நான் கடவுளிடம் முழுவதையும் சொல்லப் போகின்றேன்

3 வயது சீரிய குழந்தை இறக்கமுன் உதிர்த்த வாக்கு


அன்வர் எ. கான்

 

குழந்தையின் வாக்கையும் படத்தையும் பார்த்த பிறகு நான் தூக்கத்தை இழந்தேன். மானுடம் எம்மை மாபெரும் ஏக்கத்துக்கு உள்ளாக்கும் கதையை குழந்தையின் முகத்தில் கண்டேன். இவ்வுலகில் எஞ்சிய மானுடத்திடம், அதன் மனிதாபிமானம் குறித்து வினா எழுப்பும் நிலைக்கு என்னை இக்குழந்தை தள்ளிவிட்டுள்ளது. 


இளைய வறிய படையினரைப் பலியிட்டு, முதிய செல்வக் கும்பல் புரியும் போரின் தாக்கத்தை உணர்த்தும் அதேவேளை, உள்ளத்தை உருக்கி, இதயத்தை ஒடித்து, சிந்திக்க வைக்கும் வலுக்கொண்ட குழந்தையின் படமும், வாக்கும் இவை.


சீரியாவில் உள்நாட்டுப் போர்


அறபு வசந்தம் வீசத்துவங்கிய காலம் அது. 2011 மார்ச் 15ம் திகதி சில மாணவர்கள் தமது பாடசாலைச் சுவரில், “அடுத்தது நீர்தான், மருத்துவர் அவர்களே!” என்ற அறைகூவல் ஒன்றைப் பொறித்தார்கள். அசாத் அதிபராகப் பதவியேற்க முன்னர் மருத்துவராகப் பணியாற்றியவர்.  


அன்று முதல் இரசாயன ஆயுதம், பட்டினி, நாடுகடத்தல், முற்றுகை, சட்டவிரோத கைது, சித்திரவதை கொண்டு ஒரு தசாப்தமாக, இரசியாவின் துணையுடன் புரியப்படும் சீரியாவின் உள்நாட்டுப் போரில் இலட்சக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளார்கள், காயப்பட்டுள்ளார்கள், இடம்பெயர்ந்துள்ளார்கள்...


ஐ. நா. அகதிகள் ஆணையாளர் விடுதுள்ள அறிக்கையின்படி, 2 கோடி மக்கள் கொண்ட சீரியா நாட்டிலிருந்து 66 இலட்சம் பேர் வெளியேறியுள்ளார்கள். துருக்கியில் மட்டும் 37 இலட்சம் பேர் அடைக்கலம் புகுந்துள்ளார்கள், 67 இலட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளார்கள். 1 கோடி 30 இலட்சம் பேர் வெளியுலக மனிதாபிமான உதவியில் தங்கியுள்ளார்கள். 


போரின் தன்மை


போர் என்பது: மக்களை மக்கள் இழப்பது, உயிரெடுப்பது, உயிரிழப்பது, மக்களை வாழவிடாது மாய்ப்பது, இறைவன் அருளிய அரிய வாழ்வை ஒழிப்பது...


சமயத்தின் பெயரால் மக்கள் ஒருவரை ஒருவர் கொல்ல விழைவது அறக்கொடிய பயங்கரம் அல்லவா! எனினும் பல நூற்றாண்டுகளாக அது நடந்து வருகிறது. இன்னமும் அது தொடர நாம் அனுமதிப்பது இன்றைய தலையாய பிரச்சனை அல்லவா! 


நாம் இன்னொரு நாட்டுக்குப் போய், அங்கு போர் புரியும் முயற்சியில் உதவும்பொழுது, அங்கு மேலும் நாம் தீங்கு புரிகின்றோமே ஒழிய, உண்மையில் அங்கு நாம் எதுவித உதவியும் புரியவில்லை. அங்கு நாம் சமாதானத்தை அல்லவோ நிலைநாட்ட வேண்டும்! சமய உணர்வில் ஒன்றியிருப்பதை நாம் தவிர்க்க அல்லவோ வேண்டும்!


போரினால் வெறுமனே காலமும் வலுவுமே வீணாகி வருகின்றன. போரினால் மக்களின் உள்ளம் நிறைவுகொள்ளப் போவதில்லை. அவர்களுடைய தேவைகள் நிறைவேறப் போவதில்லை. 

கொலைஞர்கள்


“எமது சமயத்தின் பெயரால் பிற சமயத்தவரைக் கொன்று பழிவாங்கப் போகின்றோம்” என்று கூறுவோர் தமது மூளையை மாத்திரமல்ல, தமது இதயத்தையும் பயன்படுத்தவில்லை அல்லவா! அந்தக் குழந்தையின் விழிகளில் அவர்கள் பூதங்களாக மாறியவர்கள் அல்லவா!


கொல்வோரை எண்ணியும் நான் இரங்குகின்றேன். அவர்களிடம் அன்பும் பரிவும் வற்றிவிட்டன. அவர்களிடமிருந்து அவை களையப்பட்டுவிட்டன. நெறிபிறழ்ந்த கொலைஞர்கள் மீது நான் பரிவு கொள்கின்றேன். உங்களை குற்ற உணர்விலும், கழிவிரக்கத்திலும், சீற்றத்திலும், வருத்தத்திலும் ஆழ்த்தும் வாக்கினை உதிர்த்துவிட்டு அந்தக் குழந்தை இறந்து போயிற்று. குழந்தையின் வாக்கும் படமும் மாபெரும் கனதி வாய்ந்தவை என்பது உங்களுக்குப் புரியுமோ எனக்குத் தெரியாது. 


எந்த தலைமுறைக்காக நீங்கள் போரிடுகின்றீர்களோ, அந்த தலைமுறையைப் பலியிட்டு நீங்கள் போரிடக் கூடாது அல்லவா! சமயப் போர்களை, சமயநெறிகளின்படி அல்லவோ புரிய வேண்டும்? இறைவனை ஒரு கருவியாக, போரை ஊக்குவிப்பவராக, ஏவிவிடுபவராக, படைதிரட்டுபவராக, ஆயுதபாணியாகத் தானே நீங்கள் பயன்படுத்துகின்றீர்கள். மண்ணுக்காகவும், நிலத்துக்காகவும், எண்ணெய்க்காகவும் புரியப்படும் போரை விட சமயத்துக்காப் புரியப்படும் போர் அறவே கொடியது.  


குழந்தை


இந்த மூன்று வயதுக் குழந்தையின் வாக்கிற்கு மேலதிக விளக்கம் இம்மியும் தேவையில்லை. அதன் வாக்கும் படமும் உள்ளத்தைப் பிளக்கின்றது. இதயத்தைப் பிழிகின்றது. குழந்தையின் வாக்கில் அப்பாவித்தனமான, அதேவேளை நேரிய அப்பழுக்கற்ற உள்ளம் புலப்படுகின்றது. மெய்ம்மையை விட வேறெதுவும் அதன் கண்ணுக்குக்குப் புலனாகவில்லை. அப்பாவித்தனமாக அது முறையிடுகின்றது. அந்த அப்பாவித்தனமான முறைப்பாடே இதயத்தை தகர்க்கின்றது.  


தீயோர் இறைவனின் பெயரால் தீமையை நிலைநிறுத்தி வருவதை இறைவனிடம் நான் தெரிவிக்கப் போகின்றேன்; என் ஆசைகள் ஒழிந்ததையும், என் கனவுகள் கலைந்ததையும் இறைவனிடம் நான் தெரிவிக்கப் போகின்றேன்; என் பிஞ்சுடல் நைந்து, இன்னுயிர் பிரிந்து, இருளினுள் புகுந்ததை நான் இறைவனிடம் தெரிவிக்கப் போகின்றேன்; உலகத்துக்கு திரும்பிவந்து, மதிநலத்தை இங்கு மறுபடியும் புகுத்தும்படி இறைவனிடம் கேட்கப் போகின்றேன்… என்றெல்லாம் அந்தக் குழந்தை சொல்வது போலவே எனக்குப் படுகின்றது. ஐயகோ!  


அன்பும் பரிவும் இறைவனிடமிருந்து வருபவை. பிறரை ஏற்றுக்கொள்ளும் அன்பின் உறைவிடமே  நல்லிதயம். ஒருவரின் இயல்பை மாற்ற, மெய்யாகவே கடவுளை அனுமதித்தால் மாத்திரமே, பிறரை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கைகூடும்.  இறைவனால் மட்டுமே மெய்யான சமாதானத்தை நிலைநாட்ட முடியும். 


அந்த சீரிய குழந்தையின் குடும்பத்துக்காக இறைவனிடம் இத்தால் நான் இறைஞ்சுகின்றேன். 


உலகம் முழுவதும் பயங்கரவாளர்களின் தாக்குதல்களில் மாண்ட உயிர்களுக்கு இக்கட்டுரையை இத்தால் நான் சமர்ப்பணம் செய்கின்றேன்.  

____________________________________________________________________________


Anwar A. Khan, I am gonna tell God everything, Sri Lanka Guardian, 2021-05-18, abridged and translated by Mani Velupillai, 2021-05-26. 

http://www.slguardian.org/2021/05/wailings-3-year-old-syrian-said-before.html

No comments:

Post a Comment