கொதிக்கும் எரிக் சொல்கெம்
ஈஸ்வரன் இரத்தினம்: இலங்கையில் சமாதானத் தூதுவராக நீங்கள் தீர்க்கமான, அதிமுக்கியமான பங்கு வகித்தீர்கள். கண்டனத்தையும், குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டீர்கள். அவற்றைக் கருத்தில் கொள்ளும்பொழுது, சமதான தூதுவராகப் பங்கு வகித்தது குறித்து, குறிப்பாக இறுதிக் கட்டத்தில் சமாதான பேச்சுவார்த்தையாளராகப் பங்கு வகித்தது குறித்து நீங்கள் வருத்தம் அடைகிறீர்களா?
எரிக் சொல்கெம்: இங்கே பாருங்கள்; தற்காலத்தில் மிகுந்த குருதிப்பெருக்குடன் நிகழ்ந்த மோதல்களுள் இது ஒன்று; இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். இலங்கையில் காணாமல்போன தங்கள் குடும்பத்தவர்களை நினைந்து பெருவாரியான மக்கள் வருந்துகிறார்கள். தென்புலத்துப் படையினராகலாம், வடபுலத்து தமிழ்ப் பொதுமக்களாகலாம்; மக்கள் அவர்களை இழந்து, நினைந்து வருந்துகிறார்கள். எனவே, எங்களால் வெற்றிபெற முடியவில்லையே என்பதுதான் எனது வருத்தம். ஆனால், நாங்கள் முயன்று பார்த்தோம் அல்லவா? இருதரப்பு தீவிரவாதிகளும் எங்களைத் தாக்குவது குறித்து நான் அலட்டிக் கொள்ளவில்லை. நான் புலிகளுக்கு மிகவும் நெருக்கமானவன் என்று சிங்களப் பேரினவாதிகள் கூறுகிறார்கள். புலிகள் தோற்றதற்கு நானே தனிப்படக் காரணம் என்று அல்லது போரின் இறுதிக் கட்டத்தில் தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு நோர்வேஜியர்களே பழி ஏற்கவேண்டும் என்று தமிழ்த் தீவிரவாதிகள் கூறுகிறார்கள்.
மொத்தத்தில், விலக்குப் பிடிக்க முயன்றவர்களை விடுத்து, போர்வெறியர்கள் மீதே நீங்கள் பழிசுமத்தத் துவங்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். கடவுளர் எங்களிடம் எதிர்பார்ப்பது சமாதானத்தையே! மிகப்பெருவாரியான சிங்களவரும், தமிழரும், முஸ்லீங்களும் எங்களிடம் எதிர்பார்ப்பது சமாதானத்தையே!
வினா: நீங்கள் சமாதான பேச்சுவார்த்தையாளராக விளங்கியபொழுது எதிர்கொண்ட கண்டனத்தினால் “போதுமடா சாமி!” என்று எண்ணி எழுந்து புறப்படும் கட்டம் எழவில்லையா?
விடை: இல்லவே இல்லை. ஆட்கள் எங்களைக் கண்டிப்பதில் நாங்கள் கரிசனை எடுக்கவில்லை. கண்டனம் எழுவது வழக்கம். சமாதானப் படிமுறையின் பொழுது இரண்டு தரப்புகளும் எங்கள்மீது கொண்ட நம்பிக்கையையே நாங்கள் கருத்தில் கொண்டோம். சமாதானம் செய்வதற்கு வேண்டியோர் இரண்டு தரப்புகளுமே. பிரபாகரன், பாலசிங்கம், உட்பட புலித்தலைவர்களின் நம்பிக்கையை நாங்கள் பெற்றிருந்தோம். சந்திரிகா குமாரதுங்கா, ரணில் விக்கிரமசிங்கா, மகிந்த ராஜபக்சா உட்பட முக்கிய அரசதரப்புத் தலைவர்களின் நம்பிக்கையையும் நாங்கள் பெற்றிருந்தோம். அவர்களுக்கு எங்கள்மீது நம்பிக்கை உள்ளவரை ஆங்காங்கே எங்களைக் கண்டிப்பவர்களையிட்டு நாங்கள் அலட்டிக் கொள்ளவில்லை.
வினா: நீங்கள் தனியே புலிகளுடன் கலந்துரையாடியவற்றை வைத்துச் சொல்லுங்கள்: புலிகள் மெய்யாகவே சமாதனம் செய்ய உறுதி பூண்டிருந்தார்கள் என்று நீங்கள் எப்பொழுதாவது எண்ணினீர்களா?
விடை: முழுக்க முழுக்க எண்ணினேன். தென்னிலங்கையில் ஒரு தப்பெண்ணம் நிலவுகிறது. புலிகள் தமது வலிமையின் உச்சத்தில் நிலைகொண்ட வேளையிலேயே சமாதானத்தை மேற்கொண்டார்கள். 2000-ம், 2001-ம் ஆண்டுகளில் புலிகள் எய்திய வலிமையை அதற்கு முன்னரோ பின்னரோ அவர்கள் எய்தியதில்லை. ஆனையிறவை அவர்கள் கைப்பற்றியிருந்தார்கள். யாழ் குடாநாடு முழுவதையும் அவர்கள் கைப்பற்றுந் தறுவாயில் இருந்தார்கள். கடைசி நேரத்தில் பாகிஸ்தான் இலங்கை அரசுக்கு உதவியபடியால்தான் அதில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். புலிகள் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை தாக்கி இலங்கையின் பொருளாதாரத்தை நாசமாக்கினார்கள். அதாவது, புலிகள் தமது வலிமையின் உச்சத்தில் நிலைகொண்ட வேளையிலேயே சமாதானத்தை மேற்கொண்டார்கள். எனவே புலிகள் முழுக்க முழுக்க மெய்யாகவே சமாதனம் செய்ய உறுதி பூண்டிருந்தார்கள். எனினும், அவர்கள் ஓர் இணைப்பாட்சித் தீர்வுக்கு உறுதிபடத் தயாராக இருந்தார்களா என்று நீங்கள் வினவலாம். பிரபாகரன் சமாதானத்தை நாடியதாகவே, சமாதானத்துக்கு தயாராக இருந்ததாகவே நான் எண்ணுகிறேன். ஆனாலும், பற்பல விடயங்களில் ஒத்துமேவல் இடம்பெற வேண்டியிருந்தது.
வினா: புலிகள் சமாதானத்தைப் பயன்படுத்தி மறுபடி ஒருங்கிணைந்து தமது படைபல வல்லமையைப் பெருக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. புலிகள் ஆயுதங்கள் தருவிப்பதற்கு நோர்வேயும் துணைநின்றதாக அப்பொழுது குற்றஞ்சாட்டப்பட்டது. அத்தகைய குற்றச்சாட்டுக்களில் ஏதாவது உண்மை இருக்கிறதா?
விடை: இல்லவே இல்லை. ஒரு தரப்புக்கும் நாங்கள் பரிசளிக்கவில்லை; ஒரு தரப்பிடமிருந்தும் நாங்கள் பரிசேற்கவில்லை. ஆனால், முக்கியமாக, இதுவும் தென்னிலங்கையில் நிலவும் இன்னொரு தப்பெண்ணமே. சமாதான காலத்தில் புலிகளை விட இலங்கைப் படையினரே தம்மை மிகவும் வலுப்படுத்திக் கொண்டனர். 2007 முதல் 2009 வரை நிகழ்ந்த போரின் இறுதிக் கட்டத்தில் அதை நாங்கள் கண்டுகொண்டோம். இந்தியா, அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய வல்லரசுகள் உட்பட பெரும்பாலும் உலக அரசுகள் அனைத்தினதும் ஆதரவு இலங்கைக்கு கிடைத்தது. அவை அனைத்தும் சமாதானத்தையே நாடின. அதற்கு, அவை புலிகளையா, இலங்கை அரசையா ஆதரிப்பது? இரண்டில் ஒன்றை அவை தெரிவுசெய்ய நேர்ந்தது. அவை அனைத்தும் அரசின் பக்கமே நின்றன. எனவே, தமது தரப்பை வலுப்படுத்தியது இலங்கை அரசேயொழிய, புலிகள் அல்ல.
வினா: அதிபர் மகிந்த ராஜபக்சா, பாதுகாப்புச் செயலாளர் கொதாபய ராஜபக்சா ஆகியோருடன் புழங்குவதும், பிரச்சனையைப் பேசித்தீர்ப்பதும் கடினமாய் இருந்ததா?
விடை: மகிந்தா 2005ல் ஆட்சி ஏற்றார். சமாதானப் படிமுறையைக் கையாளும் விதம் குறித்து அவரிடம் தெளிவான திட்டம் எதுவும் இருந்ததாக நான் நினைக்கவில்லை. எங்கள் மதியுரையை அவர் செவிமடுத்தார். அதேவேளை அவர் பக்கமும் நியாயம் உண்டு. அப்பொழுது வடபுலத்தில் தெருவோரக் குண்டுகள் மூலம் படையினரைப் புலிகள் கொல்லத் துவங்கினார்கள். அப்படி பிரபாகரன் அவருக்குத் தொல்லை கொடுத்தபடியால், அவரது நிலைமை கடினமாகவே இருந்தது.
பிரபாகரனும் மகிந்தாவும் தமது பதிலாட்கள் மூலம் ஜெனீவாவில் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள்.
பிரபாகரனுடன் ஓர் உச்சமாநாடு நடத்த முற்றிலும் தயாராக இருப்பதாக அப்பொழுது மகிந்தா என்னிடம் தெரிவித்தார். அதேவேளை நெடுங்காலம் இழுபடும் சமாதானப் படிமுறை வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். எனவே 2006ல் நிலவிய சூழ்நிலை, இன்று நாம் எதிர்நோக்கியதை விட மிகவும் வேறுபட்டது. அதுவே கடைசியாக இழக்கப்பட்ட சமாதான வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன்.
வினா: அப்படி என்றால், பிரபாகரனுடன் ஓர் உச்சமாநாடு நடத்த மகிந்த ராஜபக்சா நாட்டம் கொண்ட சங்கதி உண்மையிலேயே பிரபாகரனுக்கு தெரியப்படுத்தப்பட்டதா? அதற்கு என்ன பதில் கிடைத்தது?
விடை: முழுக்க முழுக்க தெரியப்படுத்தப்பட்டது. அப்பொழுது அந்த விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் இப்பொழுது அதைப்பற்றி நாங்கள் வெளிப்படையாகப் பேசலாம். சமாதானப் படிமுறைக்கு இரண்டு வேறுபட்ட அணுகுமுறைகள் இருந்தன. இரண்டு தரப்புகளும் படிப்படியாக நம்பிக்கையை வென்றெடுத்து, சமாதானத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அணுகுமுறையை புலிகள் நாடினார்கள். ஒரே இலங்கை அரசுக்குள் தமிழருக்கு தன்னாட்சியோ, சுயாட்சியோ, தன்னரசோ, தன்னாண்மையோ, சுயநிர்ணயமோ வழங்குவது பற்றிய ஓர் இறுதிக் கலந்துரையாடலுக்கு மிகவிரைவாக இட்டுச்செல்லும் அணுகுமுறையை இலங்கை அரசு நாடியது. அதேவேளை என்றுமே ஒரு தனியரசு கைகூட வாய்ப்பிருக்கவில்லை. அது என்றுமே சமாதானப் பேச்சுவார்த்தையின் பெறுபேறாக அமைய முடியாது. எனவே ஓர் இடைநடுத் தீர்வை நோக்கியே, இணைப்பாட்சியை நோக்கியே ஒத்துமேவ வேண்டியிருந்தது.
இலங்கை மக்கள் (இணைப்பாட்சியை) நிதானமாய் நோக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் கடல்கடந்து நோக்கலாம். இந்தியாவில் இணைப்பாட்சி மிகவும் நல்லமுறையில் செயற்பட்டு வருகிறது. ஐக்கிய இந்தியாவுக்குள் நிலைகொள்ளும் அதேவேளை, மத்திய அரசின் தலையீடின்றி மாநிலங்கள் தமது சொந்த அலுவல்களை மேற்கொள்ள முடிகிறது.
வினா: அப்பொழுது இந்தப் பிரச்சனையில் இந்தியா இன்னும் பெரிய பங்கு வகித்திருக்க முடியுமா?
விடை: அந்தக் காலகட்டம் முழுவதும் இந்தியா சமாதானப் படிமுறையை உறுதிபட ஆதரித்தது. பிரச்சனையை பேசித்தீர்ப்பதை விட வேறு வழியில்லை என்று இந்தியா எப்பொழுதும் சொல்லி வந்தது. பேசித்தீர்வு காண வேண்டும் என்பதிலேயே இந்தியர்கள் உறுதிபட நம்பிக்கை வைத்திருந்தார்கள். 2008 புரட்டாதி மாதம் தமது எண்ணத்தை இந்தியர்கள் மாற்றத் துவங்கினார்கள். படைவலுத் தீர்வாகவே அமைய வேண்டும் என்று தெரிவித்தார்கள். அதாவது இலங்கை அரசினால் போரை வெல்லமுடியும் என்று தெரிவித்தார்கள். போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா படைவலு ஆதரவும், படையேற்பாட்டு ஆதரவும் அளித்தது உண்மையே. ஆனாலும் சமாதானப் படிமுறை இடம்பெற்ற காலகட்டம் முழுவதும், சமாதான வாய்ப்பு நிலவிய காலகட்டம் முழுவதும் இந்தியா சமாதானத்தையே ஆதரித்தது என்பதில் ஐயமில்லை.
வினா: இப்பொழுது திரும்பிப் பார்த்துச் சொல்லுங்கள்: மக்கள் உயிர்தப்பும் வண்ணம், போர் சமாதானத்தில் முடிவடையும் வண்ணம், சமாதான பேச்சுவார்த்தயாளர்கள் என்ற வகையில் நோர்வேஜியர்கள் வேறென்ன செய்திருக்கலாம்?
விடை: இந்த விடயம் குறித்து நான் நெடுநேரம் சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். மார்க் சால்டர் (Mark Salter) எழுதிய “ஓர் உள்நாட்டுப் போரை முடித்து வைப்பதற்கு” (To End a Civil War) என்ற நூலில் இது நன்கு விபரிக்கப்பட்டுள்ளது. சமாதானத்துக்கு இரண்டு முட்டுக்கட்டைகள் இருந்ததாக நான் நம்புகிறேன்.
முதலாவதாக, கொழும்பில் ஒருமைப்பாடு நிலவவில்லை. அப்பொழுது இரண்டு முக்கிய கட்சிகள் இயங்கி வந்தன: இலங்கை சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி. ஒவ்வொரு சர்ச்சை குறித்தும் அவை மோதிவந்தன. சந்திரிகா ஒன்றைச் செய்தால், அதை ரணில் ஆதரிப்பது போலவோ, ரணில் ஒன்றைச் செய்தால் அதை சந்திரிகா ஆதரிப்பது போலவோ அல்ல அது. அவ்விரு கட்சிகளுக்கும் இடையே எழுந்த மோதலால், ஓர் உருப்படியான திட்டத்தை புலிகளிடம் முன்வைப்பது கடினமாய் இருந்தது. மறுபுறம், புலிகள் ஒன்றுக்கு சம்மதித்தால், எடுத்துக்காட்டாக அவர்கள் இணைப்பாட்சிக்கு சம்மதித்தால், கொழும்பில் இரண்டு கட்சிகளும் அதை நிறைவேற்றியே தீரும் என்பதைப் புலிகளைக் கொண்டு நம்பவைப்பதையும் அது கடினமாக்கியது. கொழும்பில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே நிலவிய சர்ச்சைகளை எங்களால் தீர்க்க முடியவில்லை. ஆனாலும், நாங்கள் இந்தியாவுடனும் பிறநாடுகளுடனும் இன்னும் நெருங்கிப் பாடுபட்டிருக்கலாம். அந்நாடுகளால் அவ்வாறு செய்ய முடிந்திருக்கலாம்.
இரண்டாவதாக, பிரச்சனைக்கு தீர்வு இணைப்பாட்சியே என்பதை பிரபாகரனைக் கொண்டு எங்களால் நம்பவைக்க முடியவில்லை. பிரபாகரனுடன் மேன்மேலும் கதைக்க எங்களை அனுமதித்திருக்கலாம். உலகில் மற்றவர்களை விட அவரை அதிகம் சந்தித்த தமிழரல்லாத ஒரேயொருவன் நான்தான். பிரபாகரனைச் சந்தித்த வெளிநாட்டவர் மிகச்சிலரே. ஆதலால் உலகத்தைப் பற்றி மிகவும் தவறான கண்ணோட்டமே அவரிடம் காணப்பட்டது. வெளியுலகை அவர் புரிந்துகொள்ளவில்லை. வெளிநாட்டவர்கள் மேன்மேலும் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டிருந்தால், அவரும் ஒத்துமேவ வேண்டியுள்ளது என்பதை அவரைக்கொண்டு நம்பவைப்பது மிகவும் எளிதாய் இருந்திருக்கும்.
சமாதான தீர்வு எதுவும் தேவை என்றால், இரண்டு தரப்புகளுமே ஒத்துமேவ வேண்டும்.
வினா: பிரபாகரன் என்ற ஆளைப் பற்றிச் சொல்லுங்கள். நீங்கள் பல தடவைகள் அவரைச் சந்தித்திருக்கிறீர்கள். அவர் வெறுமனே போராடுவதில் புலனைச் செலுத்தினாரா? அல்லது உலகில் மற்றவர்கள் துய்த்ததை அவரும் துய்க்க விரும்பினாரா?
விடை: போரின் இறுதிக் கட்டம்வரை மிக நீண்ட காலமாக அவர் சிறந்த படைத்தலைவராக விளங்கினார். உலகில் சொந்த வான்படையும், கடற்படையும் கொண்டிருந்த அரசல்லாத ஒரேயொரு அமைப்பினர் புலிகளே.
அதைவிட அவரது அரசியல் விளக்கம் மிகவும் குறைவு என்பது ஓர் அவப்பேறே. தென்னிலங்கையை, இந்தியாவை, வெளியுலகை அவர் புரிந்துகொண்டது மிகவும் குறைவு. புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் அவருக்கு முற்றிலும் தவறான மதியுரை நல்கி வந்தார்கள். பிரச்சனையிலிருந்து விடுபடும் வழிவகைகளைக் கண்டறிவதை விடுத்து, விட்டுக்கொடுக்க வேண்டாம், கண்டிப்பாக இருக்கும்படி அவரிடம் தெரிவித்தார்கள்.
அதேவேளை அவர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியதைக் குறித்து அவரை மெச்சவேண்டும். அவர் படைநடவடிக்கையை நிறுத்த வாக்குறுதி அளித்த போதெல்லாம் அதை நிறுத்தினார். தனது படைகளை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களுள் பாலசிங்கமே தலையாயவர். அவரது தலையாய மதியுரைஞர் பாலசிங்கமே. அவர் பாலசிங்கம் சொல்வதைச் செவிமடுத்தவரை அநேகமாக எல்லாமே சரிவர நடைபெற்று வந்தன. பாலசிங்கம் சொல்வதைச் செவிமடுக்காத வேளையில் அவர் நிலைமையைத் தவறாக விளங்கிக்கொண்டார்.
ஆளுமையைப் பொறுத்தவரை, அவர் ஒரு நல்ல சமையற்கலைஞர். நாங்கள் கூடிச் சாப்பிட்டோம். ஆனாலும் அவர் கட்டிக்காக்கப்பட்ட ஆள் என்றபடியால், இலகுவில அவரை நெருங்க முடியவில்லை.
வினா: மற்றவர்களை விட நீங்களே புலிகளின் சமாதான பேச்சுவார்த்தையாளர் அன்டன் பாலசிங்கத்தின் எண்ணத்தை மிகவும் அறிந்தவர் என்று அண்மையில் நீங்கள் குறுஞ்செய்தி ஒன்று பகிர்ந்து கொண்டீர்கள். புலிகள் பயங்கரத் தாக்குதல்களை மேற்கொள்ளும் திட்டங்களைச் செயற்படுத்த முன்னதாக என்றாவது அத்திட்டங்களை அவருக்கு வெளிப்படுத்தியதுண்டா?
விடை: இல்லவே இல்லை. அதற்கான காரணம் வெளிப்படையகவே தெரிகிறதே! படைநடவடிக்கைகளையோ பயங்கரவாத தாக்குதல்கலையோ திட்டமிடுவதில் பாலசிங்கம் என்றுமே சம்பந்தப்படவில்லை. பிரபாகரனின் பொதுத்துறை அரசியல் மதியுரைஞரே பாலசிங்கம். தென்னிலங்கையை, உலக சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும் விதம், சமாதானத்தை அணுகும் விதம் குறித்து அவர் மிகச்சிறந்த மதியுரை நல்கினார். மொத்தத்தில், சமாதானப் படிமுறையின் கெட்டியான அடித்தளம் பாலசிங்கமே. உண்மையில் சமாதானப் படிமுறையை முன்னகர்த்தியவர் அவரே.
பாலசிங்கம் சொல்வதை பிரபாகரன் செவிமடுத்திருந்தால், பற்பல விடயங்கள் வேறுபட்டிருக்கும். புலிகள் கிழக்கை இழக்கக் கூடும் என்று பாலசிங்கம் என்னிடம் தெரிவித்தார். பாலசிங்கத்தின் முயற்சிகளுக்கு பிரபாகரன் மறுப்புத் தெரிவித்தபடியால், வடக்கையும் அவர்கள் இழக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். சமாதானப் படிமுறை தொடரவேண்டும் என்றும், புலிகள் புதிய படைவிரகில் இறங்க முயலக் கூடாது என்றும் அவர் எண்ணினார். வரலாற்றில் அப்படி நடந்திருந்தால், இப்படி நடந்திருந்தால் என்றெல்லாம் பற்பல வினாக்கள் எழுவது வழக்கம். பாலசிங்கத்தின் மதியுரையை புலிகள் ஏற்றிருந்தால், இலங்கைத் தமிழர்கள் இன்று மிகவும் நல்ல நிலையில் இருந்திருப்பார்கள் என்பது திண்ணம். ஒரே இலங்கைக்கு உட்பட்டு வடபுலத்தில் ஏதோ ஒரு சுயாட்சியை அவர்கள் துய்த்திருக்கக்கூடும்.
வினா: களத்தில் நின்ற புலித்தலைவர்களுடன் கடைசியாக நீங்கள் எப்பொழுது, என்ன கதைத்தீர்கள்?
விடை: நாங்கள் 2009 மே 17ம் திகதி கடைசியாக கதைத்தோம். புலிகளின் சமாதான செயலகத் தலைவர் புலித்தேவன் என்னுடன் தொடர்புகொண்டு, தாங்கள் (புலிகள்) படையினரிடம் சரணடைய விரும்புவதாகத் தெரிவித்து, அதற்கு உதவிபுரியும்படி வேண்டுகோள் விடுத்தார். களத்தில் எந்த உதவி புரிவதற்கும் காலம் வெகுதூரம் பிந்திவிட்டது என்று நாங்கள் தெரிவித்தோம். அத்தகைய சூழ்நிலையில் என்றுமே உதவிபுரிய முடியாது. அது முன்னரே நடந்திருக்க வேண்டும். ஒரு வெள்ளைக் கொடியை ஏந்திக்கொண்டு, இயலுமானால் ஒலிபெருக்கிகள் மூலம் தமது சரணடையும் நோக்கத்தை தெளிவுபட அறிவிக்கும்படி நாங்கள் புத்திமதி கூறினோம். பிறகு அவர்களின் நோக்கத்தை இலங்கை அரசுக்கு நாங்கள் அறிவிப்போம் என்று தெரிவித்தோம்.
அப்படியே இலங்கை அரசுக்கு அறிவித்தோம். இவர்களும் அப்படியே செய்தார்கள். சில இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில தூதரகங்களின் அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள். இலங்கை அரசுக்கு உடன் தகவல் தெரிவிக்கப்பட்டது. புலித்தேவனும், புலிகளின் காவல்துறைத் தலைவர் நடேசனும் கொல்லப்பட்ட செய்தி அடுத்த நாள் எங்களுக்கு கிடைத்தது. என்ன சூழ்நிலையில் அப்படி நடந்தது என்பது பற்றிய சரியான விவரம் எனக்குத் தெரியாது. அவர்களை இலங்கைப் படையினர் கொடூரமான முறையில் கொல்லவில்லை என்பதை நம்புவது மிகமிகக் கடினம். அப்படிச் செய்திருந்தால், அது ஒரு போர்க் குற்றம். மக்கள் சரணடைய விரும்பினால், அவர்கள் சரணடைய அனுமதிக்கப்பட்டிருக்கவும், நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கவும் வேண்டும்.
வினா: உங்களுக்கு கிடைத்த தகவலின்படி, பிரபாகரனும் சரணடைந்தாரா என்பது உங்களுக்குத் தெரியுமா?
விடை: அதைப் பற்றி எனக்கு தகவல் கிடைக்கவில்லை. 2009 மே 18ம் திகதி அவரும் அவரது குடும்பத்தவர்களும் கொல்லப்பட்டதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.
இங்கு ஒரு விடயம் எங்கள் கவனத்தை ஈர்க்கிறது. நாங்கள் ஒரு யோசனையை முன்வைத்தோம். அப்பொழுது நிலவிய பிரச்சனையை அது தீர்த்திருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த யோசனையை அமெரிக்காவும், இந்தியாவும் ஆதரித்தன. அது ஒரு வலுவான யோசனை.
பிரபாகரன் போரில் தோற்றுவருகிறார் என்பதையும், எந்த விதத்திலும் அவரால் வெல்ல முடியாது என்பதையும் நாங்கள் அவரிடம் தெரிவித்தோம். அப்பொழுது நாங்கள் முன்வைத்த யோசனை இதுவே: பொதுமக்கள், புலிகள் அனைவரும் பதிவுசெய்யப்படுவார்கள்; பெயர்கள் குறித்து வைக்கப்படும்; பொதுமக்கள் கப்பல் மூலம் தென்னிலங்கைக்கு அல்லது வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்; இந்தியாவும், அமெரிக்காவும் அதற்குப் பேராதரவு தரும்; சரண்புகுந்த பின்னர் எவரும் துன்புறுத்தப்பட மாட்டார் என்ற யோசனை. அது சரிவர நடக்கும் என்று நாங்கள் நம்பியிருந்தோம். ஆனால் 2009 சித்திரை மாதம் பிரபாகரன் அத்திட்டத்தை நிராகரித்தார். எனவே முக்கிய புலித் தலைவர்கள் எவரும் ஈற்றில் உயிர்தப்பவில்லை. பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தார்கள்.
வினா: போரை அடுத்து இலங்கை இப்பொழுது மீள்கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளது. புலிகள் உண்மையில் விட்டுக்கொடாதபடியால், படைபலத் தீர்வே சிறந்ததாய் இருந்திருக்கலாம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
விடை: முதலில் நாங்கள் சமாதனத்தைக் கொண்டாட வேண்டும். சமாதானம் மிகவும் முக்கியமானது. மக்கள் தம்து வாழ்வை மீளக் கட்டியெழுப்பி வருகிறார்கள். ஆனால் படைபலத் தீர்வே சரியானது என்று நான் நினைக்கவில்லை. எப்படியாவது ஓர் ஒத்துமேவலைக் கண்டறிந்திருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். இலங்கையை இரண்டாகக் கிழித்த பிரதான அரசியல் சர்ச்சை இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை நாங்கள் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. இலங்கை அரசில் தாங்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற உணர்வே தமிழரிடம் காணப்படுகிறது. சிங்களவருக்கு இதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது.
ஆனாலும் சமாதானமாவது நிலவுகிறதே! இலங்கையின் பொருளாதாரம் விருத்தி அடைய வேண்டியுள்ளது. இலங்கையில் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் சாதகமான நிலைமைகள் பலவும் காணப்படுகின்றன. இலங்கை கண்ணியமான வாழ்வுடன் கூடிய அழகிய நாடு.
நாடாளுமன்றத்தில் ராஜபக்சாக்கள் அதிபெரும்பான்மை ஈட்டியுள்ளார்கள். அவர்கள் தமிழரை அரவணைத்து ஒரு நிலைத்த தீர்வினை எட்டுவதற்கான காலம் இது.
____________________________________________________________________________________
On fire with Erik Solheim, Easwaran Rutnum, Daily Mirror, Colombo, 2020-09-03.
http://www.dailymirror.lk/dailymirror_online/On-Fire-with-Easwaran-Rutnum-Erik-Solheim/379-195065
தமிழ்: மணி வேலுப்பிள்ளை, 2020-09-05.
No comments:
Post a Comment