழ்ப்பாண மன்னன் முதலாம் சங்கிலி (1519-1561) மன்னாரில் 600 கத்தோலிக்கரை கழுவேற்றியது, “இந்து சமயம் தவிர வேறு சமயம் எதுவும் இத்தீவின் கரையை அணுகலாகாது” என்று மன்னன் முரசறைந்தது, வல்வெட்டித்துறையில் நிகழ்ந்த இறுதிச்சமரில் கடைசி யாழ்ப்பாண மன்னன் இரண்டாம் சங்கிலி (1617-1619) போர்த்துக்கேயரிடம் தோற்றது, ஈற்றில் “தமிழர் அனைவரும் கிறீஸ்தவர்களாக தீக்கை பெற்றது” பற்றிய குறிப்புகளை நூலாசிரியர் திரட்டித் தந்துள்ளார்.
1658ல் போர்த்துக்கேயரை வெற்றிகொண்ட ஒல்லாந்தர், “கத்தோலிக்க குருமாரை ஒளித்துவைத்து பாதுகாப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்” என்று முரசறைந்தார்கள். யாழ்ப்பாணத்தை “எங்கள் தேசம்” என்று குறிப்பிடும் போர்த்துக்கேய போதகர்கள் அம்முரசு கேட்டு வெகுண்டெழுந்து எழுதிச்சென்ற குறிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன: “எங்கள் வீடுகள் சூறையாடப்பட்டன. தோட்டம் துரவுகள் பாழடிக்கப்பட்டன. மனைவியர் மானபங்கம் செய்யப்பட்டனர். புதல்வியர் வன்புணர்ச்சிக்கு உள்ளாகினர்” (Henry Charles Sirr, Ceylon and the Cingalese).
1658ல் தமிழர், சிங்களவர், போர்த்துக்கேயர் சேர்ந்து ஒல்லாந்தருக்கு எதிரான சதியில் ஈடுபட்டனர் என்கிறார் இடச்சு புரட்டஸ்தாந்திய குரு வணக்கத்துக்குரிய கலாநிதி பிலிப் போல்தேயஸ் (Rev. Dr. Philip Baldaeus). இடச்சுப் படையை “எங்கள் படை” என்றும், இடச்சுக் கம்பனியை “எங்கள் மாண்புறு கம்பனி” என்றும் குறிப்பிடும் போல்தேயசின் குறிப்பு: “மன்னாரைச் சேர்ந்த தொன் லூயி பூதத்தம்பி, தொன் மனுவல் அந்திராசு என்னும் சிங்கள முதலியார், ஒல்லாந்தரின் படையினராக மாறிய போர்த்துக்கேயர், ஒல்லாந்தரின் கைதிகள் சேர்ந்து ஒல்லாந்த அதிகாரிகளைக் கொல்லச் சதிசெய்ததை சதிகாரருள் ஒருவரான அந்திராசே பின்னர் ஒப்புக்கொண்டார். அவர்களை விசாரித்து, அவர்கள் வாயினாலேயே உண்மையை நிச்சயித்த பின்னர், அவர்களைத் தூக்கிலிட்டு, தலைகொய்து, சிலுவையில் அறைய முடிவுசெய்யப்பட்டது. பூதத்தம்பியும், 5 போர்த்துக்கேயரும் ஒரு சிலுவையில் பிணைக்கப்பட்டு, கோடரியால் வெட்டப்பட்டார்கள். முதல் வெட்டு தொண்டையிலும், அடுத்த வெட்டு நெஞ்சிலும் விழுந்தது. அவர்களின் இதயங்கள் பிடுங்கி எடுக்கப்பட்டு, அவர்களின் துரோக முகங்களிலேயே வீசப்பட்டன. மலாக்காவிலிருந்து வந்த யேசு சபைக் குரு கல்தெரோவின் தலை கொய்யப்பட்டது. நோயினாலும் இயலாமையாலும் மலாக்கா திரும்ப முடியாதிருந்த கல்தெரோ இவ்வாறு நரகம் செல்லும் அவப்பேறு நிகழ்ந்தது. இரக்கத்துக்குரிய இவரை “எங்கள் ஆன்மாக்களின் பிதா” என்று விளித்து மேற்படி கயவர்கள் தமது தெய்வவிரோத நோக்கத்துக்கு ஆதரவு கோரி அனுப்பிய மடலும் அகப்பட்டது. சதியில் ஈடுபட்டதாக அல்ல, அதை அம்பலப்படுத்த தவறியதாகவே இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர்களைக் காட்டிக்கொடுக்காத குற்றத்துக்காகவே அவர் இறக்க நேர்ந்தது. ஏனைய 11 பேரும் முக்கழுமரத்தில் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்கள் புரிந்த அலுவலுக்கு உகந்த கைமாறு அது. பறவைகளுக்கு இரையாகும் வண்ணம் அவர்களின் உடல்கள் மரங்களில் தொங்க விடப்பட்டன. இந்த மோசமான அலுவலில் ஈடுபட்ட முக்கியமான ஆட்களின் தலைகள், வழிப்போக்கர்கள பார்க்கும் வண்ணம், சந்தைகளில் தொங்க விடப்பட்டன. மேற்படி நன்றிகெட்ட பீடைகளையிட்டு மேற்கொண்டு அலட்டிக் கொள்ளாதிருக்கும் வண்ணம் ஏனைய கைதிகள் அப்புறப்படுத்தப்பட்டனர்.” (Rev. Dr. Philip Baldaeus).
“1690ம் ஆண்டு சில்லாலையில் இரகசியமாக நத்தார் நள்ளிரவுத் தொழுகைக்கு ஆயத்தம்செய்த 300 கத்தோலிக்கர் ஒல்லாந்துப் படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்கள். அவர்களுள் வீம்புமிக்க 8 பேருக்கு சாட்டையடி கொடுக்கப்பட்டது. பேதுரு என்பவர் துணிந்து உண்மையை ஒப்புக்கொண்டு, மற்றவர்களையும் அஞ்சாது தண்டனைக்கு உள்ளாக வலியுறுத்தி உயிர்துறந்தார். எஞ்சியோருக்கு ஆயுட்கால கடூழியம் விதிக்கப்பட்டது. அவர்கள் விலங்கிட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்கள்” (Centenery Sketch of the Jaffna Cathedral).
1627 பெப்ரவரி 27ம் திகதி, யாழ்ப்பாணத்தை ஓர் ஆழிப்பேரலை தாக்கியபொழுது “கடற்கலங்கள் ஒரு மைல் தூரம் வரை உள்நாட்டுக்குள் வாரிச்செல்லப்பட்டன” (The Jaffna Catholic Guardian, 1916-04-15).
1707ல் இடச்சு ஆளுநர் சைமன்ஸ் (Cornelis Joan Simons 1703-1707) ஆணைப்படி ஐசாக் (Claas Isaacz) என்ற அதிகாரியால் யாழ்ப்பாண “தேசவழமை” இடச்சு மொழியில் தொகுக்கப்பட்டது. 12 தமிழ் முதலியார்கள் அதனை மீள்நோக்கி தமிழில் மொழிபெயர்த்தார்கள். ஆளுநரின் ஆணைப்படி அதன் பிரதிகள் குடிமை நீதிமன்றுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன (The Rev. Ch. Bonjean OMI).
1745ல் சிலாபம், அரிப்பு, வங்கக் கரைகளைப் பார்வையிட்டபொழுது 600 சுழியோடிகள் தலைக்கு 36 நாட்கள் முத்துக்குளிப்பதாக கணிக்கப்பட்ட்து (R. G. Anthonisz, Government Archivist, Report on the Dutch Records). பிரித்தனியர் ஆண்டபொழுது மன்னார் விரிகுடாவில் முத்துக்குளிப்பு மூலம் ஆண்டுதோறும் அரசுக்கு ஏறத்தாழ 150,000 பவுண் வருவாய் கிடைத்தது. 107 ஆண்டுகளில் 1,000,000 பவுணுக்கு மேற்பட்ட வருவாய் கிடைத்தது.
ஐரோப்பியர் சாதியத்தை பயன்படுத்தி நயமடைந்ததற்கு எடுத்துக்காட்டாக 1758ல் இடச்சு ஆளுநர் ஒரு தரகருக்கு வழங்கிய நியமனம்: “வண்ணார்பண்ணையில் வசிக்கும் வேளாளராகிய தொன் பிலிப்பு சிற்றம்பல முதலியார் மதிப்பும், செல்வாக்கும், ஆற்றலும் மிகுந்த சுதேசிகளுள் ஒருவர். அவர் தன்னால் இயன்றவரை எமது மாண்புறு கம்பனியின் நலன்களைக் கவனிப்பார், அதற்கு ஆதாயம் கிடைக்கும் வண்ணம் யானை வியாபாரிகளுடன் பேரம் பேசி அவற்றை விற்றுத் தீர்ப்பார் என்னும் எதிர்பார்ப்புடன் எமது கம்பனியின் தரகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஊழியம்செய்ய 12 பேரை நாம் விடுவித்துள்ளோம். அவர் தலைப்பா அணியவும், அதை எவ்விடத்திலும் அவிழ்க்காதிருக்கவும், தலைமேல் ஊழியர் குடைபிடிக்க, மூங்கிலால் ஆன பல்லக்கில் பயணிக்கவும் அனுமதிக்கிறோம்” (R. G. Anthonisz, Government Archivist, Report on the Dutch Records).
“சத்திய வேதாகமத்தை தமிழிலே மொழிபெயர்க்கத் தொடங்கிய மெல்லோ பாதிரியார்” (Philip de Melho) பற்றிய குறிப்பு தமிழில் தரப்பட்டுள்ளது: “நாமம் பிறபாஷை நாமமாய்த் தொனிப்பினும், சாதியாசாரத்தால் இவர் சுத்த தமிழன். சமயாசாரத்தாற் கிறிஸ்தவன். இவர் கி. பி. 1723ம் வருஷம் சித்திரை மாதம் 27ந் திகதி கொழும்பு இராசதானியிற்றானே செனனஞ்செய்து துரைத்தனத்தவரால் 1705ம் வருஷம் ஸ்தாபிக்கப்பட்ட கலாசாலையிலே எபிரேய, கிரேக்க, லத்தின், உலாந்தா, போர்த்துக்கீஸ், தமிழ் என்னும் ஆறு பாஷைகளையுங் கற்றுத்தேற்றமுற்று, இவற்றிற்கு மேலதிகமாக வேதசாஸ்திரமுங் கற்று அதிலே மிக்க பாண்டித்தியரானார்.
“ஆசாரி அபிஷேகம் பெறுவதன் முன்னரே இவர் சத்திய வேதாகமத்தைத் தமிழிலே மொழிபெயர்க்க ஆரம்பித்திருந்தார். 1753ம் வருஷம் இவர் வடமாகாணக் குரவராய் நியோகிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வந்தார். 1759ம் வருஷம் புதிய ஏற்பாடு முழுவதும் இலங்கையில் அச்சிடப்பட்டது. இதை மாத்திரமல்ல பழைய ஏற்பாட்டின் சில பாகங்களையும் மொழிபெயர்த்தார். மண்டலபுருடர் செய்த சூடாமணி நிகண்டு 2ம் தொகுதிக்கு அனுபந்தமாக இருபது உவமைப் பாட்டுகளைப் பாடிச்சேர்த்த்தனர். இவை “மெல்லொ பாதிரியாராற் செய்யப்பட்ட உவமைப் பாட்டுகள்” என்ற பெயரோடு மானிப்பாயில் அச்சடிக்கப்பட்ட நிகண்டுடன் சேர்ந்திருக்கின்றன. பன்னிரண்டாவது தொகுதியோடு நூறு பாட்டும், பின்னும் பல தொகுதிகளோடு வேறு சிலவும் பாடிச்சேர்த்த்தனர். 1790ம் வருஷம் ஆவணி மாதம் 10ந் திகதி இப்பண்டிதர் சரமதசை அடைந்தார். இறக்கும்போது இவர்க்கு வயசு அறுபத்தேழு” (பா.ச.தீ.).
“விவிலியத்தை தமிழில் பெயர்க்கும் பணியை பேர்சிவல் பாதிரியார் (Rev. Peter Percival) மேற்கொண்டிருந்தார். மீட்டியமைத்த தமிழ் விவிலியத்தில் ஆளப்பட்டுள்ள சொற்களின் தூய்மைக்கும் நேர்த்திக்கும் ஆறுமுக நாவலர், கதிரவேற்பிள்ளை போன்ற புலமையாளர்களே காரண கர்த்தாக்கள்” (The Life of C.W. Kathiravetpillai).
ஆறுமுக நாவலர் பற்றிய விரிவான தமிழ்க் குறிப்பு: “இவர் தமிழ் வித்துவான்களின் சகாயத்தால் அரியநூல்களை உணர்ந்து பாண்டித்தியம் பெற்றாரன்றிச் சமஸ்கிருதத்திலும் பயிற்சி உடையராய் உவெஸ்லியன் மிஷன் பாடசாலையில் ஆங்கில பாஷையுங் கற்று, 20 வயதில் அப்பாடசாலைத் தலைவரான பீற்றர் பேர்சிவல் தேசிகருக்கு தமிழ்ப் பண்டிதராகி வேதாகம மொழிபெயர்ப்பில் அவருக்கு நல்ல உபயோகியாகி அவருடன் கூடிச் சென்னைப் பட்டினம் போய்த் திரும்பினார். 1845ம் வருஷம் வரையிலும் அவருக்குத் துணைசெய்து அப்பால் அவரது வேலையை விட்டுத் தம்மூரிலே சைவசமயத்தை வளர்க்கவும், பாடசாலைகளை ஸ்தாபிக்கவும், பிரசங்கம் செய்யவும் கருத்துட் கொண்டாராகி, முன்பின் முப்பத்திரண்டு வருடங்களாக அம்முயற்சியிற் காலம் விட்டார். வண்ணார்பண்ணை, புலோலி முதலான இடங்களில் அன்றிச் சிதம்பரத்திலும் ஓர் பாடசாலையை ஸ்தாபித்தார். இவர் முன்னர் வண்ணார்பண்ணையிலும் பின்னர் சென்னைப் பட்டணத்திலும் அச்சியந்திரசாலைகளை ஸ்தாபித்தார். சென்னைப் பட்டணத்திற்குப் பலமுறையுஞ் சென்றுதிரும்பினர். அவ்விடத்தில் இவரது அச்சுச்சாலை இப்போதும் இருக்கின்றது. சிறியவும் பெரியவுமான அறுபதுக்கு மேற்பட்ட புத்தகங்களைத் திருத்தி அச்சிட்டுப் பிரசரித்தாரன்றி, அவ்வாறு செய்தற்காக வேறு சிலவற்றை பாதிவரையில் முடித்தும், சிலவற்றிற் கையிட்டுமிருக்கவே காத்திராப்பிரகாரம் வயது ஐம்பத்தாறு, மாதம் பதினொன்றிற் பிரமாதிவருஷம், அதாவது பிறகிட்ட 1879ம் வருஷம் தேகவியோகமானார். பாடும் திறமையிலும் இவர் குறைந்தவரல்லர். கீர்த்தனங்கள் அன்றித் தனிப்பாக்களும் பாடினர். சிலகாலமாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவந்த “சைவ உதயபானு”ப் பத்திரிகையும் இவர் செய்த முற்பிரயத்தனங்களை வித்தாய்க்கொண்டே உற்பத்திபெற்றது” (பா.ச.தீ.).
“சிவ தூஷண பரிகாரம்” என்னும் தலைப்புடன் கூடிய ஆங்கிலக் குறிப்பில் “ஆறுமுகவர்” விமர்சிக்கப்பட்டுள்ளார்: “... நெடுங்காலமாக ஆறுமுகவரும் அவர் நண்பர்களும் ஓர் அச்சியந்திரத்தை தருவிக்க ஆசைப்பட்டார்கள். பறங்கியருடன் சேர்ந்து ஒன்றை வாங்குவதற்கு அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்புறம் அந்த ஆசை மேலோங்கவே தமிழ்ப் பெரியோர் தமது பண்புகெட்ட அயலவர்களின் (பறங்கியரின்) உதவியின்றியே அந்த இக்கட்டைக் கடந்தார்கள். அதாவது மானிப்பாயில் அமைந்திருக்கும் விழுமிய அமெரிக்க அச்சுத்தாபனத்தில் அன்றாடம் பணியாற்றிவந்த நூற்றுக் கணக்கானோரை, பயிற்றப்பட்ட தொழிலாளரை, அச்சகத்தின் நன்றிகெட்ட சிப்பாய்களை அவர்கள் வேலைக்கமர்த்த தலைப்பட்டார்கள். ஆறுமுகவர் எமது சமய பரப்புரைஞர்களைப் பின்பற்றி பழம்பெரும் தமிழ் நூல்களையும் பாடநூல்களையும் தேர்ந்து தெளிந்து தொடர்ந்து வெளியிட்டார். இந்துசமயத்தையும் கிறீஸ்தவ சமயத்தையும் உடன்படுத்தியும் முரண்படுத்தியும் கலப்படம் செய்தார். வேட்கையும் திறமையும் கொண்ட அந்த இயக்கத்தின் உச்சக்கட்டம் எனும்படியாக “சிவ தூஷண பரிகாரம்” 1854ல் வெளிவந்தது. அதன் ஆசிரியர் ஆறுமுகவரே என்பதில் ஐயமில்லை. திருவிவிலியத்தை அவர் கருத்தூன்றிக் கற்றுத் தேர்ந்தவர் என்பதை “சிவ தூஷண பரிகாரம்” வியக்கத்தக்க முறையில் உறுதிப்படுத்துகிறது. யூதர்களின் எண்ணங்களும் சடங்குகளும் சைவர்களின் எண்ணங்களையும் சடங்குகளையும் போன்றவை என்றும், அவற்றின் தோற்றுவாய் சாலவும் தெய்வீகமானது என்றும், அவற்றை ஏற்றிப்போற்றுவதால் பயன்கிடைக்கும் என்றும் காட்டுவதற்கு ஆறுமுகவர் கெட்டித்தனமாக முயன்றுள்ளார். தந்திரமான முறையில் எங்கள் புனிதநூல்களை ஆதாரமாகக் கொண்டு இந்துக்களின் நெறிமுறை, தவம், யாத்திரை, இலிங்க வழிபாடு, முழுக்கு, சடங்கு வகைகளை அவர் நியாயப்படுத்தியுள்ளார்” (Rev. E. J. Robinson, Hindu Pastors).
கிளாலி தேவாலயத்துடன் (Klaly St. James Church) தொடர்புடைய சுவையான தமிழ்க் குறிப்பு: “அஞ்ஞான மார்க்கத்திலிருந்து முதல்முதல் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றுத் திருச்சபையுடன் சேர்ந்தவன் கனம்பொருந்திய எற்லி ஐயருடைய குதிரைவேலைபார்த்த ஒருவனே. இவன் 1825ம் ஆண்டின் முடிவில் சாமுவேல் என்னும் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றான். தன் மனைமக்களுக்குச் சுகவீனமான காலத்தில் சுத்தவாளரின் தயவைப்பெறும் நோக்கமாய் யாழ்ப்பாணத்திற்குக் கிழக்கே இருபது கட்டை தூரத்திலிருக்கும் கிளாலியென்னுமிடத்திலுள்ள பெயர்போன றோமான் கத்தோலிக்க கோவிலுக்கு நேர்த்திக்கடன் செய்து, அங்கே வருஷாவருஷம் போக்குவரவு பண்ணி, சந்தியோகுமையோருக்குக் காணிக்கையாக ஒரு வெள்ளிப்பட்டயத்துடன் பரிசையையும் அக்கோயிற் சுவாமியார்வசம் ஒப்பித்தான்” (The Christian Friend, October 1871).
“புத்தூர் நிலாவரை கிணறு நீள்சதுரமானது. சுண்ணத்தரையில் அமைந்துள்ள கிணற்றின் நீளம் 40 அடி, அகலம் 25 அடி. 1824ல் வலுத்த யந்திரம் கொண்டு அதை இறைத்துப் பார்த்தார்கள். நீர்மட்டம் மாறவில்லை. அதன் ஊற்றை தேர்ந்துதெளிய முடியவில்லை” (Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society).
காசிநாதப் புலவரின் “பனங்காய்ப்பாரதம்” பற்றிய தமிழ்க் குறிப்பு: “இவர் அச்சுவேலிக் கோயிற்பற்றில் வசித்த சோதிட சாஸ்திரிகளுள் ஒருவர். கிறிஸ்தாப்தம் 1799ம் வருஷம் பிறந்து 1854ம் வருஷம் இறந்தனர். இலக்கிய ஆராய்ச்சியும் உடையராய் வித்தாண்மை பூண்டு ‘தாலபுராணம்’ எனும் ஓர் பாடல் இயற்றினார். அதைப் ‘பனங்காய்ப்பாரதம்’ என வழக்கத்திற் கூறுவர். பனைமரப்பெருமையும் அவற்றின் பிரயோசன நயங்களுமே அப்பாடற்பொருளாம்” (பா.ச.தீ.).
1823ல் அமைக்கப்பட்ட மட்டக்களப்பு குருமடத்தில் (Batticaloa Seminary) கற்பிக்கப்பட்ட பாடங்கள் வியக்கத்தக்கவை: “விவிலியம், ஆங்கில இலக்கணம், ஆங்கில மொழி, ஆங்கில இலக்கியம், ஆங்கில வியாசம், எண்கணிதம், அட்சரகணிதம், நிகண்டு, நன்னூல், இயற்கை மெய்யியல், உளமெய்யியல், தருக்கவியல், வரலாறு, குறள், இயூக்கிளிட் (Euclid), கோணவியல், அளவை, வேதியியல், கிறீஸ்தவம், ஐரோப்பிய வானியல், இந்து வானியல், சட்டவியல், வடமொழி, தமிழ் வியாசம்” (The Life of C.W. Kathiravetpillai).
1817ல் சமயம் பரப்பும் பணிமேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்ற வண. ஜோசெப் நைட் (Rev. Joseph Knight) தாம் எதிர்கொண்ட தடங்கல்களை விபரித்துள்ளார்: “சமயம் பரப்புவோர் இழிசினர் என்றும், அவர்களை வீட்டுக்குள் அனுமதித்தால் வீடு மாசுபடும் என்றும் மக்கள் கருதினார்கள். காலை வங்களாவுக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுக்கும் பண்டிதர் வீடுதிரும்பும் வழியில் எதிர்ப்படும் குளத்தில் நீராடிச் செல்வது வழக்கம்” (The Rev. W. Oakley's Report to the Missionary Conference, South India and Ceylon, 1879).
1880ல் “குமாரசிங்க முதலியார் மாதோட்டத்திலே உள்ள நாவற்குளத்திலே பிறந்தவர். சமயாசாரத்தாற் கதலிக்கிறிஸ்தவர். பேர்பெற்ற புலவரும் அனுபவசாலியான ஆயுள்வேதியருமாயிருந்தார். இதனால் சனங்களுக்குள்ளே இவர்க்கு மிகச்செல்வாக்கிருந்தது. 1800ம் வருஷம் நோர்து தேசாதிபதி (Governor Frederick North) பூணாரவரி (நகைநட்டு வரி) ஒன்றைச் சனங்கள்மேல் ஏற்ற, அதனால் மாதோட்டப் பிரசைகள் அரசாட்சியாருக்கு விரோதமாய்க் கலிபிலி ஆரம்பித்தார்கள். இவரின்றிக் கலகம் நிகழாதென அரசாட்சியார் நினைந்து இவர்பேரிற் பிராது (வழக்கு முறைப்பாடு) தொடங்கினார். அபராதியென விளங்கியதால், இவரைப் பிடித்துக் கசையடிப்பிக்க, இவர் உள்ளம் சுரந்து தேவமாதா பேரிலே ஆசுகவியாய் அனேக பாடல்கள் பாடினார். (பா. ச. தீ)
தன்னிறைவு: “ஊர்காவற்றுறையிலிருந்து 16 மைல் தூரத்தில் அமைந்துள்ள நெடுந்தீவு 6 மைல் நீளமும், 3 மைல் அகலமும், அறவே தட்டையான முருகைக்கல் தரையும், வடக்கே பனந்தோப்புகளும், தேற்கே கற்கள் பரந்து பசும்புல் படர்ந்து சூரியா மரங்கள் அடர்ந்த வெளியும் கொண்டது. அதன் பரப்பளவு 11,500 ஏக்கர் (18 சதுர மைல்). 2,500 ஏக்கரில் உலர் தானியப் பயிர்ச்செய்கை, 1,100 ஏக்கரில் பனைகள், 4,700 ஏக்கரில் புல்வெளி உண்டு. கிழக்கு குறிச்சி, நடுக்குறிச்சி, மேற்கு குறிச்சி என்னும் மூன்று குறிச்சிகள் இருக்கின்றன. மக்களிடம் 1,905 வத்தைகள் உள்ளன. பிரதான ஏற்றுமதிகள்: பாய், சுறாமீன் சிறகு, புட்டியிலிட்ட நெய், பானை, பையிலிட்ட கொப்பரா, பினாட்டு, பனங்கொட்டை, தேங்காய், பருத்தி நூல், கணவாய் ஓடு, கால்நடை... நெடுந்தீவு நெய்க்கு யாழ்ப்பாணத்தில் மிகுந்த கிராக்கி உண்டு. போர்த்துக்கேயர் இங்கு வைத்து குதிரையினத்தைப் பெருக்கியதால், இது குதிரைத் தீவு எனவும் பெயர்பெற்றது. அவர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் குதிரையினப் பெருக்கத்தில் ஈடுபட்டனர். குதிரையினப் பெருக்கம் பின்னர் கைவிடப்பட்டது. சிறுப்பிட்டியில் இன்றும் குதிரைத் தொழுவங்களின் சிதைவுகள் காணப்படுகின்றன (J. P. Lewis, Ceylon Civil Service).
சுயதொழில்முயற்சி: “பிலிப் சின்னவர் அருமுயற்சி படைத்த பயிர்ச்செய்கை நிபுணர் ஒருவரின் மகன். அழகும், துடிப்பும், வயதை விஞ்சிய உயரமும், விறலும், விருத்தியின் அறிகுறிகளும் மிகுந்த இளைஞன். 15 வயதில் தமிழ்ப் பாடசாலையை விட்டு தந்தையின் பண்ணைக்குள் அடியெடுத்து வைத்த இளைஞனுக்கு உழுதலும், விதைத்தலும், கத்தரித்தலும், எருவிடலும், நீர்பாய்ச்சலும், கதிரறுத்தலும், கதிர்கட்டலும், பாடம்போடலும், சூடடித்தலும், தூற்றலும், நாற்றுப் போடலும், நாற்று நடுதலும், வேலி அடைத்தலும், பட்டி அடித்தலும், ஆடுமாடு வளர்த்தலும், குறிசுடலும், பாய்-கூடை இழைத்தலும், நார் உரித்தலும், கயிறு திரித்தலும், மாட்டுக்கு நுகம் பூட்டலும், இரட்டை மாட்டுவண்டி செலுத்தலும், பால் கறத்தலும், தயிர் போடலும், வெண்ணெய் கடைதலும், வீடு வேய்தலும், பரண் அமைத்தலும்... அன்றாடம் புகட்டப்பட்டன (Life of Philip Chinnaver).
யாழ்ப்பாணத்தின் பொருள்வளம்: “மண்வீடுகள் மங்கி கல்வீடுகள் ஓங்கி வருகின்றன. மக்கள் அதிக நகைநட்டுகளை அணிந்து வருகிறார்கள். எல்லா வகையான ஊர்திகளும் நடமாடி வருகின்றன. அதிக பணம் புழங்கி வருகிறது. தெருவமைப்பும் கல்விப் போதனையும் விருத்தி அடைவதே அதற்கான காரணம். உள்ளூர் அஞ்சல் அலுவலகத்தில் மாற்றப்படும் காசுக் கட்டளைகளைப் பார்க்கும்பொழுது, யாழ்ப்பாணவாசிகள் இத்தீவின் ஏனைய பாகங்களுடனும், இந்தியாவுடனும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் தொடர்புகளைப் பெருக்கி வருவது புலனாகிறது” (J. P. Lewis, Acting Government Agent, Administration Report on the Northern Province for 1903).
“யாழ்ப்பாண மேட்டுக் குடியினரின் வீடுகள் ஓட்டுக்கூரையுடன் கூடிய நாற்சார் கல்வீடுகள். அவற்றைவிட தென்னோலை அல்லது பனையோலைக் கூரையுடன் கூடிய நடுக் குடியினரின் வீடுகள் அதிகம். அவற்றைவிட (பாமர மக்களின்) குடிசைகள் இன்னும் அதிகம்” (Biographical Sketch of Don Nicholas Tisseveerasinghe Mudaliyar)
களவைக் கட்டுப்படுத்த அரசாங்க அதிபர் டைக் (P. A. Dyke) எடுத்த நடவடிக்கை பற்றிய சுவையான தமிழ்க் குறிப்பு: “காட்டிராசாக்களாய் இருந்து, பகற்காலத்திலே வெளிகளில் வசித்து, இராக்காலத்திலே நாட்டிற்சென்று, வீட்டுமுற்றத்தில் தீப்பந்தம் போட்டு, வீட்டு யசமானரைக் கூவி, “உம்சேமத் திரவியம் எவ்வுழி” என வினாவி, அவர்கள் மனதைக் கருக்கி உருக்கி கொள்ளையடித்து உண்டு, உடுத்து, வணங்காத் தலையராய்த் திரிந்த அம்மையன், கரியன், பாளைவெட்டிய கந்தன் முதலிய கள்வர் குழாத்தை மெள்ளக் கருவறுத்து அச்சமின்றிப் போக்குவரவு செய்தற்கும், அமைதியாய் துயின்று எழுவதற்கும் உதவியாயாக சந்திக் காவலரை ஏற்படுத்தினார் டைக்” (S. John, History of Jaffna).
டைக் பரிவாரத்தின் வன்னிப் பயணம்: “குதிரைகள், காளைகள், வண்டிகள், பல்லக்குகள், கூடாரங்கள், மூட்டை முடிச்சுகள், வண்டியோட்டிகள், கூலிகள், சமையலாட்கள், பணிவிடையாளர்கள், பந்தக்காரர்கள், தூதுவர்கள், ஏவலாளர்கள் புடைசூழப் பயணித்து மாந்தோட்டையில் தங்கியிருந்தார் அரசாங்க அதிபர். மாவட்ட தலைமைக்காரர் அவரை வேந்தராய்க் கொண்டாடி விருந்தோம்பினார். தலைமைக்காரர் கூடாரத்தொகுதிக்கு மிதமிஞ்சிய அளவில் பாலை வாரி இறைத்தது கண்டு வியந்த அரசாங்க அதிபர், ‘இவ்வளவு பால் எங்கிருந்து கிடைக்கிறது?’ என்று தலைமைக்காரரிடமே வினவினார். தனது மந்தைச் செல்வத்தைக் கொண்டு அரசாங்க அதிபரை மேலும் ஆட்கொள்ள விழைந்த தலைமைக்காரர், ‘தாங்கள் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு குழாய் அமைத்தால், அன்றாடம் தங்கள் காலைக்காப்பிக்கு வேண்டிய பாலை அல்லது அதைவிட அதிகமான பாலை மேலதிக செலவோ சிரமமோ இன்றி இந்த மாந்தோட்டைப் பாற்பண்ணையிலிருந்து நேரே உங்கள் யாழ்ப்பாண வங்களாவுக்குப் பாய்ச்ச முடியுமே!’ என்று விடையிறுத்தார் (J. C. Guardian, 1894-03-03).
1864ல் என்றி பிரான்சிஸ் முத்துக்கிருஷ்ணா முன்வைத்த யாழ் மாநகராட்சி யோசனை யாழ்ப்பாணத்தவர்களாலேயே நிராகரிக்கப்பட்டது! அந்த தமிழ்-ஆங்கில நாவலர் ஐரோப்பா சென்று, முற்போக்கான அமைப்புகளைக் கண்டுவியந்து, யாழ்ப்பாணம் திரும்பி, கூட்டம் கூட்டி, யாழ்ப்பாணத்துக்கு உள்ளூராட்சி கோரி முழக்கமிட்டார். கூட்டத்தை அடுத்து இடம்பெற்ற கலந்துரையாடலில் சட்டவாளர்கள் கெளல்ட் (Gould), புவிராஜசிங்கம், சந்தியாகுப்பிள்ளை, ஊடகர் ஸ். ஜோன்பிள்ளை, பள்ளிக்கூட அதிபர் ஆர். வில்லியம்ஸ் உட்படப் பலர் பங்குபற்றினார்கள். அவர்களுள் பெரும்பாலானோர் உள்ளூராட்சி யோசனையை நிராகரிக்கவே, யாழ்ப்பாண மாநகராட்சி யோசனை படுதோல்வி அடைந்தது (J. C. Guardian, 1894-03-17)
கலை, இலக்கிய முயற்சிகள் பற்றிய தமிழ்க் குறிப்புளுக்கு ஓர் எடுத்துக்காட்டு: “கணபதி ஐயர் என்னும் புலவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வசித்த ஓர் பிராமணர். தமது சுற்றத்தவருள் ஒருவராகிய சண்முக ஐயர் என்பவர் சிலதருக்கள் கீர்த்தனைகளோடே தொடங்கியும் நிறைவேற்றச் சக்தியற்று விட்டிருந்த ‘சுந்தரி நாடகத்தை’ ‘வாளபிமன் நாடகம்’ என்று மாற்றி, எவரும் வியக்கப்பாடி முடித்தனர். இந்நாடகம் நாட்டு மாதிரியாயினும் மிகுபளபளப்பும் மளமளப்புங் கொண்டது. இ/தன்றி, வயித்திலிங்கக் குறவஞ்சி, மலையகந்தினி நாடகம், அலங்கார ரூபநாடகம், அதிரூபவதி நாடகம் என்பவைகளோடு, வட்டுநகர்ப்பிட்டி வயற்பத்திரகாளி பேரிற் பதிகமும் ஊஞ்சற் பிரபந்தமும், பரித்தித்துறைக் கணேசர் பேரில் வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருள் என்னும் பாவிகற்பம் பெற்ற நூறு கவிதைகளும் பாடினர். பிரமசாரி விரதம் பூண்ட இவர் இற்றைக்கு நூறு வருடங்களின் முன் எழுபத்தைந்து வயதிலே தேகவியோகமானார்” (பா. ச. தீ).
“கூழங்கை தம்பிரான் காஞ்சிபுரத்திற் பிறந்த மகாவித்துவான். பதிசாஸ்திரங்களிலுங் கசடறத்தேறிய கலைஞானி. தென்மொழியாகிய தமிழிலன்றி வடமொழியாகிய ஆரியத்திலும் பாண்டித்தியம்பெற்ற இவர் யாழ்ப்பாணம்வர, இங்கே வண்ணார்பண்ணையிலே வைத்தியலிங்கச் செட்டியார் என்னும் வணிகர் திலகர் இவர்க்கு நண்பராய் இவரைப் பரிபாலித்து வந்தனர். இவர் நல்ல இலக்கணக் களஞ்சியமாகையாற் பவணந்தி முனிவர் செய்த நன்னூலுக்கு வியாக்கியானம் எழுதினது மாத்திரமல்லாது, பற்புலமைகளையும் இயற்றினார். ஞானநூல் வல்லவராதலால் எம்மதத்துக்குஞ் சம்மதமான நடையினராகி ‘யோசேப்புப் புராணம்’ என்னுங் காவியத்தை இருபத்தொரு காண்டத்தில் ஆயிரத்திருபத்துமூன்று விருத்தத்திற் பாடித் தமது நேசராகிய மெல்லோப் பாதிரியாருக்கு அதைப் பிரதிட்டை செய்தனர். இப்புராணமன்றி ‘நல்லைக் கலிவெண்பா’, ‘கூழங்கையர் வண்ணம்’ ஆதியாம் பல பாடல்களை இவர் பாடி இருக்கின்றார். பிற்காலத்திலே சுண்டிக்குளிக் கோயிற்பற்றைச் சார்ந்த சிவியாதெரு இவர்க்கு உறைவிடமாய் இருந்தது. அதி விருத்தாப்பிய வயதில் 1795ம் வருஷம் இவரது மரணசம்பவம் நடந்தது (பா. ச. தீ).
“விஸ்வநாத சாஸ்திரர் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சார்ந்த அராலிக் குறிச்சியில் இருந்த ஓர் பிராமணர். இவரது கணிதத் திறமையைப்பற்றிக் கேள்வியுற்ற இலங்கை நீதிராசாவாகிய சேர் அலெக்சாந்தர் யோன்ஸ்தன் (Sir Alexander Johnston) இங்கிலாந்து அரசராகிய நான்காம் ஜோட்சுக்கு இவரைப்பற்றிப் பாராட்டி வியந்து நிருபம் அனுப்பி ‘இராசாவின் கணிதர்’ என்னும் பட்டப்பெயரை இவர்க்குப் பெற்றுக் கொடுத்தனர்.
“இவ்வாறு கோவறிந்த கணிதசிங்கமாகிக் கீர்த்திப் பிரஸ்தாபமுற்றிருந்தாராயினும், சந்திரகிரகணம் ஒன்றையிட்டு, வட்டுக்கோட்டைச் சாஸ்திரசாலைத் தலைவராகிய பூர் பண்டிதர்க்கு (Rev. Dr. Poor) இவர் பரிதிமுன் பனியெனச் சவிமழுங்கித் தோல்விபோயினர். 1828ம் வருஷம் பங்குனி மாதம் 28ம் திகதி தோற்றிய அச்சந்திர கிரகணம் பரிசத்தில் 15 நிமிஷங்களும், விமோசந்த்தில் 24 நிமிஷங்களும் இவரது கணிதத்திற் பிழைபட்டன. இவர் வல்ல கணிதரேயல்லாது பெரும்பெயர்வாங்கிய புலவருமாகி ‘மாவைக்குறவஞ்சி, வண்ணைக்குறவஞ்சி, குருநாதர் கிள்ளைவிடுதூது என்னும் பெயரிய மூன்று பாடல்களை இயற்றினர். இவரிடம் சோதிடம்கற்ற மாணவர் பலருள் வட்டுக்கோட்டைச் சாத்திரசாலை ஆசிரியருள் ஒருவராகிய அமரிக்க மிஷனுக்காகப் பஞ்சாங்கம் கணித்த சோமசேகரம்பிள்ளை (Mr. Dashiel) ஒருவர் (பா. ச. தீ).
1817ல் அமெரிக்க ஆதீனத்தை (American Mission) சேர்ந்த வொரன் பாதிரியார் (Ven. Warren) தெல்லிப்பளையில் மருத்துவமனை அமைத்து யாழ்ப்பாணத்தில் மருத்துவ சேவையைப் புகுத்தினார். 1847ல் யாழ்ப்பாணம் வந்தடைந்த மருத்துவர் கிறீன் (Dr. Samuel Fisk Green) முதலில் வட்டுக்கோட்டையிலும், பிறகு மானிப்பாயிலும் மருத்துவப் பணியாற்றினார். மானிப்பாயில் ஒரு மருத்துவமனையை அமைத்ததோடு, மாணவர்கள் பலருக்கு அவர் மருத்துவப் பயிற்சியும் அளித்தார். யாழ்ப்பாணத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றிய மருத்துவர் கிறீன் இலங்கையில் ஆயிரக்கணக்கானோரை பலிகொண்ட வாந்திபேதி நோயை எதிர்கொண்டு போராடுகையில் அதே நோயினால் பீடிக்கப்பட்டார். ஆங்கில மருத்துவப் பதங்களின் பொருளை தமிழில் செவ்வனே வரையறுக்கும் அரும்பெரும் பணியை அவர் பல்லாண்டுகளாக மேற்கொண்டார். ஒட்டுமொத்தமாக 4,000 பக்கங்கள் கொண்ட பின்வரும் நூல்களை அவர் தமிழ்ப்படுத்தி அச்சிட்டார்: Cutter’s Anatomy, Physiology and Hygiene, Maunsell’s Obstetrics, Druitt’s Surgery, Gray’s Anatomy, Hooper’s Physician’s Vade Mecum, Well’s Chemistry, Daltoe’s Physiology, Waring’s Indian Pharmacopoeia (Helen I. Root, A Century in Ceylon).
1888ல் ஆறுமுகம் வெற்றிவேலு என்னும் மருத்துவ அறிஞர் நாயன்மார்கட்டில் ஓர் ஆயுள்வேத வைத்தியசாலையை அமைத்தார். இது இலங்கையின் முதலாவது ஆயுள்வேத வைத்தியசாலை எனப்படுகிறது (C. N. P.).
1841ல் யாழ்ப்பாணம் ஊடகத்துறையுள் அடியெடுத்து வைத்ததற்கு The Morning Star சான்று பகர்கிறது. மாதம் இரு தடவை தமிழ்-ஆங்கில ஏடாக வெளிவந்த அதன் பதிப்பாசிரியர் என்றி மார்ட்டின் (Henry Martyn, நூலாசிரியரின் தந்தை) மட்டக்களப்பு குருமடத்தின் (Batticaloa Seminary) முதலாவது பட்டதாரியும், இலங்கையின் முதலாவது உள்நாட்டு ஊடகரும், நிழற்படப்பிடிப்பாளரும், தமிழ்-ஆங்கில அறிஞரும், அறிவியலாளரும், கவிஞரும், கலைஞரும், கணிதரும் ஆவார். செய்திக் குறிப்புகளுடன் கல்வி, அறிவியல், இலக்கியம், ஆட்சியியல், சமயவியல்... கட்டுரைகளும் இந்த எழுத்தூடகத்தில் இடம்பெற்றன. ஏனைய எழுத்தூடகங்கள்:
1853 Literary Mirror, C.W.Kathiravetpillai
1862 Jaffna Freeman, Nicholas Gould
1863 Ceylon Patriot, C.W.Kathiravetpillai
1871 Jaffna News, Hughes
1872 Jaffna College Miscellany
1876 Jaffna Catholic Guardian
1889 Hindu Organ, T. P. Chellappahpillai
1898 The Victoria College Magazine
1900 Jaffna Central College Magazine
1901 Ceylon Law Review, Isaac Tambiah
1904 Christian Review, Isaac Tambiah
1904 St. John’s College Magazine
1905 St Patrick’s Annual (The Jaffna Catholic Guardian, 1912-01-20)
யாழ்ப்பாணத்தின் முதலாவது வங்கி (The Oriental Bank Corporation கிளை) 1864ல் திறந்து வைக்கப்பட்டது (C. N. P.).
யாழ் குடாநாட்டின் முதலாவது கூட்டுத்தாபனத்தை (கூட்டுப் பங்குத் தாபனத்தை) அமைக்கும் நோக்குடன் 1896 ஏப்பிரில் 17ம் திகதி மாலை 4:30 மணிக்கு கூடிய கூட்டத்தில் வேண்டிய ஒழுங்குவிதிகளை வரைவதற்கு 15 பேர் கொண்ட பணிப்பாளர் குழு நியமிக்கப்பட்டது. பொருளாளர்: Alex Toussaint; செயலாளர்: Proctor S. T. Arnold. மூலதனம்: ரூபா 100,000; பங்குகள்: 1,000; ஒரு பங்கு: ரூபா 100 (Hindu Organ, 1896-04-22).
St. Patrick's College அதிபர் Rev. Father P. Dunne O. M. I. ஆக்கிய தமிழ்ச்சுருக்கெழுத்து 16 பக்கங்கள் சிற்றேடாக வெளியிடப்பட்டது (J. C. Guardian).
1875ல் உவேல்ஸ் இளவரசர் அல்பேர்ட் எட்வேர்ட்டின் யாழ்வருகையைக் கொண்டாடுமுகமாக யாழ் மணிக்கூட்டுக் கோபுரம் அமைக்கப்பட்டது. வரவேற்பு நிதியில் எஞ்சிய ரூபா 6,000, அத்துடன் உள்ளூரில் திரட்டப்பட்ட ரூபா 4,000 அதற்குப் பயன்படுத்தப்பட்டது. கோபுரத்தை வடிவமைத்தவர் அரசாங்க கட்டிடக்கலைஞர்: Smither. மணிக்கூடு நன்கொடை: Sir James Longdon (J. C. Guardian, 1892-11-26).
1900 ஆடிமாதம் யாழ்ப்பாணம் தொடருந்து தண்டவாளம் இடும் பணி தொடங்கியது. 1902 பங்குனி மாதம் 21 மைல் நீளமான காங்கேசந்துறை–சாவகச்சேரி கூறு முற்றுப்பெற்றது. புரட்டாதி மாதம் சாவகச்சேரி–பளை கூறு முற்றுப்பெற்றது (Sir J. W. Ridgeway). “ஆளுநர் றிஜ்வேயின் புண்ணியத்தால் 1905 ஆவணி மாதம் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையே ‘இரும்புக் குதிரை’ ஓடத்தொடங்கியது. அதற்கு 13 மணித்தியாலம் 20 நிமிடம் பிடித்தது. மேற்படி தொடருந்துச் சேவையை வேண்டி வாதாடியோருள் இராமநாதன், லைட்டன் பாதிரியார் (Father C. H. Lytton), வழக்குரைஞர் நாகலிங்கம், Oliver, Chamberlain, Fergusaon, Capper, Charles Strantenberg ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் (Hindu Organ, 1905-08-26).
“தென்கிழக்கு ஆசியாவிலிருந்து (விடுமுறைபெற்று தனது ஊராகிய) வயாவிளான் திரும்பிய எஸ். டி. தோமஸ் இலண்டனிலிருந்து ‘நோறியா’ எனப்படும் சூத்திரவாளித் தொகுதியை இறக்குமதிசெய்தார். அது யாழ் குடாநாட்டில் கிணற்றுத் தண்ணீர் இறைப்பதற்கு உகந்தது” (Hindu Organ, 1905-01-18).
உப்பாற்றில் பன்னெடுங் காலமாக உப்பு உற்பத்தி இடம்பெற்று வந்துள்ளது. “அது எப்போது தொடங்கியது என்று கூறமுடியாது. ஒல்லாந்தர் காலத்தில் உப்பு உற்பத்தி இடம்பெற்றது. சிவியா தெருவில் வசிக்கும் சிவிகையர் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அரசாங்கத்துக்கே உப்பு விற்கலாம். உப்பு அரசாங்கத்தின் ஏகபோகம். உப்பு உற்பத்தி உரிமம் வழங்கும் முறை 1885ல் நடைமுறைக்கு வந்தது” (Hindu Organ, 1907-09-25).
ஓவியர், கம்மியர் பற்றிய தமிழ்க் குறிப்பு: “யாழ்ப்பாணத்திலே சித்திரங்கள் இயற்றுவதில் திறமைவாய்ந்த ஐரோப்பியராலும் பாராட்டப்பட்டவர் பலர். மேஸ்திரி சந்தியோகு சிற்பத் தொழிலில் தேர்ந்தவர். இவரால் இயற்றப்பட்ட சந்தியோகுமையோர் ஆலயத்தின் தூபி மிகவும் வியப்புக்குரியது. யேம்ஸ் டினில் என்பவர் சித்திரப்படங்கள் வரைவதில் முதன்மை பெற்றவர். அவுறாம்பிள்ளை யோசேப்பு இரும்புக் கம்மியத்தில் நனிசித்திபெற்று ஐரோப்பியராலும் கணிக்கப்பட்டவர். காதர் மம்மது சருமவேலையில் தீரர். சின்னத்தம்பி தாமோதரம்பிள்ளை பொன்னாபரணங்கள் செய்வதில் திகாந்தம் பேரெடுப்புற்றவர். தச்சுத்தொழிலில் வண்ணார்பண்ணையில் வசித்த காத்தியென்பவர் பெரும்புகழ் படைத்தவர்” (M. F.).
“1911ல் 5ம் ஜார்ஜ் பிரித்தானிய மன்னராக முடிசூடியதை ஒட்டி யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம். எல்லா வீடுகளும் சோடிக்கப்பட்டு, விளக்கேற்றப்பட்டன. சாராயக்கடை குத்தகையாளர் கே. வைத்திலிங்கம் மாவட்ட நீதிமன்ற வளவில் வைத்து 5,000க்கு மேற்பட்ட ஏழைகளுக்கு அரிசி அளந்து கொடுத்தார். முதலாவது ஏழைக்கு அரசாங்க அதிபர் (Freeman) தனது கையினால் ஒரு கொத்து அரிசியும் 5 சதம் காசும் கொடுத்து அந்த நிகழ்வைத் தொடக்கி வைத்தார். றிஜ்வே மண்டபத்தில் வைத்து ஏறத்தாழ் 1,000 பேருக்கு ஆடைவகைகள் அளிக்கப்பட்டன. தம்பாப்பிள்ளை முதலியாருக்கும், பருத்தித்துறை-சாவகச்சேரி அஞ்சல் அதிபர் ஆர். டபிள்யூ. அழகக்கோனுக்கும் முடிச்சூட்டுவிழா விருதுகள் வழங்கப்பட்டன” (Hindu Organ).
“தேநீர்க்கடை முதலாளி வல்லிபுரம் ஒரு பொதுநலமி. பெரியகடைத் தெருவிலுள்ள கங்கா சத்திரம், கீரிமலைக் கேணி, முக்கிய மையங்கள் பலவற்றில் பெருஞ்செலவில் வெட்டிய கிணறுகள் என்பன அவருடை வள்ளன்மைக்கும் தாராண்மைக்கும் நினைவுச் சின்னங்கள். யாழ்ப்பாணத்தில் முதன்முதல் பேரெடுப்பில் தேநீர்-மிட்டாய்க் கடைகளைத் திறந்தவர் அவரே. அவரது செல்வம் பெருகிய காரணம் அதுவே” (Hindu Organ, 1911-09-20).
முதலாம் உலகப் போருக்கான காரணங்கள்: “1914 யூன் 28ம் திகதி சேர்பிய மாணவன் பிரின்சிப் (Prinzip) செரயேவோ நகரத்தில் வைத்து அவுஸ்திரிய பேரரசின் இளவரசன் பேர்டினன்ட், இளவரசி இருவரையும் சுட்டுக்கொன்றதே முதலாம் உலகப் போருக்கான உடனடிக் காரணம். எனினும் போருக்கான அடிப்படைக் காரணங்களோ அரசியல், இனத்துவம், சூழியல், கருத்தியல் சார்ந்தவை. மேற்கு ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த வேட்கைகொண்ட ஜேர்மனிக்கு சேர்பியரின் சுதந்திரப் போராட்டம் எதிரிடையாக அமைந்தது. ஜேர்மன் தலைநகர் பேழினிலிருந்து ஈராக்கிய தலைநகர் பாக்தாத் வரையான பாதையை - ஹம்பேர்க்கிலிருந்து தரை மார்க்கமாக பாஸ்ரா செல்லும் பாதையை - சேர்பியா இடைமறித்து நின்றது. அத்துடன் ஜேர்மனியருக்கும் சிலாவியருக்கும் இடையே நிலவிய பகையும் சேர்ந்துகொண்டது (சேர்பியர், சிலாவிய இனத்தவர் என்பது தெரிந்ததே). அக்டன் பிரபு (Lord Acton) கூறியது போல், ‘எண்ணங்கள் பொது நிகழ்வுகளின் காரணமேயன்றி, விளைவுகள் அல்ல.’ அந்த வகையில் காட்டுமிராண்டிகளின் வரன்முறையிலிருந்து பிறக்கும் வலுவேட்கைக் கருத்தியலே (will-to-power கருத்தியலே) போருக்கான அடிப்படைக் காரணம். கடுங்கோன்மை, மையமயப்படுத்திய கட்டுக்கோப்பு, உச்ச அதிகாரம் படைத்த படை, அதை ஏற்றிப்போற்றும் கல்விப் போதனை ஆகியவற்றின் பெறுபேறாக விறல்மிகுந்த விஞ்ஞான-தொழினுட்ப போரியந்திரம் ஒன்று சம்பந்தப்பட்ட தளபதிகளின் கைவசம் கிடைத்துள்ளது. அந்த உச்சவலுக் கருத்தியலின் ஆசான்: நீட்சே (Nietzsche). ஆட்சியியலுக்கு அதைப் பயன்படுத்திய வரலாற்றறிஞர்: திரெட்ஸ்கே (Treitschke). படையியலுக்குப் பயன்படுத்தியவர்: பேண்ஹார்டி (Bernhardi). அதன் தோற்றுவாய்: ஜேர்மனி. எனினும் அதை விதந்துரைப்போர் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்” (Basil Mathews).
விண்ணன், “எம்டன்” இரண்டும் ஒத்தசொற்களாகக் கொள்ளப்படுவதுண்டு. “‘எம்டன்’ ஒரு ஜேர்மன் விசைப் போர்க்கப்பல். அதன் வேகம் மணித்தியாலத்துக்கு 25 கடல் மைல். பீரங்கிக் குழாயின் விட்டம் 4 அங்குலம். பேரரசுகளின் கடற்படைகளால் தேடப்பட்டும் கூட, அவற்றுக்கு அகப்படாமல் 30 கப்பல்களை அது மூழ்கடித்தது. படையதிகாரி காழ் வொன் முலர் (Karl von Muller) அதன் வீராதிவீரன். பகைவரின் கப்பல் எதுவும் அகப்பட்டால், அதைக் கொள்ளையடித்த பின்னர், அண்மையிலுள்ள துறையில் சிப்பந்திகளையும் பயணிகளையும் பத்திரமாக இறக்கிவிட்டு, அதை மூழ்கடித்து விடுவான். அவன் ஒரு தடவை சென்னைக்குப் பறந்துவந்து எண்ணெய்க் குதங்கள் மீது ஒருசில குண்டுகளை வீசிச் சென்றதுண்டு. இன்னொரு தடவை பினாங் துறையினுள் புகுந்து இரசிய விசைப்போர்க் கப்பல் ஒன்றைக் கவிழ்த்து, பிரெஞ்சு நீரடி ஏவுகணைக் கலம் ஒன்றை மூழ்கடித்து மறைந்ததுண்டு. எம்டனால் 2,000,000 பவுண் முதல் 4,000,000 பவுண் வரையான இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது. ஈற்றில் ‘சிட்னி’ எனப்படும் ஆஸ்திரேலிய விசைப்போர்க் கப்பலின் கையில் அகப்பட்டு, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தது. எனினும் காழ் வொன் முலருக்கு படைமரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ‘எம்டன்’ அழிக்கப்பட்டது (M. J. P.).
1918 நவம்பர் 18ம் திகதி முதலாம் உலகப் போர் முடிவடைந்ததை யாழ்மக்கள் கொண்டாடினார்கள். வைகறையில் ஆலய, தேவாலய மணிகள் ஒலித்தன. வழிபாடுகள் நிகழ்ந்தன. நகரத் தெருக்கள் பலவற்றிலும் கொடிகள் பறந்தன. மக்களின் வீடுகளும், அரசாங்க கட்டிடங்களும் சோடிக்கப்பட்டன. மதியம் மாவட்ட நீதிமன்ற வளவில் அரசாங்க அதிபர் முன்னிலையில் 1,700 பேருக்கு சோறு கொடுக்கப்பட்டது. மாலை முற்றவெளியில் காவல்துறையினர் மற்றும் ஆயிரக்கணக்கான தாய்மொழி, ஆங்கிலமொழிப் பள்ளிமாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. காவல்துறையினர் மூன்று தடவைகள் வேட்டுகள் தீர்த்தார்கள். அரசாங்க அதிபர் மேடையில் நிற்க, பள்ளிமாணவர்களும் சாரணர்களும் பல்வண்ணக் கொடிகளும், பதாகைகளும் தாங்கி, பிரித்தானிய பேரரசின் கொடிக்கும், அரசாங்க அதிபருக்கும் மரியாதை செலுத்தியபடி அணிவகுத்துச் சென்றமை கண்கொள்ளாக் காட்சியாய் அமைந்தது. காவல்துறையினருக்கு போர்ச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. றிஜ்வே மண்டபத்துக்கு எதிரேயுள்ள பசுந்தரையில் அரசாங்க அதிபர் நினைவுமரம் நாட்டினார். மாண்புமிகு ஸ்ரீ கனகசபை ஆங்கிலத்தில் உரையாற்றினார். அதன் பொருளை எம். எஸ். இராமலிங்க முதலியார் தமிழ்ப்படுத்திக் கூறினார். அன்றிரவு நகரம் ஒளிவீசியது. முற்றவெளியில் வாண வேடிக்கை நிகழ்ந்தது” (M. S. 1919-07-26).
“1918நவம்பர் 10ம் திகதி யாழ்ப்பணத்தில் ஒரு கலவரம் நிகழ்ந்ததை அடுத்து பல புடைவைக் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. காவல்துறையினர் உடன் கலவரத்தை அடக்கினார்கள். கலவரம்செய்த 8 பேர் காயமடைந்தார்கள். அவர்களுள் ஒருவர் உயிர்துறந்தார். தமிழ், முஸ்லீம் வியாபாரிகளுக்கு ஏற்பட்ட இழப்பு: 35,169 ரூபா. அரசாங்க அதிபரின் கணக்குப்படி: 22,132 ரூபா. 1915ம் ஆண்டின் 23ம் இலக்க கட்டளைச் சட்டத்துக்கமைய அத்தொகையை மீட்க முடிவு செய்யப்பட்டது” (Precis of Government Correspondence).
1918 நவம்பர் 17ம் திகதி யாழ் குடாநாடு புயலாலும் மழையாலும் தாக்குண்டது. “24 மணித்தியாலங்களுக்குள் 25 அங்குல மழை பெய்தது. வீடுகள், பயிர்கள், ஆடுமாடுகள், தென்னைகள், வேறு மரங்கள் அள்ளுண்டு பேரழிவு நிகழ்ந்தது. உள்ளூர்ச் சபை நிதியத்திலிருந்து ஒவ்வோர் உறுப்பினருக்கும் 100 ரூபா முற்பணம் கொடுக்கப்பட்டது. விழுந்த வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு பூநகரியிலிருந்து காட்டுமரம் கொணர்ந்து இலவசமாக வழங்குவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, மண்டைதீவு, கொழும்புத்துறை படகோட்டிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தடவை இலவசமாக மரம் ஏற்றிவந்து கொடுக்க முன்வந்தார்கள். ஆளுநர் 300 ரூபா நிதி வழங்கினார். அரசாங்க அதிபர் 2,000 ரூபா செலவிட ஆளுநர் அனுமதியளித்தார். மலாயா அரசும், தென்கிழக்கு ஆசிய குடியேற்ற அரசும் தனித்தனியே 5,000 டாலர் நிதியுதவி புரிந்தன. வெள்ள நிவாரண நிதியாக 46,358 ரூபா 23 சதம் சேர்ந்தது. இதுவரை 29,228 ரூபா 87 சதம் செலவிடப்பட்டுள்ளது” (1918-11-22).
__________________________________________________
இன்னும் பற்பல தமிழ், ஆங்கிலக் குறிப்புகள் மேற்படி நூலில் இடம்பெற்றுள்ளன. குறிப்புகளை மீள்நோக்கும்பொழுது ஒரேயொரு சங்கதி உள்ளத்தை உறுத்துகிறது:
1864ல் (பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில்) என்றி பிரான்சிஸ் முத்துக்கிருஷ்ணா என்பவர் யாழ்ப்பாணத்துக்கு உள்ளூராட்சி கோரி இட்ட முழக்கத்தை யாழ்ப்பாணப் பெரியோர் முறியடித்தனர்!
1926ல் இலங்கைக்கு ஒரு கூட்டாட்சி முறைமையை பண்டாரநாயக்கா விதந்துரைத்தபொழுதும் தமிழ்ப் பெரியோர் அதை வன்மையாக எதிர்த்தார்கள்.
1927ல் நியமிக்கப்பட்ட டொனமூர் ஆணையம் (Donoughmore Commission) விதந்துரைத்த அரசியல்யாப்புச் சீர்திருத்தங்களை பொன் இராமநாதன் தலைமையில் இயங்கிய அகில இலங்கை தமிழர் கழகம் (All-Ceylon Tamil League) எதிர்த்து நின்றது. டொனமூர் ஆணையம் விதந்துரைத்த சர்வசன வாக்குரிமையை “Casting pearls before swine” (குரங்கின் கையில் கொடுத்த பூமாலை) என்று விமர்சித்தார் பொன் இராமநாதன். டொனமூர் ஆணையம் விதந்துரைத்த அரசியல்யாப்புச் சீர்திருத்தங்களை யாழ் இளையோர் பேரவையும் (Jaffna Youth Congress) எதிர்க்கவே செய்தது. சி. பாலசிங்கம், ஹன்டி பேரின்பநாயகம், எம். எஸ். பாலசுந்தரம், பி. கந்தையா, டி. ஏன். சுப்பையா, ஜே. முத்துசாமி, டி. சி. இராசரத்தினம், எம். எஸ் இளையதம்பி, பி. நாகலிங்கம் முதலியோர் அதன் முன்னணியில் செயற்பட்டார்கள். இலங்கையில் 1931 மே 4ம் திகதி தேர்தல் நடப்பதற்கு ஒரு கிழமைக்கு முன்னர் (1931 ஏப்பிரில் 25ம் திகதி) யாழ்ப்பாண இளையோர் பேரவை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானம்: “சுதந்திரம் ஒவ்வொருவரதும் களையவொண்ணாத பிறப்புரிமை என்று இந்த மாநாடு கருதுகிறது. இந்த நாட்டின் இளையோர் தமது நாட்டின் சுதந்திரத்தை ஈட்டுவதற்கு தமது உயிரை அர்ப்பணிக்கும்படி இந்த மாநாடு வேண்டிக்கொள்கிறது. சுதந்திரம் ஈட்டுவதற்கு டொனமூர் அரசியல்யாப்பு எதிரிடையாக அமைவதால், அந்த யாப்புத் திட்டத்தைப் புறக்கணிக்கவும் இப்பேரவை உறுதிபூணுகிறது” (Sri Lanka Reader, Edited by John Clifford Holt, Duke University Press, London, 2011, p. 477). 1931 மே 8ம் திகதி இளையோர் பேரவை யாழ்ப்பாணத்தில் நடத்திய மாபெரும் கூட்டத்தில், “அரச மன்றத்தை (State Council) புறக்கணிக்குமாறும், உடன் சுதந்திரம் ஈட்டப் பாடுபடுமாறும் இலங்கை மக்களிடம் கேட்டுக்கொள்ளும் தீர்மானம்” நிறைவேற்றப்பட்டது.
1988ல் வட-கீழ் மாகாண மன்றத்துக்கான முதலாவது தேர்தலையும், 2005ல் ஜனாதிபதிக்கான தேர்தலையும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் புறக்கணித்தார்கள்.
1864 முதல் 2013 வரை 150 ஆண்டுகள் கொண்ட காலப்பகுதியில் உள்ளூராட்சி, சர்வசன வாக்குரிமை, தேர்தல் உட்பட பற்பல மக்களாட்சி முறைமைகளை அவ்வப்பொழுது நாங்கள் புறக்கணித்து வந்துள்ளோம்.
2012ம், 2013ம் ஆண்டுகளில் இம்மூன்று முறைமைகளையும் உள்ளடக்கும் மாகாண மன்றத் தேர்தலில் முறையே கிழக்கு-வடக்குவாழ் மக்கள் பங்குபற்றியது ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது.
________________________________
மணி வேலுப்பிள்ளை 2014-09-05
No comments:
Post a Comment