ஒற்றையாட்சிக்கு நகரும் இந்தியா

பிரபாத் பட்நாயக்

_______________________________________________________________________________________

இந்தியா செயலளவில் ஓர் ஒற்றையாட்சி அரசை நோக்கித் தள்ளப்பட்டு வருகிறது. மாநிலங்களை ஒதுக்கிவிட்டு, தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதிய வேளாண்மைச் சட்டங்கள், பொருட்கள்-சேவைகள் வரி இழப்பீடு, ஜம்மு-காஷ்மீர் பிளப்பு, புதிய கல்விக் கொள்கை என்பன அதை உணர்த்துகின்றன. 


இணைப்பாட்சி


இணைப்பாட்சி என்பது இந்திய அரசியல்யாப்பின் அடிப்படைக் கூறுகளுள் ஒன்று. யாப்பின் பாயிரத்தில் “இணைப்பாட்சி”, “சமயச்சார்பற்ற” ஆகிய சொற்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று யாப்பு மன்றத்தில் உரையாற்றிய பொருளியல் பேராசிரியர் கே. டி. ஷா தெரிவித்தார். இந்தியக் குடியரசின் இணைப்பாட்சித் தன்மையும், சமயச்சார்பின்மையும் தெரிந்ததே என்பதால், அதைச் சுட்டியுரைக்கத் தேவையில்லை என்று கலாநிதி அம்பேத்கர் அதற்கு மறுப்புத் தெரிவித்தார்.


யாப்பின் 7ம் அட்டவணையில் இரண்டு நிரல்கள் உள்ளன. அவற்றில் மத்திக்கும் மாநிலங்களுக்கும் உரிய நியாயாதிக்கங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது (ஒருங்கியல்) நிரலில் மத்திக்கும் மாநிலங்களுக்கும் உரிய பொது நியாயாதிக்கங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. எனினும் அன்றுதொட்டு மாநிலங்களின் நியாயாதிக்கத்துள் மத்திய அரசு அத்துமீற முற்பட்டு வந்துள்ளது. அத்துமீறும் முனைப்பு தற்பொழுது மேலும் வலுவடைந்துள்ளது. அந்த வகையில் இந்தியா செயலளவில் ஓர் ஒற்றையாட்சி அரசை நோக்கித் தள்ளப்படு வருகிறது என்பது ஒரு மிகைபட்ட கூற்றாகத் தெரியவில்லை. 


பொருட்கள்-சேவைகள் வரி


மாநிலங்கள் வரி அறவிடுவதற்கு யாப்புவாரியாக அளிக்கப்பட்ட அதிகாரங்களை விட்டுக்கொடுக்கும்படி மத்திய அரசு மாநில அரசுகளைத் தூண்டியது. மாநிலங்களின் தலையாய வருவாய்-மூலமாகிய விற்பனை வரிக்குப் பதிலாக, மத்திய அரசின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பொருட்கள்-சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படும் (பொருட்கள்-சேவைகள்) வரியை அது புகுத்தியது. அதனால் மாநிலங்களின் வருமானத்தில் ஏற்படும் சரிவு ஈடுசெய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதியை மத்திய அரசு தற்பொழுது மீறியுள்ளது. இப்பொழுது மாநிலங்களுக்கு வரி வசூலிக்கும் அதிகாரம் கிடையாது (அவை மூன்றே மூன்று பண்டங்கள் மீதே வரி அறவிட முடியும்). மத்திய அரசு இழப்பீடு அளிக்கும் என்ற வாக்குறுதியும்  காப்பாற்றப்படவில்லை.  


புதிய கல்விக் கொள்கை


யாப்பின் ஏற்பாடுகளுக்கு மாறாக மத்தியமாக்கப்பட்டவை மூலவளங்கள் மாத்திரம் ஆகா.  தீர்மானம் எடுக்கும் படிமுறையும் மத்தியமாக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக கல்வித்துறை ஒருங்கியல் நிரலில் உள்ளது. எனினும் மாநிலங்களுடன் கலந்துசாவாமல் புதிய கல்விக் கொள்கை ஒன்றை மத்திய அரசு புகுத்தியுள்ளது. அதன்படி மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்கபடுகிறது. வேளாண்மை என்பது மாநில நிரலில் உள்ளது. எனினும் மாநில அரசுகளுடன் கலந்துசாவாமலேயே நாட்டின் வேளாண்மை ஒழுங்குகளில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தும் மூன்று சட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.  அதனால் உழவர்வாழ்வில் மிகுந்த தாக்கம் விளையப் போகிறது. மாநில வருவாயில் கணிசமானளவு இழப்புகள் ஏற்படப் போகிறது. 


ஜம்மு-காஷ்மீர்


மாநிலத் துறைகளுக்குள் அத்துமீறும் அதே மத்திய அரசினால் மாநிலங்களின் இருப்பையே ஒருதலைப்பட்சமாக மாற்றமுடியும். ஜம்மு-காஷ்மீர் அரச சட்டமன்றத்தின் இசைவின்றியே அந்த மாநிலம் இரண்டு புதிய மத்திய ஆள்புலங்களாகப் பிளக்கப்பட்டது தெரிந்ததே. அவ்வாறு பிளப்பதற்கு அந்த மாநிலத்தின் இசைவை மத்திய அரசு பெற்றிருக்க வேண்டும். அந்த மாநிலம் ஆளுநரின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. மத்திய அரசினால் அமர்த்தப்பட்ட அதே ஆளுநரின் ஊடாகவே அந்த இசைவைப் பெற்றிருக்க வேண்டும். அது ஒரு முன்னிகழ்வாய் அமைவதால், இனி எந்த வேளையிலும், எந்த மாநிலத்தையும் ஆளுநரின் ஆட்சிக்கு உட்படுத்தி, மத்திய அரசினால் அமர்த்தப்படும் அதே ஆளுநரின் இசைவை மாநில அரசின் சட்டபூர்வமான இசைவுக்கு நிகராகக் கொண்டு, அதே மாநிலத்தை  எத்தனை துண்டுகளாகவும் பிரிக்கலாம்! இவ்வாறு மாநிலத்தின் இருப்பே மத்திய அரசின் தற்றுணிபுக்கு உட்படுகிறது என்றால், அது ஒற்றையாட்சி அரசினை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட ஓர் அடி ஆகிறது அல்லவா! 


இந்துத்துவ-வணிகக் கூட்டு


இந்தியாவை செயலளவில் ஓர் ஒற்றையாட்சி அரசாக மாற்றுவதே இந்துத்துவக் குழாம் மற்றும் உலகளாவிய மூலதனத்துடன் ஒருங்கிணைந்த வணிக-நிதித்துறை  இரண்டினதும் உள்நோக்கம். தற்பொழுது இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வணிக-இந்துத்துவ கூட்டின் பொது நிகழ்ச்சிநிரலில் முதன்மை அளிக்கப்பட்டுள்ள சங்கதிகளுள் இந்தியாவை செயலளவில் ஓர் ஒற்றையாட்சி அரசாக மாற்றும் அலுவலும் ஒன்று. 


இரட்டைத் தேசிய உணர்வு


வங்காளிகள், மலையாளிகள், குஜராத்தியர், தமிழர் என்ற பிராந்திய, மொழிசார்ந்த உணர்வுடன் கூடிய இந்தியர் என்ற உணர்வு (இரட்டைத் தேசிய உணர்வு) ஒவ்வோர் இந்தியரதும் சிறப்பியல்பாகும். அதன் வழிவந்ததே இந்திய அரசின் இணைப்பாட்சித் தன்மை. அவ்வகை உணர்வுகள் இரண்டும் சுதந்திரப் போராட்ட காலத்தில் வலுப்பெற்றவை. எனவே இணைப்பாட்சித் தன்மையுடன் கூடிய ஓர் அரசியல் ஒழுங்கின் ஊடாக இரண்டு உணர்வுகளுக்கும் இடங்கொடுக்க சுதந்திர இந்திய அரசு முற்பட்டது. அவை இரண்டுக்கும் இடையே உள்ள நுண்ணிய சமநிலையைப் பேணுவதற்கு இணைப்பாட்சித் தன்மையைக் கட்டிக்காத்தல் இன்றியமையாதது. விதிமுறைக்கு அமையாமல் ஒன்றுக்கு மேலாக ஒன்றை முதன்மைப்படுத்துவது மேற்படி சமநிலையைக் குழப்பும்.  நாட்டின் ஒற்றுமையைக் கெடுக்கும். எடுத்துக்காட்டாக பிராந்திய, மொழிசார்ந்த உணர்வினைப் புண்படுத்தி, மட்டுமீறிய மத்தியமயமாக்கத்தில் ஈடுபட்டால், அது எதிர்விளைவுக்கே வழிவகுக்கும். அது பிரிவினைவாதத்துக்கும் பிரிவினைக்குமே இட்டுச்செல்லும்.  


இந்தியாவின் சிக்குப்பிக்கான இந்த நிலைவரத்தை இந்துத்துவ தரப்புகள் புரிந்துகொள்ளவில்லை. சுதந்திரப் போராட்டத்தில் அவர்கள் பங்கு வகித்ததில்லை. அவர்களைப் பொறுத்தவரை இந்தியா என்பது உருவாகிவரும் நாடல்ல; அது நினைவுக்கு எட்டாத காலத்திலிருந்தே “இந்து நாடாக” விளங்கிவரும் “இந்துக்களின்” நாடு. எத்தகைய பிராந்திய, மொழிசார்ந்த உணர்வின் மீது இந்திய பொது உணர்வு கட்டியெழுப்பப்பட்டுள்ளதோ அத்தகைய பிராந்திய, மொழிசார்ந்த உணர்வினை அவர்கள் இழிவுபடுத்துகிறார்கள்;  எல்லோர் மீதும் “ஒரே மொழி”, “ஒரே பண்பாடு” போன்ற ஒருமைப்பாட்டை மத்தியிலிருந்து திணிக்க முற்படுகிறார்கள். இன்றியமையாத, நாடளாவிய “இலட்சிய” (சிந்தனைசார்ந்த) ஐக்கியத்தை அவர்கள் கருத்தில் கொண்டுள்ளார்கள். அவர்களைப் பொறுத்தவரை அதிலிருந்து வழுகுவது “தேசவிரோதம்” ஆகிறது. இணைப்பாட்சித் தன்மை “தேசத்தை” பலவீனப்படுத்துகிறது என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆதலால்தான் இணைப்பாட்சித் தன்மைக்கு அவர்கள் மறுப்புத் தெரிவிக்கிறார்கள்.  


மத்தியமயமாக்கம்


இந்துத்துவ தரப்புகள் மத்தியமயமாக்கத்தை நாடுவதற்கு சந்தர்ப்பவாதம் மாத்திரம் காரணமல்ல (சந்தர்ப்பவாதம் நிலவுவதும், தாக்கம் விளைவிப்பதும் உண்மையே). அவர்கள் அனைவரும் இணைப்பாட்சிக்கு எதிரானவர்கள்; அதை உள்ளூர வெறுப்பவர்கள்; ஒற்றையாட்சி அரசை நாடுபவர்கள். (உண்மையில் இறையாட்சி அரசுகள் அனைத்தும் அப்படிப்பட்டவையே). 


வணிக-நிதிக் குழுமம்


அது போலவே வணிக-நிதிக் குழுமமும் மத்தியமயமாக்கத்தை நாடுகின்றது. பொருளாதாரத் துறையை மத்தியமயமாக்கும் நிலைப்பாட்டுக்கு வணிக-நிதிக் குழுமத்தின் ஏகபோக மூலதனம் துணைநிற்கிறது. தனது வேட்கைகளை நிறைவேற்றுவதற்கு, மத்தியமாக்கப்படவேண்டிய அதே அரசின் ஆதரவு அதற்குத் தேவைப்படுகிறது. தனது வேட்கைகளை நிறைவேற்ற ஏகபோக மூலதனம் படைத்த குழுமத்துக்குத் தேவைப்படும் ஆயுதம் மத்தியமயமாக்கப்பட்ட அரசே. 


விதிவிலக்கு


எனினும் இந்த விதிக்கு ஒரு முக்கிய விலக்குண்டு. இணைப்பாட்சி ஓங்கிய நாட்டில்  ஒரு பிராந்திய அரசினை விட மத்திய அரசு மேற்படி ஏகபோக மூலதனம் மற்றும் பாரிய மாநகர மூலதனம் படைத்த குழுமத்துக்குச் சார்பாகச் செயற்படும்  சூழ்நிலைகள் குறையவும் கூடும்.  அத்தகைய ஒரு சூழ்நிலையில் அத்தகைய ஒரு மூலதனத் தரப்பு மத்தியைப் பலவீனப்படுத்தவும், பிராந்தியத்தை வலுப்படுத்தவும் விரும்பும்; இணைப்பாட்சிக் கட்டமைப்பினுள் அதிகாரங்களும், மூலவளங்களும், தீர்மானம் எடுக்கும் படிமுறைகளும் பரவலாக்கப்படுவதை விரும்பும். ஈற்றில் இணைப்பாட்சி அரசு தகர்ந்து, பிராந்தியம் பிரிந்து, மத்தியமயப்பட்ட புதிய அரசுகள் அமைவதை அது தன்னலம் கருதி ஊக்குவிக்கும்.  


யூகோசிலாவியா


இங்கு எமது கண்முன் தோன்றும் எடுத்துக்காட்டு: யூகோசிலாவியாவின் நிலைகுலைவு. நாசிகளுக்கு எதிராகப் போராடிய வரலாறு சேர்பியாவுக்கு உண்டு. ஜேர்மனிய  முதலீட்டாளர்களின் வேட்கைகளை சேர்பியர்கள் மிகுந்த ஐயுறவுடன் நோக்கினார்கள். யூகோசிலாவியா என்ற ஐக்கிய நாட்டினுள் சேர்பியா ஒரு வலிய பிராந்தியமாக விளங்கியது. ஐக்கிய யூகோசிலாவியாவின் மத்திய அரசினை தனது ஆதிக்கத்துக்கு உட்படுத்தலாம் என்று ஜேர்மனிய முதலீட்டாளர்கள் நம்பவே இல்லை. ஆதலால் யூகோசிலாவியாவின் நிலைகுலைவை  அவர்கள் ஊக்குவித்தார்கள்.  


அதேவேளை இந்தியாவில் உள்ளது போல் வணிக-நிதிக் குழுமத்தின் நலன்களை மத்திய அரசே முன்னிலைப்படுத்த விரும்புமிடத்து, இணைப்பாட்சிக் கட்டமைப்பு பலவீனப்படுவதையே அக்குழுமம் விரும்பும். அதிகாரங்களும், மூலவளங்களும், தீர்மானம் எடுக்கும் படிமுறைகளும் பரவலாக்கப்படுவதையே அக்குழுமம் நாடும். தனது வேட்கைகளை முன்னிலைப்படுத்த அது பற்பல மாநில அரசுகளை நாடவேண்டி நேராது. 


மாநிலங்கள் தமது திட்டங்களுக்கு உள்ளூர் உற்பத்தியாளர்களை அல்லது அரசுத் துறை அமைப்புகளை அமர்த்த எண்ணக்கூடும்; அல்லது வணிக-நிதிக் குழுமத்துக்கு இடர் விளைவிக்கும் காணிகளை உழவரிடமிருந்து கையேற்கும்பொழுது அவர்களுக்கு இழப்பீடு செலுத்த மாநிலங்கள் எண்ணக்கூடும். 


உழுகுலம்


ஒப்பந்த வேளாண்மை ஊடாகவும், சட்டதிட்டத்துக்கு உட்படாத சந்தைகள் ஊடாகவும் உழுகுலத்தின் வேளாண்மைக்குள் தாபனத்துறை அத்துமீற வழிவகுக்கும் வண்ணம் அண்மையில் இயற்றப்பட்ட சட்டங்களை மாநில சட்டமன்றங்கள் பலவும் என்றுமே அனுமதித்திருக்க மாட்டா. ஐயுறவுக்கிடமான சட்டதிட்பம் கொண்டு இயற்றிய சட்டத்தை  மாநிலங்கள் மீது மத்திய அரசு திணித்துள்ளது. சட்டதிட்பத்தில் ஐயம் ஏற்பட்டும் கூட,  அச்சட்டம் திணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை விட நீதித்துறை அதன் சுதந்திரத்தை இழந்துவிட்டது எனபதையே இது உணர்த்துகிறது.


பாரதிய ஜனதா கட்சி


இந்தியாவை செயலளவில் ஓர் ஒற்றையாட்சி அரசாக மாற்றும் விடயத்தில் இந்துத்துவ தரப்புக்கும், வணிக-நிதிக் குழுமத்துக்கும் இடையே கருத்தொருமைப்பாடு நிலவுகிறது.  இந்துத்துவ-வணிகக் கூட்டின் பிரதிநிதியாக விளங்கும் இன்றைய பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருப்பது வியப்புக்குரியதல்ல. மத்திய-மாநில அரசுகளுக்கு இடைப்பட்ட அரசியல்-பொருளாதார உறவுகளில் மாத்திரம் அது புலப்படவில்லை. அதற்கு நிகரான முனைப்பு கல்வி, பண்பாட்டுத் துறைகளிலும் காணப்படுகிறது. புதிய கல்விக் கொள்கைக்கமைய இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்க  மேற்கொள்ளப்படும் நுண்ணிய முயற்சி தற்போதைக்கு தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் திரும்பவும் அதே முயற்சி எடுக்கப்படும். மாநிலங்களுடன் கலந்துசாவாமலேயே மத்திய அரசினால் நிர்ணயிக்கப்படுவதற்குரியதே புதிய கல்விக் கொள்கைப்படியான பாடத்திட்டம்.  இந்தியாவைச் சிறப்பிக்கும் பல்வகைமைக்குப் பதிலாக “ஒரே பண்பாடு” என்னும் எண்ணத்தை திணிக்கும் முயற்சியையே இவை அனைத்தும் உணர்த்துகின்றன.  


எதிர்விளைவு


பிராந்தியவாரியாகவும், மொழிவாரியாகவும் நிலவும் உணர்வை முற்றிலும் உதறித்தள்ளி, அத்துமீறி ஒருமைப்பாட்டைத் திணித்தால், பிறகு நாடு மிகவும் வருந்த நேரும். காரணம்: அதற்கு நேரெதிர் விளைவே உண்டாகும். எமது எதிர்காலத்தை அது  ஆபத்தான வழிகளில் இட்டுச்செல்லும். 

____________________________________________________________________________________

Prabhat Patnaik, India’s Move Toward a De Facto Unitary State,

Sri Lanka Guardian, 2020-11-06, translated by Mani Velupillai, 2020-11-10.

http://www.slguardian.org/2020/11/indias-move-toward-de-facto-unitary.html

No comments:

Post a Comment