13வது திருத்தம்

கருவும் உருவும்

பேராசிரியர் காமினி கீரவெலா

(தமிழாக்கம் - சுருக்கம்)

__________________________________________________________________________

13வது திருத்தம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுவோர் முன்வைக்கும் காரணங்கள்:

  1. 13வது திருத்தத்தின் வழிவந்த மாகாண மன்ற முறைமை மூலம் சிறுபான்மைக் குழுமங்கள் பிராந்தியவாரியாக வடக்கிலும் கிழக்கிலும் அதிகாரத்தைப் பகிர்வதற்கான அரசியல் வெளியை உண்டாக்கியுள்ளது.

  2. மேற்படி திருத்தம் மிகவும் தந்திரமான முறையில் புகுத்தப்பட்டுள்ளது.

  3. மேற்படி மாகாண மன்ற முறைமை இந்தியாவினால் இலங்கையில் உருவாக்கப்பட்ட ஓர் ஒட்டுண்ணி.

2 இலங்கை–இந்திய உடன்பாடு: 1987ல் இந்தியா “பருப்புச் சாணக்கியம்” (வான்வழி வீசிய உணவுப்பொதி) மூலம் இலங்கையில் தலையிட்டதை அடுத்து, ஜே. ஆர். ஜெயவர்த்தனா அவசர அவசரமாக 13வது திருத்தத்தை கொண்டுவந்தது உண்மையே. எனினும் இலங்கை–இந்திய உடன்பாட்டுக்கு முன்னரே, அதாவது 1920 முதலே அதிகாரப் பரவலாக்கம் பற்றிய கருத்தும், மாகாண மன்றம் பற்றிய எண்ணமும் இங்கு நிலவி வந்துள்ளது. அதாவது மாகாண மன்றங்கள் வானிலிருந்து பருப்புடன் சேர்ந்து விழுந்தவை அல்ல!

3 தொனமூர் ஆணையம்: 1928ல் தொனமூர் ஆணையம் மாகாண மன்ற முறைமையை விதந்துரைத்தது. அதன் மூலம் மாகாணவாசிகள் தத்தம் அலுவல்களை தாங்களே நிறைவேற்ற வழிபிறக்கும்; அரச திணைக்களங்களின் வேளைப்பளு குறையும்; அரச திணைக்களங்கள் பாரிய தேசியத் திட்டங்களை மேற்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்; பல்வேறு இனத்தவர்களின் ஒருமித்த அலுவல்களினால் நாடு பயனடையும்; அவர்களின் பிரதிநிதிகள் நாட்டின் நல்லாட்சிக்குத் தொண்டாற்றுவார்கள்… என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.


மிகவும் விருத்தியடைந்த ஒரு மாகாணத்தில் மாகாண மன்ற முறைமையைப் பரீட்சித்துப் பார்க்கும்படியும், அது வெற்றியளித்தால், ஏனைய மாகாணங்களிலும் அதைப் புகுத்தும்படியும் தொனமூர் ஆணையம் விதந்துரைத்தது.


4 அரச மன்றம்: 1940ல் மாகாண மன்ற முன்மொழிவை அரச மன்றம் கருத்தில் கொண்டது. அப்பொழுது (1940-07-10ம் திகதி) ஆர்.எஸ். எஸ். குணவர்த்தனா, “மாகாண மன்றங்கள் பற்றிய தொனமூர் ஆணையத்தின் முன்மொழிவை உடனடியாக நடைமுறப்படுத்த வேண்டும்” என்ற தீர்மானத்தை முன்வைத்தார்.


S. W. R. D. Bandaranaike


5 பண்டாரநாயக்கா: உள்ளூராட்சி அமைச்சர் பண்டாரநாயக்கா அரச மன்றத்தில் முன்வைத்த அறிக்கையில் 3 கூறுகளைச் சுட்டிக்காட்டினார்: (1) மேற்பார்வை; (2) நிறைவேற்றல்; (3) மதியுரை. மாகாண மன்றங்களின் பிரதிநிதித்துவத்தையும், அவற்றுக்கு ஒதுக்கப்படும் அதிகாரங்களையும் அரச மன்றம் கருத்தில் கொண்டது. 1947ம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்பொழுது பண்டாரநாயக்கா பின்வருமாறு குறிப்பிட்டார்: “அடுத்த ஆண்டு (1948ல்) மாகாண மன்ற முன்மொழிவை என்னால் முன்வைக்க முடியும் என்று நான் எண்ணவில்லை.  முன்மொழிவு தயாராகவே இருக்கிறது. ஆனால் அது எனது அமைச்சரவைச் சகபாடிகளின் அலுவல்களுடன் சமபந்தப்பட்ட முன்மொழிவு என்றபடியால், அதை நான் இந்த மன்றத்தின்முன் வைக்க முன்னர் அதனாலாகும் மாற்றங்களுக்கு அவர்களின் இசைவை நான் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.” அதாவது, 1940களில் கூட பிரதேச மன்றங்கள், அதிகாரப் பரவலாக்கம் பற்றிய கோரிக்கைகளை தமிழர் தலைமை எழுப்பியதில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.   


6 ஆட்சியதிகாரம்: இலங்கைக்கு ஆட்சியதிகாரம் வழங்கும் அறிவிப்பு 1943ல் வெளியிடப்பட்டது. யாப்புக்கான முன்மொழிவுகளை முன்வைக்கும்படி அமைச்சரவையிடம் கேட்கப்பட்டது. அவை ¾ பெரும்பானமையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆட்சி மன்றத்தில் மக்களின் பிரதிநிதித்துவம்  எவ்விதம் அமைய வேண்டும் என்ற வினா எழுந்தது. தனியே குடித்தொகை அல்லது இன அடிப்படையில் அமையும் பிரதிநிதித்துவம் நிராகரிக்கப்பட்டது. மாறாக, 75,000 பேருக்கு ஓர் இருக்கை, அத்துடன் 1,000 சதுர மைலுக்கு ஓர் இருக்கை என்ற முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்து.

G. G. Ponnambalam

7 ஜி. ஜி. பொன்னம்பலம்: அமைச்சரவையின் மேற்படி முன்மொழிவை ஏற்றுக்கொள்ளாத ஜி. ஜி. பொன்னம்பலம் 50க்கு 50 எனப்படும் சரிநிகர் பிரதிநிதித்துவ முன்மொழிவை சோல்பரி ஆணையத்தின்முன் வைத்தார். அதாவது பெரும்பான்மையோருக்கு 50%, இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், முஸ்லீங்களுக்கு 50% பிரதிநிதித்துவத்தை அவர் கோரினார்.

பண்டாரநாயக்கா 60க்கு 40 யோசனையை முன்வைத்தார். பொன்னம்பலம் அதை ஏற்றுக்கொண்டு, உத்தேச ஒற்றையாட்சி யாப்பை ஆதரித்தார். ஐ. டி. எஸ். வீரவர்த்தனா குறிப்பிட்டவாறு, தமிழ் காங்கிரஸ் சார்பாக பொன்னம்பலமும், இலங்கை தேசிய காங்கிரஸ் சார்பாக பண்டாரநாயக்காவும் பேசித்தீர்த்த ஏற்பாடு இலங்கையில் பிரதிநிதித்துவ சமநிலையை நிலைநாட்டியது. சோல்பரி ஆணையம் அதை யாப்பில் பொறித்தது.

8 சோல்பரி ஆணையம்: சோல்பரி ஆணையம் அரசியல்யாப்பில் பொறித்த பிரதிநிதித்துவ சமநிலையை சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர் உடனடியாகவே குழப்பியடித்தார்கள். 1948ம், 1949ம் ஆண்டுகளில் புகுத்தப்பட்ட குடியுரிமைச் சட்டங்கள் இலங்கையின் அரசியல் அரங்கை மாற்றியமைத்தன. நாடாளுமன்றத்தில் மாகாணங்களுக்கு இருக்கைகள் ஒதுக்கும் ஏற்பாட்டை அவை செல்லாக்காசாக்கின. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே பிணக்குகளை ஏற்படுத்தின. இலங்கையில் இந்தியா தலையிட வழிவகுத்தன.


சிறுபான்மையோர் குறிப்பிட்டளவு இருக்கைகளை வெல்ல சோல்பரி யாப்பு வகைசெய்த படியால்தான் அதை அவர்கள் ஆதரித்தார்கள். அவர்களின் ஆதரவின்றி சோல்பரி யாப்பை நடைமுறைப்படுத்தியிருக்க முடியாது.  சிறுபானமையோருள் அடங்கிய இந்தியத் தமிழரின் குடியுரிமையை மறுப்பது, அவர்களின் நாடாளுமன்ற இருக்கைகளை மறுப்பதற்கு நிகராகும். அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டபடியால், சிறுபான்மையோரின் இருக்கைகள் குறைந்தன. இவ்வாறு, சிறுபான்மையோருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி  மீறப்பட்து. அதாவது சோல்பரி யாப்பின் அடிப்படை நெறியே மீறப்பட்டது.


S. J. V. Chelvanayakam


9 செல்வநாயகம்: பொறுமையிழந்த சா. ஜே. வே செல்வநாயகம் தமிழ் காங்கிரசிலிருந்து வெளியேறி, பிரதேச வாதத்தை முன்வைத்து, தமிழரசுக் கட்சியை அமைத்தார். எனினும் 1952ல் நடைபெற்ற தேர்தலில் அவரது பிரதேசவாதம் வடக்கிலும் கிழக்கிலும் நிராகரிக்கப்பட்டது. தமிழ் காங்கிரசே வெற்றிபெற்றது.


அதன் பிறகு நிலைமை மாறியது.1955ல் என். கே. சொக்சி தலைமையில் அமைந்த உள்ளூராட்சி ஆணையம், நாட்டில் பிரதேச மன்றங்கள் அமைக்கப்படுவதற்கு வலுத்த ஆதரவு நிலவியதை ஒப்புக்கொண்டது. எனினும் பிரதேச மன்றங்களை விடுத்து மாகாண மன்றங்கள் அமைக்கப்படுவதையே உள்ளூராட்சி ஆணையம் விதந்துரைத்து.


10 பண்டா-செல்வா ஒப்பந்தம்: 1957ல் பண்டா-செல்வா ஒப்பந்தம் எழுந்தறுவாயில் மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு பிரதேச மன்றங்களை அமைக்கும் முன்மொழிவு கருத்தில் கொள்ளப்பட்டது. அதாவது (1987ல்) 13வது திருத்தம் எழுவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே பிரதேச மன்றங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன!  பண்டா-செல்வா ஒப்பந்தம் பகுதி -ஆ.வில் பிரதேச மன்றங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டது. ஒப்பந்த ஏற்பாடுகளின்படி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருந்த முன்மொழிவில் பிரதேசப் பரப்புகள் வரையறுக்கப்படவிருந்தன; வட மாகாணம் ஒரு பிரதேசப் பரப்பாக அமையவிருந்தது; கீழ் மாகாணம் இரு அல்லது பல பிரதேசப் பரப்புகளாகப் பிரிக்கப்படவிருந்தது.


நாடாளுமன்றத்தின் இசைவுடன் மாகாண எல்லைகளுக்கு அப்பால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரதேசங்கள் ஒருங்கிணையவும், ஒரு பிரதேசம் பிரிபடவும் ஏற்பாடு செய்யப்படவிருந்தது; பிரதேச மன்றங்களிடம் ஒப்படைக்கப்படும் அதிகாரங்கள் சட்டத்தில் பொறிக்கப்படவிருந்தன; அவற்றுக்கு மத்திய அரசு மொத்த மானியம் அளிக்கவிருந்தது; அத்துடன் வரி அறவிடும் அதிகாரமும், கடன்படும் அதிகாரமும் பிரதேச மன்றங்களுக்கு வழங்கப்படவிருந்தன.  


தென்னிலங்கையில் வெகுண்டெழுந்த ஒருசில அரசியல் பேர்வழிகளுக்குப் பணிந்த அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக பண்டா-செல்வா ஒப்பந்தத்தை மறுதலித்தது. சிறுபான்மையோரின் நலன்களுக்கு இடங்கொடுக்க வேளைக்கே கிடைத்த வாய்ப்பு கெடுக்கப்பட்டது. மக்களை ஆட்கொண்ட பண்டாரநாயக்கா மேற்படி அரசியல் பேர்வழிகளை மறுத்துரைத்து தமது ஒப்பந்தத்தைக் காத்தருளவில்லை. தமது அரசாங்கத்தின் உள்ளேயே தமக்கு ஆதரவில்லை என்பதைக் கண்டுகொண்ட பண்டாரநாயக்கா, ஒப்பந்தத்தின் எதிரிகளை எதிர்கொள்ளத் துணியவில்லை.


பண்டா-செல்வா ஒப்பந்தத்துக்கு நேர்ந்த கதி அனைவருக்கும் தெரியும். எனினும், இலங்கை அரசியலரங்கில் பல்லின சமூக வாழ்வு பின்னிப் பிணைந்துள்ளதால், பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் பொதிந்துள்ள அடிப்படை நெறிகள் என்றுமே புதையுண்டு போனதில்லை; மாற்று வடிவில் அவை திரும்பத் திரும்ப தலைகாட்டி வந்துள்ளன.


Dudley Senanayake death anniversary | Daily News


11 டட்லி-செல்வா ஒப்பந்தம்: பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து தெருவில் இறங்கிய ஐக்கிய தேசியக் கட்சி 1965ல் தமிழரசுக் கட்சியுடன் ஒத்துமேவ நேர்ந்தது. டட்லி-செல்வா ஒப்பந்தம் 3 கூறுகளை உள்ளடக்கியது: (1) தமிழ் மொழி உரிமைகள்; (2) காணி உரிமைகள்; (3) அதிகாரப் பரவலாக்கம்.


உறுப்புரை 3ன் படி, இலங்கையில் மாவட்ட மன்றங்கள் அமைக்கப்படும்; இரு தலைவர்களும் உடன்படும் துறைகளில் அவற்றுக்கு அதிகாரங்கள் அளிக்கப்படும்; தேசிய நலன்களைக் கருத்தில் கொண்டு, மேற்படி மன்றங்களுக்கு அரசாங்கம் பணிப்புரை விடுக்கும்.  


முன்னொருகால் சரிநிகர் மொழியுரிமை நாடிய இடதுசாரி பொதுவுடைமைக் கட்சியும், இலங்கை சமசமாசக் கட்சியும் இப்பொழுது இலங்கைச் சுதந்திரக் கட்சியுடன் கைகோத்து தமிழ் மொழி (சிறப்பு ஏற்பாடுகள்) ஒழுங்குவிதிகளை எதிர்த்தன. மாவட்ட மன்ற ஏற்பாடுகளை நாடாளுமன்றத்தின்முன் வைக்கும் வகை தெரியாது டட்லியின் கூட்டரசாங்கம் தடுமாறியது. ஈற்றில் (1968ல்) அதற்கான வெள்ளை அறிக்கை முன்வைக்கப்பட்டது. இலங்கைச் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற விவாதத்தைப் புறக்கணித்து எதிர்ப்பிரசாரத்தில் ஈடுபட்து. அரசாஙகத்தின் உள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியது. ஈற்றில் தமது ஒப்பந்தத்தை டட்லி மறுதலித்தார்.


V. Ponnambalam


12 வ. பொன்னம்பலம்: 1972ல் சிறுபான்மையோரின் பங்களிப்பின்றி வரையப்பட்ட யாப்புக்கு மறுப்புத் தெரிவித்த செல்வநாயகம், தமது நாடாளுமன்ற அங்கத்துவத்தை துறந்தார். காலந்தாழ்த்தி 1975ல் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் காங்கேசந்துறை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தியது. செல்வநாயகத்துக்கு எதிராக பொதுவுடைமை மறவராகிய வ. பொன்னம்பலத்தை அரசாங்கம் நிறுத்தியது. செல்வநாயகம் 25,927 வாக்குகளையும், பொன்னம்பலம் 9,457 வாக்குகளையும் பெற்றனர்.


கையோடு பொன்னம்பலம் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து வெளியேறினார். பிரதேச அதிகாரப் பரவலாக்கம் மேற்கொள்ளப்படும் என்று ஓர் அறிக்கை தேர்தல் நாளுக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பொன்னம்பலத்திடம் பிரதமர் சிறிமாவோ வாக்குறுதி அளித்த சங்கதி பிறகு தெரியவந்தது. செந்தமிழர் ஆகுவோம் என்றொரு நூலை அவர் எழுதினார். சாந்தசீலன் கதிர்காமர் அதை மேற்கோள்காட்டி இவ்வாறு கூறுகிறார்: “1975 தேர்தலில் தாமும் இடதுசாரி தமிழரும் அரும்பாடுபட்டார்கள் என்றும், அப்படி இருந்தும் தமது கால்களை ஆட்சியாளர் வாரிவிட்டார்கள் என்றும், இடைத்தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் வடக்கிற்கும் கிழக்கிற்கும் கணிசமானளவு சுயாட்சி அளிப்பது பற்றிய துண்டுப் பிரசுரங்கள் காங்கேசந்துறையில் வாரி இறைக்கப்படும் என்று  தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், அது பண்டா-செல்வா ஒப்பந்தத்தையும் விஞ்சிய  நடவடிக்கையாய் அமையும் என்று அவற்றில் பொறிக்கப்பட்டிருக்கும் என்று தம்மிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், கடைசி நேரத்தில் அரசின் உயர்மட்டம் வாக்குறுதியை மீறிவிட்டதாகவும், காட்டிக்கொடுப்புக்கு பொதுவுடைமைக் கட்சி அடிபணிந்துவிட்டதாகவும் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.”

13 ஜே. ஆர். ஜெயவர்த்தனா: தமிழ்பேசும் மக்களின் உள்ளக்குறைகளைத் தீர்க்க அனைத்துக் கட்சி மாநாடு நடத்தப்படும் என்று 1977 தேர்தலுக்கு முன்னர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா வாக்குறுதி அளித்தார். எனினும் அவர் தேர்தலில் வென்று பதவி ஏற்று ஒரு மாதத்துள், 1977 ஆகஸ்ட் 12ம் திகதி, தமிழருக்கு எதிராக மூண்ட கலவரத்தில்  300 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இலங்கைத் தமிழருக்காக வாதாடுவதற்கு அமைச்சரவைத் தகுநிலை கொண்ட ஒரு பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்பும்படி  1977 ஆகஸ்ட் 24ம் திகதி தமிழ்நாடு அரசு இந்திய மத்திய அரசை வேண்டியது. இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவரே அந்த அலுவலைக் கவனிப்பார் என்று பிரதமர் மொரார்ஜி தேசாய் தெரிவித்தார்.


வாக்குறுதி அளித்தவாறு அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டாமலேயே மாவட்ட அபிவிருத்தி மன்றங்களை ஜே. ஆர். ஜெயவர்த்தனா முன்மொழிந்தார். இளந்தமிழரின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மாவட்ட அபிவிருத்தி மன்றங்களில் பங்குபற்றியது. அந்த முன்னணிக்கு அது பேரிடியாய் மாறியது. ஒருபுறம் நேரடி ஆயுதப் போராட்டத்தை நாடிய இளைஞர்கள் மாவட்ட அபிவிருத்தி மன்றங்களை எதிர்த்தார்கள். மறுபுறம் மத்திய அரசோ நிருவாகத்தைப் பன்முகப்படுத்த மறுத்தது. மன்றங்களின் முடிபுகள் அனைத்தும் மத்திய அரச பிரதிநிதியினால் கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டன.   


மீண்டும் (1981ல்) தமிழருக்கு எதிரான கலவரங்கள் இடம்பெற்றன. தமிழ் இளைஞர்களுக்கு தஞ்சம் அளிக்கும்படி தமிழ்நாட்டில் 20 அரசியல் கட்சிகள் பிரதமர் இந்திராவை வேண்டிக்கொண்டன. தமிழருக்கு எதிரான வன்முறை குறித்து இந்தியா கவனம் செலுத்தத் துவங்கியது. 1977 முதல் 1983 வரை தமிழ் இயக்கங்களின் வலு மேலோங்கியது.


Last speech of Prime Minister Indira Gandhi prior to her ...


14 பிரதமர் இந்திரா: 1983 ஆடிக் கலவரத்தை அடுத்து தமிழ்நாடு கொந்தளித்தது. “இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சனையை வெறுமனே ஒரு தமிழ்நாட்டுப் பிரச்சனையாகக் கொள்ளாது தேசியப் பிரச்சனையாகக் கொள்ளுகிறது” என்று பிரதமர் இந்திரா முழங்கினார்.  கலவரம் மூண்டு இரண்டே இரண்டு நாட்களுள் அவர் ஜெயவர்த்தனாவை தொலைபேசியில் அழைத்து விசாரித்தார். “ஓர் அதிகாரபூர்வமான பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்பிவையுங்கள்; அவர் நேரில் நிலைமையை அவதானித்து, நாடுதிரும்பி உங்களுக்கு அறிவிப்பார் என்று ஜெயவர்த்தனா பிரதமர் இந்திராவிடம் தெரிவிக்க நேர்ந்தது” என்று கே. எம். டி சில்வா குறிப்பிட்டுள்ளார். யூலை 29ம் திகதி வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இலங்கை வந்தபொழுதும் கூட கொழும்பு எரிந்துகொண்டுதான் இருந்தது.


G Parthasarathy - The Peninsula Foundation


15 ஜி. பார்த்தசாரதி: பிரதமர் இந்திராவினால் இணக்கநடுவராக அமர்த்தப்பட்ட பார்த்தசாரதிக்கு இடப்பட்ட பணிகள்: (1) பிரச்சனையைப் பேசித்தீர்ப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தல்; (2) இலங்கை அரசுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையே இடைநடுவராகச் செயற்படல்; (3) புதிய அதிகாரப் பரவலாக்க முன்மொழிவுகளை முன்வைத்தல்.


பேச்சுவார்த்தையின் 4 கூறுகளை கொட்விரே குணத்திலகா சுட்டிக்காட்டியுள்ளார்: (1) இந்திய- இலங்கை அரசுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை; (2) இந்திய அரசுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை; (3) இலங்கை அரசியல் கட்சிகளின் சந்திப்புகளில் உசாத்துணை; (4) இலங்கை அரசுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை.


முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஆவணி முதல் கார்த்திகை வரை நீடித்தன. பிரதேச மன்றங்களை அடிப்படையாகக் கொண்டு இரு தரப்புகளும் ஒரு திட்டத்தை ஏற்றுக்கொண்டன. அது பின்னிணைப்பு-சி எனப்பட்டது.


16 அனைத்துக் கட்சி மாநாடு: முதற்கட்ட முன்மொழிவுகளை ஆராய்வதற்கு ஓர் அனைத்துக் கட்சி மாநாட்டை ஜெயவர்த்தனா தைமாதம் கூட்டினார். த. ஐ. வி. மு. உட்பட தமிழ்க் கட்சிகள் அனைத்தும் பிரதேச மன்றங்களுக்கு கீழ்ப்பட்ட எதையும் ஏற்க மறுத்தன. சிங்களக் கட்சிகள் மாவட்ட மன்றங்களுக்கு மேற்பட்ட எதையும் ஏற்க மறுத்தன. எதிரும் புதிருமான நிலை ஓங்கியது. ஜெயவர்த்தனாவின் ஈடாட்டமும் வெகுளித்தனமும் அப்பட்டமாக வெளிப்பட்டன. பின்னிணைப்பு-சியை ஆதரித்து அவர் வாதாடவில்லை. ஆதலால் அது வலுவிழந்தது. அப்புறம் (1984 செப்டெம்பர் 30ம் திகதி) அனைத்துக் கட்சி மாநாட்டை அவர் இடைநிறுத்தினார்.


A. Amirthalingam


17 அமிர்தலிங்கம்: இதற்கிடையே அரசாங்கம் 10வது திருத்த முன்மொழிவுகளையும், மாவட்ட-பிரதேச மன்ற வரைவையும் தயாரித்தது. 1984 திசம்பர் 21ம் திகதி அனைத்துக் கட்சி மாநாட்டை ஜெயவர்த்தனா முடிவுறுத்தினார். 1985 தைமாதம் த. ஐ. வி. மு.வுடன் மெற்படி முன்மொழிவுகளை ஆராயப்போவதாக அவர் தெரிவித்தார். 10வது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதாக அமிர்தலிங்கம் முதலில் தெரிவித்தார். பிறகு அதில் காணப்பட்ட முன்மொழிவுகளை ஏற்கமுடியாது என்று தெரிவிந்ததுடன், அவர் நாட்டை விட்டு வெளியேறினார். அப்புறம் மேற்படி முன்மொழிவுகளை மீட்டுக்கொள்வதாக ஜெயவர்த்தனா அறிவித்தார்.


18 திம்பு: 1985 ஆனிமாதம் ஜெயவர்த்தனாவும் அத்துலத்முதலியும் பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்து இந்தியாவின் ஆதரவுடன் தமிழ்த் தரப்புகளுடன் பேசி இனப் பிரச்சனையைத் தீர்க்க உடன்பட்டனர். 1985 ஆவணி மாதம் திம்புவில் இலங்கை அரசுக்கும் தமிழ் இயக்கங்களுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆறு இயக்கங்களும் “நான்கு நெறித் திட்டம்” ஒன்றையும், இலங்கைத் தூதுக்குழு ஓர் அதிகாரப் பரவலாக்கத் திட்டத்தையும் முன்வைத்தன. இரு தரப்பும் விட்டுக்கொடுக்கவில்லை. அத்துடன் திம்புப் பேச்சுவார்த்தை முடிவடைந்தது.


19 வட்டமேசை மாநாடு: 1986ல் ஜெயவர்த்தனா ஒரு வட்டமேசை மாநாட்டைக் கூட்டினார். மாகாண மண்றங்களை அடிப்படையாக் கொண்டு அதிகாரப் பரவலாக்க யோசனையை அவர் முன்வைத்தார். இலங்கைச் சுதந்திரக் கட்சி அதில் கலந்துகொள்ளவில்லை. எனினும் தலைவி சிறிமாவோ தனிப்பட்ட முறையில் ஜெயவர்த்தனாவுடன் பேச இணங்கினார்.  இலங்கை அரசும் த. ஐ. வி. மு.வும் 3 மாதங்கள் கலந்துரையாடுதன் பெறுபேறாக ஒரு மாகாண மன்ற வரைவு அரும்பியது. மொத்தம் 50 பக்கங்கள் கொண்ட அதிகாரபூர்வமான ஆவணங்களைப் பார்வையிட்ட கே. எம். டி சில்வா, அவற்றில் உள்ளடங்கிய கூறுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்: (1) யாப்புத் திருத்த வரைவு; (2) மாகாண மன்ற வரைவு; (3) சேமநிரல்; (4) உடனிகழ் நிரல்; (5) மாகாண நிரல்; (6) சட்டமும் ஒழுங்கும்; (7) காணியும் குடியேற்றமும்; (8) கல்வி.


20 பெங்களூர் உச்சமாநாடு: 1986 கார்த்திகை மாதம் பெங்களூரில் ராஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனாவும் சந்தித்து மேற்படி முன்மொழிவுகளை ஆராய்ந்தனர். வட, கீழ் மாகாணங்களின் இணைப்பு ஒன்றே தீர்க்கப்படாத சர்ச்சையாய் எஞ்சியது.   



21 பிரபாகரன்: தமிழ்நாட்டிலிருந்து செயற்பட்ட பிரபாகரன், அங்கு தொடர்ந்து தங்கியிருந்தால் இந்தியாவின் நெருக்குதலுக்கு உள்ளாக நேரும் என்று எண்ணி 1987ல்  யாழ்ப்பாணம் திரும்பவே நிலைமை அடியோடு மாறியது. புலிகளின் நடவடிக்கைகள் தீவிரமடையவே இலங்கை அரசு யாழ் குடாநாட்டின்மீது பொருளாதார, போக்குவரத்து தடைகளை விதித்தது. யாழ் நிலைவரம் குறித்து இந்தியாவின் கரிசனையை வெளிப்படுத்தும் பொருட்டு ராஜீவ் காந்தி தமது சொந்த தூதுவர் தினேஷ் சிங்கை 1987 பங்குனி மாதம் இலங்கைக்கு அனுப்பி வைத்தார். அதற்குப் பதில்வினையாக சித்திரை மாதம் இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக 10 நாள் போர்நிறுத்தத்தை அறிவித்தது. ஆனாலும் கொழும்பு குண்டுவெடிப்பில் 200 பேர் கொல்லப்படவே வடக்கில் அரசபடை மீண்டும் தாக்குதல் நடத்தியது. “விடுதலை நடவடிக்கை” என்னும் பேரில் வடமராட்சிமீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.


22 இந்திய ஊடுருவல்: 1987ல் இலங்கை வான்வெளியினுள் இந்திய போர்விமானங்கள் ஊடுருவியதை அடுத்து மாகாண மன்ற அலுவல் சூடுபிடித்தது உண்மையே. எனினும் இலங்கையின் மாகாண மன்ற முறைமை என்பது இந்தியா இங்கு புகுத்திய ஓர் ஒட்டுண்ணி அல்ல என்பதை மேற்படி வரலாறு தெட்டத்தெளிவாக உணர்த்துகிறது. இலங்கை சுதந்திரம் எய்தும் தறுவாயிலிருந்தே பல்வேறு விதங்களில் மாகாண மன்ற முறைமை பேசுபொருளாக இருந்து வந்துள்ளது. இலங்கை அரசு உரிய வேளைகளில் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஈடாடி வந்தபடியால், இலங்கையின் உள்நாட்டு அலுவல்களில் தலையிட இந்தியாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்தியா இலங்கையின் ஈடாட்டத்தைப் பயன்படுத்தி, பலவந்த சாணக்கியம் மேற்கொண்டு, இலங்கைக்குள் அத்துமீறி நுழைந்து, இந்நாட்டு அலுவலில் தலையிட்டு, இந்திய-இலங்கை உடன்பாட்டின் பின்னிணைப்பில் பொதிந்திருந்த அதன் புவியரசியல் இலக்குகளை எய்திக்கொண்டது.


23 மாகாண மன்ற முறைமை: இந்தியாவின் தலையீட்டினால் ஒரு சட்டப்பேறற்ற பிள்ளை என்னும் சான்றிதழை மாகாண மன்ற முறைமை கொண்டுதிரிய நேர்ந்துள்ளது. எனினும் ஒரு மகப்பேற்றுத் தாதியின் பங்கினையே இந்தியா இங்கு வகித்தது. இந்த நாட்டில் அரசியல் வலுவோ, கருத்தியல் வலுவோ வாய்க்கப்பெறாத ஆட்சியாளர்கள் மாகாண மன்ற முறைமையை இயற்கையாகவே பெற்றெடுக்கத் தவறிவிட்டார்கள். அதில் சில பிறவிக் குறைபாடுகள் இருந்தன. அத்துடன் மாகாண மன்ற முறைமைக்கு எதிராக வடக்கில் புலிகளும், தெற்கில் ஜே. வி. பி.யினரும் வன்முறையில் இறங்கினர். சுதந்திரக் கட்சி அதை எதிர்த்தது. ஆட்சியதிகாரத்தை ஒருமுகப்படுத்தும் மனநிலையிலிருந்து ஜெயவர்த்தனா விடுபடாதபடியால், 13வது திருத்தத்தின்படியான அதிகாரப் பரவலாக்கம் ஓர் அரைவேக்காட்டுப் பிறவியாகவே வெளிவந்தது. ஒரு கை கொடுத்ததை மறு கை பறித்தது! எனவே மாகாண மன்ற முறைமையினால் தத்தித் தத்தியே நடைபயில முடிந்தது.

13வது திருத்தத்தின் ஏற்பாடுகள் சில நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவற்றுக்குரிய அலுவல்களை மத்திய அரசு ஒதுக்கிக் கொடுக்கவில்லை. நாட்டில் மேலோங்கிய மைய ஆட்சியதிகாரம், மாகாண மன்ற முறைமை செயற்படாவாறு தடுத்து நின்றுள்ளது.

மாகாண மன்ற முறைமை என்பது குடியாட்சியில் ஓர் அங்கம். அந்த முறைமையில் குறைகள் இருக்கலாம். என்ன குறை இருந்தாலும், அந்த முறைமையை ஒழிக்க நியாயம் இல்லை. ஒழிக்க முனைந்தால், இன்னும் சிக்கலான அரசியல் பிரச்சனைகள் தோன்றும். இன்னும் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்.

அதிகாரப் பரவலாக்கம் பிரிவினைக்கு இட்டுச்செல்லும் என்ற முன்னைய அச்சத்தை மாகாண மன்ற முறைமை தணித்துள்ளது. ஆகவே அதை ஒழிக்க முற்படுவதை விடுத்து, அதை முன்னோக்கி நகர்த்தி, அதன் குறைபாடுகளைக் களைந்து, பிராந்திய மக்களுக்கு மெய்யான அதிகாரம் கிடைக்க வகைசெய்தல் நலம்.

________________________________________________________________________

Prof. Gamini Keerawella, Genealogy of Concept and Genesis of 13th Amendment, The Island, Colombo, 2020-09-16/17, summarised in Tamil by Mani Velupillai.

"முதலில் யாழ்ப்பாணத்திலும் பின்னர் அம்பந்தோட்டையிலும் உதவி அரசாங்க அதிபராக விளங்கிய ஆங்கிலேயரும், “காட்டில் ஒரு கிராமம்” (The Village in the Jungle, 1913) நாவலாசிரியருமாகிய லியனாட் வூல்வ் (Leonard Woolf) 1938ல் பிரித்தானிய தொழிற் கட்சியிடம் சமர்ப்பித்த ஒரு மடலில், “வடக்கிலும் கிழக்கிலும் வாழும் சிறுபான்மையோராகிய தமிழருக்குப் பாதுகாப்பாக சுவிற்சர்லாந்திய புலம் (canton) போன்ற ஓர் இணைப்பாட்சி முறையை நாடி வாதாடினார்."


“...in a 1938 Memorandum to the Labour Party, he (Leonard Woolf) argued for a federal form of government, something akin to the Swiss canton model as a safeguard for the Tamil minority in the North and East  (Judith Scherer Herz, To Glide Silently Out of One's Own Text, 2001/2002). 

No comments:

Post a Comment